“விற்பனையாகிறது குசேலர் எழுதிய குடும்பக் கட்டுப்பாடு நுhல்”. “வீட்டு வசதி யூனிட்டின் கிளைக்கு வசதியான வீடு தேவை”
“பத்தே ரூபாய்த் தவணை, பத்தே ஆண்டுகள், சென்னைக் கடற்கரைக்குக் கிழக்கே பத்தே நிமிட விமானப் பயணம்.. மனைகள் விற்பனை.”
விளம்பரப் பகுதிகளைப் படித்துக் கொண்டே வந்த சிங்காரம் திடீரென்று ஏறிக் குதித்தான். அவன் மட்டும் சற்று அதிக உயரம் உள்ளவனாக இருந்திருந்தாலோ, கூறை சற்று தாழ்ந்திருந்தாலோ நிச்சயம் தலை இடித்திருக்கும், அவனை அப்படி மகிழ்ச்சிக் குள்ளாக்கிய விஷயம் ஒரு விளம்பரம்தான்… அவனுக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை.
“வேலை கிடைக்காத அவதியா ? வேலை வேண்டுமா ? தேவையான தொழில், தகுதிகள் எதிர்பார்க்கும் சம்பளம் ஆகிய விவரங்களை ரூ. 5 அனுப்பிய மணியார்டர் ரசீதுடன் எழுதுக, மெய்காப்பான் எம்ப்ளாய்மெண்ட் ஏஜென்சீஸ் 7 ஏ, அமிர் உன்னிசா பேகம் சந்து சென்னை -2”
ஐம்பது, நூறு என்று இதுவரை. எவ்வளவோ செலவழித்து, ஏறாத இடமெல்லாம் ஏறி இறங்கி வேலை காலி இல்லை என்ற ஒரே பதிலைப் பெற்றுச் சலித்து வந்த சிங்காரத்துக்கு இந்த விளம்பரம் ஒரு வரப் பிரசாதமாகத் தோன்றியது. ஐந்து ரூபாய் செலவில் வீடுதேடி வேலை வரும் என்றால் கசக்குமா ? அவன் மட்டும் ஏழாவது முறையிலாவது எஸ்.எஸ்.எல்.சி. தேறியிருந்தால் இவ்வளவு கஷ்டம் இருந்திருக்காதுதான். ஆனால், அவன் ஆஜராகாவிட்டால் பரீட்சையே சோபிக்காதோ என்னவோ என்றுதான் பரீட்சை அதிகாரிகள். அவனைத் தேற விடாமல் பரீட்சைக்குப் பதினைந்து ரூபா யாக பழைய பாக்கி வசூலித்து வந்தார்கள். ஙஇந்தப் பரீட்சைத் தொந்தரவிலிருந்து தப்பிக்கவாவது ஏதாவதொரு வேலை பார்த்துக் கொள்ள வேண்டும்‘ என்று தான் தீவிர முயற்சியில் ஈடுபட்டான் சிங்காரம்… பரீட்சையில் தேறா விட்டாலும். நிமிஷத்துக்கு 20 வார்த்தை பஞ்சமில்லாமல் தப்புத் தப்பாக வேணும் டைப் அடிக்கவும் தெரியும். கையில் பிரித்த பேப்பரை மடிக்காமல், அப்படியே தபாலாபீசுக்குப் போய் பணத்தையும் அனுப்பி, தபாலையும் எழுதிப் போட்டு விட்டுத்தான் வீட்டுக்கு வந்து ‘அப்படா’ என்று உட்கார்ந்து கொண்டான் சிங்காரம் !
பணம் அனுப்பி இரண்டாம் நாளே பதில் வந்து விட்டது, அச்சிட்ட கார்டுதான் “தங்கள் விண்ணப்பு மனு பதிவு செய்யப்பட்டது. வேலை விவரம் விரைவில் அறிவிக்கப் படும்… மூன்று மாதங்கட்குள் விவரம் கிடைக்காவிடின், நேரில் சந்திக்கவும்” என்று அச்சிட்டிருந்தது. அந்தக் கடிதம் கிடைத்தது, சிங்காரத்துக்கு வேலையே கிடைத்து விட்டதுபோலத் தானிருந்தது. பணம் அனுப்பியவுடனே கிடைத்த பதில் அவன் நம்பிக்கையை மேலும் வளர்த்தது. ‘ஏதாவது ஏமாற்றாக இருக்குமோ ? என்ற சந்தேகம் தலை துhக்கும் போதெல்லாம். மெய்காப்பான் என்ற கம்பீரமான பெயர் “இருக்காது; இருக்காது” என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்தது.
ஒவ்வொரு நாளும் தபால்காரன் வரும் வரை காத்திருக்கும் பொறுமை இல்லாமல் தபால் ஆபீசுக்கே, போய் தவம் செய்து காத்திருந்து வெறும் கையுடன் திரும்புவது வழக்கமாகிவிட்டது. மூன்று மாதம் முடிந்ததும் மீண்டும் ஒரு கார்டு… ‘தங்கள் பொது அல்லது தொழில் நுணுக்கத் தகுதிகளில் முன்னேற்றம் உண்டா ? பரீட்சை எதிலும் தேறியதற்குச் சான்றுகள் உண்டா. தபால் மூலம் தெரிவிக்கவும் – மெய்காப்பான்ங அதைப் படித்துக் கொண்டிருக்கும்போதே கைகள் கார்டை சுக்கு நுhறாக கிழித்துக் கொண்டிருந்தன. அவனுடைய பரீட்சை நம்பர் வராத பத்திரிகைகள் மீது கூட அவனுக்கு இவ்வளவு கோபம் வந்ததில்லை. மூன்று மாதத்தில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுவிடும் ? வெள்ளி விழா வயதில் ஏற்படாத புது தகுதி மூன்று மாதத்தில் வந்து விடுமா ? வேலையே கிடைக்காவிட்டாலுங்கூட இப்படி வெளிப்படையாக, அவமரியாதை செய்தவர்களை நேரில் போயாவது ஒருகத்து கத்திவிட்டு, வரவேண்டுமென்று தீர்மானித்தான்.
அவன் தீர்மானித்தது போல அத் தீர்மானத்தை செயல் படுத்துவது அவ்வளவு சுலபமாக இல்லை. பரந்த அச்சென்னை மாநகரிலே அமிர் உன்னிசா பீகம் சந்தைக் கண்டு பிடிப்பதும் அவ்வளவு எளிதாக இல்லை. அப்படி ஒரு சந்தின் பெயரைப் பார்த்தபோது சிங்காரத்துக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி சந்திர மண்டலத்தை நேரில் கண்ட விஞ்ஞானிக்குக் கூட ஏற்பட்டிருக்காது. ஆனால் என்ன துரதிர்ஷ்டம் ? 7-ஆம் நம்பர் வீட்டை அடுத்து 8-ஆம் நம்பர்தான் ! 7 ஏ என்ற நம்பரே இல்லை ! முஸ்லிம் பெருமக்கள் நிறைந்த அந்த அவசர உலகத்தில் அவனுக்கு நின்று பதில் சொல்ல எவருமே இல்லை ! நல்ல வேளை அந்த ஏழாம் நம்பர் வீட்டு வாசல் கம்பியிலே கட்டப் பட்டிருந்த அந்தச் சிறிய எழுத்து போர்டு இழந்த நம்பிக்கையை. மீட்டுக் கொடுத்தது. ஒரே வீடு இரண்டாக்கப்பட்டிருந்தது. நல்ல வேளை ஏமாற்று இல்லை, அந்த ஒரு கணத்தில் என்னவெல்லாம் நினைத்து விட்டான் ? ‘வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறி மாறி வரும்ங என்பது உண்மையோ, பொய்யோ ? அந்த ஒரு ஐந்து நிமிடத்தில் ஏமாற்றமும் மகிழ்ச்சியும் மாறி மாறி வந்த வண்ணமிருந்தன. ஆசையோடு வாசலை நெருங்கிக் கதவில் கை வைத்த அவன் கைகளில் பூட்டுத்தான் தட்டுபட்டது. பக்கத்தில் கேட்டும், உருப்படியான தகவலேதும் கிடைக்காமல், ஏமாற்றத்தோடு ஊர் திரும்பினான் சிங்காரம் ! திரும்பும் போதே “எப்படியும் மீண்டும் ஒரு முறை பழியாகக் கிடந்தாவது பார்த்து விட்டு வரவேண்டும்” என்ற தீர்மானத்துடன்தான் திரும்பினான்.
வீட்டுக்கு வந்த மறுநாள் மீண்டும் அதே விளம்பரம் வந்தபோது, உடனே எப்படியும் அங்கு சென்று தீர விசாரிப்பது அல்லது போலீஸ் உதவியோடாவது ஏமாறப் போகும் அப்பாவி களையாவது தடுத்தாட் கொள்வதுதான் தன் கடமை என்று தீர்மானித்தான்.
பகலில் போனால் அங்கே போயிருக்கிறார்; இங்கே போயிருக்கிறார் என்று ஏதாவது சாக்கு போக்கு சொல்லிவிடுவார்கள் என்று இரவு ஒன்பது மணிக்கு மேல்தான் அங்கே சென்றான். வீட்டை நெருங்க நெருங்க அவன் தைரியம் அவனிடமிருந்து விடை பெற்றுக் கொள்ள ஆரம்பித்தது. அந்த வீட்டை அடைந்ததும் கம்பிகட் கிடையே உள்ளே இருந்து கைகளை விட்டு வாசற்பக்கம் கட்டிக் கொண்டிருக்கும் இரண்டு அழகிய வளைக்கரங்களைக் கண்டான்.
“மெய்காப்பான் ஏஜென்சிஸ்” அவன் முடிக்கவில்லை.
பூட்டிக் கொண்டிருந்த கரங்களிலிருந்து சாவி வெளியே கீழே நழுவியது.
“சாவி விழுந்து விட்டது. எடுத்துத்தர முடியுமா ?” குரல் குயிலாக இசைத்தது.
“மெய்காப்பான் இருக்கிறாரா ?” குனிந்து சாவியை எடுத்தபடியே கேட்டான்.
“இல்லை, வேலை விஷயமாக வெளியே போயிருக்கிறார்…”
“இந்த இரவிலா ?”
“ஸ்டுடியோ வேலை என்றால் இந்த வேளைதான் சௌக்கியம்.”
“பரவாயில்லை; எவ்வளவு நேரமானாலும் இருந்து பார்த்து விட்டுப் போகிறேன்… அதனால்தான் ராத்திரியில் வந்தேன்” பதிலுக்கு காத்திராமல் கதவைத் திறந்து கொண்டு உள்ளேயே வந்து கருங்கல் திண்ணையில் அமர்ந்தான் சிங்காரம்.
“வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லையா ?”
“என்னைத் தவிர வேறு யாருமே இல்லை.”
“முன்பு கூட போன வாரம் ஒரு கடிதம் வந்தது. நேற்று நான் நேரில் வந்தபோது கதவு பூட்டியிருந்தது…” இழுத்தான் சிங்காரம்.
“வெளிக் கதவை உள்ளிருந்தே பூட்டிக் கொண்டிருப்பது தான் வழக்கம்…”
“வேலைக்காக வீடு தேடி வருபவரை விரட்டியடிக்க வழியா ?”
“வேறு வழி ? கடிதம் என்றால் ஏதாவது பதில் எழுதலாம். பேசாமலே இருந்து விடலாம்”
“அப்படி யென்றால் எம்ப்ளாய்மெண்ட் ஏஜென்சீஸ் என்பதெல்லாம் ஏமாற்று வேலைதானா ?”
முழுவதும் அப்படிச் சொல்லி விடுவதற்கில்லை. நூறில் ஒன்று இரண்டு பேருக்கு வேலை பார்த்து கொடுத்திருக்கிறார்.
“உங்கள் அண்ணனுக்கு என்ன வேலை ?”
“இதே வேலைதான், வேலைத் தேடித் தரும் வேலை… அவரும் இப்படித்தான் வேலை தேடித் தேடி அலுத்து இப்படி ஒரு விளம்பரத்தைக் கண்டுதான் விண்ணப்பம் செய்தார்…”
“அவருக்கும் இதே கதை தானா ?”
“பிழைக்க வழியில்லையா ? பத்து ரூபாய் மணியார்டரோடு விண்ணப்பிக்க” என்ற விளம்பரத்திற்கு பணத்தை அனுப்பிவிட்டு, நடையாய் நடந்து கடைசியிலே அவரே சொன்னாராம். “இன்னுமா தெரியவில்லை ? இது தான் பிழைக்கும் வழி !” என்று !
– ஆகஸ்ட் 18 2005