வாக்குறுதிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 27, 2023
பார்வையிட்டோர்: 1,723 
 
 

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்று காலை பத்திரிகையை வாசித்துக்கொண்டிருந்த சுந்தருக்கு அந்தப் பேட்டியைப் பார்க்கப் பார்க்க மின்சாரம் தாக்குவது போல் இருந்தது. நீரின் முக்கியத்துவம் பற்றியும், அதன் பயன்பாடு பற்றியும் குறிப்பிட்டு அந்த அதிகாரி பேட்டி கொடுத்திருக்கும் பத்திரிகை அவன் கையைச் சுட்டது. மேடையில் தனது பரிவாளங்கள் சூழ, ஒலிவாங்கி முன் உள்ள மேசையில் தனது ஒரு கையை ஊன்றியவாறு இருக்கும் அவரது புகைப்படங்களைக் கண்டதும் சுந்தருக்கு ஆத்திரம் வந்தது. 

தோட்டம் மழையால் பாதிக்கப்பட்டிருந்த பொழுது மாவட்ட அதிகாரிகள் வந்து பார்த்தார்கள். மின்சார வசதி, குடிநீர் வசதி எல்லாம் செய்து தருவோம் என்று கூறி லயத்தில் இருந்த சிலரிடம் தோழமையாக பழகுவது போல நடித்து பத்திரிகைக்காக போட்டோவும் எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். தோட்டத்து மக்கள் யாவரும் அவர்கள் சொன்ன சொல்லை நம்பி தமது சோகம் தீர்க்க வந்த மகான்கள் என்று நம்பிக்கொண்டிருந்தார்கள். போலி அறிக்கையை விட்டுச்சென்ற அந்த அதிகாரிகள் அதன் பிறகு அந்தப் பக்கத்துக்கே வரவில்லை. 

‘எலக்ஷன் காலத்தில் மட்டும் என்னமாய் வந்து நடித்து பந்தம் பிடிப்பான்கள் ராஸ்கல். இப்போ மனுசன் போய் நின்னா கண்ணுக்கு விளங்காது இவனுங்களுக்கு. இன்னொரு முறை தேர்தல் வராமலா போயிடும். அப்போ பாத்துக்கலாம்’ சுந்தரின் மனசு குமுறியது. 

ஆச்சி மெதுவாக வந்து பத்திரிகையை எட்டிப் பார்த்தாள். சுந்தர் ஏன் கோபமாக இருக்கிறான் என்பது புரிந்தது. எனினும் சமாளித்துக்கொண்டு அவனிடம் பேச்சு கொடுத்தாள். 

‘என்ர மவராசா… உன் கோவம் எனக்கு புரியுதுப்பா. ஆனா உன் வாழ்க்க வீணா கழியப்படாது ராசா. இந்தக் கிழவி சாக முன்னால் ஒரு கல்யாணம் பண்ணி எனக்கு கொள்ளுப் பேரன பெத்துத் தா அப்பு’ 

‘கொஞ்சம் சும்மா இரு ஆச்சி. எப்பயும் ஒனக்கு இதே பேச்சு தான். திடீர்னு எங்க போயி பொண்ண தேட. அப்பிடித்தான் தேடினாலும் தண்ணியில்லாத இந்த லயத்துக்குள்ள வந்து எவ நிப்பா? 

சுந்தரின் சூடான வார்த்தைகளைக் கேட்டதும் ஆச்சிக்கு இதயம் கனத்தது. அவன் சொல்வதிலும் பிழையில்லைத்தானே? 

இந்த லயத்து மேட்டுல வந்து குடித்தனம் பண்ண எவதான் விருப்பப்படுவா? விருப்பத்தோட வந்த வேதவல்லியும் என் மவன் சண்முகத்துடனேயே சாமிக்கிட்ட போய் சேந்திட்டா. என் தாயி! மருமவ போலயா என்ன பாத்துப்பா? மகள் போல எங்கூட இருந்து ஒத்தாச செய்வாளே… 

ஆச்சிக்கு பழைய நினைவுகள் நெஞ்சில் அலைமோதின. அவளது மகன் சண்முகம் இந்த லயத்தின் மேம்பாட்டுக்காக பட்டபாட்டைத்தான் சுந்தரும் படுகிறான் என்று ஆச்சிக்குத் தெரியும். ஆனால் எதை செய்தும் வெற்றி பெறாமல் அற்ப ஆயுளில் இறந்துபோன தன் மகன் சண்முகத்தைப் பற்றியும், மருமகள் வேதவல்லியைப் பற்றியும் நினைத்தபோது அவளது விழியோரம் கண்ணீர் எட்டிப்பார்த்தது. 


சுந்தரின் அப்பா சண்முகம் சமூக அக்கறை மிக்கவர். யாருடைய பிரச்சனைகளைக் கேட்டாலும் அதை தீர்த்து வைப்பதற்கு தன்னாலான உதவிகளை வஞ்சகமின்றி செய்பவர். முன்பொருநாள் கூட இந்த லயத்தின் பாதை சீரின்மையால் மக்கள் படுகின்ற பிரச்சனைகளை கிராம சேவகரிடம் கூறி அதற்கான ஆரம்பகட்ட வேலைகளைச் செய்யுமாறு பேசிப் பார்ப்பதற்காகத்தான் கிராம சேவக அலுவலகத்துக்கு சென்றிருந்தார். 

அவர் சென்று பல மணிநேரம் கடந்தும் கிராமசேவகர் வந்து சேரவில்லை. அங்கிருந்த மற்றவர்கள் சண்முகத்தை முறைத்தப் பார்ப்பதும், கேள்வி மேல் கேள்வி கேட்பதாகவும் இருந்தார்கள். 

லயத்தானுக்கு வேற வேலயில்ல. ரோடு பிரச்சன… என்று அவர்களுக்குள் கருத்து பரிமாறப்பட்டதை சண்முகமும் கேட்டுக்கொண்டு தான் இருந்தார். லயத்தான் என்றால் என்ன? அவன் மனிதன் இல்லையா? அவர்களுக்கென்று ஆசாபாசங்கள் இல்லையா? குடும்பம், பிள்ளை என்று அவர்களுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது தானே? காலம் காலமாக அடிமைப்பட்டு வாழ்வது எமது சமுதாயத்தின் தலையெழுத்தா? கண்டவன் நிண்டவனிடம் எல்லாம் கைகட்டி வாய்பொத்தி வேலை செய்வதும் காணும் நேரத்தில் எல்லாம் குனிந்து மடிந்து சலாமுங்க என்று சொல்லியும் வாழ்ந்து முடித்த மூதாதையர் மீது சண்முகத்துக்கு கடும் எரிச்சல் வந்தது. 

அவர்கள் பழகிய பழக்கம் இன்றும் நடைமுறையில் இருக்க வேண்டுமா? இல்லையே… அப்படி ஒரு சட்டம் எங்கும் எழுதி வைக்கப்படவில்லையே. நாட்டின் அந்நிய செலாவணியைப் பெற்றுத் தருவதில் முக்கிய பங்கு வகிக்கின்ற தோட்டத்து மக்களை மனிதப் பிறவிகளாக எந்தக் காலத்தில் யோசித்திருக்கிறார்கள்? அவர்களது வளமான வாழ்வு பற்றி எவர்தான் அக்கறை காட்டியிருக்கிறார்கள்? வெயிலும், மழையும், பனியும், காற்றும் மட்டுமே அந்தத் தொழிலாளர்களின் சுயம் அறியும். வியர்வை என்றால் ஏசி அறையில் தூங்கும் சுகம், குளிர் வந்தால் பஞ்சு மெத்தையில் படுக்கும் இதம்… இவை எல்லாவற்றையும் வாழ்வில் ஒரு நாளாவது இந்த ஏழை மக்கள் அநுபவித்திருப்பார்களா? 

அட்டைக்கடியிலும், பாம்புப் புற்றுகளிலும் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள முழங்கால் அளவுக்கு பொலித்தீன் பைகளைக் கட்டிக்கொண்டு முதுகு வலிக்க வலிக்க தேயிலைச் சுமை சுமக்கும் அந்த அப்பாவி ஜீவன்கள் மீது கருணை காட்ட எந்தத் தலைவன் முன்வந்தான்? காலங்காலமாக தேர்தல் காலங்களில் மாத்திரம் இந்தத் தோட்டங்களில் பாதம் வைத்து போலிப்பாசம் காட்டி, இறுதியில் ஏமாற்றும் இந்த வித்தைக்காரர்களைத் தொடர்ந்தும் தலைவர்களாக ஏற்றுக்கொண்டிருப்பது யார் குற்றம்? 

உலகம் இன்று எவ்வளவோ முன்னேறிக்கொண்டு வருகிறது. இன்டர்நெட், ஈமெயில் என்றெல்லாம் சொல்கின்றார்கள். தோட்டத்துப் பாடசாலைகளில் இந்தக்கல்வி போதிக்கப்படுகின்றதா? வழமையான பாடங்களே பெரிய பாடசாலைகளில் ஒழுங்காக நடப்பதில்லை. அப்படியிருக்க தோட்டத்து பாடசாலைகளில் கல்வி நிலை பற்றி சொல்ல வேண்டியதில்லை. 

காலில் செருப்பில்லாமலும், புத்தகப் பை இல்லாமலும் வருகின்ற அப்பாவி மாணவர்களை நிறுத்தி வைத்து கேள்வி கேட்கவும், பிரம்பினால் தோலுரிக்கவும் தெரிந்த ஆசிரியர் அந்த மாணவனின் வீட்டு நிலவரத்தைப் பற்றி கொஞ்சமாவது தெரிந்து வைத்திருப்பாரா? வேண்டாம். தெரிந்துகொள்ள முயற்சியாவது எடுத்திருப்பாரா? ஐந்தாறு பிள்ளைகளின் சாப்பாட்டுத் தேவையையே பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடும் ஒரு குடும்பத்துக்குள் இருந்து கல்வி கற்பதற்காக புறப்பட்டு வரும் அந்த மாணவனை தட்டிக்கொடுக்க ஒருவருமில்லை. ஆனால் அயன் கலையாத ஆடையுடனும், பொலிஷ் பண்ணப்பட்ட சப்பாத்துடனும் வரும் ஒரு சில மாணவர்களுக்கு ஆசிரியர்கள் என்னே கௌரவம் கொடுக்கிறார்கள்? அப்பப்பா… 

‘மாத்தியா என்டலு..’ (ஐயா வரச்சொல்றார்) 

சிந்தை கலைந்த சண்முகம் கிராம சேவகரின் மேசையருகில் வந்து பவ்வியமாக நின்றார். அந்த மேசையின் வலது புறத்தில் பல கோப்புக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இடது புறத்தில் கறை படிந்த தொலைபேசி ஒன்று இருந்தது. ஆதி காலத்து மின்விசிறி ஒன்று தன் இறக்கைகளைப் பரத்தியவாறு லொடக் லொடக் என்ற சத்தத்துடன் சுற்றிக்கொண்டிருந்தது. 

ஒரு கிளாசில் தண்ணீர் நிறைத்து அதை பீரிஸ் ஒன்றினால் மூடிவிட்டுச் சென்றான் அலுவலகப் பையன். கிராம சேவகர் மேற்சட்டையில் பட்டன்கள் இரண்டை கழற்றியவாறு காற்று வாங்கிக்கொண்டிருந்தார். அவரது கறுத்த உடம்பிலும், அடர்த்தியான மீசை அருகிலும் கொட்டி விடப்போகிறேன் என்பதுபோல வியர்வை பெருக்கெடுத்திருந்தது. தண்ணீரை குடித்துக்கொண்டு சண்முகத்தை ஏறிட்டு நோக்கினார் அவர். 

‘பெயர் என்னாதி?’ 

‘சண்முகம் சேர்’ 

‘உக்காருங். நீங்க எங்கருந்து வாறது? 

சண்முகம் தனது தோட்டத்தின் பெயரைச் சொன்னார். 

சற்று அதிர்ந்த அந்த கிராம சேவகர் சண்முகத்தை நிமிர்ந்து பார்த்தார். ஏனெனில் பல காலங்களாக இந்த பாதை பிரச்சனைப் பற்றி இவருக்கு முன்பிருந்த கிராம சேவகர்களிடமும் தெரிவித்தாகிவிட்டது. எனினும் இன்னமும் அதற்கான ஒரு தீர்வும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. அதை அறிந்திருப்பார் போலும். தொண்டையை செருமிக்கொண்டு அவரே பேசினார். 

‘ரோடு பிரச்சன பற்றியா பேச வந்ததி? அங்கு என்ன புரொப்ளம்? 

‘பாதைகளின் சீரின்மை காரணமாக பள்ளத்து வீடுகளில் இருக்கும் மக்களுக்கு பெரும் அசௌகரியமாக இருக்கிறது ஐயா. மழைக் காலங்களில் மண்சரிவு ஏற்பட்டு பல சேதங்கள் ஏற்படுகின்றன. பாதுகாப்புக்காக போடுவதாகச் சொல்லியிருந்த மதில்களையும் இன்னும் செய்து தரவில்லை. 

அந்த வேலைகளுக்காக அரசாங்கம் குறிப்பிட்டதொரு பணத்தொகையை ஒதுக்கியிருப்பதாகவும் அறிகிறோம். அந்த பணத்துக்கு என்ன நடந்தது என்றும் தெரியவில்லை ஐயா. பலரிடம் கூறியும் இன்னும் எந்தத் திட்டமும் அமுலுக்கு வரல்லீங்க. நீங்களாவது நமக்கு இந்த உதவிய பண்ணிப்புடுங்க. புள்ளக் குட்டிங்களாட நீங்க கொறயில்லாம வாழணும்..’ 

‘ஓகே. நாங் பாக்குறன். கவலப்படாம போயிட்டு வாங்க’ 

இந்த சம்பாஷனைக்குப் பிறகு சண்முகம் மிகுந்த சந்தோஷத்துடன் வீட்டுக்கு வந்தார். நடந்த அனைத்தையும் ஊரார்களிடம் கூறி சந்தோஷப்பட்டார். தமக்கு விடிவு காலம் பிறக்கப் போவதாகக் கூறிக்கொண்டு திரிந்தார். அவர் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததைக்கண்டு ஊரே சந்தோஷப்பட்டது. 

சண்முகத்துக்கு இவ்வாறான பொது வேலைகள் செய்வதில் அக்கறை அதிகம். தனது குடும்பத்தைப் போலவே அனைவரையும் நேசிப்பார். அவரது மனைவியான வேதவல்லியும் அப்படித்தான். அவரது சுக துக்கங்களிலும், ஆசாபாசங்களிலும் சம பங்கெடுத்துக்கொள்வாள். அவர்களின் இனிமையான இல்லற வாழ்க்கைக்கு அர்த்தம் கற்பிக்க வந்து பிறந்தவன்தான் சுந்தர். சுந்தரின் மீது சண்முகத்துக்கு அலாதி பிரியம். எந்நேரமும் அவனைத் தூக்கி அணைத்தும், விளையாட்டு காட்டிக்கொண்டும் இருப்பார். 

பெரும்பாலான அப்பாக்களைப் போல் அல்லாமல் சுந்தரின் கழிவுகளையும் சுத்தப்படுத்தி கிட்டத்தட்ட ஒரு ராஜா போலவே சுந்தரை வளர்த்து வந்தார் சண்முகம். வேதவல்லிக்கும் சுந்தர் மீது பாசம் அதிகம் என்றாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சற்று கண்டிப்புடன் நடந்து கொள்வாள். காரணம் கேட்டால் 

‘அது வந்துங்க… ரெம்ப பாசமா வளத்துப்புட்டா அப்பறம் பொறுப்பில்லாம போயிருவான் பையன். கொஞ்சம் அடக்கித்தான் வளர்க்கணும். இல்லாட்டி நம்ம தலையிலயே மொளகா அரச்சி புடுவானுங்க…’ 

வேதவல்லி சொன்ன தத்துவத்தைக் கேட்டு ஆமோதித்து புன்னகைத்தார் சண்முகம். ஆச்சியும் வேதவல்லியின் கருத்துக்களுக்கு செவி சாய்த்தாள். 

கிராம சேவகரிடம் பேசி விட்டு வந்த பிறகும் பல மாதங்கள் கடந்துவிட்டன. ஆனால் எந்தப் பிரயோசனமும் நிகழாத காரணத்தால் நிலைமையை விசாரித்து வருவதற்காகத்தான் டவுனுக்கு புறப்பட்டுச் சென்றார் சண்முகம். நாழிகை பல கழிந்தும் அவர் இன்னும் வீட்டுக்கு வந்து சேரவில்லை. பதறிப்போன ஆச்சி பக்கத்து வீட்டு ராமசாமியை அழைத்து விடயத்தைச் சொன்னாள். உடனே அனைவரும் உஷாராகி சண்முகத்தை தேடினார்கள். எங்கு தேடியும் அவரைப் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. 

இருள் சூழ்ந்துவிட்டது. சண்முகத்தை காணவில்லை. ராமசாமி அடிக்கடி பாதையைப் பார்த்தார். ஆச்சியும், வேதவல்லியும் கையைப் பிசைந்து கொண்டிருந்தார்கள். ராமசாமிக்கும் அவனது மனைவிக்கும் மிகுந்த யோசனையாகவே இருந்தது. 

கொஞ்ச நேரத்தில் பாதையின் அந்தப்பக்கத்திலிருந்து ஒரு உருவம் மிக வேகமாக ஓடி வருவது விளங்கியது. ஆச்சிக்கும் விளங்கியிருக்க வேண்டும். கண்களை சுருக்கிக்கொண்டே மிகவும் சிரமப்பட்டு லாம்பு வெளிச்சத்தில் உற்று உற்றுப் பார்த்தாள். ஓடி வந்தது சண்முகம் அல்ல. எனினும் வந்த சிறுவன் சொன்ன தகவல் சண்முகம் பற்றியது. 

‘ஆச்சி ஒன் மவன் போன பஸ்சு எக்சிடன்ட் ஆயிடுச்சாம். டவுனாஸ்பத்திரியில அவர சேத்திருக்காங்களாம்…’ 

ஆச்சிக்கும், வேதவல்லிக்கும் எப்படி ஆறுதல் சொல்வதென்று ராமசாமிக்குத் தெரியவில்லை. பட்டப்பகலிலேயே அந்தப் பாதையில் போவது கஷ்டமான காரியம். இந்த இருட்டுக்குள் எப்படிப்போவது? அனைவரும் விடியும் வரை காத்திருந்தார்கள். மணித்தியாலங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்தன. விடியற்காலையில் அனைவரும் மருத்துவமனைக்குச் சென்றார்கள். 

அங்கே சண்முகம் முனகலோடு படுத்திருந்தார். அவரது தலையில் பெரிய கட்டு போடப்பட்டிருந்தது. அவருக்கருகே அவரது மஞ்சள் நிற சட்டை இருந்தது. அந்த சட்டையில் இரத்தம் பட்டு அந்தி நேர வானம் போல காட்சியளித்தது. அப்பா.. என்றபடி சிறுவன் சுந்தர் அவர் கால்களைப் பிடித்தவன் அதிர்ந்தான். அங்கே அவரது கால்கள் நீக்கப்பட்டிருந்தன. ஆச்சி தன் பொக்கை வாய் திறந்து ஓவென கதறியழ வேதவல்லி மயக்கம் ஏற்பட்டு விழுந்தாள். 

‘யனவா அரபெத்தட்ட. லெடாட கரதர கரன்னெத்துவ…’ (நோயாளிக்கு கரைச்சல் கொடுக்காமல் போ அந்தப் பக்கம்) நர்ஸ் திட்டிக் கொண்டிருந்தாள். அந்த நர்ஸ் தன் கைகளில் வெள்ளை நிற கையுரை அணிந்திருந்தாள். 

சண்முகத்தின் தலையில் கட்டப்பட்டிருந்த கட்டை அவிழ்த்தாள். திட்டுத்திட்டாக படிந்திருந்த இரத்தம் அவளது கையுரையிலும் அப்பியது. அருவருப்பாக பார்த்த நர்சின் பார்வை சுந்தரின் இதயத்தில் அனலாயிற்று. பாதைகளின் சீரின்மையால் ஏற்பட்ட இந்த பயங்கரமான விபத்தை எண்ண, அவனுக்கு அதிகாரிகள் மீது வெறுப்பும் கோபமும் ஏற்பட்டது. 

சண்முகத்தின் கால்கள் அகற்றப்பட்டிருந்ததால் வேதவல்லி மிகவும் உடைந்து போயிருந்தாள். சில மாதங்கள் அந்த வீடே இழவு வீடு போல் காட்சியளித்தது. நாட்கள் நகர ஒருநாள் காலை பதினொரு மணியளவில் பலத்த பேய் மழை பெய்து கொண்டிருந்தது. 

சண்முகத்தின் குடிசை கப்பலாக மாறி மழை நீரில் மிதந்து கொண்டிருந்தது. மழைக்கு முன் விறகு பொறுக்குவதற்காக மலைக்குச் சென்றிருந்த ஆச்சி, முனுசாமியின் வீட்டில் குளிரில் நடுங்கியவாறு மழை விடும் வரை காத்திருந்தாள். பாடசாலைக்கு சென்றிருந்த சுந்தரும் இன்னும் வீடு வந்திருக்கவில்லை. 

அப்போது அவர்கள் யாருமே கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியாதவாறு திமுதிமுவென இடம்பெயர்ந்து வந்த மற்குவியல்கள் சண்முகத்தின் குடிசையை கொஞ்சம் கொஞ்சமாக மூடிக்கொண்டிருந்தன. மழை காரணமாக எவரும் வெளியே வந்திருக்கவில்லை என்பதால் இந்த கோரமான காட்சியை யாரும் கவனிக்கவில்லை. 

சோவென பெய்த மழை சத்தத்தில் வேதவல்லியின் அபாயக்குரல் யார் காதிலும் விழவில்லை. காலில்லாத கணவனை காப்பாற்ற முடியாமலும், சண்முகத்தை தனியே விட்டுவிட்டு தான் மட்டும் தப்பிச்செல்ல முடியாமலும் வேதவல்லி தவித்தாள். கல்லானாலும் கணவனல்லவா? சந்தோஷமாக வாழ்ந்த அந்தக் குடிசையிலேயே அவளும் சண்முகத்துடன் மூச்சடங்கி சமாதியாகிப் போனாள். 

இந்த மழையின் தாக்குதலால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ஓடிக்கொண்டிருந்த சிறிய ஓடைகளும் மூடப்பட்டுவிட்டன. அந்த லயத்தில் வாழ்ந்தவர்களுக்கு குடிநீர் பிரச்சனை தாங்க முடியாததாய் இருந்தது. சண்முகத்தைப் போலவே சுந்தரும் பல அதிகாரிகளை சந்தித்து தண்ணீர் பிரச்சனையைப் பற்றி கூறிவிட்டான். எல்லா விதமான பிரச்சனைகளும் அந்த லயத்தை மாறி மாறி வதைத்துக்கொண்டிருந்தன. 

மூன்று நாட்களுக்கு ஒரு தடவை என்ற தவணை முறையில் கடந்த ஆறேழு வருடங்களாக நீர்த்தாங்கிகள் மூலம் தண்ணீர் வழங்கப்படுகின்றது. நீர்த்தாங்கிகள் வராமல் இருக்கும் நாட்களில் மக்கள் படும் அவஸ்தையை ஆச்சியாலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. 

வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு பத்திரிகையில் மட்டும் தண்ணீர பிரச்சனைக்கான தீர்வு பற்றி பேட்டி கொடுத்துக்கொண்டிருந்த அந்த அதிகாரியைப் பார்த்து ஆச்சியின் வாய் கோபமாக முணுமுணுத்தது. 

‘கட்டையில போவான்கள்… கள்ள நாயிகள்’!!! 

– வைகறை (சிறுகதைகள்), முதல் பதிப்பு: நவம்பர் 2012, இலங்கை முற்போக்கு காலை இலக்கிய மன்றம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *