யோர்லாண்ட்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 17, 2014
பார்வையிட்டோர்: 15,082 
 
 

யோர்லாண்ட் கடலும் காடும் கொண்ட தீவு. சுற்றி உள்ள சிறு தீவுகளை காட்டிலும் யோர்லாண்ட்டின் நில பரப்பு சற்று அதிகம் எனவே இது மக்கள் வசிக்கும் பகுதியாக அமைந்து, நாகரிக வளர்ச்சியில் பேச்சுமுறை அமைந்த கட்டத்திற்கு வந்திருந்தது. உணவிற்கு நெருப்பை பயன்படுத்தி கொண்டனர். பெண்களும் ஆண்களும் தனி தனி நிலபரப்பில் மரத்தில் ஆன கூடாரம் அமைத்தும், வேட்டையாடிய விலங்குகளின் பெரும்பான்மை குரங்குகளின் தோலில் ஆடை தைத்தும் வாழ்ந்து வந்த நேரத்தில் இப்போது பவிங்க்ஸ், மீனை உண்ண யோர்லாண்டின் கடலை சுற்றி கொண்டிருந்தது. ஜெகானா புணர்ச்சிக்காக இருபத்தி எட்டாவது ஆண் இணையை தேடிகொண்டிருந்தது. பெலிகன் ஒன்று ஐந்து பவுண்டிற்கு பற்றாமையால் உண்ண மீனை தேடியபடி வட்டமிட்டது. யோர்லாண்டின் குரங்கு கூட்டங்கள் மரம் தாவி செர்ரி பழங்களை பறிக்க துவங்க அவை சிதறி நீரோடைக்குள் விழுந்து மீனுக்கு உணவாகியது. மேலும் பாழடைந்த அந்த கடலோர பள்ளி ஒன்று ஏனோ நிமிசப்தமாக இருக்க அவ்வப்போது சிறுவர்கள் சிலரின் குரல்கள் மட்டும் மாறி மாறி எழுந்து கொண்டிருந்தது. சப்தம் அந்தப்பக்கமாக காலை உணவுக்காக மீன்களை தேடி அலைந்து கொண்டிருந்த மனிதனின் காதில் விழுந்தது. சிறிது நேரம் வார்த்தைகளை கவனிக்க தொடங்கியவன் மீண்டும் தனது வேலையை கவனிக்க சென்று விட்டான். சிறுவர்கள் பேசிகொண்டதில் கொச்சை வார்த்தைகளும் கலந்திருந்தன. யோர்லாண்டில் முற்றிலும் சிறுவர்களே அதிகம். முதியவர்கள் ஏழு பேர்களே இருந்தனர். சிறுவர் பருவத்தை கடந்த அனைவருமே முதியவர்கள் தான் அங்கே. அவர்களின் சராசரி ஆயுட்காலம் இரு நூறு ஆண்டுகள். தீவின் முக்கிய முதியவர் மூவர் பள்ளி ஒன்றை நிறுவகித்தனர் அங்கு உணவுக்காக உயிரினங்களை வேட்டையாடுவதும், சமைக்கும் முறைகளும் அந்த மூவரால் பல சிறுவர்களுக்கு சொல்லி கொடுக்க பட்டன. மற்ற முதியவரில் சிலர் கடல் உயிரனங்களை பிடித்து வந்து அவற்றின் இனப்பெருக்கத்திற்கு வழிவகைகள் செய்து மீண்டும் கடலில் சென்று விட்டுவந்தனர். அந்த முறையினை அவர்களும் பல சிறுவர்களுக்கு சொல்லிகொடுத்து வந்தனர். அதில் கீத்தன் என்பவனின் கிழவனும் ஒருவர். யோர்லாண்ட்டில் எந்த சிறுவர்களுக்கும் தங்கள் பிறப்பிற்கு காரணமான தாய் தந்தை யார் என்று தெரியாது வளர்த்தவர்களையே தலைவனாக கொள்வர் கீத்தனின் கிழவன் அறிய மீன்களை, எண்ணிக்கை விகிதம் குறையும் மீன்களை இன விருத்திக்காக பிடித்து வந்து மீண்டும் கடலிலே விடும் பணியை செய்துவந்தார். மக்கள் அனைவருக்கும் கடல் உணவுகள் அதிக விருப்பமாய் இருந்தது அதுவே அவர்களின் பெரும்பான்மையான விருப்பமான உணவு. அதற்காகவே நாளின் பெரும் பகுதியை செலவிடுவார்கள். உணவிற்கு அடுத்ததாக இருந்தது மது. நடனமும் மதுவும் கொண்ட கொண்டாட்டங்கள் நிறைந்தது அவர்களின் இரவுகள். முப்பது வருடங்களுக்கும் மேலாக சிறுவர்களாகவே தோற்றம் தந்த அவர்கள் அதி தீவிர சாகசங்களை புரிபவர்கள். பன மரங்களின் உச்சி வரை சென்று நிலப்பகுதியை சுற்றி பார்த்து வனங்களின் விலங்குகளை வேட்டையாட திட்டமிடுவார்கள். வேட்டையாட மக்கள் வில், நாண் அம்பு முதலிய கருவிகளை பயன் படுத்தினர். வேட்டையாடி கிடைத்த உணவுகளை சமைக்க அவர்களின் தேர்ந்த பழமை முறைகளை கையாண்டார்கள். தத்தமது தேவைக்கேற்ப அவர்களுக்கு மது தயாரிக்கவும்(சைமன் என்பன் இதில் தேர்ந்தவன்) தெரிந்து வைத்திருந்தனர். அப்போது வகுப்பிற்குள் கீத்தன், தமிம், சார்லி, சைமன் என்ற நான்கு நபர்கள் மட்டுமே இருந்தனர். பள்ளியில் மற்ற சிறுவர்கள் யாரும் இல்லை. இதுபோல் இது வரை நடந்ததில்லை என அவர்களுள் கீத்தன் யோசித்து கொண்டிருந்தான். சைமன் என்பவன் ஆப்சென்த்(மது வகை) தயார்த்து பள்ளி முடிந்ததும் விற்பவன். யோர்லாண்டில் சைமனய் விடவும் யாரும் அவ்வளவு சிறப்பாக ஆப்சென்த் தயார்ப்பதில்லை. சைமன் நல்ல லாபம்(யோர்லாண்ட் நாணயங்கள் கடலில் இருந்து பெறபட்ட முத்துக்களை கொண்டு செய்யப்பட்டன)பார்த்தான். அவன் ஆப்சென்த் தயாரிக்க லைகஸ் சோகித் என்ற முதியவரிடம் கற்றுகொண்டான். சைமன் லைகஸுடன் முழுக்க முழுக்க அதற்காக என்றே ஐந்து வருடங்களை செலவிட்டான். கலவை விகிதம் கச்சிதமாக இருக்க வேண்டும் அப்போது தான் தனித்தன்மை வாய்ந்த ருசி கிடைக்கும் என்பது அவனுக்கு தெரியும். தற்போது லைகஸ் உயிருடன் இல்லை. ஆதலால் சைமனை தவிற பிறர் யாருக்கும் அவ்வளவு ருசிமிக்க ஆப்சென்த் தயாரிக்க வலி இல்லாமல் போனது. சாம்ரட் என்பது தான் அவனது நிஜ பெயர். சைமன் என்று மாற்றி கொண்டான். அதை ஏன் மாற்றிகொண்டான் சைமன் என்றால் என்ன அர்த்தம்? என்பது யோர்லாண்டில் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. இரவு பொழுதுகளில் தீவின் மையமான சந்தையில் ஆப்சென்த் விற்பதும் அவனும் குடித்து கொண்டிருப்பது வழக்கமாக இருந்தது. சில நேரங்களில் கீத்தன், சார்லி இருவரும் அங்கு வருவதுண்டு. அப்படி வந்தால் அவர்களுக்கும் ஆப்சென்த் இலவசமாக கிடைக்கும் குடித்துவிட்டு இரவு பொழுதை முழுவதுமாய் யோர்லாண்டின் கடற்கரை ஓரமாக பெண்களுடன் கழிப்பார்கள். அவர்களில் லிசியா என்ற பெண்ணை சைமன் காதலித்து வந்தான். யோர்லாண்டின் மேற்கில் அமைந்த காட்டில் பெண்கள் கூட்டத்துடன் வசித்தாள் அவள். சைமனின் மதுவை குடிக்க கடலோர பகுதிக்கு வருபவள் லிசியா. பலமுறை அதன் தரத்தினில் வியந்து சைமனய் புகழ்ந்திருக்கிறாள். முதலில் லிசியா விடம் காதலை சொல்ல சைமன் தயங்கினான் இப்போது இருவரும் காதலிக்க துவங்கி மூன்று வருடங்கள் ஓடிவிட்டது. தமிம் நத்தைகளை பிடித்து சமைத்து அதை இரவு பொழுதுகளில் விற்று வந்தான் அதனால் சைமனய் சந்திக்க இரவுகளில் அவன் வருவதில்லை. மேலும் அவனது வியாபாரம் மந்தமானதிலிருந்து பெரும் கவலை அவனை வாட்டியெடுத்தது.

கீத்தன், “சைமன், இன்று பள்ளிக்கு யாருமே வரவில்லை. கவனித்தாயா? ஏனென்று உனக்கு தெரியுமா?”

……

தமிம். “முன்பை போல தற்போது நத்தைகள் குறைந்து விட்டன. இன்னம் இரண்டு மாதங்களில் நத்தை வளர்க்கும் முயற்சிக்கான பணியை செய்ய வேண்டும். அதற்கு உங்கள் மூவரின் துணை வேண்டும்” என்றான்.

கீத்தன், “சார்லியும் நானும் தினமும் இனி மாலை உன்னை சந்திக்க வருகிறோம். இருள் சூழும் வரை நத்தைகளை பிடிப்போம். அதன் இன விருத்திக்கான உதவியை எனது கூட்ட தந்தை செய்வார். அவர் தற்போது அழிந்துவரும் மீன் இனங்களை பிடித்து வளர்த்து வருகிறார்.”

சார்லி, “சைமன், இரவு ஆப்சென்த் அதிகமாக குடித்திருப்பான் என்று நினைக்கிறேன்” என்றபடி சார்லி சைமனய் உலுக்கிகொண்டிருந்தான். வகுப்பில் நால்வர் மட்டுமே இருந்தனர். கடைசி இருக்கையில் அமர்ந்திருந்தனர். ஆப்சென்த் அதிகமாக குடிப்பது ஆபத்தானது. மரணத்தையும் ஏற்படுத்தக்கூடியது என்பது மூவருக்கும் தெரியும். மேலும் தூங்கினால் விபரீதமாக ஏதும் நிகழலாம் என அவர்கள் எண்ணினர் அதனால் மூவரும் சைமனை எழுப்பவதற்காக முயன்றனர். ஆனால் சைமனை எழுப்புவது பெரும் போராட்டமாக அமைந்து போனது.

முன்பு ஒரு நாள் சார்லி புகை மீன்களை உண்ண ஆர்வம் காட்டினான். அதற்காக நால்வரும் ஒரு பெரிய பீப்பாய் தேடி அலைந்தனர். பெண்கள் கூடார பகுதியில் நுழைய லிசியா அதை தந்து உதவினாள். அதனால் நால்வரும் லிசியாவையும் அழைத்துக்கொள்ள வேண்டியதாயிற்று மேலும் லிசியாவும் தனது தோழிகளுடன் அங்கு வந்துவிட்டாள். புகை மீன்கள் சமைக்க ஆயத்தம் ஆனார்கள் ஆனால் சைமன் திட்டமிட்டிருந்தது ஆண்களுக்கு மட்டும் தான். நெருப்பு மூட்டப்பட்டன. பீப்பாய்க்குள் நெருப்பு துண்டுகள் போடப்பட்டு தலை வெட்டிய மீன்கள் கொக்கிகளில் மாட்டப்பட்டன பின் கோணிகள் போட்டு மூடப்பட்டன. சைமன் ஆப்சென்த் கொண்டுவந்திருந்தான். அனைவரும் அதை குடித்து… இரவு ஆரம்பம் ஆக இருந்தது. புகையில் மீன்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இருக்க வேண்டும். காத்திருந்தனர். லிசியாவும் சைமனும் ஒட்டிய பாறைகள் இரண்டின் இடை குகைக்குள் நெருப்பை மூட்டி அதன் உஷ்ணத்தில் புணர்ச்சியில் ஈடுபட்டனர். இருவரும் உடலின் ஸ்பரிசத்திலும், ஆப்சென்த் தந்த மயக்கத்திலும் நிலை மறந்திருந்தனர். மற்றவர்களும் கடலுக்குள் சென்று நீந்தி கொண்டும். கரையில் ஏற்றிவைத்த நெருப்பில் ஈர உடலை உலர்த்தியபடி பொழுது கழித்தனர். அப்போது மீன்களின் வாடையில் அங்கு குரங்கு கூட்டங்கள் வந்துவிட்டன. ஆனால் அவைகளால் நெருப்பை அணைத்து மீனை புசிக்க தெரியவில்லை. மேலும் ஆவி பலமாக இருந்து குரங்குகளின் கைகளை சுட்டது. கடலில் இருந்து கீத்தன் மேல் கரைக்கு வந்த போது அங்கு குரங்குகள் நிற்பதை கண்டு அரைகுறையாக வெந்த புகை மீன்களை எடுத்து அவைகளுக்கு போட்டான். அப்போது அங்கு வந்த சைமன் “இருக்கும் மீன்கள் ஏற்கனவே போதவில்லை” என்றும் “அதை குரங்குளுக்கு ஏன் போட்டாய்?” என்றும் கீத்தனிடம் சண்டையிட்டான். அதை கண்ட லிசியா தான் தன் தோழிகளை அழைத்து வந்ததில் சைமன் வெறுப்புற்றுள்ளான் அதனால்தான் இவ்வாறு நடந்து கொள்கிறான் என்று எண்ணி அங்கிருந்து தன் தோழிகளுடன் புறப்பட்டாள். இதனால் மனம் வருந்திய சைமன் மன்னிப்பு கேட்டான். ஆனால் லிசியாவின் கோபம் தனிவதாக இல்லை. புறப்பட்டாள் லிசியா.

பிறகு கீத்தன் குரங்குகளுக்கும் தனக்குமான உறவை சொன்னான்: “சைமன், குரங்குகளை நான் நேசிக்கிறேன். அவைகளை நான் புனிதமாக எண்ணுகிறேன். எனது மூதாதையர்கள் கடற்கொள்ளையர்களால் பாதிக்கப்பட்டபோது. அந்த கப்பலில் இருந்த குரங்குகளே அவர்களை காப்பாற்றியது. அப்போது இருந்த குரங்குகள். ஆயுதங்கள் ஏந்தி சண்டை போடவும் அறிந்திருந்தனர். மனிதர்களையே கொன்று நீருக்குள் வீழ்த்தியது என்பது உனக்கு ஆச்சரியமாக இருக்கலாம். நம் யோர்லாண்டின் அதன் சந்ததியின் பின்பு வந்த குரங்குகளிடம் அந்த பண்புகள் அழிக்கப்பட்டுவிட்டன. குரங்குகள் மனிதர்களுக்கு ஆபத்தானவை என்று மனிதர்களே அதனை அழிக்க தொடங்கிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். இன்று யோர்லாண்டின் செல்வந்தர் அரசர்கள் இருவரின் வீட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் அடிமைகளாக இருக்கின்றன. அவைகள் தினமும் புதிய உணவுகளை புது ருசியுடன் வீட்டினருக்கு சமைத்து தரவேண்டும். உணவு பிடிக்கவில்லை என்றால் அடிமை குரங்குகளின் தலை வெட்டப்படுகின்றன இவையெல்லாம் உனக்கு தெரியுமா. உனக்கு அதைப்பற்றி எல்லாம் என்ன கவலை.”

…..

“அதனால் எங்கள் கூட்டத் தந்தை குரங்குகளின் கதைகளை சொல்லி எங்களை வளர்த்தார். நாங்கள் குரங்குகளை நேசிக்க கற்றுக்கொண்டுதான் வளர்க்கப்பட்டோம்” என்று சொல்லிமுடித்தான். சைமன் கீத்தனும் தங்களது நட்பில் தொடர்ந்தனர். ஆனால் லிசியாவோ சைமன் மீது கோபமாகவே இருந்தாள்.

யோர்லாண்டின் குரங்குகள் பற்றி சிறுவர்களுக்கு தெரியாத ஒரு விஷயம் உள்ளது. அது குரங்கினங்களின் ஒரு சில குழுக்கள் வனங்களில் பிரிந்து ஆயுத பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. சாகில், ப்ளுட்டோ என்ற இரு செல்வந்தர்களின் வீட்டிலும் அடிமை பட்டு கிடக்கும் குரங்குகளை மீட்டு செல்வந்தர்கள் இருவரையும் கொன்று வீழ்த்துவதே அவர்களது திட்டம். அதற்காக பெரும் நேரம் வாள் பயிற்சியில் ஈடுபடுகின்றனர் ஏனெனின் பல மனிதர்களை அவர்கள் கொல்லவேண்டும். கடலோர குரங்குகளே அவர்களுக்கு உணவு கொண்டு தந்து உதவிவந்தன.

பின் ஒரு பள்ளி விடுமுறை நாளின் போது சைமன் சிப்பிகளை கொண்டு பரிசு செய்து லிசியாவிற்கு தோழி மூலம் அனுப்பி வைத்தான். அதில் கடல் சறுக்கு செல்ல வருமாறும் அவள் பிரிவினால் வருந்துவதாகவும் குறியீட்டு மொழியில் எழுதி இருந்தான். ஆனால் சைமன் எதிர்பார்த்ததுபோல லிசியாவிடமிருந்து எந்த விதமான பதிலும் வரவில்லை. அன்றிலிருந்து சைமன் ‘ஆப்சென்த்’ அளவுக்கு அதிகமாக குடிக்க தொடங்கிருந்தான். அவனது நண்பரகள் தடுத்தும் கேட்பதாக இல்லை. பின் சைமனின் மாறுதலுக்காக கடலின் நடுவே இருக்கும் அறநூறு மீட்டர் நீளம் கொண்ட சிறு தீவுக்கு படகு ஒன்றிற்கு நால்வரும் சென்றனர் அங்கு கிடைத்த ஆமைகளையும் நண்டுகளையும் பறவைகளையும் வேட்டையாடி சமைத்து உண்டனர். அப்போது தமிம் ஆமைகளை வறுத்து அதில் தேனும் பேசில் பூக்களையும் போட்டு விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என திட்டமிட்டான். நாட்கள் சென்றதும் அதை நிறைவேற்றி லாபம் பார்த்தான். சைமன் லிசியவிற்காக காத்திருந்தது தொடர்ந்தது… லிசியா கடலோர சந்தைக்கு வருவதில்லை. நாட்கள் செல்ல செல்ல லிசியா ஏனோ வரவில்லை. யாருமற்ற பள்ளிக்குள் இருந்த நண்பர்களில் சார்லி சைமனிடம் சொன்னான் “லிசியா நம் பள்ளியில்தான் இருக்கிறாள் ஜன்னலில் தெரிகிறாள் பார்” என்றான். மேலும் “அவள் உன்னை காதலிப்பதாக சொல்கிறாள்” என்று மயக்கத்தில் இருந்த சைமனிடம் சொன்னான். சைமன் திடுக்கிட்டு எழுந்தான். மூவருக்கும் ஆச்சரியம் மிகுந்தது. ‘யோர்லாண்டில் பெண்கள் பள்ளிக்கு செல்ல அனுமதிக்க படவில்லை பின் எப்படி லிசியா இங்கு வந்திருப்பாள்’ எண்ணியபடி ஜன்னலை நோக்கி சென்றான் சைமன். அங்கு லிசியா தெரிந்தாள். அவள் செய்திருந்த முக அலங்காரம் பார்பதற்கு மிகுதியாக ஒரு வேசியை போல இருப்பதாக அவன் நினைத்தான். மற்ற மூவருக்கும் ஆச்சரியம். அங்கு லிசியா என்ன? எந்த பெண்ணுமே இல்லை. பொய்யாக பேசிய வார்த்தையிலிருந்து இவனுக்கு எப்படி லிசியாவின் பிப்பம் தெரிகிறது? கீத்தன் “ஆப்சென்த்தின் பின் விளைவாக இருக்கலாம்” என்று புலம்பினான். சைமன் யாரும் எதிர் பார்க்காத வகையில் திடீரென்று “லிசியா என்னை காதலிப்பதாக கூறுகிறாள் பார்” என்று கூறியபடி துள்ளிக்குதித்தான். நண்பர்கள் மனதில் திகில் படர்ந்தது. மூர்ச்சை ஆகிய அவர்களால் சைமன் துள்ளி குதிப்பதை வேடிக்கை பார்க்க மட்டுமே முடிந்தது. வாசகர்கள் பள்ளியைவிட்டு சற்று வெளியே வரவேண்டும்.

யோர்லாண்ட் பகுதி கடலுக்குள் மூழ்கக்கூடும் என்று வான சாஸ்திரம் கூறக்கூடிய கிழவன் ஜெனோம் கூறிய எச்சரிக்கையை கேட்டு முதியவர் சிலர் படகுகள் மூலம் வேறு நிலபரப்பை தேடி சென்று கடலுக்குள் மறைய அதற்குள் கடல் சீற்றம் அதிகம் பிடித்து பலமாக பேரலை வீசதொடங்கியது. மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள மேடான வனங்களுக்குள் கூட்டம் கூட்டமாக நுழைந்தனர். இதை கண்ட வனங்களில் இருந்த குரங்கு கூட்டங்கள் வனமே ஒடுங்கும் அளவில் அலற தொடங்கியது. அப்போது யாரும் அற்ற அந்த கடலோர பள்ளிக்குள் சைமனும் மற்ற மூன்று நண்பர்கள் மட்டும் இருந்தனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *