நல்ல சம்பளம்! – ஒரு பக்க கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 13, 2019
பார்வையிட்டோர்: 21,119 
 

“ஏண்டா!… வயசு இருபதாகுது!…… படிப்பு தான் ஏறலை…எட்டாவதோடு நின்று விட்டாய்….. ஏதாவது ஒரு கடையில் ஒரு வேலை தேடிக் கொள்ள துப்பு இல்லே? …காலங்காத்தாலே தோட்டத்திற்கு வந்து வக்கணையா இளநீர் சீவி குடித்துக் கொண்டிருக்கிறாய்?….”

“அப்பா!…இன்னையோட இந்த பேச்சை வுட்டு விடு!… நானும் மெட்ராஸில் வேலை தேடிக் கொண்டேன் …புதன் கிழமை நான் அங்கு போய் வேலையை ஏத்துக்கப் போறேன்!..”

“இவரு பெரிய ஐ.ஏ. எஸ். படிச்சிருக்கிறாரு… இவருக்கு மெட்ராஸில் கூப்பிட்டு வேலை தருகிறாங்களாம்!..”

“அப்பா! என் படிப்பை பற்றியே அடிக்கடி பேசாதீங்க!..நீங்க என்ன படிச்சிருக்கீறீங்க?….என்ன சர்வீஸ்…என்ன சம்பளம் வாங்கறீங்க?…”

“நான் பி.காம் படிச்சிருக்கிறேன்..பதினைந்து வருஷ சர்வீஸ்… இப்ப சம்பளம் இருபத்தி ஜந்தாயிரம் ரூபாயாக்கும்!..”

“இதை பெருமையா சொல்லாதீங்க!. நான் எட்டாவது தான்…என் ஆரம்ப சம்பளம் எவ்வளவு தெரியுமா?… முப்பதாயிரம் ரூபாய்!…”

“சும்மா உளறாதே!..”

“நான் காலையில் தான் மெட்ராஸில் பேசி என் வேலையையும் சம்பளத்தையும் உறுதி செய்து கொண்டேன்..புதன் கிழமை நல்ல நாள் வந்து வேலையை ஏற்றுக் கொள்ளச் சொல்லியிருக்காங்க!…. இந்த விளம்பரத்தை ஒழுங்காகப் படிச்சு பாருங்க!… அவங்க கிட்டத்தான் காலையில் போனில் என் வேலை சம்பளம் எல்லாம் பேசி முடிவு செய்தேன்!..” என்று அலட்சியமாக மகன் நீட்டிய அந்த தமிழ் பேப்பரை வாங்கி படித்தான் பரமசிவம்!

வரி விளம்பரத்தில் இப்படி போட்டிருந்தது!

‘இளநீர் சீவ சம்பளம் ரூ 20,000 to 30,000 .61|31 பீமன்னா 1st St ஆழ்வார்பேட்டை என்றுதொலை பேசி எண் கொடுத்திருந்தார்கள்!’

“அவங்க கிட்ட என்ன பேசினே?”

“நான் நிமிஷத்திற்கு ஒரு இளநீர் சீவுவேன்.. சம்பளம் 20,000 கட்டாது.. 30,000 தருவதாக இருந்தால் வந்து இளநீர் சீவித் தருவேன்! என்று சொன்னேன்! உடனே புறப்படு வரச் சொல்லிட்டாங்க!…படிச்ச உங்களால் தான் ஒரு ஆயிரம் ரூபாய் சம்பளம் சேர்த்து கேட்க துப்பு இல்லே!…நான் வேலைக்குப் போகும் முன் பத்தாயிரம் சேர்த்து கேட்டு வாங்கப் போறேன்!…” என்றான் அடுத்த இளநீரை சீவிக் கொண்டே!

– புதுகைத் தென்றல் அக் 2019

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *