யானைக் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 1, 2012
பார்வையிட்டோர்: 6,914 
 
 

பிசிர் என்பது ஒரு சிறிய ஊர். ஆந்தையார் சிறந்த புலவர். அவர் பிறந்தமையால் அவ்வூருக்கே ஒரு தனிச் சிறப்பு உண்டாயிற்று. ஆந்தையார் பெயரோடு பிசிரின் பெயரும் ஒட்டிக்கொண்டது. பிசிராந்தையாரென்றே இன்றும் அப் புலவரை வழங்குகின்றோம்.

புலவர் பெருமான் புதிய பாண்டிய மன்னனைக் கண்டுவரலாமென்று புறப்பட்டார். இராசதானி நக ருக்கு வந்தார். அவருடைய நண்பர்கள் அவரை எதிர்கொண்டழைத்துப் பாராட்டினார்கள். பாண்டிய மன்னனாகிய அறிவுடை நம்பியின் குணங்கள் எத்தகையனவென உசாவி அறிந்துகொண்டார்.

“அவன் நல்லவன்தான் அவனுடைய மந்திரிகளே பொல்லாதவர்கள். அவர்களுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டு பாண்டியன் அரசியலை நடத்துகிறான்” என்றார் சிலர்.

“அரண்மனையில் நேர்ந்த செலவை ஈடுகட்டுவதற்காக அதிக வரி விதிக்க வேண்டும் என்று யோசனை நடக்கிறதாம். குடிமக்கள் இதை அறிந்து மிக்க வருத்தத்தை அடைந்து கொண்டிருக்கிறார்கள்” என்று சிலர் கூறினர்.

‘அதிக வரியைத் தாங்கும் சக்தி எமக்கு இல்லை’ என்பதைத் தெரிவிக்க வழியில்லாமல் குடிகள் தவித்துக்கொண்டிருந்தார்கள். ‘வரி கொடா இயக்கம்’

அந்தக் காலத்திற்குத் தெரியாத சமாசாரம். நல்ல வேளையாகத் தமிழ்நாடு முழுவதும் புகழ் பெற்ற பேரறிவாளராகிய பிசிராந்தையார் வந்து சேர்ந்தார். அவரிடம் தங்கள் குறைகளைக் கூறி முறையிட்டார்கள். அறிவுடைய புலவர்கள் அரசர்களையும் வழிப்படுத்தும் ஆற்றலுடையவர்கள் என்பது தமிழ் நாட்டில் பிரசித்தமான விஷயம். தம்மிடம் வந்து குறை கூறியவர்களிடம்,”என் னால் இயன்றதைச் செய்கிறேன்” என்று ஆந்தையார் சொல்லிப் பாண்டியனைப் பார்க்கச் சென்றார்.

பாண்டியன் அப்பெரும் புலவரது புகழை நன்கு அறிந்திருந்தான். அவரை மிக்க மரியாதையோடு வர வேற்று உபசாரம் செய்தான். யோகக்ஷேமங்களை விசாரித்தான். பிசிராந்தையாரும் அறிவுடை நம்பியின் மனம் உவக்கும்படி பல விஷயங்களைக் கூறினார். அப்பால் வழியிலே கண்ட காட்சி ஒன்றைக் கூறுவார்போல ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார். “அரசே! நான் கண்ட காட்சியை என்னவென்று கூறுவது! தளதளவென்று விளைந்து முற்றியிருந்த வயல். நெற்கதிர்கள் அறிவுடையோரைப் போலத் தலை பணிந்து நின்றன. நிலமகள் வஞ்சனையின்றித் தனது வளத்தைத் தானஞ் செய்ய அதனைச் சுமந்து நிற்பது போலத் தோற்றியது அவ்வயல். அதைக் காணும்போது என் கண்கள் குளிர்ந்தன.

“என்ன கொடுமை! அடுத்த கணத்தில் ஒரு களிறு அவ்வயலில் புகுந்தது. அங்குள்ள நெற்பயி ரைச் சுருட்டி அலைத்து வாயில் செலுத்தியது. தன் காலினால் பயிரில் பெரும்பாகத்தைத் துகைத்து அழித் தது. அதன் வாயிலே சென்றதைக் காட்டிலும் காலினால் அழிக்கப்பட்ட பயிரே அதிகம். தானும் உண்ணாமல் உடையவனுக்கும் பயன்படாமல் அத்தனை பயிரையும் அந்தக் கொடிய யானை வீணாக்கி விட்டது.” “அப்பால்?” என்று அரசன் ஆர்வத்தோடு கேட்டான்.

“அப்பால் என்ன? போனது போனதுதான். அந்த யானைக்குத் தினந்தோறும் அந்த நெல்லை அறுத்துக் கவளமாகக் கொடுத்து வந்தால் எவ்வளவோ மாதங்களுக்கு வரும். ஒருமா நிலத்திலே, குறைவாக இருந்தாற்கூட ஒருயானைக்கு எவ்வளவோ நாளைக்குக் கவளம் கொடுக்கும். இந்த மாதிரி, யானையே அழிக்கப் புகுந்தால் நூறு செய்யாய் இருந்தாலும் போதாது. என்ன செய்வது, அந்த யானைக்கு இந்தக் கணக்குத் தெரிகிறதா? யானை ஒரு விலங்கு. அறிவு இல்லாதது. அறிவுடையவர்கள்கூட அந்த யானையைப் போலச் சில சமயங்களில் நடந்துகொள்கிறார்கள்!” என்றார் புலவர். “யார்? என்னசெய்கிறார்கள்?” என்று அரசன் வினவினான்.

“அரசர்களில் சிலர் அந்த யானையைப் போல நடக்கிறார்கள். குடிகளிடம் முறையாக வரி வாங்கி ஆதரித்து வந்தால் அவர்களுக்கு ஊக்கம் உண்டாகும்; நிலத்தைப் பண்படுத்தி அதிகமாகப் பயன் தரும்படி செய்வார்கள். அதனால் அரசனுக்கும் வருமானம் அதிகப்படும். இப்படியின்றி அறியாமையினால் அதிக வரி விதித்து அவர்களைத் துன்புறுத்தினால் குடிமக்கள் என்ன செய்வார்கள்? அறிவுடை வேந்தன் வரி வாங்கும் நெறியறிந்து கொள்ளின். நாட்டு வளம்கோடி பங்கு அதிகமாகி விருத்தி பெறும். அறிவில்லாத அரசன் அரசாட்சி செய்யத் தொடங்கினால் அவனைச் சுற்றி முட்டாள்கள் கூடிவிடுகிறார்கள்.’ இது செய்யலாம், இது செய்யக்கூடாது’ என்று அவர்கள் ஆராயமாட்டார்கள். அரசன் கூறுவன எல்லாம் சரியென்று ஆமோதிப்பார்கள். ‘மதுரை நகருக்குக் காவிரி நதியைக் கொண்டுவர எண்ணுகிறேன்’ என்று அரசன் சொன்னால். ‘ஆஹா! அப்படியே செய்யலாம். மகாராஜா நினைத்தால் ஆகாதது என்ன!’ என்று தலை யசைப்பார்கள். ‘வரிசை யறியாக் கல்லென் சுற்ற’மாகிய இத்தகையவர்கள் பேச்சைக் கேட்டு அரசன் நடப்பானானால் அவனுக்கு வேறு விரோதியே வேண்டாம். குடிமக்களிடம் இரக்கம் இல்லாமல் வரிவிதித்து லாபம் பெறலாம் என்று அவர்கள் சொல்வார்கள்; அரசனும் கேட்பான். அப்பால் யானை புக்க புலம்போலத் தானும் உண்ணான்; உலகமும் கெடும்” என்று கதையோடு கருத்தையும் பிணைத்து விரித்துப் புலவர் நிறுத்தினார்.

வரியைப் பற்றிய பேச்சை எடுத்தபோதே அரசனுக்குக் குடர் குழம்பியது. அவர் முற்றும் கூறிய போது புலவர் தன்னையே நினைந்து கூறினார் என்பதைத் தெளிவாக உணர்ந்தான். அவர் கூறிய கதையிலே ஈடுபட்ட அவன் மனம் வயலை அழிக்கும் யானையையே நினைந்துகொண்டிருந்தது. தன் செயலையும் அவ்யானையின் செயலையும் ஒப்பு நோக்கிப் பார்த்தான் புலவர் கூற்று உண்மையே என்பதை அறிந்தான். ” புலவார் பெருமானே! உங்கள் உபதேசம் மிகவும் உபயோகமாயிற்று. அது என் காது வெறுக்கும்படியாக இருந்தாலும், நாட்டுக்கு நன்மை பயக்கும் என்பதை உணர்ந்தேன். நான் செய்ய இருந்த பெரும்பிழையினின்றும் நீங்கினேன்” என்று பாண்டியன்சொல்லிப் புலவரைப் பாராட்டினான்.

வரியை அதிகப் படுத்தும் யோசனை நின்றது. ஒரு புரட்சியும் இல்லாமல் மிகவும் சுலபமான வழியில் வரிவிதிப்பு நீக்கப் பட்டது. பிசிராந்தையார், அறிவுடை நம்பியாகிய யானையைத் தம் அறிவுக் கயிற்றால் கட்டிவிட்டார். அதனால் யானைக்கும் நன்மை; நாட்டுக்கும் நன்மையே உண்டாயிற்று.

நன்றி: http://www.projectmadurai.org/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *