குலசேகர பாண்டிய மன்னர்கள் மதுரை தலைமையிடமாகக் கொண்டு மக்கள் நலனில் மிகுந்த அக்கறையுடன் ஆட்சிப் புரிந்து வந்தனர். இதில் முதலாம் குலசேகர பாண்டியன் மக்களின் நல்வாழ்வே முக்கியமானது என அறிந்து, பல வல்லுநர்கள் உதவியுடன் சிறந்த சட்ட திட்டங்களை இயற்றினார்..
அந்த சட்டங்களின் வழியாக குலசேகர பாண்டிய மன்னர்களின் ஆட்சி நூறு ஆண்டுகளுக்கு மேல் சிறப்புடன் நடந்த வேளையில் ..
நான்காம் குலசேகர பாண்டிய மன்னனின் ஆட்சியில் ஒரு நாள்…
அவை கூட்டத்தில் வருவாய் செலவீனங்கள், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் நாட்டு நிலவரங்கள் பற்றி பேசிய பின்..
“அவையின் இன்றைய விவாதங்கள் முடிந்தனவா? கூட்டத்தை நிறைவு செய்யலாமா? ” என்றார் மன்னர்.
“மன்னா, ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.” என்று குறுக்கிட்டார் சேனாதிபதி.
“என்ன வழக்கு சேனாதிபதியாரே? .”
சேனாதிபதியின் தலை அசைவைப் பார்த்து அங்கு அழைத்து வரப்பட்டார்
விபுனன் என்ற பொற்கொல்லர்..
“இங்கு நிற்கும் பொற்கொல்லர், தங்க ஆபரணங்கள் செய்து அண்டை நாடுகளில் விற்பனை செய்துள்ளார்.. இது நம் நாட்டுச் சட்டப்படி குற்றமாகும்” என்றார் சேனாதிபதி.
“தங்களது பொருட்களை எல்லா
இடங்களிலும் சென்று விற்க அவரவருக்கு உரிமை உள்ளது அல்லவா?” என்றார் நிதி அமைச்சர்..
“நிச்சயம் உள்ளது .. ஆனால் மற்ற இராஜியங்களில் விற்பனை செய்ய நமது அரண்மனை நிர்வாகத்திடம்
அனுமதி பெற்றிருக்க வேண்டும்.. இல்லையென்றால் நம் நாட்டிலிருந்து யார் வேண்டுமானாலும் எதையும் வெளியில் எடுத்துச் செல்ல ஏதுவாகிவிடும்” என்றார் சட்ட அமைச்சர்.
“இந்த குற்றத்திற்கு என்ன தண்டனை?” என்ற மன்னனிடம்
“இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை” என்றார் சட்ட அமைச்சர்.
விபுனனை நோக்கி, “நீங்கள் செய்தது சட்டப்படி குற்றம், இதற்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்?” என்றார் மன்னர்.
“மன்னிக்கவும் மன்னா, அரசை ஏமாற்றும் எண்ணம் எனக்கில்லை. நான் ஈட்டிய லாபத்தை மக்களுக்கு பகிரவே அரண்மனைக்கு வரி செலுத்த வந்தேன்.
அப்பொழுதுதான் என்னை கைது செய்து அழைத்து வந்தார்கள். மேலும் இது போன்ற சட்டம் இருப்பதே மக்கள் யாருக்கும் தெரியாது மன்னா.”
என்றார் விபுனன்.
“என்ன சொன்னாலும் நீ செய்தது குற்றமே அதற்கான தண்டனை நீ அனுபவிக்க வேண்டும்” என்றார் சட்ட அமைச்சர்.
மன்னர் நீண்ட யோசனையில் இருக்க, அவை சற்றே அமைதியாக இருந்தது.
சிறிது நிமிடங்களில் “அமைச்சரே, விபுனன் சட்டத்தை மீறி செயல்படவில்லை.. சட்டம் தெரியாமல் நடந்திருக்கின்றார். அது அவருடைய குற்றமில்லை அதனால் அவரை விடுதலை செய்யலாம்” என்று சொல்லி விபுனனை அனுப்பி வைத்தார்..
விபுனன் மன்னனை வணங்கி விடைபெற்றார்.. அதன்பின் அமைச்சர்களிடம் மன்னர்,
“மக்களின் நலனுக்காக பல வல்லுநர்கள் இயற்றிய அரசியல் நிர்ணயங்கள் மற்றும் சட்டங்கள் யாவும் அவர்களுக்கு சென்று சேரவில்லை. தாங்கள் வாழும் நாட்டின் சட்டங்களை மக்கள் தெரிந்துகொண்டால் தான் அதன் படி நடந்து சிறந்த குடிமக்களாக விளங்குவார்கள்…
ஆகையால் பாடல்கள், நாடகங்கள் வாயிலாக நம்ம நாட்டுச் சட்டங்களை மக்களிடம் எடுத்துரையுங்கள். மேலும் பாடசாலைகள் அனைத்திலும்
நாட்டின் சட்டம் பற்றிய வகுப்பு இன்று முதல் கட்டயமாக்கபடுகிறது. ” என்று கூறி மன்னர் அன்றைய அவையை நிறைவு செய்தார்..
அடுத்த சில வருடங்களில், மக்கள் நாட்டின் சட்ட திட்டங்களை புரிந்து அதன்படி நடந்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்..
நம் நாட்டின் சட்டங்கள் யாவும் மக்கள் அனைவருக்கும் சென்றுசேர வேண்டும் என்ற ஆவலுடன்…