பாசக் கணக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 15, 2021
பார்வையிட்டோர்: 2,998 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

ராமையா, தண்ணிர் புரையேற, “மூக்கும் முழியுமாக” திண்டாடினார். அதற்குக் காரணமான அவரது மனைவியோ, அவர் காதுகளில், நீர்த்துளிகள், அந்தக்காலத்து கடுக்கன்கள் மாதிரி மின்னுவதை ரசித்துப் பார்த்தபோது அவருக்கு கோபமும் புரையேறியது. ஆத்திரமாக ஏதோ பேசப்போனார். இதனால் அவர் வாய் குளமாகி, பற்கள் மதகுகளாகி, உதடுகள் நீர் கசியும் கால்வாயானதுதான் மிச்சம். அவர் தண்ணிர் குடிக்கும்போதோ இவள் வெற்றிலையை குதப்பும்போதோ எந்தப் பேச்சும் வைத்துக்கொண்டால், கணவர், பெர்ராச்சட்டம் மீறப்பட்டது போல் குதிப்பார் என்பது தெரிந்தும் அந்தம்மா அந்தச் செய்தியைச் சொல்லிவிட்டாள். அவர் வந்ததும், வராததுமாக ஒரு செம்புத் தண்ணிரை, அவர் கையில் இவள் திணிக்க, அதை அவர் வாயில் பொருத்தியபோது, மருது டெலி போன் செய்த செய்தியை சொல்லியிருக்கக் கூடாதுதான். ஆனாலும் ஆர்வக்கோளாறில் சொல்லிவிட்டதால், அவரது அய்ம்புலன்களும் கோளாறாகிவிட்டன. அதற்குப் பிராயச்சித்தமாக மிருதங்கத்தைச் சரிபார்ப்பதுபோல், அவரது தலையைத் தட்டியும், குட்டியும், தடவியும் சமாதானம் சொன்னாள்:

“ஒங்க பையன் உங்கள நினைக்கான். அதனாலதான் புரையேறிட்டு.”

ராமையா வாய்க்குள் தேங்கிய தண்ணிரை, ஜன்னல் கம்பிகளின் இடைவெளியில் ஊடுருவ விட்டபோது, அவர் தன்னிடம் பேசப்போவதாகத்தான் அந்தம்மா நினைத்தாள்.

ஆனால் அவரோ பேண்ட்க்குள் கிடந்த உடம்பை லுங்கிக்குள் மாற்றிக் கொண்டு கட்டில் சட்டத்தில் தலைபோட்டு சுவரில் தலை சாய்த்தபோது, அந்தம்மாவுக்கும் கோபம் கரையேறியது. முன் தலையில் நரையேறிய முடியை இழுத்துப் பிடித்துக் கொண்டே கேட்டாள்:

“வாராவாரம் டெலிபோன்ல பேசுற மருது, ஒரு மாசமா பேசலியேன்னு நான் துடித்தது மாதிரி, நீங்களும் தவித்து இருப்பீங்கன்னு நினைச்சது எவ்வளவு பெரிய தப்பாப்போச்சு. அம்மிக்கல் மாதிரி அப்படியே கிடக்கீங்க. ஆனாலும் இவ்வளவு ஆங்காரம் ஆகாதுப்பா.”

ராமையா, அவள் பக்கமாய் முகத்தை நிமிர்த்திக்கொண்டே கேட்டார்: “நான் இருக்காத நேரத்தைப் பார்த்து ஒங்கிட்ட மட்டும் பேகறான். இதுல ஒனக்கும் சந்தோஷம்.”

“ஒங்களுக்கு கொஞ்சமாவது ஒரு இது இருக்குதா?. இந்த மெட்ராகல மத்தியானம் என்கிறது, அமெரிக்காவுல ராத்திரி. ஒங்ககிட்ட அவன் பேசணுமுன்னா, அவன் நடுராத்திரியில எழுந்திரிக்கனும்.”

‘சரி அவன் துரக்கம் கெட வேண்டாம்’.

ராமையா, மனைவியை நோக்கிய முகத்தை மறுபுறமாய்த் திருப்பிக் கொண்டார். ஆனாலும் அந்தம்மா, மகனுடன் பேசிய விபரங்களை, சுருக்கிச் சொன்னாள்:

“யுனிவர்சிட்டி பசங்களோட பைக்காரா நீர்வீழ்ச்சியை, பார்க்கப் போனானாம். அப்புறம் கனடா போனானாம். அதனால தான் நம்ம கூட பேச முடியலியாம். ஒரு கார் வாங்கிட்டானாம். இரண்டாயிரம் டாலராம். கேக்கறதுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா…’

அசைவற்றுக் கிடந்த ராமையா, கட்டிலில் இருந்து துள்ளிக் குதித்தார். சிறிது திகைப்படைந்தவர்போல் கண்களை துரத்தியவர், பின்னர் தலை நோகாமல் அடித்துக் கொண்டார். அந்தம்மாவை பகையாளிப் பார்வையாய் பார்த்தபடியே கத்தினார்:

‘வீட்டு நிலைமை தெரியாத ஒரு தறுதலைப் பிள்ளையை பெத்துட்டு, அப்படிப் பெற்றதை சாதனையா வேற சொல்றியா. இரண்டாயிரம் டாலர்ன்னா எழுபதாயிரம் ரூபா. இவனுக்கு விசா கட்டணத்துக்கும், இன்சூரன்ஸ் தொகைக்குமுன்னு எங்க ஆபீஸ் பியூன் தேவராஜன்கிட்ட கடனா வாங்கினேன் பாரு. இருபதாயிரம் ரூபா. இவரு அமெரிக்க படிப்புக்கு, பேங்கில கடன் வாங்க, பழைய வீட்டு லோன். அடைக்கிறதுக்காக மளிகைக்கடை அண்ணாச்சிகிட்ட வாங்கினேன் பாரு முப்பதாயிரம் ரூபா. அப்புறம் இவருக்கு தட்டு முட்டுச் சாமான்கள வாங்கிறதுக்காக, என்னோட படிச்ச ராமசுப்புகிட்ட வாங்கினேன் பாரு ஏழாயிரம் ரூபா. இந்தக் கடன்கள எவன் அடைக்கிறது. எப்போ அடைக்கிறது. என் வாய் மொழியையே சட்டமா நினைச்சு, என் நாணயத்தை மட்டுமே நம்பிக் கொடுத்த கடன்கள், அவங்களுக்கு மஞ்சக் கடுதாசி கொடுக்கச் சொல்றியா.

‘ஒங்க நிலைமை புரியது. ஆனா அவன் நிலைமையும் நினைச்சுப் பாருங்க. அந்த ஊர்ல கார் இல்லாம, எங்கேயும் போக முடியாதாம். பஸ்கள் ரொம்பக் குறைச்சலாம்.

‘அதே அமெரிக்காவில நம்ம பையன்களும் பொண்ணுகளும் பேப்பர் போட்டும். பேபி சிட்டிங் செய்தும் பிழைப்பு நடத்தி படிக்கத்தான் செய்றாங்க. இவ்வளவுக்கும் அவங்க, ஒன் மகன் மாதிரி, இ.இ.டி.க்கு ஒட்ட சைக்கிள்ல போன பசங்க இல்ல. இந்த ஊரில மோட்டார் பைக்கில போயிட்டு, அந்த ஊரில பேப்பர் விற்காங்க. நம்ம லலிதா மகன் சேகர் இருக்கான் பாரு

‘ஊரு பிள்ளைங்கள தலையில துரக்கிக் கொண்டாடுங்க. ஒங்க பிள்ளைய கால்ல போட்டு மிதிங்க. நல்ல தகப்பன்.’

‘பிள்ளை பெருசானால், புருஷனை, பெண்ட்டாட்டி மதிக்க மாட்டாள்னு சங்கரசுப்பு சொன்னது சரியாத்தான் இருக்கு. அவனுக்காக நான்பட்ட கடன அடைக்க வழி சொல்லிட்டு, அப்புறம் ஒம் மகன் கார் வாங்கின. பெருமையை, நீ தெருயூரா , தம்பட்டம் அடிக்கலாம். அமெரிக்கா. பொல்லாத அமெரிக்கா. நம்ம வரிப்பணத்துல படிக்கிற பசங்க அத்தனை பேரும் இப்படி சுயநலமா வெளிநாடு போனால், நாடு உருப்படுமா, இல்ல விடு உருப்படுமா’

‘ஏன் இப்படி கத்து நீங்க… அக்கம்பக்கத்துல எட்டிப் பாக்காங்க. ஏன் இப்படி பேய்’.

‘கோதை கொஞ்சம் வெளியில போறியா..’

கோதையம்மா, உடனடியாய் வெளியேறினாள். அவர் கோபத்தின் உச்சிக்குப் போகும்போது, அவர் அங்கிருந்து உதிர்க்கும் உயர்ந்தபட்ச வார்த்தைகள் இவை என்பதை உணர்ந்தவள் போனாள். அப்படி போகாவிட்டால், இவர் போய்விடுவார். அப்புறம் எப்போ வருவாரோ. எப்படி வருவாரோ.

என்றாலும், கோதையம்மா, அந்த அறையில் இருந்து, சாதாரணமாய் வெளியேறாமல் வெளிநடப்பு செய்கிறவள்போல் போனாள்.

முன்பெல்லாம் இப்படி வெளியேறும்போது, நான் ஏதும் தப்பு செய்திட்டேனோ என்று குழம்புகிறவள், இப்போது உச்சி முதல் மூக்கு வரை குழப்பத்திற்குப் பதிலாக, கோபத்தை ரெப்பிக் கொண்டு சமையலறைக்குள் வந்துவிட்டாள். சிறிது நேரம் சுவாமி விவேகானந்தர் மாதிரி கைகளைக் கட்டிக் கொண்டு ஒரே சமயத்தில் தூரத்துப் பார்வையாகவும், கிட்டப் பார்வையாகவும், கண்களை மாற்றிக் கொண்டு அசைவற்று நின்றாள். சிறிது நேரம்தான். பிறகு முறுக்கி வைத்த உடம்பை, நெகிழ்வாக்கியபடியே, தனக்கே கேட்காத குரலில் முணுமுணுத்தாள்.

சொந்த மகன், சுய சம்பாத்தியத்துல கார் வாங்கினது பொறுக்காத இவருல்லாம் ஒரு அப்பாவா. படித்த குடும்பத்துல பிறந்திருந்தா காரோட அருமை தெரியும். கழுதைக்கு தெரியுமா. சி. அப்படியெல்லாம் ஒப்பிடக் கூடாது. ஆனாலும் தற்குறி குடும்பத்துல பிறந்த மனுஷன் கார் வாங்குறது கண்டு அரண்டு போவது சகஜம்தான். இருபத்தைந்து வருடத்துக்கு முன்னால மாமனார் வாங்கிக் கொடுத்த சைக்கிளையே மாற்ற முடியாத மனுசனுக்கு, கார் என்கிறது. பெரிய விசயம்தான். வாடகைக் கார்லகட ஏறாத வம்சத்துக்கு கட்டவண்டி புத்திதான் இருக்கும். தவமிருந்து பெத்த எம்பிள்ளைக்கு இவரே கண்ணு போட்டுடுவார் போலுக்கே.

கோதையம்மா, பழைய சாம்பாரை சூடேற்றாமல், பழைய நினைவைச் சூடேற்றிக் கொண்டாள்.

வீட்டிலிருந்து, கால்களுக்கு இருமல் எடுத்தது போல் லொக்கு, லொக்கு என்று நடந்து, அந்தக் காலத்து டபிள் விசில் பஸ்களில் தொங்கியபடியே இவர் செகரட்டேரியேட்டில் ஒரு லோலுபட்ட வேலைக்கு போனது, அந்தம்மா மனதில் கருப்பு,சிகப்பு படமாக விழுந்தது. அதில் அவர் லெவலுக்கு பெரிய இடத்துப் பெண்ணான தன்னை அளவுக்கு மீறிய பண்பாடு உள்ளவளாகவும், இவரை அதே விகிதாச்சாரத்தில் காட்டானாகவும் எடிட் செய்து கொண்டாள். அப்புறம் பத்து வருடமாக பிள்ளையில்லாத இடைவேளை. இதற்குள் இந்த மன்மதருக்கு அடுத்த கல்யாணம் பேசிய மாமனார். மாமியார். அவர்களிடமிருந்து தன்னை தற்காக்க வீட்டில் ஒரு சின்ன அறையை பூஜையறையாக ஆக்கியது. அப்படியும் பிள்ளை பிறக்காததால் மருந்தீஸ்வரர் கோவிலில் மண்சோறு சாப்பிட்டது. அம்மா சன்னதி முன்னால் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய்க் குவியலாய் இருக்கும் மண்ணில் சில துகள்களை புறங்கைகட்டி குனிய முடியாமல் குனிந்து உண்டது. இவர் அந்தக் கோவில் பக்கமே தலைகாட்டாதது. அப்புறம் மகள் பிறந்தது. இதனால் மாமனாரும், மாமியாரும் ஒட்டிக்கு ரெட்டியாய் திட்டியது. மீண்டும் மனமுடைந்து அதே கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்தது. அடுத்த ஆண்டே ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு மருந்தீஸ்வரர் நினைவாய் பேர் வச்சது. கர்நாடகப் பேராய் வைக்கிறியேன்னு இவரு கிளப் டான்ஸ் ஆடுனது. ‘என் பேரை ஏன் வைக்கலேன்னு மாமனார் உதிரமாடன் குதியாய்க் குதித்தது. பிள்ளைகள் பெரியவர்கள் ஆகிக்கொண்டு வந்தது. இவரு ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு பிரமோசன் வீதம் இரண்டு பிரமோசன் வாங்கினது. மாமானார், மாமியார் மண்டையைப் போட்டது.

கோதையம்மாவின் மனதிற்குள், கருப்பு வெள்ளையாகவும், பிறகு கோவாக் கலரிலும் ஒடிய நினைவுப்படம் திடீரென்று வண்ணப்படமானது.

மகள் அம்பிகாவை நல்லபடியாய் கரை சேர்த்த, வீடியோ சாட்சியான திருமணக் காட்சிகள். அடுத்த மறுவாரம் மருது தன்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டே ஜி.ஆர்.ஏ. என்கிற தலையைச் சுற்றுகிற பரீட்சையில் ஆசியாவிலே ஏழாவது இடத்தில் தான் வந்திருப்பதை தெரிவித்தபோது ஏற்பட்ட, ‘ஈன்ற பொழுதினிலும், பெரிதுவந்த ஆனந்தக்காட்சி. பிறகு, கேம்பஸ் இண்டர்வியூவில கிடைத்த பத்தாயிரம் ரூபாய் வேலையில சேரு. அமெரிக்காவில போய் எம்.எஸ். படிக்க வேண்டியதில்லே’ என்று இவரு குதியாய்க் குதித்த வில்லத்தனமான காட்சிகள். இதையடுத்து மருது நடத்திய உண்ணாவிரதப் போராட்டம். எப்படியோ இந்தக் குறுக்குத்தெரு மருது, அமெரிக்க மருதாக புறப்பட்ட பிரிவுக் காட்சி. அவன் போய்ச் சேர்ந்த உடனேயே அவனுக்காக டீச்சிங் அலைன்மென்ட் காத்திருந்ததாய் மருது டெலிபோனில் சொல்லும்போது ஏற்பட்ட புளகாங்கிதம். இப்போது அவன் கார் வாங்கியதைக் கேள்விப்பட்ட பரமானந்தம். இதோ மருது கழுத்தில் டை கட்டி, வெள்ளைக்காரன் மாதிரி உடம்பை லேசாய் சாய்த்து, கார் கதவைத் திறந்து இருக்கையில் உட்கார்ந்தபடியே ஏதோ ஒரு துரக்கலான இடத்தில் நிற்கும் நண்பர்களைப் பார்த்து கையாட்டுகிறான்.

கோதையம்மா, அந்த நண்பர் குழுவில் இருந்த ரெண்டு பெண்களை எடிட் செய்தபடியே, மகன் காரை ஒட்டும் கண்கொள்ளாக் காட்சியை ரசித்தாள். ‘பாத்து ஒட்டுடா என் ராசா என்று தன்னை அறியாமலேயே முணுமுணுத்தாள்.

கோதையம்மாவின் மனப்படம், ஒரு இருமல் சத்தத்தால் அறுந்தது. பக்கத்தறையில் அந்த மனுசன், ஒரு தடவை இருமிவிட்டுப் போகாமல், தொடர் இருமலை மேற்கொண்டார்.

அவளுக்கும் புரிந்துவிட்டது. அவளோடு டு போடும் போதெல்லாம். வயிறு பசிக்குது, சோறு கொண்டு வா’ என்று சொல்லாமல் சொல்லும், கள்ளத்தனமான இருமல்.

அவருக்குக் காபி கொடுக்காததும், அந்தம்மாவுக்கு உறைத்தது. இப்போது போய்க் கொடுத்தால், எகிறுவார். ஆகையால் கேஸ் அடுப்பை ஒளிமயமாக்கினாள். மிக்லியை தட்டி விட்டாள். பருப்பைக் கடைந்தாள். முட்டையை உடைத்தாள். பாத்திரங்களைக் கழுவினாள். அரை மணி நேரத்திற்குள் எல்லாவற்றையும் முடித்துவிட்டு, சாப்பாட்டு மேசைக்கு தட்டையும், இதர வகையறாக்களையும் கொண்டுவந்துவிட்டு, அவர் இருந்த அறைக்குள் போனாள். ராமையா குப்புறக் கிடந்தார். இரண்டு கைகளையும் விரித்துப் போட்டு வேனுமானால் ஆணியடித்துக் கொள் என்கிற மாதிரி ஆடாமல் அசையாமல் கிடந்தார். கோதையம்மா உரக்கக் கூவினாள்.

பெத்த மனம் பித்து. பிள்ளை மனம் கல்லுன்னு சொல்வாக. ஆனா இந்த வீட்டுல பாதி உல்ட்டா. சரி சாப்பிட வாங்க. சூடு ஆறிடும்’.

ராமையா, கட்டிலிலிருந்து மீண்டும் துள்ளிக் குதித்தார். அவள் கண்களை விரலை ஆட்டாத குறையாக, கிட்டே போனார். பின்னர் அந்த அறையில் குறுக்கும் நெடுக்குமாய் கற்றிச் சுற்றி வந்தார். அவ்வப்போது நின்று நின்று, அந்தம்மா நெருங்கி நெருங்கி அடங்காச் சினத்தோடும், ஆற்ற முடியாத கய பரிதாபத்தோடும், அவற்றிற்கேற்ப, ஏற்ற இறக்கமான குரலோடும், பொரிந்து தள்ளினார்.

“கடனைக் கேட்க கூச்சப்பட்டு. அதேசமயம் என்னைப் பாத்து கையை நெறிக்கானே. எங்க ஆபீஸ் பியூன் தேவராஜன்.

அவன் என் கழுத்த நெறிக்கனும் என்கிறியா. கட்டம் நகராம இருக்க, எல்லார்கிட்டயும் காச வாங்கி கல்லாவில் போட்டுட்டு, அப்புறம் என்ன சரக்குன்னு கேட்கிற. கறார் பேர்வழியான மளிகைக் கடை அண்ணாச்சி என் கழுத்துல துண்டைப்போட்டு இழுக்கணும்.கிறியா… எல்லாவற்றிற்கும் மேலாய், நான் நேர்மையானவன்னு என் மனசில ஒரு பெருமிதம் இருக்குதே. அது ஒரேயடியாய் ஒடிப் போயிரனும் என்கிறியா. நூறு டாலர் மிச்சம் படுத்தி இருக்கான்னு நீ கிரிக்கெட் ஸ்கோர் மாதிரி சொன்னபோது, மொத்தமா அனுப்பப் போறான். வாக்குத் தவறாம வாங்குன கடன அடைச்சுடலாம்முன்னு, நினைச்ச என்னன ஒரேடியாய் நாக் அவுட் செய்திட்டானே.”

மேற்கொண்டு பேசமுடியமல், ஆத்திரம் நாக்கை அடைக்க, ஆவேசம் தொண்டையை இழுக்க, அல்லோகல்லோலப்பட்ட ராமையா, மேஜையிலிருந்த ஒரு கவரை எடுத்து, தரையில் வீசப் போனார். நீளவாகு கவரின் அடிவாரத்தில் வீட்டுக்கதவு மாதிரி, ஜிகினா காகிதத்திற்குள், அவரது அருமைப் பையனின் பெயரும், முகவரியும் எழுதப்பட்டிருந்தது. இரண்டு கைகளையும் தலையில் வைத்தபடி, மோசம் போயிட்டேனே! மோசம் போயிட்டேனே!… என்றார். பிறகு மீண்டும் ஆவேசியாகி, எழுந்தார். அந்தக் கவருக்குள் இருந்த காகிதத்தை, கோதையம்மாவின் முகத்திற்கு முன்னே நீட்டியபடியே கத்தினார்.

“இதோ பாத்தியா. பேங்க் கடனுக்காக இவருக்கு எடுத்த ஆறு லெட்ச ரூபா இன்சூரன்ஸ்க்கு பிரீமியம் கட்டச் சொல்லி வந்திருக்கிற ஆறாயிரம் ரூபாய் நோட்டீஸ்… உனக்கு தெரிஞ்சவங்க யாராவது இருந்தால் சொல்லு. அவங்ககிட்ட கையேந்துகிறேன். அதுலே மிச்சம் இருந்தால், ஒம் பையன் காருக்கு சின் போட்டு அலங்கரிக்க அவனுக்கே அனுப்பலாம். எல்லாம் நீ கொடுத்த இளக்காரம். இங்க கிடைக்கிற பத்தாயிரம் ரூபாய் வேலையில சேருடான்னு நீ எப்பவாவது சொல்லி இருக்கியா. கடைசில, நான்தான் அனாதையா போயிட்டேன். பேசாம எம்மேல கார ஏத்திக் கொல்லச் சொல்லு. இந்த இன்சூரன்ஸ் பணத்த எப்படிக் கட்டப் போறோம். வாங்குற சம்பளமே எல்லா பிடிப்புக்கும், மஞ்ச மசாலா அரிசிக்கும் போயிடுது. இந்த ஆறாயிரம் ரூபாய்க்கு எங்க போறது?. எங்கேயாவது இடிப்போகப் போறேன். இதனால உனக்கும் நிம்மதி. அவனுக்கும் நிம்மதி.”

ராமையா, கையிலிருந்த இன்சூரன்ஸ் கடிதத்தை கிழிக்கப் போனார். கோதையம்மா அதை லாவகமாக பிடுங்கிக் கொண்டு, அவர் தோளில் கை போட்டாள். அவரது கட்சியின் நியாயம், அவளுக்கு புரிந்தது. அப்படிப் புரியப் புரிய, மகன்மீதிருந்த அனுதாபம், கோபமாகவும், கணவன் மீதிருந்த கோபம் அனுதாபமாகவும் மாறிக் கொண்டிருந்தன. அவளது பேச்சிலும் இது புலப்பட்டது.

‘பேயனுக்கு வீட்டு நிலைமை தெரியாமப் போச்சே. பிள்ளையா அவன். சரி. சாப்பிட வாங்க எதுக்கும் ஒரு வழி பிறக்கும். காலையில பேசிக்கலாம். சரி சாப்பிடவாங்க’.

“நான், இனிமேல் இந்த வீட்டுல சாப்பிடணுமுன்னா, நீ ஒரு வாக்குக் கொடுக்கனும்.”

“சொல்லுங்க. நீங்க சாப்பிடுறதுதான் எனக்கு முக்கியம்.”

“அடுத்த தடவை அவன் டெலிபோனுல பேகம்போது, அவன் வாங்குன கார வித்துட்டு, நமக்கு பணம் அனுப்பச் சொல்லு. சொல்வியா. சொல்லுவியா.”

கோதையம்மா கைகளை நெறித்தாள். கண்களை இறுக்கினாள். கண்ணாடி பிரேமுக்குள் சுருங்கிப் போன படம்போல, வலுவான எலும்புக் கூட்டிற்குள் சதையற்ற உடம்பு அங்குமிங்குமாய் ஆடியது. அவள் பேசாமல் நின்றாள். உடனே ராமையா மீண்டும் கட்டிலில் ஏறி, குப்புறப் படுக்கப் போனார். கோதையம்மா அவர் மார்பில், கரங்களை அணையாய்ப் போட்டு, அவரை சரியாய் உட்கார வைத்தபடியே, “சரிப்பா. எப்படியோ மனச கல்லாக்கிக்கிட்டு சொல்லிடுறேன். அப்படிப் பாக்காதிக. அவன் செய்ததும் நியாயமில்லை” என்றாள்.

ராமையா சாப்பிடுவதற்கு ஆயத்தமாய் எழுந்தார். மனைவி வாக்குக் கொடுத்துவிட்டாள். அதை நிறைவேற்றிவிடுவாள் என்ற நம்பிக்கை திருப்தியுடன் அடம்பிடித்து வெற்றி கண்ட குழந்தைபோல் எழுந்தார். அதற்குள் டெலிபோன் சத்தம். கோதையம்மாதான் எடுத்தாள்.

“ஹலோ, மருதுவா. மத்தியானம்தானடா பேசுனே. என்னடா நீ. எப்ப வேணும்னாலும் பேசலாம். யார் வாரது. பஞ்சாப் பிள்ளயானாலும் அவன் என் பிள்ளைதான். ரெண்டு நாள் என்ன. எவ்வளவு நாள் வேணுமுன்னாலும் இருக்கட்டும். அவன்கிட்ட உனக்கு ஏதாவது கொடுத்தனுப்பனுமா… அப்பாவா. இருக்.இருக்கார். கொடுக்கேன். கொடுக்கேன். அப்பாகிட்ட பேசிட்டு போனை வச்சுடாதே. ஒரு முக்கியமான விசயமா உன்கிட்ட நான் பேசனும்.”

கோதையம்மா நீட்டிய டெலிபோனை, ஒரு பயில்வான், கர்லாக் கட்டையை எடுப்பதுபோல் ராமையா எடுத்தார். ஆத்திரத்தில் டெலிபோன் குமிழை, திருதராஷ்டிரன் வீமன் சிலையைப் பிடித்ததுபோல் பிடித்தபடியே, ஏகத்தாளமான குரலில் கேட்டார்.

“சொல்டா. அதான் நீ கார் வாங்கின மகிமையை ஒங்க அம்மா சொல்லிட்டானே. சரி. என்ன் சொல்ற நீ ஒருத்தன். அதுக்கு நீ இங்க வரணும். இல்லாட்டா நாங்க அங்க வரணும். நல்ல காரத்தானே வாங்குனே. நீ பழகின பிறகு காரை ஒட்டு. டிசம்பர்லயா. வா. வா. இல்லல்ல கண்டிப்பா நீ வரணும். என்னடா பெரிய மனுசன் மாதிரி பேசுறே. வாங்குன கடனை எங்களுக்கு அடைக்கத் தெரியாதோ. பெரிசா பேகறான் பாரு பேச்சு. டிசம்பர்ல கண்டிப்பா வாடா… உன் முகம் என் கண்ணுக்குள்ளேயே. கண்ணுக்குள்ளே. அழலடா. வாய்க்குள் கொக போயிட்டு. அதனால்தான். கண்டிப்பா வந்துடு.”

கோதையம்மா அவரை புதிராய் பார்த்தபோது, ராமைய்யா அவள் கண்களுக்குள் அகப்படாமல் டெலிபோன் பேச்சைத் தொடர்ந்தார்.

“அதெப்டிடா. கடனை அடைக்காம இருப்பேன்? இன்னும் ஒரு வருசத்திலே ரிட்டயர்டு ஆகிறேனா. அதுல மூணு லட்ச ரூபா கிராஜிட்டி வருமா. இதக்காட்டி என்னோட உதவியால தொழில் துவங்கி இருக்கானே சங்கரன், அவன்கிட்ட ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கி, வாங்கின கடனை எல்லாம் அடைச்சிடுவேன். அப்படியே அவன் தராட்டாலும், இருக்கவே இருக்கு. வாலண்டரி ரிட்டயர்மெண்ட். உனக்கெதுக்குடா இந்த அதிக பிரசங்கித்தனம் வார பாட்டுக்கு வந்துட்டு போர பாட்டுக்கு போ. மறந்துடாதே டிசம்பர்லே கண்டிப்பா வந்துடனும். அம்மா கிட்ட பேசனுமா. இப்பதான் அவசரமா. பாத்ளுமுக்கு போயிருக்காள். அப்படி ஒண்னும் முக்கிய விஷயம் எதுவும் இல்லியே. சரி வச்சுடறேன்.”

ராமைய்யா டெலியோனை வைக்க மனம் இல்லாமல் வைத்தார். கோதையம்மா, அவரைப் பார்த்து குறுஞ்சிரிப்பாய்ச் சிரித்தபடி “என்ன மாவீரரே. என்ன நடந்தது. எங்க போச்க… உங்க அதட்டல் உருட்டல் என்றாள்’. ராமைய்யா, அவள் கண்களை மீண்டும் தவிர்த்து வேறுபுறமாக திரும்பிக்கொண்டு யாருக்கோ சொல்வதுபோல் சொன்னார்.

“நம்ம ரெண்டு பேரையும். கார்ல உட்கார வைச்சு பார்க்க அவனுக்கு ஆசையாம். டிசம்பர்க்குள்ள இரண்டாயிரம் டாலர் சேர்த்துவிடுவானாம். அந்த பணத்துல டிசம்பர் லீவுல இங்கே வந்து நம்மை பார்த்துட்டு போக ஆசையாம். ஆனால் நமக்கு கடன் இருக்கிறதே நினைச்சு பார்த்து மனசைக் கல்லாக்கி பணத்தை அனுப்புவானாம். பெரிய புத்தரு… இந்த வயசிலேயே ஆசைய அடக்குறார். பிள்ளையா வளர்த்திருக்கே. பிள்ளை.”

“எங்கே இன்னொரு தடவை, என்னை பார்த்து நேருக்கு நேராய் சொல்லுங்க..”

கோதையம்மா, அந்த இம்பது வயது கணவரின் முகத்தை, செல்லமாகத் திருப்பினாள். அப்பொழுது, அவர் முதலிரவு கோதைபோல் நாணப்பட, இவளோ, அதே இரவு ராமைய்யாபோல் அவர் முதுகை தட்டிக்கொடுக்க இருவரும் உருவம் மாறாமலே உணர்வு மாறி நின்றார்கள்.

– செம்மலர் ஆகஸ்ட் 1996

– ஈச்சம்பாய் (சிறுகதைத் தொகுப்பு), முதல் பதிப்பு: டிசம்பர் 1998, ஏகலைவன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *