மோஹன்தாஸ் காந்தி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 29, 2020
பார்வையிட்டோர்: 7,302 
 
 

(இதற்கு முந்தைய ‘வெள்ளைச் சிட்டை வியாபரம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது).

சந்திரன் தன்னை எப்போதாவது எதிர்பாராமல் தெருவில் நேருக்கு நேர் பார்த்துவிட்டால் மட்டும் சிவராமன் சின்னதாக அளவுடன் ஒரு சிரிப்பு சிரித்து வைப்பார். அதைச் சிரிப்பிலும் சேர்த்துக் கொள்ளலாம்; சிரிக்காததிலும் சேர்த்துக் கொள்ளலாம்!

சந்திரனை தெருவில் பார்க்கிற போதெல்லாம் சிவராமனின் மனக்கண் அவரின் உள் கால்சட்டையின் பாக்கெட்களில் கவனமாக இருக்கும்! ஆரம்பத்தில் சந்திரனுக்கு சிவராமனின் குடும்பம் கொஞ்சம்கூட ஒட்டி உறவாடாமல் தள்ளியே இருந்து கொண்டது ஒரு மாதிரியாக இருந்தது. ஆனால் அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு மாதிரி என்று நினைத்து இயல்பாக இருந்துவிட்டார்.

அந்த சந்திரன்தான் சேல்ஸ்டேக்ஸ் ஆபீஸ் ரெய்டில் மாட்டி முழிபிதுங்கி நின்ற சிவராமனைப் பார்த்து மனம் இரங்கி உதவிக்கு வந்தது. ஒரு நல்ல மீடியேட்டர் மாதிரி இரண்டு பக்கமும் நல்ல விதமாகப் பேசி விஷயத்தை சிக்கல் இல்லாமல் முடித்துக் கொடுத்தார் சந்திரன். அதனால் சிவராமன் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. ஒரு சின்ன ‘பெனால்டி’ கூடக் கிடையாது.

ஆனால் முக்கிய அதிகாரியான சத்தியமூர்த்திக்கு மட்டும் ஒரு கணிசமான தொகையை பிறந்தநாள் கேக் வெட்டுகிற மாதிரி வெட்டிவிட்டார். மற்றதை எல்லாம் சத்தியமூர்த்தி பார்த்துக்கொண்டு விட்டார். தீபாவளி, பொங்கல் என்று பண்டிகைகள் வரும்போது சேல்ஸ்டேக்ஸ் ஆபீஸில் இருக்கும் மற்ற குட்டி அதிகாரிகளையும் கொஞ்சம் கவனித்துக்கொண்டால் நல்லது. அப்போதுதான் அவர்களும் அவர்களின் பெண்ட்டாட்டிகளின் பெயர்களில் ப்ரைவேட் டாக்ஸி வாங்கி ஓட்ட முடியும். மைத்துனிகளின் பெயரில் ஆங்காங்கு இடம் வாங்கிப்போட முடியும்.

சில சமூகங்களில் கொள்ளி வைத்த கைக்கு மோதிரம் போடுவார்கள். அதுமாதிரி சிவராமன் சந்திரனின் கைக்கு ஒன்பது கல் வைத்த அழகான மோதிரம் ஒன்றை தன் அன்புப் பரிசாக மாட்டிவிட்டார். மோதிரத்தில் ஆரம்பித்த இந்த நட்பு கொஞ்சநாளில் எங்கேயோ போய்விட்டது.

சந்திரனின் மனைவி ரேவதி, தன் வீட்டில் ஏதாவது ஸ்வீட் செய்தால் பாதி ஸ்வீட் சிவராமனின் வீட்டிற்குப் போய்விடும். அதேமாதிரி இவர்கள் வீட்டில் ஒரு ஸ்வீட் செய்தால் அதில் பாதி சந்திரனின் வீட்டுக்குப் போய்விடும். சந்திரனின் மகளின் பிறந்தநாள் விழா சிவராமனின் வீட்டில் அமர்க்களப்படும். அப்படியொரு கோலாகலமான நட்பு இரண்டு குடும்பத்திலும் கொடி கட்டாமல் பறந்து கொண்டிருந்தது.

ஒருவேளை எல்லோருடைய கண்ணிலும் படுகிறபடி கொடி கட்டிப் பறந்திருந்தால் யாராவது ஒருத்தரின் பார்வையிலாவது இந்த விஷயம் தட்டுப் படாமல் போயிருந்திருக்காது. அதனால் சந்திரனின் மனைவி ரேவதிக்கும்; சிவராமனின் இருபத்தியிரண்டு வயது மகன் மோகன்தாஸ் காந்திக்கும் இடையில் ஏற்பட்டிருந்த தகாத உறவு யாருக்கும் தெரியாமல் போயிருக்கவே போயிருக்காது.

ஆனால் அப்படித் தெரியாமல் போனதற்கு ஒரு முக்கியமான காரணம் இருந்தது. ரேவதியும் மோகன்தாஸ் காந்தியும் அக்கா – தம்பி என்ற வேஷத்திலேயே எல்லார் முன்னேயும் நடந்து கொண்டிருந்தார்கள். ரேவதியை விட காந்தி ஐந்து வயது சின்னவன். ‘ரேவதிக்கா ரேவதிக்கா’ என்று ஒரு நாளைக்கு நூறு தடவையாவது மற்றவர்களின் முன்னால் மரியாதையாகக் கூப்பிடுவான் காந்தி.

அக்கா வீட்டில் கோழிக்கறி வைத்தால், அன்று தம்பிக்குச் சாப்பாடு அக்கா வீட்டில்தான். காந்தித் தம்பி திருநெல்வேலி டவுன் போய்வந்தால் ரேவதி அக்காவிற்கு தப்பாமல் இருட்டுக்கடை அல்வா வாங்கி வருவான். மதுரை போய்வந்தால் மல்லிப்பூ வாங்காமல் வரமாட்டான். இந்த உறவைப் பார்த்து திம்மராஜபுரம் ஊரே சிலிர்த்தது. “என் மகனுக்கு அக்கா இல்லாத குறையைப் போக்கிறதுக்காக மாரியாத்தா ரேவதியை அனுப்பி வச்சிருக்கா” என்று சிவராமனின் மனைவி வீடு வீடாகப் போய் வெற்றிலைப் பாக்கு வைத்துச் சொல்லிவிட்டு வந்திருக்கிறாள்.

ஆனால், இது அத்தனையும் ஒருநாள் காலையில் பொழுது விடிந்தபோது சுக்கல் சுக்கலாக உடைந்துவிட்டது. சிவராமனின் வீட்டில் காந்தியின் படுக்கை மட்டுமே இருந்தது. காந்தியைக் காணோம். அதேமாதிரி சந்திரனின் வீட்டில் ரேவதியின் படுக்கை மட்டும்தான் இருந்தது. ரேவதியைக் காணோம். ஒரே நாளில் ஒரே நேரத்தில் இரண்டு பேரும் காணாமல் போய்விட்டார்கள். இரண்டு பெரும் ஆளுக்கொரு பக்கம் தனித் தனியாகவா காணாமல் போவார்கள்?

இரண்டாவது நாள் தகவல் வந்துவிட்டது. இரண்டு போரையும் சேர்த்து யாரோ குற்றாலத்தில் பார்த்ததாக. அவ்வளவுதான். இரண்டு குடும்பமும் நொறுங்கித் தூள் தூளாகி விட்டன. இரண்டு வீட்டின் கதவுகளும் யாருக்காகவும் எதற்காகவும் திறக்கப் படாமல் பூட்டப்பட்டே கிடந்தன. அவமானம் தாங்காமல் சந்திரன் மாலை மாலையாகக் கண்ணீர் வடித்தார். மனைவி ஓடிப்போன அவமானத்தைவிட ‘அக்கா—தம்பி’ என்ற நாடகத்தைத்தான் அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கோபத்திலும் ஆத்திரத்திலும் கிடந்து குழம்பினார்.

சிவராமனின் மன நிலையைப் பற்றி சொல்லவே வேண்டாம். புயல் மூண்ட கடல் மாதிரி வார்த்தைகளில் பொங்கி அலைமோதிக் கொண்டிருந்தார். இரண்டு குடும்பங்களின் சந்தோஷத்தையும் கெளரவத்தையும் குழி தோண்டிப் புதைக்கப் போகிறோம் என்பதைப்பற்றி ஓடிப்போன இரண்டு ஜென்மங்களும் நினைத்தே பார்க்கவில்லையே என்று எண்ணிக் கொந்தளித்தார் சிவராமன்.

அரசாங்கத்திற்கு எந்த வரியும் கட்டாமல் ஏமாற்றுகிற பேர்வழிதான் சிவராமன். ஆனால் தனிப்பட்ட முறையில் எந்த ஒரு தனிமனிதனையும் எதற்காகவும் ஏமாற்றுகிறவர் இல்லை. தனி மனித ஒழுக்கம் மிகவும் பேணுகிறவர். மனைவியைத் தவிர வேறு ஒரு பெண்ணை தலை நிமிர்ந்தும் பார்க்காதவர். ஆசையாகத் தன் மகனுக்கு தேசப்பிதாவின் பெயரை வைத்தவர். அந்த மகன் இப்படி கல்யாணமாகி ஒரு பெண் குழைந்தையும் இருக்கிற ஒருத்தியைப்போய் இப்படி இழுத்துக்கொண்டு ஓடிப்போய் விட்டானே என்ற அவமானத்தில் புழுவைப்போல துடித்தார். என்ன செய்தும் கழுவித் துடைக்க முடியாத பெரிய பாவத்தை மகன் பண்ணிவிட்டானே என்று புலம்பினார்.

எத்தனை அழுது புலம்பியும் சிவராமனின் மனக் கொந்தளிப்பு அடங்கவில்லை. கோபமும் தணியவில்லை. மகன் ஓடிப்போன பத்தாவது நாள் சங்கலிகள் தகர்ந்த மத யானையாக பொங்கி எழுந்தார்.

திம்மராஜபுரத்தின் சரித்திரத்திலேயே கேள்விப் பட்டிராத காரியம் ஒன்றைச் செய்வதற்கு சிவராமன் மீசையை முறுக்கி விட்டவாறு தயாரானார். ஓடிப்போன மகன் காந்தியின் அச்சு அசலில் ஒரு கொடும்பாவி செய்யச் சொல்லி உத்தரவிட்டார். அவரைக் கட்டுப்படுத்த முயன்றால், சிவராமன் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பெரிய வன்முறையில் இறங்கிவிடுவார் என்கிற நடுக்கமும் எல்லோருக்குள்ளும் இருந்தது. அதனால் எவரும் அவரைத் தடுக்காமல் இருந்துவிட்டார்கள்.

கடைசியில் சிவராமன் சொன்ன மாதிரியே அவருடைய மகன் காந்தியின் கொடும்பாவி செய்யப்பட்டு விட்டது. காந்தியின் வேட்டியையும் சட்டையையும் கொடும்பாவிக்கு அணிவிக்கப் பட்டது. ஞாபகமாக கொடும்பாவியின் நெற்றியில் ஒரு ரூபாய் நாணயத்தையும் வைத்தார். சிவராமனைப் பொறுத்தவரை அவரின் மகன் காந்தி செத்து ஒழிந்துவிட்டான். கொடும்பாவிதான் செத்து நாசமாகப் போனவனின் சடலம். சடலத்தை எடுத்துக் கொண்டுபோய் சுடுகாட்டில் வைத்து எரித்து ஈமக் காரியங்கள் எத்தனை இருக்கிறதோ அத்தனையையும் செய்து விட்டுத்தான் ஓய்வேன் என்றார் சிவராமன். அவர் சொன்னபடி செய்யவும் செய்தார்.

சடலத்திற்கு தீ மூட்டியதும் திரும்பிப் பார்க்காமல் நடந்துவிட வேண்டும் என்பார்கள். சிவராமனிடம் அந்த வார்த்தை எல்லாம் எடுபடவில்லை. மகனின் கொடும்பாவித் தீயின் செந்நிற நாக்குகளில் பற்றி எரிவதை அவரின் கண்கள் நிலை குத்தியவாறு பல நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருந்து விட்டுத்தான் சுடுகாட்டின் வடகிழக்கு மூலையில் இருந்த கிணற்று மேட்டை நோக்கி நகர்ந்தார். கொள்ளி வைத்த கோபவேக்காடு தணியும்படி கிணற்று நீரை வாளி வாளியாக தலையில் ஊற்றினார். அப்புறம்தான் உணர்வு வேகம் சிறுது குறைந்தது. பூமித் தாயின் சுனை நீரை மேலும் மேலும் ஊற்றியதில் வெக்கை அத்தனையும் தணிந்தது. உடம்பின் குளிர்ந்த ஈரத்தைத் துடைக்காமலேயே சிவராமன் ஆகாயத்தை நிமிர்ந்து பார்த்தார். அவரின் கண்களில் கண்ணீர் மல்கி கண்ணீர் சுரந்தது.

பொருமல் தோய்ந்த அவரின் குரல் வானத்தை நோக்கி ஒலித்தது. “அய்யா மஹாத்மா காந்தி சாமி, என்னை மன்னிச்சிரு சாமி. ஒன்மேல் இருக்கிற மரியாதையில பக்தியில் ஒன் பேரை என் மகனுக்கு வச்சேன். அந்தத் தப்பை இனிமே நான் செய்யவே மாட்டேன். என் பரம்பரையும் இனிமே அந்தத் தப்பை செய்யாது. இந்த ஊர் ஜனமும் அந்தத் தப்பை செய்யறதுக்கு விடமாட்டேன் சாமி. ஒன் மேல ஆணையா விடவே மாட்டேன் சாமி. மன்னிச்சிருய்யா எங்களை…”

சிவராமனின் இந்தச் சுடுகாட்டு உறுதிமொழி மொத்த திம்மராஜபுரம் ஜனங்களையும் திகைத்து சிலிர்க்க செய்துவிட்டது. எல்லோருமே அந்த உறுதி மொழியை மனப் பூர்வமாக ஏற்றுக்கொண்டார்கள்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு திம்மராஜபுரத்தின் எந்தக் குடும்பத்திலும் யாருடைய வாரிசுகளுக்கும் தேசத் தலைவர்களின் எந்தப் பெயரும் வைக்கப்படவில்லை. இதெல்லாம் நடந்து இரண்டு வருடங்கள் கழித்து என் பெரியப்பாவின் வீட்டில் அவருக்கு ஒரு பேரன் பிறந்தான்.

அந்தப் பையனுக்கு என்ன பெயர் வைத்தார்கள் தெரியுமா? பில் கேட்ஸ். அகில உலக பணக்காரரின் பெயர்!

முற்றும்.

என் பெயர் எஸ்.கண்ணன். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்'…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *