கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை நாடகம்
கதைப்பதிவு: February 17, 2024
பார்வையிட்டோர்: 1,809 
 
 

(2013ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காட்சி 1-2 |  காட்சி 3-4

முதற்காட்சி 

(திரை எழுகிறது. விளக்குகள் ஒளிர்கின்றன. மேடையில் கட்டியங்காரன் தோன்றுகின்றார். வாட்டசாட்டமான கட்டியங்காரனைத் தொடர்ந்து குள்ளமான ஒருவன் வருகிறான். குள்ளமானவன் அங்கும் இங்கும் ஏதோ தேடுகிறான்.) 

கட்டியங்காரன் : ஏனடா குள்ளச்சாமி, மலைபோல் நிற்கும் என்னை மதிக்காமல் இங்கும் அங்கும் எதையோ தேடுகிறாயே என்ன… 

குள்ளன் : நீங்கள் மலைதான்… 

கட்டியங்காரன் : என்ன? 

குள்ளன் : இல்லை. அண்ணா நீங்கள் குன்றென நிமிர்ந்து நிற்கும் மலை போன்றவர். மாணிக்கம் என்பதற்குப் பதிலாக மாணிக்க மலை என்றே தங்களை அழைக்கலாம். 

கட்டியங்காரன்: நீ புகழ்வது போல்… 

குள்ளன்: இகழ்கிறேன் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். 

கட்டியங்காரன் : சரி. போகட்டும் என்ன தேடுகிறாய்? 

குள்ளன் : அண்ணா சற்று நேரத்திற்கு முன் நான் இங்கு வந்தேன். செவ்வந்தியைப் பார்த்தேன். 

கட்டியங்காரன் : செவ்வந்திப் பூவையா? 

குள்ளன் : பூ போன்ற பூவையை. இனிக்க இனிக்கப் பேசினாள். சிரிக்கச் சிரிக்கப் பேசினாள். போகும் போது இங்கு அவளுடைய பொருள் ஒன்றைத் தொலைத்து விட்டேன் என்று சொன்னாள். அதுதான் தேடிப் பார்க்கிறேன். அவள் அணியும் கம்மலா? பாதத்தில் அணியும் கொலுசா? கழுத்தில் மாட்டிக் கொள்ளும்… இல்லை மாட்டிக் கொள்ளும் இல்லை கழுத்தில் அணிந்து கொள்ளும் ஆபரணமா? என்று தேடிப் பார்க்கிறேன். 

கட்டியங்காரன் : உன் மூளையை மெருகேற்ற வேண்டும். 

குள்ளன் : அப்படியா? அதற்கு எங்கு போக வேண்டும்? 

கட்டியங்காரன் : எங்கும் போக வேண்டாம். நான் இருக்கிறேன் அதற்கு. செவ்வந்தி என்னும் அந்த இளம் மங்கை அந்தி வேளையில் உன்னைச் சந்தித்து உன்னிடம் தன் மனத்தைத் தொலைத்து விட்டுச் சென்றிருக்கிறாள். உனக்கு வந்த வாழ்வு. 

குள்ளன் : உங்களுக்கு ஏன் பொறாமை? வயதில் மூத்தவர் வாழ்த்துவதுதானே முறை? இப்பொழுதே செவ்வந்தியைத் தேடிப் பார்த்து காதலுக்கு நன்றி சொல்லி என் காதலை உறுதி செய்து வருகிறேன்(ஓட முற்படுகிறான்). 

கட்டியங்காரன் : ஏன் இத்தனை அவசரம்? அதற்கு என்று வேளை வரும். 

குள்ளன் : நீங்கள்தானே சொன்னீர்கள் நன்று செய் நன்றும் இன்றே செய். இன்றும் இப்பொழுதே செய் என்று. 

கட்டியங்காரன் : அதற்காக நான் எதற்காக அழைத்தேன் என்று கேட்காமல் போவாயா? 

குள்ளன் : மன்னியுங்கள் அண்ணா. ஏன் அழைத்தீர்கள்? ஏன் இங்கே இத்தனை பார்வையாளர்கள் அமர்ந்திருக்கிறார்கள்? நீங்கள் உங்களுக்குத் தெரிந்த கண்கட்டு வித்தைகள் மாயா ஜாலங்கள் ஏதேனும் செய்து காட்டப் போகிறீர்களா? 

கட்டியங்காரன் : இங்கு நடைபெறப் போகிற நாடகத்திற்கு நான் கட்டியங்காரன் நீ என் உதவியாளன். 

குள்ளன் : ஓ! அதற்குத்தான் இந்த வித்தியாசமான கூத்து உடுப்பா? சரி நாடகம் பற்றிய அறிமுகம் சொல்லப் போகிறீர்கள். ஆகட்டும். சீக்கிரம் சொல்லுங்கள். நான் செவ்வந்தியைப் பார்க்க வேண்டும். 

கட்டியங்காரன் : இங்கு ஒரு வழக்கு வரப் போகிறது… 

(குள்ளன் போகிறான்) 

கட்டியங்காரன் : ஏன் போகிறாய்? 

குள்ளன் : இல்லை… எனக்கு மட்டும் அல்ல. எங்கள் பரம்பரைக்கே வழக்கு என்றால் ஒவ்வாமை. நாட்டாமையைப் பார்த்தால் கூட நாலடி தள்ளிப் போய் விடுவோம். 

கட்டியங்காரன் : நம்முடைய நாடகத்தில் செண்பகத் தீவு என்னும் ஒரு தீவின் அரசனும் அவனுடைய அவைப் புலவர்களும்… குள்ளன் : நாட்டியத் தாரகைகளும் வெண் சாமரம் வீசும் இளம் 

மங்கையரும் இவர்கள் எல்லாம் இருப்பார்கள் அல்லவா? 

கட்டியங்காரன் : ஏன் குறுக்கீடு செய்கிறாய்? 

குள்ளன் : கற்பனையான ராஜாராணி கதையில் என்ன நடக்கப் 

போகிறது? அதைச் சொல்லுங்கள். 

கட்டியங்காரன் : செண்பகத் தீவின் அரசன் இளங்கோ என்னும் மாணிக்க வர்மனுக்கு மனித குலம் போரைத் தவிர்த்தால் என்ன என்ற நினைப்பு ஏற்படுகிறது. 

குள்ளன் : வீரனுக்கு அது அழகு இல்லையே… 

(தோள்களைச் சொறிகிறான்) 

தினவெடுத்த தோள்களுடன் இருப்பவன் தானே வீரன்? 

(கட்டியங்காரன் அவனைத் தட்டுகிறார்) 

கட்டியங்காரன் : கோயில் திருவிழாவில் புலவர் தாமோதரனார் வழக்காடு மன்றத்தில் மனித குலத்தைப் போர் முறையால் அழிப்பவர்கள் மன்னர்களே என்ற வழக்கை முன் வைக்கிறார். 

மற்றொரு புலவர் உருத்திரங்கண்ணனார் அரசனுக்கு அழகு போர் புரிவதே என்று மறுத்து வாதிடுகிறார். 

மூத்த புலவர் பெருந்தேவனார் நடுவராக இருந்து தீர்ப்பு சொல்லப் போகிறார். 

குள்ளன் : ராஜா வந்து பார்க்கப் போகிறார். அப்படித்தானே. நாடகம் சுவையாக இருக்கும் அல்லவா… கதையும் இருக்கும் அல்லவா? 

கட்டியங்காரன்: ஆமாம். கண்டிப்பாக சுவையானதாக இருக்கும். கதையும் பின்னப்பட்டிருக்கும். 

குள்ளன் : சரி வாருங்கள் நாம் போகலாம். அவர்கள் நாடகத்தைப் பார்க்கட்டும். பார்ப்பவர்கள் சொல்வார்கள் நாடகம் எப்படி இருந்தது என்று. 

கட்டியங்காரன் : செவ்வந்தியைப் பார்க்க வேண்டும் என்ற அவசரம் உனக்கு. 

குள்ளன் : கவலைப்படாதீர்கள். உங்கள் உடல் வாகுக்குப் பொருத்தமான இணை உங்களுக்குக் கிடைக்காமலா போகும்? 

(கட்டியங்காரன் அவனை அடிக்க முற்படுகிறார். அவன் கையில் கிடைக்காமல் ஓடுகிறான்.) 

(விளக்குகள் அணைகின்றன)

(காட்சி மாற்றம்) 

(விளக்குகள் மீண்டும் ஒளிர்கின்றன. தோட்டம் போன்ற பின்னணியில் ஒல்லியான இளம் அழகு மங்கை பாடிக் கொண்டே ஆடிக் கொண்டிருக்கிறாள். அருகில் உள்ள சிறிய ஆசனத்தில் அமர்ந்து கொண்டிருக்கும் மற்றொரு இளம்பெண் ஏதோ கொறித்துக் கொண்டிருக்கிறாள்) 

பாடல் : என் எண்ணமெல்லாம் நிறைந்தவன் நீ 
என் மனத்தைப் பற்றிய தீ 
எனை மறப்பதா நீதி 
இதுதான் என் கேள்வி… 

அமர்ந்திருக்கும் பெண் : உன் கேள்வியைக் கேட்பதற்கு யாரும் இல்லை. உன் ஆடலைப் பார்க்கவும் இன்று எவரும் ஆயத்தமாக இல்லை. கவனத்தில் கொள். என் தமக்கையாரே! முல்லையாரே! 

ஆடும் பெண் : சிற்றன்னை…. 

(கோபத்தில் கத்துகிறாள்) 

(மேடையின் வலப் பக்கத்திலிருந்து ஒரு பேரிளம் பெண் வெளிப்படுகிறாள்.) (மல்லிகை எழுந்திருக்க, பேரிளம் பெண் அமர்கிறாள்) 

பேரிளம் பெண் : என்ன தொடங்கி விட்டீர்களா உங்கள் சண்டையை? மல்லிகை என்ன சொன்னாய் அக்காளிடம்? 

மல்லிகை : இல்லை சிற்றன்னையாரே. இன்று ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறாது என்று கோயில் திருவிழா நடத்துபவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

சிற்றன்னை : ஏன்? அரசனுக்கே பிடிக்குமே முல்லையின் நடனம். முல்லை நடனம் ஆடினால் செங்கோல் ஏத்தும் அரசன் முதல் வில்லேந்தும் வீரர்கள் வரை இடத்தை விட்டு நகராமல் பார்ப்பதுதானே நாம் காணும் திருவிழாக் காட்சி. 

மல்லிகை : தங்கள் மகள் எங்கே போய்விடப் போகிறாள்? பிறிதொரு நாளில் முல்லையின் ஆடலைப் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டார்களோ என்னவோ…. 

சிற்றன்னை: உனக்குத் தெரிந்த தகவலைக் கூறு. இன்று நடைபெற உள்ள நிகழ்ச்சிக்காகத்தானே முல்லை ஒத்திகை பார்த்து வருகிறாள். 

மல்லிகை : ஒத்திகையை ஒத்தி வைத்துக் கொள்ள வேண்டியதுதான். இன்று வழக்காடு மன்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. எப்போதும் நடைபெறும் விவாத அரங்குகளுக்குப் பதிலாக இந்த முறை வழக்காடு மன்றம். செண்பகத் தீவு முழுவதும் இந்த வழக்காடு மன்றம் பற்றித்தான் பேச்சு. 

சிற்றன்னை : என் மகளின் நாட்டியத்தைக் காட்டிலும் அந்த சொல்லாடல் நிகழ்ச்சியில் என்ன கவர்ச்சியோ இந்த அரசருக்கும் ஜனங்களுக்கும்… 

மல்லிகை : உரக்கப் பேசி விடாதீர்கள். அரசரை விமரிசிக்கலாமா? சிற்றன்னை : நான் அரசரைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. என் மகளின் ஆடலைக் காட்டிலும் சொல்லாடலில் என்ன காணப் போகிறீர்கள்? கடல் அலைகள் போல் காட்டுக் கூச்சல் போடுவார்கள். 

மல்லிகை : நீங்கள் உரை அரங்கம் போன்ற நிகழ்ச்சிகளைப் பார்வையாளராகச் சென்று பார்த்தது இல்லை அல்லவா? உங்களுக்கு உலகமே முல்லையும் அவளுடைய ஆடலும் பாடலும்தான். என்னை கவனிப்பதே இல்லை நீங்கள். உங்களுக்கு என்னிடம் பரிவும் பாசமும் இல்லை. 

சிற்றன்னை : என் தமக்கை தாமரையார் என்னிடம் தந்து விட்டுச் சென்ற நீங்கள் இருவரும் இந்த மரிக்கொழுந்தின் இரண்டு கண்மணிகள். திருவிழாச் சேதியைச் சொல். 

மல்லிகை : அதுதான் சொன்னேனே. இன்று மாலைப் பொழுதில் கலை நிகழ்ச்சிகளுக்குப் பதிலாக வழக்காடு மன்றம் நடக்கிறது.செவிக்கு உணவு என்பதால் எல்லோரும் காதைத் தீட்டிக் கொண்டு கேட்கத் தயாராகி விட்டார்கள். 

பெண் பார்வையாளர்களுக்குத் தனிப்பகுதி அமைத்திருக்கிறார்களாம். நான் போகப் போகிறேன். 

அரசன் இளைஞன். புலவர்கள் தாமோதரனாரும் உருத்திரங் கண்ணனாரும் இளைஞர்கள். கேட்கவா வேண்டும்? 

காளையரும் கன்னியரும் மொய்த்து விடுவார்கள். தோழி அல்லி வந்து விடுகிறேன் என்று சொல்லியிருக்கிறாள். நான் ஆயத்தமாகிறேன். 

முல்லை: தாமோதரனார் வருகிறாரா? 

மல்லிகை : தாமோதரனார் என்றதும் முகத்தில் தோன்றும் ஒளியைப் பார்த்தீர்களா சிற்றன்னையாரே. 

சிற்றன்னை : ஒளியும் இல்லை களியும் இல்லை. 

முல்லை : என்னதான் தலைப்போ? 

மல்லிகை : (சன்னமான குரலில்) தாமோதரனார் பற்றி நன்கு தெரிந்தவளுக்கு இது தெரியாதா? காதலர் ஒன்றுமே சொல்வதில்லையா? 

மரிக்கொழுந்து : மல்லிகை. என்ன காதலர் என்று கூறுகிறாய். மல்லிகை : இல்லையம்மா. காதில் ஒன்றும் அணிந்து கொள்ளவில்லையா… என்று கேட்டேன். நான் வருகிறேன்… (போகிறாள்) 

முல்லை : சிற்றன்னையே. நானும் நிகழ்ச்சியைப் பார்த்து விட்டு வருகிறேன். 

மரிக்கொழுந்து : நீ அங்கு சென்றால் பார்வையாளர்களிடம் சலசலப்பு ஏற்படும். நிகழ்ச்சியைத் தொடங்குவதில் இடையூறு ஏற்பட்டால் அரசருக்குக் கோபம் வரக்கூடும். 

முல்லை : அரசர் தொட்டதெற்கெல்லாம் கோபித்துக் கொள்கிற குணம் உடையவராகத் தெரியவில்லை. அவரைச் சுற்றி இருப்பவர்கள் தான் பரபரப்பை ஏற்படுத்துவார்கள். எதற்கும் நான் மாறுவேடத்தில் செல்கிறேன். 

மரிக்கொழுந்து : சரி. எச்சரிக்கையாக நடந்து கொள். காதல் கத்தரிக்காய் எல்லாம் வேண்டாம். காதலில் ஆர்வம் வந்தால் கலையில் ஆர்வம் போய்விடும். 

(முல்லை காதில் வாங்கிக் கொள்ளாதவள் போல் மேடையின் இடப்பக்கம் நோக்கிச் செல்கிறாள். வலப்பக்கத்திலிருந்து ஓர் இளம் பெண் வருகிறாள். ‘அம்மா புலவர் பெருந்தேவனார் வந்திருக்கிறார்’ என்கிறாள். மரிக்கொழுந்து எழுந்து நிற்கிறாள். வலப் பக்கத்திலிருந்து புலவர் பெருந்தேவனார் வருகிறார். வயதுகள் கடந்தவர் என்பதை வெண்ணிற தலைமுடி பறை சாற்றுகிறது. ஆசனத்தில் அமர்கிறார்) 

மரிக்கொழுந்து 

வரவேண்டும் வரவேண்டும். புலவர் பெருமானுக்கு வணக்கங்கள். 

(மேடையின் இடப்பக்கம் செல்கிறாள். தண்ணீர்க் குவளையுடன் திரும்புகிறாள்) 

மரிக்கொழுந்து : தாங்கள் தாகசாந்தி செய்து கொள்ள வேண்டும். 

(புலவர் நீர் அருந்துகிறார்) 

பெருந்தேவனார் : இன்று கலை நிகழ்ச்சி இல்லை என்பதால் முல்லைக்கு வருத்தமா? 

மரிக்கொழுந்து: வருத்தம் ஏதும் இல்லை. முன்பெல்லாம் விவாத அரங்குகள் ஒரு பக்கமும் கலைநிகழ்ச்சிகள் ஒரு பக்கமும் நடந்து கொண்டிருக்கும். ஆனால் இந்த முறை… 

பெருந்தேவனார் : மக்களின் செவிகளுக்கு உணவு தர வேண்டும் என்று மன்னர் முடிவு எடுத்து விட்டார். மக்கள் கவனமெல்லாம் இந்த நிகழ்ச்சிக்கு இருக்க வேண்டும் என்று எண்ணி விட்டார். பட்டத்தரசியும் இலக்கியத்தில் ஆர்வம் உடையவர் என்பதாலும் இந்த நிகழ்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது. 

மரிக்கொழுந்து : முல்லைக்கு வருத்தமா என்று தாங்கள் கேட்டீர்கள். எனக்குத்தான் வருத்தமாக இருக்கிறது. விவாத அரங்குகள், உரை வீச்சு இவை எல்லாம்தான் செவிக்கு உணவா? இயலும் இசையும் கலந்த எங்கள் ஆடலில் கேட்பதற்கு ஒன்றும் இல்லையா? எத்தனையோ பொருள் பொதிந்த பாடல்களுக்குத் தானே நாங்கள் அபிநயம் காட்டுகிறோம். அவர்களுக்கோ வாய்க்கு மட்டும்தான் வேலை. அச்சமற்றவன் அம்பலம் ஏறுவான் என்பது பழமொழி. அச்சம் அற்றவர்கள் கூச்சப்படாதவர்கள் எவரும் மேடை ஏறி விளாசுவார்கள். நாங்கள் அம்பலமேறி அம்பலத்து ஆடும் இறைவனையே கண் முன் நிறுத்துகிறோம் என்பது யாருக்கும் புரிவதில்லை. 

பெருந்தேவனார் : மரிக்கொழுந்து கேள் நாட்டியத் தாரகைகளைத்தான் சிற்பிகள் சிற்பங்களில் வடிக்கிறார்கள். பேச்சாளர்களை வடிப்பதில்லை. காலத்தை வென்று மக்கள் மனங்களில், இடம் பெற்றிருப்பவர்கள் நீங்கள் தான் என்பதை நினைவில் கொள். 

மரிக்கொழுந்து: செம்பஞ்சுக் குழம்புக்கும் அஞ்சனத்திற்கும் காற்சிலம்புகளுக்கும் வாய் இருந்தால் அவை சொல்லி அழும் எங்கள் பாடுகளை. காலத்தை வெல்வதால் இப்போது என்ன பயன்? 

பெருந்தேவனார் (புன்னகை பூத்து) : நீயே இங்கு வழக்காடு மன்றம் நடத்தி விடுவாய் போலிருக்கிறதே. புலவர்களால் மிஞ்சுவது வெறும் பேச்சு என்று வழக்கு தொடுக்கிறாயே. மரிக்கொழுந்து : புலவர்களைக் குறைத்துச் சொல்லவில்லை. அவர்கள் இயற்றிய பாடல்கள்தானே எங்கள் ஆடல்களுக்குப் பயன்படுகின்றன? இன்று என்ன பேசப் போகிறார்கள்? என் மகள் மல்லிகை ஊரெல்லாம் இது பற்றியே பேசுவதாகச் சொல்கிறாள். 

பெருந்தேவனார்: இப்போதே சொல்லி விட்டால் உனக்கு நிகழ்ச்சி இனிக்காதே. நிகழ்ச்சிக்கு வா. மல்லிகை முல்லை இருக்கும் இடத்தில் மரிக்கொழுந்து இல்லாமல் இருக்கலாமா? 

மரிக்கொழுந்து: எனக்கு எந்த ஒரு நிகழ்ச்சியும் வேண்டாம் புலவர் பெருமானே. என்னுடைய தமக்கையின் புதல்விகளை வளர்த்து ஆளாக்கி விட்டேன். அவர்களை இல்லத்தரசி களாக்கி விட்டால் போதும். இறைவனின் இருப்பிடம் நோக்கிப் போய் விடலாம். 

பெருந்ததேவனார் : அழைப்பு வரும்போதுதான் அங்கு போக முடியும்.நாட்டிய அரசிகள் போட்டி போட்டு ஆடுவது போல் இரண்டு புலவர்கள் அதுவும் இளைஞர்கள் போட்டி போட்டுப் பேசப் போகிறார்கள். நீயும் அவசியம் வந்து பார்க்க வேண்டும். 

மரிக்கொழுந்து: பேசுவதற்குப் பெயர் போனவர்கள் தானே நாம்? தங்கள் கட்டளையை மீற முடியுமா? கண்டிப்பாக வருகிறேன். என் தமக்கை ஈன்ற செல்வங்களை என்னிடம் அளித்து வளர்த்து வா என்றீர்கள். என் தமக்கையின் அன்பர் யார் என்பதைக் கூறாமல் ரகசியம் காக்கிறீர்கள். என் தமக்கை எங்கே போனாள்? 

பெருந்தேவனார் : (தடுமாற்றத்துடன்) அதுவா…. (பிறகு சமாளித்து) 

சமயம் வரும்போது நான் கூறுகிறேன். பெண்களிடம் இரகசியம் தங்காது என்பார்கள் அல்லவா? நிகழ்ச்சிக்கு அழைக்கத்தான் வந்தேன். வருகிறேன். (எழுந்து நிற்கிறார். சற்றே வேகமாக வலப் பக்கமாக வெளியேறுகிறார்)

மரிக்கொழுந்து : (தனக்குத்தானே பேசுகிறாள்) பெண்களிடம் இரகசியம் தங்காது என்று ஒரு நொண்டிச் சாக்கு. அப்பா யார் என்ற கேள்விக்கு இத்தனை ஆண்டுகளாக நான் பதில் சொல்ல முடியாமல் திணறி வருகிறேன். நல்ல வேளை நான் எந்த ஆடவனிடமும் என் வாழ்க்கையை ஒப்படைக்க வில்லை. இல்லறம் காணாமல் இடுப்பு நோகாமல் தாய் ஆனேன். இந்த மாணிக்கங்களை அருமை தெரிந்தவரிடம் ஒப்படைத்தால் என் கடமை முடியும். அதுவரை மடியில் நெருப்புதான். பார்ப்போம் இறைவன் திருவுள்ளப்படி நடப்பவை எல்லாம் நன்மை ஆகட்டும். 

(திரை) 

இரண்டாம் காட்சி 

(விளக்குகள் ஒளிர்கின்றன. மேடையில் பிரம்மாண்டமான காட்சி அமைப்பு.நடுநாயகமாக ஓர் ஆசனத்தில் புலவர் பெருந்தேவனார் அமர்ந்திருக்கிறார். அவருக்கு வலப்பக்கத்தில் ஆசனங்களில் அரசனும் அரசியும் அமர்ந்திருக்கின்றனர். அவருக்கு இடப்பக்கத்தில் ஆசனங்களில் இரண்டு இளம் புலவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அந்த ஆசனங்களுக்குக் கீழ்ப் பகுதியில் வலப் பக்கத்திலும் இடப்பக்கத்திலும் பார்வையாளர் பகுதிகள் ஒரு புறம் ஆடவர்கள். ஒரு புறம் மகளிர். மகளிர் பகுதியில் முன்வரிசையில் மரிக்கொழுந்து, முல்லை, மல்லிகை, மல்லிகையின் தோழி அல்லி மற்றும் சில இளம்பெண்களும் சில பேரிளம் பெண்களும் அமர்ந்திருக்கிறார்கள். அரசன் எழுந்து நின்று பேசத் தொடங்குகிறான். அவன் பேசுவதற்கு முன் செண்பகத் தீவின் அரசர் மாமன்னர் மாணிக்க வர்மர் நீடுழி வாழ்க நீடுழி வாழ்க என்று மக்கள் எழுந்து நின்று வாழ்த்து கூறுகிறார்கள். பின் அமர்கிறார்கள்) 

அரசன் : இந்த சின்னஞ்சிறு நாட்டை என் கண் ஒப்படைத்து எனக்குப் பெருமை சேர்த்து வரும் செண்பகத் தீவின் குடிமக்களே! இந்த மாலைப்பொழுதில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ளவேனில் பருவத்தில் நமது செண்பகத் தீவு விழாக் கோலம் பூண்டு ஆண்டவனுக்கு விழா எடுத்து மகிழ்ந்து வரும் இந்த சுப வேளையில் இங்கே நடக்க இருக்கும் வழக்காடு மன்றத்திற்கு உங்களை எல்லாம் வரவேற்பதில் உவகை கொள்கிறேன். நம்முடைய தமிழ்த் திருநாட்டின் சோழ, சேர பாண்டிய, தொண்டை மண்டலங்களிலிருந்து இன்பச் சுற்றுலா காண நமது தீவுக்கு வந்தவர்களும் இந்த நிகழ்ச்சியைப் பார்க்க வந்திருக்கிறார்கள். பரத கண்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்த சுற்றுலா யாத்ரீகர் களையும் காண்கிறேன். இப்படி செண்பகத் தீவு அனைவரையும் வசீகரிப்பதற்கு மக்கள் ஆகிய நீங்கள்தான் காரணம். ஊர் என்பது வெறும் ஊரா? ஊர் என்று சொன்னால் மக்களைத்தானே குறிக்கும்? செண்பகத் தீவுக்குக் கிடைத்த சீரும் சிறப்பும் அருமையும் பெருமையும் எல்லாம் உங்களையே சேர்ந்தது. நான் ஒரு காவலன். நிர்வாகி. அவ்வளவே. 

(மக்கள் கரவொலி) 

இங்கு ஓர் உரத்த சிந்தனை ஒலிக்கப் போகிறது. நீங்கள் கேட்டு சிந்திக்கப் போகிறீர்கள். மனித குலம் தொடங்கிய நாளிலிருந்தே இரு வேறு கருத்து கட்சி என்பது இருந்து வருகிறது. அருச்சுனனுக்குப் போட்டியாக யாரேனும் இருக்கிறீர்களா என்று துரோணர் கேட்டபோது நான் இருக்கிறேன் என்று தோளைத் தட்டிக் கொண்டு கர்ணன் முன் வந்தான். அவ்வமயம் மக்களிடையே இரு வேறு கருத்துக்கள். தேரோட்டி மகன் எப்படி அரசன் வம்சத்துடன் போட்டி போட முடியும் என்றும் போட்டியிட்டால் என்ன என்றும் பேசிக் கொண்டார்கள். துரியன் அவனை அப்போதே அங்க தேசத்துக்கு அரசனாக்கி அர்ச்சுனனுடன் மோத விட்டான். எனவே, மக்கள் எப்போதும் இரு வேறு கருத்து உடையவர்களாக இருக்கிறார்கள். இங்கே வழக்காடு மன்றமாக மலரும் இந்த நிகழ்ச்சியில் நம்முடைய அவைப் புலவர்கள் – இவர்கள் சங்கத்தமிழ்ப் புலவர்களின் பெயர் கொண்டவர்கள். பெரியவர் பெருந்தேவனார் தலைமையில் இளம்புலவர் தாமோதரனார் வழக்கு தொடுக்கவும் அதனை மற்றொரு இளம்புலவர் உருத்திரங்கண்ணனார் மறுத்துரைக்கவும் உள்ளார்கள். காணுங்கள். நன்றி. (அரசன் அமர்கிறான்) 

பெருந்தேவனார் : (அமர்ந்தபடியே பேசுதல்) அரசர் மாணிக்கவர்மரின் புகழ் ஓங்குக. செண்பகத் தீவு வாழ்க. வெல்க தமிழ் கூறும் நல்லுலகம்! வாழ்க பரத கண்டம்! அரசர் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன். அரசருக்கு நிகரான சரியாசனத்தை எங்களுக்கு அளித்த அரசரின் நற்பண்பு எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த நிகழ்ச்சியின் கருப்பொருள் என்ன என்பதை நமது அரசர் இரத்தினச் சுருக்கமாகவும் அழகாகவும் கூறிவிட்டார் என்பதால் அரசரின் அனுமதியுடன் நிகழ்ச்சியைத் தொடங்குகிறேன். நம்முடைய இளவல் தாமோதரனாரைப் பேச அழைக்கிறேன். 

(தாமோதரனார் எழுந்து நிற்கிறார். அரசன், அரசி, பெருந்தேவனார் ஆகியோருக்கு கைகூப்பி வணக்கம் கூறுகிறார். கடைக்கண்ணால் பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருக்கும் முல்லையைப் பார்க்கிறார். முல்லையும் இவரைப் பார்க்கிறாள். சற்றே தடுமாறுகிறார்.) 

தாமோதரனார்: கடைக் கண்… கடைக் கண் பார்வை… தமிழ்த்தாயின் கடைக் கண் பார்வை பட்டு புலவனான அடியேனை இந்த நிகழ்ச்சியில் பேச வைத்த அரசர் பெருமானுக்கும் புலவர் பெருமானுக்கும் முதற்கண் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசர் என்னை மன்னிக்க வேண்டும். க்ஷத்திரியர்கள் எனப்படும் அரசர்களுக்குப் போர்த் தொழில் இன்றியமையாதது என்றே இதுவரை கூறப்பட்டு வந்துள்ளது. அரசர்கள் தங்கள் நாடு பிடிக்கும் ஆசையில், தங்கள் எல்லைகளை விரிவாக்கும் ஆசையில் எத்தனையோ உயிர்களைப் பலியிடுகின்றனர். எத்தனையோ பெண்களின் வாழ்வு தலைகீழாக மாறுகிறது. எத்தனையோ குடும்பங்கள் சின்னாபின்னம் ஆகின்றன. அரசர்களின் வெற்றிமுழக்கம், இவர்களுடைய அழிவில்தான் நடைபெறுகிறது. வெற்றிக் கொடிக்கான கம்பம் இவர்களுடைய இரத்த ஆறு ஓடும் பூமியில்தான் நடப்படுகிறது. ஏன் உங்களுக்கு என்று கிடைத்துள்ள ராஜ்ஜியத்தைக் கொண்டு அந்தப் பிரஜைகளை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டு இன்பமான சமாதானமான வாழ்வை வாழ்ந்து காட்ட உங்களால் முடியாதா? அழிவில்தான் மற்றொரு தொடக்கத்தைத் தொடங்க வேண்டும் என்பது என்ன நியதி? நீதியில்லா நியதி. தேசத்தின் மாண்பு சமாதானத்தில்தான் இருக்கிறது. மக்கள் அமைதியையே விரும்புகிறார்கள். மன்னர்கள் தங்களுடைய பேராசைக்காக மனிதநேயம் இல்லாமல் உயிர்ப்பலிகளை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார்கள். அமைதியாக இருப்பதும் சமாதானத்தைப் பின்பற்றுவதும்தான் வீரனுக்கு அழகு என்பதை மன்னர்கள் உணர்ந்து கொண்டால் இந்த பூமிப் பிரபஞ்சம் முழுவதும் அமைதியின் கையில் தவழும் குழந்தைபோல் ஆகும். (அமர்கிறார்) 

பெருந்தேவனார் : புலவர் தாமோதரனார் தம்முடைய முதல் சுற்று வாதத்தை முன் வைத்து அமர்ந்துள்ளார். உருத்திரங் கண்ணனாரே வாரும். தங்கள் வாதத்தை அவைக்கு எடுத்துக் கூறும். 

(உருத்திரங்கண்ணனார் எழுந்து நிற்கிறார். பேசுகிறார்) 

உருத்திர : வீரத்தின் விளை நிலமாய்த் திகழ்ந்த வம்சத்தில் உதித்த அரசர் பெருமானுக்கு அடியேனுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள். வீரத்திருமகனின் மனைவியான அரசியாருக்கு அடியேனுடைய வணக்கங்கள். புலவர் பெருமானுக்கும் அவையோருக்கும் அடியேனுடைய வணக்கங்கள். என்னுடைய தோழர் புலவர் தாமோதரனார், தெரிந்தோ தெரியாமலோ போர்த் தொழில் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி விட்டார். போர்த் தொழில் பழக வேண்டியது அரசனின் கடமை. இவர் கடமையிலிருந்தும் பொறுப்பிலிருந்தும் விலகியிருங்கள் என்று அரசர்களுக்குக் கட்டளையிடுகிறார். போர் என்று வந்து விட்டால், படையில் இருக்கும் படை வீரர்கள் மட்டுமா போரிடுவார்கள்? ஒவ்வொரு வீட்டிலும் வெவ்வேறு காரியங்களில் தொழில்களில் ஈடுபட்டு வருகிற இளைஞர்கள், நாடு காக்க, நாட்டின் மானம் காக்க போர்க்களம் நோக்கி வருவார்கள்.(கரவொலி) 

வீரம் நெஞ்சிலே எப்போதும் இருக்கிற இளைஞர்கள், கிடைத்தது சந்தர்ப்பம் என்று பெரும் ஆவலுடன் தோள் தட்டிப் புறப்படுவார்கள். வீரத்தாய்மார்களும் அவர்தம் மனைவிமார்களும் வெற்றித் திலகமிட்டு வழி அனுப்பி வைப்பார்கள். சங்கத்தமிழ் இலக்கியமான புறநானூறு பல வீரத்தாய்மார்களை நம் கண்முன் நிறுத்துகிறது. போர் என்றால் வெற்றியும் கிடைக்கலாம் தோல்வியும் கிடைக்கலாம். உயிர் போகலாம் என்பதெல்லாம் பெண்டிருக்குத் தெரியாதா? சண்டைக்குப் போக வேண்டாம். குதிருக்குள் ஒளிந்து கொள் என்று சொல்லும் பெண்களை எந்தத் தேசத்திலாவது பார்க்க முடியுமா? 

(கரவொலி) 

குறிப்பாக தமிழ் நிலத்தில் பார்க்க முடியுமா? ஆயுதங்கள் தயாரிக்கும் உலைக்கலன்களை இழுத்து மூடி விட்டால் அவர்களுக்கு உணவிடுவது யார்? விண் அதிரும் போர் முழக்கமே வீர முழக்கம். வெற்றி வந்தால் வெற்றி. உயிர் போனால் நாட்டுக்காக உயிர் போகிறது. நாட்டுக்காக உயிர் துறப்பவன்தான் தேசப்பற்று மிக்கவன். வீரமரணம் அடைந்தவனே வீரன். விழுப்புண் பெற்றவனே வீரன். அரசர்கள் போர்களை மக்கள் மீது திணிப்பதாக எந்த ஒரு குடிமகனும் நினைப்பதில்லை. அரசனுக்கு கவசமாய் கேடயமாய் நாம் இருப்போம் என்றே ஒவ்வொரு குடிமகனும் நினைக்கிறான். 

(கரவொலி) 

உணவு தானியப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை, யிரிழப்பு எல்லாம் நேரிடும். இவற்றை எல்லாம் மக்கள் பெரிதுப்படுத்துவதில்லை. அரசன் ஜெயக்கொடி நாட்டினான். மாற்றான் தேசத்தில் நம் நாட்டுக் கொடியைப் பறக்க விட்டான் என்பதே அவர்களுக்குப் பெருமை. அரசர்களுக்கு போர் என்பது வேண்டும். ஒவ்வொரு நாடும் படை பலத்தைப் பெருக்க வேண்டும். சீண்டிப் பார்க்கும் நாடுகளுக்குத் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். சமாதானம் என்பது குறட்டை விரும்பிகளின் வார்த்தை. அரசர்கள் மீது குறை சொல்லிப் பயனில்லை. போர் எடுத்து வந்தவனைப் புறமுதுகு இட்டு ஓடச் செய்யவும் எல்லைகளை விஸ்தரிக்கவும் அரசர்கள் படைபலம் பெருக்க வேண்டும். புதிது புதிதான போர் முறைகளை உருவாக்க வேண்டும். வெற்றி வியூகங்களை வகுக்க வேண்டும். சமாதானம் அமைதி என்றெல்லாம் பேசி கோழைகளை உருவாக்காதீர்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. 

(கரவொலி) (அமர்கிறார்) 

பெருந்தேவனார் : நமது இளவல் உருத்திரங்கண்ணனார் சற்றே ஆவேசமாகப் பேசிச் சென்றிருக்கிறார். உங்களுடைய பதில் என்ன? கூறுங்கள். தாமோதரனாரே. 

(தாமோதரனார் எழுந்து நின்று பேசுதல்) 

தாமோதரனார் : போருக்கு என்று வழிமுறைகள், போர்க்கலை, யுத்த தருமம், போர் நெறி இப்படி எத்தனையோ இருக்கின்றன என்பதை அறியாத பாலகன் அல்லன் அடியேன். போர் என்றால் கட்டிளங்காளைகளுக்கு உற்சாகம் பிறப்பதில் வியப்பேதும் இல்லை. போருக்குப் போன கணவன், திரும்பி வராவிட்டால், அவள் காலம் எல்லாம் கைம் பெண்தானே? 

கல் ஆனாலும் கணவன் என்றும் புல் ஆனாலும் புருஷன் என்றும் கூறுவார்கள். 

கல் ஆனாலும் கணவன் என்பது எதைக் குறிக்கிறது என்பது நடுவர் அவர்களே தங்களுக்குத் தெரிந்திருந்தாலும் நான் அவையோருக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். 

தமிழ் நிலத்தில் வீரர்கள் இறந்துபோன பின்பு அவர்கள் நினைவாக நடுகல் நடுவது வழக்கம். கைம்பெண்ணான பெண்மணி இந்த நடுகல்லின் மீது நெல்லும் பூவும் சொரிந்து வழிபடுவாள். கல் ஆனாலும் கணவன் என்று கூறப்படுவது இதனால்தான். 

உயிருடன் இருக்கும்போது சுற்றிச் சுற்றி வந்து காதல் சேட்டைகள் செய்தவனை நடுகல்லாகப் பார்க்கும் பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும்…? சற்றே சிந்தித்துப் பாருங்கள். நாகரிகம் முதிர்ந்த நிலையில் கூட, போரில் வெற்றி பெற்ற மன்னர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்களுடைய கருவூலங்களிலிருந்து பொன்னையும் பொருளையும் அள்ளி எடுத்து வருகிறார்கள். அதெல்லாம் போகட்டும். 

மாற்றான் தேசத்து பெண்மணிகளையும் அல்லவா நீங்கள் வலுக்கட்டாயமாக இழுத்து வருகிறீர்கள்! இது பெண்மையை அவமதிப்பது ஆகாதா? வெற்றிக் களிப்பில் பெண்களை வதைப்பதும் வேதனைப்படுத்துவதும் வீரருக்கு அழகா? சற்றே சிந்தியுங்கள். உங்களை ஈன்ற தாய் ஒரு பெண். நண்பர் கூறியது போல் வீரத்தாய். உங்கள் சகோதரி ஒரு பெண். நாளை உங்கள் உயிரிலிருந்து உங்கள் மனைவியிடம் தோன்றப் போவதும் ஒரு பெண். மாற்றான் தேசத்து பெண்களை அவமானப்படுத்தலாமா? உங்கள் குடும்பப் பெண்களுக்குப் பின்பற்றும் நியதியை மாற்றான் தேசத்துப் பெண்களிடம் ஏன் நீங்கள் காண்பிப்பதில்லை? 

(பெண்கள் பகுதியில் கரவொலி) 

பொறுப்புடன் அவர்களை உரிய இடத்தில் சேர்த்தது உண்டா? கண்ணியமாய் அவர்களை நடத்தியது உண்டா? பதில் கூறட்டும் அங்கு போர் வேண்டும் என்று வாதிடுபவர்கள். 

போரினால் பொருளாதார நட்டம் ஏற்பட்டால் என்ன ஆயிற்று என்று கேட்கிறார் நண்பர். மக்கள் அதைத் தாங்கிக் கொள்வார்கள் என்கிறார். மக்கள் எப்படி தாங்குவார்கள்? வேளாண்மை தந்தால்தான் செல்வம். ஏர் பின்னது உலகம். விளை பொருட்களால் குவியும் நிதியை எல்லாம் போருக்கே செலவிட்டால் குடிமக்களின் கதி என்ன? அரை வயிற்றுக் கஞ்சிக்கும் வழி இல்லா விட்டால் அரசனை வாழ்த்துமா நாடு? 

போர் என்பது உங்களுடைய நாட்டு மக்களின் அமைதியான வாழ்வில் இடையூறு ஏற்படுத்துவதோடு மாற்றான் நாட்டு மக்களின் அமைதியான வாழ்விலும் இடையூறுகளை ஏற்படுத்துகிறது. வாழ்க்கையையே திருப்பிப் போட்டு விடுகிறது. குடை சாய்க்கிறது. மக்கள், விதித்த வரை நிறைவாகவும் அமைதியாகவும் நல்ல செயல்கள் செய்து நிம்மதியாக வாழ்வைக் கழிக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள். 

போர் வரட்டும் உயிர் போகட்டும் என்று யாரும் விரும்புவதில்லை. தேசப்பற்று என்ற பெயரில் இளைஞர்களை போரில் ஈடுபடுத்துவதால் நான் முன்பே கூறியது போல் நடுகல் வழிபாடுதான் மிஞ்சும் பெண்களுக்கு. 

அமைதியே ஆக்கப்பூர்வமானது. இங்கு எல்லோரும் அமர்ந்து கோயில் திருவிழாவில் ஆடல், பாடல், கூத்து, நாடகம், நிகழ்ச்சி எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறோமே. எப்படி சாத்தியமாகிறது? செண்பகத்தீவு என்னும் சிறிய நாடு அமைதியை விரும்பும் நாடு. சுற்றி எத்தனையோ தீவுக் கூட்டங்கள். அவற்றை எல்லாம் நம்முடைய ஆதிக்கத்தில் கொண்டு வர வேண்டும் என்று நம் மன்னர் நினைத்திருந்தால் எப்போதோ அவை நம்முடைய நாட்டின் பகுதிகளாக உருமாறியிருக்கும். ஏனென்றால், நமது மாமன்னர் அமைதியை விரும்புகிறார். நடுகல் நடும் பழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று விரும்புகிறார். நமது மாமன்னர் என் கட்சி என்பதில் பெருமை அடைகிறேன். 

(கரவொலி (அமர்கிறார்) 

பெருந்தேவனார் : கல் ஆனாலும் கணவன் என்பதன் பொருளை உரைத்தார். புல் ஆனாலும் புருடன் என்பதன் பொருளை நான் பகர்கிறேன். புல்லாள் என்பது வழிப்பறி செய்பவரைக் குறிப்பது. அப்படிப்பட்ட தொழில் புரிபவனாக கணவன் இருந்தாலும் அவனுக்குப் புருடனுக்கு உரிய மரியாதையைத் தந்து அவனுடன் மனைவியானவள் வாழ முற்பட வேண்டும் என்பது இதன் திரண்ட பொருள். தாமோதரனார் அயலார் பெண்களைக் கண்ணியமாக நடத்த வேண்டாமா? நம் பெண்மணிகளை நடுகல் வழிபாடு செய்யும் நிலைக்குத் தள்ளலாமா என்றெல்லாம் கேட்டு அமர்ந்திருக்கிறார். உருத்திரங்கண்ணனார் அவர்களே உரையுங்கள் இரண்டாவது சுற்று உரையை. 

(உருத்திரங்கண்ணனார் எழுந்து நிற்கிறார்) 

உருத்திரங்கண்ணனார் : நடுகல் நடுகல் என்கிறீர்கள். அவள் கணவன் வீரமரணம் அடைந்ததை எண்ணி எண்ணி மகிழ்ச்சி அடைகிறாள். அப்படிப்பட்ட கணவனை அடைந்ததற் காகத்தான் பெருமையுடன் அவனுடைய நினைவாக நடப்பட்ட நடுகல்லைப் பூசிக்கிறாள். இதில் யோசிக்க வேறு ஒன்றும் இல்லை. கல் ஆனாலும் கணவன். நமது மாமன்னர் போரை விரும்பவில்லை என்கிறார். சுற்றிலும் உள்ள தீவுக் கூட்டங்கள் சினன்ச் சின்னத் திட்டுகள். வேட்டைக்காரன் முயலை வேட்டை ஆடுவதையா பெரிதாக நினைப்பான்…? யானையை கண்ணி வைத்துப் பிடிப்பதில்தான் மகிழ்ச்சி அடைவான்… எனவே… 

பெருந்தேவனார் : (இடைமறித்து) புலவர்களே நம் நாட்டைப் பற்றியும் மாமன்னர் பற்றியும் தங்கள் உரைகளில் இந்த விதமாகப் பேசுவதைத் தவிர்ப்பதே நல்லது என்பதைத் தெரிவிக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன். 

உருத்திரங்கண்ணனார்: மன்னிக்கவும். வாழ்க்கையின் சுருதி குலைந்து போய் விடுகிறது என்று கூறினார். எப்போதும் வாழ்க்கை ஒரே சீராக இருந்து விடுமா? அவ்வாறு இருக்க முடியுமா? 

மன்னன்தானே போர் புரிகிறார் என்று மக்கள் வாளவிருந்து விட மாட்டார்கள். மக்களில் ஒவ்வொருவரும் தங்களால் இயன்றதை முழு விருப்பத்துடன் செய்வார்கள். மன்னனின் வெற்றிதான் அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். அதற்காக எப்படிப்பட்ட இடர் வந்தாலும் துன்பம் நேரிட்டாலும் சகித்துக் கொள்வார்கள். வீர மன்னர்கள் என்று வரலாற்றில் புகழப்படும் மன்னர்களுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் மக்களே. 

கருவூலத்தைக் கொள்ளையடிக்கிறார்கள் என்கிறார். நாடே வெற்றி பெற்றவன் வசம் வந்தபின் கருவூலம் அவன் வசம்தான். பாதுகாக்க முடியாமல் கருவூலத்தையும் கோட்டையையும் கோட்டை விட்டவர்கள்தான் தோற்றுப் போனவர்கள். தோல்வி தரும் பலமான அடியைத் தாங்கித்தான் தீர வேண்டும். போர் என்றால் வெற்றியும் ஏற்படும்; தோல்வியும் ஏற்படும். இது தெரிந்துதான் போரில் இறங்குகிறார்கள் மன்னர்களும் தளபதிகளும் வீரர்களும். 

தோல்வியுற்ற நாட்டின் பெண்களை ஏன் தூக்கி வருகிறீர்கள் என்று கேட்கிறார். இது என்ன கேள்வி? வெற்றி மாலை அணிந்த வீரனையே பெண்கள் விரும்புவார்கள். பின் தொடர்வார்கள். எல்லைக் கோடு விரிவடைய வீரம் காட்ட வேண்டும். இமயத்தில் தத்தம் இலச்சினையைப் பொறித்து வந்த தமிழ் புலத்து மூவேந்தரின் வரலாற்றை புலவர் வாசிக்கவில்லை என்று நினைக்கிறேன். போர் என்பது ஒரு வாழ்க்கை நடைமுறை. பகையை ஒழிக்க வேண்டும் என்றால் போர் வேண்டும். “பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே” என்ற பக்குவ வார்த்தைகள் எடுபடாது. “வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே” என்றார் சங்கத் தமிழ்ப் புலவர் பொன்முடியார். உங்களையும் உங்களைச் சேர்ந்த மக்களைக் காத்துக் கொள்ளவும் போர்தான் உகந்த வழி. 

படைபலம் பெருக வேண்டும்.ஆயுதக் கூடம் விரிவடைய வேண்டும். அப்போதுதான் தேசத்தின் எல்லைக் கோடு விரிவடையும். எந்தக் காலத்திலும் ஏதாவது ஒரு வகையில் ஒரு நாடு மற்றொரு நாடு மீதும் அண்டை நாடு மீதும் போர் தொடுத்துக் கொண்டுதான் இருக்கும். தக்க பதிலடி கொடுத்தால்தான் நாடும் மக்களும் பிழைப்பார்கள். உலகம் உள்ள வரை போர் இருக்கும். மன்னர்கள் மீது பழி சொல்வதால் பயன் இல்லை. மக்களைக் காக்கவும் நாட்டைக் காக்கவும் விஸ்தரிக்கவும் போர்தான் உகந்த வழி. 

(அமர்கிறார்) 

பெருந்தேவனார் : செல்வன் உருத்திரங்கண்ணனார், வீரத்தின் பெருமையையும் போர் என்பது தவிர்க்க முடியாதது என்பதையும் எடுத்துரைத்தார். நம்முடைய இளவல் தாமோதரனாரின் வாதங்கள் தவிடு பொடியாகி விடும் போலிருக்கிறது. வாருங்கள். தாமோதரனாரே. உங்களுடைய மூன்றாவது சுற்று வாதத்தைத் தொடருங்கள். 

(தாமோதரனார் எழுந்து நின்று பேசுகிறார்) 

தாமோதரனார் : போர் என்று மனித ஜாதியினர் சண்டையிடும் போது அமைதியாகத் தங்கள் வாழ்வை நடத்தி வந்த பல ஜீவராசிகளை வதைக்கின்றனர். அவற்றுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். இடம் பெயரச் செய்கின்றனர். கொல்லவும் செய்கின்றனர். போரில் பயன்படுத்தப்பட்ட குதிரைகளும் யானைகளும் இறந்து போகின்றன. அவற்றின் வாழ்வுரிமையைப் பறிக்கும் உரிமையை இவர்களுக்குத் தந்தது யார்? பறவைகளில் பிணம் தின்னும் கழுகுகளுக்கு மட்டும்தான் நீங்கள் கொண்டாட்டத்தைத் தருகிறீர்கள். 

அண்டை நாடுகளிடம் பகையை வளர்த்தே தீர வேண்டும் என்று இளம்புலவர் கூறுகிறார். அண்டை நாடுகளுடன் நட்பு பாராட்டினால் உறவு வலுப்படாதா? காடுகளை அழித்து உருவானவை நாடுகள். நாடுகளை அழித்திட போர்கள் காரணமாய் அமைந்து விடலாமா என்பதை அரசர்கள் யோசிக்க வேண்டும். போர்களால் ஜனங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்பதை நான் சுட்டிக் காட்டியபோது மக்கள் அதற்கெல்லாம் ஆயத்தமாக இருக்கிறார்கள் என்று சப்பைக்கட்டு கட்டுகிறார் இளம்புலவர் உருத்திரங்கண்ணனார். 

எல்லைக் கோடுகள் விரிவடைய வேண்டும் என்ற நோக்கில் மேற்கொள்ளப்படும் போர்களால் படையெடுப்புகளால் மக்களுக்கு ஏற்படும் இன்னல்கள் கொஞ்சமா நஞ்சமா? இன்னும் சொல்ல வேண்டுமானால் அரசர்கள் தங்களை நம்பியிருக்கும் ஜனங்களின் மீது போர்களைத் திணிக் கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். மனித குலத்திற்கு நாசத்தை ஏற்படுத்துகிறார்கள். புவியில் அமைதி நிலைத்திட வீரர்களின் இன்னுயிர்களைக் காத்திட போர்களைத் தவிர்த்து ஒவ்வொரு நாடும் தன்னுடைய அண்டை நாடுடன் நட்பு கொள்வதே நல்லது. நான் முன்பே குறிப்பிட்டது போல், நம்மோடு வாழ்ந்து வரும் பல்வேறு உயிரினங்களுக்கும் அதுவே நன்மையைப் பயக்கும். 

போர்களில் பல தந்திரங்கள், வியூகங்கள், உத்திகள் உள்ளன. வீரத்திற்கு மட்டும் அல்ல அறிவுக்கும் விவேகத்திற்கும் அங்கே பணி இருக்கிறது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதனால்தான் தலைப்பாகைப் புலவர் “போர்த் தொழில் பழகு” என்ற கட்டளையை இட்டார். போர்த் தொழில் என்ற வார்த்தையை நான் அந்தத் தமிழ்ப்புலவரிடமிருந்து சுவீகரித்துக் கொண்டு இங்கு பயன்படுத்தினேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். போர்த் தொழில் பழக வேண்டும். போர்க்குணம் வேண்டும். 

வை எல்லாம் நெருக்கடிகளை எதிர்கொள்ளவும் வீழ்ந்து விடாமல் சோர்ந்துவிடாமல் போராடவும் உதவும். போர்த் தொழிலிலும் போர்க் குணத்திலும் தேர்ச்சி பெறுகிற அதே நேரத்தில் அமைதியை விரும்புங்கள். நிம்மதி தேவதை உங்களுக்கு அருள் புரிவாள். 

(அமர்கிறார்) 

பெருந்தேவனார் : புலவர் தாமோதரனார், தமது மூன்றாவது சுற்றில் மனிதன் போர்த் தொழில் பழக வேண்டும், மனிதனுக்கு போர்க் குணம் வேண்டும். அவற்றில் தேர்ச்சி பெற்றால் வாழ்வில் எப்படிப்பட்ட சூழ்நிலையையும் எதிர்கொள்ளலாம் என்று கூறினார். போர் பற்றிய நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். நுட்பங்களைப் பழகுங்கள். ஆனால், போர் புரியாதீர்கள்.போர்த் தொழிலை, போர்க் குணத்தை வாழ்வில் சிக்கல்களைத் தீர்க்கப் பயன்படுத்துங்கள் என்று கூறுகிறார். சிந்திக்க வேண்டிய கருத்து. புலவர் உருத்திரங்கண்ணனாரின் மூன்றாவது சுற்று பேச்சைக் கேட்போம். 

உருத்திரங்கண்ணனார் (எழுந்து நின்று பேசுகிறார்) : நடுவராக உள்ள புலவர் பெருமானே! போர்த் தொழில் பழகு ஆனால் அதனைப் போரில் பயன்படுத்தாதே வாழ்வில் பயன்படுத்து என்கிறார். விற்பயிற்சியையும் வாள் பயிற்சியையும் அன்றாட வாழ்வில் பயன்படுத்த வேண்டிய அவசியம் உண்டா என்ன? வியூகங்கள் வகுத்து எதிரியை வீழ்த்துவதற்கு சாதுரியம் வேண்டும். சாமர்த்தியம் வேண்டும். கொக்கைப் போல் தக்க தருணம் பார்த்துக் காத்திருக்க வேண்டும். திட்டமிடல் வேண்டும். திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்த உதவக்கூடிய தளபதிகளும் மகாரதர்களும் மன்னர்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். தோளோடு தோள் கொடுத்து நிற்பார்கள். 

நாமாகப் படையெடுக்கக் கூடாது என்று கூறுவதில் உள்ள அறத்தை ஏற்றுக் கொள்ளுகிறேன். அதே நேரத்தில் எந்த நேரமும் எதிரி, திடீர்த் தாக்குதல் நடத்தி, போர்த் தொடுக்கும்போது எதிர் கொள்ளத் தயாராக இல்லா விட்டால், அந்த மன்னனை மக்கள் ஏசமாட்டார்களா? கோட்டை, கொத்தளங்கள், அரண், அகழி இவை எல்லாம் எதற்காக? அரண் என்ற சொல்லே பாதுகாப்பு என்ற பொருளைத் தரவில்லையா? நான் அனைத்து நாடுகளுடன் நட்பில்தான் இருக்கிறேன் என்று எந்த அரசனும் அரண் அமைத்துக் கொள்ளாமல் சும்மா இருப்பானா? படை பலத்தைப் பெருக்காமல் இருப்பானா? படையைப் பராமரிப்பது செலவினம் தான் என்று கருதுவானா? 

நீங்கள் பலவீனமாக இருந்தால் நாட்டையும் மக்களையும் பெரும் வலிமைமிக்க நாட்டு மன்னனிடம் தாரை வார்த்து விட்டு ஓடி ஒளியும் நிலையே ஏற்படும். வல்லான் வகுத்ததே வாய்க்கால். இதுதான் யதார்த்தம். 

சின்னச் சின்ன மீன்களை பெரிய மீன்கள் உணவாகக் கொள்ளும். பெரிய பெரிய மீன்களை திமிங்கலங்கள் எளிதாக விழுங்கிவிடும். 

இயற்கை கூறும் இந்தப் பாடத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.விழுங்கப்படக் கூடிய ஜந்துவாக இருந்தால் அச்சத்தில்தான் வாழ வேண்டும். விழுங்கும் திமிங்கலமாக இருக்க வேண்டும். அப்போதுதான் விஷமங்கள் செய்யவும் சீண்டிப் பார்க்கவும் யாரும் உங்கள் நிழல் பக்கம் கூட வர மாட்டார்கள். 

(கரவொலி) 

உங்கள் பேராற்றலைப் பெருக்கி அதனை ஒருமுகப்படுத்தி களத்தில் இறங்கினால் வெற்றி வசப்படும். இழப்புகள், அழிவுகள் பற்றியே நம் தோழர் பேசி வருகிறார். அழிவு என்பது ஆரம்பத்தைத் தொடக்கி வைக்கும் புள்ளி என்பதைப் புரிந்து கொள்ள மறுக்காதீர்கள். நாசம் நாசம் என்று பேசி மோசம் போய் விடாதீர்கள். இம்சை என்பது உலகத்தின் எல்லாப் பகுதிகளிலும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. புலியிடம் புலியே புலியே புல்லைச் சாப்பிடு. கலை மானை விட்டு விடு என்று கெஞ்ச முடியுமா? பல்லிக்கு உணவாக சிறு பூச்சி ஜனனம் எடுக்கிறது. எறும்புகளைத் தின்னும் எறும்புத் தின்னி என்ற பெயர் கொண்ட விலங்கு இருக்கிறது.நம் அன்றாட வாழ்வில் ஒன்றறக் கலந்த காகங்கள், ஓடும் சுண்டெலியைக் கொத்த வருவதில்லையா? 

இதெல்லாம் இயற்கை நியதி. சுழலும் உலகில் மனிதர்களிடையேயும் எப்போதும் இம்சை இருந்து கொண்டுதான் இருக்கும். ஏக சக்ராதிபதி, சக்ரவர்த்தி, பேரரசர் என்றெல்லாம் முடிசூட்டி கம்பமதயானைக் கழுத்தகத்தின்’ மீதமர்ந்த ஆட்சியாளர்கள், வாழ்வில் எந்த மனிதனையும் இம்சிக்காமல், உயிர் பறிக்காமல் இந்த நிலைக்கு வந்ததாகப் பிரகடணப்படுத்திக் கொள்ள முடியுமா?அப்படியே சொன்னாலும் அதை இந்த உலகம் நம்பி ஏற்குமா? போர்களிலும் தர்ம நியாயங்கள் உள்ளன; யுத்த நெறிகள், நியதிகள், விதிமுறைகள் உள்ளன என்பதைப் புலவர் பெருமானார் போன்ற பெரியவர்கள், வழக்குத் தொடுத்தவருக்குப் புரிய வைத்தால் நல்லது என்று நினைக்கிறேன். நன்றி. (அமர்கிறார்) 

பெருந்தேவனார் : இளவல் தாமோதரனாரின் கவலை எல்லாம் சீரான வாழ்வுப் பாதையில் போர்கள் தடைகளை ஏற்படுத்து கின்றன; சகல ஜீவராசிகளையும் மருட்டுகின்றன என்பதே. அதனால்தான் 

போர்களைத் தவிர்க்க வேண்டும் ஜனநாசத்தைத் தடுக்க வேண்டும் என்று குரல் கொடுக்கிறார். நீங்கள், இம்சை இல்லாத உலகைக் காண முடியாது; ஆயுதம் ஏந்தாமல் ஆயுளைக் கழிக்க முடியாது என்கிறீர்கள். சரி பார்ப்போம். தாமோதரனார் மேலும் என்ன உரைக்கின்றார் என்று. வாருங்கள். 

தாமோதரனார் : நயத்தகு நாகரிகங்கள் பல கற்ற மனிதர்கள், வியத்தகு விந்தைகள் பல புரிந்த மனிதர்கள், அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும் போர்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க மாட்டார்களா என்பதே என்னுடைய பேராவல். 

போர் வேண்டாம் போர் வேண்டாம் என்று நான் சொல்வது புதுக் கருத்து அல்ல. 

பரத கண்டத்தில் பல்வேறு போர்களில் வெற்றி முரசு கொட்டிய அசோகன் என்னும் மாமன்னர், கலிங்கம் என்னும் உத்கல நாட்டில் போர் நடத்திக் களைத்த இரவு ஒன்றில் அடிபட்டவர்களுக்கு ஒத்தடம் கொடுக்கவும் மருந்திடவும் ஒரு புத்த சந்நியாசி வந்தான். புத்தர் பெருமானின் சிஷ்யன் அவன் பெயர் உபகுப்தன். அங்கு வந்த மாமன்னன் அசோகனிடம் அவன் கேட்டான். ஓடும் இரத்த ஆற்றைப் பாரும். அடங்கிற்றா உமது கோர யுத்தப் பசி? என்று. 

புத்த பிக்குவின் வார்த்தைகள் அசோகரின் நெஞ்சைத் தைத்தன. அன்று முதல் போர் புரிவதில்லை என்று முடிவு செய்தான். புத்த மதம் தழுவினான். அவனுடைய புதல்வனும் புதல்வியும் அயல் நாடுகளுக்குச் சென்று புத்த சமயத்தைப் பரப்பினார்கள். 

வரலாறு போரைத் தவிர்த்து அமைதிப் பாதையில் சென்ற மன்னர்கள் பலரைத் தன்னுடைய பக்கங்களில் வரைந்து வைத்துள்ளது. 

மேலும், மேலும் வார்த்தைகள் வளர்த்துப் பயனில்லை. நாசம் விளைவிக்கும் போர் என்னும் மாயப் பிசாசைக் கட்டி அணைத்து குடிகளுக்கும் நாட்டுக்கும் மோசத்தை விளைவிப்பதைத் தொடரலாமா? என்பதைப் புவி ஆளும் வேந்தர்கள் தீர்க்கமாய்ச் சிந்திக்க வேண்டும் என்று மன்றாடி கேட்டுக் கொண்டு அமர்கிறேன். நன்றி. வணக்கம். 

(தாமோதரனார் அமர்தல்) 

பெருந்தேவனார் : இரண்டு இளம் புலவர்களின் வாதங்களை இதுகாறும் நான் கேட்டேன். நீங்களும் செவி மடுத்துக் கேட்டீர்கள். போர்களின் பயன் நாசம் ஒன்றே என்று தாமோதரனாரும் வீரத்தை உரசிப் பார்க்கும் உரைகல் யுத்தம் என்று உருத்திரங்கண்ணனாரும் தங்கள் எண்ணங்களின் வண்ணங்களை வார்த்தைகளில் வடித்தார்கள். 

சரி. இப்பொழுது இந்த வழக்காடு மன்றத்தில் தீர்ப்பு சொல்லும் நேரம் வந்துவிட்டது. தீர்ப்பு என்பதை இருவருடைய வாதங்களையும் சீர்தூக்கிப் பார்த்து நீதிபதி கூறுவார். 

நானும் இருவரது வாதங்களையும் நெஞ்சில் நினைத்துப் பார்த்து என்னுடைய தீர்ப்பைக் கூறுகிறேன். 

யுத்தம் ஏற்படும் சமயங்களில் நாட்டின் இயல்பு வாழ்க்கை பிறழ்கிறது என்பதை மறுக்க முடியாது. அதனால் ஏற்படும் விளைவுகளை மக்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. இளம் வயதிலேயே கணவனை இழந்து கல்லையே கணவனாகப் பாவிக்கும் நிலை இளம் பெண்களுக்கு ஏற்படுகிறது என்ற கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. புத்த சந்நியாசி, பொட்டில் உறைத்தால் போல் பேசியதால்தான் அசோகன் அகிம்சைப் பாதைக்கு வந்தான். அசோகனை முன்மாதிரியாகக் கொண்டு அவனுக்குப் பின் வந்த புவிவேந்தர் எவரும் போர் புரியாமல் இருந்ததில்லை. நாடு பிடிக்காமல் இருந்ததில்லை. புத்த தேவன் போதித்ததே அகிம்சை. ஆழி சூழ்ந்த உலகில் புத்த சமயத்தைத் தழுவிய நாடுகள், போர்களில் ஈடுபடாமல் இருந்தார்களா என்று எழும் கேள்விக்கு வரலாற்று அறிஞர்கள் ஆம் என்ற பதிலைக் கூற முடியாது. 

எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் உயரத்தை எட்டிப் பிடித்ததாக யானை மீது அம்பாரியில் செல்லும் சக்ரவர்த்தி சொல்லிக் கொள்ள முடியுமா என்று புலவர் உருத்திரங் கண்ணனார் பேசியதில் பொருள் இருக்கிறது. 

போர்க் கலையை வளர்த்தெடுக்க வேண்டும். போர்ப் பயிற்சி சாலைகள் வேண்டும். போர்த் தொழில் பழக வேண்டும். மக்களையும் நாட்டையும் காக்க கங்கணம் கட்டிக் கொண்ட மன்னன், செங்கோல் ஏந்திய மன்னன், இன்றைய சூழலில் எதற்கும் ஆயத்தமாக இருக்க வேண்டும். கவிவேந்தர், புவிவேந்தரின் வீரத்திற்கு உரமூட்டப் பரணி பாடியுள்ளனர். பல போர்களை நடத்தி வெற்றிவாகை சூடிய மன்னன் ஒருவன், ஒருமுறை எதிரிகள் தாக்குதல் நடத்தியபோது தோல்வியுற்ற தருணத்தில் மலைக் குகைக்குள் ஒளிந்திருந்தான். அங்கே ஒரு சிலந்தி கூடு கட்டுவதில் பலமுறை தோற்றுப் போனாலும் மீண்டும் மீண்டும் முயன்று வெற்றி பெற்றதைக் கண்டான். சிலந்தி ஆசான் ஆயிற்று. 

வெளியே வந்தான். மனதை ஒருமுகப்படுத்தினான். மக்களைத் திரட்டினான். கட்டிளங்காளைகளை உற்சாகப்படுத்தினான். வீரவெறிவூட்டினான். வீறுகொண்டு படை திரட்டினான். துணிவுடன் போரிட்டு நாட்டை மீட்டெடுத்தான். இதிலிருந்து என்ன தெரிகிறது? விடாமுயற்சி வெற்றி தரும். பூமியைப் பொட்டல் காடாக ஆக்கும் அளவுக்குப் போரிடுதலைத் தவிர்த்துத்தான் ஆக வேண்டும். ஆனால், மக்களையும் நாட்டையும் காப்பாற்ற போர்தான் உபாயம் என்றால் அதை நடத்தித்தானே தீர வேண்டும். 

புவியில் சாந்தி நிலவ வேண்டும் என்பது தாமோதரனார் போன்ற கவிகளின் விழைவு. அதற்கான காலம் கனிந்து வருமா என்பதற்கு அடியேன் பதில் சொல்ல முடியாது. காலம்தான் பதில் சொல்லும். 

நாட்டுப் பிரஜைகளில் ஒருவர், தன்னைத் தற்காத்துக் கொள்ள தற்காப்புக் கலைகள் பழகி வைத்திருக்கிறார் அல்லவா? அது போலவே, நாட்டு மன்னனும் தன்னையும் தன்னை அண்டி உள்ள தன் சமூகத்தையும் மக்களையும் காப்பாற்றிக் கொள்ள தற்காத்துக் கொள்ள போர்த் தொழில் பழக வேண்டும். அரண் அமைக்க வேண்டும். எதற்கும் சித்தமாய் ஆயத்தமாய் பராமரித்துப் பேணி வர வேண்டும். நாட்டு நிர்வாகத்தின் ஒரு பகுதியே அந்தச் சீரிய பணி. நானும் அமைதி விரும்பிதான். அமைதி விரும்பிகளின் அபிலாஷைகள் நிறைவேறும் காலம் ஒன்று வரும். வரவேண்டும் என்று விழைவோம். எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டுவோம். இத்துடன் இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொள்கிறேன். மன்னர் பிரானுக்கும் பட்டத்தரசிக்கும் மக்களுக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் என் உள்ளம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்து நிறைவு செய்கிறேன். மன்னர் பெருமான் குடிமக்களிடம் இரண்டொரு வார்த்தைகள் பேசுவார். 

(அரசன் எழுந்து நின்று பேசுகிறான்) 

அரசன் : எனதருமைக் குடிகளே! இந்தப் பிரதேசத்திற்கு விருந்தினராக வந்துள்ள சுற்றுலாப் பயணிகளே! இதுகாறும் நடைபெற்ற இந்நிகழ்ச்சி உங்கள் செவிகளுக்கும் சிந்தைக்கும் விருந்து அளித்திருக்கும் என்று நம்புகிறேன். ‘வில்லேர் உழவர் பகை கொள்ளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை’ என்று பல்லாண்டுகளுக்கு முன் சொல்லிச் சென்றான் பைந்தமிழ்ப் பாவலன் வள்ளுவப் பெருந்தகை. அமைதியை அகிலத்தில் வென்றெடுக்க படைவீரர்களாகிய வில்லேர் உழவர், தங்கள் கைகளுக்கு ஓய்வளித்தால் என்ன என்று கேட்டார், இங்கு ஒரு சொல் ஏர் உழவர். மறுத்துப் பேசிய புலவரும் அவரது கேள்விக்கு ஆவேசமாய்ப் பதில் அளித்தார். பெருந்தேவனார், பக்குவமாய்த் தமது தீர்ப்பை வழங்கினார். ஒவ்வொரு நாடும் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை ஒட்டிப் பேசினார். 

சரி. நானும் அந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன். நான் போர் என்றதும் புறமுதுகிட்டு ஓடுபவன் அல்லன். என் மக்களும் அப்படிப்பட்டவர்கள் அல்லர். இருந்தபோதிலும், அகிலத்தில் அமைதி தழைக்க வேண்டும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று முழங்கினானே ஒரு சங்கத்தமிழ்ப் புலவன், அவன் கூறியதுபோல், வஸுதைவ குடும்பகம் என்பது வெறும் வார்த்தைகளில் மட்டும் இல்லாமல் நிஜமாக வடிவம் பெற வேண்டும். கவி வாக்கு பலிக்க வேண்டும் என்பதே என் பேரவா. மனிதகுலம் இதைப் பற்றி சிந்திக்கட்டும். எல்லாக் காலங்களிலும். நன்றி. வணக்கம். 

(அரசியும் எழுந்து நிற்கிறாள். இருவரும் கை கூப்புதல்) 

(பார்வையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கலைந்து செல்லுதல்) 

(அரங்கத்தில் தாமோதரனாரும் முல்லையும் மட்டும் நிற்கின்றனர்.) 

தாமோதரனார் : முல்லை. இது என்ன குறத்திவேடம்? கையில் குறி சொல்லும் கோல். யாருக்கு குறி சொல்லப் போகிறாய்? 

முல்லை : தங்களுக்குத்தான் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

தாமோதரனார் : ராஜ நர்த்தகியாக வந்தால் ஜனங்கள் கவனமெல்லாம் உன் பக்கம் திரும்பும் என்று நினைத்து மாறுவேடம் தரித்து வந்திருக்கிறாய். நீ என்னதான் முகத்துக்கு வேறு ஒப்பனைகள் செய்தாலும் உன் கண்கள் நீதான் என்பதைக் எனக்குக் காட்டிக் கொடுத்து விட்டனவே. 

முல்லை : அதுதான் என்னைப் பார்த்ததும் கடைக்கண் கடைக்கண் பார்வை என்று உளற ஆரம்பித்து சமாளித்தீர்களா? 

தாமோதரனார் : உன் பார்வை அளித்த உந்து சக்தியில் சொற்பொழிவை நன்றாகப் பேசி விட்டேன். 

(தாமோதரனார், முல்லையின் கரத்தைப் பிடிக்கிறார். அவள் விலகுகிறாள்.) 

முல்லை: இதற்கெல்லாம் இப்பொழுது என்ன அவசரம்? மக்கள் மத்தியில் உருத்திரங்கண்ணனாரின் பேச்சுக்குத்தான் மிகுந்த வரவேற்பு.நானும் பார்த்துக் கொண்டுதானிருந்தேன். தங்கள் வாதங்களை இன்னும் வலுவாகப் பேசியிருக்க வேண்டும்.நான் வந்து அமர்ந்ததால்தான் கோட்டை விட்டு விட்டீர்கள் போலும். 

தாமோதரனார் : ஏன்… என்னுடைய பேச்சுக்கும்தான் மகளிர் பகுதியிலிருந்து பலமான கரவொலி கேட்டதே. 

முல்லை : நீங்கள் நடுகல், கைம்பெண் என்றெல்லாம் பேசும்போது மட்டும் உங்களுக்கு ஆதரவாகக் கை தட்டினார்கள். ஆனால், அவர்தான் இந்த நிகழ்ச்சியின் நாயகர். அதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது. மாமன்னரும் தீர்ப்பு சொன்ன நடுவரும் அவரது வாதங்களை ஒட்டியே ஒரு பக்கம் சாய்ந்து விட்டார்கள். இதை நடுநிலையான தீர்ப்பு என்று எப்படி சொல்ல முடியும்? 

தாமோதரனார் : நீ கூறியதுபோல், என் தரப்பு வாதங்களை நான் வலுவாக ஆணித்தரமாகப் பேசாமல் விட்டு விட்டேனா? ஒரு கோடி காட்டி நகர்ந்து விட்டேனா? 

முல்லை: (சமாளித்து) இல்லை. இல்லை. நீங்கள் சிறப்பாகத்தான் பேசினீர்கள். அந்தப் புலவரின் வாதம் எடுபட்டதுபோல் உங்கள் வாதம் எடுபடவில்லை. சரி விடுங்கள். நடந்ததைப் பற்றிப் பேசிப் பயன் என்ன? விடை கொடுங்கள். இருட்டி விட்டது. தாமதமாகப் போனால் என் சித்தி என்னை ஒரு வழி ஆக்கி விடுவார். 

தாமோதரனார்: சிற்றன்னை என்றால் அவ்வளவு பயமா? அவர்கள் என்ன செய்து விடுவார்கள்? காதலருடன் இருந்தேன் என்று சொல். அரசவைப் புலவர் என் காதலர் என்று பெருமையுடன் சொல். தொடரட்டும் உங்கள் காதல் என்று வாழ்த்துவார்கள். 

முல்லை : ம்ஹும் நம் காதல் கைகூடும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. உள்ளுணர்வு கூறுகிறது. 

(தாமோதரனார் அவள் கரத்தைப் பற்றி இதோ கூடி விட்டதே என்கிறார்) 

முல்லை : (மீண்டும் விலகிச் செல்கிறாள்) உங்களுக்குத் துணிவு என்று ஒன்று இருந்தால் உங்கள் தந்தையாரிடம் சொல்லிப் பாருங்கள் முல்லைதான் நான் கரம் பற்றப்போகும் நாயகி என்று. 

தாமோதரனார் : என் தாயும் தந்தையும் என் விருப்பத்திற்கு மாறாக எதுவுமே செய்ய மாட்டார்கள். 

(உன் தந்தை ஒரு காலும் சம்மதிக்க மாட்டார் என்று பெண் குரல் ஒலிக்கிறது) 

(இருவரும் திரும்பிப் பார்க்கிறார்கள். மேடையின் வலப்பக்கத்திலிருந்து தாமோதரனாரின் தாயார் பாடினியார் வருகிறார். பருத்த தேகம். நரைத்த தலை.) 

தாமோதரனார் : அம்மா. நீங்கள் எங்கே இங்கே…ஏன் எதிர்மறையாகப் பேசுகிறீர்கள்?… 

பாடினியார் : நீ பேசுவதைப் பார்க்கத்தான் வந்தேன். 

(முல்லை பாடினியாரைப் பார்த்து கைகூப்பி வணங்குகிறாள்) 

பாடினியார்: ஆசிகள். (வேண்டா வெறுப்பு தொனி) 

தாமோதரனார் : எங்கள் காதல் கடிமணத்தில் முடியட்டும் என்று ஆசி கூறுங்கள் அம்மா. 

பாடினியார் : சரி முல்லையிடம் விடைபெற்று வா. நாம் இல்லம் செல்வோம். 

தாமோதரனார் : அம்மா…. 

பாடினியார் : மேடை ஏறி தமிழ் முழக்கம் செய்யும் பிள்ளைக்கு என் குறிப்பு புரியாதா? 

தாமோதரனார் : இல்லை. தந்தை சம்மதிக்க மாட்டார் என்று சொன்னீர்களே. முல்லையும் அதைப் பற்றியே எண்ணி எண்ணி கவலைப்படுவாள் – என்ன என்று கூறுங்கள். 

பாடினியார் : ராஜநர்த்தகி. நீ காதலை வளர்ப்பதை விட்டு விட்டு கலையை வளர்க்கப் பாடுபடுவதுதான் உனக்கும் நல்லது உன் காதலருக்கும் நல்லது. 

முல்லை: அம்மா. ஏன் இதுபோன்ற கடுமையான வார்த்தைகளைப் பேசுகிறீர்கள்? 

பாடினி : நான் சற்றே மென்மையாகத்தான் பேசுகிறேன். என் டத்தில் வேறொருவர் இருந்தால் மனம் புண்படும்படி வார்த்தைகளைக் குத்தீட்டியாக்கியிருப்பார்கள். 

தாமோதரனார்: இப்பொழுது மட்டும் என்ன?… தந்தையார் கண்ணில் தெரியும் தடை என்ன அதைச் சொல்லுங்கள். சரி செய்கிறேன். 

பாடினி : பிரச்சினை என்ன என்பதை நாசூக்காக சொல்லிப் பார்த்தேன். படித்தவர்களாகிய உங்கள் இருவருக்கும் புரியவில்லை. போட்டு உடைக்கிறேன். உன் தந்தையார் பெயரைச் சொல். 

தாமோதரனார் : என்னுடைய தந்தையாரின் பெயர் பலதேவர். அதனால் என்ன? 

பாடினி : பெற்ற தாய் பிறப்பித்த தந்தை என்று சொல்வார்கள். உனக்கு பெற்ற தாய் இருக்கிறேன். பிறப்பித்த தந்தை இருக்கிறார். முல்லையைப் பிறப்பித்த தந்தை யார்? சொல்லச் சொல். 

(தாமோதரனார் முல்லையைப் பார்க்கிறார். முல்லையின் கண்களில் கண்ணீர் பெருகுகிறது. எதுவும் பேசாமல் ஓட்டமும் நடையுமாக மேடையின் இடப் பக்கமாக வெளியேறுகிறாள்) 

தாமோதரனார் : அவளை நோக அடிக்கத்தான் குறுக்கீடு செய்தீர்களா? நல்ல அம்மா நீங்கள். நன்றாகப் போட்டு உடைத்தீர்கள். 

(பாடினியார் அவருடைய தோள்களைப் பற்றுகிறார். தாமோதரனார் விலகிச் செல்கிறார்.) 

தாமோதரனார் : நீங்கள் இல்லம் செல்லுங்கள். நான் பிறகு வருகிறேன். 

(பாடினியார் எதுவும் பேசாமல் மேடையின் வலப்பக்கமாக பைய நடந்து வெளியேறுகிறார்) 

(தாமோதரனார் நிற்கிறார். விளக்குகள் ஒவ்வொன்றாக அணைகின்றன.) 

தாமோதரனார் : (தனக்குத் தானே) என்னுடைய முல்லையின் மனம் புண்படும்படி என்னுடைய தாயே பேசிவிட்டாள்… தடுக்காமல் விட்டுவிட்டேன். மறந்தே போனேன் முல்லைக்கு அளித்த வாக்குறுதியை. 

(பின்னணியில் குரல்கள் மட்டும் – நினைவோட்டம்) 

(தாமோதரனார் மற்றும் முல்லை – இருவரின் குரல்கள்) 

தாமோதரனார் : என்னுடைய காதலை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறாய் ராஜ நர்த்தகி? 

முல்லை : நான் விலகிப் போவதிலிருந்தே புலவர் புரிந்து கொள்ள வேண்டும். 

தாமோதரனார் : என் காதலை கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும். 

முல்லை : என்னை சங்கடத்தில் ஆழ்த்தாதீர்கள்.

தாமோதரனார்: ஏன் என்னைப் பிடிக்கவில்லையா? 

முல்லை: பிடிக்காவிட்டால் உங்களிடம் பேச முற்படுவேனா? 

தாமோதரனார் : உன்னைத் தடுப்பது எது என்று எனக்குத் தெரியும். உன் தந்தையார் யார் என்ற கேள்விக்கு விடை காண முடியவில்லை. அதற்கும் என் காதலை ஏற்பதற்கும் என்ன தொடர்பு? 

முல்லை : செம்புலப் பெயர் நீர் போல் அன்புடை நெஞ்சம் கலந்திருந்தாலும் பேசுவதற்கு என்று பெரியவர்கள் வேண்டும். குடும்பத்தலைவன் வேண்டும். கன்னிப் பெண் ஒருத்தியின் கரிசனத்தால் வளர்ந்த பெண்கள் நானும் என் தங்கையும். விட்டு விடுங்கள். என்னை காதலால் நோக அடிக்காதீர்கள். நீங்கள் தங்களுக்கு ஏற்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு நலமுடன் வாழுங்கள். 

தாமோதரனார் : சந்தனம் எங்கிருந்து வருகிறது என்று ஆராய்ச்சி செய்தா உடலில் பூசிக் கொள்கிறோம். மலர்கள் எங்கிருந்து வந்தவை என்று பார்த்தா சூடிக் கொள்கிறோம். கவிஞனும் ஆடல் அரசியும் கடிமணம் புரிவது பொருத்தமானதே. என் பெற்றோர் உன் பிறப்பு குறித்து எதுவும் பேசாமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு. ஏற்றுக்கொள் என்னை. உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன். முல்லையே என்னை சூடிக் கொள். 

முல்லை : சரி. தங்களிடம் என்னை ஒப்படைக்கிறேன். 

(சிரிப்பொலி) (பின்னணி குரல்கள் ஓய்கின்றன) 

தாமோதரனார் : நான் எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது நடந்து விட்டது. இப்பொழுது என்ன செய்வது என்றே புரியவில்லை. (தனக்குத்தானே பேசிக் கொள்ளுதல்) 

(வலப்பக்கத்திலிருந்து புலவர் உருத்திரங்கண்ணனார் வருகிறார்) 

உருத்திரங்கண்ணனார் : என்ன தாமோதரனாரே இங்கேயே உறங்கி விட உத்தேசமா? வாருங்கள் இல்லம் செல்வோம். 

தாமேதரனார் : இல்லத்தில் உள்ளவர்கள் என்னை இக்கட்டில் மாட்டி விட்டார்கள் நண்பரே. என்ன செய்வது என்று புரியவில்லை. 

உருத்திரங்கண்ணனார் : என்ன ஆயிற்று? புரியும்படியாகச் சொல்லும். 

தாமோதரனார் : என்னுடைய அன்னையாரும் முல்லையும் இங்கு சந்தித்தார்கள். 

உருத்திரங்கண்ணனார் : தெரியும். அத்தையாரின் மனதில் எதுவும் நிற்காது. காதல் கைகூடாது என்று சொல்லியிருப்பார்களே. 

தாமோதரனார் அப்படி சொல்லியிருந்தால் கூட சமாளித்திருப்பேன். முல்லைக்குத் தந்தை இல்லை. தந்தை யார் என்பதும் தெரியவில்லை. அதனால் எந்தையார் என் ஏந்திழையை ஏற்கமாட்டார் என்று… 

உருத்திரங்கண்ணனார் : தேங்காய் உடைத்தது போல் சொல்லிச் சென்று விட்டாரா அத்தை? சரி. அதற்காக விழா மேடை அரு கே நின்று என்ன செய்யப் போகிறீர்கள். வாருங்கள் போவோம். என்ன செய்யலாம் என்று யோசிப்போம். 

தாமோதரனார் : நீர் வக்கணையாகப் பேசுவீர். தலைவலி எனக்கு அல்லவா? 

உருத்திரங்கண்ணனார் : அவரவர் தலைவலிக்கு அவரவர்தான் தீர்வு தேட வேண்டும். இருப்பினும், நீர் எனது ஆருயிர் நண்பர் என்பதால் உம்முடைய தலைவலிக்குத் தைலம் எங்கிருக்கிறது என்று பார்க்கிறேன். 

தாமோதரனார் : எங்கிருக்கிறது? 

உருத்திரங்கண்ணனார் : என்னைக் கேட்டால் ? இப்பொழுது தானே சிக்கல் என்ன என்று கூறியிருக்கிறீர். எப்படி சரி செய்வது என்று பார்ப்போம். 

தாமோதரனார் : எப்படி சரி செய்வீர்? 

உருத்திரங்கண்ணனார் : வாரும் ஐயா. காதல் பித்தில் உளறுகிறீர். நல்ல வேளை. நான் காதல் வலையில் விழவில்லை. முல்லை மல்லிகை இருவருக்கும் தந்தையார் யார் என்பதைக் கண்டுபிடித்து விட்டால் சிக்கல் தீர்ந்து விடும். 

தாமோதரனார் : யார் கண்டுபிடிப்பது? 

உருத்திரங்கண்ணனார் : நானே அந்தப் பணியை மேற் கொள்கிறேன்.வாரும். அத்தையும் அம்மானும் உம்மைக் காணாமல் தவித்துக் கொண்டிருப்பார்கள். 

தாமோதரனார் : நான் என்ன சிறுபிள்ளையா? 

உருத்திரங்கண்ணனார் : கேள்விகளால் கொல்கிறீர்கள். அய்யோ. என்னை விட்டுவிடும்.

(திரை) 

– தொடரும்…

– அமைதிப் புறா (நாடகம்), முதற் பதிப்பு: ஜூலை 2013, கௌரி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *