சோடைக்குச் சொத்து..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 15, 2018
பார்வையிட்டோர்: 7,684 
 

சொத்துத் தகராறில்லை. பாகப்பிரிவினை.

அந்த பங்களா வீட்டிற்கு முக்கிய உறவு, வேண்டியப்பட்டவர்களெல்லாம் வந்திருந்தார்கள். பஞ்சாயத்திற்கென்று ஊரிலுள்ள பெரிய மனிதர் பரமசிவமும் வந்திருந்தார். அந்த குடும்பத்திற்குப் பெரியப்பாவான தர்மராசாவும் வந்திருந்தார். பாகப்பிரிவினைக்கு உள்ளான சோமு, ராமு, பாலு, அவரவர் மனைவி மக்கள், முத்து இருந்தார்கள்.

சிக்கல்…. முத்துவிற்குப் பாகப்பிரிவினை செய்வது பற்றி.

தணிகாலசத்திற்கு நான்கும் ஆண் பிள்ளைகள். அதில் கடைசியாகப் பிறந்தது மட்டும் சோடை. அதிகம் வேண்டாமென்று கருக்கலைப்பு மாத்திரை போட… அது சரியாக வேலை செய்யாமல் கருவைத் தாக்கி கலக்கி விட்டதோடு சரி. கிறுக்கனென்று சொல்ல முடியாமல் அழுக்கனென்றும் சொல்ல முடியாமல் அரைகுறை மூளை வளர்ச்சி;யில் ஒரு பிள்ளை. அவன்தான் முத்து. அவனுக்கு இன்றைய தேதியில் வயது இருபத்தி எட்டு. நல்ல வாலிப தோற்றம். இருந்து என்ன செய்ய…..? வயதுக்கு உரிய மூளை இல்லாமல் சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளை. இல்லை…. தன் விருப்பதிற்குச் செய்யும் குறைப் பிள்ளை.

பிள்ளை இப்படியென்பதால் யாரும் உட்காரவைத்துச் சோறு போடவில்லை. அவனும் உட்கார்ந்து சோறு தின்னவில்லை. அப்பா காலத்திலிருந்தே இவர்களுக்கு ஓட்டல் தொழில் என்பதால் வளர வளர பிள்ளைகள் அப்பாவிற்கு உதவியாய் கல்லாவில் உட்கார்ந்து, அதன் வழியே மெல்ல மெல்ல தொழில் கற்று, படிப்பு முடிந்த பின் நிர்வாகத்தை திறம்பட எடுத்துக் கொண்டு விட்டார்கள். முத்துவிற்கும் தன் பங்கிற்கு ஒரே வேலை. கையில் பிளாஸ்டிக் வாளி, வாழை மட்டையுடன் எச்சில் இலைகள் தட்டுகள், டம்ளர்கள் எடுத்து மேசையைச் சுத்தம் செய்துவிட்டு பத்துப்பாத்திரங்கள் கழுவது. அதற்கு மேலும் கூட்டுதல், பெருக்குதல் என்று ஓய்வு ஒழிச்சலில்லாத அடிமட்ட வேலை.

இதன் காரணமாக எப்போதும் இடையில் அழுக்கு வேட்டி. அழுக்கு சட்டை. எண்ணெய்க் காணாத தலை. எப்போதும் வியர்வை முகம், உடல். ஆட்டு தாடி, மீசை. மக்கு தோற்றம், அரை கிறுக்கு கலை. எப்போதும் தண்ணீரில் புழங்குவதால் கை கால்கள் வெளுத்து, வெடித்து…. அருவருப்பு.

அவனுக்கு யாரிடமும் அநாவசியப் பேச்சுக் கிடையாது. இயந்திர மனிதனாய் யார் சொல்லாமலும் தன் வேலைகளைச் சரியாகச் செய்வான். வாடிக்கையாளர்களுக்கு அவன் மேல் பரிவு பச்சாதாபம் என்றாலும், ”என்ன முத்து சவுகரியமா? ” என்று அவர்கள் பேச்சுக் கொடுத்தாலும் பேசமாட்டான். தப்பித் தவறி ஏதாவது கோபம் வந்தால் சாமான் சட்டுகளைத் தூக்கி அடிப்பான். இவன் குணம் தெரிவதால்… வேலை ஆட்கள் கூட இவனிடம் அநாவசியப் பேச்சுக் கிடையாது.

மற்றவர்கள் போல இவனுக்கு மனைவி மக்கள் கிடையாது. யார் பெண் கொடுப்பார்கள் ? அதனால் வீட்டில் அம்மா அப்பா முதல் யாரும் முயற்சி எடுக்க வில்லை. பெற்றவர்கள் பிள்ளை ஒன்று சோடை என்பதிலேயே உருகி மாய்ந்தது போனார்கள்.

இப்போது எல்லாரும் நாற்பது வயதைத் தாண்டி மனைவி மக்கள் பிள்ளைகளென்று ஆகி விட்டதால் பாகப்பிரிவினை. அதில் முத்துவிற்கு எவ்வளவு கொடுப்பது என்பதில் சிக்கல். தாங்களாய் முடிவெடுத்து முடிப்பதை விட மற்றவர்கள் முன்னிலையில் செய்தால் பின்னால் யாரும் குறை சொல்ல வாய்ப்பு இல்லை என்பதால் இந்த ஏற்பாடு.

வந்த முக்கியஸ்தர்களில் சிலர் மட்டும் நாற்காலி, பெஞ்சுளில் அமர்ந்திருக்க…..மற்றவர்கள் தரையில் அமர்ந்திருந்தார்கள். ராமு, சோமு, பாலு.. அண்ணன் தம்பிகள் அனைவரும் ஒன்றாக அமர்ந்திருந்தார்கள். அவர்கள் மனைவிகள் தூணோரம் நின்றார்கள். முத்து இதில் சம்பந்தப்படாதவனாய் கூட்டத்தை விட்டு சற்றுத் தள்ளி சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருந்தான்.

”வர வேண்டியவங்களெல்லாம் வந்துட்டாங்களா ? ” பஞ்சாயத்து பரமசிவம் பொதுவாய்க் கேட்டு எல்லாரையும் பார்த்தார்.

ராமு, சோமு, பாலு எல்லோரும் திருப்தியாய்த் தலையாட்ட ஒரு சிலர் மட்டும், ”வந்தாச்சு!” மொழிந்தார்கள்.

பரமசிவம் தொண்டையைக் கனைத்துப் பேச்சுக்கு தயாராகி, ”ராமு ! நீ தாய்க்குத் தலைப் பிள்ளை. வீட்டுக்கு மூத்தப்பிள்ளை. விசயத்தைச் சொல்லுப்பா ? ” கேட்டு அவனைப் பார்த்தார்.

அவன், ”சொல்றதுக்கு ஒன்னுமில்லே ஐயா. நாங்க மூனு பேர், குடும்பம்…. பேசி வைச்சதச் சொல்றேன். கடைக்குட்டித் தம்பி முத்துவிற்குக் கொடுக்கிறதைப் பத்தி எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லே. அவனுக்குக் கூட்டிக் கொடுக்கனுமா குறைச்சுக் கொடுக்கனுமா என்கிறதுலதான் சிக்கல். பெரியவங்களாப் பார்த்து நீங்க நல்லது செய்தால் எங்களுக்குத் திருப்தி.” நிறுத்தினான்.

பரமசிவம் ஒரு நிமிடம் நிதானித்தார். அவர்கள் மனதில் இருப்பதை அறிய ஆசைப்பட்டார்.

”சரி. அவனுக்கு எப்படி கொடுக்க உங்களுக்குச் சம்மதம்.? ” கேட்டார்.

”ஐயா ! நாங்க பொண்டாட்டி புள்ளைங்க உள்ளவங்க. முத்து அக்கு தொக்கு இல்லாத அசாமி. குறைச்சுக் கொடுக்கலாம்;ன்னு யோசனை.” நிறுத்தினான்.

”இது தப்பு !”தர்மராசா ஆட்சேபத்தை முதலில் தெரிவித்தார்.

”பெரியப்பா !” சோமு அதிர… ராமு, பாலு அவர்கள் மனைவிகள் அப்படியே அவரைப் பார்;த்தார்கள்.

”கொஞ்சம் பொறுமையாய் இருங்க தர்மராசா.” என்று அவரை அடக்கிய பரமசிவம், ”மேலே சொல்லுப்பா !” ராமுவைப் பார்த்தார்.

அவன் அடுத்து பேச தயாராகாமல் விழித்தான்.

”எதுக்குத் திடீர்ன்னு இப்படி பாகப்பிரிவினை ? ” பரமசிவம் கேட்டார்.

”எல்லாரும் குடும்பமாகியாச்சு. இனி பொண்டாட்டி புள்ளைகளுக்குப் பொதுவுல செய்தால் எங்களுக்குள்ளேயே வலி, வருத்தம், பிரச்சனை வரலாம். இதைத் தடுக்கத்தான் இந்த ஏற்பாடு.”

”நல்ல யோசனை ! முத்து சொத்து ? ” என்றார்.

”நோய் நொடின்னு முடியாமல் போனால் அவன் பங்குல கூசாமல் எடுத்துச் செலவு செய்து…. பிற்பாடு மிச்சம் இருக்கிறதை நாங்க பிரிச்சிக்கிறதாய் யோசனை.”

”இதுவும் நல்ல முடிவு. எதுக்கு இந்த பஞ்சாயத்து ? ”

”ஐயா !”

”இதோ பார் சோமு. முத்து தலையெடுத்ததிலிருந்து பாய் படுக்கைன்னு மொத்தமும் அவனுக்கு ஓட்டல் வீடாய்ப் போயிடுச்சு. சீக்குன்னா செலவு செய்யப் போறீங்க. செத்தா அங்கிருந்து அவனை எடுத்துப் போட்டுட்டு இருக்கிற மிச்சமீதியை மூனாய்ப் பிரிச்சிக்கப் போறீங்க. இதுக்கு எதுக்கு கூட்டி, குறைச்சிக் கொடுக்கனும்ன்னு ஆலோசனை ?”

சோமு விழித்தான்.

ராமு சுதாரித்தான்.

”அப்படி இல்லைங்கைய்யா. எப்படியும் பாகப்பிரிவினைப் பிரிச்சுத்தானே ஆகனும். அப்படி செய்தால்தானே நாங்களும் குடும்பத்திற்குக் கூசாமல் செலவு செய்ய முடியும். முத்துவையும் அவன் சொத்தை வைச்சு ரெண்டு ஆளுங்க போட்டு பராமரிக்கலாம். அப்படியே இல்லேன்னாலும் ஒரு அநாதை ஆசிரமத்துல விட்டாலும் அவன் காரியம் முடிஞ்சுடும்.” பாலு விலாவாரியாக சொன்னான்.

”அதாவது….. தம்பி பின்னால உங்களுக்குப் பாரமாகிடக் கூடாது என்கிறதுக்காக முன்னெச்சரிக்கை. அதானே ? ” பரமசிவம் கேட்டு அவர்களைப் பார்த்தார்;.

அவர்கள் பேசவில்லை.

”சரி. அவனுக்கு ஏன் குறைச்சிக் கொடுக்கனும்…? ”

”சொல்றேன். அப்பாவுக்கு முன்னும் சரி பின்னும் சரி. எங்க மூணு பேரோட புத்தி, உடலுழைப்பால்தான் தொழில் நிலைச்சு நல்லா இருக்கு. சொத்தும் அழிவில்லாமல் அதிகமாய் இருக்கு. இதுல எதுவும் இல்லாத முத்துவுக்குச் சமம் தேவை இல்லேங்குறது எங்க அபிப்பிராயம்.” என்றான் சோமு.

”இது தப்பு. உங்க உயர்வுல முத்து உழைப்பும் இருக்கு.” என்றார் தர்மராசன்.

”பெரியப்பா !!” இப்போது ராமு அலறினான்.

”நான் முத்துவுக்கு வக்காலத்து வாங்கலை. உண்மையைச் சொல்றேன். அவன் ஓட்டல்ல உடலுழைப்பைக் கொடுக்கிறான். தினம் ஒரு ஆள் சம்பளத்துக்கு மேல் முடக்குறான். அடுத்து…. உங்களைப் போல அவன் நல்லது கெட்டது உடுத்தலை. கலியாணம் காட்சி செலவில்லே. பொண்டாட்டி புள்ளைங்க, அது சம்பந்தமான உறவு செலவில்லே. உங்க சொத்து உயர்வுக்கு அவன் இப்படியெல்லாம் உங்க அளவுக்குக் காரணமாய் இருந்திருக்கான். மேலும் குறை. அப்படிப்பட்டவனுக்கு அதிகம் கொடுக்கனும். ஏன் குறை ? ” தர்மராசன் அவர்களைப் பார்த்தார்.

”இது வாதம் பெரிப்பா !” என்றான் சோமு.

”வாதம் இல்லேப்பா. சரியா தப்பா ? ” ஏறிட்டார்.

”சரிதான். கொடுத்துப் பிரயோசனம் ? ”

”அவனுக்குப் பிரயோசனம் இல்லேன்னாலும் அவனுக்குச் செலவு போக மிச்சம் நீங்கதான் எடுத்துக்கப் போறீங்க ? கொஞ்சமாய்க் கொடுத்தாலும் அவனுக்கு அதிகம் செலவானால் நீங்களும் கொடுத்துதான் முடிக்கனும். அதுக்கு அதிகமாய்க் கொடுத்து செலவு போக மிச்சம் எடுத்துக்கிறதுல என்ன தப்பு ?” கேட்டார்.

ராமு, சோமு, பாலு, அவர்கள் மனைவிகள் மொத்த பேர்கள் முகத்திலும் ஈயாடவில்லை.

எல்லாரும் கம்மென்றிருந்தார்கள்.

நீண்ட யோசனைக்குப் பின், ”சொத்தை சோடைப் போனவனுக்குத்தான் அதிகம் ஒதுக்கனும். இதுக்கு தர்மராசன் சொன்னது மட்டும் காரணம் இல்லே. அதுக்கு மேலும் ஒன்னு இருக்கு. நல்லா உள்ளவங்க கொறைச்சி எடுத்துக்கிட்டா அவுங்க புத்தி உழைப்பால இருக்கிறதைப் பெருக்கலாம்.. சோடையால முடியாது. இதுதான் முடிவு.” பரசிவம் கண்டிப்பு கறாராய்ச் சொல்லி துண்டை உதறி எழுந்தார்.

எல்லார் மனதிலும் இது சரியாய்ப் பட….யாரும் எதுவும் பேசவில்லை.

முத்துவிற்கு எதுவும் புரியவில்லை.

– 30-6-14

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *