சரித்திரச் சிறுகதை எழுதிப் பார்த்தல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: February 2, 2024
பார்வையிட்டோர்: 1,452 
 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ராணியின் மகனுக்கு உருட்டி விளையாட ஏதாவது வேணுமாம். உன் தலையைத்தான் தருவதாக ராணி சொல்லியிருக்கிறாள்.”

“இந்த மாமனின் தலை ராஜகுமாரனுக்கு விளையாடக் கிடைப்பது எனக்கு சந்தோஷம் தான்.”

“அப்படி என்ன பகை உங்களுக்குள் தலை வாங்கும் அளவுக்கு?”

“எங்கள் குடும்பமே அப்படித்தான்.”

“என்னிடம் நீ உண்மையைச் சொல்லலாம். மன்னனுக்கு விஷம் வைத்து கொன்றது நீ தானா? நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்.”

“உங்களிடம் எனக்கு நம்பிக்கை உண்டு. ஒரு உண்மை சொல்கிறேன். இந்த விஷம் வைக்கும் யோசனை ஏன் எனக்கு இவ்வளவு நாள் தோன்றவில்லை என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.”

“ஓஹோ! சிறையில் இதுதான் சதா சிந்தனை போலும்! என்னுடைய கவலை எல்லாம் உன் மேல் குற்றம் சுமத்தி விட்டு, உண்மையான கொலைகாரர்களை தேடாமல் விட்டு விடுகிறார்களே என்பது தான்.”

“கவலைப்படுவதில் உங்கள் பொழுதைப் போக்க வேண்டாம்! என் தங்கையைப் பற்றி எனக்குத் தெரியும். இந்நேரம் அந்த வேலையை அவளுடைய நம்பிக்கைக்குரிய படை ஒன்று செய்து கொண்டிருக்கும். கொலைகாரர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் வம்சம் இந்த பூமியில் வசித்த தடம் இல்லாமல் போகும். ஆனால் அதெல்லாம் அவைக்கு வராது. சட்டப்படி நான் கொலைகாரன், தண்டனை எனக்குத் தான்.”

“உன்னை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.”

“யாருடைய பரிதாபத்துக்கும் தகுதி இல்லாதவன் நான். ஒரு நாள் என் தங்கை எந்த கவலையும் இல்லாமல் மிகவும் சந்தோஷமாக இருப்பாள். அவள் தன்னிலை மறந்திருக்கும் அந்நேரம் கொடுந்துன்பம் ஒன்று வந்து தாக்கும் அவளை. ஏன் தான் இவனை சிறையில் வைத்தோமோ என்று கதறுவாள் அப்போது.”

“சரி. இவ்வளவு பகை ஏன்?”

“இது பகை இல்லை. அடுத்து நாட்டை ஆளப்போவது ராணி. ராணியை ஆளப்போவது மன்னனின் கை எனச் சொல்லப்படும் படைத்தலைவன். அதற்கு நான் இடைஞ்சலாக இருப்பேன், அதனால் தான் இவ்வளவும்.”

“என்னால் உனக்கு எதுவும் உதவ முடியுமா? இந்த மந்திரியை ராணிக்கு பிடிக்காவிட்டாலும், சில சமயம் என் ஆலோசனையை ஏற்பார்.”

“இந்த விஷயத்தில் அப்படி இல்லை. நடக்க வேண்டியவை தானாக நடக்கும். கவலை வேண்டாம், போய் வாருங்கள்.”

மறுநாள் மன்னனின் கை என்று அழைக்கப்பட்ட படைத்தலைவன் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தான். மந்திரி ராணியிடம் “இன்னும் சேதங்களைத் தவிர்க்க சிறையைத் திறப்பதைத் தவிர வேறு வழியில்லை” என்று சொல்லி உத்தரவுக்காகக் காத்திருந்தார்.

– சிறுநனி சிறுகதைத் தொகுப்பு, ஜூலை 2014, வெளியீடு: Freetamilebooks.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *