லச்சுமியின் கனவு கனிந்தது

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 31, 2021
பார்வையிட்டோர்: 6,921 
 
 

சூரியனின் கதிர்கள் மெதுவாக அந்த தகரக் கொட்டகை மீது இருந்த சிறிய துவாரங்கள் வழியாக உள்ளே நுளைந்து ஆங்காங்கே நிலத்தில் பட்டு தெறிக்கத் தொடங்கியிருந்தது. உள்ளே சூழ்ந்திருந்த இருள் மெதுவாக அகன்று வெளிச்சம் வர ஆரம்பித்தது. நாள்தோறும் இந்த மெல்லிய வெளிச்சம்தான் அவளை துயிலெழுப்பி விடும். இன்றும் அதேபோலவே ஓரிரு கதிர்கள் அவளது உடலை வருடவே சடுதியாக கண்விழித்து எழுந்தாள்.

ஐயய்யோ…. கனக்கா நேரம் அயந்து தூங்கிட்டனோ….

தன்னைத்தானே கேட்டுக்கொண்டு அவசர அவசரமாக எழுந்தாள் லச்சுமி.

லச்சுமி வவுனியாவில் சுந்தரபுரம் என்ற கிராமத்தில் வசிக்கிறாள். அவளது கணவன் மூன்று வருடங்களுக்கு முன் திடீர் சுகயீனமுற்று இறந்த பின்னர் அவளும் அவளுடைய கடைசி மகனும் மருமகளும் பேரப்பிள்ளையும் ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள். மகனும் மருமகனும் பேரப்பிள்ளையும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட காணியில் தோட்டம் செய்வதால் அருகில் இருந்து கவனிப்பதற்காக அண்மையில் தான் அங்கிருந்து புறப்பட்டார்கள். அதன்பின் அவள் தனியாகத்தான் அந்த சிறிய குடிசை வீட்டில் வாழ்கிறாள்.

எவ்வளவு வேலையிருக்கு….. அவ்வளவையும் தனியாளா நானே தானே செய்ய வேணும்…. சுரேஸ் அண்ணாவும் நேற்று வந்து வெள்ளக்காரர் கட்டிடத்தை பாக்க வருகினம் எண்டு சொல்லிப்போட்டு போனவர்…. வந்து பேசப்போறேர்…. அதுக்குள்ள டக்கெண்டு தயாராகிவிட வேணும்….

சுரேஸ் அந்த பிரதேசத்தில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு அரசு சாரா நிறுவனத்துடைய வெளிக்கள இணைப்பாளர். நிதி வழங்கும் சர்வதேச நிறுவனம் ஒன்றின் ஆய்வாளர்கள் ‘நீரும்சுகாதாரமும்’ என்ற திட்டத்தின் கீழ் அந்த கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கிய நிதியில் கட்டி முடித்த மலசலகூட கட்டடங்களை பார்க்க வர இருக்கும் தகவலை லச்சுமியும் இத்திட்டத்தின் ஒரு பயனாளி என்ற காரணத்தால் முதல் நாள் மாலை வந்து லக்சுமியிடம் தெரிவித்து சென்றிருந்தார் சுரேஸ்.

ஒம்பது மணிக்கெல்லாம் வருவினம் எண்டு சொன்னவர்…… முடிஞ்சளவு கெதியா எல்லா வேலைகளையும் மளமளவெண்டு முடிச்சுப்போட வேணும்…..

என்று தனக்குள் கூறிக்கொண்டே பின்பக்கமாக போய் அங்கு இருந்த பெரிய கல்லில் வைக்கப்பட்டிருந்த உடைந்த சிறிய மண்பானையில் போட்டு வைத்திருந்த உமிக்கரியை கையிலே எடுத்துக்கொண்டு குசினிக்குள் நுளைந்தாள். அங்கிருந்த நீர் கொதிக்கவைக்கும் பானையில் பெரிய பிளாஸ்டிக் குடத்திலிருந்து நீரை எடுத்து அடுப்பில் வைத்தாள். அடுப்பு சாம்பலை தள்ளி ஒதுக்கிவிட்டு அருகில் இருந்த சிறிய குச்சிகளை அடுப்பில் அடுக்கி ஏற்கனவே அரைகுறையாக எரிந்து அணைந்து போயிருந்த சிரட்டை துண்டுகள் சிலவற்றை பொறுக்கி அடுப்புக்குள் போட்டாள். மண்ணெண்ணெய் போத்தலை தேடி எடுத்தாள். அதற்குள் எண்ணெய் முடிந்துபோய் இருந்தது. ஒருவாறு சரித்து அதற்குள் இருந்த ஊறல் துளிகளை அடுப்பிற்குள் ஊற்றினாhள். அப்படியே மேலே சொருகி வைத்திருந்த தீப்பெட்டியை எடுத்து அடுப்பை பற்றவைத்து நன்றாக எரியும்படி அடுப்பை சரிசெய்துகொண்டாள். அணையாமல் எரிவதற்காக சில காய்ந்த ஓலைத்துண்டுகளையும் அடுப்பில் போட்டுக்கொண்டாள். இப்போது அடுப்பு மெல்ல சுவாலைவிட்டு எரியத்தொடங்கியது.

மீண்டும் வெளியே சென்று அந்த உமிக்கரியினால் பல்விளக்கி ஆங்காங்கே நெளிவுகளுடனும் சிறிய உடைவுகளுடனும் இருந்த வாளியில் முதல்நாள் எடுத்து வைத்திருந்த நீரில் வாயை கொப்பளித்து முகத்தையும் கழுவிக்கொண்டாள். சூரிய வெளிச்சம் செந்தணல் நிறத்தில் சற்று அதிகரித்து பிரகாசிக்கத் தொடங்குவது தெரிந்தது. போட்டிருந்த அந்த சட்டையின் கீழ்ப்பகுதியை தூக்கி முகத்தை துடைத்துவிட்டுக்கொண்டு குசினிக்குள் நுளைந்தாள். கொதித்துக்கொண்டிருந்த நீரில் அவசர அவசரமாக தேனீரை தயார் செய்து நன்றாக ஆற்றி அந்த பழைய மூக்குப்பேணியில் ஊற்றி எடுத்துக்கொண்டு வீட்டின் முன்புறமாக உள்ள திண்ணையில் சென்று அமர்ந்து தேனீரை மடக் மடக்கென்று குடித்து முடித்தாள்.

தேனீரை குடித்து முடித்ததும் விறு விறுவென்று பின்பக்கமாக சென்று விளக்குமாறை எடுத்து கொண்டு வந்து வேகமாக முற்றத்தை துப்பரவாக்கத் தொடங்கினாள்.

நேரம் இண்டைக்கெண்டு வலும் வேகமா போகுது….. இன்னும் எவ்வளவு வேலை கிடக்குது…. தனி ஒரு ஆளா எல்லாத்தையும் ஒம்பது மணிக்குள்ள எப்பிடித்தான் முடிக்கப்போறனோ….. இந்த 60 வயசுக் கிழட்டுக்கு…. பிள்ளையாரப்பா….. நீதான் தைரியத்த தர வேணும்….

என்று முணுமுணுத்துக்கொண்டு பிள்ளையாரை வேண்டிக்கொண்டாள். ஒருவாறு முன் மற்றும் இரண்டு பக்க முத்தம் துப்பரவாக்கி முடிந்தது. உள்ளே சென்று துணியை எடுத்து குறுக்கே கட்டிக்கொண்டு கிணற்றடிக்கு போனாள். மள மளவென்று தண்நீரை மொண்டு தலைக்கு ஊற்றினாள். லைவ்வோய் சோப்புத்துண்டொன்றை கிணற்று கட்டில் இருந்து எடுத்து தலைக்கும் உடம்புக்கும் தேய்த்து மீண்டும் சிலவாளி நீரை தலைக்கு ஊற்றி தேய்த்து முழுகி முடித்தாள். கயிற்றில் முதல்நாள் காயப்போட்டிருந்த சோட்டியை எடுத்து மாட்டிக்கொண்டு கட்டியிருந்த துணையை கழற்றி பிழிந்து அதனால் தலையை துவட்டி முடித்து கொண்டை போட்டுக்கொண்டாள்.

எத்தினை பேர் வருவாங்க…… சுரேஸ் ஐயா ஒண்டு….. வெள்ளை காரர் ரெண்டு பேர் வருவினமா….. சரி ரெண்டு….. அவயளோடு இங்கத்தையாக்கள் ஒரு ரெண்டுபேர்….. கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் சந்திரன் அண்ணை….. சரி….. எப்பிடியும் ஒரு ஆறு…. ஏழு…. பேர்.

எண்ணி கணக்குப்பார்த்து எட்டுபேர் என்று முடிவு செய்துகொண்டு பக்கத்து பெட்டிக்கடைக்கு ஓட்டமும் நடையுமாக விரைந்தாள் லச்சுமி.

சங்கர் அண்ணே….. ஒரு எட்டு சின்ன போத்தல் சோடாவும்….. ரெண்டு சொக்கிலட் கிறீம் பிஸ்கட்.. சந்தன குச்சி பக்கட்…. சம்பிராணித் தூள் பக்கட்…. என்று சிலபொருட்களை கூறி இதெல்லாம் தாங்கண்ணே…. என்று கேட்டவாறு இடுப்பில் சொருகி வைத்திருந்த பணப்பையிலிருந்து பணத்தையும் எடுத்துக்கொடுத்தாள் சங்கர் வயதில் சிறியவன்தான் ஆனாள் லச்சுமி அண்ணே என்று தான் அழைப்பாள்.

என்ன லச்சுமி அக்கா…. மகன் மருமோள் வருகினமே….. சங்கர் கேட்டான்.

இல்ல சங்கர் அண்ணே….. யாரோ வெள்ளக்காரர் வருகினமாம்….. எங்களுக்கு கட்டிடம் ஒண்டு பாஸ்பண்ணி கட்டித் தந்தவையெல்லோ….. அதப்பாக்கத்தான்….. வருகினமாம்…. இது லட்சுமி அப்ப வெள்ளக்காரர் லச்சுமி அக்கா வீட்ட வருகினம்….. ம்…. சரி சரி…. வடிவா கவனிச்சு அனுப்பக்கா…. அப்பதான் சந்தோசத்தோட பிறகும் வேற ஏதாச்சும் உதவி வந்தா உனக்கு மறக்காம தருவினம்….. இது சங்கர்

ஓமண்ணே…. கெதியா தாங்கோ நேரம் வேற போட்டுது…. என்று கூறி அவசரமாக பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு விரைந்தாள்.

வீடு சென்றதும் கொண்டு சென்ற பொருட்களை வைத்துவிட்டு அடுப்பில் இருந்த நெருப்புத் தணலை சாம்பிராணித் தட்டில் போட்டு அதில் சாம்பிராணியை போட்டுகொண்டு சென்று பூமரங்களில் இருந்து கொஞ்சம் பூக்களை பறித்து பூத்தட்டில் எடுத்து கொண்டு சென்று கதவைத் திறந்து சாமிக்கு பூக்களை வைத்துவிட்டு தூபம் காட்டினாள். அப்படியே சில ஊதுபத்தி குச்சிகளையும் எடுத்து பற்ற வைத்து இவற்றையும் ஏற்றி வைத்தாள். வாசம் கமகமவென்று இருந்தது. படங்களுக்கு அருகில் இருந்த தேங்காய் எண்ணெயை சாமி படங்கள் முன் வைக்கப்பட்டிருந்த பித்தளை விளக்கில் அளவாக ஊற்றி திரை விரல்களால் அழுத்திவிட்டு விளக்கை ஏற்றினாள்.

அப்பாடா….. நல்ல வாசம்….. இன்னும் கொஞ்சம் தூக்கலா இருந்தா நல்லாத் தான் இருக்கும்…. இப்ப வாற சாம்பிராணி முன்னம் போல வாசம் இல்லை…. இருந்தாலும் பரவாயில்ல.. பத்தியும் ஏத்தி வைச்சிருக்குத்தானே அது கன நேரம் எரிஞ்சு வாசத்த வச்சிருக்கும் அது போதும்….. என்று தனக்குள் முணுமுணுத்தபடி கற்பூரத் தட்டையும் ஏற்றி தீபம்காட்டினாள். வழக்கம் போல சில நிமிடங்களை அங்கு செலவிட்டு தனக்குள் ஏதோ பாடல்களை உச்சரித்தபடியே வழிபட்டாள் லச்சுமி. வழிபாடுகளை முடித்துக்கொண்டு கதவை பூட்டினாள்.

பூட்டு சாவியை இடுப்பிலே சொருகிக்கொண்டு மீண்டும் வீட்டிற்கு உள்ளே சென்றவள் பானையில் முதல் நாள் நீர் ஊற்றி வைத்திருந்த பழம்சோற்றை ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டாள் வெங்காயமும் பச்சை மிளகாயும் அளவாக எடுத்து வெட்டி அதற்குள் போட்டு சிறிது உப்பும் சேர்த்துக்கொண்டாள். விரலால் தொட்டு நாக்கில் வைத்துப்பார்த்தாள்.

ம்.…. ம்…. உப்பெல்லாம் சரியாத்தான் இருக்கு….. அது போதும்….. தனக்குத் தானே கூறிக்கொண்டே அப்படியே அண்ணார்ந்து மடக் மடக்கென்று குடித்து முடித்தாள். அது தான் அவளுடைய காலைச் சாப்பாடு. கையிலே பணம் கொஞ்சம் புளக்கத்தில் இருந்தால் பாண் பணிஸ் என்று அவ்வப்போது வேறு உணவுகள் ஏதாவது வாங்கி சாப்பிடுவதுமுண்டு.

வெளியே பார்த்தாள் சூரியன் மெதுவாக மேலே கிளம்பிவரத் தொடங்கிவிட்டிந்தது. நேரம் எட்டைத் தாண்டியிருக்கும் என்பதை மரங்களின் நிழலிலிருந்து ஊகித்துக்கொண்டாள். இன்னும் கொஞ்ச நேரத்தில கட்டிடத்தை பாக்க வாறதெண்ட வெள்ளைக்காரர் வந்திடுவினம்…… அதுக்குள்ள நான் ரெடியாகிட்டா சரி…… நான் ரைமுக்கு ரெடியா இல்லாமவிட்டா…. சுரேஸ் அண்ணா குழம்பிடுவார்…. ஏன் வீணா அவரிட்ட பேச்சு வாங்குவான்….. ராசன் வாறனென்டவன்….. அவனையும் இன்னும் காணம்…. ராசன் அவளுடைய கடைசி மகன். அவளுக்கு பேச்சுத் துணைக்குக்கூட வேறு யாரும் இல்லை அதனால் தனக்குள் தான் எல்லா விசயங்களையும் பேசிக்கொள்வாள்.

சில மாதங்களுக்கு முதல் கடைசி மகன் ராசன் அவளுடன் தான் இருந்தான். அண்மையில்தான் அவன் திருமணம் செய்து சிலநாட்கள் தாயுடன் தங்கி இருந்துவிட்டு பின்னர் திருமணம் செய்த பெண்ணுடைய காணி இருந்ததால் அங்கு ஒரு வீடு போட்டுக்கொண்டு சென்று அங்கே தோட்டம் செய்யத் தொடங்கிவிட்டான். அதனால் இடைக்கிடை வந்து தாயாரை பார்த்துவிட்டு செல்வான். அவன் வந்தால் சற்று மனசுக்கு தெம்பாகவும் தைரியமாகவும் இருக்கும் என்பதால் இன்றும் லச்சுமி அவனை வரும்படி கூறிவைத்திருந்தாள். அதனால்தான் இன்னும் காணவில்லை என்ற அங்கலாய்ப்பு அவளுக்குள்.

சில நிமிடங்களுக்குள் சாறிக்குள் மாறிவிட்டிருந்த அவள் கொண்டுவந்த பிஸ்கட் மற்றும் சோடா முதலியவற்றை வருபவர்களுக்கு பரிமாறுவதற்கு எதுவாக ஒழுங்குபடுத்திக்கொண்டாள். வரும்வரைக்கும் ஏதாவது செய்யலாம் என்று நினைத்து அந்த பிய்ந்துபோயிருந்த சுழகிலே அரிசி அளவாக எடுத்துக்கொண்டு வந்து வீட்டின் முன்னால் இருந்த குந்திலே அமர்ந்து அதற்குள் இருந்த நெற்களை ஒவ்வொன்றாக பொறுக்கத்தொடங்கினாள். நெல் மணிகளுக்காக ஓட்டமாக ஓடிவந்து அவளைச் சூழ்ந்துகொண்டன அவள் வளர்க்கும் கோழிகள். ஒவ்வொன்றாக பொறுக்கி வீச வீச அடிபட்டுக்கொண்டு அவற்றை கொத்தி கொத்தி அவை தின்றுகொண்டிருந்தன.

வெளியே வாகன சத்தம் கேட்க சுழகிலே பொதிந்திருந்த தலையை மெதுவாக உயர்த்தி வாசல் நோக்கித் திருப்பி அவளது பார்வையை செலுத்தினாள். முதலில் ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நிற்க அதிலிருந்து சுரேஸ் இறங்குவது தெரிந்தது. சுரேசுடன் சங்கத் தலைவர் சந்திரனும் வந்திருந்தார். அதைத்தொடர்ந்து ஒரு வெள்ளை பஜிரோ வாகனம் வந்து நிற்க அதிலிருந்து சிலர் இறங்கினார்கள். இரண்டு வெள்ளையர்களும் (ஒரு ஆணும் ஒரு பெண்ணும்) மூன்று நம் நாட்டவர்களும் வாசலை நோக்கி சுரேசும் சந்திரனும் முன்னே வர அவர்களை தொடர்ந்து ஏனைய அனைவரும் வந்துகொண்டிருந்தார்கள்.

லட்சுமிக்கு சந்தோசத்தால் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. அவளது வீட்டிற்கு வெள்ளையர்கள் வருவது இதுதான் முதல் தடவை. உயர் ரக வாகனத்தில் அவளது வீட்டிற்கு அவர்கள் வருவதை கண்ட லச்சுமியின் முகத்தில் ஏற்பட்டிருந்த பரவசம் அவளது உச்சக்கட்ட சந்தோசத்தை வெளிப்படுத்திக்காட்டியது.

சட்டென்று எழுந்து முன்னே சென்று வாசல் படலையை திறந்துகொண்டே இன் முகத்துடன் வாங்கோ….. ஐயா…. உள்ள வாங்கோ….. என்று அழைத்தாள். அவளிடம் நல்ல தளபாடங்கள் இருக்கவில்லை. மூன்று பிளாஸ்டிக் கதிரைகள் இருந்தன. அவற்றை வேகமாக எடுத்து வந்து முற்றத்தில் இருந்த மர நிழலில் போட்டுவிட்டு ஐயா…. இருங்கோ கதிரையில…. என்றாள். வந்தவர்களில் நம் நாட்டவரில் ஒருவர் இல்ல பாரவாயில்ல…. நாங்க கனக்க நேரம் நிக்க மாட்டம்…. வேற இடங்களுக்கும் போக வேணும் தானே….. உங்கட கட்டிடத்த பாத்திட்டு… அப்பிடியே போயிடுவோம்….. என்றார்.

சரி சரி பரவாயில்லை ஐயா கொஞ்சம் பொறுங்கோ…. என்று கூறிவிட்டு எடுத்து வைத்திருந்த பிஸ்கட்டுகளையும் மென்பானத்தையும் பரிமாறினாள். நம் நாட்டவர்களில் ஒருவர் மட்டும் பிஸ்கட்டை எடுத்து சாப்பிட வெள்ளையர்க்ள இருவரும் பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்கள். தொடர்ந்து மென்பானத்தை பருகிக்கொண்டே அவளுடன் வந்த விடயத்தோடு தொடர்பாக கதைக்கத்தொடங்கினார்கள்.

வெள்ளையர் வட் இஸ் யுவர் நேம்….. என்று கேட்டார். அவள் திரு திரு என்று பாசை புரியாமல் முழித்தாள். உடனே அவர்களுடன் வந்த ஒருவர் உள்நாட்டவர்தான் அவர் மொழிபெயர்ப்பாளராக இருக்க வேண்டும் உங்கட பெயர சொல்லுங்கோ அம்மா…. என்றார். அவளும் பதிலுக்கு லச்சுமி ஐயா…. என்றாள். மீண்டும் வெளிநாட்டவர் கௌ ஓல்ட் ஆர் யு….. என்றார்…. மொழி பெயர்ப்பவர் உங்கட வயசு என்னம்மா…. என கேட்டார். இப்ப ஐயா….. எனக்கு….. ஒரு அறுவது அப்பிடி இருக்கும் ஐயா….. என்று இழுத்தாள். அவளுக்கும் உடனடியாக தன் வயதை கணக்கு பண்ண முடியவில்லை. கௌ மெனி மெம்பர்ஸ் ஆர் இன் யுவர் கவுஸ்…. அவர் மீண்டும் கேட்டார். லச்சுமி அடுத்தடுத்து கேள்விகள் வர கிறுகிறு வென்று முழியை உருட்டிக்கொண்டிருந்தாள். அம்மா….. நீங்கள் எத்தன பேர் இங்க இருக்கிறியள்…. என்டு கேக்கிறேர்…. இது மொழி பெயர்ப்பவர். ஆ….. என்னைய்யா…. நீங்க…. நான் மட்டும் தான்….. அவர் போய் மூண்டு வருசமாகுது… பிள்ளைகள் எல்லாரும் முடிச்சிட்டினம்…. அவயெல்லாம் வேறயா…. போய்ட்டீனம்… இப்ப நான் தனியாள்தான்… லச்சுமி கூறிமுடிக்க அப்படியே அவற்றை மொழி பெயர்த்து ஆங்கிலத்தில் வந்தவரிடம் கூறினார் அவர்களுடன் வந்த மொழிபெயர்ப்பாளர்.

பட்டியல் ஒன்றை கையிலே வைத்திருந்த வெளிநாட்டு பெண்மணி இவர்கள் கதைக்கும்போது எதையோ எழுதிக்கொண்டிருந்தாள். அக்கம் பக்கம் பார்த்து நோட்டமிட்டு ஏதோ குறிப்புக்களும் எடுத்துக்கொண்டிருந்தாள். அவ்வப்போது தனது புகைப்பட கருவியில் சில படங்களையும் எடுக்கத் தவறவில்லை. இப்போது பட்டியலைப் பார்த்துவிட்டு த லிஸ்ட் சேய்ஸ் திறீ மெம்பர்ஸ்…. வெயார் இஸ் த பலன்ஸ் ரூ மெம்பர்ஸ்… என்று தன் பங்குக்கு ஒரு கேள்வியைத் தொடுத்தாள் அந்த வெள்ளைகார அம்மணி. லச்சுமி மொழிபெயர்ப்பவரை பார்க்க அவர்.. பட்டியலில் மூண்டு பேர் எண்டு இருக்காம்…. நீங்கள்….. நீங்க மட்டும்தான் தனியா இருக்கிறதெண்டு சொல்றீங்க அதுதான் கேக்கிறா….. என்று விளக்கினார்.

சுரேசின் முகம் ஒரு விதமாக மாறி கறுத்தது. அவள் தன்னை சுதாகரித்தவளாக இல்லை ஐயா…. நாங்கள் மூண்டு பேர் தான்…. மகனும் மருமகளும் என்னோட தான் இருக்கினம்… இப்ப கொஞ்ச நாளா அவர் காணில தோட்டம் செய்யிறேர்… தண்ணி பாய்ச்ச வேணுமெல்லோ…. அதோட பசளை மருந்தும் போட வேணும்….. மற்றது….. அங்கால கால்நடையள் வந்து காணிக்குள்ள பூந்து பயிரெல்லாம் நாசம் பண்ணீடும்….. அதுதான்…. அங்க நிக்கினம்…. இப்ப வருவீனம் எண்டு சொன்னவை…. இன்னும் காணம்….. என்று தன் விளக்கத்தை கூறவும் மகனும் மருமகளும் சைக்கிளில் வந்திறங்கவும் சரியாக இருந்தது. ஆ….. அந்தா…. வந்திட்டினம்….. என்று கூறி முடிக்க மற்றவர் லச்சுமியின் நிலைமையை புரிந்துகொண்டவராக வெள்ளையரை திருப்திப் படுத்தக்கூடியவாறு அவள் கூறியவற்றை சரிசெய்து ஆங்கிலத்தில் கூறி விளங்கப்படுத்தினார்.

தொடர்ந்து வெள்ளையர் ஓ….. இஸ் தட் சோ….. குட்…. குட்…. என்று கூறியவாறே வட் யு ஆர் டூயிங் போர் யுவர் இன்கம்….. என்று அடுத்த கேள்வியை தொடுத்தார். உங்கட வருமானத்துக்கு நீங்க என்ன செய்யிறீங்க எண்டு தான் கேக்கிறேர்…. மொழிபெயர்ப்பாளர் மொழி பெயர்க்கவும் வாங்க…. ஐயா…. வீட்டுக்கு பின்பக்கம்…. நீங்க என்ர தோட்டத்தையும் பாக்கலாம்…. அதில இருந்து கிடைக்கிறதிலதான் கால் வயிறோ…. அரை வயிறோ…. கஞ்சியாவது குடிக்க முடியுது…. வந்து பாருங்கோவன்…. என்று அனைவரையும் அழைத்தாள்.

வெளிநாட்டுக் காரரும் ஓகே….. ஓகே….. வீ வில் சீ யுவர் கார்டின் லேட்டர்….. பிபோ தட் வீ வோன் டு சீ…. த டொயிலட்….. உங்கட தோட்டத்த பாக்க முதல்….. அவங்க கட்டிக்குடுத்த…. டொயிலட்ட பாக்க வேணுமாம்….. இது மொழிபெயர்பாளர். லச்சுமிக்கு விளங்கவில்லை…. டொயிலட்டா….. கட்டிடம் தானே கட்டித் தந்தவே….. இதென்ன…. டொயிலட் என்டு சொல்லுறியள்….. விளங்காமல் கேட்டாள். அது தான் அம்மா…. அந்த கட்டிடத்தை தான் பாக்க வேணுமாம்….

ஓ…. அதுவா…. நான் என்னடா என்டு யோசிச்சன்…. கட்டிடம் அங்கால அந் பக்கத்தில தான் இருக்குது…. சரி நாங்கள் அப்பிடியே…. அந்தப் பக்கத்தால போய்…. கட்டிடத்த பாத்துக்கொண்டு அப்பிடியே தோட்டத்தையும் பாக்கலாம் வாங்கோ….. என்று அழைத்தாள். அனைவரும் அவளை பின் தொடர்ந்து போனார்கள்.

மலசலகூடக் கட்டடம் புதுப்பொலிவோடு வெள்ளை வர்ணம் பூசப்பட்டு அழகாக இருந்தது. அதைச்சூழ அழகிய பூ மரங்கள் நடப்பட்டு அவை பூத்துக் குலுங்கிக்கொண்டு இருந்தன. அந்த இடம் முழுவதும் துப்புரவாக கூட்டப்பட்டு மிகவும் சுத்தமாக இருப்பது கண்கூடகக் காணக்கூடியதாக இருந்தது. ஆங்காங்கே ஏதோ வெள்ளை வெள்ளையாக பவுடர் போன்று சிதறி இருந்தது. அவர்கள் அதை பெரிதாக கவனிக்கவில்லை. வெளிநாட்டுப் பெண்மணி பல கோணங்களில் மாறி மாறி தனது புகைப்படக்கருவியில் படம் பிடித்துக்கொண்டாள். அவ்வப்போது ஏதோ குறிப்புகளை தனது குறிப்புப் புத்தகத்தில் குறித்துக்கொள்ளவும் தவறவில்லை.

திஸ் மதர் இஸ் கீப்பிங் த டொயிலட் வெறி கிளீன்…. ஆ….., யூ சீ….. வித் கெர் ஏஜ்…. இட் இஸ் வெறிகுட் ஹபிட்…. வெள்ளை வெளிநாட்டவர் கூறிமுடிக்க மொழி பெயர்ப்பாளர் நீங்கள் இந்த வயசிலயும் டொயிலட்ட நல்ல துப்பரவா வச்சிருக்கிறீங்களாம்… என்டு சொல்றேர்… என்றான்.

அவளுக்கு சந்தோசம் தாளவில்லை. முகத்தில் சிரிப்போடு நடந்தாள். அவர்களும் அந்த இடத்தைக்கடந்து தோட்டத்தை நோக்கி நடந்தனர். அவள் ஐயா… கட்டிடத்துக்கு உள்ள பாக்கேல்லையே…. அதயும் பாக்கலாம்தானே… இது லட்சுமி. அது தான் பாத்து நல்ல சந்தோசமாதானே வாறீனம்…. இதுக்கு மேல என்ன… நாங்கள் தோட்டத்தையும் பாத்திட்டு போவம்…. மொழி பெயர்பாளர் நேரடியாக தானே தனது கருத்தை முன்வைத்தார். அவளும் தலையாட்டிக் கொண்டு முன்னேறினாள். இருந்தாலும் மனதுக்குள் ஒருசங்கடம் அந்த கட்டடத்தின் உள் பகுதியை பார்க்கவில்லையே என்று.

வாவ்…. இட் இஸ் வெறி பியூட்டிபுல் கார்டின் ஆ…. வெல் மெயின்டேய்ன்…. வெறி குட்…. லச்சுமி…. தோட்டத்தை பார்த்தவாறு வெள்ளையர் கூறினார். லச்சுமி அம்மா உங்கட தோட்டம் அழகா இருக்காம்… நல்ல வடிவா பராமரிக்கிறீங்களாம்…. மிகவும் நன்று… என்டு சொல்லுறார்…. அவள் கேட்டுக்கொண்டே தலையாட்டினாள். லச்சுமிக்கு சந்தோசம் அடுத்தடுத்து தலையின் உச்சத்தை தொட்டது அவளின் அசைவுகளில் தெரிந்தது. ஒரு குழந்தையின் சுட்டித்தனம் அவளிடம் உருவெடுத்திருந்தது.

இப்போ அனைவரும் தோட்டததை நெருங்கியருந்தனர். தோட்டத்தின் ஒரு பகுதியில் வெங்காயம் வைத்திருந்தாள். அது அறுவடைக்கு தயாராக மிக அழகாக வளர்ந்து காட்சி தந்து கொண்டிருந்தது. மற்றொரு பகுதியில் பச்சை மிளகாய் கன்றுகள் சில, வெண்டக்காய், கத்தரிக்காய், பாகல், புடோல் மற்றும் தக்காளி போன்றவை ஒரு ஒழுங்கில் நடப்பட்டிருந்தன. சிலவற்றில் பூக்கள் பூத்து காய்ப்பதற்க தயாராக இருந்தன. இன்னொரு பகுதியல் சோளம் கன்றுகளும் மரவள்ளி தடிகள் சிலவும் நடப்பட்டு ஓரளவு வளர்ந்த நிலையில் இருந்தன. களைகள் எல்லாம் பிடுங்கப்பட்டு நிலம் ஈரலிப்பாக இருந்தது. தோட்டத்தின் பின்புறம் சற்று பற்றைகள் வளர்ந்து இருந்தது. என்ன செய்வாள் லச்சுமி தனியாக எல்லாவற்றையும் செய்யமுடியுமா.

அவர்களுடன் வந்த வெளிநாட்டு பெண்மணி தோட்டத்தின் ஒவ்வொரு பகுதிகளையும் வெவ்வேறு பக்கங்களில் நின்று படம் எடுத்தாள். இறுதியாக லச்சுமியையும் தோட்டத்தின் முன் வைத்து இரண்டு மூன்று கோணங்களில் படம் எடுத்தாள். கமராவை சுரேசிடம் கொடுத்து தாங்களும் நின்று ஒரு சில படங்களை எடுக்கச் செய்தாள்.

எனக்கும் போட்டோவில சிலத தருவீங்களா…. கேட்டாள் லச்சுமி. மொழி பெயர்ப்பாளர் வந்தவர்களிடம் அவள் கேட்டதை கூற ஓ சுவர்… ஐ வில் சென்ட் சம் போட்டோஸ் டு யூ…. திஸ் ஈவினிங்க்… ஓகே…. இது வெள்ளையர். இன்டைக்கு பின்னேரம் சில படங்கள் அனுப்பிறேராம்… இது மொழி பெயர்ப்பவர்… ஆ சரி ஐயா…. மிக்க சந்தோசம்….. நன்றி ஐயா…. அவள் பதிலுக்கு முகமலர்ச்சியோடு பதிலிடுத்தாள்.

அப்படியே வந்த பாதையில் திரும்பினார்கள். லட்சுமி அவசர அவசரமாக முன்னாள் ஓடினாள். அவளுக்கோ அந்த கட்டிடத்தின் உள்ளே அவர்கள் பார்க்கவில்லையே என்ற கவலை. இடுப்பில் சொருகி இருந்த திறப்பை எடுத்துக்கொண்டு ஐயா…. எல்லாம் பாத்தனீங்கள்… கட்டிடத்தின் உள்ளயும் பாத்திட்டு…. அதயும் ஒரு போட்டோ எடுத்து விடுங்கோவன்… அப்பதான் எனக்கு முழுத் திருப்தியாயிருக்கும்…. ஆதங்கத்துடன் கேட்டாள். மொழி பெயர்ப்பாளர் அதை அப்படியே ஆங்கிலத்தில் கூறினார். நோ புறப்ளம் லச்சுமி…. வீ ஆர் சட்டிஸ்… என்று கூறிய வெளிநாட்டவர் திடீரென்று ஓகே… ஓகே… டோன்ட் வொறி வீ வில் சீ த பில்டிங் அன் கெட் சம் போட்டோஸ்….. என்றார். அவள் மனதில் கவலைப்படக்கூடாது என்று நினைத்து தன் மனதை உடன் மாற்றி அப்படி கூறினார் போலும். இதை மொழி பெயர்ப்பவர் சரியாம் அம்மா பாப்பமாம்… அதோட போட்டோவும் சிலது எடுப்பமாம் என்டு சொல்றேர்…. என்று கூறவும் அவள் ஓட்டமாய் ஓடிச்சென்று கதவின் பூட்டை திறந்தாள்!

மெதுவாக மலசல கூடப்பக்கம் திரும்பி அருகில் சென்று திறந்த கதவினூடாக மலசல கூடத்தை பார்த்த அனைவரும் ஒரு கணம் அப்படியே திகைத்து மலைத்துப்போய் வைத்தகண் வாங்காது பார்த்துக்கொண்டிருந்தனர். அனைவருக்கும் மிகப் பெரிய ஆச்சரியமாக இருந்தது. உள்ளிருந்து அவள் காலை ஏற்றி வைத்த ஊதுபத்தியின் வாசைன மூக்கைத்துளைத்தது. உள்ளே மண்டியிருந்த புகை ஒரே மூச்சில் சட்டென வெளியேறியது. புகை வெளியேறவும் மேலும் மேலும் வெளிச்சம் அதிகரிக்க உள்ளே தெளிவாக பார்க்கக்கூடியதாக இருந்தது. போடப்பட்டிருந்த பூ மாலைகளும் அழகாக தொங்கிக்கொண்டிருந்தது. காலையில் ஏற்றி வைத்த விளக்கு இன்னமும் சுடர்விட்டு பிரகாசமாக எரிந்துகொண்டிந்தது. யாரும் ஒரு வசனம் கூட பேசாது உள்ளே இன்னமும் பார்த்துக்கொண்டே இருந்தார்கள். அவர்களால் உடனடியாக எதையும் பேச முடியவில்லை. யாருக்கும் வார்த்தைகள் வரவில்லை.

லச்சுமி தான் ஆர்வ மேலீட்டால் என்ன ஐயா….. ஒண்டும் சொல்லாமல் அமைதியா இருக்கிறீங்கள்…. வடிவா இருக்குதே…. ஏதாவது சொல்லலாமே….லச்சுமி தான் கேட்டாள். யாரும் பேசவில்லை. வெள்ளைக் காரர்கள் இருவரும் சாதுவாக புன்னகை பூத்தார்கள். அவர்களுக்கு என்ன சொல்வதென்று தெரியாது குழப்பமாகவும் இருந்தது.

மொழி பெயர்ப்பாளர் சட்டென்று கேட்டார். என்ன லச்சுமி அம்மா செய்து வச்சிருக்கிறியள்….. உங்களுக்கு எதுக்கு இந்த கட்டிடம் கட்டித் தந்தவயள்…. இது கக்கூஸ் எல்லோ… அதபோய் கோயிலாக்கி வச்சிருக்கிறீங்கள்….. காச செலவளிச்சு சுத்தம் சுகாதாரமா இருக்க வேணுமெண்டு உங்களுக்கு கக்கூசை கட்டித்தந்தா நீங்க என்ன செஞ்சு வச்சிருக்கிறீங்கள்…. அவங்களுக்கு இத பாக்கேக்க எப்பிடி இருக்கும் எண்டு யோசிச்சு பாருங்கோ…. அவயள் இப்ப என்ன சொல்லப் போறீனமோ.. தெரியேல்ல…. நல்ல சந்தோசமா எல்லாத்தையும் இவ்வளவு நேரமும் பாத்துக்கொண்டு வந்தங்களுக்கு… இப்ப தூக்கி வாரிப்போட்டிருக்கும்…. நல்ல பேச்சு வாங்கிக்கட்டப்போறீங்க இப்ப….. மொழி பெயாப்பாளர் இடைவிடாமல் மளமளவென்டு சொல்லி முடித்தார்.

கக்கூசோ…. அவளது முகம் சுருங்கியது. சும்மா இருங்கையா… நான் ஒரு ஆள் மட்டும்தான்…. அங்க காணிக்கு பின்னால எவ்வளவு இடமிருக்கு… அதுபோதும் எனக்கு…. கன நாளா எனக்கு ஒரு ஆசை….. கனவு… இருந்தது…. என்ட பிள்ளையாருக்கு ஒரு நல்ல கோயில கட்டிப் பாக்க வேணுமெண்டு… இப்ப கட்டடம் கிடைச்சதோட… பிள்ளையார அதில வச்சிட்டன்….. ஒழுங்கா பூசையும் செய்துகொண்டு வாறன்…. இதவிட வாழ்க்கையில்… வேற என்னய்யா… சந்தோசம் வேணும்… நான் இன்னும் கொஞ்சக் காலம் தான்…. அத இந்த பிள்ளையாரோட பூசை செய்து கழிச்சிடுவன். இவ்வளவு காச செலவழிச்சு கட்டின இந்த அழகான நல்ல கட்டடத்த யாராவது வீணாக்குவினமோ… மொழி பெயர்ப்பாளருக்கும் வாய்க்குள் சிரிப்பு. சிரிப்பை அடக்கியவாறு அதை வெளிநாட்டவருக்கு கூற. அவரும் பதிலுக்கு

லச்சுமி டோன்ட் வொறி….. யூ ஆர்… குட்… அன்ட யுவர் கார்டின் இஸ் குட்…. திஸ் டெம்பிள் ஓல்சோ குட் பியூட்டிபுல்…. டோன்ட் வொறி… இதை அவர் கூறிக்கொண்டு இருக்கும் போது லச்சுமியை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்த சுரேஸ் லச்சுமி அருகில் வந்து மெதுவாக அவங்க தான் போக வெளிக்கிட்டவங்களெல்லே…. அதுக்குள்ள என்ன அத திறந்து காட்ட வேணும் எண்ட அவசரம்…. இப்ப எனக்கு தான் பிரச்சனையா போகப்போகுது… நான் முதலே ஒருக்கா திறந்து பாத்திருக்க வேணும்… எனக்கு அது தோணேல்ல….. பாத்திருந்தா…. அப்பவே… படத்தையெல்லாம் எடுத்து கக்கூசை கக்கூசா பாவிக்க சொல்லியிருப்பன்…. சீ…. இப்ப என்ன சொல்லப்போறாங்களோ….என்று சற்று அதட்டலாகவே சொல்லி முடித்தான்.

வெளிநாட்டவர் சுரேசை அழைக்க மொழிபெயர்ப்பாளர் ஏற்கனவே வெளிநாட்டவர் கூறியதை லச்சுமிக்கு மொழி பெயர்த்து கூறினார். அம்மா கவலைப்பட வேணாமாம்… உங்கட தோட்டம்… கோவில் எல்லாம் நல்ல அழகாகவும் துப்பரவாகவும் சிறப்பாகவும் இருக்குதாம் எண்டுதான் அவர் சொன்னவர்…. லச்சுமிக்கு போன சந்தோசம் திரும்பி வந்தது. மீண்டும் முகத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டது தைரியத்தை தந்தது.

வெளி நாட்டவர் லச்சுமி தங் யூ போர் யுவர் ட்ரீட்ஸ், ரைம் அன்ட் வெல்கம்…. டேக் கெயார்… வீ ஆர் கோயிங் நௌவ்…. இவ் பொசிபிள் வீவில் கம் எகேய்ன் இன் அவர் நெக்ஸ் விசிட்… ஓகே… பாய்…. என்று கூறி வாசல் நோக்கி நகர்ந்தார். மொழி பெயர்ப்பவர் லச்சுமி அம்மா உங்கட நேரம் வரவேற்பு உபசரிப்பு எல்லாத்துக்கும் நன்றியாம்… அடுத்தமுறை வரும்போது திரும்ப வருவினமாம்…. என்று கூற. அதைக்கேட்டவள் ஆ…. சரி ஐயா… உங்களுக்கும் என்ர வீட்டுக்கு வந்ததுக்கு நன்றி ஐயா… என்று கூறி முடிப்பதற்குள் வெள்ளையர்

ஹாய் லச்சுமி ஐ வில் கிவ் ஆல் யுவர் போட்டோஸ் ரூ சுரேஸ்…. கீ வில் கிவ் யூ ரூமாறோ… ஒகே… பாய்….. மொழி பெயர்ப்பவர் அதை தமிழில் உங்கட போட்டோ எல்லாம் சுரேஸிட்ட குடுக்கிறேராம்… நாளைக்கு சுரேஸிட்ட வாங்கட்டாம்… என்று கூறினார். லச்சுமியும் பதிலுக்கு சரி… சரி… நன்றி…. பாய் ஐயா… என்றாள்.

வெள்ளையர் சுரேசிடம்…. அந்த அம்மாவை கண்டிக்க வேண்டாம்…. அவவுக்கு தேவையாக இருந்தது மலசலகூடம் இல்லை… ஒரு கோயில்… அத நாங்கள் முதலிலேயே… விளங்கிக்கொள்ள வேணும்… ஒருவருடைய தேவை என்ன எண்றத நாங்க தான் சரியா விளங்கிக்கொள்ள வேணும்…. சரியான நேரத்தில் சரியான விழிப்புணர்வ அவங்களுக்கு குடுக்கவேணும்….. இனிமேல் இப்பிடியான தவறுகள் வராம பாத்துக்கொள்ளுங்க….. என்று இவற்றை ஆங்கிலத்தில் கூறிக்கொண்டே சென்று வாகனத்தில் ஏறினார்கள் அடுத்த இடத்திற்கு செல்வதற்காக.

* இது கற்பனை கலந்த ஒரு உண்மைக் கதை *

Print Friendly, PDF & Email

1 thought on “லச்சுமியின் கனவு கனிந்தது

  1. very nice story . lot of natural habits explore of Tamil’s in north part of Sri lanka. When I read the story, I feel the smell of my mother land

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *