ஆப்பிரிக்காவில் அரை நாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 23, 2024
பார்வையிட்டோர்: 960 
 
 

(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முப்பது வருடங்களுக்கு முன்பு British Caledonian என்று ஒரு விமான சேவை இருந்தது. இதுதான் என்னை முதன் முதல் ஆப்பிரிக்காவிற்குக் காவிச் சென்ற விமானம். இந்த விமானம் சியாரா லியோனின் வெளி எல்லைக்குள் 350 மைல் வேகத்தில் நுழைந்தபோது சூரியன் தன் அன்றைய வேலையை முடித்துவிட்டான். நீலமான முகில்கள் ஒன்றையொன்று சத்தம் இல்லாமல் இடித்துக் கொண்ட அந்த மாலை வேளையில் அவற்றைக் கிழித்துக்கொண்டு பிளேன் கீழே இறங்கியது. அப்போது எனக்குத் தெரிந்தது ஒரு பக்கம் சிவப்பு மண் கடல். மறுபக்கம் நீலக்கடல். ஆப்பிரிக்காவுக்கே உரிய விறகுப் புகை கலந்த காற்று மூக்கில் ஏறியது.

எனக்கு நாலு வருடம் சீனியரான ஒரு லண்டன் நண்பரின் கடன் கருணையில் 22 பவுண்ட் 10 ஷில்லிங் கொடுத்து வாங்கிய திறமான சந்தனக் கலர் சூட்டை நான் அணிந்திருந்தேன். அதற்குத் தோதாக மஞ்சளில் கறுப்புக் கோடு போட்டடையும் கட்டியிருந்தேன். இது தவிர, ஆறு பக்க விண்ணப்பத்தாளை நிரப்பி, நாலு தடவை அலைந்து மத்திய வங்கியில் அனுமதி பெற்று, நிதி மந்திரியின் பிரத்தியேக கையொப்பத்தில் அருமையாகக் கிடைத்த முழு அந்நியச் செலாவணியில் மாற்றிய 10பவுண்ட் தாளை நாலாக மடித்து எனது வலது கால் சட்டைப் பையில் வைத்திருந்தேன். அது நான் ஒவ்வொரு அடி வைத்து நடக்கும் போதும் என் தொடையில் உரசி தன் இருப்பை நினைவூட்டி என் உச்சியைக் குளிரவைத்தது. இந்தக் காரணங்களால் பிளேனில் இருந்து இறங்கிய என் கால்கள் ஆப்பிரிக்க சிவப்பு மண்ணைத் தொடவில்லை, என்னைச் சந்திக்க வந்த நிறுவன அதிகாரியைப் பார்க்கும் வரைக்கும்.

ஆறடிக்கும் மேலான உருவம். இறுக்கிக்கட்டிய கரிய திருமேனி. உயர்ந்த, மடிப்புக் கலையாத, அளவெடுத்துத் தைத்தது போல கச்சித மாகப் பொருந்திய சூட் பத்தடி தூரத்தில் கூட மினுங்கி முகத்தில் அடிக்கும் லேஸ்கட்டிய சப்பாத்துக்கள். ஸ்டைலுக்காக கையில் வைத்திருந்த தந்தப் பிடி போட்ட கருங்காலிக்கைத்தடி இப்பொழுது என் கால்கள் தரையில் இறங்கின.

நீல ஆடை அணிந்த உயரமான பணிப்பெண் ஒருத்தி எங்களுக்காகக் காத்திருந்தாள். பக்கவாட்டில் வளர்ந்து தானாக நிற்கும் தலை மயிரும், நத்தையின் ஓடு போன்ற வடிவத்தில் காதணி போட்டவளுமாக இருந்தாள். அவள் முன்னே வழிகாட்ட நாங்கள் பின்னே தொடர்ந்தோம். எங்கள் கடவுச் சீட்டுகளையும், பிற பயண ஆவணங்களையும் ஆயத்த நிலையில் பிடித்திருக்கச் சொன்னாள். அப்படியே குடைபோல பிடித் திருந்தோம். ஆனால் அவள் மறைந்துவிட்டாள்.

என்னைச் சந்திக்க வந்த அதிகாரி பிரிக்காத ஒரு கட்டுத்தாள் பணத்தை எடுத்து குடிவரவு, சுங்கம், சுகாதாரம், அந்நியச் செலாவணி போன்ற சிறு தெய்வங்களுக்கு சமமாகப் பங்கிட்டு மஸ்மஸ் கொடுத்து என்னை வெளியே மீட்டார். அப்படியும் என் பயணப் பெட்டி வரவில்லை . ஒரு ராட்டினம் மாத்திரம் தன் கடமையே கண்ணாகச் சுழன்று கொண் டிருந்தது. சிறிது நேரத்தில் கறுப்பு சுமை காவிகள் நிரைநிரையாக பிளேனில் இருந்து பெட்டிகளை தலைமேல் சுமந்து வந்து ராட்டினத்தில் கொட்டினார்கள். நாங்கள் எங்கள் பெட்டிகளைப் பொறுக்கி எடுத்துக் கொண்டோம்.

விமான நிலையத்தில் இருந்து தலைநகருக்குப் போவதற்கு ஒரு மிதவை சேவை இருந்தது. அந்த மிதவையில் பல கார்களும், பஸ்களும், பார லொறிகளும் ஏறிவிட்டன. அந்த ஒரு மணி நேரப் பயணத்தில் ஒரு சிறு சம்பவம் நடந்தது. உயர்ந்த பதவி வகிக்கும் அந்த அதிகாரி மிதவையில் இருந்த பாரில் அமர்ந்து டிரைவருடன் பேசிக்கொண்டு பியர் அருந்தியபடி இருந்தார். உற்ற நண்பர்கள் போல இருவரும் பழகிக் கொண்டனர். ஆப்பிரிக்காவில் நான் கண்ட முதல் ஆச்சரியம் இப்படி ஆரம்பித்தது.

கார் ஒரு சந்தையை கடந்த போது இருபக்கமும் சிறுவர்கள் மெல்லிய கத்தியால் தோலுரித்து வைத்த தோடம்பழங்களை விற்பதற்காக காரைச் சூழ்ந்தார்கள். ரோட்டோரக்கடைகளிலே மாட்டுத் தோல்கள், வால்கள், குளம்புகள், செவிகள், நாக்குகள் என்று அவ்வளவு அங்கங்களும் தனித் தனியாக விற்பனைக்குத் தொங்கின. துண்டிக்கப்பட்ட பன்றியின் தலைகள் கூடைகளில் கிடந்தன. அவற்றிற்கு சொந்தமான உடல்களைக் காணவில்லை .

நெருக்கமான ரோடு ஆனபடியால் டிரைவர் வேகமாகவும், சிலவேளை மந்தமாகவும் காரை ஓட்டினான். வண்ண வண்ணத் துணிகளில் நீண்டதலைப்பாகை கட்டிய பெண்கள் காரைத் தொடர்ந்து ஓடிவந்தனர். சிலருடைய முதுகுகளில் சிறு குழந்தைகள் துணியினால் இழுத்துக் கட்டப்பட்டுத் தொங்கினர். இவர்களுடைய கழுத்துக்கள் இரண்டு பக்கமும் விழுந்து விழுந்து ஆடின. இந்தப் பெண்களில் பலருக்கு மார்புச் சேலை இல்லை. அவர்களுடைய இரண்டு கைகளிலும் கூட்டா’ மீன்களோ, வெள்ளிப் பூச்சு ‘மக்கரல்’ மீன்களோ இருந்தன. அவர்கள் காரின் பின்னே ஓடியபோது மறைக்கப்படாத அந்த நீண்ட மார்புகள் துள்ளின. மீன்களும் துள்ளின. இரண்டுமே வழுவழுவென்று இருந்தன. இரண்டுமே ஈரம் சொட்டின. இரண்டுமே மினுங்கின. எங்களுக்கு வாங்கும் உத்தேசம் இல்லை என்று எவ்வளவுதான் சொன்னபோதிலும் அவர்கள் துரத்துவதை நிற்பாட்டவில்லை. ( இந்த டிரைவர்மாருக்கு இது ஒரு விளையாட்டு. ஏதோ வாங்க வந்தது போல காரை ஸ்லோ செய்வது, பிறகு வேகம் பிடிப்பது, பிறகு ஸ்லோ செய்வது, இந்த அப்பாவிப் பெண்களைச் சீண்டுவதற்காக. இரண்டு வருடங்கள் சென்ற பிறகே இந்த உபாயம் எனக்கு பிடிபடும்)

அன்று இரவு ஹொட்டலில் தங்கி அடுத்த நாள் என்னுடைய தொழில் நிறுவனத்துக்குப் போவதாக ஏற்பாடு. அதுவரை இலங்கையில் இருந்து ஆப்பிரிக்காவுக்கு வந்த முதல் ஆள் என்று நான் என்னை நினைத்துக் கொண்டு இருந்தேன். அந்தச் சிறு புகழுக்குக் கூட எனக்கு அருகதை இல்லை என்பது சிறிது நேரத்திலேயே நிரூபிக்கப்பட்டது. எனக்கு முன்பாகவே ஆப்பிரிக்காவுக்கு வந்த ஒருத்தர் என்னை எப்படியோ முகர்ந்து கண்டு பிடித்து ஹொட்டல் தொலை பேசியில் கூப்பிட்டார். பிறகு நேரில் வந்து அழைத்துப் போனார்.

நான் இலங்கையில் இருந்து புறப்பட்டு ஒரு வாரமே ஆகியிருந்தது. லண்டனில் சில நாட்கள் தங்கி பிறகு நேரே வந்து இறங்கியிருந்தேன். இருப்பினும் எங்கள் ஊர் சாப்பாட்டுக்காக என் மனது ஆலாய்ப் பறந்தது. நண்பருடைய பங்களா தனியாக நாலு பக்கமும் இரும்பு கொசுவலை அடிக்கப்பட்டு சிறைக்கூடம் போல காட்சியளித்தது. வாசலிலே நெருப்புச் சுவாலை மரம் ஒன்று நின்றது. புஃலானி காவலாளி ஒருத்தன் சிறு தடிகளால் சரக்கூடம் அமைத்து அதற்குள் தூங்கிக்கொண்டிருந்தான். எங்கள் வருகை அசௌகரியம் கொடுத்தது போல நண்பரின் மனைவி முகம் நெளித்தார். எழுந்திருக்கவில்லை. மடியிலே தூங்கிய பூனையை தடவிக்கொண்டிருந்தார். முதலில் பானம் வந்தது. அத்துடன் சாப்பிடுவதற்கு பல்லுக் குத்தும் குச்சியில் குத்திவைத்த வெண்ணெய்க்கட்டியும், ஒலிவும், சொரியும் இருந்தன. சாப்பிட்டு முடிந்ததும் பல்லையும் குத்தலாம். இதுவும் நல்ல ஏற்பாடாகவே பட்டது.

மேசையில் குழல் புட்டு காத்துக்கொண்டு இருந்தது. மணிமணியாக உருட்டிச் செய்து லைட்டில் மினுங்கியது. மாங்காய் குழம்பு. சிவப்பு மிளகாய் சம்பல். வாய் ஊறியது. வாழ்க்கையில் முன்பு எப்பொழுதுமே சாப்பிட்டதில்லை என்பது போல விழுந்து சாப்பிட்டேன். நண்பரின் மனைவி அதிசயிக்கக்கூடாது என்பதற்காக அடக்கம் போல காட்டுவது தான் எனக்கு அப்போது சிரமமான காரியமாக இருந்தது.

இவர்களுக்கு ஒரு வேலைக்காரன் இருந்தான். பெயர் பங்குறா. 5ம் வகுப்பு வரைக்கும் படித்திருந்ததால் ஆங்கிலம் சற்று வாசிக்கவும், எழுதவும் வரும். சமையல், வீட்டு வேலை என்று எல்லாம் இவன் பொறுப்பு கொடுக்கும் எந்த ஒரு பணியையும் அளவுக்கு அதிகமான தேகபலத்தை பாவித்து செய்து முடிப்பான். நான் அங்கு இருந்த சொற்ப நேரத்தில் ஒரு விஷயம் கவனித்தேன். வேலைகள் முடிந்து சிறிது ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் ஓடிப்போய் படிக்கட்டுகளின் கீழே உட்கார்ந்து ஆங்கில தினசரி ஒன்றைப் பார்த்து அக்கறையாக ஏதோ குனிந்து எழுதிக் கொண்டிருந்தான்.

நண்பரிடம், இவன் என்ன செய்கிறான் என்றேன். அவர் சிரித்தபடி அவன் விண்ணப்பம் தயாரிப்பதாகக் கூறினார். பேப்பரில் வரும் வேலை விளம்பரங்களைப் பார்த்து விண்ணப்பம் எழுதுவதுதான் அவன் வேலை. எஞ்சினியர், கிரேன் ஒப்பரேட்டர், நூலக மேற்பார்வையாளர், அரும்பொருள் காட்சிமனைப் பொறுப்பாளர் என்று எந்த விளம்பரம் வந்தாலும் எழுதிப் போட்டுவிடுவான். அன்றைய விண்ணப்பத்தை வாங்கிப் பார்த்தோம். குறுணி அட்சரங்களில் ஒரு எழுத்தில் இன்னொரு எழுத்துப்படாமல் கவனமாக தயாரிக்கப்பட்டிருந்தது. மத்திய வங்கி உயர் அதிகாரி வேலைக்கான மனு. நண்பர் கேட்டார். “பங்குறா, உனக்கு இந்த வேலை கிடைக்கும் என்று நம்புகிறாயா?”

“ஏன் கிடைக்காது. ஒருவருமே விண்ணப்பம் செய்யாவிட்டால் வேலையை எனக்குத்தானே கொடுக்க வேண்டும்!” இதற்கு நாங்கள் என்ன சொல்வது!

பங்குறாவுக்கு பின்னர் என்ன நடந்ததோ தெரியவில்லை. யார் கண்டது? இன்று அவன் பிரதம குதிரை பாதுகாப்பு அலுவலனாக எங்காவது வேலை பார்க்கலாம்.

அப்பொழுது ஜனாதிபதியாக இருந்தவர் பெயர் சியாக்கா ஸ்டீவன்ஸ். அதற்கு முதல் வருடம்தான் இரண்டு தடவை ராணுவப் புரட்சியில் அரசைப் பறிகொடுக்க இருந்தவர் எப்படியோ தப்பிவிட்டார். 1971ல் சியாரோ லியோன் ஒரு குடியரசு நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டு ஜனாதிபதியாகியிருந்தார்.

இவருடைய தகப்பனாரைப் பற்றி ஒரு கதை உலாவியது. ஒரு காருக்கு நாலு ரயர்களும், அவசரத்துக்கு ஐந்தாவதும் இருப்பது போல கிறிஸ்தவரான இவருடைய தகப்பனாருக்கு ஐந்து மனைவிகள். பாதிரியாருக்கு இது பிடிக்கவே இல்லை. எப்பொழுது இவரைப் பார்த்தாலும் கிறிஸ்தவ மதத்துக்கு இது ஏற்பானதல்ல என்று போதித்த படியே இருந்தார்.

ஒரு நாள் தகப்பனார் பாதிரியாரை தன் வீட்டு விருந்துக்கு அழைத்தார். எல்லா மனைவியரும் குறைவின்றி அவரை உபசரித்தார்கள். விருந்து முடிந்த பிறகு தகப்பனார் சாடை செய்ய இந்த ஐந்து பெண்மணிகளும் வந்து பாதிரியாருக்கு ஸ்தோத்திரம் சொல்லிவிட்டு முன்னே வரிசையாக நின்றார்கள். தகப்பனார் உரத்த குரலில் சொன்னார், “வணக்கத் துக்குரியவரே, தயவுசெய்து சொல்லுங்கள். நான் இந்த மனைவிகளில் எந்த நான்கு பேரைத் தள்ளிவைக்க வேண்டும்.”

அவ்வளவுதான். பாதிரியார் புறப்பட்டுவிட்டார். அதற்குப் பிறகு அவர் அந்தக் கதையையே எடுக்கவில்லையாம்.

இந்த நாட்டிலே ரேடியோ மிகவும் முக்கியம் வாய்ந்தது. எந்தக் கிராமத்திலும், எந்தக் குடியானவரும் காலைச் செய்திகளை ரேடியோவில் கேட்கத் தவறமாட்டார்கள். அமைச்சர்கள், அதிகாரிகளின் நியமனமும், பின் பதவி நீக்கமும் ரேடியோவிலேயே முதலில் அறிவிக்கப்படும். டீவியும் அப்படியே. பல அமைச்சர்கள் டீவி பார்க்கும் போதுதான் தங்கள் பதவி பறி போனதை அறிந்து அலறுவார்கள். நான் வந்து இறங்கிய அன்று சியாக்கா ஸ்டீவன்ஸ் ஜனங்களுக்கு ஒரு உரை நிகழ்த்து கிறார். அது நேரடி ஒளிபரப்பாக இருந்ததால் உணவுக்குப் பின் நண்பர் டீவியை வைக்கிறார்.

செயற்கை வெளிச்சத்தில் ஜனாதிபதி தன் உரையைப் படிக்கிறார். முதலாவது பக்கம் முடிந்தது. அந்தப் பேப்பரைத் தூக்கி பக்கமாக வைக்கிறார். இரண்டாவது பக்கம் முடிந்தது. அதையும் தூக்கி பக்கமாக வைக்கிறார். மூன்றாவது பக்கமும் முடிந்தது. நாலாவது பேப்பரை காணவில்லை. அவர் தேடுகிறார். பேப்பர்களை கலைத்துப் பார்க்கிறார். மீண்டும் தேடுகிறார். கீழே குனிந்து பார்க்கிறார். தொலைந்துவிட்டது. பிறகு காமிராவைப் பார்த்து தன் சொந்தமாக நாலு வசனம் பேசி உரையை முடிக்கிறார். அவர் முகத்தில் கோபம் இல்லை; எரிச்சல் இல்லை; பதற்றம் இல்லை. சாந்தம்தான்.

நண்பர் விழுந்து விழுந்து சிரிக்கிறார். நானும்தான். அவர் சொல்கிறார், “இதுதான் அவர்களுடைய பண்பு. அருமையான பொறுமைசாலிகள். இந்தப் பேச்சை ஒழுங்குபடுத்திய அதிகாரியின் தவறைப் பற்றி ஒரு வார்த்தை கூட கேட்கமாட்டார்கள்.” பாரதூரமான குற்றங்களை சாதாரண மாக மன்னித்துவிடுவார்கள். பெரிதுபடுத்த மாட்டார்கள். பிற்காலத்தில் இக்கட்டான நிலைமைகளை நான் சந்திக்கும் போது அடிக்கடி இந்தச் சம்பவத்தை நினைத்துக்கொள்வேன்.

விருந்து முடிந்து நான் திரும்பியபோது ஹொட்டல் வாசலில் ஒரு பேரம் நடந்தது. மேல் நாட்டு முறைப்படி ஆடை அணிந்த ஒரு வெள்ளைக்காரர் அங்கே நின்றார். அவர் முகம் அதிக வெய்யில் பட்டு சிவப்பு கொண்டதாகவும், அவருடைய கால் சட்டை பெல்ட்டுக்குக் கீழே இறங்கியதாகவும் இருந்தது. அவரைச் சுற்றி இரண்டு இளம் அழகிகள் நின்றிருந்தனர். ஆப்பிரிக்க பெண்களை இதுவே நான் முதல் முறையாக நெருக்கமாகப் பார்ப்பது. ஒருத்தி மிகையான அலங்காரத்துடன் அவருடைய உடலைப் பாம்பு போல சுற்றிக்கொண்டு நின்றாள். மிக மெல்லிய ஆடை தரித்திருந்ததால் சிறு காற்றுக்கும் அது அசைந்து அவளுடைய தொடைகளுக்குள் ஒட்டிப்போனது. அவரிடத்தில் கொஞ்சம் தயக்கம் தெரிந்தது. “நான் உங்கள் செல்ல நாய்க்குட்டி என்று நினைத்துக் கொள்ளுங்கள். என்னைப்பாருங்கள். என்னைப் பாருங்கள்” என்றாள்.

மற்றவள் உயரமானவள். ஆப்பிரிக்க உடையில் தீர்க்கரேகை போல வளைந்து கொடுத்து தன் அகலமான கறுப்புக் கண்களால் வரவேற்பு பார்வை பார்த்தாள். அழகு என்பது முகத்திலோ, அங்கங்களிலோ இல்லை. ஆனால் அவளுடைய உடல் அசைவுகளில் அது வெளிப்பட்டது. என்னைப் பார்த்து, ஏதோ நீச்சல் குளத்தில் குதிக்க ஆயத்தம் செய்யும் வீராங்கனை போல கைகள் இரண்டையும் மேலே தூக்கி, ‘நான் தனிமையாக இருக்கிறேன்’ என்று பாடியபடி இடுப்பை அசைத்தாள். இடுப்பை என்றால் இடைக்குமேல் அவள் உடம்பு அசையாமல் நட்டு வைத்தது போல நின்றது. இடைக்கு கீழே அவள் பிருட்டம் ஒரு வெட்டு வெட்டி மீண்டது. மனதைத் தாக்கிவிடும் ஒரு சிறு அசைவுதான் என்றாலும் இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் அதிலே பெரிய சொற்பொழிவு இருந்தது புரியும்.

ஆப்பிரிக்காவின் இரவுகள் வித்தியாசமானவை. ஈரப்பற்று அதிகமான காற்று தேகத்தில் படும் போது அதன் கனத்தை உணரக் கூடியதாக இருக்கும். சந்திரன் குழைத்து வைத்தது போல கலங்கலாக இருந்தான். ஆனாலும் கணகணவென்று எரிவதை நிறுத்தவில்லை.

கண்ணைச் சுற்றிக்கொண்டு வந்த நித்திரை போய்விட்டது. வீட்டு ஞாபகம் அழுத்தியது. மனைவியின் நினைப்பு வந்தது. அப்பொழுது ஒரு எண்ணம் தோன்றியது.

இந்த நாடு புதியது. இந்தக் காற்று புதியது. இந்த மரம் புதியது. மொழி புதியது. ஆனால் இந்த சந்திரன் மட்டும் எனக்கு பரிச்சயமானவன். என் ஊரில் இருந்த போதும் இதே சந்திரனைத்தான் பார்த்திருக்கிறேன். என் மனைவியும் இதே சந்திரனை இப்போது பார்க்கக்கூடும். அப்பொழுது தான் எனக்கு இந்தப் புலவர்கள் எல்லாம் வான்மதியை தூது விட்ட காரணம் புரிந்தது.

மிக அகலமான கட்டில். அதன்மீது அருமையான சொகுசு மெத்தை மெல்லிய நறுமணம் வீசும் படுக்கை விரிப்பு. உடம்புக்கு இதமான குளிரை உண்டாக்கும் மெசின். மேலே போர்வை. புரண்டு புரண்டு படுத்தேன். அப்பொழுதும் இமை கூட்ட முடியவில்லை.

காலையில் நான் உணவருந்த வந்தபோது அதே வெள்ளைக்காரனைப் பார்த்தேன். முழங்காலில் நீலமான நாப்கினை விரித்திருந்தான். கச்சிதமான புது உடையில் மேசையில் தனியே அமர்ந்து விதம் விதமான பெயர் தெரியாத உணவுப் பதார்த்தங்களை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தான். நான் என் பங்குக்கு என் நீண்ட பயணத்தை உத்தேசித்து ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கி ரோஸ்டரில் சூடாக்கி ஓரங்கள் வெட்டப்பட்ட வெள்ளை பிரெட்டில் வெண்ணெய் பூசிச் சாப்பிட்டேன். அதன் பிறகு அவொகாடோ பழத்தையும், அகலமாக வெட்டிய பப்பாளிப் பழத்துண்டுகளையும் அருந்தினேன்.

என்னுடைய நிறுவனம் 250 மைல் துரத்தில் இருந்தது. ரோடுகள் செப்பனிடும் நிலையில் இருந்ததால் இந்தப் பயணம் 12 மணி நேரம் எடுக்கும் என்று சொன்னார்கள். வழியில் வன விலங்குகள், வழிப்பறிக் கொள்ளை என்று பல ஆபத்துக்கள் இருந்தன. ஆப்பிரிக்காவில் நான் கழிக்கப்போகும் முதல் பகல் இப்படி 12 மணி நேரப் பயணத்தில் செலவாகும். அப்படியும் நான் நிறுவனத்தின் வாசலை உயிருடன் அடைவதற்கு குறைந்தபட்ச சாத்தியங்கூட இல்லை என்றே எனக்குப் பட்டது.

எனக்கு அனுப்பப்பட்ட சாரதியின் பெயர் காணு. கறுத்த முரசு ஒளிவிட அடிக்கடி அப்பாவியாகச் சிரித்தான். இவன் உதைபந்தாட்ட விளையாட்டுக்காரன். வாட்டசாட்டமான பராக்கிரமசாலி. சில வருடங்கள் கழித்து இந்த டிரைவர்தான் என்னுடைய மூன்று வயது மகளை ஆள் கடத்தும் கும்பலில் இருந்து காப்பாற்றுவான். நாங்கள் நாட்டைவிட்டு திரும்பும் போது இவன்தான் குலுங்கி குலுங்கி அழுவான். அது ஒன்றும் எனக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

என்னைக் கண்டதும் புழுதி நிறைந்த சுருட்டை மயிர் சிறுவர்கள் எங்கிருந்தோ வந்து சூழ்ந்து கொண்டார்கள். காணு, சப்புவதற்கு கோலா நட் வாங்கிக்கொண்டான். சுட்ட மரவள்ளிக் கிழங்கை வாங்கும்படி ஒரு சிறுவன் கெஞ்சினான். ஆனால் இன்னொரு பையன் சிறு போத்தல்களில் மென் சிவப்பு பானம் ஏதோ விற்றான். நான் வழியில் குடிப்பதற்கு அதில் இரண்டு போத்தல்கள் வாங்குவதற்கு முயன்றேன். டிரைவர் திடுக்கிட்டு தடுத்துவிட்டான். அவை மண்ணெண்ணெய் புட்டிகள், பானம் அல்ல.

காற்றிலே விறகுப் புகையின் மணம் வந்தது. அதிலே சூரிய ஒளி கூடுதலாகக் கலந்திருப்பது தெரிந்தது. இன்னொரு முறை ஆழமான சுவாசத்தை ஆனந்தமாக உள்ளே இழுத்தேன்.

ஒரு நீண்ட காரை எனக்காக அனுப்பியிருந்தார்கள். அதன் ஒரு மூலையில் ஏறி அமர்ந்த கணமே நான் மறைந்துவிட்டேன். எனக்கும் சாரதிக்கும் இடையில் எட்டு அடி தூரம். அப்பொழுது ஆப்பிரிக்காவில் மிகவும் பிரபலமான பாடகர் ஒருவர் பாடிய மாமா நோகிறை’ என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. இந்தப் பயணத்தில் நான் இந்தப் பாடலை என் நிறுவன வாசலை அடைவதற்குள் ஒரு ஐம்பது தடவை யாகிலும் கேட்பேன். டிரைவர் ஒரு வலைப் பின்னல் தொப்பி அணிந் திருந்தான். அந்த தொப்பி எனக்கு வெகு தூரத்தில் தெரிந்தது.

கார் புறப்பட்டது.

– அ.முத்துலிங்கம் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, தமிழினி, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *