விபத்து தந்த வெகுமதி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 24, 2022
பார்வையிட்டோர்: 982 
 

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு மரத்துப் பறவைகளாக அந்த நால்வர். சுந்தர், மனோகர், கருணா, வீரா. வேலை அனுமதி பெற்ற வெளிநாட்டு ஊழியர்கள். அங்மோகியோ அவென்யூ 4ல் ஒரு வாடகை வீட்டில் வசிக்கிறார்கள். தியாகத்தையும் பொறுமையையும் கூட சரிசமமாகப் பங்கிட்டுக் கொள்வதால் நட்பில் விரிசல் இல்லை.

இரவு மட்டும்தான் சமையல். வேலை நேரத்துக்குத் தகுந்தபடி ஒரு நாளைக்கு ஒருவர் என்று நேரம் வகுத்துக் கொண்டு சமைப்பார்கள்.

அன்று கருணாவின் முறை. வேலை முடிந்து மூன்று மணிக்கு வந்தார் கருணா. துணிகளைத் துவைத்தார். தக்காளி, வெங்காயம், கத்தரிக்காய், முருங்கைக்காய் அத்தனையையும் அழகாக நறுக்கி வைத்தார். ஆவி சமைப்பானில் (குக்கர்) பருப்பு வெந்து கொண்டிருக்கிறது. நறுக்கிவைத்த காய்கறிகளை அள்ளிப் போட்டார். உப்பு மசாலை சேர்த்தார். சிறிது நேரம் காத்திருந்தார். மூடினார். எடைக்குண்டைத் தூக்கிக் கொண்டு மூன்று முறை ஊதும். மூன்றாவது முறை ஊதும்போது பருப்புக் குழம்பு மணம் வீட்டையே தூக்கும். பொறியலுக்காக பீன்ஸ் இருந்தது. இன்னொரு சட்டியை அடுப்பிலேற்றி அதற்கான வேலைகளைச் செய்தார். நண்பர்கள் ஒன்பது மணிக்குத்தான் வருவார்கள். துவைத்த துணிகளைக் காயப் போட வேண்டும். வீடு கூட்ட வேண்டும். வரிசையாக வேலைகள் இருக்கின்றன. 6 மணிக்குத்தான் பொன்னி அரிசியை உலையேற்றுவார் கருணா. இரவுக்கும் அடுத்த நாள் காலை பழையதுக்குமாக 8 குவளை போடுவார். இரவு சாப்பிட்டதும் அடுத்த நாள் காலை அதற்குப் பெயர் ‘பழையது.’ தயிர்விட்டு, வெங்காயம் பச்சை மிளகாய் நறுக்கிப் போட்டு நொறுங்கப் பிசைந்து ஒரு துண்டு சுட்ட பாறைக் கருவாட்டை வைத்துக் கொண்டு காலை 8 மணிக்கு சாப்பிட உட்கார்ந்தால் ஆளுக்கு சட்டிக் கஞ்சி போதாது.

மனோகர் சொல்வார். ‘நாம் சீக்கிரம் செத்துவிடக்கூடாது. இந்த சுகத்தை ரொம்ப காலம் அனுபவிக்க வேண்டும்.’ என்று.

இப்பொழுது நிகழ்வுக்கு வருவோம். பருப்புக் குழம்பு தயார். பீன்ஸ் பொறியலும் தயார். துணி காயப் போடும் போது கருணாவின் தொலைபேசி அழைத்தது. நின்றுவிட்டது. ஊரிலிருந்து வந்த அழைப்பு. வழக்கமாக இரவு 10 மணிக்குத்தான் வரும். இந்த நேரத்தில் ஏன் அழைக்கிறார்கள்? உடனே கருணா திரும்ப அழைத்தார். தங்கை மைதிலிதான் எடுத்தார்.

‘அண்ணா, ஒரு முக்கியமான சேதி. உடைந்துவிடாதே.’

‘உங்களையெல்லாம் பிரிந்து இங்கு இருக்கும் ஒவ்வொரு நொடியும் உடைந்து கொண்டுதானம்மா இருக்கிறேன். இனிமேல் உடைய என்ன இருக்கிறது. சும்மா சொல்லம்மா.’

‘நம்ம லட்சுமி செத்துப் போச்சண்ணே’

தொலைபேசியை கையில் மூடியபடி சுவற்றில் சாய்ந்தார் கருணா. அண்ணா அண்ணா என்று மைதிலி அழைத்தது ஊசிபோல் குத்தியது. பேசாவிட்டால் மைதிலி பயந்துவிடுவார். மீண்டும் பேசினார் கருணா. தொலைபேசி அட்டையில் காசில்லை.

‘காசு முடியப் போகிறதம்மா. நான் மீண்டும் பேசுகிறேன்.’ சரியாகப் பத்து வெள்ளியும் சில சில்லரைகளும்தான் அன்றைய கையிருப்பு.

தொலைபேசி அட்டையில் பத்து வெள்ளியை ஏற்றிக் கொண்டு வரும்போது லட்சுமியில் பழைய நினைவுகள் கருணாவைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றது. கருணா பிறக்கும் போதே அந்த லட்சுமி இருந்தது. வருடம் தவறினாலும் சீம்பால் தவறாது. முதல்நாள் சேர்ந்த கழநித் தண்ணியில் தவிடு சேர்த்து ஊறவைத்த எள்ளுப் புண்ணாக்கையும் சேர்த்து லட்சுமிக்கு வைப்பார் கருணா. அரை வாளியை மூச்சு முட்டக் குடித்துவிட்டு என்னசேதி என்று கருணாவைப் பார்க்கும் லட்சுமி. மீதம் அரை வாளியையும் அடுத்த முடக்கில் குடித்துவிடும். எல்லாரும் லட்சுமியைப் பாலாகப் பார்த்தார்கள். லட்சுமி கருணாவைப் பாலாகப் பார்த்தது. ஞாயிற்றுக் கிழமை எல்லாரும் ஊரணியில் சேர்ந்து குளிப்பார்கள். கருணா மட்டும் லட்சுமியைக் குளிப்பாட்டுவார். ஞாபகச் சங்கிலி நீண்டுகொண்டே போனது. வீட்டுக்கு வந்ததும் மீண்டும் மைதிலியை அழைத்தார். வெகு நேரம் பேசினார். காயப்போட்ட துணி தண்ணீரையும் கருணாவின் கண்கள் கண்ணீரையும் சொட்டின. இரவு மணி ஆறு.

உலையேற்ற வேண்டும். அரிசி டப்பாவைத் திறந்தார். நெஞ்சில் நெருப்பிறங்கி உடம்பெங்கும் சுட்டது. டப்பாவில் சுத்தமாக அரிசி இல்லை. பொன்னிதான் வாங்கவேண்டும். அதுவும் அவென்யூ 7ல்தான் கிடைக்கும். கடை சாத்தியிருப்பார்கள். திறந்திருந்தாலும் வாங்கக் காசில்லை. கையிருப்பு வெறும் எண்பது காசுகள். 9 மணிக்கெல்லாம் நண்பர்கள் வந்துவிடுவார்கள். பசியைப் பற்றித்தான் பேசிக் கொண்டு வருவார்கள். அவர்களுக்கு என்ன பதில் சொல்வது? நெற்றியைப் பிடித்தபடி வராண்டாவிற்கு வந்தார். இரண்டு பேருந்துகள் மோதிக்கொள்வதுபோல் பயங்கர சப்தம் கேட்டது. நின்றுகொண்டிருந்த சரக்கு லாரி பின்பக்கமாக நகர்ந்து பின் ஓடி சாலை திருப்பத்தில் மோதி பின் நின்றுகொண்டிருந்த இன்னொரு வேனுடன் மோதி குலுங்கி நின்றது. பல திசைகளிலிருந்தும் மனிதர்கள் அந்த இடம் நோக்கி ஓடினார்கள். அனைவர் கைகளிலும் பைகள் இருந்தன. சரக்கு லாரியில் இருந்த அரிசி மூட்டைகள் அவிழ்ந்து கொட்டி புல்வெளியைப் போர்த்தி இருந்தது. தானும் ஒரு பையை எடுத்துக் கொண்டு வேகமாக இறங்கினார் கருணா. 5 கிலோ அளவுக்கு அரிசியை அள்ளிச் சேர்த்தார். திரும்பிப் பார்க்காமல் வீடு வந்தார். கழுவினார். கழுவியதற்குப் பின்தான் தெரிந்தது அதைக் கழுவவே தேவையில்லை என்று. அத்தனை சுத்தம். பச்சையாகவே அள்ளித் திண்ணத் தூண்டும் அழகு. முதல் தர பொன்னி அரிசிதான் அது. உலை ஏற்றிய சுகத்தில் லட்சுமி செத்ததைக் கூட கருணா மறந்துவிட்டார்.

இரவு மணி 9. நண்பர்கள் சாப்பிட அமர்ந்தார்கள். வீரா சொன்னார்.

‘அடடா!என்ன ருசி. வாயில் போடும்போதே வழுக்கிக் கொண்டு நகர்கிறது சோறு. இந்த அரிசி எங்கே வாங்கினீர்கள்?’

கருணா பதில் சொல்லவில்லை. எத்தனையோ சந்தர்ப்பங்களில் எத்தனையோவிதமான நெருக்கடிகள் கருணாவைக் கொத்தியிருக்கின்றன. ஆனால் இன்று ஏற்பட்டது மிக மிக வித்தியாசமானது. தான் மட்டுமே உணரும்படி கடவுள் தனக்குச் செய்யும் கருணையைப் பிறருக்குச் சொல்லும்போது அந்தக் கருணை சிறுமைப்படுவதாக உணர்ந்தார் கருணா. அதனாலேயே அதை அவர் யாரிடமும் சொல்லவில்லை.

பலருக்கு விபத்துக்கள் தண்டனை. கருணாவுக்கு விபத்தே வெகுமதியாகிவிட்டது. லட்சுமியே வந்து தன்னைக் காப்பாற்றியதாக உணர்ந்தார் கருணா.

– கட்டை விரல் ஆகட்டும் கல்வி, முதற் பதிப்பு: 2012, தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *