கானகத்திலே காதல்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: June 17, 2022
பார்வையிட்டோர்: 18,349 
 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கதையைப்பற்றி!

திரைக்கதை வரிசையிலே நான்காவது நூலாக கானகத்திலே காதல் வெளிவருகிறது. (அழகு நிலா, செல்வகுமாரி, அந்த இரவு முதலியவை மற்ற நூல்கள்). இவற்றிலே ‘அழகு நிலா’, இரு நண்பர்கள் என்ற பெயரில் படமாகிக்கொண்டிருக்கிறது என்ற நற்செய்தியை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

கலை என்ற பெருங்கடலிலே எத்தனையோ பெரு நதிகள் கலக்கின்றன. அவை இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழின் வழியாக எத்தனையோ சிறு கிளைகளாக நூலிலும், அரங்கிலும் எத்தனையோ உருவங் களில் விரிந்துகிடக்கின்றன. இதில் எந்தத் துறைக்குச் செய்யும் உண்மைத்தொண்டும் கலைத் தொண்டே ஆகும்.

வானம்பாடி,ராணி, நரக வாசலில் போன்ற சிறந்த இலக்கியங்களைப் படைத்தபின் இந்தத் திரைக்கதை களை நூல் வடிவில் அமைக்கும் போது எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. உள்ளூற நினைத்து நினைத்து வருந்தவேண்டியவனாக இருந்தேன் வெறும் கதைகளை இலக்கியங்கள் என்று மக்களின் முன்னால் தள்ளி விடுவதா என்று நெஞ்சு துணுக்குற்றது. ஆனால், அழகு நிலா வெளிவரும் முன்பே பட முதலாளிகளின் கவனத்தைக் கவர்ந்துவிட்டது என்பது ஓரளவு ஆறுதல் அளித்தது. கானகத்திலே காதலை அச்சுப் பிரதியாக நானே ஒருமுறை படித்துப்பார்க்க நேரிட்ட போது உண்மையிலேயே எனக்கு மனமகிழ்ச்சி உண்டாகிவிட்டது.

எவ்வளவு அழகான, கட்டுக்கோப்பான கதை! பட உலகிற்கு இன்னும் ஒரு நல்ல காணிக்கை! படிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு எவ்வளவு அருமையான ஒரு நல்விருந்து…! எத்தனையோ அருமையான கருத்துக்களைத் தத்துவங்களைத் தாங்கி வருகிறது கானகத்திலே காதல்!

பதவிப்பித்தன் ஒருவன் கையிலே உலகம் அறியாத ஒரு சிறுமி அகப்பட்டுக்கொண்டு துடிக்கிறாள். அவள் எவனுக்கு மரண தண்டனை விதித்தாளோ அவனாலேயே விடுவிக்கப்படுகிறாள். மண்ணாசைப் பித்தர்கள் மடிவது திண்ணம், மக்களின் கட்சியின் வெற்றி நிச்சயம் என்ற அடிப்படையான தத்துவத்தின் மேல், ஒரு சாம்ராஜ்ய மன்னனும் அதைக் கவிழ்க் கத் திட்டமிடும் ஒரு சர்வாதிகாரியும் இறுதியிலே சர்வ நாசம் அடைவதாகச் சித்தரிக்கப்பட்டிருப்பது இந்தக் கதையிலே ஒரு வெற்றிகரமான புதுமை!

இந்தக் கதையின் மூலம் நான் புதிதாகப் புரிந்து கொண்டது தத்துவங்களுக்காக மாத்திரம் பாத்திரங்களை அமைத்துக்கொண்டு கதைகளைச் சித்தரித்துக் கொண்டுபோவதைவிட நல்ல கதையின் நடுவிலே தத்துவங்களைக் கூறிக்கொண்டு போவது படிப்பவர் மனதிலே ஆழமாகத்தைக்கிறது என்பது தான், இந்தப் புதிய அனுபவத்தின் பெருமிதத்தோடு இந்த அழகிய கதையைத் தமிழ் மக்களின் முன்னால் வைக்கிறேன். இதன் தமிழ் பிரசுர உரிமை துறையூர் வீனஸ் பிரசுரத்தாருக்குரியது. மற்ற விதங்களில் இந்தக் கதையையோ கதையின் பகுதிகளையோ கையாள விரும்புவோர் கண்டிப்பாக ஆசிரியரின் முன் அனுமதி பெற வேண்டும்.

ரா.தணலன்

***

கானகத்திலே காதல்! –  முதல் பாகம்

1. தொலைதூரத்திற்கு……!

கரடு முரடான் வழியிலே கட்டைவண்டி ஆடி அசைந்து கொண்டு சென்றது அந்த வண்டியிலே பாரம் ஏற்றப்பட்டிருந்தது அதன் மேல் அவள் உட்கார்ந்துகொண்டிருந்தாள் கடக்கா முடககா என்று வண்டி ஆடிக்கொண்டிருந்ததற்கேற்ப அவளும் குறுக்கும் மறுக்கும் ஆடிக்கொண்டிருந்தாள் அவள் உள்ளம் சொல்லிக் கொண்டிருந்தது வாழ்க்கை என்பது சம வெளிப் பாதையில் செய்யும் யாத்திரை அல்ல என்று.

அவள் நடந்துதான் வந்துகொண்டிருந்தாள். தன்னந்தனியாளாக; யாதொரு துணையும் இன்றி.. நிராசை யின் பிரதிபிம்பம் போல், கண்ணீர் வழிந்து வழிந்து தாரைபடிந்துபோன கன்னங்களுடன் நிலை குலைந்து காற்றிலாடிக்கொண்டிருந்த சிகையுடன். அலங்கோல மான உடையுடன். சோர்ந்துவிட்ட கைகால்களை உறுதி யுடன் எடுத்து வைத்து அவள் வேகம் வேகமாக நடக்க முயன்றுகொண்டிருந்தாள்.

அவள் உள்ளத்தில் துக்கத்தின் பாக்கி இருக்க வில்லை. நிராதரவீன் நடுக்கம் இருக்க வில்லை. ஐயோ கொடுமை நிறைந்த உலகிலே இனி எப் படி வாழப் போகிறோம் என்ற அச்சம் இருக்கவில்லை. ஒரே ஒரு வெறிமாத்திரம் எஞ்சி நின்றது ஒரே ஒரு ஆத்திரம் மாத்திரம் பாக்கி இருந்தது பழிக்குப்பழி……! பழிக்குப்பழி ! என்று குமுறும் உள்ளத்துடனே அவள் விறுவிறுவென்று நடக்க முயன்றுகொண்டிருந்தாள்.

எங்கோ இருந்து வந்து அந்தச் சாலையிலே சேர்ந்து கொண்டிருக்க வேறொரு பாதையுடன் வங் தான் அந்த வண்டிக்காரன். நல்ல காலேஜ் ஜோடிகள். அவ்வளவு பாரத்துடனும் கொஞ்சம் மிடுக்காகவே நடந்து வந்தன சிறிது தூரம் வரை வண்டியின் அருகிலேயே எட்டி எட்டி வைத்தவளாய் நடந்து வந்து கொண்டிருந்த அவளைப்பார்த்தான். சின்னஞ்சிறு பெண். பொழுது சாய்ந்துகொண்டிருக்கிறது. அவன் மனதில் என்ன தோன்றியதோ..? “அம்மா எங்கே போகிறீர்கள்……?” என்று கேட்டான்.

அவள் ஒருகணம் தலையை உயர்த்திப்பார்த் தாள். அவன் முகத்திலே துரோக மின்மையின் பாவம் நன்கு பிரதிபலித்தது. கபடற்றவன், ஏழை, கிழவன், அவனிடம் அவள் கூறினாள், “எங்கே போகிறேன்…? எங்கோ … தொலைதூரத்திற்கு….” கிழவன் மருட்சியுடன் அவளைப் பார்த்தான். அந்த வார்த்தைகளின் ஆழம் அவன் இதயத்தைத் தொட்டிருக்கவேண்டும். “அம்மா இந்த வண்டி இந்தச் சாலையில் தான் ரொம்ப தூரம் போகிறது. நீங்கள் வருவதாயிருந்தால் ……”

அவள் சிறிது யோசித்தாள். சரி என்பது போல் தலையை அசைத்தாள். வண்டிக்காரன் வண்டியை நிறுத்தினான். அவள் ஏறிக்கொண்டாள் வண்டி கிளம்பியது எங்கே..? தொலை தூரத்திற்காக இருக்கலாம். வண்டி போய்க்கொண்டிருந்தது. அவள் கிச்சிந்தையாக உட்கார்ந்துகொண்டிருந்தாள்.

நெடிய மரங்கள் வானத்தை மூடி மறைத்துக் கொண்டிருந்தன. சாலையின் இருமருங்கிலும் கம்பீரமாக, வரிசையாக, அணிவகுத்து அவை நின்று கொண்டிருந்தன. ஒரு கோடியிலிருந்து மறுகோடி வரை ஆகாயத்தை ஊடுறுவிக்கொண்டு அந்தச் சாலை கிடந்தது. இந்த எல்லையில் வானம் அந்த எல்லையில் வானம் இருமருங்கிலும் மரங்கள் மாடுகள் ஜில் ஜில் என்று மணியை அசைத்துக்கொண்டு நடந்தன ஏற்கெனவே இருள் சூழ்ந்தது போலிருக்கும் அந்தச் சாலையில் மேக மூட்டங்களாலோ என்னவோ இன்னும் கருக்கல் அதிகமாயிற்று.

வேகமாக ஓடிக்கொண்டிருந்த வண்டி ‘டக்’ என்று பிரேக் போடப்பட்டது போல் கின்றது வண்டிக்காரன் “நாசமாய்ப்போக…இது கண்டிப்பாகப் பிசாசின் வேலைதான்…” என்றான். அவள் திடுக்கிட்டாள். எதிரே வழியின்மேல் பெரிய மரம் ஒன்று குறுக்காகக் கிடந்தது, அவள் ஒருகணம் திகைப்படைத்தவள் போல் அதைப் பார்த்தாள். பின் நிதானமாக “யாராவது திருடர்களின் வேலையாக இருந்தால் ….?” என்று கேட்டாள். கிழவனின் முகம் கவலையால் சுருங்கியது. “இருந்தாலும் இருக்கலாம்…..” என்றான். அவள் உடல் நடுங்கியது.

அவள் பேசி வாய்மூடவில்லை உண்மையாகவே பிசாசுகள் போன்ற இரண்டு உருவங்கள் அவர்களை வழிமறித்தன. அவர்களுடைய உடல்கள் கருப்பு உடை களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன முகமூடிகள் அணிந்திருந்தார்கள். கைகளிலே லாவகமாகக் கையாளக் கூடிய ஈட்டிகள் இருந்தன. ஒருவன் உரத்த குரலில் கூவினான் “இறங்கு கீழே…..”

கிழவன் நடுநடுங்கிக்கொண்டு எதோ சொல்ல ஆரம்பித்தான். “பேசாதே…” என்று இன்னொரு குரல் அதட்டியது. அச்சத்தில் கிழவன் ஏதாவது உளர ஆரம்பித்திருப்பான். அந்த இரண்டாமவன் அவன் கழுத்துக்கு நேராக நீட்டிய ஈட்டிமுனை அவனை என்ன செய்வதென்று தெரியாத உணர்வு நிலைக்குக்கொண்டு போய்வீட்டது. பேசவும் முடியாதவனாய் ஏதாவது செய்யவும் சக்தியற்றவனாகிவிட்டான். “இறங்கு…”

வண்டியிலிருந்து கீழே விழுந்தான் கிழவன். மறு படியும் எழுந்திருக்க முடியாதபடி அவன் உடல் அவ்வளவு கேவலமாக நடுங்கியது. அவன் ஒன்றும் பேச வில்லை. பேசக் கூடிய நிலையில் இல்லை. மேலே உட் கார்ந்து கொண்டிருந்த பெண்ணை மற்றவன் பார்த்தான் ” உம்… இறங்கு…!” அவள் அமைதியாக கீழே இறங்கி னாள் துணிவு நிறைந்த குரலில் “உங்களுக்கு என்ன வேண்டும்…?” என்று கேட்டாள். “பே…சா…தே…” என்று எழுத்தெழுத்தாகப் பிரித்துக்கூறினான். ஒருவன் ‘நட’ என்றான் மற்றவன். கிழவன் மெதுவாக எழுந்து நின்றுகொண்டிருந்தான். ஆனால் அவனுக்கு உயிரே இருக்கவில்லை “தாத்தா…பயப்படாதீர்கள்…நான் இருக்கிறேன்…” என்றாள்.

அவள் அச்சப்படுவதற்கு நியாயம் இல்லை. அவள் தனியாகக் கிளம்பியவள்… தொலைதூரத்திற்கு…?

2. பழிக்குப் பழி!

காட்டின் நடுவே நீண்ட குறுகலான வழிகளில் அவர்கள் நடந்தனர். எங்கெங்கோ எப்படி எப் படியோ நெடுத்தூரம் சுற்றி அலைந்தபின் ஒரு ஏரிக்கரைக்கு வந்து சேர்ந்தனர். அந்த ஏரி மலைகளை அடுத்திருந்தது. அதற்கு அருகே நீண்ட சமவெளி ஒன்றும் இருந்தது, அங்கே இரண்டு மரங்கள் மொட்டையாக வெட்டிவிடப்பட்டிருந்தன. அந்த மரங்களின் அருகே பாராக் காவலர்கள் போல் வீரர்கள் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் இந்தக் கைதிகளையும் அவர்களுடன் வந்த வீரர்களையும் பேசாமல் உள்ளே செல்லவிட்டனர். பின்னும் சிறிது தூரம் புதர்களும் மரங்களும் அடர்ந்த வழி களில் சென்றபின் அவர்கள் ஒருசிறிய சமவெளியை அடைந்தனர். அங்கே நல்ல வழிவான உடல்கட்டு உடைய ஐந்தாறு வீரர்கள் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு நடுவே அவர்களுடைய தலைவன் அலட்சிய மாக ஒரு மரத்தின் மேல் சாய்ந்தவனாக உட்கார்ந்து கொண்டிருந்தான் வீரர்களில் ஒருவன் உரத்த குரலில் கட்டளையிட்டான் “வணங்கு”.

கிழவன் சாஷ்டாங்கமாகக் கீழே விழுந்துவிட்டான். ஆனால் அவள் பேசாமல் நின்றுகொண்டிருந்தாள். அமைதியாகத் தன் எதிரே இருந்த ஆட்களைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தாள். மீண்டும் அந்த ஆள் உரத்த குரலில் கூறினான் “தலைவரை வணங்கு…”

அவள் நிதானமான குரலில் கேட்டாள் “தலைவரா…? யாருக்கு..? எதற்காக…”

அங்கே கூடியிருந்த அந்த வீரர்கள் திகைத்துவிட்டனர். ஒரு பெண்ணிடமிருந்து அத்தகைய வீரத்தை அவர்கள் எதிர்பார்க்கவில்லை அவள் மௌனமாக அவர்களைப் பார்த்துக்கொண்டு நின்றாள் அந்த வீரன் பற்களை நறநறவென்று கடித்துக்கொண்டு, ” அதை எல்லாம் கேட்காதே…உயிர் மேல் ஆசை இருந்தால் தலைவரை வணங்கு……” என்று கூவினான். ஈட்டிமுனை அவளுடைய இடுப்பைத் தொட்டுக்கொண்டு நின்றது. அவள் பேசவே இல்லை. சும்மா நின்றுகொண்டிருந்தாள்.

அந்தத் தலைவன் குதித்தெழுந்து அவளை நோக்கி வந்தான். இடுப்பின் மேல் கைகளை வைத்துக்கொண்டு ஒருதடவை மேலும் கீழும் பார்த்த பின் அவள் மேவாயைப்பிடித்து உயர்த்தியவனாய், “ஆ..நீ கண்ணம்மா அல்லவா..?” என்று கேட்டான். அவள் திகைப்புடன் தலையை அசைத்தாள் அவனுக்கு எப்படித் தன்னைத் தெரிந்தது என்பது அவளுக்குத் தெரியவில்லை. அவனை எங்கும் பார்த்ததாகவும் நினைவில்லை.

“கண்ணம்மா நீ எப்படி இவர்கள் கையில் அகப்பட்டாய்…? உன் தந்தை எங்கே …? இந்தக் கிழவன் யார்…?” என்று அடுக்கடுக்காகக் கேட்டுக்கொண்டு வந்தான் அவன்.

அவள் அமைதியான குரலில் கூறினாள். “தந்தை கொல்லப்பட்டார். இல்லை உயிருடன் எரிக்கப்பட்டார். நேற்று முன் தினம் இரவு. அவருடன் நெற்களஞ்சியங்களும் ஏராளமான செல்வமும் எரிந்தது கன்றுகாலிகளும் சில வேலைக்காரர்களும் வேலைக்காரிகளும் கூட எரிந்து போயினர். நான் மாத்திரம் தப்ப முடிந்தது…” என்றாள்.

அவன் கையை நறுநறு வென்று கடித்துக்கொண்டான். “தந்தை எரிக்கப்பட்டார்…கண்ணம்மா… இது எப்படி நடந்தது? நான் உயிருடன் இருக்கும் போது அவர் என் தன்னுடைய விரோதிகளைப் பற்றி எனக்குத் தெரிவிக்கவில்லை? கண்ணம்மா….இந்தச் சதியைச் செய்த துரோகிகள் யார்….?”

“உறங்கிக்கொண்டிருக்கும் பொழுது வீட்டின் நான்கு பக்கங்களிலும் கதவுகளைப் பூட்டிவிட்டுத் தீ வைத்துவிட்டனர் ஜமீந்தாரின் ஆட்கள்…”

“ஜமீந்தார்…”

அவன் கூச்சலிட்டான். சிறிது நேரத்திற்குப் பிறகு …..”அக்கிரமத்திற்கு ஆட்சி…அதற்கொரு எல்லையே இல்லை போல் இருக்கிறது…கண்ணம்மா…உன் விரோதி என் விரோதி…அவன் நாட்டின் துரோகி…இதற்குப் பழிக்குப் பழி வாங்கவேண்டும் என்கின்ற எண்ணம் உன் மனதில் தோன்றவில்லையா…?”

அவள் கூவி அழுதுவிட்டாள். இந்நேரம் அமைதியாகப் பதில் கூறிக்கொண்டிருந்த அவளால் மேற் கொண்டு அந்தத் துயரத்தைத் தாங்கிக்கொண்டிருக்க முடியவில்லை. தேற்றுவாரினறித்தானே மறைந்து போயிருந்த துக்கம் ஓய்ந்திருந்த எரிமலைப்போல் தீகக்க ஆரம்பித்தது. “பழி… பழிக்குப் பழி…ஆனால் அதற்கு வழி ..?” என்று தேம்பினாள்.

அவன் குழந்தை போல் அவளைத் தன் மார்மேல் சாய்த்துக்கொண்டு, “கண்ணம்மா…கவலைப்படாதே…நான் பார்த்துக்கொள்கிறேன்…” என்றான்.

3. போய்வருகிறேன்

அவள் சிறிது நேரம் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள். அவளுடைய கண்களின் முன்னால் அந்த பயங்கர இரவு நிழலிட்டது. அன்றிரவு சிலவு அமுத ஒளியைப் பொழிந்துகொண்டிருந்தது. நெடுநேரம் வரை அவளும் அவளுடைய தந்தையும் வெளியே உலாவிக்கொண்டிருந்தனர். எதிரே கண்ணுக் கெட்டிய தூரம்வரை அவர்களுடைய வயல் கள் பரந்து கிடந்தன. அவற்றில் பொன்னிற நெற் கதிர்கள் தலை சாய்த்துக் கிடந்தன காற்றின் அசைப்பிலே அவற்றிலிருந்து எழும் சரசரசர என்ற ஓசை மெல்லிய விரலின் கவனமற்ற வருட லில் வீணையில் எழும் நாதம் போல் அவள் உள்ளத் தில் கிளர்ச்சியை உண்டுபண்ணிற்று. அவள் உள் ளம் நிறைந்திருந்தது. தன்னுடைய தந்தையுடன் எதை எதையோ பற்றிப் பேசிக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டிருந்தாள்.

அவர் கவலையில் ஆழ்ந்திருக்கவேண்டும். அவ ளுடைய கேள்விகளுக்கெல்லாம் சம்பந்தா சம்பந்த மில்லாமல் எதை எதையோ சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் அவளிடம் கடிந்து ஒருவார்த்தை கூடக் கூறவில்லை. தாயற்ற பெண் சின்னஞ்சிறு அளவு கூட அவள் மனம் நோயடையச் செய்யக்கூடாது என்பது அவர் எண்ணம். கடைசியாக, “நேரமாகிறது அம்மா நீ போய்த் தூங்கு” என்றார். அப்போது தான் அவர் குரலில் ஒலித்த கலக்கம் அவள் கவனத்தைக் கவர்ந்தது. அவள் திரும்பி அவர் சாத்தையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந் தாள். “அப்பா ஏன் ஒருமாதிரி இருக்கிறீர்கள்” என்று கேட்டாள். அவர் மெல்லச் சிரித்தவாறு அவள் முதுகை அன்புடன் தட்டி, “கவலை இன்பம் எல்லாம் பெரியவர்களுக்குச் சர்வசாதாரணமாக இருக்கும். நீ சிறுமி. அதைப் பற்றி எல்லாம் நினைக்கக்கூடாது போய்த் தூங்கு போ” என்றார். அவள் மனம் சமாதானமடையவில்லை. “அப்பா நீங்கள் எப்போதுமே இப்படி இருந்ததில்லையே” என்றாள். “மனிதன் எப்போதும் ஒரே மாதிரியே இருக்க முடியாது ..” என்றார் அவர். அவள் பின் னாள் திரும்பிப்பார்த்தாள். சிறியவையும் பெரியவையு மாகிய வீடுகள் பல அவர்களுடைய மாளிகைக்குப் பின்னால் அணிவகுத்து நின்றன, அவ்வளவு பேரும் அவர்களுடைய நிலத்திலே உழுது பயிரிட்டு வாழ்பவர் கள். ஏன் அப்பா… இத்தனை ஆளும் அம்பும் உள்ள போது நமக்கு என்ன துன்பம் வந்துவிடுமப்பா….? ஏன் வீணாகக் கவலைப்படுகிறீர்கள்…?” என்றாள் அவர் மீண்டும் சிரித்துக்கொண்டே, “நான் கவலைப் பட்டால் நீயும் கவலைப்படுவாய் அவர்களும் கவலைப் படுவார்கள். அதைத்தவிர வேறு என்ன செய்ய முடியும்…ஆனால் நமக்கு துன்பம் ஒன்றும் வந்து விடாது நீ கவலைப்பட வேண்டியதில்லை. எனக்குச் சிந்திப்பதற்குக் கொஞ்சம் ஓய்வுவேண்டும். நீ போய்த் தூங்கு அம்மா…அமைதியாக.” என்றார்,

அவள் பேசாமல் போய்ப் படுக்க வேண்டியவளா னாள். சிறிது நேரம் படுக்கையில் புரண்டுகொண்டிருந்தாள் தூங்கிவிட்டாள்.

கூச்சலும் கூப்பாடும் அவளைத் துள்ளி எழ வைத்தன. அலறி அடித்துக் கொண்டு அவள் எழுந்து உட்கார்ந்தபோது அவளுக்கு ஒன்றுமே தோன்றவில்லை. கன்றுகளின் கதறல்கள் பயங்கரமாக இருந்தன. சாவீன் பிடியிலே கடைசி மூசசைவிட்டுக்கொண்டிருந்த மனிதர்களின் பயங்கரமான கூச்சல்கள் அவள் இத யத்தைப் பிளந்தன தீயும் புகையும் மாளிகையில் சூழ்ந்துகொண்டிருந்தது நானகு பக்கங்களிலும் தீயின் அனல் நாக்குகளைத்தவிர வேறு ஒன்றுமே தெரியவில்லை அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. யோசிக்க நேரமே இருக்கவில்லை கண்ணை மூடிக் கொண்டு என்ன செய்வதென்றே தெரியாத நிலையில் ஒரே ஓட்டமாக ஓட ஆரம்பித்தாள், அடுத்தகணம் அவள் மூர்ச்சை அடைந்துவிட்டாள்.

மறுபடி அவள் கண் விழித்துப் பார்த்தபோது ஜனக்கூட்டத்தின் மத்தியிலே அவள் கிடந்தாள். அவளுடைய உடைகள் தெப்பமாக நனைந்திருந்தன அவை சில இடங்களிலே எரிந்து கருகி இருந்தன. அவளைச் சுற்றிலும் ஆத்திரத்துடன் காச்சுமூச்சென்று மனிதர்கள் பேசிக்கொண்டது விசித்திரமாகத் தெரிந்தது. மறுபடி யும் அவள் கண்களை மூடிக்கொண்டாள். “கிணற்றுக்குள்ளே விழுந்ததனால்தான் அம்மணி பிழைத்தது, இல்லையானால் அதுவும் இந்நேரத்துக்கு சாம்பலாப் போயிருக்கும்,” என்று யாரோ கூறிக்கொண்டிருந்தனர் அவள் துள்ளி எழுந்திருக்க வேண்டும் என்று நினைத் தாள் முடியவில்லை. கூச்சலிடவேண்டும் என்று நினைத்தாள், “அப்பா எங்கே….அப்பா எங்கே…” என்று கீச்சுக் குரலில் கேட்கத்தான் அவளால் முடிந்தது. யாரும் பதில் கூறவில்லை.

அவள் மெல்ல எழுந்து உட்கார்ந்தாள். “அம்மணி உடம்பை அலட்டிக்காதே சாமீ… இந்தத் துணியை மாத்திக்கிட்டுப்படுத்துக்க கண்ணு…” என்று பரிவுடன் ஒரு அம்மாள் கூறிக்கொண்டிருந்தாள். அவள் கேள்விக் கண்களுடன் சுற்று முற்றும் பார்த்தாள் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கிழங்களும் அவளைச் சுற்றிலும் நின்றுகொண்டிருந்தனர் அத்தனை பேரும் அவர்களுடைய நிலங்களை நம்பி வாழ்பவர்கள். அத்தனை பேரும் அவளுக்குத் தெரிந்தவர்கள். அப்பா எங்கே..அப்பா எங்கே…” என்று அவள் அவர்களிடம் கேட்டாள். யாரும் அவளிடம் பதில் தான் கூறவில்லை. அத்தனை பேரும் பேசாமல் நின்றுக்கொண்டு தான் இருந்தனர். ஊமைகளாய் நின்றனர்.

உடம்பின் பலத்தை எல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு அவள் வெடுக்கென்று எழுந்திருந்தாள். அந்த கூட்டத்தில் மஞ்சு நின்று கொண்டிருந்தான் அவன் அவர்களுடைய விஸ்வாசமுள்ள ஊழியன். அவர் களிடம் அவனுக்கு அளவற்ற பக்தியும் மரியாதையும் இருந்தன. அவள் தெளிவடைந்து எழுந்ததைக்கண் டதும் அவனையறியாமல் தேம்பித் தேம்பி அழுக ஆரம்பித்துவிட்டான். அவன் உள்ளத்திலே துயரம் பொங் கிக்கொண்டிருந்தது. அவள் அவனை நோக்கி நடந் தாள். அவன் தோளைப்பிடித்து ஆட்டியவளாய் “மஞ்சூ.. ஏன்…அழுகிறாய்…? அப்பா எங்கே … நீயாவது சொல்லு……” என்று கேட்டாள்.

சும்மா தேம்பிக்கொண்டிருந்தவன் ஊளையிட்டு அழுக ஆரம்பித்துவிட்டான் அவனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அவள் இன்னதென்று புரியாத தத்தளிப் பிலே குழந்தைபோல சுற்று முற்றும் பார்த்தாள். படப் படபட வென்ற சப்தத்துடன் உத்திரம் ஒன்று முறிந்து விழுந்தது. திடீர் என்று மாடிச்சுவர் ஒன்று சரிந்தது.

அவள் ஒருகணம் திகைப்புடன் நின்று பார்த்தாள். ஐயோ அவளுடைய மாளிகை எங்கே…..? சற்று நேரத்திற்குள் அது எங்குதான் போயிற்று…?

அப்போது தான் முதலிரவு தீயிலிருந்து தப்ப வேண்டிதான் நினைவின்றி ஓடியது அவள் நினைவுக்கு வந்தது. ஆமாம். யாவும் போய்விட்டன. எரிந்து சாம்பலாய் மண்ணோடு மண் ஆகிப்போய்விட்டன. அவளுடைய மாளிகை இருந்த இடத்தில் குட்டிச் சுவர்கள் நின்றன. அதைச் சுற்றிலும் நாலாபக்கங் களிலும் தீக்கட்டைகள் குண்டப் போட்டு வைத்திருந் தன, அந்தப் பக்கத்திலே இன்னும் அனல் வாடை வீசிக்கொண்டிருந்தது. அவள் பைத்தியம் பீடித்தவள் போல் “அப்பா” என்று கூவிக்கொண்டு அதை நோக்கி ஓடினாள். கூட்டத்திலிருந்தவர்கள் அவளைப் பிடித்துக்கொண்டனர். அவள் மீண்டும் மூர்ச்சை அடைந்துவிட்டாள்.

பலமான பேச்சுக் குரல் கேட்டு அவள் திடுக் கிட்டு எழுந்திருந்தாள் அப்போது தான் தான் ஏதோ ஒரு அறைக்குள் தாழ்வான கட்டில் ஒன்றின் மேல் படுத்துக்கொண்டிருப்பதைக் கண்டாள். வாயில் படியை மறித்துக்கொண்டு கின்ற கிழவி ஒருத்தியைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான் மஞ்சு. எங்கோ நீண்ட யாத்திரைக்குப் புறப்பட்டுவிட்டவன் போல் இருந்தது அவன் தோற்றம். அவன் கையிலே நீண்ட குச்சி ஒன்று இருந்தது அதன் முனையிலே ஒரு சிறிய மூட்டை கட்டப்பட்டிருந்தது. அவனை அவள் மேலும் கீழும் பார்த்தாள். கூச்சலிட்டுச் சபித்துக்கொண்டு அவனைத் தொடர்ந்து வந்த கிழவி அவள் விழித்துக்கொண்டதைப் பார்த்துப் பேசாமல் நின்றாள்.

அவன் அவள் அருகே மண்டியிட்டு நின்றுத் தலையைக் குனிந்து வணக்கம் தெரிவித்தவனாய்…”அம்மா… நான் போய் வருகிறேன். எனக்கு அனுமதி கொடுங்கள்…” என்று கேட்டான், அவன் எங்கே போகிறான் அவனுக்கு அவள் எதற்கு அனுமதி கொடுக்கவேண்டும்? அவளுக்குப் புரியவில்லை.

அவன் கூறினான்,

“அம்மா…இத்தனை காலமும் எஜமானரின் உப்பைத் தின்று இந்த உடலை வளர்த்தாயிற்று. அவர் இந்த கிராமங்களின் மக்களுக்குத் தாயாகவும், தந்தையாகயும் இருந்து காப்பாற்றிவந்தார் அவரை அந்தத் துரோகி ஜமீந்கார் வேரோடு வெட்டிச் சாய்த்துவிட்டான். அடியோடு காசம் செய்துவிட்டான். அம்மா இந்த நெஞ்சு கொதிக்கிறது தாயீ…பற்றி எரிகிறது…வேகாமல் வேகிறது. இந்த கிராமத்து மக்கள் இதுவரை அவருக்கு ஊழியம் செய்ததைப்போல் இனிமேல் ஜமீந்தாருக்கும் ஊழியம் செய்யத்தவறமாட்டார்கள் இவர்கள் முட்டாள்கள். வல்லவன் வகுத்ததே வாய்க்கால் வலுத்தவன் செய்வதே நியாயம் என்று நினைப்பார்கள். அம்மா…என்னால் அப்படி இருக்கமுடியாது. நான் அவருக்கு. அவருடைய சந்ததிகளுக்குத் துரோகம் செய்யமாட்டேன். அவருக்கு இழைக்கப்பட்ட சரோகத்திற்குப் பழிக்குப் பழி வாங்குவேன்.”

“அம்மா… என்றும் நான் உங்கள் அடிமை உங்களுக்குச் செய்யப்பட்ட கொடுமைக்கும் பழிக்குப் பழி வாங்குவதற்காக நான் புறப்படுகிறேன். எனக்கு நீங்கள் விடை கொடுங்கள் மறுபடியும் எப்போதாவது சந்திக்கமுடிந்தால்…சந்திப்போம்…”

அவன் கண்களில் நீர் துளிர்த்துக்கொண்டிருந்தது. அவள் விம்மி விம்மி அழ ஆரம்பித்துவிட்டிருந்தாள். அவன் சிறிது நேரம் பேசாமல் நின்றுகொண்டிருந் தான். அவளைத் தேற்ற முயற்சிப்பதில் பயனில்லை என்று கண்டுகொண்டான். அதே சமயத்தில் மேலும் அங்கே தாமதிப்பது ஆபத்து என்று கருதி மௌனமாக நடக்க ஆரம்பித்தான். போகும் முன் ஒருமுறை அவளைத் திரும்பிப்பார்த்தான். பார்த்துக்கொண்டே நடந்தான்.

4. அதன் பிறகு

அவள் துயர வெள்ளத்திலே தேம்பிக்கொண்டு கிடந்தாள். அந்தக் கிழவி சிறிது நேரம் அவளைத் தேற்றிக்கொண்டு நின்றாள். வெளியே யாரோ வந்து அழைத்தனர். அவள் ஓடினாள். சிறிது நேரம் அவர்கள் கசமுச என்று பேசிக்கொண்டிருந்தனர். தனக் கிருந்த துக்கத்தில் அவள் அந்த பேச்சைக் கவனிக்கவில்லை. அவர்கள் மிகுந்த கலவரத்துடன் பேசிக் கொண்டிருந்தார்கள் என்பது மாத்திரம் அவளுக்குத் தெரிந்தது

புதிதாக வந்த ஆள் போனபின் கிழவி உள்ளே வந்தாள். அவள் கைகால்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. அவளுடைய கண்களிலே சொல்ல முடியாத பயம் குடிகொண்டிருந்தது. ஒருசணம் துவண்டுபோய்க் கட்டிலில்கிடக்கும் அவளைப்பார்த்த பின் கிழவி நடுங்கிக்

கொண்டே வெளியே போனாள். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை கிழவிக்குப் புதியதாக இந்தப் பயம் எப் படி வந்திருக்கக்கூடும் என்பதைப் பற்றி அவளால் யோசிக்க முடியவில்லை. துயரம் பொத்துக்கொண்டு வர அவள் விம்மிக்கொண்டிருந்தாள். சிறிது நேரத் திற்குள் கிழவி மீண்டும் வந்தாள் அவள் கையிலே ஒரு கொத்து வேப்பிலை இருந்தது. பரக்கப்பரக்க அதை அவள் தலை மாட்டிலும் கால் மாட்டிலும் கொஞ்சம் கொஞ்சம் சொருகி வைத்து விட்டு ஒரு போர்வையை எடுத்துக்கொண்டு வந்தாள். அவள் மிரள மிரள விழித்துக்கொண்டிருந்தாள். கிழவி அவளை நெருங்கி ” அம்மா…நான் சாகப்போற கெழவி என் மகன் பட்டாளத்திலே இருக்கிறான்….உசிரு போறத்துக்கு முன்னாலே அவனை ஒரே ஒரு தடவை பார்க்கவேணும் கறது தான் ஆசை. அம்மா தயவுசெஞ்சு காட்டிக் கொடுத்துடாதே. ஜமீந்தாரு ஆளுக வீடுவீடாப் பூந்து தேடறான் சளாமா…கண்டு புடிச்சுட்டானுகன்னா என்னைக்கொண்ணு தொலைச்சுப்போடுவானுக. பேசா மெப் படுத்துக்க ராசாத்தி…என்னைக்காப்பாத்து தாயே…” என்று கூறினாள். அவள் குரல் நடுங்கிக் கொண்டிருந்தது. அவளுக்கு என்ன சொல்லவேண்டு மென்று தெரியவில்லை. கவலையுடன் கிழவியைப் பார்த்துக்கொண்டிருந்தாள். கிழவி தன் கையிலிருந்த போர்வையால் காலோடு தலை பூராவும் அவளை மூடி மறைத்துவிட்டு ஒருகொத்து வேப்பிலையைக் கையில் வைத்துக்கொண்டு வாசற்படியில் போய் உட்கார்ந்து கொண்டாள்.

புரிந்துகொள்ளும்படியான சக்தி அவளுக்கு இருக்க வில்லை குழப்பத்துடன், கலவரத்துடன் என்ன நடக்கப் போகிறதோ என்ற அச்சத்துடன் கண்களில் அவ்வப்போது கண்ணீர் துளிர்க்கப் பேசாமல் படுத்துக் கொண்டிருந்தாள். என்ன தான் நடக்கிறது என்று பார்க்கவேண்டும் என்ற ஆசை அவள் உள்ளத்தைத் சளைத்தது. ஆனால் வெளியிலோ நள்ளிரவின் அமைதி பரவிக்கிடந்தது. நெடுநோம் அப்படி மௌன நிலை யில் கழிந்தது அவள் தவிதவிப்பில் கிடந்தாள்.

திடீரென்று அந்த அமைதியை விரட்டிக் கொண்டு டப்டப்டப் என்று ‘பூட்சுகள்’ அணிந்த காலடி ஓசைகள் வந்தன. அமைதியைக் குலைத்துக் கொண்டு கிளம்பிய அந்த ஓசை பெரிய பட்டறை யிலே ஏழெட்டுக்கொல்லர்கள் ஏககாலத்தில் சம்மட்டி கள் போடத் தொடங்கிவிட்டதைப் போலிருந்தது. அவள் உள்ளத்திலே சொல்ல முடியாத அச்சம் எழுந்தது. காடி ஒடுங்கப் படுத்துக்கொண்டிருந்தாள். இரண்டு மூன்று தடவை வெவ்வேறு இடம் களில் அந்தக் காலடி ஓசைகள் நின்றன கடைசியாக அவை அந்த வீட்டிற்கே வந்துவிட்டன.

கிழவி நடுங்கிக்கொண்டு ஏதோ சொல்வது அவள் காதுகளில் விழுந்தது “எழை சாமி.. என் ஒரே மக….சின்னக் குழந்தை … ஆத்தா வந்து படுத்திருக்குது…

“வேறே யாரும் இல்லையா..?” அந்தக் குரல் அதட்டியது.

“இல்லவே இல்லை சாமி… எனக்கு வேறே திக்குத்திராணியே இல்லை.”

கிழவி நடுங்கினாள், சிறு மௌனம். வீட்டிற்குள் யாரோ எட்டிப்பார்ப்பது தெரிந்தது. அதன் பிறகு காலடி ஓசைகள் கிளம்பிவிட்டன.

ஒன்றும் செய்யச் சக்தி அற்றவளாய்க் கிழவி வாயிற்படி மேலேயே உட்கார்ந்துவிட்டாள்.

அவள் உள்ளத்திலே என்னென்னவோ சிந்தை கள் எழுந்து கூத்தாடின…? என்னென்ன கேள்வி களோ குதித்துக்கொண்டு எழுந்தன. அவளுக்கு அழுகவும் சக்தி இல்லை பெருமூச்சுவிட்டுக்கொண்டு படுத்திருந்தாள்.

சிறிது நேரத்திற்குப் பிறகு மறுபடியும் யாரோ வருவதுபோல் தெரிந்தது. இந்த ஆசாமி பதுங்கிப் பதுங்கி வந்திருக்கவேண்டும் கிழவியும் அந்த ஆளும் மெதுவாக வீட்டிற்குள் வந்த பிறகுதான் பேச ஆரம் பித்தனர். மெல்லிய குரலில். அந்தக் குரல் சொல்லிற்று…… “சின்னம்மா தப்பிச்சுக்கிட்டது அவனுக்குத் தெரிஞ்சுபோச்சு. யாரோ பாவிப் பசங்கத்தான் அவுங்களுக்குச் சொல்லி இருக்கணும், அதுதான் அவுங்க வீடுவீடாப் பூந்துதேடறானுக. ஆளுக அகப்பட்டுக்கிட்டா சொல்லுடா சொல்லுன்னு உதை உதைன்னு உதைக்கறாங்க. அந்தம்மா எங்கெயோ ஓடிப்போச்சுன்னு சொன்னா அவுங்க நம்பறதில்லை. இனியும் இங்கே வெச்சிருந்தா ஆபத்துத்தான்…” என்று. கிழவிக்கு ஒன்றுமே தோன்றவில்லை அவள் கைகளைப் பிசைந்து கொண்டு, “ஐயோ நான் என்ன செய்யட்டும் ஐயோ நான் என்ன செய்யட்டும்…” என்று பரிதாபகரமாகப் பிதற்ற ஆரம்பித்துவிட்டாள். “என்னமோ தலையிலெழுத்துப்போல் ஆகட்டும். நான் இங்கே இருந்தா ஆபத்து” என்று சொல்லிவிட்டு அந்த ஆசாமி மீண்டும் நடையைக் கட்டிவிட்டது. கிழவி இடிந்துபோய் ஒரு மூலையில் உட்கார்ந்துவிட்டாள்.

அவள் யோசித்தாள். தன்னை இந்த நிலையில் எப் படி வீட்டைவிட்டுப் போகச்சொல்வது என்று புரியாமலேயே அவள் அப்படித் தவித்துக்கொண்டிருக்கிறாள் என்பது அவளுக்கு தெரிந்தது. தான் இருப்பது தெரிந்துவிட்டால் தனக்குமாத்திரமல்ல கிழவிக்கும் பேராபத்து வந்துவிடும் என்பது அவளுக்குப் புரிந்திருந்தது. தன்னால், பாவம் அந்த ஏழைக் கிழவிக்கும் துன் பம் வந்துவீடும் என்பதை அவளால் சகித்துக்கொள்ள முடியவில்லை ஐயோ அவள் இனி என்ன செய்வாள்…?

ஊரெல்லாம் உத்தமர், நல்லவர் என்று போற்றிப் புகழ்ந்த தனது தந்தையை வேரோடு நாசம் செய்து விட்டதும் அல்லாமல் இனியும் அவருக்கு வேண்டியவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தேடித்திரிகின்ற னர் ஜமீந்தாரின் ஆட்கள். பாபிகள்……! அந்த ஜமீந்தார் மகாகொடியவன், அவன் ஜனங்களைப் பல விதங் களிலும் இம்சித்து வந்தான் என்பவை அவளுக்குத் தெரியும். அவளுடைய தகப்பனார் பலபேருடன் இதைப் பற்றிப் பேசி இருக்கிறார். அந்த ஜமீன் ஒரு பெரிய சமஸ்தானத்திற்குள்ளே இருந்தது. சமஸ் தானத்தின் சிற்றரசரை ஜமீந்தார் கைக்குள் போட்டு வைத்துக்கொண்டிருந்தான். சமஸ்தானாதிபதி பெய ரளவுக்கு ராஜாவாக இருந்தாலும் அதன் நிலபுலங்கள் யாவும் தனக்கே ருக்கவேண்டும் என்று நினைத்தான் ஜமீந்தார். அவனுடைய கொடுமைகளைத் தாளாத குடிகள் எதிர்த்துக் கிளர்ச்சி செய்தனர் இதர மிராஸ் தார்களும் அவனைக்கண்டு பயந்தனர். அவர்கள் யாவரும் அவளுடைய தந்தையின் தலைமையிலே மகாராஜாவைக் காணச்சென்றிருந்தனர் இவையாவும் அவளுக்குத் தெரியும். அதன விளைவு…?

அதைப் பற்றி எல்லாம் மேலும் சிந்தித்துக்கொண் டிருக்க அவளுக்கு நேரம் இருக்கவில்லை. அவள் இனியும் மிராஸ்தாரின் புதல்வி அல்ல. அவளைப் பாதுகாக்க ஆள் அம்புகளும் கோட்டை கொத்தளங்களும் இனி யும் இல்லை. அவள் ஒரு அனாதைக் கிழவியிடம் அடைக்கலம் புகுந்தாள். அவள் காரணமாக கிழவியின் நிலையும் ஆபத்தில் அகப்பட்டுக்கொண்டிருக்கிறது.

அவள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டாள்…?

அந்தப் பாபியின் ஆட்கள் அவளை என்னென்ன சித்ரவதை செய்வார்களோ? அவளுக்கு வருகிற தொல்லைகள் இருக்கட்டும். பாவம் அந்தக் கிழவி… பட்டாளத்தில் இருக்கும் தன் ஒரே மகனைப்பார்ப்பதற்காக உயிரை வைத்துக்கொண்டிருப்பவள்… அவளை அவர்கள் நாயை அடித்துக்கொல்வதைப்போல் கொன்று வீடுவார்கள் உடலும் உயிரும் சுருங்கிக் காலன் வரவை எதிர்பார்த்துக் கண்கள் கழியாகத் காத்து நிற்கும் அந்த அனாதைக கிழவி அகால மரணமடைய நேரும் அந்தக் கொடுமையை அவளால் சகிக்கமுடியாது. அந்த பாபத் திற்கு அவள் ஆளாகமாட்டாள். இனி ஒருகணமும் அங்கே தாமதிப்பதில்லை என்று அவள் தீர்மானித்தாள்.

நன்றாக இருட்டும் வரையிலும் அவள் காத்துக் கொண்டிருந்தாள். வளர் பிறை நிலவு முன்னிரவை அழைத்துச் சென்று மறையும் வரையிலும் விழித்த கண் மூடாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். கிழவீ அவளுக்காகக் கொஞ்சம் சாதம் கொண்டு வந்தாள், அதை உண்ணுவதற்கு அவளுக்கு மனம் கூடக் கொள்ளவில்லை கிழவி சாப்பிட்டாளோ இல்லையோ…? பயம் அவளை உண்ண. வீட்டிருக்காது. முடங்கிச் சுருண்டு ஒரு மூலையில் படுத்துக்கொண்டாள். சிறிய குத்து விளக்கு ஒன்று முனுக்கு முனுக்கென்று எரிந்து கொண்டிருந்தது. அவள் வானத்தைப் பார்த்தாள். எல்லையற்ற ஒரு கருமை விரித்துவைத்தாற்போல் அங்கே படர்ந்துகிடந்தது. எங்கோ மூலைக்கு மூலை ஒவ்வொரு சிறிய நட்சத்திரம் மினுமினுத்தது. மெல்லிய காற்று ஊதிச் சென்றது. அந்தக்குத்து விளக்கு அதில் நடுங்கிற்று. அவள் உள்ளமும் தான் அதில் நடுங்கியது. ஆனால் இனி அவள் தாமதிப்பதில் பயன் இல்லை. அவளுக்கு அங்கே யாரும் இல்லை ஏன்? உலகத்திலேயே யாரும் இல்லை. அவளுடைய தந்தையுடன் அவளுக் கிருந்த எல்லாமே மாண்டுமடிந்து மண்ணாகி போய் விட்டன. இனியாருக்காகவும் அவள் வாழவேண்டிய தில்லை. அவள் தனியாள்…தனியாள்…தனியாள் தான் அவள்…!

அந்த நள்ளிரவிலே எங்கோ இருந்து அலறிய ஆந்தையின் கூக்குரல்போல் அவள் உள்ளமும் வெறி கொண்டு கூச்சலிட்டது அவள் எல்லாவற்றையும் இழந்துவிட்டாள். உயிரைத் தவிர இனிவேறொன்றும் இல்லை இழப்பதற்கு. அந்த உயிரை அவள் பாதுகாப் பாள் யார் காரணமாக அவள் தன்னுடைய உயிருக் குயீரான தந்தையையும் மற்ற எல்லாவற்றையும் இழந் தாளோ…அந்த மகாகொடிய பாதகனை மண்ணில் சாய்த்து வெற்றி கொள்வதற்காக அவள் வாழ்வாள். எவனால் தன்னுடைய வாழ்வும் வளமும் வேருடன் வெட்டிச் சாய்க்கப்பட்டதோ அவன் குடியை முளையுடன், தூறு துப்பு கூடாவிடாமல் கூறு நூறாக்கிக் கொன்று தீர்ப்பதற்காக வாழ்வாள். பழிக்குப் பழி…! இரத்தத்திற்கு இரத்தம்…! கொலைக்குக் கொலை…! குத்துக்குக் குத்து….

அவள் ஆவேசம் கொண்டவள் போல் புறப்பட்டு விட்டாள்.

5. கன்னி ராணி!

நகராக்களின் முழக்கத்தைக்கேட்டு அவள் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தாள். மலைகளைக் குடைந்து உண்டாக்கப்பட்டிருந்த அந்த அறையின் சுவர்கள் அவள் கண்களை உறுத்தின. அப்போது தான் முதல் நாள் மாலை தான் கள்வர்களிடம் அகப்பட்டுக்கொண்டதும் அவர்களுடைய தலைவனின் தோள் மேல்சாய்ந்து கொண்டு தேம்பித் தேம்பி அழுததும் அவளை எப்படியோ அடையாளம் கண்டுகொண்ட அவன் நெடு நேரம் ஆறுதல் கூறி அந்த அறையில் கொண்டுவந்து விட்டுச்சென்றது அவள் நினைவுக்கு வந்தன. அவள் உள்ளத்திலே கொதித்துக்கொண்டிருந்த அந்த பழிக்குப் பழி வாங்கும் உணர்ச்சியை அவன் தூண்டிவிட்டிருந்தான். அதைத்தான் பார்த்துக்கொள்வதாய்க் கூறினான். ஆனால் கானகத்தில் கற்குகைகளில் ஒளிந்து கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தினரால் நாட்டிலே கோட்டை கொத்தளங்களுக்கு நடுவிலே படையும் பட்டாளமும் வைத்திருக்கும் ஜமீந்தாரை எதிர்த்து என்ன தான் செய்யமுடியும் என்பது அவளுக்கு விளங்கவில்லை. ஒன்றும் புரியாதவளாய் அவள் படுக்கையிலே உட்கார்ந்து கொண்டிருந்தாள், மிதியடியணிந்த காலடியோசை அவளைத் திடுக்கிடச்செய்தன.

“பயந்துவிட்டாயா…” என்று புன்னகையுடன் கேட்டுக்கொண்டே அவன் உள்ளே வந்தான்.

அவள் அவன் முகத்தைப் பார்த்துக்கூறினாள், “இல்லை. நான் பயப்படவில்லை. பயப்படுவதற்கு இனி என்ன தான் இருக்கிறது. ஒன்றுமே இல்லை…”

அவன் முகம் ஒருகணம் கவலையில் ஆழ்ந்தவனு டையதைபோல் இருந்தது. பிறகு, ” கண்ணம்மா, சீக்கிரம் போய்க்குளித்துவிட்டு வா. இங்கே பெண்கள் யாரும் இல்லை. இருந்தாலும் உனக்காகச் சிரமப்பட்டுச் சில ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன, அதன் பிறகு நீ இன்று உன்னுடைய பரிவாரங்களைப் பார்க்கவேண்டும்” என்றான்.

“என்னுடைய பரிவாரங்களா…?” அவள் ஆச்சரியத்துடன் கேட்டாள். “ஆமாம். அதைப்பற்றி எல்லாம் பேசிக்கொண்டிருக்க நேரமில்லை. நீ சீக்கிரம் வந்து சேரவேண்டும்,” என்றான்.

அவள் குளித்துவிட்டுத் திரும்பிவந்தபோதும் அவன் அதே இடத்தில் நின்றுகொண்டிருந்தான். ஆனால் அந்த அறையில் வேறு பொருள்களும் நிரம்பி இருந்தன. ஒரு தட்டில் வைக்கப்பட்டிருந்த சிவப்பு நிற உடைகளைக்காட்டி “கண்ணம்மா இவற்றை நீ உடுத்திக்கொள்…” என்று சொல்லிவிட்டு ஒருகணத் தில் மின்னல்போல் மறைந்தான். அவள் அவற்றை எடுத்துப்பார்த்தாள். நல்ல உயர்ந்த ரகப்பட்டு உடை கள். அவற்றில் ஜரிகை வேலைகள் செய்யப்பட்டிருந் தன. அணிந்துகொண்டபோது அவை அவளுக்குச் சரியாக இருந்தன. உடைகளை அணிந்து முடியவும் அவன் உள்ளே வரவும் சரியாக இருந்தது. எங்காவது மறைந்து நின்று பார்த்துக்கொண்டிருந்தானோ என்ற சந்தேகம் அவளுக்கு வந்துவிட்டது. வெட்கத்தால் அவள் முகம் சிவந்தது. அவன் கூறினான், “பெண்களை அலங்காரம் செய்துகொள்ள விட்டுவிட்டால் வருஷக் கணக்கில் செய்துகொண்டே இருப்பார்கள் ஆனால் இனித்தாமதிக்க முடியாது. நடபோகலாம்…” என்றான்.

இருவரும் விசாலமான அறை ஒன்றில் நுழைந்த னர். அதில் நல்ல சிற்றுண்டிகளும் பழ வகைகளும் தட்டுகளில் பரிமாறி வைக்கப்பட்டிருந்தன. அவன் பேசாமலேயே ஒருதட்டின் அருகில் அமர்ந்தான். தான் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துக் கொண்டவள் போல் அவளும் ஒரு தட்டில் அமர்ந்தாள் அவற்றைப் போன்ற இனிமையான உணவுகளை அவள் பெரிய பிரபுகளின் விருந்துகளில் கூடச் சாப்பிட்டதில்லை. சாப்பாட்டின் இடையே அவள் அவற்றை எப்படி ரசித்து சாப்பிடுகிறாள் என்பதை அவன் கவனித்தான். உணவை ரசிப்பதிலும் அவள் உள்ளம் உண்மையில் நடுங்கிக்கொண்டிருந்தது. அச்சுறுத்தப் பட்டு வைக்கப்பட்டிருக்கும் அடிமை ஆண்டையினிடத்தில் நடந்துகொள்வதைபோலவே அவள் நடந்து கொண்டாள். அவளுக்குச் சிறிதளவாவது சுதந்திர மாய் பேசுவதற்கு சுதந்திரம் இருந்திருந்தால் அவள் அவனிடம் ஒன்றுமே கேட்காமல் இருந்திருக்கமாட்டாள்.

சாப்பிட்ட பிறகு இருவரும் எழுந்திருந்தனர். ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் அவர்கள் இருவரும் நின்றனர். அவள் பார்த்தாள். அங்கிருந்து வரிசையாக இரண்டு பக்கங்களிலும் ஆயுதம் தரித்த வீரர்கள் நின்றுகொண்டிருந்தனர். வீரன் ஒருவன் பெரிய முரசு ஒன்றை அடித்தான். அதைத் தொடர்ந்து எதையோ அறிவிப்பது போல் வாத்தியங்கள் முழங்கின. அவன் அவளை தன் அருகில் வரும்படி ஜாடை யாகக் குறிப்பிட்டான். எஜமானன் சைகைக்குப் பணி யும் குட்டி நாயைப்போல் அவள் அவன் அருகில்வந்து நின்றாள். அதன் பிறகு இருவரும் மெதுவாக நடந்து சென்றனர். வழி நெடுக நின்ற வீரர்கள் வணக்கம் செலுத்தினர். அவளுக்கு அரசன் ஒருவன் தர்பாருக் குச்செல்லும் காட்சி நினைவுவந்தது. இந்தக் காட்டரசன் தன் காட்டுக் குடிகளைக் காணச் செல்வானாக இருக்கலாம். யார் கண்டார்?

அந்த வழி செதுக்கப்பட்ட ஒரு பாறைக்குப் பின் னால் சென்று நின்றது. அந்தப் பாறையின் இரண்டு பக்கங்களிலும் படிகள் செதுக்கப்பட்டிருந்தன. அதன் அருகே தயாராய் நின்றுகொண்டிருந்த இரண்டு வீரர் கள் பணிவுடன் ஒரு வழியில் அவளையும் மற்றொரு வழியில் அவனையும் அழைத்துச்சென்றனர். அவள் தயங்கினாள். ஜாடையாக அவன் தலையை அசைத்ததும் பேசாமல் நடந்தாள்.

அந்தக் கற்பாறையாலான மேடை மிக அழகாகச் செதுக்கப்பட்டிருந்தது. அதன் நடுவில் ஒரு பெரிய ஆசனம் இடப்பட்டிருந்தது. அதன் அருகில் வேறு ஆசனங்கள் கிடந்தன. அவர்கள் இருவரும் அந்த ஆசனங்களுக்கு இரண்டு பக்கங்களில் வந்து சேர்ந்த னர். அவள் அங்கே கற்பனையிலும் கண்டிராத காட்சி ஒன்றைக் கண்டாள். தன்னுடைய வாழ்க்கையில் இப்படி ஏதாவது வரக்கூடும் என்று அவள் கனவிலும் கருதியிருக்கமாட்டாள். அவள் ஆச்சரியத்தில் நிலைத்துப்போய்விட்டாள். அவள் எதிரே அலை அலையாக வீரர்கள் நின்றனர். பளபளக்கும் ஆயுதங்களுடன் ஒரே மாதிரியான உடைகள் அணிந்து அவர்கள் வரிசை வரிசையாக நின்றனர். அவர்களைக் கண்டதும் ஆயுதங்களை உயர்த்திச் சந்தோஷ ஆரவாரம் செய்தனர். எங்கள் ராணி வாழ்க…கன்னி ராணி வாழ்க! என்று அவர்கள் முழங்கினர்.

அவர்களுடைய ராணியா..? கன்னி ராணியா…? –

அவள் ஆச்சரியத்தில் தன்னை மறந்துவிட்டாள். குழந்தைபோல் சுற்றும் முற்றும் பார்க்க ஆரம்பித்து விட்டாள். அவன் முகத்தில் இலேசான புன்னகை தவழ்ந்துகொண்டிருந்தது.

6. சபதம்

அவன் தன் இரண்டு கைகளையும் உயர்த்திக் கையமர்த்தினான். ஆரவாரம் நின்றது. அவர்கள் அமைதியாக நின்றனர். அவன் பேச ஆரம்பித்தான்.

“வீர நண்பர்களே..

“நமது ராணி நமக்குக் கிடைத்துவிட்டாள். நெடு நாளாக நாம் யாருடைய தலைமையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தோமோ, அவள் இன்று நம் மிடையே வந்துவிட்டாள். அவள் வருகையை அறிந்த வுடன் நாட்டின் பல மூலைகளிலிருந்து ஓடி வந்திருக்கும் உங்களுக்கு அவள் சர்பாக நன்றி செலுத்துகிறேன்.”

ஆனால்…

“அவள் நாம் எதிர்பார்த்ததுபோல் மகிழ்ச்சி யுடன் நம்மைவந்து சேரவில்லை. அடங்காத துயரத்துடன் வந்து சேர்ந்திருக்கிறாள். கொதிக்கிற ஆத்திரத் துடன் வந்திருக்கிறாள்.”

“சதிகாரர்கள் அவள் இருந்த மாளிகைக்குத் தீ வைத்துவிட்டனர். அவளுடைய தந்தையும், ஆட்களும், வெந்து சாம்பலாகிவிட்டனர். நமக்கு ராணி யாவதற்காக அவள் மாத்திரமே தப்பமுடிந்திருக்கிறது. வீரர்களே சிந்தித்துப் பாருங்கள்..நமது மதிப்பிற்குரிய அரசிக்கு இந்தக் கொடிய துரோகம் இழைத்த பாபிகளை நாம் இன்னும் விட்டு வைத்திருக்கலாமா…? ஏழைகளையும் திக்கற்றவர்களையும் கசக்கிப் பிழிந்து வாழ்ந்துவரும் அந்தக் கோழைகளை இன்னும் விட்டுவைத்திருக்கலாமா…?

அவன் ஒருகணம் நிறுத்தினான். அந்த வீரர்கள் ஆயுதங்களை உயர்த்திக்கொண்டு “முடியாது, முடியவே முடியாது…” என்று கூச்சலிட்டார்கள். அவன் மீண்டும் தொடர்ந்தான்…

“அவர்கள் எவ்வளவு கொடியவர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் ஒவ்வொருவருடைய குடும்பங்களும் அவர்களால் நாசப்படுத்தப்பட்டு வரு கிறது. அதற்குப் பழிக்குப் பழி வாங்க நீங்கள் துடி துடிக்கிறீர்கள் என்பதை நான் உணர்கிறேன். எல்லா வற்றுக்கும் மேலாக நமது ராணிக்கு அவர்கள் செய்த துரோகத்தையும் நினைத்துக்கொள்கிறபோது உங்கள் உள்ளம் ஆத்திரத்தில் பற்றி எரிகிறது என்பது எனக் குத்தெரியும். என் அன்பிற்குரிய வீரர்களே…ஆனால் நீங்கள் இன்னும் பொறுக்கத்தான் வேண்டும் அவர்கள் திருந்துவதற்கு வாய்ப்புக்கொடுக்க அல்ல. நமது படை பலத்தைப் பெருக்கிக்கொள்வதற்காகத்தான். வளர்ந்துவரும் புரட்சி சேனைகளை நல்ல முறையில் தயார்ப்படுத்திக்கொள்வதற்காகத்தான்.”

“என் வீரர்களே, இதற்கிடையிலே நமது ராணி யின் சார்பாக உங்களுக்கிடும் கட்டளை என்னவென் றால்… நமது ராணியை குலத்தோடு வேரறுக்க எவன் சதி செய்தானோ…அவர்கள் குடியிருந்த மாளிகைக்கு எவன் நள்ளிரவில் தீ வைத்தானோ…! அவன் அந்தக் கொடிய ஜமீந்தார்…! அவனைக் குலத்தோடு நாம் வேரறுக்க வேண்டும். நம் ஆயிரக்கணக்கானவர்களுக்கும் அவனே கொடிய விரோதி. அவனோ அவன் குடும்பத்தைச் சேர்ந்த வேறு எவனோ…எவனானாலும் சரி… நம்மிடையே அகப்பட்டுக்கொண்டால் அவர்களை உயிருடனோ அல்லது செத்த பிணமாகவோ இங்கே கொண்டுவந்து சேர்க்கவேண்டும்….எக்காரணத்தைக் கொண்டும் தப்பிச்செல்ல விடக்கூடாது. இதைக்கண்டிப்பாக நீங்கள் நினைவு வைத்துக்கொள்ள வேண்டும். நமது ராணியின் பெயரால் சபதம் செய்துகொள்ள வேண்டும். இதை முதலில் செய்து முடிக்கும் கூட்டத் திற்குத் தனி வெகுமதியும் பதவியும் உண்டு.

அவன் மீண்டும் தன் பேச்சை நிறுத்தினான். அந்தப்படை வீரர்கள் அமைதியாக நின்றனர். பிறகு “சரி…நீங்கள் இனிக் கலைந்து செல்லலாம்…” என்று அவன் விடைகொடுத்தான்.

அவர்கள் கடைசியாக மீண்டும் ஒருமுறை முழங்கினர். “எங்கள் ராணி வாழ்க…!”

“கன்னி ராணி வாழ்க…!”

அதன் பிறகு வரிசை வரிசையாகக் கலைந்து சென்றனர். அந்த வேடிக்கையை விளையாட்டுக் குழந்தை போல் நின்று பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்று அவள் விரும்பினாள். ஆனால் அவனுடைய கண்கள் அவளை நோக்கித் திரும்பு” என்று கட்டளையிட்டன. அவள் பேசாமல் வந்த வழியே திரும்ப வேண்டியவளானாள்.

7. எப்படி நடக்கும்?

அவர்கள் இருவரும் நேரே தங்கள் அறைகளுக்குச் சென்றுவிடவில்லை. இடையிலே அவன் வேறு பக்க மாகத்திரும்பி உயர்ந்து சென்ற ஒரு குன்றின் மேல் ஏறத்தொடங்கினான். அவள் தயக்கத்துடன் நின்று பார்த்தாள். அவனுடைய பார்வை அவளைப் பின் தொடரும்படித் தூண்டிற்று. அவள் பேசாமல் அவனுடன் நடந்தாள், அவள் என்ன செய்யவேண்டும் என்பதைப்பற்றி அவன் ஒரு வார்த்தைகூடக் கூற வில்லை. ஆனால் எப்படியோ அவள் அவன் விருப்படியே நடந்தாள். ஆட்டும்படி ஆடும் பொம்மையைப்போல் அவளை அறியாமலேயே அவன் விருப்படி நடந்தாள். அது அவளுக்கே வியப்பாக இருந்தது.

அவனுடைய கண்களுக்கு ஒருமகத்தான சக்தி இருந்தது. அந்தக் கண்களின் பார்வை சாதாரண மனிதனின் பார்வை அல்ல. அதில் பிறரை ஆட்டி வைக்கக்கூடிய ஏதோ ஒரு சக்தி மறைந்திருந்தது. அந்தப் பார்வைக்கும் பிறரைப் பணிய வைத்துவிடும் வல்லமை இருந்தது. அவனுடைய தலை சிலையில் செதுக்கிவைத்ததைப்போல் சற்றும் வளையாது எடுப்பாக நின்றது. அதன் அவயவங்கள் கடைசல் பிடித்த வற்றைப்போல் அதிகாரத்தையும் உறுதியையும் காட்டுவனவாக இருந்தன. அவை எல்லாவற்றிலும் மிகவும் வல்லமை வாய்ந்தவை அந்தக் கண்கள் தான்.

அவளுக்கு முன்னால் அவன் நடந்து சென்றான். இரண்டு பக்கங்களிலும் மரங்களும் செடிகளும் புதர் களும் அடர்ந்து வளர்ந்திருந்தன. அந்தப் பெரிய மரங்களிலே மஞ்சளும், இள நீலமும், வெளுப்பும் ஆன பூக்களைத் தாங்கிய கொடிகள் ஆடிக்கொண்டிருந்தன. சின்னஞ்சிறிய அழகிய பறவைகள் கீச்சிட்டு நாலாபுறங்களிலும் பறந்து கொண்டிருந்தன. அவள் அந்த இயற்கை அழகை அனுபவிக்கவில்லை. முன்னால் நடந்து செல்லும் அவனுடைய உருவைக் கண்களால் அளந்து கொண்டிருந்தாள்.

ஆறு ஆறரை அடி உயரத்திற்கு கம்பீரமாக வளர்ந்த உடல். உறுதியான பெரிய பெரிய கைகள் கால்கள். வெண்கலச் சிலையினுடையதைப் போன்ற விசாலமான மார்பு. அவள் கதைகளிலே படித்த மகா வீரர்களினுடைய உருவங்கள் இப்படித்தான் இருக் திருக்கவேண்டும். அவன் இடையிலே அவளை நோக்கித் திரும்பாமலிருந்திருந்தால் அவள் உள்ளம் கற்பனையிலே மூழ்கிப்போயிருக்கும்.

“மகாராணி என்ன யோசிக்கிறீர்கள்…?” என்று அவன் கேட்டான்.

அவளால் ஒன்றும் பேசமுடியவில்லை. அவன் விளையாட்டாகப் பேசுகிறானோ என்று நினைத்தாள், ஆனால் அந்தக் குரல் உண்மையாகப் பேசும் தன்மை யைத்தான் காட்டியது. அவன் திரும்பி அவளைப் பார்த்தான். அவனுடைய கண்கள் நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல் என்றன. அவள் காரணம் இல்லாமல் நடுங்க ஆரம்பித்துவிட்டாள். ” ஒன்றும் இல்லை… ஒன்றும் இல்லை” என்று உளறினாள்.

அவனுக்குச் சிரிப்புவந்துவிட்டது. மகாராணிக்கு என்னைப்பார்த்தால் பயமாக இருக்கும் போலிருக்கிறது ஆனால் இனிமேல் பயப்படவேண்டிய அவசியமே இல்லை, நான் மகாராணியின் கட்டளைக்கு அடங்கியவன் தான். மகாராணிக்கு இங்கே நடைபெறுபவை களை எல்லாம் பார்த்துச் சந்தேகம் உண்டாகியிருக்கும் அவற்றிற்கு விளக்கம் தேவைப்பட்டால் கூறுகிறேன். அதற்காகவே அழைத்து வந்தேன்.’ என்றான்.

அவள் ஒருகணம் யோசித்தாள். பிறகு “நீங்கள் யார்…என்னை உங்களுக்கு எப்படித் தெரியும்……?” என்று கேட்டாள்.

அவன் திடுக்கிட்டவன் போல் திரும்பி, “மகாராணி…நான் இப்போது புரட்சி வீரர்களின் சர்வாதி காரி. அதைவிட அதிகம் ஒன்றும் தயவுசெய்து கேட்கவேண்டாம். நான் உங்களைப் பார்த்திருக்கிறேன் தங்கள் மாளிகையில்…சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்…”

“ஆனால் நான் உங்களைப் பார்த்ததில்லையே?”

“ஆம். நீங்கள் என்னைப் பார்த்திருக்க முடியாது. நான் உங்கள் மாளிகையில் ஒளிந்துகொண்டிருந்தேன். என்னை அரண்மனை வீரர்கள் நாடு முழுவதும் தேடிக் கொண்டிருந்தனர். மஹாராஜா எனக்கு மரண தண் தனை விதித்திருந்தார். நான் சிறைக்கூடத்திலிருந்து தப்பிவிட்டேன்…”

“மரண தண்டனை பெறும்படியாக என்ன குற் றம் செய்தீர்கள்…”

“மகாராணி…அதைப்பற்றி கேட்கவேண்டாம்… ஆனால் நான் குற்றமற்றவனாக இருந்து தப்பியதால் தான் தங்கள் தந்தை எனக்குப் புகல் அளித்தார். அவருடைய நேர்மையைத் தாங்கள் சந்தேகிக்கமாட்டீர்கள்…

“என்னை எதற்காக மகாராணி என்று அழைக்கிறீர்கள்….?”

அவன் பதில் சொல்லவில்லை. இலேசான சிறு நகையுடன் அவளைத் திரும்பிப்பார்த்தான். அவன் பார்வையிலிருந்து அவள் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். “ஆமாம். எனக்கு ஒன்றுமே புரிய வில்லை. உங்களுக்கு ஒரு ராணி வருவாள் என்று நீங் கள் எதிர்பார்த்திருக்கிறீர்கள். அதற்கான முன்னேற் பாடெல்லாம் செய்து வைத்திருக்கிறீர்கள்…… அவ ளுடைய தலைமையில் பிரபுக்களின் கொடுங்கோலாட்சி யிலிருந்து ஜனங்களை விடுவிக்கப்போவதாகக் கூறி வந் திருக்கிறீர்கள். ஆனால் அந்த ராணி நான் தானா…? நான் தான் உங்களுக்கு ராணியாக வருவேன் என்று உங்களுக்கு எப்படித்தெரியும்… எனக்காக, என் பெய ரால்தான் இந்த ஏற்பாடுகளெல்லாம் நடந்தனவா…? எனக்கு ஒன்றுமே புரியவில்லை..” என்றாள்.

“கண்ணம்மா இவை எல்லாம் உன் பெயரால் நடைபெறவில்லை. என்பது உண்மை. ஜனங்களுக்கு ஏதாவது ஒரு நம்பிக்கை தேவை. அந்த நம்பிக்கை இருந்தால்தான் அவர்கள் எந்த லட்சியத்திற்காகவும் ஒன்று திரள்வார்கள். அந்த நம்பிக்கை வெறும் பெய ரளவில் இருந்தாலும் போதாது. இதைப்போல ஒரு புரட்சிகரமான காரியத்திற்கு மக்களை ஒரு நம்பிக்கையின் கீழ்த்திரட்டுவது என்றால் அது அவர்களை இயற்கையை மீறிய ஒருவெறிகொள்ளும்படிச்செய்யக் கூடியதாக இருக்கவேண்டும். அதற்காகவே இந்த ராணி சிருஷ்டிக்கப்பட்டாள். உன்னுடைய சிவந்த உடையை நீ இதுவரை கவனித்துப் பார்க்கவில்லை. அந்த உடையில் உன்னுடைய உருவம் இந்த ஜனங் களின் மனதில் எவ்வளவு ஆழமாகப் பதிந்துவிடும் என்பது உனக்குத்தெரிந்திருக்காது. உண்மையிலேயே நீ அவர்களுக்கு ஒரு நடமாடும் தேவதையாகிவிட்டாய் நீயும் மற்றவர்களைப்போல் மனிதப் பிராணிதான் என்று இனி யார் எவ்வளவு சொன்னாலும் நம்பமாட் டார்கள். உனக்காக, உன் பெயரால் இனி அவர்கள் எவ்வளவு தியாகம் வேண்டுமானாலும் செய்வார்கள். உயிரைக் கூட இழப்பார்கள்.”

“ஆனால் இதெல்லாம் எப்படி நடைபெறும்…… நாம் ஜமீந்தாரை ஒழித்துவிடுவோமா…….? அதைப் பார்த்துக்கொண்டு மஹாராஜா சும்மா இருப்பாரா…? மஹாராஜாவை எதிர்த்துப் போராட நமக்குப் படை பலம் இருக்கிறதா…இதெல்லாம் எப்படித்தான் நடை பெறப்போகிறது…? என்று குழந்தையைப்போல் திருப்பித்திருப்பி கேட்டாள்.”

8. சர்வாதிகாரியின் திட்டம்!

அவன் ஒருகண நேரம் மௌனமாக இருந்தான். பிறகு நிதானமாகப் பெருமூச்சுவிட்டுக்கொண்டு மிக நிதானமான குரலில் பேச ஆரம்பித்தான் ” கண் ணம்மா…அதை எல்லாம் இப்போது உனக்கு விளக்கிச் சொல்லிவிட முடியாது. அவ்வளவு சாதாரணமான திட்டங்கள் அல்ல இவை. ஆனால்… இதை நீ புரிந்து கொண்டிருக்கலாம்…நீ உறங்கிக் கொண்டிருந்த சிறிது நேரத்திலேயே உனக்காக இவ்வளவு அழகான உடை கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. அவை உனக்கு எவ்வளவு சரியாக இருக்கின்றன. அந்தக்கண நேரத் திலே மூலைக்கு மூலை பலகாதங்களுக்கு அப்பால் இருந் தெல்லாம் பல நூற்றுக்கணக்கான மக்கள் இங்கே வந்து திரண்டிருக்கிறார்கள். அவர்களுடைய கை களிலே மிகச் சிறந்த ஆயுதங்கள் இருந்தன…இவை எல்லாம் உனக்கு ஆச்சரியமாகத் தோன்றவில்லையா? இவ்வளவு ஆச்சரியகரமாக ஒருகாரியத்தை இந்த அரசாங்கத்தினால் கூடச்செய்துவிட்டிருக்க முடியாது…..”

“கண்ண ம்மா ….. கட்டுப்பாடாக ஒரு இயந் திரத்தைப்போல் இயங்கும் ஒரு பெரும் படை என் கீழ் இருக்கிறது. அதில் இருப்பவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல. இந்த அரசாங்கத்தின் பெரும் தூண்களில் சிலரும் அதில் இருக்கிறார்கள் என்றால் நீ புரிந்துகொள்வாய் என்று நினைக்கிறேன்.”

“அதுமாத்திரமும் அல்ல… நான் யார் என்பதைக் கண்டுபிடித்துவிட உன்னால் மாத்திரம் அல்ல…யாரா லுமே முடியவில்லை. என்னை அடையாளம் கண்டு கொள்ளக்கூடியவர்கள் யாருமே இல்லை. அதில் ஒரு பெரிய இரகசியம் அடங்கியிருக்கிறது.”

“கண்ணம்மா… இன்றைக்கு இந்த நிமிஷத்தில் நான் உன்னை விடுதலைசெய்கிறேன்…ஆனால், திரும்ப வும் நீ எந்த இடத்திலிருந்து வந்தாயோ அந்த இடத் திற்கு உன்னால் போய்விட முடியுமா…? யோசித்துப் பார்த்துச்சொல்…”

அவள் யோசித்துப்பார்த்தாள், அவர்கள் எப் படி எப்படியோ தாறுமாறான வழிகளில் அழைத்து வந்தார்கள். அதிலே சிறிய அடையாளம்கூட அவள் நினைவில் வைத்துக்கொள்ளும்படியாக இருக்கவில்லை. ஆனால் அவள் கேட்டாள்…” நீங்கள் என்னை விடுதலை செய்வதா…? நான் உங்கள் அரசி அல்லவா…?” என்று .

அவன் சிரித்தான். “அரசிதான், ஆனால் எந்த அரசியாலும் சுயமாக இயங்கமுடியாது என்பது உனக்குத் தெரிந்திருக்கும். அவள் எவ்வளவோ கட்டுப் பட்டவளாக இருக்கவேண்டும்…”

அவள் திகைத்தாள், “அப்படி என்றால்…?”

“அப்படி என்றால்…… மந்திரிகளும் ஆலோசகர் களும் ஆகிய எத்தனையோ பேர்களின் அபிப்பிராயப் படியே அவள் நடக்கவேண்டியவளாக இருப்பாள். ஆனால் இந்த அரசி இந்த சர்வாதிகாரியின் கைப் பொம்மையாகமாத்திரம் இருப்பாள்…”

அவளுக்கு அவன் மேல் ஆத்திரம் வந்தது. ஜனங் களை ஏமாற்றுவதற்காகத் தனக்கு இந்த வேஷம் போட்டுத் தன்னை ஒரு கைக் கருவியாக மாத்திரம் உபயோகித்துக்கொள்ள விரும்புகிறான் இந்தத் துரோகி, என்று நினைத்தாள் அவன் சிரித்துக் கொண்டே ” கண்ணம்மா…நீ நினைப்பது சரி அல்ல. காரியங்கள் இப்போதைக்கு அப்படி நடைபெறும். ஆனால் உண்மையாகவே இந்த நாட்டின் அரசியாக இருந்து நீ ஆளும் காலமும் வரும். உன் தந்தை எனக்குச் செய்த உதவிக்கு, அவருக்கு இந்தப் பழிகார ஜமீந்தார் செய்த துரோகத்திற்கு…..இதைச்செய்து முடித்த அன்று தான் நான் மனிதனாவேன்…… கண் ணம்மா உன்னிடம் மனம் திறந்து சொல்கிறேன். என் உள்ளத்தில் சிறிதளவேனும் துரோக சிந்தனையோ …கெட்ட எண்ணமோ கிடையாது. இந்த உலகத்தில் வாழும் எண்ணற்ற ஏழை மக்களுக்காகத்தான் நான் வாழ்கிறேன். அவர்களுக்காகத்தான் நான் இவற்றை எல்லாம் செய்கிறேன். இவற்றைச் செய்து முடிக்க வேண்டியது என் கடமை என்று நினைக்கிறேன். ஏன் என்றால் எனக்குத்தான் அந்த வல்லமை இருக்கிறது. எத்தனையோ பலஹீனமானவர்களை… கோழைகளைப் படைத்த இயற்கை அவர்களின் சார்பாகத்தான் என்னையும் படைத்துவிட்டிருக்கிறது. அது என்னால் இந்தக் காரியம் நடைபெறவேண்டும் என்பதற்காகத் தான்……” என்றான்.

அவள் ஒன்றும் பேசவில்லை. ஆனால் அவளுக்கு எதிலுமே நம்பிக்கை உண்டாகவில்லை. அவனிடம் படை வீரர்கள் இருக்கின்றனர். அவர்களைக் கட்டுப் பாடாக நிர்வகிக்கும் திறமையும் அவனுக்கிருக்கிறது. இன்னும் என்னென்னவோ வல்லமைகள் அவனுக் கிருக்கலாம். ஆனால் அவற்றால்…… அவற்றால்……? அவற்றால் என்ன செய்துவிட முடியும் என்பதை அவ ளால் திட்டமாக உணரமுடியவில்லை. அவள் உள்ளம் ‘வெறிச்’ என்று கிடந்தது. ஆனால் அந்தச் சமயத் திலும் அவள் உள்ளூர அவனுக்கு அஞ்சினாள். அந்த அச்சத்தின் காரணமாகவே அவள் ஒன்றும் பேசவும் இல்லை.

அவன் அதைப்புரிந்து கொண்டிருக்க வேண்டும். தன் கால்களை ஊன்றி நின்று கைகளைப்பின்னால் கட்டிக்கொண்டு…”கண்ணம்மா…ஒரு நாள் இந்த ஜமீந்தாரின் குடிப்படைகள் அத்தனை பேரும் ஜமீந்தாரை எதிர்த்துக்கலகம் செய்வார்கள். அதே சமயத் தில் அரசாங்கம் முழுவதிலும் அதைப் போன்ற கலகங்கள் நடைபெறும். அரசாங்கத்தின் ராணுவமே நமக்கு ஒத்தாசையாக வரவும் கூடும். அந்தச் சமயத்தில் அரசர் வேறு வழி இன்றி எனது காலடியில் வந்து விழுவார். சந்தர்ப்பங்கள் அப்படி நிகழும். அரசர் அரசராகவே இருக்கலாம். ஆனால் நான் சர்வாதிகாரியாக இருப்பேன். இது தான் என் திட்டம்..” என்றான்.

9. கைதி…!

சர்வாதிகாரி அவளுக்கென்று தனி அறை ஒன்று கொடுத்தான். ஒரு சிறிய குன்றின் உச்சியில் மிக அழகாக அமைந்திருந்தது அந்த அறை. விசாலமாக வும் உயர்ந்த ஆசனங்கள் இடப்பட்டும் இருந்தது. அதற்குக் கீழே வேறு அறைகள் இருந்தன. அவை அவளுடைய சிப்பந்திகளுக்காக விடப்பட்டிருந்தன. 1 அந்த அறையில் சாளரத்தின் அருகில் நின்று கொண்டு வெட்ட வெளியைப்பார்த்தவளாய் சும்மா நின்றுகொண்டிருந்தாள். அவள் கண் எதிரே அடர்ந்து வளர்ந்த செடி கொடிகளும் உயர்ந்த மரங்களும் நிறைந்த பள்ளத்தாக்கும் அதை அடுத்து மீண்டும் உயர்ந்த மலைகளும் இருந்தன. அமைதி நிறைந்ததாய்க் காணப்பட்ட அந்தப் பள்ளத்தாக்கிலே இந்த அடவி யில் எத்தனையோ கொடிய விலங்குகள் வசிக்கின்றன. அந்த மலைச் சிகரத்தைத் தாண்டி இறங்கியவர்கள் யாருமே பிழைத்ததில்லை. சர்வாதிகாரி அப்படிச் சொல்லியிருந்தான்.

ஒருபுறம் அகாதமான கானகமும் கொடும் விலங்குகளும், மறுபுறம் ஆயுதமணிந்த வீரர்களும், பாதுகாவலரும்… இவற்றிக்கு மத்தியிலே தான் ஒரு கைதி….ஆனால் பெயர் அரசி… இதை நினைத்துக் கொள்ளும் போது அவளுக்குச் சிரிப்பாக வந்தது. சின்னஞ்சிறுமியான அவளுடைய வாழ்க்கையிலே வந்து மோதிய விசித்திரமான அனுபவங்கள் ஒன்றுக் கொன்று மாறான நிலைமையில் அவளை வைத்தன. அவ ளால் எதுவுமே புரிந்துகொள்ள முடியவில்லை. எதிரே இருந்த கானகத்தை அவள் பார்த்தாள். அது அந்தப் பெரிய பள்ளத்தாக்கில் இருந்தது. அதில் இருந்த பெரிய மரங்கள் எல்லாம் சின்னஞ் சிறியவையாகத் தோன்றின. செடிகளும் கொடிகளும் கண்களுக்குப் புலப்படவே இல்லை. அங்கங்கே ஏதோ பறவைகள் பறந்துகொண்டிருந்தன. ‘வெறிச்’ என்ற உணர்ச்சி யற்ற நிலையோடு அவள் அவற்றைப் பார்த்துக்கொண் டிருந்தாள். அந்தக் கொடும் கானகத்திலே தான் ஒரு கைதி…… தான் ஒரு கைதி…….அந்த நினைவு தான் அவள் உள்ளத்திலே அலைமோதிக்கொண்டிருந்தது.

காலடி ஓசைகள் கேட்டு அவள் திரும்பினாள். அவள் எதிரே இரண்டு பெண்கள் வந்து நின்று வணங் கினர். அவளுக்கு அதிசயமாக இருந்தது. அவள் அதுவரை அங்கே பெண்களைப் பார்த்ததே இல்லை. அவர்கள் இள நீலநிற ஆடைகள் அணிந்திருந்தனர். தோள் பட்டையிலே சிவப்புத் துணியால் செய்யப் பட்ட பூச்சின்னங்கள் தரித்திருந்தனர். அவள் கேள்வி கண்களுடன் அவர்களைப் பார்த்தாள்…” மகா ராணி சபைக்கு எழுந்தருள வேண்டும்…” என்றாள் ஒருத்தி. அவளுக்கு வேடிக்கையாக இருந்தது. மகாராணி சபைக்கு எழுந்தருளவேண்டும்…”நல்ல மகா ராணி…நல்ல சபை… நல்ல எழுந்தருளல். குழந்தை போல் நான் வல்லைப்போ…” என்று சொல்லவேண்டும் என்று அவளுக்குத்தோன்றியது. ஆனால் சர்வாதிகாரி யின் முகம் அவள் கண் எதிரே வந்ததும் அவள் நடுங் கினாள். அவள் நினைவிலே நின்று ‘ நட’ என்று கட்டளையிட்டன அவனுடைய கண்கள். அவள் நடந்தாள்.

அந்த பெண்கள் அவளை வழி நடத்திச்சென்றனர் ஆயுதம் தரித்த வேறு பெண்கள் அவளுக்குக் காவலாக வந்தனர். அவள் வியப்புடன் அவர்களைப்பார்த்தாள் அவர்கள் கருப்பு உடைகளும் சிவப்புப் பூச் சின்னங் களும் அணிந்திருந்தனர்.

அவளுடைய அறைக்குப் பக்கத்திலேயே இப் போது சபை கூட்டப்பட்டிருக்கிறது. அவள் ஒரு உயர்ந்த மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். ஒரு பக்கத்தில் சர்வாதிகாரியும், இன்னொரு பக்கத்தில் வேறு அதிகாரிகளும் நின்றனர், எதிரே கண்கள் கட்டப்பட்ட ஒரு இளைஞன் நின்றுகொண்டிருந்தான். அவனுடைய கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்தன. கால்களும் பிணிக்கப்பட்டிருந்தன. அவள் அவனைப் பார்த்தாள். ‘இளைஞன்…பாவம்…! அவனும் ஒரு கைதிபோலும்’ என்று நினைத்தாள்.

“மகாராணி…நம் வீரர்களின் முதல் காணிக்கை . இளைய ஜமீந்தார்…” என்று கூவினார் அதிகாரி ஒருவர்

‘ஜமீந்தார்…!’

அந்த வார்த்தை மெழுகுபோல் உருகிய அவள் உள்ளத்தை உருக்கைப்போல் இருகச்செய்தது. அவள் கண்களின் முன்னால் வானளாவிய அவளுடைய மாளிகைகள் தீக்கரங்களிலே சிக்கி எரிந்து பொடி சாம்பலாகி விழுந்து மறைவதைப்போன்ற தோற்றம் எழுந்தது. அலறி அடித்துக்கொண்டு வேலைக்காரர் களும், கன்று காலிகளும் அனலில் விழுந்து சாவதை அவள் கண்டாள். அவளுடைய தந்தை அந்தத் தீயிலே தவி தவித்து வெந்து சாவதை அவள் கண்டாள். அவள் உள்ளம் விம்மியது. உடல் துடித்தது. அவள் கண்கள் சிவந்துபோயின. அவனை ஏறிட்டுப் பார்த் தாள். இப்போது அவள், ‘ பாவம் இளைஞன்’ என்று நினைக்கவில்லை. தன் ஜென்ம வைரியைக் கொடிய விரோதியைக் காண்பதாகவே நினைத்தாள்.

அவள் முகத்திலே அந்த உணர்ச்சிகளைப் படித் தான் சர்வாதிகாரி. அந்த அதிகாரிக்குக் கண்களால் கட்டளையிட்டான். அவன் கூறத்தொடங்கினான். மகாராணி…ஏழைகளின் உழைப்பை , உயிரை, மானத்தைத் திருடி உயிர் வாழும் கயவர் கூட்டத்தின் தலைமையிலே நிற்பவர்களில் ஒருவன் இந்த துரோகி, இவன் ஜமீந்தாரின் மகன்…இளைய ஜமீந்தார்…” என்று.

அவள் உள்ளம் மீண்டும் புகைந்தது.

அந்த இளைஞன் மண்டியிட்டுக் கீழே விழுந்து மன்றாடி உயிர்ப்பிச்சை கேட்பான், அழுவான், தொழு வான் என்று அவள் எதிர்பார்த்தாள். ஆனால் அவன் அப்படி எல்லாம் செய்யவில்லை மிக நிதானமான குரலில்…” ஜமீந்தாரின் மகனாகப் பிறந்துவிட்டது என் குற்றமா….?” என்று கேட்டான்.

“பேசாதே…” என்று அதட்டினான் அதிகாரி. அவளை முதன் முதலில் சிறைபிடித்த கள்வர்களும் அப்படித்தான் கூறினார்கள். அது அவள் நினைவுக்கு வந்தது, அவள் உடல் நடுங்கிற்று. இப்போது அவள் அவர்களுக்கு ராணி. ஆனால் அடிமையைப்போல் பேசாமல் தான் நின்றுகொண்டிருந்தாள். ஆனால் அவன் பேசாமலிருக்கவில்லை. மிக உறுதியான குரலில் அவன் கூறினான். ” நீங்கள் எனக்கு விதிக்கப்போகும் தண்டனையைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. என்னைச் சித்திரவதை செய்வதாக இருந்தால் கூட எனக்குப் பயம் இல்லை. ஆனால் என்னைப் பேசாமல் இருக்க வைக்க உங்களால் முடியாது. நான் எங்கே இருக் கிறேன். யார் முன்னால் இருக்கிறேன். நீங்கள் மகா ராணி என்றழைக்கும் அவர் எப்படி இருக்கிறார்…? அவற்றை நான் பார்க்க விரும்புகிறேன். நான் செய்த குற்றம் என்ன…? உங்களுக்கு நான் என்ன தீங்கிழைத் தேன்…? என்னை நீங்கள் எதற்காக விசாரிக்கிறீர்கள்…? என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். என்மேல் எந்தச்சிறிய குற்றம் இருப்பினும் அதற்கு எவ்வளவு பெரிய தண்டனை விதித்தாலும் நான் ஏற்றுக்கொள்ளத் தயார். அப்படி இல்லை என்றால்…என்னை அநியாயமாக, அகாரணமாகத் துன்புறுத்து வதோ, கொன்றுவிடுவதோ உங்கள் எண்ணமானால்…அதைத்தடுக்க நான் சக்தியற்றவனாகச் செய்யப்பட் டிருக்கும் இந்த நிலைமையில்…மனிதர்களில் கேடு கெட்ட மிருகங்கள், காட்டுமிராண்டிகள், என்று நான் உங்களைப்பற்றி எண்ணுவேன். உங்கள் கையால் அஞ்சவில்லை……என்றான்.

சர்வாதிகாரி தான் நின்ற இடத்திலிருந்து ஆத்தி ரத்துடன் முன்னுக்கு வந்தான், ‘குற்றமா…மகாராணி…இவனைப்போன்ற கொடியவர்களை விசாரிப்பதும் அவசியமா?…”

“எவ்விதத்தில் கொடியவன் என்பதைக் கூறுங்கள்…நிம்மதியாக நீங்கள் விதிக்கும் தண்டனையை ஏற்றுக்கொள்கிறேன்…”

“நீயும் உன் மனைவி மக்களும், தாய் தந்தையர் களும் உன்னுடைய அரண்மனையில் நிச்சிந்தையாக உறங்கிக்கொண்டிருக்கிறீர்கள்…அந்த அரண்மனைக்கு ஒரு கொடியவன் அனல் மூட்டிவிடுகிறான்…அவனுக்கு என்ன தண்டனை விதிக்கவிரும்புகிறாய்…நீயேகூறு..”

“என் குடி அடியோடு கெட விரும்புபவன் யாரா யிருப்பினும் அவனுடைய குடி, தாய் தந்தை மனைவி மக்கள் அனைவரும் அடியோடு தொலைய வேண்டும் என்று தான் விரும்புவேன். ஆனால் நான் அத்தகைய குற்றம் செய்தேனா…என்பது தான் எனக்குத் தெரிய வேண்டும்…”

“நீ…நீ அல்ல…! உன்னுடைய தந்தை…!”

அவனால் பேசமுடியவில்லை. தலையைத் தாழ்த்திக் கொண்டான்.

“ஏன் பேசாமல் இருக்கிறாய்…? ஆணவத்துடன் அகம்பாவத்துடன்… நான் என்ன குற்றம் செய்தேன் என்று கேட்டாயே ஏன் பேசாமல் இருக்கிறாய்…?. ஊருக்கு உத்தமர் என்று பெயர் பெற்ற ஒருவர்…

நாட்டிற்கு நல்லவராக வாழ்ந்த ஒருவர்…தன் பேராசைத் திட்டங்களுக்கு உதவவில்லை, எதிராளியாக வந்தார் என்பதனால்…… அவர், தன் உயிரினுமினிய அனைவருடனும் உயிருடன் வெந்து சாம்பலாகச் செய் தான் உன் தந்தை…! அதற்குப் பழிதீர்க்கும் படலத் தில் முதல் பலி…நீ…தெரிகிறதா…?”

சர்வாதிகாரி கர்ஜித்தான். அவன் பேசவில்லை. சர்வாதிகாரியினுடைய பேச்சு அவள் உள்ளத்தில் கொதித்துக்கொண்டிருந்த ஆத்திரத்திற்கு அனல் மூட்டிக்கொண்டிருந்தது. அவள் கனல்கிற உள்ளத்துடன் கூறினாள். “அவன் கண்களை அவிழ்த்துவிடுங் கள்… அவன் பேசவேண்டியதே தாவது இருந்தால் பேசட்டும்…” என்றாள்.

வீரர்கள் அவனுடைய கண்களை அவிழ்த்துவிட்ட னர். அவன் அவளைப்பார்த்தான். கண்கள் ஒளி மழுங்க மீண்டும் பார்த்தான். பார்த்துக்கொண்டே இருந்தான். அவள் தான் முகத்தைத் திருப்பிக்கொள்ள வேண்டியதாயிற்று. ” மகாராணி, உங்களுக்கு மிகவும் நன்றி…உங்களிடம் நான் என் உயிரை யாசிக்கவில்லை …மரண தண்டனையே ஆனாலும் மனத்திருப்தியுடன் ஏற்றுக்கொள்ளத் தயார்…” என்று கூறிக்கொண்டு சட்டென்று குனிந்து தரையில் முழந்தாளிட்டு யாரும் எதிர்பார்ப்பதற்கு முன்னால் அவள் காலை முத்த மிட்டான்.

அவள் உடல் புல்லரித்தது. தன்னை அறியாமல் இவனை இழுத்துச் செல்லுங்கள்…” என்று கூச்சலிட்டாள்.

10. விடுதலை

வானத்திலே நிலவு பாலொளி பூசிக்கொண்டிருந் தது. பூமியிலே காடுகளும், மலைகளும் எத்தனை விசித் திரமான பயங்கரமான சூழ்நிலைகளை உண்டாக்கி வைத்திருந்தாலும் கூட வானம் மட்டும் எங்கும் எல்லா இடத்திலும் ஒரேமாதிரி அழகிய தாய், இள நீலப்பட்டினிலே மின்னுகின்ற நட்சத்திரங்களும், ஒளி பூசும் நிலவும் உடையதாகவே இருக்கிறது. அதை அவள் கண் குளிரப்பார்த்தாள். அந்தக் கடைசி இரவு தான் தந்தையைப்பிரிந்து சென்றதும் உறங்கப் போவதன் முன் உப்பரிகை மேல் நிலவும் நட்சத்திரங் களும் நிறைந்த வானத்தைப் பார்த்துக்கொண்டு நின்றதை நினைத்துக்கொண்டாள். அவள் உள்ளத் திலே சொல்லவொண்ணாத ஏக்கமும் துக்கமும் விம்மி எழுந்தன. இன்றும் அவள் நிலவும் நட்சத்திரங்களும் நிறைந்த வானத்தைப் பார்க்கிறாள். எவ்வளவு மாறு பட்ட சூழ்நிலையில். அன்று அவளுக்கு எல்லாம் இருந் தன. இன்று …?…

இன்று …….?

அவள் உள்ளத்தில் ஏனோ வெறுமை உணர்ச்சி தோன்றியது. என்ன இருந்தாலும்… எவ்வளவு அழ கிய பெயர் அவளுக்கு சூட்டப்பட்டிருந்தாலும், அவள் …அவள் ஒரு கைதி! சர்வாதிகாரியால் ஆட்டிவைக்கப் படும் பாவை….. அவளால் அப்படித்தான் நினைக்க முடிந்தது. அப்போது அன்று காலை அவளால் மரண தண்டனை விதிக்கப்பட்ட அந்த இன்னொரு கைதியின் ஞாபகம் வந்தது. அவன் துணிவாக பேசினான். அவனுடைய முகம் கள்ளமற்ற குழந்தையினுடையதைப்போல் இருந்தது, ஆனால் அவன் ஜமீந்தாரின் மகன்… கொடிய ஜமீந்தாரின் மகன்…!!

ஏனோ அவனைப் பார்க்கவேண்டும் என்பதைப் போன்ற உணர்ச்சி அவள் உள்ளத்தில் உண்டாயிற்று. மறுநாள் காலை மரணத்தை எதிர்பார்த்துக்கொண்டு நிற்கும் அந்த இளைஞன் என்ன நினைப்பான்…என்ன தான் செய்து கொண்டிருப்பான்……..என்று பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவள் மனத்தை அலைக்கழித் தது. உடனே யாராவது பார்த்தால் என்ன நினைப் பார்கள் என்ற குறுகுறுப்பும் தோன்றியது. அவள் சிறிது நேரம் இதையும் அதையும் யோசித்துக்கொண்டிருந்தாள். அவளுக்குத் திடீரென்று நினைவு வந்தது. ஏதோ ஒரு முக்கிய காரியமாகச் செலவதாய்க்கூறிச் சர்வாதிகாரி தன் வீரர்கள் அனைவரையும் திரட்டிக் கொண்டு போயிருந்தான். மறுநாள் உதயத்திற்குள் திரும்பிவிடுவதாய்க்கூறி இருந்தான். எனவே யாரா வது காவலர்களைவிட வேறு யாரும் அங்கே இருப்பது சாத்தியமல்ல. அதனால்…

அவள் துணிவு கொண்டுவிட்டாள். கையில் மெழுகுவத்தியை எடுத்துக் கொண்டு மெதுவாக நடந்து கைதிகளை அடைத்துவைக்கும் கொட்டகைக்கு அவள் புறப்பட்டாள். வழியில் தன்னை யாராவது கவனிக்கிறார்களா என்று திரும்பித் திரும்பிப்பார்த்துக் கொண்டாள். நல்லவேளை…தோழிகள் எல்லோரும் உறங்கிப்போயிருக்கவேண்டும். யாரையுமே காணோம்…!

விளக்கைத் தன் மேலாடையால் மறைத்துப் பிடித்துக்கொண்டு அவள் மெல்ல மெல்ல நடந்தாள்.

கைதிக் கொட்டடி சந்தடியில்லாமல் இருந்தது. அவன் தன் அன்புக்குரியவர்களை நினைத்து மௌனமாகக் கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பான் என்று நினைத்தாள். அந்த நிலையில் அவன் எப்படி இருக்கிறான் என்று பார்ப்பதற்காகச் சந்தடி செய்யாமல் சாளரத்தின் வழி யாக எட்டிப்பார்த்தாள். அவள் திடுக்கிட்டாள். அங்கே அவனைக்காணோம். இரத்த வெள்ளத்தில் மூழ்கிப்போய் ஒரு மனிதன் கிடந்தான். அவன் உட லிருந்து இன்னும் ரத்தம் பொங்கிக்கொண்டிருந்தது. அவன் அவனல்ல. காவலனக இருக்கவேண்டும். மிக வேகமாக அவள் கொட்டடி யை நோக்கி நடந்தாள், கதவுகள் திறந்து கிடந்தன. வாயில் அருகே இன்னொரு மனிதனும் பிணமாகிக்கிடந்தான். அந்த நள்ளிரவிலே மரணப்பேய் அந்தப்பாழும் கானக மலைக் குகையில் கூத்தாடிக் கொண்டிருப்பதைப்போல் அவள் உணர்ந் தாள் கிடுக்டென்று அவள் உடல் நடுங்கியது. மெழுகு வத்தியைத் தூக்கிக்கொண்டு தன் அறையை நோக்கி ஓடினாள்.

வழியிலே எதன் மேலோ மோதிக்கொண்டு அவள் உருண்டு விழப்போனாள். ஆனால் வலிவான இரண்டு கைகள் அவளைப் பிடித்துக்கொண்டன. அவள் நிமிர்ந்து பார்த்தாள், அவன்…! அவள் உடல் நடுங் கிற்று. ஆனால் தன் தந்தையையும் அவருடன் அவரைச்சேர்ந்த அனைவரையும் கொன்றழித்த மாபாத கனின் மகனிடத்தில் அச்சம் கொண்டு அலறி நிற்க அவள் விரும்பவில்லை. இழந்துபோன துணிவைத் திரும்பிப்பெற முயன்றவளாய்க் கால்களை ஊன்றி நின்றாள்.

“தேவி…மன்னிக்கவேண்டும். தங்கள் உத்தி ரவை மீறி என்னை நானே விடுவித்துக்கொண்டேன். என்னை இப்படிச் செய்யத் தூண்டியது வேறு யாரும் அல்ல… தாங்களே தான்…” என்றான்.

“நானா…இல்லை. ஒருக்காலும் இல்லை…!”

“ஆமாம்… நீங்களே தான்…! கண்களை கட்டப் பட்டு நிறுத்தப்பட்டிருந்த என்னை அப்படியே என்ன செய்திருந்தாலும் செய்திருக்கலாம். அல்லது தங்கள் எதிரில் அல்லாமல் வேறு எங்காவது அந்தப்டக்கமாகக் கொண்டுபோய்க் கண்களை அவிழ்த்துவிட்டிருந்தாலும் நான் மீண்டும் உயிர் வாழவேண்டும் என்று ஆசைப் பட்டிருக்கமாட்டேன். ஆனால்…! மறுபடியும் உயிர் வாழவேண்டும் என்ற ஆசையை என் மனத்திலே தூண்டிவிட்டது…அதன் காரணமாய் என்ன செய்தும் விடுதலை அடைந்துவிடவேண்டும் என்ற தவி தவிப்பை என் உள்ளத்திலே உண்டாக்கியது…அது வேறொன்று மல்ல தங்களைக்காணும்படி என்னை அனுமதித்தது தான்…”

அவள் அவனை ஏறிட்டுப்பார்த்தாள். “நீ என் ஜென்ம வைரி…! என்னிடம் அன்போ இரக்கமோ எதிர்பார்க்கவேண்டாம்… உன்னை எதிர்த்து நிற்க இப்போதே ஓடிவிடு…” என்றாள்.

“தேவி…நான் உயிர்மேல் ஆசைப்பட்டுவிட்டேன் அதைக் காப்பாற்றிக்கொள்ளும் துணிவு எனக்கு இருக் கிறது. உங்கள் மேலும் ஆசைகொண்டுவிட்டேன். ஆசிக்கும் பொருளை அடையும் வழி எனக்குத் தெரியும்…”

அவன் திமிராகப் பேசினான் அவள் சினத்துடன் சீறினாள்: “பாதுகாவலின்றி நிற்கும் பெண்ணிடம் தகாத வார்த்தைகள் பேசுவது மனிதத்தன்மை அல்ல…சென்று விடு…”

அவன் சடக்கென்று அவள் காலடியில் அமர்ந் தான், நான் பேசியது குற்றமானால் என்னை மன்னித்துவிடு…! மன்னிக்க விருப்பமில்லையானால் என்னைக்கொன்றுவிடு…! இப்போது நான் கொலை காரன். உன் பிரஜைகளில் இரண்டு பேரைக்கொன்ற கத்தி இன்னும் என்னிடம்தான் இருக்கிறது…’ என்று சொல்லிக்கொண்டே அவன் தன் இடுப்பில் சொருகி யிருந்த கத்தியை உருவி அவள் காலடியில் வைத்தான்

அவனுடைய வீரம் அவளை மெய்நடுங்கச் செய் தது. உயிரை மதியாத அந்த இளைஞனின் போக்கு அவளுக்கு வியப்பைத்தந்தது. தன் தந்தையையும் பிறரையும் நள்ளிரவில் கொள்ளிவைத்துக் கொன்றவ னுடைய மகன் என்ற எண்ணம் மட்டும் இல்லாமல் இருந்தால் அவள் அந்தச் சமயத்தில் அவன் மேல் பாய்ந்து தழுவிக்கொண்டிருப்பாள். என்ன செய்வ தென்று புரியாமல் அவள் மௌனமாக நின்றாள்.

தேவீ…உங்களுடைய மாளிகைக்கு ஜமீந்தாரின் ஏவலர்கள் தீ மூட்டிவிட்டார்கள். உங்கள் தந்தை ஏவலர்களுடன் வெந்து சாம்பலாக நேரிட்டது என்ப வற்றைக் கேட்ட என் உள்ளம் துடிதுடிக்கிறது. அதை நினைக்க நினைக்க என் நெஞ்சு நடுங்குகிறது. தேவீ… என் தந்தை என்று சொல்லிக்கொள்ள வெட்கமாக இருக்கிறது. அந்தச் சதிகாரனுக்கு முதல் விரோதி நான் தான், நேற்றிரவு என்னை ஆத்திரம் கொண்ட கள்வர்கள் கொல்வதால் அவன் பேராசை தீரட்டும் என்று எண்ணினேன். அந்த எண்ணம் மாறிவிட்டது. நான் மடிவதால் ஒருவேளை ஜமீந்தாரின் மனம் மாற லாம். ஆனால் இந்தக் கொடுங்கோலன் சர்வாதிகாரி யிடமிருந்து நீங்கள் மீள்வது எப்படி…? உங்களை மீட்பதற்காகவே நான் உயிர் வாழத் துணிந்தேன்.

அவள் கூச்சலிட்டாள்…”அது நடைபெறாது…”

அவன் சிரித்தான், “என்னால் முடியும்…!” தேவீ மறுப்பதற்கு முன்னால் நான் உரைப்பதை கேளுங்கள்.

“நீங்கள் எனக்கு மரண தண்டனை விதித்தீர்கள். ஆனால் சர்வாதிகாரி என்னை மன்னிப்பதாய்க் கூறினான் நீங்கள் என்னை ஜென்ம வைரி என்கிறீர்கள். அவன் என்னை உயிர் நண்பனாய்க் கொள்ள முன் வந்தான். மகாராணீ….உங்கள் நிர்வாகம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள். நான் உங்களுக்கு வைரியானால் உங்கள் முன்னால் என்னைத் தூஷித்துப் பின்னால் என் னோடு உறவுகொண்டாட வரும் அவன் உங்களுக்கு என்னைவிடக் கொடிய விரோதியாக அல்லவா இருக்க வேண்டும்…?”

“சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக்கொண்டேன் ஜமீந்தாரைப் பிடிப்பதற்கு உபாயங்கள் கூறுவதாய்ச் சில பொய்யான தகவல்கள் கொடுத்தேன். அவற்றை மெய் என்று நம்பிச் சர்வாதிகாரி தன் படைகளுடன் சென்றுவிட்டான். நான் தப்பிவிட்டேன்…”

“சர்வாதிகாரி சூழ்ச்சியாக என்னையும் என் தந்தையையும் ஒரே அடியாகப்பிடித்துக்கொள்ள இந்தத் தந்திரத்தைக் கையாண்டிருக்கலாம், ஆனால் நான் அவனை ஏமாற்றிவிட்டேன்.”

“தேவீ…ஒன்றைமாத்திரம் நம்புங்கள் சர்வாதி காரியைவிட நான் தான் உங்களின் உத்தம நண்பன்… ஆம்…அதை மாத்திரம் மறந்துவிடவேண்டாம்…”

வெளியே பாய்ந்து வரும் குதிரைகளின் காலடி ஓசைகள் கேட்டுக்கொண்டிருந்தன, இப்போது அவை நெருங்கிவிட்டதை அவர்கள் நன்றாகக்கேட்க முடிந் தது. அவன் பதற்றத்துடன் கூறினான். ” தேவீ… அவர்கள் திரும்பிவிட்டார்கள். என் மேல் அளவுகடந்த ஆத்திரத்துடன் வந்திருப்பார்கள். நான் தங்கள் அறையில் அடைக்கலம் புகுகிறேன். விருப்பமிருந் தால் என்னைக்காப்பாற்றுங்கள்…” என்று கூறிவிட்டு ஒரே பாய்ச்சலில் மேலே ஓடிச்சென்று அவளுடைய அறைக்குள் புகுந்து கொண்டான்.

அவள் மனம் அடியோடு குழம்பிவிட்டது. சர் வாதிகாரி அவனோடு மறைவில் உறவுகொண்டாட முனைந்தது உண்மைதானா…அது சரிதானா என்பதைப் பற்றியே அவள் யோசித்துக்கொண்டு நின்றாள். தன் அறையை நோக்கி நடந்தாள். வாயில்படிவரை வந்த பின் அதற்குமேல் செல்ல அவளுக்குத் துணிவு வர வில்லை. கீழே பரபரப்புடன் அங்கும் இங்கும் ஆட்கள் அந்தப் புதிய கைதியைத் தேடி ஓடும் குழப்பமும் பரபரப்பும் கேட்டன, தோழிகளின் அறைகள் கூடச் சோதிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. அவளுடைய அறையை நோக்கி யாரோ வரும் காலடி ஓசைகள் கேட்டன, அவள் உடல் நடுங்கியது. அறைக்குள் துள்ளி ஓடினாள்.

11. குழப்பம்…!

சர்வாதிகாரி அறைக்குள் நுழைந்தபோது அவள் கன்னத்தின்மேல் கைவைத்து உட்கார்ந்துகொண்டிருந் தாள், அவள் உடலில் ஏற்பட்ட இலேசான நடுக் கத்தை அவள் சமாளித்துக்கொண்டாள். தன்னை மறந்து தன் அறையை சுற்றும் முற்றும் ஒருமுறை பார்த்துக்கொண்டாள். அவன் எங்கு தான் சென்று மறைந்தானோ..? எங்குமே காணப்படவில்லை.

“மகாராணி உறங்கவே இல்லைபோல் இருக் கிறது…” என்றான் சர்வாதிகாரி. ” ஆமாம்…” என் றாள் அவளை அறியாமல். உடனே தான் தடுமாறி விடக்கூடாதென்று மனதை உறுதியாக நிலை நிறுத்திக் கொண்டான். தன் முகத்தில் கலவரச் சாயை பரவு வதை மறைப்பதற்காகக் கண்களைக் கசக்குவதுபோல் பாசாங்கு செய்தாள்.

“ஏன்…?” சர்வாதிகாரி நிதானமாகக் கேட்டான்.

அவ்வளவு பரபரப்புக்கிடையிலும் அவன் நிதான மாகப் பேசியது தான் அவளையும் நிதானமாகப் பதில் கூறும் நிலையில் வைத்தது.

“அநியாயமாக ஒரு உயிரைக் கொல்ல நாம் யார்… என்ற சிந்தனை என் மூளையைக் குழப்பிவிட்டது…”

“அநியாயமாக அல்ல…நியாயமாகத்தான்…எத்தனையோ ஏழைகளை அவர்கள் நித்தநித்தம் கொன்று கொண்டிருக்கிறார்கள். ஏன் உன் தந்தையையே…”

“வேண்டாம் அதைச் சொல்லிக்காட்டவேண்டாம் என் மனம் வேதனை அடைகிறது.”

சிறிது நேரம் அவள் மௌனமாக உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவனும் பேசவில்லை. பிறகு. “கண்ணம்மா… அந்தக் கைதி அநியாயமாக மரண தண்டனை அடைவதைப்பற்றி இனி நீ கவலைப்பட வேண்டாம். அவன் தப்பி ஓடிவிட்டான்..” என்றான்.

“ஓடிவிட்டானா…?”

அவள் குரலில் பரபரப்பு ஏதும் இல்லை. அவன் அதைக் கவனித்தான். “ஏன்…நீ அதைக்குறித்து மகிழ்ச்சி அடைவாய் போலிருக்கிறதே…”

“இல்லை…எனக்கு அதைக்குறித்து மகிழ்ச்சியோ துக்கமோ எதுவும் இல்லை…ஆனால் அவனால் எப்படித் தப்பிச்செல்ல முடிந்தது என்பதைத்தான் கேட்கிறேன்..”

“அவன் என்னை ஏமாற்றிவிட்டான். நல்லவன் போல் நடித்தான் நயவஞ்சகன்… உள்ளதைக்கூறு வதாய் உறுதி கூறினான் உலுத்தன். அவன் வார்த்தை களை மெய் என்று நம்பினோன், பொய்யாக்கிவிட்டான்…”

“எதிரியை நம்பி ஏமாறுவதா…? ஒரு சர்வாதி காரியிடம் முதன் முதலாக இந்த வார்த்தைகளைக் கேட்கிறேன்…”

“கண்ணம்மா…அவன் எத்தனை ஜென்மம் எடுத் தாலும் என்னிடமிருந்து தப்பமுடியாது. அவன் என்னைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. எனக்கு வேலை இருக்கிறது நான் வருகிறேன்.”

பேசிக்கொண்டிருந்த சமயத்தில் அவனுடைய கண்கள் அந்த அறை முழுவதையும் துருவித் துருவிப் பார்த்துக்கொண்டிருந்ததையும் அவள் கவனித்தாள். அதுமாத்திரம் அல்ல, அவன் அவளையும் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தான். அவளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது புரியவில்லை. அவளுடைய ஜென்ம வைரியாகக் கருதிய அந்த இளைஞன் அவளுடைய அறையில் பதுங்கி இருக்கிறான், காட்டிக்கொடுத்து விட்டால் ஒருகணத்தில் அவனைச் சித்திரவதை செய்து சின்னாபின்னமாகக் கிழித்துவிடுவார்கள். ஆனால் அவள் அப்போது அதை விரும்பவில்லை. ஆனால் அவன், இருக்கும் அந்த அறையில் இருக்கவும் அவளுக்கு விருப்பம் இல்லை. அவள் வெளியே வந்து அதிகாலை யில் மலர்ந்து கொண்டிருக்கும் வானத்தைப் பார்த்தாள். சில்லென்ற காற்று வீச ஆரம்பித்திருந்தது, காற்றில் ஏதோ ஒருவித மணம் கலந்திருந்தது, வானத் தின் கருநீல விளம்பின் மேல் இளம் கதிர்கள் ஒளி பூச ஆரம்பித்துக்கொண்டிருந்தன. அவள் கண்களிலே கண்ணீர் துளிர்த்தது. பெருமூச்சுடன் அந்த அழகுக் காட்சியைப் பார்த்துக்கொண்டே நின்று கொண்டிருந்தாள்.

நெடுநேரம் அவள் அங்கேயே நின்று கொண்டிருந் தாள். பொழுது நன்றாக விடிந்துவிட்டது. காட்டுப் பறவைகளின் ஆரவாரம் கானகமெங்கும் எதிரொலித் துக்கொண்டிருந்தது. தோழிகள் அவளைத்தேடிக் கொண்டு வந்தனர். அவள் விருப்பமில்லாமலேயே அவர்கள் பின்னால் நடந்தாள்…அவள் மனதில் கொந் தளித்துக்கொண்டிருந்த குழப்பத்திலிருந்து விடுபட அவளுக்கு வழி தோன்றவில்லை.

12. வைரிக்கு விருந்து..!

அன்று பகல் முழுவதும் அவள் அவனைக்காணவே முடியவில்லை. யாரும் இல்லாதபோது அவளே தன் அறையைச் சோதனை செய்து பார்த்தாள். அவன் எங்குதான் எப்படித்தான் சென்று மறைந்தானோ…. எங்குமே காணவில்லை.

பொழுது மறைந்தது. தோழிகள் மெழுகுவத்தி களைக்கொண்டு வந்து வைத்துவிட்டுச் சென்றனர். அவள் வெட்ட வெளியைப் பார்த்துக்கொண்டு நின்று கொண்டிருந்தாள். களைத்துப்போய்ப் படுக்கையின் மேல் வந்து அமர்ந்தாள். ஒரு குரல்மெதுவாக “தேவீ… எனக்கு உணவுவேண்டும்…” என்று கூறியது. அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். படுக்கையை உதறி னாள் கட்டிலின் கீழே மூலை முடுக்குகளில் எல்லாம் தேடினாள். எங்குமே அவன் காணப்படவில்லை.

அவன் துரோகி. அவளுடைய ஜென்ம வைரி….! அவள் உடல் நடுங்கியது. ஆனால் தோழிகள் அவ ளுக்கு உணவு கொண்டு வந்தபோது அவள் தயங்கி னாள். ஆனால் எப்போதும் தனக்காக வைக்கப்படுப் அளவிற்குமேல் வைக்கும்படி அவள் கூறவில்லை. அகாரணமாக சந்தேகத்திற்கு இடம் கொடுக்க அவள் விரும்பவில்லை. அவள் உண்ணவும் இல்லை. அந்த அறையில் இருக்க அவளுக்குப் பிடிக்கவும் இல்லை. வாயில் அருகிலேயே வந்து நின்றுக்கொண்டிருந்தாள்.

மெல்ல மெல்ல இரவு நகர்ந்துக்கொண்டிருந்தது. சர்வாதிகாரி அதன் பிறகு வரவில்லை. வேறு ஆட்க ளும் யாரும் அவள் அறைக்கு வரவில்லை, கீழே தோழி கள் படுக்கைக்கு செல்வதை அவள் கவனித்தாள்.

அவளுக்குமட்டும் உறக்கம் வரவில்லை. பேசாமல் நின்று கொண்டேயிருந்தாள்.

நள்ளிரவை நெருங்கும் சமயம் அவள் அறைக் குள் நடமாட்டம் தெரிந்தது. அவள் திரும்பிப் பார்த் தாள். அவன்…! இந்நேரம் அவன் ஆவி உருவில் தான் இருந்திருக்கவேண்டும். அவள் உடல் நடுங் கியது. அவன் மெதுவாக அவள் அருகில் வந்தான். “தேவீ…! என்னால் உங்களுக்கு எவ்விதத் தீங்கும் நேரிடாது, தயவுசெய்து உள்ளே வாருங்கள்” என்றான். அவள் குழந்தைப் போல் அவன் பின்னால் நடந்தாள். கதவை அடைத்துவிட்டு…ஒரு கணம் அவள் முகத்தைப் பார்த்தபின்… “தாங்கள் உண்ண வில்லை போலிருக்கிறதே” என்றான்.

“எனக்குப் பசிக்கவில்லை…”

“அப்படியானால் எனக்கும் பசிக்கவில்லை…”

சிறு மௌனத்திற்குப் பின் அவன் மீண்டும் கூறினான். “தேவீ…உங்கள் தந்தையை உயிருடன் எரித்துக் கொன்ற கொடும்பாவியின் மகன் நான். நீங் கள் என்னைக் காப்பாற்றி விட்டீர்கள். சர்வாதிகாரி யிடம் ஒரு வார்த்தை கூறியிருந்தீர்களானால் போதும் என்னை அவன் அணு அணுவாகச் சித்ரவதை செய்திருப்பான்.

“தேவி…நான் ஒரு கொடியவனின் மகன் தான். ஆனால் நானும் கொடியவன் அல்ல. நான் ஒரு துரோ கியின் மகன் தான். ஆனால் துரோகி அல்ல. ஆனால் தேவீ… இந்த சர்வாதிகாரி ஒரு கொடும் துரோகி. ஏன் நீங்கள் என் கண் கட்டை அவிழ்க்கும்படி கட்டளை யிட்டவுடன் இவன் திடுக்கிட்டான். நான் அப்போதே சந்தேகித்தேன், ஆனால் இன்று காலை இவன் தங்கள் அறையில் பேசிக் கொண்டிருந்ததைக் கவனித்தவுடன் என் சந்தேகம் பறந்து விட்டது.

“ஏழைகளுக்காக மனம் கனிந்து அவர்கள் துயரத்தைத் தீர்ப்பதற்காக என்னென்னமோ செய்யப் போவதாய் கூறினான் அல்லவா…? ஆனால் உண்மை யில் ஏழைகளின் பரம வைரி இவன் தான். ஜனங்களை ஏமாற்றுவதும், கொள்ளையடிப்பதும், கொலை செய்வ துமே இவன் தொழில். நல்லவனைப் போல் நடிக்கும் இவன் ஒரு பரம சண்டாளன். உங்களுக்கு இவற்றை நான் நேரிலேயே நீரூபித்து வைக்கிறேன்…” என்றான்.

“சர்வாதிகாரி இங்கே வந்தபோது. நீங்கள் எங்கே இருந்தீர்கள்…?”

“உங்கள் கட்டிலுக்கு கீழேதான் இருந்தேன். ஆனால் அதன் கட்டைகளைப் பிடித்துக்கொண்டு படுக் கைக்குச் சமமாகத் தொங்கிக் கொண்டிருந்ததனால் தான் நான் யார் கண்ணிலும் படவில்லை.”

இன்று பூராவுமா…?”

“இல்லை. தங்கள் கட்டிலுக்குக் கீழே ஒரு ரகசிய வழி இருப்பதை நான் கண்டுபிடித்தேன். பகல் பொழுதில் இந்த அறைக்குள் இருக்க முடியாதென்ப தனால் அதை உபயோகித்துக்கொள்ள நினைத்தேன். ஆனால் அது கானகத்திற்கு வெளியே சபரி நதி எல்லை யில் உள்ள ஒரு கோட்டைக்குக் கொண்டுபோய்விட் டது. அங்கே சர்வாதிகாரியின் ஆட்கள் காவல் புரி கின்றனர். சிறிது ஏமாந்திருந்தால் அவர்கள கையில் அகப்பட்டுக் கொண்டிருப்பேன். ஆனால் நான் தப்பித்துக் கொண்டேன். அதனாலேயே மீண்டும் இங்கு வர நேர்ந்தது.

“இன்று பகல் முழுவதும் நீங்கள் ஒன்றுமே உண்ண வில்லையா…?”

“இல்லை …”

“அப்படியானால் சாப்பிடுங்கள்….”

“நீங்கள் சாப்பிட்டால் நானும் சாப்பிடுகிறேன்…”

அவள் தனக்காக வந்திருந்த உணவை இரண்டு இலைகளில் பரிமாறினாள். அவன் அவளே முதலில் சாப்பிட ஆரம்பிக்கவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தான். ஒரு கவள உணவை அவள் தன் மெல்லிய விரல்களால் வாயில் இடுவதைக் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டே “தேவீ… நான் கூறுவதை எல் லாம் நீங்கள் நம்புகிறீர்கள். அது எனக்கு அளவு கடந்த மனவேதனையை அளிக்கிறது. நான் எப்பேர் பட்ட கொடும் துரோகிக்கு மகனாய்ப் பிறந்திருக் இறேன் என்பதை நினைத்துக்கொண்டால் என் உள்ளமே துடிதுடிக்கிறது. தேவீ…இந்த சர்வாதிகாரி யார் என்பதை நான் தங்களுக்கு நிரூபிக்கவேண்டும். அவனும் என் தந்தையைப் போல் ஒரு கொடியவன் தான் என்பதையும் மெய்ப்பிக்கவேண்டும். உண்மை யாகவும் நேர்மையாகவும் உலகத்திற்காக உயிர் வாழும் தன்மையை அடைய நாம் எவ்வளவோ தியாகம் செய்ய வேண்டும். நம்முடைய சொத்துக்களையும் மாத் திரம் இழக்கத் தயாராகிவிட்டாலும் போதாது. நம் முடைய சொந்த விருப்பு வெறுப்புக்களையும், மான அவமானங்களையும் கூடத் தியாகம் செய்துவிட வேண்டும். நான் மனிதனாக வாழவேண்டும் என்று விரும்புகிறேன். அதனால் உங்களுக்கு இவற்றை விளங்க வைக்கிறேன்” என்றான்.

13. எல்லைகளில்…!

சாப்பிட்டவுடன் அவன் புறப்பட்டுவிட்டான். அந்த இரவில்தான் சபரிக்கோட்டை வீரர்களிட மிருந்து தப்பமுடியும் என்று கூறினான். உண்மை யாகவே அவளுக்கு அவனிடம் அளவுகடந்த இரக்கம் உண்டாகியிருந்தது. நச்சரவை வெறுப்பதைவிடக் கொடுமையாக வெறுக்கப்பட்ட ஒருவனிடம் தனக்கு எப்படி இவ்வளவு பரிவுவந்தது என்பதை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை, நடுக்கத்துடன், ” நீங் கள் எப்படி அவர்களிடமி ருந்து தப்புவீர்கள்…” என்று கேட்டாள்.

“தேவீ…அதைப்பற்றித் தாங்கள் கவலைப்பட வேண்டாம்…அது என்னால் முடியும் என்று கூறிக் கொண்டே அவன் கட்டிலின் அடியில் சென்று ஒரு கடப்பைக் கல்லைப் பிடித்து உயர்த்தினான். அதை அவள் கவனித்தாள். தளம் முழுவதும் கடப்பைக் கற்களால் பாவப்பட்டிருந்த தால் மற்ற கற்களிலிருந்து அது பிரித்துணரப்பட முடியாததாக இருந்தது. அதன் கீழே அவன் மெதுவாக இறங்கினான். படிப் படியாக இறங்கிக்கீழே சென்று மறையும் வரை அவள் பார்த்துக்கொண்டிருந்தாள், மறுபடியும் கடப்பைக் கல் தளத்தில் பதிந்து சமதரையாகிவிட்டது. அவள் சிறிது நேரம் அதைப் பார்த்துக்கொண்டே நின்றாள். பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் கட்டிலின் மேல் உட்கார்ந்து யோசிக்கத் தொடங்கிவிட்டாள்.

அவள் நன்றாக உணர்ந்தாள், இந்தச்சிறிது நேரத்தில் அவன் அவளுடைய உள்ளத்தைக்கொள்ளை யடித்துக்கொண்டு போய்விட்டான். அவனுக்காக

இப்போது அவள் அஞ்சினாள், நடுங்கினாள், அழுகாத துயரத்திலே ஆழ்ந்தாள், ஆபத்து ஏதுமின்றி அவன் போய்ச்சேரவேண்டுமே என்று அவள் உள்ளம் தவி தவித்துக்கொண்டிருந்தது. ஆனால் ஒரு நாளைக்கு முன்னால் அவள் அவனுக்கு மரண தண்டனை விதித் தாள். அவனுடைய அழகிய தலை, அழகிய உடலி லிருந்து வாளால் நறுக்கப்படவேண்டும் என்று தீர்ப் பளித்தாள். அவன் அவளுடைய தந்தையை உயிருடன் எரித்துக்கொன்றவனின் மகன்…!

உணர்ச்சிகள் அவளை அலைக்கழித்தன. நட்சத் திரங்கள் நிறைந்த வானத்தையும் நறுமணம் நிறைந்த காற்றையும் அவள் அனுபவித்துக்கொண்டிருந்தும் அவள் உள்ளம் வெறிச்சென்று கிடந்தது. ஆனால் இடை இடையே அவள் மனக் கண் எதிரே தோன்றிய ஒரு முகத்தின் சாயை அவளைத் திடுக்கிட்டுத்திடுக் கிட்டு நடு நடுங்கச் செய்து கொண்டே இருந்தது.

அது சர்வாதிகாரியினுடைய முகம்.

முதல் பாகம் முற்றிற்று.

– கானகத்திலே காதல்!, முதற் பதிப்பு: பிப்ரவரி 1951, ஜனக்குரல் காரியாலயம், துறையூர், திருச்சி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *