வையன்னா கானா

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 28, 2017
பார்வையிட்டோர்: 24,338 
 
 

(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நிக்ஸன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது நடந்ததென்று ஒரு கதை சொல்வார்கள்.

பிரான்ஸ் தேசத்திலிருந்து மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு சமையல் கலைஞரை வெள்ளை மாளிகைக்கு நியமித்தார்கள். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து பல தலைவர்களும் வருவார்கள். விதம் விதமான விருந்துகள் எல்லாம் அங்கே தயார் பண்ண வேண்டும். ஒரு உலகம் புகழும் சமையல் கலைஞர் அவர்களுக்குத் தேவை தானே!

இவர் வெறும் சம்பளத்திற்காக வேலை செய்பவர் அல்ல. சமையல் கலை அவருடைய மூச்சு. தினமும் அதைப் பற்றியே சிந்திப்பார்; ஆராய்ச்சிகள் செய்வார்.

உன்னதமான ரஸனை அவரிடம் இருந்தது. அவருடைய நாவின் சுவையுணர்வோ வெகு நுட்பமானது. அல்லாவிட்டால் உலகம் புகழும் சமையல் கலைஞராக இருக்க முடியுமா?

ஒரு முறை ஜனாதிபதி ஒரு விஷேச விருந்து கொடுத்தார். அன்று இவர் பிரான்ஸ் தேசத்திலிருந்து பிரத்தியேகமாக தருவிக்கப்பட்ட ஒரு அபூர்வமான மீன் வகையில் Filet de sole Normande என்ற ஒரு உணவுப் பதார்த்தம் தயார் செய்தார். அது அவர் எதிர்பார்த்ததற்கும் மேலாக நன்றாகவே அமைந்திருந்தது.

ஜனாதிபதி அதைச் சாப்பிடும்போது ‘டொமாடோ கெச்சப்’பை எடுத்து அதன் தலையில் ஊற்றி விட்டாராம். சமையல்காரர் நிலை குலைந்து போனர்; அவரால் தன் கண்களையே நம்ப முடியவில்லை.

சுவையறியாத ஒரு எஜமானருக்கு பணி செய்யும் ஒரு உன்னதமான சமையல்காரரின் வருத்தம் அவரைத் தவிர வேறு யாருக்கு புரியப் போகிறது. பதறிவிட்டார். அவரால் அந்த வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அன்றிரவே அவர் தன் வேலையைத் துறந்து விட்டாராம்.

சமையல்காரரென்ன? ஒரு மனைவிக்கு கிடைக்க கூடிய மிகப் பெரிய தண்டனை, நாக்கு ருசி இல்லாத ஒருத்தன் அவளுக்கு கணவனான வாய்ப்பது தான். அவள் என்ன ஆர்வமாகச் சமைத்திருப்பாள். இவன் கவளம் கவளமாக வாய்க்குள்ளே திணித்துக் கொண்டிருக்கிறான். “ஆஹா” என்று ஒரு வார்த்தை சொல்ல அவனுக்குத் தெரியவில்லை. அதை விட நரகம் வேறு என்ன வேண்டும் அவளுக்கு.

சங்கடப்பாடல்களில் ஒன்று. இளம் மனைவி காந்தள் போன்ற மெல்லிய விரல்களால் தயில் பிசைகிறாள். அவளுடைய பட்டு இடையில் இருந்து நழுவுகிறது; புகை கண்களை எரிக்கிறது; கண்­ரில் கண்மையெல்லாம் கரைகிறது. புளிப்பாகு செய்கிறாள் அவள். கணவன் அதை உண்ணும் போது “ஆஹா, இனிது” என்று கூறுகிறான். அவள் உள்ளமெல்லாம் புளகாங்கிதம் அடைகிறது. சமைக்கும் போது அவள் பட்ட இன்னல்கள் எல்லாம் ஒரு கணத்தில் காற்றிலே கரைந்து விடுகிறது.


நான் ஆபிரிக்காவில் வேலை பார்த்த போது அங்கே எங்கள் ஊர்க்காரர் ஒருத்தர் பழக்கமானார். அவர் தனிமையில் இருந்ததால் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து உணவு கொள்வார்.

ஒரு நாள் என் மனைவிக்கு ஒரு பலாக்காய் கிடைத்தது. அந்த ஊரில் பலாமரமே கிடையாது. எங்கேயோ தப்பித் தவறி ஒரு பலாமரம் இவள் கண்ணில் பட்டு விட்டது. அதிலே பிஞ்சுக்காய் ஒன்றை இவள் கண் வைத்து அது சரியான பருவம் அடைந்ததும் அதைப் பிடுங்கி, நறுக்கி ஒரு கறி வைத்தாள். எவ்வவும் பலாக்காய் கறி என்றால் அதனுடன் ஒத்துப் போக ஒரு ரசமும் இருக்கும்; துவரம் பருப்பு ரசம்.

என் மனைவி மிகவும் பக்குவமாக இதைச் செய்தாள். நண்பரும் வந்தார். நாங்கள் இரண்டு பேரும் சாப்பிட்டோம். தேனாமிர்தமாக இருந்தது. ஆனால் நண்பர் முகத்திலே ஒருவித மாற்றமும் இல்லை. என்ன சாப்பிட்டோமென்று கூட அவருக்கு பிரக்ஞை இல்லை. மனைவியின் முகம் கூம்பிவிட்டது.

பிறகு என் மனைவி சொன்னாள்; “இந்த மனுசனுக்கு சாப்பாடும் ஒண்டுதான், புல்லும் ஒண்டு தான்.” அவளுடைய மனம் அப்படி வெறுத்துப் போயிற்று.


இந்த ரசனை என்பது உணவுவகையில் மாத்திரம் தான் என்றில்லை; எல்லா விஷயத்திலுமே பொருந்தும். எங்கள் தலைமுறையில் நாங்கள் கண்ட மிகப் பெரிய ரஸ’கர் டி.கே.சி. தான். நான் அவரைப் பற்றி அறிந்தது மற்றவர்கள் சொன்னதும், புத்தகங்களில் படித்ததும் தான். அவர் உணவு வகைகளையும், வாழ்க்கையையும், கவிதைகளையும் அப்படி ரசித்தார். ரஸ’கத் தன்மையின் சிகரமென்று அவரைச் சொல்லலாம்.

“ராமனைக் கெடுத்தாள் கைகேயி. கம்பனைக் கெடுத்தார் டி.கேசி.”

என்று புலவர் கூட்டம் அவரை வைது கொண்டு திரிந்த காலம் ஒன்று இருந்தது. ஆயிரம் ஆயிரமான கம்பன் பாட்டுகளிலே ‘இடைச் செருகல்’ எல்லாவற்றையும் உருவி உருவி ‘இது கம்பன் பாட்டு அல்ல’, என்று ஆணித்தரமாகச் சொல்லி நிராகரித்து விட்டாரே! இது எப்படி கம்பனின் கவித்துவ முத்திரையைச் சொல்வதா அன்றி டி.கே.சி.யின் நுண்ணிணு ரஸ’கத்தன்மையைச் சொல்வதா?

எழுத்தாளர்களில் சிலருடைய முத்திரையும் மிக ஆழமாக விழுந்திருக்கும்.

“என்னமோ கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே! இது தான் ஐயா, பொன்னகரம்! “என்று முடிகிறது கதை.

இதை எங்கே கொண்டு போய் ஒளித்து வைத்தாலும் தெரிகிறதே இது ‘புதுமைப்பித்தனுடைய வரிகள்’ என்று. அது எப்படி? அவருடைய முத்திரை அப்படிப்பட்டது.

நுண்ணிய ரஸ’கத் தன்மையென்பது இலக்கியத்துக்கும், கவிதைகளுக்கும் சமையல் கலைக்கும் மட்டும்தான் என்றில்லை. அந்த சுவையுணர்வு நுட்பமானதாக இருப்பின் அது எங்கேயிருந்தாலும் வணக்கத்துக்கு உரியது தான். ஆபிரிக்காவில் எனக்கு ஏற்பட்ட இரண்டு அனுபவங்கள் இதற்குச் சாட்சி.

மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ‘மமியோகோ’ என்னும் ஹோட்டல் ஒன்றில் நாங்கள் நாலு பேரும் தங்கியிருக்கிறோம். அதிலே ஒருத்தர் ஆபிரிக்கர்; அரசாங்கத்திலே மிக உயர்ந்த பதவி வகிப்பர்; பணம் அவருக்கு தண்­ர் பட்டபாடு.

எங்கள் எல்லோருக்கும் ‘என்ன, என்ன பானம் வேண்டும்’ என்று கேட்டு ஹோட்டல் சிப்பந்தியிடம் ‘ஓடர்’ கொடுக்கிறார். தனக்கு அவர் வழக்கமாகக் குடிக்கும் ‘ராயல் சல்யூட்’ என்ற மிக உயர்ந்த ரக விஸ்கியை ஓடர் பண்ணுகிறார். சிப்பந்தியும் சிறிது நேரத்தில் கொண்டு வந்து வைத்து விட்டுப் போகிறான்.

நாங்கள் எல்லோரும் எங்கள் பானங்களை அருந்துகிறோம். ஆனால் நண்பரோ தன்னுடைய கிளாஸை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தார். அருந்தவில்லை. பிறகு சிறிது நேரம் கழித்து ஏதோ முடிவுக்கு வந்தவர் போல அந்தப் பானத்தைக் கையிலெடுத்து சிறிது நேரம் உற்றுப் பார்த்தார்; மூக்கருகே கொண்டு போய் முகர்ந்து விட்டு கைதட்டி அந்தச் சிப்பந்தியை அழைத்தார்.

தன் பையிலிருந்து ஒரு 50 ‘பவுண்’ தாளை எடுத்து அவன் கையிலே கொடுத்துச் சொன்னார்: “எனக்கு இது ரொம்பவும் பிடித்து விட்டது. இதை ஊற்றிய போத்தலில் இருக்கும் மீதியெல்லாத்தையும் நான் அப்படியே வாங்குகிறேன்; கொண்டா?” நாங்கள் எல்லாம் பேச்சை நிறுத்திவிட்டு இந்த அதிசயத்தை கவனித்து கொண்டு இருந்தோம்.

ஆபிரிக்காவில் எல்லாம் காலில் விழும் பழக்கம் கிடையாது. கிறிஸ்தவர்கள் கணிசமாக இருக்கும் நாடு என்ற படியால் முழங்காலில் இருந்து பழக்கம் புழக்கத்தில் இருந்தது.

சிறிது நேரம் கழித்து அந்தச் சிப்பந்தி ஓடோடி வந்து இவர் முன்னால் முழங்காலில் மண்டியிட்டு உட்கார்ந்தான். “மாஸ்ட, மாஸ்ட, மன்னித்து விடுங்கள், மன்னித்து விடுங்கள்” என்று மன்றாடியபடியே இருந்தான். இந்தக் கூத்தை நாங்கள் எல்லோரும் பார்த்த படி இருந்தோம். எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. பின்பு நண்பர் நடந்த விபரங்களை கூறிய போது தான் புரிந்தது.

அந்த ஹோட்டலில் ‘ராயல் சல்யூட்’ விஸ்கி கிடையாது. சிப்பந்தி சாதாரண விஸ்கியைத்தான் அவருக்கு கொண்டு வந்து தந்திருக்கிறான். நண்பருக்கு ஐயம், ஆனாலும் தெளிவு படுத்தும் விதம் தான் தெரியவில்லை. இவர் சமயோசிதமாக ‘முழுப் போத்தலையும் கொண்டுவா, இந்த ‘காசு’ என்றதும் அவன் வெருண்டு விட்டான். காலில் விழுந்து மன்னிப்பும் கேட்டுக் கொண்டான்.

இதிலே விசேஷம் என்னவென்றால் அந்த விஸ்கியின் நிறத்தைப் பார்த்தே நண்பருக்கு ஓரளவு ஐயம் இருந்தது. அதை நிட்சயிக்க மணந்தும் பார்த்தார்; அவ்வளவு தான். அதைச் சுவைத்து தன் வாயை அவர் அசுத்தப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை; தேவையுமில்லை.

விஸ்கி குடித்தவர்களுக்கு இந்த சுவை நுட்பம் இலகுவாக புலப்படும். ஒரு விஸ்கிக்கும் இன்னொரு உயர் சாதி விஸ்கிக்கும் உள்ள வித்தியாசம் ஒரு நூலிழைதான். இவரோ அதைச் சுவைக்காமலே பார்த்த மாத்திரத்தில் சொல்லிவிட்டாரே. அந்த ரஸ’கத் தன்மையை என்னவென்று சொல்வது.

அடுத்த சம்பவம் நடந்தது சுடானில். இதுவும் குடி சம்பந்தமானது தான். அங்கேயெல்லாம் குடிவகைகளுக்கு தடையுத்தரவு; ஆனால் தூதரகங்களுக்கும், ஐ.நாவில் வேலை செய்பவர்களுக்கும் விதி விலக்கு.

ஒரு வீட்டில் பெரிய விருந்து ஒன்று நடந்து கொண்டிருந்தது. அந்த விருந்துக்கு ஐ.நாவில் வேலை செய்யும் ஒரு கமரூன் (Cameroon)காரர், அவரும் வந்திருந்தார். இந்த மனிதர் ‘கார்ல்ஸ் பெர்க்’ என்று சொல்லப்படும் ஒரு வித விலையுயர்ந்த பீரை மட்டுமே அருந்துவார்; மற்றவற்றைச் சீந்தக் கூட மாட்டார்.

இந்தக் கமரூன்காரர் வருகிற விருந்தென்றால் விருந்து கொடுப்பவர் முதலில் ‘கார்ல்ஸ் பெர்க்’ பீரைச் சேர்க்கத் தொடங்குவார். கணிசமாகச் சேர்த்த பின்தான் விருந்துக்கு அடுக்குகள் செய்வார். ‘கார்ல்ஸ் பெர்க்’ கிடைப்பது அவ்வளவு அரிது.

இந்த விருந்திலே பல நண்பர்களும் கலந்து கொள்ளவே விருந்து அல்லோ கல்லோலப் பட்டது. கமரூன்காரருக்கு மாத்திரம் அந்த விசேஷ பீர். அவர் அதைச் சுவைத்துக் குடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது உலக உதை பந்தாட்டப் போட்டி நடந்து கொண்டிருந்தது. எங்கேயோ இருந்த கமரூன் படபடவென்று மேலுக்கு வந்து விட்டது. முதல் நாள் நடந்த போட்டியில்தான் அப்பேர்ப்பட்ட இங்கிலாந்தையே முடியடித்து விட்டது.

கமரூன்காரருக்கு சந்தோஷம் தலைக்கு மேலே போய்விட்டது. முதல் நாள் நடந்த உதைபந்தாட்டத்தைப் பற்றி விஸ்தரிக்கிறார். எல்லோரும் வாயைப் பிளந்து சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அவருக்கு ஒரு தொலைபேசி வந்தது. ஓடிப் போய் பேசினார்.

அந்த நேரம் பார்த்து ஒரு ‘வம்பு’ கமரூன்காரரின் பீரை எடுத்து இன்னொரு கிளாஸ’ல் ஊற்றிவிட்டு இவருடைய கிளாஸ’ல் ஒரு சாராண பீரை அதே அளவுக்கு ஊற்றி அதே இடத்தில் வைத்து விட்டார்.

கமரூன்காரர் வந்து கதையை விட்ட இடத்திலிருந்து தொடருகிறார். எல்லோரும் கண்வெட்டாமல் அவர் கையிலுள்ள பீரையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வசதியான இடம் வந்ததும் கமரூன்காரர் கதையை நிறுத்தி விட்டு கையில் வைத்திருந்த பீரை ஒரு வாய் உறிஞ்சினார்.

அவ்வளவு தான் “துபுக்” என்று அவ்வளவுத்தையும் துப்பிவிட்டார். ‘என் துப்பினோம்’ என்று அவருக்கே புரியவில்லை. சுற்றியிருந்த நண்பர்கள் எல்லோரும் எழும்பி நின்று கைதட்டி ஆரவாரித்தார்கள். பிறகு தான் அவருக்கு என்ன நடந்தது என்று தெரிந்தது.

அதுவரைக்கும் நான் இந்தக் ‘கமரூன்காரர்’ ஒரு டம்பத்துக்காகத் தான் இப்படிச் செய்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அன்றிலிருந்து எனக்க அவரிடம் பத்து மடங்கு மதிப்பு அதிகமாகி விட்டது.

* * *

ஒருவருடைய ரஸனையுணர்வு உச்சத்திலிருந்தால் அது போற்றத்தக்கதொன்று. அது பீர் குடிப்பதிலிருக்கலாம், கவிதையிலிருக்கலாம் அல்லது உணவை சுவைப்பதிலிருக்கலாம். இப்படி மேம்பட்ட ரஸனை உணர்வு உள்ளவர்களால் ஒரு சிறு பிழையைக் கூடத் தாங்கமுடியாது; முறிந்துவிடுவார்கள்.

ஒலி நாடாவிலே ஒரு ஸ்வரக்கோர்வையை மாத்திரம் வயலினில் ஒருவர் வாசிக்கக் கேட்டு விட்டு ‘இது ஆர் வித்துவான்’ என்று நிட்சயமாகச் சொல்கிறார்களே! அது எப்படி?

ஒரு முறை சௌடய்யா வயலின் வாசிக்கிறார், அவருடைய குரு கிருஷ்ணப்பாவுக்கு, ஒரு ராகத்தை கிருஷ்ணப்பா தன்னை மறந்த நிலையில் ஆலாபனை செய்ய சௌடய்யாவும் வயலினில் தொடர்ந்து கொண்டிருக்கிறார். முக்கியமான ஒரு இடத்தில் சௌடய்யாவின் வயலின், அவர் இழுத்தபடியெல்லாம் பேசும் வயலின், அவரையும் மீறி ‘கிரீச்’ என்று விட்டது. கிருஷ்ணப்பா ஓங்கி அடித்து விட்டார். ஆயிரம் பேர் கொண்ட சபை அது. அந்த அபஸ்வரம் அவர் காதில் நாராசமாகப் பாய்ந்தது. நுட்பமான அவர் செவிகளுக்கு அதைத் தாங்கும் சக்திஇல்லை. தன்னை மறந்த நிலையில் அப்படிச் செய்துவிட்டார். பிறகு அவர் சௌடய்யாவைக் கட்டிக் கொண்டு விம்மி அபதார் என்பது வேறு விஷயம்.

அப்கானிஸ்தானிலுள்ள பல்வேறு அகதி முகாம்களை பல முறையும் நான் பார்த்திருக்கிறேன். இளம் நங்கைகள் 13,14,15 வயதுதானிரு ககும், கம்பளம் நெய்து கொண்டிருப்பார்கள். ஒரு வயதுக்கு மேல் கை விரல்கள் வளைந்து கொடுக்காது. ஆகவே சிறுவர்களும் சிறுமிகளும்தான் இந்தக் கம்பளங்களைச் செய்ய வேண்டும். அந்தக் கைவிரல்கள் கீரைத் தண்டைப் போன்று நீண்டு இருக்கும். விரல்கள் தக்காளிச் சிவப்பு நிறம். விரல்களும் நகமும் ஒரே கலரில் இருந்ததை அங்கே தான் முதன் முதலில் கண்டேன்.

‘எங்கோ அரண்மனையில் இருக்க வேண்டிய இந்த அழகு இங்கே இப்படி கேட்பாரற்று கிடக்குதே?’ என்று என்மனதை வாட்டும். இந்த அழகை இப்படிப் பூட்டி வைப்பது எவ்வளவு பாவம் என்றுகூட எனக்கு சில சமயங்களில் படும்; மனசுக்கு மிகவும் கிலேசமாக இருக்கும்.


(“இது தான் கதையா?”

“இல்லை, இல்லை! இது முன்னுரை. இதுவே இப்படி இழுத்துக் கொண்டு போய் விட்டது”)


நேற்று இரவு பல்லி சொன்ன போதே சுப்பையா நினைத்தார், இப்படி ஒரு அனர்த்தம் சம்பவிக்கும் என்று. பல்லி சாத்திரப் புத்தகத்தை உடனே எடுத்து விளக்கத்தைத் தூண்டி படித்துப் பார்த்தார். அதில் ‘தூரத்து மரணம்’ என்றிருந்தது. ‘தூரத்து’ என்றால் தூர இடத்தில் இருக்கும் ஆளா, அல்லது ‘தூரமான உறவா’ என்பதுதான் நிட்சயமாகத் தெரியவில்லை.

அன்று காலை நாலு மணிக்கே படலையில் வந்து ‘வீட்டுக்காரர், வீட்டுக்காரர்’ என்று கூப்பாடு போட்டார்கள். என்ன?’ என்று விசாரித்தால் இவருடைய மனைவி தங்கச்சியம்மாவின் சித்தப்பா (இவள் அவரை ‘சின்னய்யா’ என்று தான் கூப்பிடுவாள்) நேற்று ராத்திரியே மானிப்பாயில் இறந்து போனாராம்.

தங்கச்சியம்மா பதறிப் போய் எழுந்து ‘ஐயோ, ஐயோ’ என்று தலையிலடித்துக் கதறத் தொடங்கினாள். பிள்ளைகளும் எழும்பி இருந்து கண்ணைக் கசக்கிக் கொண்டு மிலாந்தி மிலாந்திப் பார்த்தன.

இறந்தவருக்கு வயசு எண்பதுக்கு மேலே; போக வேண்டிய வயசுதான். நாலுமாதமாகப் படுக்கையில் தான் கிடை. தங்கச்சியம்மா சின்னனாயிருந்த போது அவர் தோளின் மேல் ஏறியிருந்து மருதடித் தேரெல்லாம் பார்த்திருக்கிறாள். அந்த நினைவு வந்து அப்படி அழுது விட்டாள்.

தின்னவேலியில் இருந்து மானிப்பாய்க்கு போக மூன்று மணி நேரமாவது பிடிக்கும். வண்டில் மாடுதான். கார் வசதிகளெல்லாம் அந்தக் காலத்தில் கிடையாது; அபூர்வம்.

அதிலே எல்லாமாக எட்டுக் குடும்பங்கள்; சின்னத் தங்கச்சியின் நாலு சகோதரிகளும், இரண்டு அண்ணன்மாரும், பெரியப்பா குடும்பமும். இவ்வளவு பேரும் ஒன்றாய் வெளிக்கிட்டு மானிப்பாய் போய்ச் சேர வேணும். கைக்குழந்தைகளைக் கொண்டு போகலாம். மற்றப் பிள்ளைகள் படிக்கப் போகுதுகள். வண்டில் மாடுகள் பிடிக்க வேணும். ஆறு இரட்டை மாட்டு வண்டில்கள் அவ்வளவு லேசில் பிடிக்க ஏலாது.

எல்லாச் சகோதரிகளும், அண்ணன்மாரும் சேர்ந்து பம்பரமாகத் தான் வேலை செய்தார்கள். ஆனால் முடிகிறகாரியமா? சுற்றத்தையெல்லாம் சேர்த்து, பல அடுக்குகளும் செய்து, அவையவைக்க சமைத்து வைச்சு வதவதவென்று உடுத்திக் கொண்டு வண்டிக்குள் ஏறும் போதே மணி பத்தாகி விட்டது. சங்கிலித் தொடர் போல மாடுகள் ஒன்றுக்கு பின் ஒன்றாக வெளிக்கிட்டன.

தங்கச்சியம்மா இந்தச் சகோதரிகளின் மூத்தவளல்ல. ஆனால் அவள்தான் காரியக்கட்டி. எல்லாம் அவள் பொறுப்பில் தான். அவர்களுக்குள் அவள்தான் கொஞ்சம் எடுப்பும்.

பின்கொய்யகம் வைத்துத் தான் எப்பவும் சேலை உடுப்பாள். நாலு பிள்ளைகள் பெத்தாலும் அவள் உடுத்திக் கொண்டு போனால் ஆக்கள் திரும்பிப் பார்க்கத்தான் செய்வார்கள்.

இவர்கள் மானிப்பாயில் போய் இறங்கிய போது சவம் எடுத்துவிட்டார்கள். முதல் நாள் சடலத்தை அடுத்த நாள் இரண்டு மணிக்கு மேல் வைத்திருப்பார்களா? எல்லோரும் வண்டிக்குள் இருந்து இறங்கி ‘கொடி விட்டு’ உள்ளே போகிறார்கள்.

வழக்கமாக இப்படிச் செத்த வீட்டுக்கு ஆட்கள் வரும்போது படலையில் இருந்தே பறைமேளம் ‘டம், டம்’ என்று அடித்து உள்ளே ‘பெண்டுகள் வருகிறார்கள்’ என்று சங்கேதமாக உணர்த்தி விடும். இங்கே பறை இல்லை. எல்லோருக்கும்தான் சுடுகாட்டுக்கு போய் விட்டார்களே!

தங்கச்சியம்மா கைகள் இரண்டையும் முன்னே நீட்டிய படி “ஐயோ, என்ரை சின்னையா!” என்று கத்தியபடியே உள்ளுக்கு ஓடுகிறாள். மற்றவர்களும் பின்னே தொடருகிறார்கள். ஆண்பிள்ளைகள் ஒவ்வொரு மூலையிலே போய் குந்துகிறார்கள்.

உள்ளே பெண்டுகள் எல்லாம் மாரடிக்க ஓஞ்சு சிதறிப்போய் ஒவ்வொரு மூலையாய் இருக்கிறார்கள். தங்கச்சியம் மாவைக் கண்டதும் பெண்டுகள் படியே ‘அரைந்து, அரைந்து’ வந்து அவளைக் கட்டிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு துக்கம் மீண்டும் பீறிக் கொண்டு வருகுது. அப்படியே கூட்டம் கூட்டமாக சுற்றி இருந்து கட்டிக் கொண்டு அழுகிறார்கள்.

ஒரு ‘பாட்டம்’ அழுது முடிந்த பிறகு பெண்கள் கைகளை கழற்றிக் கொண்டு இருந்து ஊர்க் கதைகள் கதைக்கிறார்கள். ‘தின்னவேலி ஆக்கள் வந்தாச்சுது’ என்றவுடன் இன்னமும் வேற ஊர் பெண்டுகளும் வந்து சேர்ந்து கொண்டார்கள்.

இரண்டாவது ‘ஆவர்த்தியின்’ போதுதான் மானிப்பாய் செல்லம்மா ஆரம்பித்து வைத்தாள். ஒப்பாரி வைப்பதில் அவளைத் தாண்ட வேறு ஆளில்லை, அந்தக் காலத்தில். உடனுக்குடன் ஒப்பாரி இட்டுக் கட்டிவிடுவாள். அவளுக்கு ஆதங்கம் இப்பிடி இவை ‘சவம்’ எடுத்த பிறகு ‘ஆடி அசைந்து வருகினம்’ என்று. அவள் இப்படி ஒப்பாரி வைக்கிறாள்.

“சீவிச் சிங்காரித்து சித்திரமாய் வாறியளோ? ஆற்றிலே தண்ணி வந்த ஆடி ஆடி வாறியளோ? பாக்குமரம விழுந்ததெண்டு பாத்துபோக வந்தியளோ? தேக்குமரம் விழுந்ததெண்டு தெரியாமல் வந்தியளோ?”

இப்படியாக அவளுடைய ஒப்பாரி நீண்டு கொண்டே போகிறது.

தங்கச்சியம்மாவுக்கு சரியான வருத்தம். “நாங்கள் என்ன பாடுபட்டு வாறம்; இவள் இப்படிக் கேட்டு விட்டாளே? இதுக்கு ஒரு ஞாயம் இல்லையா? முடிறயில்லையா?” என்று மனமுடைந்து போனாள்.

உடனேயே ஒரு எதிர் ஒப்பாரி போட்டாள்: “சுற்றமெல்லாம் உள்ள நாங்கள் சேத்து வர வேண்டாமோ, மந்துசனம் உள்ள நாங்கள் பாத்துவர வேண்டாமோ, ஆனசனம் உள்ள நாங்கள் ஆக்கி வரவேண்டாமோ, கோடிசனம் உள்ள நாங்கள் கூட்டி வரவேண்டாமோ.”

இப்படியாக ஒரு எதிர் அடி; கவியரங்கம் என்றால் கைதட்டலாம். இது செத்த வீடல்லவா?

அன்று மானிப்பாய் முழுக்க இந்தக் கதைதான். புருஷர்களிடமும் இந்தக் கதை போய் பரவி விட்டது. அவர்கள் “ஆஹா, ஆஹா” என்று மிக நன்றாகவே இந்த ஒப்பாரி கவித்துவத்தை அனுபவித்து ரசித்தார்கள்.

(“என்ன கதை முடிந்து விட்டதா?”

“இல்லை, ஐயா! இனிமேல் தான் கதையே தொடங்குகிறது”)

நாலாம் நான் ‘காடாத்து’ என்று ஒன்று நடக்கும். இறந்தவருடைய சாம்பலை சுடலையில் போய் எடுத்து வருவார்கள். பெண்கள் எல்லாம் அழுது தீர்க்க வேண்டிய முக்கியமான நாள். இதிலே தான் வந்த பந்து சனங்கள் எல்லோருக்கும் நன்றி கூறும் சாக்கில் சாப்பாடு போட்டு அனுப்புவார்கள். இது மாத்திரமல்ல, செத்த வீட்டுக்கு உழைத்த அம்பட்டன், வண்ணான், பறையடித்த பறையன், சுடலைக் காவல்காரன் எல்லோருக்கும் கணக்குத் தீர்க்கும் நாள்கூட.

அன்று சாப்பிடு முன் ஒரு வைபவம் இருக்கும். பெண்டுகள் இறந்தவருக்கு பிடித்தமான சோறு, கறிவகைகள், எல்லாம் காய்ச்சி ஒரு பெரிய சட்டியிலே போட்டுக் குழைப்பார்கள். அப்படிக் குழைத்ததை கைபிடி கொள்ளக்கூடிய உருண்டைகளாகத் திரட்டித் திரட்டி வைத்துக் கொண்டு வெளியே வர, செத்த வீட்டுக்கு பறையடித்த சின்னான் அங்கே இருப்பான். இந்தப் பெண்டுகள் அந்த உருண்டைகளை எடுத்து சின்னான் முதுகின் மேல் எறிந்து அவனை விரட்டி, விரட்டி அடிப்பார்கள். அவனும் அந்த உருண்டைகள் முதுகிலே விழ, அதை வழித்துச் சாப்பிட்டபடியே ஓடிக் கொண்டிருப்பான். இப்ப சிறுவர்களும் சேர்ந்து விடுவார்கள். கீழே விழுந்ததையெல்லாம் எடுத்து திருப்பித் திருப்பி அடிப்பார்கள். இதற்கிடையில் படலை வந்து விடும். பெண்டுகள் சட்டியையும், சோற்றையும் சின்னானிடம் கொடுத்து விட்டு வந்து விடுவார்கள்.

ஆண்கள் பந்தி முடிந்த பிறகு தான் பெண்களுக்கு. எல்லோரும் நீளமாக இருந்து வாழையிலை போட்டு சாப்பிடுவார்கள். இது முடிந்த கையோடு ஆண்கள் எல்லாம் வெளியே கூடுவார்கள். மிக நெருங்கிய உறவினரும் அயலும், சொந்த பந்தமுமாகத்தான் அது இருக்கும். அவர்கள் வெற்றிலை போட்டுக் கொண்டும், சுருட்டுப் பிடித்துக் கொண்டும் சவடாலாகக் கதைகள் பேசிக் கொண்டு நேரத்தைக் கழிப்பார்கள்.

இப்படியான கூட்டங்களிலே நமசிவாயம்பிள்ளை தான் நடுநாயகமாக இருப்பார். அனேகமாகக் கதைகள் இறந்தவரைப் பற்றியே இருக்கும். அல்லது இது மாதிரி படுத்தோ, வியாதி வந்தோ செத்த இன்னொருவரைப் பற்றியதாக இருக்கும்; சில வேளைகளில் பொதுவான ஊர்க் கதைகளும் பேசுவார்கள்.

அடுத்து முக்கியமானவர் சண்முகநாதபிள்ளை; ஆனால் எல்லோரும் ‘சண்ணாபிள்ளை’ என்று தான் இவரைக் கூப்பிடுவார்கள். ஆசாரமான மனிதர். பச்சைக்கரை போட்ட வேட்டியும், பச்சைக்கரை போட்ட சால்வையும் தான் உடுப்பார்; மேல் சட்டையும் போடுவார். அப்பவெல்லாம் மேல் சட்டை போடுபவர்கள் வெகு சிலரே.

ஊர் குடிபடைகளுக்கு மாத்திரம் அல்ல ஊருக்குள்ளேயும் இவர் பெரிய மனிதர். தரகு பிடிப்பதுதான் வேலை. மாட்டுத்ரகு, பொயிலைத்தரகு இப்படி. ஊரிலே கொஞ்சம் ‘முட்டுப்பட்டால்’ இவரிடம்தான் வந்து கடன் கேட்க வேணும்.

இப்படி எல்லோரும் சுற்றி இருந்து பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென்று இவருக்கு இருப்புக் கொள்ளவில்லை. இப்படியும், அப்படியுமாக அசைந்தார். ஏதோ தொலைந்தது போல் இங்கும் அங்கும் தேடினார். தவியாய்த் தவித்தார். ‘கொஞ்சம் இருங்க’ என்று சொல்லிவிட்டு விசுக்கென்று எழும்பி வெளியே போய் விட்டார். எல்லோரும் இவருக்கு அவசரமாக ‘வெளிக்கு’ வந்திட்டுது என்றுதான் நினைத்துக் கொண்டார்கள்.

வெளியே வந்த சண்ணாபிள்ளை ஒரு லெக்கில் குறிவைத்து நேரே போனார். அங்கே அந்த மரத்தின் கீழே பறையடித்த சின்னான் கண்ணை மூடிக்கொண்டு ஒரு சுருட்டைப் பிடித்தபடி இருந்தான்.

இவர் “சின்னான்!” என்றார்.

“ஓஞ்சாமி!” என்று அவன் பதைத்துக்கொண்டு எழுந்து விட்டான்.

“என்ன வையன்னா கானாவா?” என்றார்.

“ஓஞ்சாமி!”

“உன்னட்டை வேற சுருட்டு இருக்கா”

“ஓஞ்சாமி” என்று சொல்லி விட்டு சின்னான் மடியைப் பிரித்து ஒரு சுருட்டை எடுத்துக் கொடுக்கிறான். சண்ணாபிள்ளை மிக்க பணிவோடு ரெண்டு கைகளையும் நீட்டி அதை வாங்கிக் கொள்கிறார்.

பிறகு அந்தச் சுருட்டின் அழகை உருட்டி உருட்டி பார்க்கிறார். மூக்கருகே கொண்டு போய் மணந்து அனுபவிக்கிறார். காதுக்கு கிட்டக் கொண்டே வைத்து விரல்களால் நெருடி அது முனகும் ஒலியைக் கேட்கிறார். நாக்கினால் தொட்டு ருசிபார்க்கிறார்.

அவர் கண்களில் நீர் பனிக்கிறது. அப்படியே அதைத் தடவுவதும், மணப்பதுமாக நீண்ட நேரம் வைத்து, மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கிறார்.

“சாமி, பத்த வைக்கட்டா?” என்று சின்னான் கேட்டான். இவருக்கு கேட்கவில்லை. இவர் இந்த லோகத்திலேயே இருந்தால் தானே?

சின்னான் நெருப்புக் குச்சியைக் கிழித்துப் பத்த வைக்க இவர் ‘ப்ப, ப்ப’ என்று இழுக்கிறார். அது நூந்து விடுகிறது. நாட்டுச் சுருட்டு அல்லவா? பக்கென்று கற்பூரம் போல எரியுமா? அப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாகப் பக்குவப் படுத்தி வழிக்குக் கொண்டு வரவேண்டும். வையன்னா கானாவா, சும்மாவா?

மூன்றாவது நெருப்புக் குச்சியிலேயே பற்றி விட்டது. அந்த முதல் இழுப்பு அவரை அப்படியே கந்தர்வலோகத்துக்கு இழுத்துச் சென்றது.

மாவீரன் நெப்போலியன் தன் காதலி ‘ஜோசபினுக்கு’ முதல் முத்தத்தை கொடுத்துவிட்டு தன் அதரங்களை மூடிக்கொண்டு ஓடினானாம். அவனுக்கு அதற்குமேல் தாங்க முடியவில்லை. அப்படியே ‘செத்துவிட வேண்டும், செத்துவிட வேண்டும்’ என்று பட்டதாம். உச்சியை ஒருவன் எட்டிவிட்டால் அதற்குப்பிறகு உசிர்தான் என்னத்திற்கு?

சண்ணாபிள்ளையின் கண்கள் கிறங்கிப் போய் மேலே போனது. ஐம்புலன்களையும் ஒடுக்கி அந்த இன்பத்திலேயே மனது ஒன்றி விட்டது. இந்த ஒரு சின்னச் சுருட்டிலே இவ்வளவு இன்பத்தை எப்படி கடவுள் கொண்டுவந்து வைத்தார்? அட அடா!

சண்ணாபிள்ளையின் விசாரம் எல்லாம், அம்சுமன்யாகக் குதிரையைத் தேடியது போல உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் அவர் தேடியும் அவருக்க வையன்னா கானா கிடைக்கவில்லையே? சின்னானுக்கு எப்படிக் கிடைத்தது? காரைநகரிலிருந்து கண்டி வரைக்கும் அலைகழிந்தாரே!


வைத்திலிங்கம் கந்தப்புவின் கொட்டிலிலிருந்து தான் அந்த ஸ்பெஷல் சுருட்டு வந்து கொண்டிருந்தது. இருபது வருடங்களாக அதற்கு அப்படி ஒரு மவுசு. அதைக் குடித்தவர்கள் மற்ற சுருட்டுக்களைத் தொட மாட்டார்கள். சுருட்டுகளுக்கெல்லாம் மன்னன் போல இருந்தது அந்த சுருட்டு.

இதற்கென்று பிரத்தியேகமாக வருவிக்கப்பட்ட தம்பங்கடவைப் பொயிலையும், அதை கந்தப்பு ரகசியமாக ‘உலர்த்தும்’ முறையும், பொயிலைத்தூள் கலவையும் தான் அவருடைய வெற்றியின் சூட்சுமம்; இந்த சூட்சுமத்தை கடைசி வரைக்கம் வேறு ஒருவராலும் அறியமுடியவில்லை.

ஆனால், அடிக்கடி ஏற்பட்ட கூலிக்குழப்பம் இவருக்கு எமனாக வந்தது. அதுவும் தவிர, இவருடைய சுருட்டு ஜனுரஞ்சகமானதல்ல. இது ஒரு உயர்ந்த ரஸ’கத் தன்மை உள்ளவர்களையே தன்னிடம் ஈர்த்து வைத்துக் கொண்டது. இவருடைய பாகஸ்தர் ‘மீரிகம’வில் இருந்து யாவாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார். நிலுவை கணிசமாக இருக்கும் போது கந்தப்புவின் காலை வாரிவிட்டு அவரும் மறைந்து கொண்டார். வேறு என்ன? சுருட்டுத் தொழிற்சாலையை இழுத்து மூடி வேண்டியதாகி விட்டது.

ஐந்து வருடங்களுக்கு முன்புதான் இது நடந்தது. கந்தப்பு நன்றாகக் ‘கோடா’ போட்டு பாடம் செய்த ஒரு நூறு சுருட்டுக் கட்டுகளை தொழிற்சாலையை மூடும்போது சின்னானுக்கு இலவசமாகக் கொடுத்திருந்தார்.

சின்னான் தொடக்கத்திலிருந்தே அங்கே வந்து கூலி வேலை செய்தவன். இந்த ஐந்து வருடங்களாக சின்னான் அந்தச் சுருட்டுக்களை மிக்க கவனமாகப் பேணி அவசியமான நேரங்களில் மாத்திரம்தான் குடித்து வந்தான். ஏழையென்றாலும் அவனும் ஒரு பரம ரசிகன்தான்.


வெளியே போன சண்ணாபிள்ளையின் சிலமன் இல்லை என்று தேடிக் கொண்டு நமசிவாயம் பிள்ளையும் மற்றவர்களும் வந்தார்கள். அந்த மரத்தடிக்கு கீழ் வந்தவுடன் ஆணி அடித்தது போல அவ்வளவு பேரும் நின்று விட்டார்கள்.

மரத்தின் கீழ் ஒரு பக்கம் இருந்து கண்ணை மூடி சுருட்டை அனுபவித்து இழுத்தபடி இருக்கிறார் சண்ணாபிள்ளை. அவருக்குப் பக்கத்திலேயே, அவருடைய கால் மேல் கால் போடாத குறையாக, சின்னான் அதே மாதிரி ஒரு சுருட்டை புகைத்தபடி கண் மூடி லயித்திருக்கிறான்.

ஒரே ரசனை ஒரு சமத்துவத்தையும் கொடுத்து விடுகிறது போலும்.


எனக்கென்னவோ, சண்ணாபிள்ளையின் ரசனைக்கும் ரஸ’கமணியின் ரசனைக்கும் ஒரு வித வித்தியாசமும் தெரியவில்லை.

– திகடசக்கரம், முதற் பதிப்பு: ஆனி 1995, காந்தாளகம், மறவன்புலவு, சாவகச்சேரி

– அ.முத்துலிங்கம் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, தமிழினி, சென்னை.

Print Friendly, PDF & Email

3 thoughts on “வையன்னா கானா

  1. தமிழ் விளையாடுகிறது ….இவர் கையில்…இப்படிக்கு விஜயன்…

  2. முன்னுரை இப்படி இருந்தால் இன்னமும் நீளலாம், Shaw
    அவர்களினுடைய போல
    ஆசிரியர் பரந்த அனுபவங்களைச் சுவையாகச் சொல்வது, அந்த அனுபவங்களின் விரிவால் மட்டுமன்று, கதை சொல்லும் திறமையாலும்.
    நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *