கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 23, 2024
பார்வையிட்டோர்: 1,134 
 
 

(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அழகாய் மஞ்சள் மஞ்சளாய்ப் பூத்திருந்த பூவரச மரத்தில் காக்கைக் கூட்டம் உட்கார்ந்து கரையர் பூமியை விடியல் தொட்டது. வெள்ளைக் கொக்குகள் வரிசை வரிசையாய்ப் பாடசாலைக்கு வரத் தொடங்கி விட்டன.

“இப்பிடி ஒரு றிசல்ற்ஸ்’, ஸ்கூலின்ரை வரலாற்றிலையே வந்ததில்லை “.

“ஆறு பிள்ளையளெல்லே எட்டு ‘டி’ எடுத்திருக்கு….”

“அது ஒரு துரும்பு . மற்ஸிலை ‘ஏ’ டிவிசனிலை எல்லாப் பிள்ளையும் எல்லே டி எடுத்துத் தள்ளியிருக்கு. நூறு வீதம் டி……”

“கெட்டிக்காறப் பிள்ளையள் எடுக்கும் தானே…..”

“நீ வேண்டாமெண்டு விட்ட கிளாஸ் – பேந்து விசர்க்கதை கதையாதை – மூர்த்தி மாஸ்டர் ஒரு பிடி பிடிச்சது உண்மை . அந்தால் தானே கிளாஸ் ரீச்சரும்…..”

“அவங்கள் சரியான குளப்படி எண்டெல்லோ நான் விட்டனான். சும்மா கிண்டிக் கிண்டிக் கேள்வியள் கேட்டபடி நிப்பாங்கள்…”

“மூர்த்தி மாஸ்டர் லீவே எடுக்கிறேல்லை, எத்தினை நாள் பின்னேர வகுப்பு எடுத்திருக்கும். கஷ்டப்பட்டால் பலன் வருந்தானே .. உனக்குத் தெரியுந்தானே முந்தி யொருக்கா…..”

உஷ்ணமான கோடை காலத்தில் ஒரு பூவை வருடுவது போல் வருடி வருடி இந்தப் பூமியின் இருளைச் சூரியன் அகற்றிய பிறகு வரும் காலைப் பொழுது, உடலுக்கும் மனதுக்கும் மிகச் சந்தோஷமானது. அப்படியான ஒரு நேரத்தில் வகுப்பினுள் நுழைகிறார் மூர்த்தி மாஸ்டர்.

“குட் மோர்னிங் சேர்.”

“குட் மோர்னிங் பிள்ளையள் … சிற் டவுண் … இண்டைக்கு அறுபத் தெட்டாம் அலகு … அட்சர கணிதக் கோவைகள் படிப்பம் என்ன ?….”

“என்ன சேர்…… இன்னும் சிலபஸ்’ முடியேல்லை – யாழ்ப்பாண மாவட்டப் பொதுத் தேர்வும் முக்காவாசியிலை போய்ச் செய்தனாங்கள்…”

ரூபியின் செல்லமான முணு முணுப்பு.

“பேப்பர் செய்யாமல் ஃபைனலுக்குப் போக ஏலாது சேர்”

பிரசன்னாவின் பயம்

“என்ன சேர் முன்னோடியிலை தான் வரும் போல இருக்கு….”

கீதாவின் சோகம் !

“சேர், சிலபஸ் முடிப்பியளோ, மாட்டியளோ?”

குரலை உயர்த்திய வாசுவின் கோபம். அவனுக்கு வரம்பாய் இரு புருவம்.

“என்ன செய்யிறது பிள்ளையள்? ஆண்டு 10 சிலபஸ் வலு நீளம். அதையும் முடிச்சு , ஆண்டு 11 உம் முடிக்கிற தெண்டால் ….? பாருங்கோவன் எத்தினை நாள் மோர்னிங்கிளாஸ் போட்டிட்டம். முடியுதில்லை …… பாப்பம்…”

“ஐயோ சேர். அப்ப சிலபஸ் முடியாதோ?”

மொழி கடந்த கவிதையாய் மல்லிகாவின் முகத்தில் ஒரு பரபரப்பு.

“சேர், மற்ஸ் பெயிலெண்டால் ஏ.எல் படிக்கேலாது சேர்….” தயங்கிய தமயந்தியின் நிழல் தாழ்வாரத்தில் போய் விழுந்தது.

மூர்த்தி மாஸ்டருக்குப் பொறுக்கவில்லை. போன வருடம் கற்பித்த ஆசிரியர் எதையும் ஒழுங்காகக் கற்பிக்காததால் வந்த வினை ….. ஆனாலும் …..

இந்த மாணவி ஏ.எல்’ லுக்குப் போகாமல் விடுவதைத் தடுக்கக் கூடிய திறன் அவருக்கு இல்லையானால் அவர் ஏன் இந்த வருடம் வகுப்பை ஏற்றிருக்க வேண்டும்?

உணர்வுகள் அம்புகளைப் போலச் சீறிக்கொண்டு மேலே வந்த போது……..

“பிள்ளையள் ….. பயப்பிடாதேங்கோ ….. உங்களுக்குச் ‘சிலபஸ’ முடிச்சு, றிவிசனும் செய்து …. வடிவா ஆயத்தப்படுத்திச் சோதினைக்கு விடுறது என்ரை பொறுப்பு …… அதை நான் எப்படியும் செய்வன்…”

சொல்லிவிட்டார்!

நவம்பர் 10

கண்கள் குழி விழுந்து, உடல் மெலிந்து , பேயறைந்தவன் போல் இருந்தான் விஜயன். நெற்றியில் கையை வைத்துப் பார்த்தார் மூர்த்தி மாஸ்டர். மலேரியாவின் ஊர்த்துவ நடனம் சற்றும் குறைவதாக இல்லை. வானில் நிலாக் கொம்பு முளைத்து விட்டது. நேர்ஸ் சொன்னது நினைவில் வந்தது, “உங்கடை மகனுக்குப் பக்கத்திலையே இருங்கோ …… உடம்பிலை ஏதாவது மாற்றம் தெரிந்தால் கூப்பிடுங்கோ …..”

“கடவுளே… அப்பிடி ஒண்டும் ….” என்று வேண்டிக் கொண்ட அதே வேளை “மற்ஸ் பெயிலெண்டால் ஏ.எல் படிக்கேலாது சேர்” என்ற குரலும் உள்ளே கேட்டது. இதயத்தின் ஆழத்தில் இருந்து பெரு மூச்சு ஒன்று எழுந்தது. மண்டையில் முட்சக்கரங்கள் சுற்ற ஆரம்பித்து விட்டன.

நவம்பர் 11

இன்னும் மயக்கம் தெளியவில்லை. வாயிலிருந்து ஏதேதோ குழம்பிய சத்தங்கள் வெளி வந்து கொண்டிருந்தன. அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தார் மூர்த்தி மாஸ்டர்.

மணிக்கட்டிலிருந்து கடிகாரம் கதறியது. பார்த்தார்.

8.00)

‘இண்டைக்கும் ஸ்கூலுக்குப் போக ஏலாது’ என்ற நினைவு தோன்றியதும் இதயத்தில் சுருக் கென்று வலித்தது.

நவம்பர் மாதத்து மழை மின்னல் ஒன்று இவரது மன எண்ணத்தைச் சரி பிழை பார்த்து விட்டுப் போனது.

நவம்பர் 12

“ம்…..ம்….ம்…. ஆ…. அம்மா … அம்மா ….”

விஜயன் எலும்பும் தோலுமாய் மாறியிருந்தான். வாய் தன்னிச்சையாக அரற்றிக் கொண்டிருந்தது. ஆனால் மூர்த்தி மாஸ்டர் அதைக் கவனிக்கும் நிலையில் இல்லை . அவரது மனதில் ஒரு தேவாசுர யுத்தம் நடந்து கொண்டிருந்தது.

“இண்டைக்கும் ஸ்கூலுக்குப் போதாமல் விடுவதா?’

விஜயனின் குழி விழுந்த கண்கள் கண்ணிற்குள் வந்தன.

ஏதாவது நடந்து விட்டால்….?’

‘அம்மா என்று அரற்றுகிறான். அந்த அம்மாவும் இல்லை… நானும் ?’ அதே கணத்தில் தமயந்தியின் தயங்கிய குரல் காதில் ஒலிக்கிறது. இண்டைக்கும் போகாட்டில்… இன்னும் ஐந்து அலகு முடியாமல் இருக்கு … இனி றிவிசன் எப்ப? பேப்பர் செய்யிறது எப்ப?’

ரூம்….. ரூம்……

8.00

கடிகாரத்தைப் பார்த்தார்.

8.00

‘இன்னும் நான் சொல்றது கேக்கேல்லையோ?’ என்று மணிக்கூடு அவரைக் கேட்பது போலிருந்தது.

தயங்கிய குரல் அழுத்தி ஒலித்தது.

குழிந்த கண்கள் மெதுவாய் மூடின. புறப்பட்டு விட்டார். மழையின் ஈரத்தில் எதிர்பார்ப்புக்கள் நனைந்திருந்தன. ரூற்…. ரூம்…..’

4.00

“தாங்க்யூ சேர்” என்று மாணவர்கள் கத்துகின்ற ஒலி அவர் காதில் தேளாக – தேனாக அல்ல – நுழைந்தது. ஆனால் இன்று அந்தத் தாங்க்யூவில்’ ஒரு விசேட இனிமை இருந்தது உண்மைதான். இன்று நாலு மணிவரை எக்ஸ்ரா கிளாஸ்’ போட்டு ஒரு மாதிரி அவர் ‘சிலபஸை’ முடித்து விட்டார்.

“நல்ல காலம்… இரண்டு நாள் சேரைக் காணேல்லை எண்டு நான் பயந்து போனன் ….”

“இண்டைக்கு ஒரு ஆவேசம் வந்த மாதிரிப் படிப்பிச்சார் ?”

என்ன

“சேரின்ரை பிள்ளை ஆஸ்பத்திரிலையாம்……”

“சேர்…. இப்ப ஆஸ்பத்திரிக்குப் போறீங்களோ?”

மாணவர் சொன்ன எதுவுமே காதில் விழாமல் சைக்கிளைத் திறந்து …….

ஏறி…….

“சேர்…. உங்களைப் பிரின் சிப்பல் வரட்டாம் ……”

ஏதோ புரிந்தும், புரியாத மாதிரி உலகமே சூனியமாய் …. நுண்ணறிவின் உள் உணர்வுத் தட்டி எழுப்பலில் விழித்துக் கொண்டார்.

“சேர்… ஆஸ்பத்திரி ஒரு மெசேஜ்’ குடுத்திருக்கு ….. உங்கடை பிள்ளை ……”

புரிந்தது. புரிந்தே விட்டது.

“ஐயோ விஜயன் … இந்த அப்பனை … விட்டு …. இல்லை … இல்லை … இ…ந்… த விசர் வாத்தியை விட்டிட்டுப் போட்டியா….?”

எல்லாத் தேதிகளையும் போலவே அந்தத் தேதியும் இறுதியில் நிறமிழந்து போயிற்று.

“உங்களுக்குத் தான் சேர் இதுக்கு நன்றி சொல்ல வேணும். நீங்கள் என்ன விலை குடுத்து இதைச் சாதிச்சனீங்கள் எண்டு எனக்குத் தெரியும் சேர்….” – அதிபர்.

“சேருக்கு விஷேசமா ஒரு பாராட்டு எழுதிப் பேப்பருக்குக் குடுங்கோ சேர்” – உப அதிபர்.

“சேர்…. ஒரு ரீ குடுக்கிறம். கட்டாயம் வரவேணும் நீங்கள்”. – யாரோடும் சொந்தம் கொண்டு விடுகிற முகமும் முறுவலும் கொண்ட ரவி.

இவை எதுவும் மூர்த்தி மாஸ்டரின் காதில் விழவில்லை. வானப் பெருவெளியில் நட்சத்திரப் புற்கள் முளைக்கும் நேரத்தில் அவர் மகன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

– உலக ஆசிரியர் நாளை ஒட்டி எழுதப்பட்டது – ’94

– வாழ்வு வலைப்பந்தாட்டம் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: ஜூலை 1997, கலை இலக்கியக்களம், தெல்லிப்பழை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *