விவேகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 19, 2013
பார்வையிட்டோர்: 8,995 
 
 

திலீபன் ஒரு பி.பி.ஏ. வேலையில்லா பட்டதாரி. விவசாயக் குடும்பம். வேலை தேடி முயற்சி செய்து கொண்டிருந்தான்.

ஒரு நிறுவனம் கூட இவனை நேர்முக தேர்வுக்கு கூப்பிடவில்லை. ஆரம்ப நிலை பயிலாளர், எழுத்தர் வேலைக்கு கூட ஐந்து வருஷ அனுபவம் கேக்கிற காலம் இது.

ஆனாலும், திலீபன் மனம் தளரவில்லை. மனு மேல் மனு போட்டுக் கொண்டேயிருந்தான். போட்ட அலுவலகங்களுக்கே மீண்டும் மீண்டும். வேலை வாய்ப்பு இணையதளம், ஈமெயில் மூலமாக.

பதில் தான் ஒன்று கூட வரவேயில்லை. எதிர் பார்த்து ஏமாந்தது தான் மிச்சம். இப்படியிருக்க, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல்,

வந்தது. ஒருநாள் அவனுக்கும் ஒரு கடிதம் ஈமெயிலில் . ஒரு பெரிய வணிக நிறுவனத்தின் மனித வள அதிகாரியிடமிருந்து.

“உங்களது மனு நிராகரிக்கப் பட்டுள்ளது.”.

கூடவே அந்த ஈமெயிலில்,

“ உங்கள் விண்ணப்பம் சகிக்க வில்லை.பிழைகள் இல்லாமல் முதலில் எழுதக் கற்றுக்கொள்ளுங்கள்.”

என்றும் எழுதியிருந்தது.

படித்ததும் திலீபனுக்கு ஒரே எரிச்சல். வேலை கிடைக்காத நிராசையை விட, “இவனுங்க யாரு என்னை குறை சொல்ல?” எனும் எண்ணமே தலை தூக்கியது. செம கடுப்பு.

திருப்பி காய்ச்சி ஒரு கடிதம் போட , திலீபன் கையும் மனமும் துறுதுறுத்தது. உடனே மெயில் எழுதவும் ஆரம்பித்து விட்டான்.

“என்னோட ஆங்கிலத்தை குறை சொல்ல நீங்க யாரு? ஏன் இந்த ஆணவம்? உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? வேலை இல்லைன்னு சொல்றதோட மட்டும் நிறுத்திக் கொள்ளுங்க. நீங்களும், உங்க நிறுவனமும். போங்கையா போங்க. ஸ்டுபிட்!”

இப்படியாக, கண்டபடி திட்டி எழுதிக் கொண்டிருந்த போது, அவன் அப்பா அடிக்கடி சொல்வது நினைவுக்கு வந்தது.

” திலீபா! கோபமும் வெறுப்பும், ஒரு எரியற தணல் மாதிரி. கையில் கிடைச்சதை எடுத்து மற்றவர் பேரில் எறியலாம்னு நினைப்போம். ஆனால் நம்ப கையை அது முதல்லே சுட்டுடும். எதையும், நிதானமா யோசனை பண்ணி செய். அவசரப்படாதே.”

அவனது ஆத்திரமும் , கோபமும் கொஞ்சம் தணிந்தது. அந்த எச். ஆர் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்க கூடுமோ? தனது விண்ணப்பத்தை எடுத்து மீண்டும் படித்தான். நிறைய குறைகள் கண்ணில் பட்டன.

நமது மேலே குறைகள் வைத்துக் கொண்டு ஏன் நிறுவன அதிகாரியைத் திட்டனும்? பாவம், மீண்டும் மீண்டும் அதே மனுவை பார்த்து அவர்களுக்கு அலுப்பு தட்டியிருக்கும் போல. அவர்களைத்திட்டி நமக்கு என்ன லாபம்?

பதிலை மாற்றி எழுதினான்.

“அன்புள்ள ஐயா, உங்கள் கடிதத்திற்கு மிக்க நன்றி. விண்ணப்பத்தில் உள்ள தவறுகளை சுட்டிகாட்டியமைக்கு வந்தனம். விண்ணப்பத்தை மாற்றி எழுதியுள்ளேன். உங்களுக்கு மிகவும் கடமைப் பட்டுள்ளேன். மீண்டும் நன்றி.”

கடிதத்தை நிறுவனத்திற்கு அனுப்பி விட்டான்.

பத்து நாளில், அந்த நிறுவனத்திலிருந்து ஒரு அலைபேசி அழைப்பு. “திலீபன்! உங்களுக்கு எங்கள் கம்பனியில் பயிலாளர் விற்பனை அதிகாரியாக வேலை நியமனம் செய்ய உள்ளோம். நாளை, உங்கள் இறுதி நேர்முக தேர்வு. உங்கள் சான்றிதழ்களுடன், எங்களது எச். ஆர். அலுவலகத்திற்கு நாளை வரவும். மேலும் விவரங்களுக்கு ஈமெயில் பார்க்கவும்.”

திலீபனுக்கு ஆச்சரியம். “எப்படி? என் விண்ணப்பம் தான் ஏற்கப் படவில்லையே ?”

“ஈமெயில் தகுதிச்சுற்றிலே நீங்க வெற்றி பெற்றதனால், நாளை நேர் காணல். வாழ்த்துக்கள். ”

திலீபன் , அப்பாவிற்கு மனதில் நன்றி சொன்னான். அப்பா படிக்காதவர் தான், ஆனால், என்ன ஒரு விவேகம் அவருக்கு!

**** முற்றும்

மகாத்மா காந்தி சொன்னது

Keep your thoughts positive because your thoughts become your words.
Keep your words positive because your words become your behavior.
Keep your behavior positive because your behavior becomes your habits.
Keep your habits positive because your habits become your values.
Keep your values positive because your values become your destiny.

இதே போன்ற கருத்தை ‘வாழ்க வளமுடன்’ – வேதாத்திரி மகரிஷி தமிழில் சொன்னது

“எண்ணத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் எண்ணங்கள்தான் சொற்களாகின்றன.

சொல்லில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் சொற்கள்தான் செயல்களாகின்றன.

செயலில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் செயல்கள்தான் பழக்கங்களாகின்றன.

பழக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன.

ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது!”

முரளிதரன் எனும் எனது இயற்பெயரில் நான் 2012 அக்டோபர் முதல் சிறுகதை எழுதி வருகிறேன். நான் அரசுடைமை வங்கியில், பணி புரிந்து விருப்ப ஒய்வு பெற்றவன். கோவன்சிஸ், மற்றும் வெளி நாட்டு வங்கிகளில், ரிஸ்க் ஹெட் மற்றும் ஆடிட்டராக பணி புரிந்த அனுபவம் உண்டு. மன வளம், கணிணி மற்றும் வணிக சம்பந்த கதை எழுத ஆவல். நல்ல கருத்து கூற விருப்பம். குங்குமம், குமுதம் போன்ற பத்திரிகைகளில் எனது…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *