வேகம் – விவேகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 9, 2023
பார்வையிட்டோர்: 6,357 
 
 

“வா ராஜா வா” …. என்று நண்பனை உற்சாகமாய் வரவேற்றான் பாலு. இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள் ; இருப்பது அவர்கள் சொந்த ஊரான ஒரு கிராமத்தில். கல்லூரி படிப்பு முடித்தவுடன் பாலுவிற்கு அரசாங்க வேலை கிடைத்து விட இன்ஜினியரிங் முடித்த ராஜாவிற்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. பல இடங்களில் முயன்று கொண்டு இருக்கிறான் . அது வரை சும்மா இருக்க விருப்பம் இல்லாமல் அந்த கிராமத்தின் கடை தெருவிலேயே இடம் பார்த்து சின்னதாக ஒரு மெக்கானிக் ஷாப் ஆரம்பித்து நடத்தி வருகிறான் ராஜா.

“எப்படி போய் கொண்டு இருக்கிறது உன் மெக்கானிக் ஷாப்?“

“ஷாப் எங்கே போகப்போகுது; நான்தான் எங்கேயாவது போகவேண்டும் போல் உள்ளது” புலம்பினான் ராஜா.

ஏதேனும் வேலைகள் வருகிறதா; இல்லையா? உண்மையான அக்கறையுடன் கேட்டான் பாலு.

பரவாயில்லை; ஆனால் நான் ரொம்ப எதிர்ப்பார்ப்புடன் ,ஆசையாக இந்த ஷாப் ஆரம்பித்தேன். நம்மூர் மக்கள் சில பேர் பைக் ,மோட்டார் எல்லாம் ரிப்பேர் – க்கு கொடுத்தாங்க. நானும் நல்ல முறையில், உடனுக்குடன் செய்து கொடுத்தேன். ஆனால் எதிர்பார்த்த அளவு பணமோ, பாராட்டோ கிடைக்கவில்லை. கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது என்றான் ராஜா.

“இது ஆரம்பம்தானேப்பா…. அதற்குள் இப்படி விரக்தி அடையாதே. எல்லாம் சரியாகும். அதற்கு முன்னால் கொஞ்சம் பொறுமையாக நாம் இதைப்பற்றி பேசலாமா”.

“சொல்லுப்பா.எனக்கும் உன் யோசனை தேவைதான்” என்றான் ராஜா.

“அடிப்படையில் நமது ஊரில் எத்தனை பேர் பைக், மோட்டார் வைத்துள்ளார்கள் ? இருந்தாலும் அவை அடிக்கடி ரிப்பேர் ஆகும் என்றோ அத்தனை பேரும் உன்னிடம்தான் வருவார்கள் என்றோ எதிர்பார்க்க முடியுமா ?அவர்கள் இதுவரை பார்த்து வந்த மெக்கானிக் பக்கம்தான் போவார்கள் . நீ புதுசு இல்லையா ?”

“உன் ஆர்வத்திலோ, திறமையிலோ எந்த குறைவும் இல்லை. ஆனால் உன் அவசரமும், அணுகுமுறையும்தான் தவறு. அத்துடன் நீ கொஞ்சம் வியாபார தந்திரங்களை தெரிந்து கொள்ள வேண்டும் “ என்றான் பாலு.

“என்ன சொல்ற பாலு?”

“ஆமாம். உன்னிடம் திறமை இருக்கு ; உழைக்கும் ஆர்வம், ஆசை இருக்கு. ஆனாலும் கொஞ்சம் நகாசு வேலைகள், தந்திரங்கள் தேவைப்படுகிறது. நான் சொல்வது கொஞ்சம் தப்பாகத்தான் தெரியும். ஆனால் இவை எல்லாம் கொஞ்ச காலத்திற்குதான். நீ கொஞ்சம் ஸ்டெடியாகி விட்டால், நல்ல பெயர் எடுத்து விட்டால் பக்கத்து ஊர் மக்கள் கூட உன்னை தேடி வருவார்கள். பிறகு பிரச்னை இல்லை.

உன் ஆர்வக்கோளாறினால் நீ உடனுக்குடன் ரிப்பேர் பார்த்து சரி செய்வதை நிறுத்து.

நீ உடனுக்குடன் சரி செய்து கொடுத்தால் “பிரச்னை ஒன்னும் இல்லையோ அவசரப்பட்டு மெக்கானிக் ஷாப் வந்துட்டோமோ ? அப்படியே பிரச்னை இருந்தாலும் இவர் இவ்வளவு சீக்கிரம் பண்ணிட்டாரே ; நல்லா பண்ணி இருப்பாரா; திரும்பவும் வர வேண்டி இருக்குமோ ?” என்றெல்லாம் அவர்களுக்கு சிந்தனை ஓடும். எல்லாவற்றிக்கும் மேல உள்ளுர் தம்பிதானே என்று கொஞ்சம் உன்னிடம் சலுகைகள் எதிர்பார்ப்பார்கள்.

உன்னிடம் ரிப்பேர் – க்கு கொடுத்தவருக்கு நியாயமாய் நடந்து கொள். துரோகம் செய்ய வேண்டாம்.

முதல் நாள் அவர்கள் மோட்டாரை கொண்டு வந்து கொடுத்தவுடன் பிரித்து பார்த்து என்ன பிரச்னை என்பதை கண்டு பிடி. நன்றாக கவனித்து அதை சரி செய்து. ரெடி பண்ணி வைத்து விடு.

ஆனால் அவர் வந்து கேட்கும்போது ‘பார்ட்ஸ்லாம் பிரித்து வைத்து இருக்கேன்.

எண்ணெய் போட்டு கிளீன் பண்ணி இருக்கேன். ஒரு நாள் போகட்டும் என்று சொல்.

மறு நாள் “ஒரு பார்ட் மாற்றவேண்டும். எங்கிட்ட கைவசம் இல்லை அய்யா. டவுன்-க்கு போன ஒருத்தர் கிட்ட வாங்கி வர சொல்லி இருக்கேன். நாளைக்கு ரெடி பண்ணிடலாம் என்று சொல்.

மறு நாள் “பார்ட் கிடைத்து விட்டது.செட் பண்ணிக்கிட்டு இருக்கேன். அதுக்குள்ள ஒரு அர் ஜென்ட் வேலை வந்து விட்டது. நாளைக்கு உங்க மோட்டார் ரெடி ஆகி விடும் “என்று சொல்.

மறு நாள் அவர் வந்தவுடன் ஒரு தடவை சரி பார்த்து அவரிடம் கொடு. காசு ஒன்றே பிரதானமாக ரொம்ப பணம் கேட்காதே. கொஞ்சம் குறைத்தே சொல்லு பரவாயில்லை.

மோட்டார் பைக்-கா இருந்தால் அவரை ஓட்டி பார்க்க சொல்லி கூடவே போ.

பம்ப் செட் மோட்டார் போல என்றால் அவர் கூடவே பொய் பிக்ஸ் பண்ணி கொடு.

இதன் மூலம் கஸ்டமர் மனதில் உன்னை பற்றி ஒரு நல்ல அபிப்ராயம் வரும். தம்பி திறமைசாலி; ரொம்ப பொறுமையாக, ஆராய்ந்து பார்த்து, புதுசாக வேண்டியது வாங்கிப்போட்டு, நல்லா ரிப்பேர் பண்ணி கொடுத்திருக்காரு; நிறைய வேலைகள் இருந்தாலும் தனிப்பட்ட அக்கறை எடுத்து ரொம்ப உதவி செய்கிறார்; காசும் அதிகம் வாங்கவில்லை என்று உன் மேல் ஒரு நம்பிக்கை வரும்.

“உனக்கு மெஷின் ஓட்டம் தெரிந்த அளவிற்கு மனிதர்களின் எண்ணவோட்டம் புரியவில்லை.கொஞ்சம் இது போல நடந்து பார். பிறகு உனக்கே புரியும். வண்டி ஓட்டுவதில் மட்டுமல்ல ரிப்பேர் பார்த்து சரி செய்வதிலும் வேகத்தை விட விவேகம் முக்கியம்” என்றான் பாலு.

“எல்லாவற்றிற்கும் மேலே இன்னொரு விஷயம் நீ கட்டாயம் யோசிக்க வேண்டும். இங்கேயே தொடர்ந்து மெக்கானிக் ஷாப் நடத்தப்போகிறாய் என்றால் நீ உன் தேடுதலை அதிகப்படுத்த வேண்டும். உன் திறமை பிரபலமாகி அங்கீகரிக்கப்பட்ட பின்தான் வெற்றி கிடைக்கும். நீ கொஞ்சம் காத்திருக்கத்தான் வேண்டும்.

அல்லது வேற வேலை தேடப்போகிறாய் என்றால் அது வரை மெக்கானிக் ஷாப் உழைப்பு ஒரு அனுபவக் கல்வியாக இருக்கட்டும். சரியா…..?

“சரிதான். ரொம்ப குழப்பமாக இருந்தேன். உன் ஆறுதலுக்கும், ஆலோசனைக்கும் ரொம்ப நன்றி ”

“உன் மோட்டார் பைக் நல்லா ஓடுதா? ஒன்னும் பிரச்சனை இல்லையே? ஏதாவது என்றால் என்னிடம் கொடு. இரண்டே நாளில் நான் சரி பண்ணி தருகிறேன்” என்று சிரித்தான் ராஜா.

அவனது கிண்டல் புரிந்தவனாக, “அய்யா சாமி, எங்கிட்ட பைக் இருக்கு. ரொம்ப அவசியம் என்றால்தான் எடுப்பேன். மத்தபடி எங்கே போனாலும் சைக்கிள்தான்..”

“சைக்கிள் ரிப்பேரிங் எனக்கே தெரியும் கவலையை விடு” என்றான் பாலு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *