சூரிய கிரகணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 10,353 
 

அன்றும் வழக்கம் போலத்தான் விடிந்த்து. பகல் 10 மணி முதல் 10.15 மணி வரை கிரகணம்.

அலுவலகத்தில் நேற்று முழுக்க இதுதான் பேச்சாக இருந்த்து. காலையில் எழுந்து குளித்து விட்டு, சாப்பிட வேண்டியதை, சாப்பிட்டு விட்டு, கிரகணத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். செல்போனிலேயே வீடியோ காமிராவும் இருப்பதால் இன்று அந்த கால் மணி நேரமும் சுட்டுத் தள்ளும் முடிவில் இருந்தேன். தெருவில் எதிர் வீட்டுப் பெண்களும், ஆண்களும், ‘இன்னைக்கு கிரகணமாமில்ல…‘ என்று வழக்கம் போல் பேசிக் கொண்டிருந்தனர். எதுவும் புதுவிதமான பரபரப்பு இல்லை.

எனக்குத் தான் பரபரப்புத் தொற்றிக் கொண்டது. விலங்குகள் பறவைகளுக்கு இது நிகழப் போவது தெரிந்திருக்குமோ? அவைகளுக்குத்தான் அறிவு இல்லையே? அவைகளுக்கு விஞ்ஞானிகள் குழாமும் இல்லை. நாள் பார்த்து, நேரம் பார்த்துச் சொல்ல. ஆனால் அவை இதுபோன்ற நிகழ்வுகளை உள்ளுணர்வால் அறிந்து கொள்ளும் என்று பாட்டிச் சொல்லக் கேள்விப்பட்டதுண்டு. நமக்கு, குறிப்பாக எனக்கு உள்ளுணர்வு இருக்கிறதா என்ற சந்தேகம் வந்த்து. இருந்திருந்தால் தான் தொலைக்காட்சியில் செய்தி சொல்லும் முன்பே கிரகணம் வரப் போவது எனக்குத் தெரிந்திருக்குமே.

தொலைக்காட்சியில் சென்ற முறை நிகழ்ந்த கிரகணத்தைப் பற்றி ஒளிப்பரப்பிக் கொண்டிருந்தார்கள். தொலைநோக்கியில் பார்ப்பதற்காக மக்கள் வரிசையாய் நின்றார்கள் கையில் அடையாள அட்டையுடன். ஒவ்வொரு சானலும் போட்டிப் போட்டுக் கொண்டு ஒளிபரப்பின. செயற்கை ஒப்பனையோடு கண்களை அகல விரித்தும், புருவத்தை நெரித்தும், சொற்களுக்கு சம்பந்தமின்றி, உதட்டை நெளித்தும், கத்தி, கத்தி சத்தம் போட்டு மைக்கில் பேசிக் கொண்டும் இருந்தனர் தொலைக்காட்சி நிருபர்கள்.

ஆதி மனிதன் இந்த கிரகணத்தை எப்படி அறிந்திருப்பான்? ஒன்றும் புரியாது குழம்பியிருப்பானோ? இல்லை அழகாய் இருக்கிறது என்று ரசித்திருப்பானோ? என்று கிரகணத்தை யொட்டி ஓடிக் கொண்டிருந்தன எனது எண்ணங்கள். மணி ஒன்பதை தொட்டது. கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் மங்கி இருட்டத் தொடங்கும் என நினைத்தேன். அப்படி ஒன்றும் நடக்கவில்லை. திடுதிப்பென இருட்டியது. நான்கைந்து வினாடிகளில் வழக்கமாக இரவு பத்தரை மணிக்கு வழிதவறி வந்த்து போல் கத்தும் காகம் உடனே கரைய ஆரம்பித்த்து. எலக்ட்ரிக் கம்பத்தின் மேல் உட்கார்ந்து கொண்டே இருந்த்து. எதிர் வீட்டு பெரிசு தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சின்னக் குழந்தைகளை ஓடுங்கடா என்று விரட்டிக் கொண்டிருந்தார். அவருக்கும் அது என்னவோ புது நிகழ்வாக தெரியவில்லை. வழக்கம் போல சாக்கடையில் எச்சிலைத் துப்பி விட்டு வீட்டுக்குள் போய் விட்டார்.

தெருவழக்கமாக இருட்டில் எப்படி அமைதியாக இருக்குமோ அப்படியே இருந்த்து. ஆள் நடமாட்டம் இல்லாத இருண்ட தெருவை நீண்ட நேரம் ரசிக்கும் மனோபாவம் எனக்கு எப்போதோ மாறியிருந்த்து. அப்போது எங்கள் தெருவை காவல் காக்கும் தெரு நாய் பயந்து ஊளையிட்டுக் கொண்டே எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள சந்திற்குள் ஓடியது. அதைக் கேட்டு நாங்கள் வளர்க்கும் ஜிம்மியும் குரைக்கத் தொடங்கியது. காரணமின்றி நாய்கள் குரைக்காது என்று நினைத்து இருட்டை உற்றுப் பார்த்தேன். இருட்டோடு இருட்டாக ஒரு உருவம், அதன் வடிவம் இதுவரை நான் காணாத்தாக இருந்த்து. அது என்னை நெருங்கி வரவர சற்று நடுக்கம் எடுத்த்து. பயந்து போய் வீட்டிற்குள் வந்து கதவை பூட்டுவதற்குள் என் முன் வந்து விட்டது அந்த உருவம். இத்தனை வயதில் பயந்து கத்தினால் நமது இமேஜ் என்னாவது என்று நினைத்து பயத்தை முழுதாக அடக்கிக் கொண்டு வருவது வரட்டும் என்று ஒரு குருட்டுத் தைரியத்தில் அதை உற்றுப் பார்த்தேன். எனது உயரத்திற்கு சம்மான உயரம்தான். இந்த நொடி வரை அது என்னை எதுவும் செய்யவில்லை என்பதை உணர்ந்து மேசை மீது இருந்த செல்போனை எடுத்து பட்டனை அழுத்தினேன். இருட்டுப் பின்புலத்தில் யாளியின் முகம் தெரிந்த்து. கோயில் கோபுரங்களில் இருக்கும் இந்த யாளியின் முகம் பள்ளிக் காலத்திலும் சரி, இப்பொழுதும் சரி எனக்கு அச்சந்தரக் கூடிய ஒன்று. அதை இவ்வளவு பக்கத்தில் பார்த்த்தும் வெலவெலத்துப் போனேன். என்ன செய்வது, எங்கே ஓடுவது? வாசலை வேறு மறைத்து நிற்கிறது.

என் பரிதாப நிலையைப் பார்த்து ‘ஏன் பயப்படற? உன்னை ஒன்னும் செய்ய மாட்டேன்‘ என்று மெல்லியக் குரலில் கூறியது. அந்த குரலில் இருந்த கனிவு என் அச்சத்தை ஓரளவு நீக்கியது. பிறகு தான் நான் உணர்ந்தேன். அது நினைத்திருந்தால் ஒரே எட்டில் என்னைப் பிடித்திருக்கலாம். பிடித்து விழுங்கியிருக்கலாம். சற்று நான் முரட்டு உருவம் தான் என்பதால் குறைந்த பட்சம் வெளியே துருத்திக் கொண்டிருக்கும் பற்களால் கடித்து ரத்தம் குடித்திருக்கலாம். அது எல்லாவற்றையும் விட அப்படியே என்னை தூக்கிக் கொண்டு நடந்தோ, பறந்தோ சென்றிருக்கலாம் வீடியோ கேம்சில் வருவதைப் போல. எதுவும் செய்யவில்லை. அது என்னவோ நான் பேந்த பேந்த விழித்துக் கொண்டு இப்படியெல்லாம் புத்திசாலித்தனமாக யோசித்துக் கொண்டு இருந்த போது வெறுமனே அமைதியாக நின்று என்னை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த்து.

‘என்ன, யோசிச்சு முடிச்சாச்சா? இங்க நடக்கிறது உண்மையா? மாயையா என்று தானே யோசிக்கிற? உண்மைதான்னு புருப் பண்ணவா?‘ என்று கேட்டுக் கொண்டே எங்கள் வீட்டில் மேசையில் இருந்த மெழுகுவர்த்தியை பற்ற வைத்த்து. நேராக நிமர்ந்து நிற்கும் போது அது என்னைவிடவே உயரமாக இருந்த்து. அதே கண்களும், பற்களும். இப்பொழுதெல்லாம் இளைஞர்கள், இளம்பெண்கள் இரண்டு பேருமே அணிகிறார்களே, அது போன்ற காலர் இல்லாத எம்பிராய்டரி செய்த டாப்சும், வெளிர் நீல நிற ஜீன்சும் அணிந்திருந்த்து அது. இந்த கெட்டப்பில் பார்த்தவுடன் எனக்கு இன்னும் சற்றுப் பயம் நீங்கத் தொடங்கியது. முதன் முதலாக அதன் முன் வாய் திறந்தேன்.

‘இவ்வளவு நாளும் நீ எங்கிருந்த‘ என்றேன். ‘இதே பிரபஞ்சத்தில்தான், இதே நாட்டில்தான் இருந்தேன். உன்னோட நாடும், என்னோட நாடும் ஒன்னுதான்‘ என்றது.

‘நான் ஒருநாள் கூட உன்னைப் பார்த்த்தில்லையே‘ என்று கேட்டேன்.

‘இல்லை, நான் வேற அவதாரத்தில் திரிவேன். இன்று உன்னைப் பார்க்க இந்த தோற்றத்தில் வந்திருக்கிறேன்.‘ என்று சொல்லிக் கொண்டே கட்டிலில் உட்கார்ந்து கொண்டது உரிமையோடு. நான் உட்காரவே சொல்லவில்லையே என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். நான் உறவினர்களை உபசரிப்பதில் அவ்வளவு தேர்ச்சியில்லாத நபர். பிடித்தவர்கள் வந்தால் உற்சாகமாக வளவளவென்று பேசிக் கொண்டிருப்பேன். பிடிக்காதவர்கள் வந்தால் மவுனம் காத்து இருப்பேன் எப்போது கிளம்புவார்கள் என்று. அவ்வளவுதான் என் உபசரிப்பு, பண்பாடு.

‘ஏதாவது குடிக்க வேணுமா, உனக்குத் தாகம் எடுக்குமா‘ என்று கேட்டேன். ‘கோக் வேணா குடிப்பேன். மத்த்தெல்லாம் பிடிக்காது. தாகம் எடுக்குமான்னா கேக்கற, எனக்கு தணியாத தாகம் ஒன்னு இருக்கு, அது மட்டும் நடந்துருச்சுன்னா இந்த பூமியே எனக்குத்தான் சொந்தம்‘ என்றது. ‘அது என்ன அப்படி ஒரு தணியாத தாகம்?‘ என்றேன். ‘அதுவா… அது அதிகாரத் தாகம். அதெல்லாம் சொன்னா உனக்குப் புரியாது. புரிஞ்சாலும் நீ அதுக்குப் பயப்படுவ,‘

‘சரி, எனக்கு என்ன பிடிக்கும்னு உனக்குத் தெரியுமா?‘

‘உங்கள மாதிரி ஆட்களுக்கு சினிமா, டிவி, ஆட்டம், பாட்டம், பார்த்துக் கிட்டே சாப்பிட, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அல்வா கொடுத்தா போதாதா? இதுக்கு மேல வேற என்ன வேணும்?‘ என்றது சற்று இளக்காரமாக.

‘அப்படியெல்லாம் இளப்பமாக நினைக்காதே. எனக்கெல்லாம் இந்தியா தான் கிரிக்கெட்டில் ஜெயிக்கனும், சீனர்களுக்கு மாதிரி நமக்கு ஒரு பெருஞ்சுவர் இல்லையே, சீனாவுக்குன்னு ஒரு மிருகம் இருக்கு, டிராகன், அதுமாதிரி நமக்கு இருக்கா? என்றெல்லாம் கவலைப்பட்டிருப்பேன் தெரியுமா?‘

‘அப்படியா, ஆச்சரியமாகத்தான் இருக்கு… உனக்கு உங்களுடைய பழைய வரலாறு தெரியாது. அதுலயும், உண்மையான வரலாறெல்லாம் சுத்தமா தெரியவே தெரியாது. தெரிஞ்சுக்கவும் ஆசைப்படவும் மாட்டீங்க. டிவில புல் மேக்கபோடு மடிப்பு கலையாக நடிக்கிற பொம்பளைங்கள பார்த்து அழுகவே நேரம் பத்தாது‘ என்று மறுபடியும் எள்ளலாய் சொன்னது.

இது ஏன் நான் ஒரு வார்த்தை பேசினால் வளவளவென்று நூறு வார்த்தை பேசுகிறது. அதோடு முதலில் பேசிய மெல்லியக் குரல் மாறி கரகரப்பாய் ஒலித்த்து. அதில் இளக்காரமும் எள்ளலும் வேறு என்று எரிச்சலாய் வந்த்து. எரிச்சலையோ, கோபத்தையோ காட்டி அதுவும் கோப்ப்பட்டு ஏடாகூடமாக அடிச்சு துவைச்சிருச்சுன்னா…? எனக்கு யாளியின் வரலாற்று, புராண பாத்திரம் என்ன? அதன் குணநலன் என்ன என்றெல்லாம் ஒரு எழவும் தெரியாது. கோயில் கோபுரங்களில் மேலிருந்து கொண்டு என்னை அச்சுறுத்திக் கொண்டே இருக்கும். இப்பொழுதெல்லாம் அவ்வப்பொழுது பெரிய பெரிய பிளக்ஸ்களில் நின்று கொண்டும், நடந்து கொண்டும் அச்சுறுத்துகிறது அவ்வளவுதான். இன்று அந்த யாளி என் வீட்டில் கட்டில் மீது உட்கார்ந்து கொண்டிருப்பது (என்னைத் தவிர வேறு யாரையும் அதில் படுக்கவோ, உட்காரவோ அனுமதிக்க மாட்டேன்) உண்மையில் விதியின் விளையாட்டு தான்.

நான் இது போல அமைதியாக இருக்கும் போதெல்லாம் அது எவ்வித பதட்டமுமின்றி எங்களுக்கு நடுவே கிடக்கும் மவுனத்தை தீர்க்கமாய் அனுபவித்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறது. அதோடு என் விழியசைவு, கை, கால் அசைவை வைத்தே நான் என்ன யோசிக்கிறேன் என்பதையும் கண்டு பிடித்து விடுகிறது.

‘பயப்படாதே, என் மேல கோப்ப்படு! உனக்கு என் மேல கோப்ப்பட உரிமையிருக்கு‘ என்றது.
திடீரென இருட்டோடு இருட்டாக உள்ளே வந்து உட்கார்ந்து கொண்டு, இவ்வளவு உரிமை வேறு எடுத்துக் கொண்டு… என்று நினைக்கும் போதே, ‘என் மண்டைக்குள் ஓடுவதை அது கண்டுபிடித்துவிடுமே‘ என்பது நினைவுக்கு வரவும் என் மன ஓட்டத்தை நிறுத்தி வெறுமையாகப் பார்க்க முயன்றேன். எங்க முடியுது?!

‘என்னடா, இவ்வளவு உரிமை எடுத்துக்குதே என்று பயப்படாதே, உங்களுக்கு பணி செய்வதுதான் எங்களது ஆனந்தமே‘ என்றது செயற்கையாக அதே கரகரப்பு குரலில். நான் அதன் பேச்சில் மயங்குவதாய் நினைத்துக் கொண்டு, ‘நீ என்னை அடித்து பின்னாலிருக்கும் கிணற்றுக்குள் தள்ளி விட்டாலும் நான் அந்த கிணற்றுக்கே ஊற்றாக இருப்பேன்‘ என்றது.

‘இந்த வசனத்தை எங்கேயோ கேட்டிருக்கிறேனே‘ என்று நினைத்துக் கொண்டிருந்த போது ‘தலைவருக்கு பிடிச்ச வசனம் இது‘ என்றது.

‘என்ன… தலைவரா? உனக்கு தலைவர் வேற இருக்காரா?‘

‘எங்கப்பாவைத் தான் சொன்னேன். குடும்பத் தலைவர்‘ என்றது.

அப்பாவைத்தான் தலைவர் என்று சொல்கிறதா இது என்று நினைத்து சற்றே ஏளனத்தை என் முகத்தில் காட்டி விட்டேன். உடனே யாளி கடுப்பாகி‘ என் குடும்பம் ரொம்ப பெரிசு தெரியுமா? அதிலேயே குடும்பத் தலைவர், குடும்பச் செயலர், குடும்பத் தலைவி, குடும்பத் துணைவி, குடும்ப மனைவி, குடும்ப மகள், குடும்பத்தாய், குடும்ப்ப் பேரன், குடும்ப்ப் பேத்தி, குடும்ப ரேடியோ, குடும்ப பாட்டு, குடும்ப நாடகம், குடும்ப வசனம், குடும்ப ஷேர்… என்று எல்லாரும் ஒவ்வொரு பொறுப்பாய் இருப்போம். அந்த கஷ்டமெல்லாம் உங்களுக்கு எங்க தெரியப் போகுது? நாங்க கஷ்டப் படறதே உங்க நல்லதுக்காகத்தான்‘ என்றது.
இங்கு எல்லோரும் குடும்பமாகத்தானே இருக்கிறார்கள். இது ஏன் இப்படி அளந்து தள்ளுகிறது என்று நினைத்தேன்.

‘உனக்குத் தெரியாது. ஒரு குடும்பத்தை நடத்தறது எவ்வளவு கஷ்டமுன்னு. எங்கப்பா நூறு வருசமாக எங்க குடும்பத்தை கட்டிக் காப்பாத்தறார் தெரியுமா?‘ என்றது.

நூறு வயதில் ஒரு குடும்பத்தை கட்டிக் காப்ப்து என்பது கடினமான காரியம் தான் என்று நினைத்துக் கொண்டேன். குடும்பம், அப்பா, அம்மா என்றெல்லாம் பேச்சு வரவும், இந்த யாளி ஆணா, இல்லை பெண்ணா என்ற சந்தேகம் எழுந்த்து. ஆனால் அதை நேரடியாக கேட்பதற்கு எனக்குத் தைரியம் வரவில்லை.

‘நீ வாய் விட்டு கேட்கலைன்னாலும், உன் சந்தேகம் என்ன்ன்னு புரியுது. என் அப்பா ஒரு ஆண், எங்க அம்மா ஒரு பெண், இரண்டு பேரும் என்னைப் பெற்றதால் நான் இரண்டும் கலந்த கலவை. மனுசங்க மாதிரியில்லை நாங்க. இந்த ‘கலவை‘க்கு அதிக மதிப்புத் தருவோம்‘ என்றது.
‘சரி, இப்ப என்ன விசயமாக வந்திருக்க, எங்கிட்ட ஏன் பேசற, நானே வாழ்க்கையில் விபரம் தெரிஞ்சு, சொந்த புத்தியோடு இந்த கிரகணத்தைப் பார்த்து படம் எடுத்திரனும்னு ஆசையா இருந்தேன். அதை கெடுத்து நீ வந்து உட்கார்ந்து வளவளன்னு பேசிட்டே இருக்க‘ என்றேன் சற்று தைரிய்த்தை வரவழைத்துக் கொண்டு.

என் கோபத்தை புலம்பலாக நினைத்துக் கொண்டு, அதைப் பொருட்படுத்தாமல், ‘நீ கேட்பது நியாயமானதுதான் ஆனால், நான் ஒன்னு கேட்பேன், அதுக்கு மட்டும் உண்மையா பதில் சொல்லு‘ என்று பீடிகைப் போட்டு விட்டு, ‘ஒவ்வொரு முறை கிரகணம் வரும் போதும், கிரகணத் திருவிழா நடக்கும்ல உங்க ஊர்ல. அப்ப ஊர் தலையாரிய, தேர்ந்தெடுப்பீங்கல்ல‘ என்றது சம்பந்தமில்லாமல். ‘ஆமா, அதுக்கென்ன இப்போ?‘ என்றேன் எரிச்சலாய்.

‘உனக்கு யார் தலைவரா வரனும்னு ஆசை?‘

‘எவன் வந்தா எனக்கென்னா? நாங்க எப்ப தேர்ந்தெடுத்தோம். எங்க பேரைச் சொல்லி ஒவ்வொரு தடவையும், எவனாவது தலைவராயிருவாங்க‘ என்றேன் அந்த பேச்சை முடிக்கும் விதமாக. ஆனால் யாளி நான் பேசுவதை கூர்ந்து கேட்டுக் கொண்டே ஏதோ யோசனை செய்து கொண்டிருந்த்து. எனது விருப்பமெல்லாம், ‘இது வெளியே போனவுடனே, வெளியில் என்னதான் நடக்கிறது என்று பார்க்க வேண்டும்‘ என்பதாகத்தான் இருந்த்து. யாளி என் கண்களை உறுத்துப் பார்த்துக் கொண்டே, ‘நீ அப்படியெல்லாம் இருக்க மாட்டீயே‘ என்றது. ‘ஆமாம்…‘ என இழுத்தேன்.

‘இப்ப நான் சொல்றத நல்லா கேட்டுக்க, நான் நினைக்கிறவன் தான் உங்க தலையாரியா வரனும். அவன் வந்தால் சின்ன குழந்தைக்கெல்லாம் மூணு நேரம் இலவச சாப்பாடு, முதியோருக்கு கோவில்ல சாப்பாடு, உங்கள மாதிரி ஆட்களுக்கு ஆபிஸ்ல சாப்பாடு, குடும்ப தலைவிகளுக்கு வீட்டிலேயே இலவச சாப்பாடு…‘ என்றது அதே கர்ண கொடுரமான கரகரப்புக் குரலில். குரலின் தொனியும் மாறியிருந்த்து. அதன் முகத்தில் இருந்த பற்கள் சற்றே உள்ளே போய் கண்களின் தன்மையும் மாறி மனித சாயல் கொண்டிருந்த்து போல் எனக்குத் தெரிந்த்து. அமைதியாக இருந்தேன் லேசான பதட்டத்துடன். சட்டென வெளிச்சம் வந்த்து. யாளியைக் காணவில்லை. ஒருவேளை எனக்கு மூளை குழம்பிப் போனதா அல்லது பிரமையாக இருக்குமோ என்று குழப்பமடைந்தேன். கட்டிலில் யாளி உட்கார்ந்திருந்த இடத்தில் ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்றும், சூரிய காந்தி பூ ஒன்றும் கிடந்த்து. எனக்கு அதைப் பார்த்த பின்பு தான் எல்லாமே புரிந்த்து.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *