கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 15, 2021
பார்வையிட்டோர்: 3,308 
 

‘எப்படி… எப்படி தன் கணவனை மாற்றுவது..? தன் வலி , வருத்தத்தை அவருக்குப் எப்படி புரிய வைப்பது..? எவ்வாறு உணரவைப்பது..? ‘- தினம் மனமெங்கும் இதே கேள்வியாக வளைய வந்த மாலினி…

கணவன் சிவா கிளம்பி அலுவலகம் சென்ற பின்பு கதவைச் சாத்திக்கொண்டு வந்து சோபாவில் அமர்ந்தாள்

இன்றைக்கு அந்த உலைச்சலில் அவள் மனம் அதிக கனம் !

சிவா தொட்டு தாலி கட்டியதிலிருந்தே தொடங்கிவிட்டது இந்த இம்சை. ! – பெருமூச்சு விட்டாள்.

‘இரண்டாம் தாரமென்றாலும் அவனுக்கு வயதாகவில்லை. திருமணமான ஆறு மாதத்திலேயே மனைவியை விபத்தில் பறி கொடுத்தவன் என்பதால் இன்றும் அவன் இருபத்தெட்டு வயது தாண்டாத திருமண வயது. பிள்ளை, குட்டி என்று பிக்கல் பிடுங்கல் எதுவுமில்லை. கைநிறைய சம்பாத்தியம். அரசாங்க வேலை. நகரத்தில் தனிக்குடித்தனம். மாமனார், மாமியார் இருந்தாலும் கிராமத்தை விட்டு நகராதவர்கள். நிலபுலன்கள் உண்டென்பதினால் பிள்ளை கையை எதிர்பார்க்காதவர்கள். நல்ல வரன். நிம்மதியாக வாழலாம் ! ‘- என்று நினைத்து இரண்டாம் தாரம் என்பதை மறந்து வந்தாள்.

ஆனால் மற்றவர்கள் மறக்கவில்லை.

தாலி கட்டி மாலையும் கழுத்துமாய் வீட்டினுள் நுழைந்த மணமக்களைப் பார்த்து…

“மொதல்ல மூத்தாளை கும்பிட்டு வாங்க…”மாமியார் முதல் கீறல் போட்டாள்.

யாரோ முன்பின் தெரியாதவள். இந்த புகைப்படத்தைத் தவிர வேறு எங்கும் பார்த்தறியாத முகம். தாலி கட்டியவனின் முதல் மனைவி. தனக்கு இவர் தாலி கட்டிவிட்டார் என்பதற்காக அவள் மூத்தாள், அக்காளாகி விடுவாளா…? என்ன நியாயம். அவள் வாழ வந்து போய்விட்டாள். நான் வாழ வந்திருக்கேன். இதுதானே நிதர்சனம்…! இதை மறந்து… அவளை வணங்கி வா, இவளை வணங்கி வா….என்று… – மாலினி அவள் படத்தைப் பார்த்து வணங்கும்போது மனதில் ஓடியது.

மற்றப்படி…

‘உன் இடத்தில் நான் வந்திருக்கேன். என்னை நல்லா வை. கஷ்டம் கொடுக்காமல் எண்களைக் காப்பாற்று …! – என்றெல்லாம் இவள் அவளிடம் பிச்சை எடுக்கவில்லை. வணங்கவில்லை. அவளென்ன கடவுளா…? இறந்து விட்டார்களென்பதற்காக அவர்களை எல்லாம் கடவுள் வரிசையில் சேர்ப்பது என்ன ஆகம விதி, சதி…? ‘- அப்படித்தான் இவளுக்குள் மேலும் ஓடியது.

அடுத்து அந்த முதலிரவு..!

இவள் மனதில் ஆயிரம் கனவுகள், கற்பனைகள் தேக்கி…. என்ன நடக்குமோ, ஏது நடக்குமோ…. என்று பயந்து அவர் அனுபவப்பட்டவர் நம்மால் சரியாக புரிந்து நடந்து கொள்ள முடியுமா..? என்று விதிர் விதிர்த்து திகிலும் படபடப்புமாக அறையில் நுழைந்தவளுக்கு அதிர்ச்சி.

சிவா, இவள் எதிர்பார்ப்பு ஏதுமின்றி கட்டிலில் அமர்ந்து எதையோ பறி கொடுத்தவனைப் போல பார்வையை எங்கோ பதிய விட்டவாறு இருந்ததை பார்த்ததும் இவளுக்குள் ஏமாற்றம். மனசுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.

ஒரு வழியாய் அதை தேற்றி, மாற்றிக் கொண்டு கதவைத் தாழிட்டு பால் சொம்பை பக்கத்தில் வைத்துவிட்டு முதல் வேலையாக கீழே அமர்ந்து அவன் பாதம் தொட்டு வணங்கினாள்.

அப்போதுதான் சிவா தன்னுணர்வு பெற்று அவளைத் தொட்டுத் தூக்கினான். அந்த சூடு மாறாமல்….

“வா மாலினி ! நாம வாழ்க்கையை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி அகிலாகிட்ட ஆசீர்வாதம் பெற்று வருவோம்” சொல்லி இவள் கையைப் பற்றி அழைத்துச் சென்று அதே அறையில் உள்ள அவள் படத்திற்கு முன் நின்று அவனும் கை கூப்பி இவளையும் கை கூப்ப வைத்தான்.

அப்புறம்தான் அவர்கள் கட்டிலுக்கு வந்தார்கள்.

மழை விட்டும் தூவானம் விடாதது போல….சிவா…

“மாலினி கலியாணத்துக்கு முன்னாடியே என்னைப் பத்தி கேள்விப்பட்டிருப்பே. ஆனாலும் என் வாயால நான் அகிலாவைப் பத்தி சொல்றேன்…”ஆரம்பித்தான்.

‘இது தேவை இல்லையே..! ‘நினைத்தாள். இருந்தாலும்….அன்று பார்த்தவனோடு இன்று அருகில் உட்கார்ந்திருக்கிறாள் என்ன சொல்ல…? எப்படி சொல்ல…? எடுத்ததும் சொல்வதுதான் சரியா…? இவளுக்கு வாய் வரவில்லை.

தன்னோடு ஈருடலும் ஓருயிருமாக இருந்து, வாழ்ந்து, இறந்தவளைப் பற்றி சொல்லத் தொடங்கினால் இருவர் மனதிலும் அனாவசியமான கனங்கள் ஏறும். இது கனம் ஏற்றி விலகிப் படுக்கும் இடம் ,நேரமில்லை. – இவளுக்குள் தோன்ற…

“இந்த நேரத்துல அதெல்லாம் எதுக்குங்க…?” நாசூக்காக மறுத்தாள்.

“இல்ல மாலினி. உனக்கு இதெல்லாம் தெரிஞ்சாகனும்…”என்றான்.

இவன், நான் தெரிந்து கொள்ள விரும்புகின்றானா..? இல்லை தன் மனதில் உள்ள கனம் குறைக்கின்றானா..? – நினைத்த மாலினி…

“சொ… சொல்லுங்க…?” வழி இல்லாமல் சொன்னாள்.

“மாலினி ! அகிலா உன்னை விட அழகுல குறைச்சல். ஆனா… குணத்துல தங்கம் ….” நிறுத்தினான்.

‘நானும் தங்கம்தான். போகப் போக உங்களுக்குத் தெரியும்.. ! ‘மாலினி மனதுக்குள் சொல்லிக்கொண்டாள்.

மறுபடி….அன்று அவர்களின் தனிக்குடித்தன முதல் நாள்.

மாலினி கணவனுக்குப் பார்த்துப் பார்த்து சமையல் செய்தாள். எதிரில் அமர்ந்து பவ்வியமாக பரிமாறினாள்.

“நீயும் ஒரு தட்டெடுத்து வைச்சுக்கோ மாலினி. சமைச்சதை எல்லாம் நடுவில் வைத்து நானும் அகிலாவும் ஒருத்தொருக்கொருத்தர் பரிமாறி சேர்ந்தே சாப்பிடுவோம் ! – சொன்னான்.

‘சரி ‘செய்தாள்.

கவளம் அல்லி வாயில் வைத்தவன்…

“அடடே..! அகிலா கைமணம் உனக்கு அப்படியே இருக்கு..?” பாராட்டினான்.

இங்குமா..? இன்னுமா…? – மாலினிக்குள் இதயம் வலித்தது.

வாயிக்குள் சென்ற சாதம் தொண்டையில் இறங்க மறுத்தது.

பின்னே… ! இவள் பார்த்துப் பார்த்து சமைக்க…. தான் தங்கமா, பித்தளையா ? இவளுக்குப் புரை ஏறியது.

தண்ணீர் குடித்து தணித்தாள்.

எங்கும் எப்போது அகிலா…! அகிலா…! இவளால் தாங்க முடியவில்லை.

‘என்னை எல்லாவற்றிலும் அவளாகப் பார்க்கும் கணவனே..! என்னை எப்போது உன் மனைவி மாலினியாகப் பார்க்கப் போகிறாய்..? என் தனித்தன்மையைக் காணப் போகிறாய்..? ‘- எல்லா நேரத்திலும் இவளுக்குள் இதே கேள்வி நச்சரிக்க… எந்த இரவும் இவளால் சரியாக தூங்கமுடியவில்லை.

இந்த மன உளைச்சலுக்கும், வலிக்கும் இனி முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் சரி வராது.

இன்றைக்கு வந்து ‘அகிலா..! ‘என்று பேச்சை ஆரம்பிக்கட்டும். !! – மனதில் கறுவிக்கொண்டு எழுந்து வேலையைப் பார்த்தாள்.

மாலை அலுவலகம் விட்டு சிவா வீட்டுக்கு வந்தான்.

“என்னம்மா..! அகிலா கை மணம் போய் மாலினி கை மணம் வந்துடுச்சா.? ‘என்று அவன் கேட்க வேண்டும்.

நாம்…

“உங்களுக்கு அகிலாவைத் தவிர என்னைத் தெரியலையா..?” முதல் பேச்சாய்த் திருப்பித் தாக்க வேண்டும் ! – என்று நினைத்துக் கொண்டு… வழக்கத்திற்கு மாறாக சர்க்கரையைக் குறைத்து… மணக்க மணக்க… மாலினி அவனுக்கு காபி கொடுத்தால்.

சிவா… மெளனமாக முடித்தான்.

அவன் எந்தவித முகச் சுளிப்பு, குறை சொல்லாமல் குடிக்க குடிக்க… இவளுக்குள் வியப்பு, திகைப்பு.

எப்படி…?

நாம் தெரியாத்தனமாக வழக்கம் போல் சர்க்கரையைப் போட்டுவிட்டோமா..? இல்லை…குடித்து முடித்துவிட்டு சொல்லலாமென்று குடிக்கிறாரா..? – பார்த்தாள்.

குடித்து முடித்த டம்ளரை கீழே வைத்தும் அவன் ஒன்றும் சொல்லவில்லை.

ஏன்..? என்ன காரணம்…? மனது சரி இல்லையா..? – கலவரமாக ஏறிட்டாள்.

அவளைக் கவனித்த சிவா…

”என்ன அப்படிப் பார்க்கிறே…? இப்படி என் பக்கத்துல உட்காரு.” அவன் வெகு சாதாரணமாக சொல்லி சோபாவைக் காட்டினான்.

“ஏ…. ஏன்…?” தடுமாறினாள்.

“பயப்படாதே.! இன்னைக்கு அலுவலகத்துல நடந்தது சொல்றேன்..”

‘ஓகோ ! ‘- அமர்ந்தாள்.

“என் நண்பன் கணேஷ் தெரியுமா…? தெரியாது. ! அவன் என் உயிர் நண்பன். நம்ப திருமணத்தில் கடைசி வரைக்கும் இருந்தான். அவன் இன்னைக்கு அலுவலகத்துக்கு சாப்பாடு எடுத்து வரல. நீ கொடுத்த சாப்பாட்டை நானும் அவனும் சேர்ந்து சாப்பிட்டோம்.

சமையல் எப்படி. அகிலா கைமணம் அப்படியே இருக்கா…?” கேட்டேன்.

அவனுக்குத் திடீர்ன்னு முகம் மாறி அதிர்ச்சி.

“என்னடா…?” கேட்டேன்.

“இன்னும் நீ அகிலா புராணம்தான் பாடிக்கிட்டிருக்கியா..?” கேட்டான்.

“ஏன் அதிலென்ன தப்பு..?” கேட்டேன்.

“தப்பு ! தப்பு ! தப்புடா !” சொன்னான்

எனக்கு அதிர்ச்சி. பார்த்தேன்.

தொடர்ந்தான்.

“திருமணத்தன்னைக்குத் தாலி காட்டி முதன்முதலாய் உன் வீட்டுக்குள் அடி வைக்கும்போதே’மூத்தாளை வணங்கி வாங்கன்னு உன் அம்மா சொல்ல…. நீ வாய் பேசாம போய் ரெண்டு பெரும் அகிலா படத்தை நமஸ்கரித்தது மனசை உறுத்துச்சி. நீ அப்படி செய்திருக்கக் கூடாது. தாய் சொல்லைத் தட்டக்கூடாது, பெரியவங்க பேச்சை மதிக்கனும்ன்னு நெனைச்சி போயிருக்கக் கூடாது. மாறாய்….’அதெல்லாம் வேணாம். மதிப்பும் மரியாதையும் மனசுல இருந்தா போதும், சொல்லி ஒதுக்கி இருக்கனும். அதுதான் உன்னோட வந்தவளுக்கு மரியாதை. அது இல்லை அப்படி செய்தது தப்பு.

இந்தக் காலத்துல நாம விதவை மணத்தை ஆதரிக்க ஆரம்பிச்சுட்டோம். மாலினி ஒரு விதவை. இப்போ நீ அவளுக்கு இரண்டாவது கணவன். அவளும் உன் அம்மாவைப் போல்…. வாங்க நாம உங்க மூத்தவரை நாம வணங்கி வருவோம்ன்னு அவள் வீட்டில் நுழையும்போது சொன்னா… உனக்கு எப்படி இருக்கும்…? நீ ஒத்துப்பியா..? இந்த வலிதாண்டா அன்னைக்கு மாலினிக்கு ஏற்பட்டிருக்கும். இதை அன்னைக்குச் சொல்ல எனக்கு நேரம் காலம் கிடைக்கல. இன்னிக்கு கிடைச்சிருக்கு. அதான் சொல்றேன்.

சிவா.. ! ஆணாலும் பெண்ணாலும் முதல் தாரம் – மணத்தை மறக்க முடியாதுஎன்பது நிதர்சனம். ஆனா… அடுத்தது தொடும்போது அதை மறந்துடனும். மாலினி மறந்துதான் மறுமணத்துக்கு சம்மதிச்சிருக்காள். நீயும் மறந்து… வந்தவளுக்கு வலி கொடுக்காம கொண்டாடு. அப்போதுதான் வாழ்க்கை ருசிக்கும் ! சொன்னான்.

அப்போதுதான் என் தவறு தெரிஞ்சுது மாலினி. மன்னிச்சுக்கோ… நான் நிறைய அகிலா புராணம் பாடி உன் மனசை நோகடிச்சிருக்கேன். நீயும் அதை வெளிக்காட்டிக்காம தாங்கி இருக்கே. இப்போ எல்லாத்துக்கும் மொத்தமா மன்னிப்புக் கேட்டுக்கிறேன். நாம பழசு மறந்து புதுசா வாழலாம். !” சொல்லி சிவா அவளை மலர்ச்சியாக அணைத்தான்.

இவளுக்குச் சங்கடமில்லாமல் தன் வலி உணர்ந்து…. கணவனுக்கு புத்தி சொல்லி திருத்தி மாற்றிய அந்த கணேஷை…..

“உங்களுக்கு ரொம்ப நன்றிண்ணா..!” மனசார சொல்லி…. சந்தோசமாக கணவன் மார்பில் சாய்ந்தாள் மாலினி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *