கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 23, 2018
பார்வையிட்டோர்: 6,155 
 
 

மழைத்தூறலாய் வெப்பக்கதிர்கள் பூமியில் விழுந்து கொண்டிருந்தன. தெருநாய்கள் நிழலுக்கு ஒதுங்கி உறங்கிக் கிடந்தன. இலைகள் மண்தரையில் மடிந்து கிடந்தன. காற்றுக்கு அசையாதவைகளாகவே மரங்கள் காட்சியளித்தன.

தலையில் உருமாக்கட்டு. இடுப்பில் ஒரு கந்தைத் துணி. தலையில் ஒரு கூடை. அதில் நிறைய வேர்வை சிந்தி வடிவமைக்கப்பட்ட பனை ஓலை விசிறிகள். அதைச் சுமந்து கொண்டு பொக்குவாயை அசைபோட்டவாறு சுட்டெரிக்கும் வெயிலில் அறுந்து தைத்த செருப்பை அணிந்துகொண்டு உருகும் தார் சாலையில் நடந்து வந்தார் அறுபத்தஞ்சு வயசு மொக்கையா.

“எத்தனை நாளைக்குத்தான் வூட்டுக்காரியும் குருணக்கஞ்சியே சமச்சுப் போடுவா. கெடக்கிற காசுக்கு அரிசி வாங்கி சமச்சுறனும். அவவுட்டு கண்ணாடிய ஒக்குட்றனும்” என்று தனக்குள்ளேயே பேசிக்கொண்டு பெரிய கடை விதியை அடைந்தார்.

“விசிறி வாங்கலையோ விசிறி..விசிறி…” என்று கூவிக்கொண்டே நடந்தார்.

சந்தைப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் இருவர் மிகச்சிறிய டேபிள் பேன்களை விற்பனை செய்ய விலையை கூவிக்கொண்டு இருந்தனர்.

“ஒரு பேன் விலை நூற்று எழுபத்தைந்து ரூபாய். இரண்டும் பேன்களின் விலை முந்நூற்று இருபத்தஞ்சு மட்டுமே. உங்களைத் தேடி வந்துருக்கு. வாங்கண்ணே… வாங்கம்மா…. வாங்க…” என்று மாருதி கார் ஒன்றின் மூலம் விளம்பரம் செய்து கொண்டிருந்தனர்.

யாரும் வாங்குவதாக இல்லை. பலரும் வியர்வைத் துளிகளில் நீராடிக்கொண்டிருந்தனர். வெயிலின் கொடுமை அப்படி இருந்து. தனது கைகளில் கிடைத்த அட்டை, புத்தகம் இவற்றைக் கொண்டு வீசிக் கொண்டிருந்தனர். பெண்கள் தனது முந்தானையால் முகத்தை துடைத்துக் கொண்டே நின்றனர்.

பேருந்துகள் வாந்தியெடுத்த புகைகள் மேகக் கூட்டம் போல் காட்சியளித்தன. மழைத்துளி வருமென்றால் மனிதரிடத்தில் வியர்வைத் துளிகளே வந்தன. தளர்ந்த நடையுடன் வந்த மொக்கையாவுக்கு பயங்கர வரவேற்பு.

விலையை சொல்லு முன்னரே பலரும் போட்டி போட்டுக்கொண்டு வாங்கினர்.

“ரெண்டு ரூபா சாமி….” மொக்கையாவின் பொக்குவாய் பேசத் தொடங்கியது.

“பெரியவரே …. எனக்கு ஒன்னு, எனக்கும்…..” வேக வேகமாக வாங்கினர்.

வியர்வைத் துளி வழிய வழிய கத்திக் கொண்டிருந்த பேன் விற்பனையாளர்களும்” அய்யா நமக்கு ரெண்டு கொடுங்க..” என்று வாங்கிக் கொண்டனர்.

“பெரியவரே…. எவ்ளோதான் பேனு, ஏசினு வந்தாலும் பழசுக்கு எப்பவும் மவுசுதான்” என்றார் பேன் விற்பனையாளர் ஒருவர்.

தனது எண்ணம் நிறைவேறப் போறதை எண்ணி பொக்குவாயை திறந்து புன்னகைத்தார். அவரது உள்ளம் குளிர்ந்து போய் இருந்தது. இருந்தாலும் அவரது உடலை வியர்வைத் துளிகள் நனைத்துக் கொண்டிருந்தன. உருமாக்கட்டை அவிழ்த்து முகத்தை துடைத்துவிட்டு கூடையை கையில் பிடித்துக்கொண்டு அனைவரையும் பார்த்தார். அனைவரது கைகளும் விசிறியை வீசிக்கொண்டு இருந்தன. அவருக்கு டாட்டா காட்டுவதுபோல் இருந்தது.

மீண்டும் ஒருமுறை சிரித்தவாறே நடந்து சென்றார். பொழுதும் சாய்ந்து கொண்டிருந்தது. அப்போது இலைகளை இழந்த மரங்கள் மெல்ல அசையத் தொடங்கின…

– முதல் பரிசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 2015, இனிய நந்தனம் பதிப்பகம், திருச்சி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *