யாம் உண்பேம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 28, 2024
பார்வையிட்டோர்: 123 
 
 

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நக்கீரன் : ஓர் எழுத்தாளரிடம் கேட்க கூடாத கேள்விதான்… வாசகனை அசைத்துப்போடும் உங்கள் படைப்புகளிலேயே உங்களை அசைத்தப் படைப்பு எது…?

நாஞ்சில் நாடன் : நான் முன்னரே சொன்னது போல்… என் தேடல்களில் கிடைக்கும் மனிதர்கள் கதை மாந்தர்களாக வலம் வருவது போல், இங்குள்ள கேவலமான அரசியலும் என் கதைகளில் வலியோடு இருக்கிறது. மகாரஷ்டிராவில் விவசாயிகள் பசி பட்டினியால் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால், அவர்கள் வயிற்று வலியால் செத்துப்போனார்கள் என சத்தியம் செய்தது இங்குள்ள அரசியல்.

மனம் வெதும்பிய நான் மகாராஷ்டிராவில் விவசாயிகள் ரயில் பெட்டியில் அமர்ந்து சில ரொட்டித் துண்டுகளையும் உருளைக் கிழங்கையும் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் சமயம் ஒரு விவசாயி என் இருக்கைக்கு வருகிறார். ஒரு பாலித்தீன் பையில் சில துணிகளும், ஒரு வாட்டர் கேனில் பாதிக் குடிக்கப்பட்ட தண்ணீரையும் கொண்டு வந்தவரின் முகத்தில் அப்படியொரு சோகமும், வலியும் விரவிக்கிடந்தன.

மெல்ல… தயக்கத்தோடு என் அருகே வந்து என்னிடம் இருக்கும் ரொட்டித் துண்டுகளை கவனிக்கும் அவர், ஹமீ கானா… என்ற போது, நான் அழுதே விட்டேன். அதற்கு அர்த்தம் ‘யாம் உண்போம்’என்பது. எனக்கு கொடுங்கள் என்றால் பிச்சைக் கேட்பது போல் ஆகிவிடும் என்பதால் அந்த விவசாயி ‘ஹமீ கானா’ என்று கேட்ட அந்தத் தருணம், அவரின் விரக்தியான கண்கள்… மகாராஷ்டிரா விவசாயிகளின் கொடும் பசியை மறைக்கச் செய்யும் அரசியலை கிழித்தெறிந்தன. அந்த நிஜக் கதைதான் இந்தச் “சூடிய பூ சூடற்க” சிறுகதைத் தொகுப்பில் உள்ள ‘யாம் உண்போம்’ கதை.


பெய்ய வேண்டிய மழை மனதின்றி தூறிக்கொண்டு போயிற்று தொடர்ந்து மூன்று ஆண்டுகள். புஞ்சைக்காடுகள் எல்லாம் சுக்காம் பாறை போலக் கெட்டிப்பட்டு வறண்டு வெடித்து வாய் பிளந்து கிடந்தன. சீமைக் கருவை, எருக்கலை, பீநாறி தவிர வேறெதுவும் உயிர் வாழ்வதற்கான தோது இல்லை. கமலைக் கிணறுகளில் இருநூறு அடியில் கிடந்த தண்ணீர் உள்வாங்கி, உள்வாங்கி ஐந்நூறு, அறுநூறு, எழுநூறு என தங்கம் விலைபோல் போய்க்கொண்டிருந்தது. இந்தக் கதியில் மேலும் துரந்துகொண்டு போனால் பூமியின் மறுபக்கம் அமெரிக்கக் கண்டத்தின் காடுகளிலிருந்து வெளியேறலாம் போல.

வழக்கமாய்க் காடுபிடித்துக் கிடக்கும் மூங்கிற் புற்கள் காய்ந்து குற்றி குற்றியாய் நீட்டிக்கொண்டு நின்றன. ஒரு தீக்குச்சி போதும் பற்றிப் படர்ந்து எரிய, அனலாய்க் கொளுத்திய வெயில், மனித, மிருக உடம்பு களில் இருந்த மிச்ச ஈரத்தையும் உறிஞ்சிக்கொண்டிருந்தது. காய்ந்து வறண்ட, எண்ணெய்ப் பற்றற்ற மனிதத் தோல்களில் உப்புப் பூத்துப் பொரிந்து சொரசொரத்துக் கிடந்தது.

குடிக்கத் தண்ணீரும் கரம்பப் புற்களும் அற்ற கால்நடைகள், உலர் திராட்சை போல் தோல் சுருங்க ஆரம்பித்தபின் தோலுக்காகவும் கறிக்காகவும் விறகு போல் காய்ந்த எலும்புகளுக்காகவும் கொம்புகளுக் காகவும் திறந்த டெம்போக்களில் நாக்பூருக்குப் போயின. விதைச் சோளமும் ரொட்டியாகச் சீரணமாகிவிட்டது. ரேஷன் கடையில் மக்கிய கோதுமை மாவும் மக்காச்சோள ரவையும் போட்டார்கள். கடித்துக் கொள்ள வெங்காயத்துக்கும் சண்டு மிளகாய் வற்றலுக்கும் போக் கில்லை. ரேஷன்கடைகளில் கடன் தரமாட்டார்கள். தாலியில் கோர்க்கப் பட்டிருந்த தங்கப்பொட்டுகள் முதலில் மார்வாடிக் கடைகளுக்குப் போயின. பின்பு தாலியே போயிற்று தொடர்ந்து. பொன் போலத்துலக்கி வைக்கப்பட்டிருந்த பித்தளைப் பானைகள், லோட்டாக்கள், போணிகள், தாம்பாளங்கள் சில்லறையாக விலையாகி ரேஷன் கோதுமை மாவாக மாறி வந்தன.

மார்வாடிக் கடைகளில் எல்லாம் விலைக்கு வாங்கினார்கள். பண்ட பாத்திரங்கள், சைக்கிள்கள், பொன் உருப்படிகள், சரிகையுள்ள துணிமணிகள், கலப்பை, மண்வெட்டி, அரிவாள், குங்குமம் அப்பிய அம்பாபாயியின் பித்தளை முக அங்கி… வயதான தாசியொருத்தி இரண்டு ரூபாய்க்குக்கூட விலைபோகாத தனது வறண்ட மயிரடர்ந்த யோனி காட்டி மயங்கிக் கிடந்தாள். மயங்கிக் கிடந்தாளோ, மரித்துத் தான் கிடந்தாளோ?

கோதுமை மாவை உப்புத் தண்ணீர் தெளித்துப் பிசைந்தால் மல வாடை வந்தது. எந்த முரட்டு ரகக் கோதுமையும் மட்ட ரக அரிசியும் கெட்ட நாற்றத்துடன் விளைவதில்லை. மலிவான ரகங்களை ஆதரவு விலை கொடுத்து வாங்கி, புழுங்க வைத்து, மக்க வைத்து, நிறம் மங்கவைத்து, கசக்க வைத்து, நாற வைத்து, ஒன்றிரண்டு ஆண்டுகள் மழையில் ஊறவைத்து, வெயிலில் காயவைத்து, புழுக்க வைத்து, மக்கள் தின்பதற்கென்று வள்ளன்மையுடன், பெருங்கருணையுடன், தாயின் சாலப்பரிவுடன் ரேஷன் கடைகளுக்கு அனுப்பினார்கள் தேசத் தலைவர் களும் தேசத்தைக் கட்டி எழுப்பிக்கொண்டிருந்த அதிகாரிகளும். அமெரிக்க ஐரோப்பிய நாட்டுப் பன்றிகள் தின்னாது அவற்றை.

கனிவுடன் பள்ளிக் குழந்தைகளுக்கு மதியம் ஒருவேளை மக்காச் சோள ரவை எனும் பெயரில் களி போன்றதொன்றைக் கிண்டிப் போட் டார்கள். வயிற்றின் காந்தல் உப்பின் சுவையைக் கூட எதிர்பார்க்க வில்லை. கொடுந்தீயொன்று குமுறிக்குமுறி எரிந்து கொண்டிருந்தது பங்கு பங்காக யாவர் வயிற்றிலும். பிள்ளைகளுக்குப் போட்டியாக கிழடுகட்டைகளும் அலுமினியத் தட்டேந்தி நின்றார்கள். செவலை நாய்கள் மலங்கள் தேடி எப்போதும் அலைந்தவாறிருந்தன.

ஈதல்லாம் ஆப்பிரிக்கக் கண்டத்துச் சின்னஞ்சிறு நாடொன்றின் பஞ்ச காலச் செய்திகள் என்றெண்ணிக் கொள்ளாதீர்! பொற்காலத்தை நோக்கி, வெளிநாட்டு நவீன சொகுசு ஊர்திகளில் வேகமெடுத்துப் பறந்துகொண்டிருக்கும் இந்தியத் திருநாட்டின் மத்தியப் பகுதியின் சமகாலச் சேதிகள்.

கன்பத் சக்காராம் நாத்ரே, பைங்கன் வாடி சுடுகாட்டில் சாம்பராகிக் காற்றில் பறந்து மண்ணோடு மண்ணாக மக்கிப் போகலாம் என்றுதான் காத்திருந்தார். மேற்கில் கம்பாட் வளைகுடா அல்லது கிழக்கில் வங்காள விரிகுடா ஐந்நூறுக்கும் மேற்பட்ட மைல் தூரம். எனவே கடலில் கரைய மார்க்கமில்லை. எழுபத்து மூன்றாவது வயதில் இனி அவர் எந்த மாநிலத்துக்கு ஆளுநராக இயலும்?

அவரால் முடிந்ததைச் செய்துகொண்டிருந்தார். மிளகாய்க்கோ பருத்திக்கோ களை கொத்துவது, சோளத்தட்டைகளைக் கழித்துக் கொண்டுவந்து மாடுகளுக்குப் போடுவது, குப்பமாய்க் கிடக்கும் வெங்காயத்தின் தாள்களை அரிவது, தரிசுக் காடுகளில் மேய்ந்து கொண்டிருக்கும் கன்றுகாலிகளைப் பத்தி வருவது, புஞ்சைகளில்

வளர்ந்து நிற்கும் பார்த்தீனியம் உள்ளிட்ட குற்றுச் செடிகளைப் பிடுங்கிக் குவிப்பது, உழவுக் கட்டிகளைத் தடிகொண்டு அடித்து உடைத்துப் போடுவது, மணிலாவுக்கோ சோயாவுக்கோ களை பறிப்பது…

ஒற்றைக்கொரு மகனுக்கு பெண் பார்த்து முடித்த கையோடு கெங்காபாயி சீதபேதியில் போய்ச் சேர்ந்து பதினெட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. நாத்ரேக்கு வேறு அல்லல்கள் இல்லை. சுருட்டுக்கும் தம்பாக்கு பொட்டலத்துக்கும் மகன் கொடுக்கும் சில்லறைகளே போதும். பேத்திகள் இரண்டுக்கும் இரண்டு மூன்று ஆண்டுகளில் கல்யாணம் செய்து வைக்கலாம். காலையிலும் முன்னிரவிலும் இரண்டு பாக்ரியும் உடைத்த வெங்காயமும் இருந்தால் அது விருந்து. சோமவார் விரதம், மங்கள்வார் விரதம், குருவார் சந்தோஷிமா விரதம். இரவில் மட்டும்தான் ஒரு பொழுது உணவு. மருமகள் அவல் ஊறவைத்து, உருளைக்கிழங்கு வேகவைத்துப் பிருத்து, பச்சை மிளகாயும் வெங்காய மும் வதக்கிப் போட்டுத் தாளித்து ‘போஹா’ செய்து தருவாள். வேலை யற்று கையொழிந்திருக்கும் பொழுதுகளில் ‘அபங்’ அல்லது ‘தியானேஷ்வரி’ வாசிப்பது என்று குறையொன்றுமில்லை.

பஞ்சம் என்பது தாண்டமுடியாத பாழ்க்கிணறாக வழிமறித்துக் கிடந்தது, எல்லோருக்கும்தான். எனில் எதற்காகத் தன் மகன் பாகோஜி கன்பத் நாத்ரே தனது உயிரையும் மனைவியின் மகள்களின் உயிரையும் தூவென உமிழ்ந்தான்?

எவனோ ஒரு முட்டாள் அரசன், மாவீரன் எனத் தன்னை எண்ணிக் கொண்டு, போரிட்டு, மக்களை – தம்மவரையும், எதிரி என்று எண்ணிய வரையும் கொன்று குவித்தவன் – இறுதியில் தோற்கும் தறுவாயில் கையில் வாளொன்று மாத்திரம் வைத்துக்கொண்டு போர்க்களத்து மண்ணில் கால் விரித்து நின்று, ‘ஒரு குதிரை, ஒரு குதிரை’ எனக் கதறினா னாம். ஒருவேளை பாகோஜியின் சின்னப் பெண், ‘ஒரு ரொட்டி, ஒரு ரொட்டி’ என விசும்பியதை அவன் கண்டிருக்கலாம். அடகு வைக்க, விற்க ஏதுமின்றி தட்டழிந்திருக்கலாம். தகப்பன் சுருட்டுப் பற்றவைத்து நான்கு வாரங்கள் ஆகிவிட்டன என்று நினைத்திருக்கலாம்.

தனது நட்பாகவும் உறவாகவும் உயிராகவும் இருந்த மைத்துனன், ஏதோ வெஞ்சினத்ததால் தனது குறியறுத்து சிவலிங்கத்துக்கு குருதி சொரிந்து கோண்டியா பொது மருத்துவமனையில் போராடும் வேதனை யில் இருக்கலாம்.

ஏதோவோர் ஊரில், மழை பெய்யவில்லை என்றால் காளிக்கு காரம் கூடிய காந்தாரி மிளகாயை அரைத்துப் பூசுவார்களாம். எரிவு தாங்க முடியாமற் போகும்போது காந்தாரி அம்மன் மழை சொரியச் செய் வாளாம். இன்று அடர் கந்தக அமிலம் சொரிந்தால்கூட அவள் அசைந்து கொடுக்க மாட்டாள் என்று தோன்றி இருக்கலாம்.

பூச்சி மருந்து வாங்கமட்டும் அவனுக்கு எங்கிருந்து காசு கிடைத்தது என்று தெரியவில்லை. பருத்திக்கு அடித்து மீந்த பகுதி ஏதும் பழசாகிப் பரணில் கிடந்திருக்க வேண்டும். ஊற்றிப் பிசைந்த சோள மாவும் ஈச்சங் கருப்பட்டியும் எங்கிருந்து வந்தன என்றும் தெரியவில்லை.

அது ‘போர்’ எனப்படும் காட்டு இலந்தை பழுக்கும் காலம். செங் காயானாலும் தின்னலாம். ஊரைத் தாண்டி இருந்த குறுங்காட்டினுள் நுழைந்து தேடினால், மழைக்கு ஏங்கிய மரமேதும் நரங்கிய காய்களைக் காட்டிக்கொண்டு நிற்கக்கூடும். கற்றாழை மூடு ஒன்று கிடைத்தால் கூட அதன் கிழங்கு தோண்டி வந்து ஏழு தண்ணீர் மாற்றி அவித்துத் தின்னலாம். குரங்குகள் தின்னும் காட்டுக் காய்கள் ஏதும் கிடைக்கலாம். கிழட்டு நாத்ரே காலையிலேயே நடந்து நடந்து காட்டில் திரிந்து கொண்டிருந்தார். காட்டினுள்ளும் தலைக்கு மேல் வெயில் அடித்தது. மாலை மயங்கத் திரும்பி வந்தபோது எல்லாம் ஆகிவிட்டிருந்தது.

முப்பது மைல்கள் தாண்டி இருந்த கோண்டியாவுக்கு உயிருக்கு ஊசலாடும் நான்கினைக் கொண்டுபோக எந்த வாகனம் கிடைக்கும் இலவசமாக?

வரிசையாகக் கிடத்தப்பட்டிருந்தன நான்கு சவங்கள். கொள்ளிக் குடம் சுமக்கையில் ஈரல் கீறிப் பிளந்து வேதனித்தது நாத்ரேக்கு.

திருட்டு ரயிலேறிப் போய் நாக்பூரிலோ ராய்ப்பூரிலோ ஜபல் பூரிலோ கட்டிடக் கூலியாக செங்கல்லோ ஜல்லியோ மணலோ சுமந்திருக்கலாம். கரகரத்த குரலில் ‘அபங்’ பாடி கையேந்தி நடந்திருக் கலாம். தினத்துக்கு ஐந்து ரொட்டி சம்பாதிக்க இயலாதா?

எதை அஞ்சினான் பாகோஜி?

வயிற்றை அஞ்சினானா? பருவமான பெண்களின் வாசம் கவர்ந்து வரும் கோரைப்பல் ஓநாய்களை அஞ்சினானா?

தன்னை மட்டும் ஏன் விட்டுப் போனான்?

உடைந்து உடைந்து பெருகியது கிழவனுக்கு. தன்னிலிருந்து தன்னை விலக்கி, தன்னைச் சேர்த்துத் தன்னை மாய்த்து…

தனியாகத் தன்னை மாய்த்துக் கொள்ளத் திராணியில்லை நாத்ரேக்கு!

பூட்ட என்ன இருக்கிறது வீட்டில்? யாருக்கு எதை விட்டுச்செல்ல? புலவர் பாடாது ஒழியும் நிலவறையா? எங்கு செத்து வீழ்ந்தாலென்ன? மாற்றுடை இல்லாத, பத்துக் காசு சில்லறை கூடக் கைவசம் இல்லாத, அடுத்த வேளை உணவு பற்றிய ஆதாரம் இல்லாத, மறுபடியும் இனி காணவே முடியாத மண்ணைப் பற்றிய போதம் இல்லாத புறப்பாடு. ஆவிகள் ஆவலாதியோடு அலைந்து திரியும் பூமி.

கும்பி என்பது தூராத கிணறு, அவியாத நெருப்பு, ஆறாத புண், தன்னையே தான் தின்னும் வெறியான மிருகம், உள் ஒளிந்து கிடக்கும் உருவம் இல்லா அணங்கு ..

எங்கு கொண்டுபோய்த் தொலைப்பது நிழலை. பெற்று வளர்த்த மகனின், பேணிய மருமகளின், குங்குமம் அப்பி குளிர் சாந்தம் அட்டித்து மங்கல வீதி வலஞ்செய்து மணநீர் மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்ட பேத்திகளின் நினைவை எங்கு கொண்டுபோய்த் தொலைப்பது?

ஹிங்கன்காட்டில் கிடந்த குளமொன்றில், கோவணம் கட்டிக்க கொண்டு, அரை வேட்டியையும் தலை வேட்டியையும் வெறும் தண் ணீரில் நனைத்துக் குமுக்கிக் குத்தி, உலர வைத்து மறுபடியும் அணிந்து கொண்டு…

எந்தத் திசையானால் என்ன? திசையற்றவனுக்கு போகும் திசை எல்லாம் சொந்தத் திசை.


அதிலாபாத் ரயில் நிலையம் பிரதான போக்குவரத்து வழியில் அமைந்த பரபரப்பான நிலையமல்ல. ஆந்திரப் பிரதேசத்தின் வடக்குக் கோடியில் மராத்திய மாநிலத்தைத் தொட்டுக்கொண்டு கிடந்த மாவட் டத்தின் தலைநகரம். எப்போதும் பீழை சேர்ந்த கண்களும் கோட்டு வாயும் உறக்கச் சடைவுமாகக் கிடக்கும் நிலப்பகுதி. இருபது கிலோ மீட்டரில் மராத்தியம். எண்பது கிலோமீட்டரில் கர்நாடகம். நூற்றிருபது கிலோமீட்டரில் சத்தீஸ்கர் மாநில எல்லைகள். வறட்சி, வறுமை, புறக்கணிப்பு, அண்டை மாநிலங்களில் குற்றம் செய்து ஓடிவந்து மறைந்து வாழும் மானுடரின் ஆட்சி. மக்கள் போர்க்குழு கம்யூனிஸ்ட்டு கள் காலுன்றி நின்ற இடம்.

அதுபற்றி எல்லாம் கவலைப்படமுடியாத விற்பனைப் பிரதிநிதி பாபுராவ். சரியான தங்குமிடம் அல்லது உணவு கிடைக்காது என்றோ, போக்குவரத்து வசதிகள் போதுமானதாக இல்லை என்றோ, வெயில் நூற்றுப் பன்னிரண்டு கொளுத்துகிறது என்றோ ஒதுங்கிக்கொள்ள முடியாத வேலை. அவன் ஏவப்பட்ட கணை. சொந்த விருப்பு, வெறுப்பு கிடையாது. ஒன்றில் இலக்கை அடைந்து வீழ்த்த வேண்டும் அல்லது வெறுமனே வீழ்ந்து கிடக்க வேண்டும். கான முயல் எய்த அம்பினில் யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது.

காலையில் உசல் பாவ், சாய். மதியம் முரட்டு ரொட்டிகளும் பருப்பும், வாய்க்கவில்லை எனில் பட்டாட்டா வடா, சாய். இரவு எப் போதும் தோதான கடை தேடிப்பிடித்துக் கொள்வான். பயண விற்பனைப் பிரதிநிதிகளின் பிரதான பொழுதுபோக்கான நாடன் சாராயக்கடைகள் இன்றும் அறிமுகம் ஆகியிருக்கவில்லை. நேரம் வாய்த்தால் மராத்தி சினிமா அல்லது தமாஷா.

அந்த முறை பாபுராவின் பயணத்திட்டம் பட்னேரா, யவத்மல், புல்காவ், அதிலாபாத், நாந்தேட், பர்பனி, லாத்தூர் உற்பத்தியாளர் கூட்டுறவு நூற்பாலைகள் இலக்கு. பகலில் அலைச்சல், முன்னிரவில் பயணம், பின்னிரவில் உறக்கம், காலையில் பயணம், பகலில் அலைச் சல். கையில் இருக்கும் பிரீஃப் கேஸ் தனியாள் தங்கிப் புறப்பட சகல சாமான்களும் கொண்டது. பாபுராவுக்கு இந்த அலைச்சலிலும் சுக மொன்று கண்டு கிட்டியது.

யவத்மல் அறையை அதிகாலையில் காலி செய்தான். முன்னிரவில் புறப்பட்டிருக்கலாம். ஆனால் யவத்மல் -அதிலாபாத் கடைசி பஸ் மாலை நாலரைக்கே போய்விட்டது. எட்டு மணிக்கு அதிலாபாத் வந்து சேர்ந்தான். பேருந்து நிலையத்தில் இருந்து மில்லுக்கு நாலு கிலோ மீட்டர். பேருந்து நிலையத்தில் வாடகைக்கு சைக்கிள் கிடைத்தது. அதிலாபாத்தில் இருந்து பர்பனிக்கு மதியம் இரண்டரை மணிக்கு ஒரு பாசஞ்சர் இருந்தது. மாலை பர்பனியில் அறை எடுத்துக் கொள்ளலாம். மில்லில் வேலை முடித்து வெளியே வர ஒரு மணியாகிவிட்டது. ஆற அமரச் சாப்பிட்டு ரயில்வே ஸ்டேஷன் போவதென்றால் பாசஞ்சர் போய்விடும்.

பசி நன்கு கொளுத்தியது. இரண்டு பட்டாட்டா வடை சாய் எத்தனை நேரம் தாங்கும்? ரயில் நிலையத்தில் என்ன கிடைக்கும் என்று சொல்ல முடியாது. வாடகை சைக்கிளை பேருந்து நிலையத்தில் கொடுத்துவிட்டு சைக்கிள் ரிக்ஷா பிடித்து ரயில் நிலையம் கிளம்பினான் பாபுராவ். ரிக்ஷாக்காரன் காட்டிய கடையில் நான்கு ரொட்டிகளும் உருளைக் கிழங்கு சப்ஜியும் இலவசமாய் தந்த நான்காய் பிளந்த வெங்காயமும் எலுமிச்சம்பழத் துண்டும் பார்சல் வாங்கிக்கொண்டான். பயணச் சீட்டு வாங்கி, அடைசல் இல்லாத பெட்டியில் ஏறி, சாய்வாக உட்கார வண்டி புறப்பட்டது. பல பத்தாண்டுகளாய் திரும்பத்திரும்ப ஓரேதடத்தில் ஓடிக்களைத்த அலுப்பு தொனித்தது, வண்டியின் ஊதலில். வண்டியில் கூட்டமில்லை. காட்டமான வெயில் பொசுக்க ஊறிய வியர்வையில் தூசி அப்பியது. நான்கு மணி நேரமோ, ஐந்து மணி நேரமோ ஆகும் பர்பனி போய்ச்சேர . மலிவாக அறை எடுத்துக் குளிக்க வேண்டும் முதலில். பசித்தது பாபுராவுக்கு. சாப்பிடலாம் என்றெண்ணி தண்ணீர் போத்தலை எடுத்து வைத்துக்கொண்டு, ரொட்டிப் பார்சலைப் பிரித்தான்.

காய்ந்த தையல் இலையில் பொதியப்பட்டிருந்த சோள ரொட்டி கள். தாராளமாக கொத்தமல்லித் தழையும் வதக்கிய வெங்காயமும் வேகவைத்து உதிர்த்த உருளைக்கிழங்கும் போட்டுப் பிரட்டிய சப்ஜி. எண்ணெயில் வதக்கிய நீண்ட காரமான பச்சை மிளகாய். சூடு ஒரு ருசி, சிவப்பு ஒரு அழகு என்பதெல்லாம் கொடுத்து வைத்தவர்களுக்கு. பாபுராவுக்கு பசிக்கு ருசி வேண்டாம், நித்திரைக்குப் பாய் வேண்டாம்.

வெளியில் வேடிக்கை பார்த்துக்கொண்டு பறக்கும் தூசி ரொட்டியில் விழாமல் காபந்து செய்துகொண்டு, கார மிளகாய் கடித்துக் கொண்டு, நிதானமாக ரொட்டியைப் பிய்த்துத் தின்றுகொண்டிருந்தான்.

கால் துண்டு ரொட்டியும் கொஞ்சம் சப்ஜியும் இலையில் மீதம் இருந்தன. ஒரு துண்டு ரொட்டியை சப்ஜியுடன் விரல்கள் கவ்விப் பிடித் திருந்தன. வாய்க்குக் கொண்டுபோகும் நேரம். பாபுராவின் உயர்த்திய கையை, முதிய, தோல் சுருங்கிய நாத்ரேயின் கை எட்டிப் பிடித்து வெட வெடத்தது. குலைந்து ஒலித்த குரலால் அதிர்வுற்று பாபுராவ் நிமிர்ந்து பார்த்தான்.

‘அமி காணார்… அமி காணார்…”

‘எனக்குத் தா’ என்றல்ல, ‘நான் தின்பேன்’ என்றல்ல, நாம் உண்போம் என. தூய சங்கத் தமிழில் பெயர்த்தால் ‘யாம் உண்பேம்’ என.

கண்கள் கசிந்திருந்தன. பிடித்த கரம் நடுங்கியது. மீண்டும் மீண்டும் பதற்றம் பரவ, ‘அமி காணார்… அமி காணார்…”

பல்கிப் பெருகிக் கிளைத்துத் தழைத்த பசியின் மொழி பாபுராவை திடுக்கிடச் செய்தது. மறுபடி மறுபடி சோர்ந்து தொய்ந்த குரல். யாசகத்தின் இரங்கிய குரல் அல்ல அது. பசியின் பாய்ச்சலை உணர்த்திய குரல். தின்ற மிச்சமல்லவா என்று தோன்றியது அவனுக்கு. கால் துண்டு ரொட்டி என்ன பசியாற்றும்? சற்று முன்னால் வந்திருக்கலாகாதா என இரங்கியது மனது.

பிடுங்காத குறையாகக் கையிலிருந்து வாங்கிய பொட்டலத்துடன் எதிர் இருக்கையில் உட்கார்ந்து, கால்துண்டு ரொட்டியில் கால்துண்டை வாயில் போட்டு மெல்லலானார் நாத்ரே. உமிழ் நீர் நரம்புகள் வெட்டி இழுத்துச் சுரந்ததன் வலியில் சற்றுக் கோணியது வாய். சுரந்த கண்கள் வடிந்தவாறு இருந்தன. யுகங்களாய்த் தொடர்ந்த மனித குலத்தின் பசியின் வடிவமாய் நாத்ரே காரமான பச்சை மிளகாயைக் ‘கரக்’ கெனக் கடித்தார்.

தன்னிடம் இருந்த தண்ணீர் போத்தலை அவரிடம் நீட்டினான். அடுத்த ஸ்டேஷன் எப்போது வரும் என்று தெரியவில்லை. வடா பாவ் கிடைக்கலாம். பச்சை வாழைப்பழங்கள் கிடைக்கலாம். அவருக்கு இரண்டு வாங்கித் தர வேண்டும் என சங்கல்பம் செய்துகொண்டான். காதில் தகப்பன் சாமியின் உபதேசம் போல ஒலித்துக்கொண்டிருந்தது நாத்ரேயின் குரல், மிச்ச வாழ்க்கைக்குமான மந்திரம் போல. யாம் உண்பேம்.

– ஓம்சக்தி ஜுன் – 2006

நன்றி: https://nanjilnadan.com/2011/01/19/யாம்-உண்போம்/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *