உண்மைக்கு நூறு புனைபெயர்கள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 10,129 
 

ஜெகனுக்கு குபுக்கென்று ஆத்திரம் பொங்கியது. சட்டென்று சூடாயிற்று உடம்பு. பிடித்திருந்த மவுஸ், தன் மைதானத்திலிருந்து கீழே விழுந்தது.

எண்ணை அழுத்தி, சபேஷை செல்லில் பிடித்தான்.

சபேஷின் குரலில் உற்சாகம் கொட்டிற்று, ”மெயில் பார்த்தியா? சந்தோஷம் பேயா அறைஞ்சிருக்குமே? ரொம்ப நாளா நீ குறிவெச்ச போஸ்டிங் ஆச்சே… கிடைக்கப்போகுதுன்னா சும்மாவா?”

”அந்த சந்தோஷத்தைதான் உன் பின்குறிப்பு அடிச்சுப் போட்டுடுச்சே!”

”ஓ… அந்த ஷேர் விஷயத்தைச் சொல்றியா?”

”ஆமா..!” ஜெகனின் பல் நறநறத்ததையும் சிக்னல் டவர் சிரத்தையாக வாங்கி, சபேஷ் காதில் சமர்ப்பித்தது.

”அது ஒண்ணும் புதுசு இல்லையே? பல இடங்களிலேயும் நடக்கிறதுதானே? கம்பெனியில் உன்னைக் கொஞ்சம் பங்கு வாங்கச் சொல்றாங்க, அவ்வளவுதானே?”

”அதான் ஏன்னு கேட்கிறேன். இப்ப நான் பத்து வருஷமா வொர்க் பண்ற இதே குரூப்பின் இன்னொரு கன்சர்ன்தானே நீ இருக்கிறதும்? ஆன்லைன் டெஸ்ட்டும், ஃபுல் டே இன்டர்வியூவுமா வெச்சு என் தகுதியை நானோ மீட்டர் சுத்தமா அளந்து பார்த்துட்டுதானே தர்றாங்க வேலையை? அப்புறம் என்ன, நம்பிக்கையில்லாம ஷேர் அது இதுன்னு..?”

”சரி விட்றா! நீ கஷ்டப்பட்டு முயற்சி செய்தது கிடைச்சிருக்கு. அதான், தகவல் கசிஞ்சதும் உனக்கு இமெயில் அனுப்பினேன். அடுத்த வாரம் ஆர்டர் வரும். தயாரா இரு!”

செல்லை அணைத்துவிட்டு, மேனேஜரிடம் வந்தான் ஜெகன். லீவு சொல்லிவிட்டுக் கிளம்பினான். வழி நெடுக சிந்தனை. யாரிடமாவது கொட்டித் தீர்க்க வேண்டும் போல இருந்தது. மனைவி என்றொருத்தி வீட்டில் இருக்கிறாள்தான். ஆனால்…

இவன் உள்ளே நுழைந்து சோபாவில் விழுந்தான். உதயா சமையலறையில் இருப்பதைப் பார்த்தான். வருவாள், ஏன் லீவு என்று கேட்பாள் என எதிர்பார்த்தான்.

அவள் மெதுவாக காபியை அவன் முன் வைத்தாள். உள்ளே போகத் திரும்பியவளைத் தடுத்து, ”இன்னிக்கு லீவு!” என்றான். அவள் நின்று, அமைதியாகப் பார்த்தாள்.

”அந்த சிஸ்டம் இன்ஜினீயர் வேலை கிடைச்சுட்டுது, உதயா! ஆனா, வரவேற்பே சரியில்லை. உள்ளே நுழையும்போதே கேவலப்படுத்துறாங்க. அப்படியே மனசு விட்டுப்போச்சு!” என்றான்.

‘ஏன், என்னாச்சு?’ என்று அவள் எதுவும் கேட்கக் காணோம். பதிலேதும் சொல்லாமல் மரம் மாதிரி நின்றாள். இவள் எப்போதும் இப்படித்தான்! சரியான ஜடம். கோபத்தை அடக்கிக்கொண்டு அவனே நடந்தது அத்தனையும் விவரித்தான். அப்போதும் அவள் தலையை ஆட்டிக்கொண்டு நின்றிருந்தாளே தவிர, ஒரு வார்த்தை உதிர்க்கணுமே?

”இதப் பாரு உதயா, என் குமுறல்ல நியாயம் இருக்கா, இல்லையானு நீயே சொல்லு! இந்த வேலையை எனக்கு ஒண்ணும் ஜஸ்ட் லைக் தட் தூக்கிக் கொடுத்துடலை. என் தகுதியை ஒண்ணுக்கு மூணு தடவை இன்டர்வியூ பண்ணிப் பார்த்துட்டுதான் தர்றாங்க. நான் எங்கிருந்தோ வந்து குதிச்சவனும் கிடையாது. அவங்க குரூப்பிலேயே இன்னொரு கம்பெனியில வேலை பார்க்கிறவன். நாலா பக்கமும் என்னைப் பத்தி நல்லா விசாரிச்சுட்டுதான் அப்ளிகேஷன் ஃபார்மே கொடுத்தாங்க. அதுக்கப்புறமும் என்னை ஒரு லட்சத்துக்கு ஷேர் வாங்கணும்னு சொல்றது, எனக்கு எத்தனைக் கேவலம்? அப்படி லட்ச ரூபாயைப் போட்டு அந்தத் தகுதியில் நான் நுழைஞ்சா, என்னால அந்த வேலையில எப்படி முழு ஈடுபாட்டோடு இருக்க முடியும்?”

நிறுத்திவிட்டு, ஆவலோடு மனைவியின் முகத்தைப் பார்த்தான். அவள் அப்போதும் பதில் எதுவும் சொல்லவில்லை. கொஞ்சம் பொறுத்து, ”அப்ப அந்த வேலையில் நீங்க சேரப்போறது இல்லையா?” என்றாள், மெதுவாக!

ஆத்திரத்தில் ரத்தம் சர்ரென்று தலைக்கேறியதை உணர்ந்தான் ஜெகன். சே! என்ன இவள்… இவளிடம் போய் அபிப்ராயம் கேட்டது என் தப்பு. பிரச்னை என்னவென்றே புரிந்துகொள்ளாமல், மடத்தனமாக என்ன இது கேள்வி!

”சேரணும். சேர வேண்டியதுதான். இதை விடவா முடியும்? ஆனால், அதுவா பிரச்னை?” என்றான், பல்லைக் கடித்துக்கொண்டு.

அவள் முகத்தைப் பார்த்தான். அவனது அந்த நிலைக்காக அவள் வருத்தப்பட்ட மாதிரி தெரியவில்லை. உள்ளூர ரசிப்பது போல்கூடத் தோன்றிற்று.

”சரி, என்ன செய்யப்போறீங்க?”

கேக்கிறதைப் பார்! ‘என்ன செய்யப் போறீங்க?’ ஏதோ தனக்குச் சம்பந்தமில்லாத விஷயம் மாதிரி. ஒரு தாலி கட்டின மனைவியின் பங்கு இவ்வளவுதானா? சலிப்பாக இருந்தது.

”இதப் பாரு, நீ இப்படியே இருந்தா…” சொல்ல வாயெடுத்தவன் நிறுத்திக்கொண்டான். ஆயாசமாக இருந்தது. எத்தனை முறை சொல்லியாயிற்று… என்ன பிரயோசனம்?

இட்ட பணியைத் தட்டாது செய்வாள். மற்றபடி, எதிலும் ஒரு ஆர்வத்துடன் தன்னை நுழைத்துக்கொண்டு, இப்படிச் செய்யலாமே, அப்படிச் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே என்று ஆலோசனை சொல்ல மாட்டாள். தன் அபிப்ராயத்தைப் பகிர்ந்துகொள்ள மாட்டாள். உத்தரவு தேவா, தங்கள் சித்தம் என் பாக்கியம்! அவ்வளவுதான்.

இந்த வேலைக்கான ஆயத்தங்களில்கூட, ராத்திரி டீ போட்டுத் தருவதிலிருந்து, புத்தகங்களில் அவன் அடையாளப்படுத்தித் தந்த வரிகளைக் குறிப்பெடுப்பது வரை அவன் சொன்னபடி எல்லாம் செய்துகொடுத்தாள். ஆனால், இப்ப என்ன இப்படி ஆகிப்போச்சு என்று ஒரு வார்த்தை கேட்க மாட்டேன் என்கிறாள்!

குடும்பம் என்பது இரண்டு பேர் சேர்ந்து செலுத்த வேண்டிய வாகனம் என்று நினைப்பவன் ஜெகன். ஆகவே, ஒவ்வொரு விஷயத்திலும் அவள் கோணம் என்ன என்று தெரிந்துகொள்ள விரும்புவான். ஆனால், அவள் துளியாவது ஆர்வம் காட்டினால்தானே?

உதயாவை அவனுக்குப் பெண் பார்த்தபோது அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது, ”இதப் பாரு, நாகராஜன் எனக்கு ரொம்ப நாளா பழக்கம். உதயா அவனுக்குப் பொண்ணா பொறந்த நாள்லேர்ந்தே அவளை எனக்குத் தெரியும். ரொம்பச் சூட்டிகையான பொண்ணு. இந்தச் சம்பந்தத்தில் எனக்கு ரொம்பத் திருப்தி!’

அம்மாகூடச் சொன்னாள்… ”எனக்குப் பிடிச்சிருக்குடா! குடும்பத்துக்கேத்த பொண்ணு. நல்லா படிச்சிருக்கா. ஆனா, அந்தத் திமிர் இல்லாம ரொம்ப மரியாதையா பழகறா. வீட்டு விஷயங்கள் எல்லாம் நல்லா தெரிஞ்சிருக்கு.”

அழகாகவும் இருந்தாள். அவனுக்குமே பிடித்துப்போயிற்று. பெண்ணிடம் தனியே பத்து நிமிஷம் பேச வேண்டும் என்று பெரியவர்களிடம் அனுமதி கேட்டு, தனிமையில் கேட்ட சில கேள்விகளுக்கும் அவன் எதிர்பார்த்தபடி மிகச் சரியாகப் பதில் சொன்னாள். அப்போதே அவளிடம், ”உங்களை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. என் சம்மதத்தை இப்பவே உங்களிடம் தெரிவிச்சுடறேன்!” என்றான்.

ஆனால், இதையெல்லாம் மீறி அவர்களின் திருமணம் நின்றுபோக இருந்தது. இவன் தந்தை கேட்டு, அவள் அப்பா ஒப்புக்கொண்ட தொகையைப் புரட்டித் தரத் தாமதம் ஏற்பட்டுவிட்டது. கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லை என்று எகிறிக் குதித்தார். அப்போதுகூட ஜெகன் தன் அப்பாவைப் பொறுமையாகக் காத்திருக்கச் சொன்னான். எப்படியோ, ஒரே வாரத்துக்குள் நிலைமையைச் சரி செய்துவிட்டார்கள்.

இவ்வளவு தூரம் எதிர்பார்த்து மணந்துகொண்டவள் இப்படி விட்டேற்றியாக நடந்துகொள்பவளாக இருப்பாள் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. எரிச்சலுடன் குறுக்கும் நெடுக்குமாக உலவினான். ஜன்னலைப் பார்த்திருந்தவளைத் தோளில் தொட்டுத் திருப்பினான்.

”இதபார் உதயா, நான் சொல்றதை எல்லாம் கேட்டு எனக்கு நீ ஆறுதல் சொல்லணும்னு இதை நான் உங்கிட்ட கொட்டலே! என் வருத்தத்தை நீ புரிஞ்சுக்குவேன்னு நினைக்கிறேன். அவ்வளவு ஏன், என் வருத்தத்தில் கொஞ்சம்கூட நியாயமில்லை, தப்புன்னு சொல்லி நீ வாதாடினாக்கூட எனக்கு ஒருவிதத்தில் திருப்தி கிடைச்சிருக்கும். ஆனா, உன் மௌனம்..? சொல்லு, ஏன் இப்படி நடந்துக்கறே?

எல்லாத்துக்கும் தலையாட்டறே; சொல்ற எல்லா வேலையையும் செய்யறே. நம்ம குடும்ப சம்பந்தமான எந்தப் பிரச்னையிலும் தலையிடாம ஒதுங்கியே இருக்கே. எந்த முடிவானாலும் என் இஷ்டம்னு விடறே பாரு, அதான் எனக்குப் பெரிய தலைவலியா இருக்கு. தாங்க முடியலே. ஏன் இப்படிப் பட்டும் படாமலும் இருக்கே. இதுக்காவது வாயைத் திறந்து ஏதாவது பதில் சொல்லித் தொலையேன்!”

நிமிர்ந்தாள் உதயா. இந்தத் தருணத்துக்காகவே காத்திருந்தது போலப் படபடவென்று பேசத் தொடங்கினாள்…
”சொல்றேங்க! ஒரு பொண்ணு, தன்னைக் கல்யாணம் செய்துக்கப் போறவனுக்குத் தகுதியுள்ள ஒரு மனைவியா இருக்கணும்னுதான் நினைப்பாள். உங்களுக்கும் ஞாபகம் இருக்கும்… என் வயசு, உயரம், படிப்பு, குணம் எல்லாத்தையும் அலசிப் பார்த்துட்டுதான் நீங்க என்னைப் பெண் பார்க்க வந்தீங்க. உங்க அப்பாவுக்கு எங்க குடும்பத்தை ரொம்ப நாளா தெரியும். உங்கம்மா என்னை எத்தனையோ கேள்விகள் கேட்டு, நான் உங்க குடும்பத்துக்குச் சரிவருவேனானு பார்த்துக்கிட்டாங்க. அப்புறம் நீங்களும் உங்க பங்குக்குத் தனியா பேசி என்கிட்டே நிறையக் கேள்விகள் கேட்டீங்க. இப்படி எல்லா விதத்திலும் நான் தகுதியானவள்னு தீர்மானிச்ச பிறகுதான், ‘உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு’ன்னு சொன்னீங்க. சந்தோஷம். அதே கையோடு என்னை உங்க மனைவியா ஏத்துக்கிட்டு இருந்தீங்கன்னா, இப்ப நீங்க எதிர்பார்க்கிறீங்களே அந்த முழு ஈடுபாடு எங்கிட்ட இயல்பாவே இருந்திருக்கும்.

பெண்ணைப் பெத்த யாருமே தங்களால முடிஞ்ச அளவு தங்கள் பெண்ணுக்குக் கண்டிப்பா சீர் செய்யத்தான் செய்வாங்க. ஆனா, நீங்களோ… நீங்கன்னா உங்க அப்பா. அப்பா கேட்டா என்ன, மகன் கேட்டா என்ன? அதோடு திருப்தி அடையாம, உங்க அந்தஸ்தை மனசுல வெச்சுப் பெருந்தொகை கேட்டீங்க. அந்தப் பணத்தை புரட்டித் தரக் கொஞ்சம் தாமதம் ஆனப்போ, அத்தனை தகுதியுள்ளவளாக நீங்க தேர்ந்தெடுத்த என்னை வேண்டாம்னு ஒதுக்கவும் தயாராயிட்டீங்க. அப்புறம் எப்படியோ எங்கப்பா அங்கே இங்கே அலைஞ்சு அந்தப் பணத்தைப் புரட்டித் தந்த பிறகுதான் உங்க செலக்ஷனையே நீங்க ஏத்துக்கிட்டீங்க. இப்படி இந்த வீட்டுல நுழைஞ்ச எனக்கு, நீங்க சொல்ற அந்த முழு ஈடுபாடு எப்படிங்க வரும்? பணம் கட்டித்தான் உங்க வாழ்க்கைப் பயணத்துல நான் பங்கேற்க முடியும்னா, அந்தப் பங்கு எப்படிங்க ஆத்மார்த்தமா இருக்கும்?

இப்ப நீங்க அனுபவிக்கிற இதே வேதனையைத்தானே, நான் இங்கே வந்தா நாளா அனுபவிச்சிட்டிருக்கேன்! உங்க தகுதியையும் திறமையையும் நல்லா எடை போட்டு வேலை கொடுத்த கம்பெனி, அதுல முதலீடு செய்தால்தான் வேலைன்னதும் அதை எத்தனைப் பெரிய குறையா நீங்க நினைக்கிறீங்க? அந்த நிமிஷமே அந்த கம்பெனில உங்க ஈடுபாடு அடியோடு விட்டுப் போச்சுங்கறீங்களே..! அப்படி இருக்கிறப்போ, அதுக்கு நேர்மாறா எங்கிட்ட மட்டும் எப்படிங்க உங்களால எதிர்பார்க்க முடியுது?”

மௌனம் இப்போது அவன் முறையாயிற்று.

– 02nd ஜூலை 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *