கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 9, 2012
பார்வையிட்டோர்: 9,107 
 

”அய்யா! என் பயிரைப் பாருங்க சாமியோவ்! எளங்கதிரு. முக்கா திட்டம் பால் புடிச்சிடுச்சி. இன்னும் ரெண்டேரெண்டு தண்ணி வுட்டு நெனைச்சிட்டாப் போதும், படிக்குப் பாதியாவது தேறும். கொஞ்சம் தயவு வெச்சி தண்ணி வுடுங்க சாமியோவ்!.”

“ஏய் கெழவா! மோட்டாங்காலு பயிருக்கு உனுக்கு தண்ணி வுடணுமா?.அடீங்! இங்க அவனவன் பள்ளக்காலு பயிருக்கே தண்ணி அருந்தட்டலாப் போயி சாவறான் தெரியுதில்ல?. நவுரு…நவுரு.”

“கொஞ்சம் பெரிய மனசு வெய்யுங்க சாமீ.ஊருக்கு ஒத்தைக்குடி, அண்டிப் பொழைக்க வந்தவன். நீங்களே ஒத்தாசை பண்ணலேன்னா எப்படிங்க சாமிங்களா.”

“டேய்! இன்னா பதிலுக்கு பதிலு நின்னு வாயாட்ற?. காரியங்கருமாதிக்கு சிரைக்க வர்ற சரி.அதுக்குத்தான் மேரை குடுத்திட்றோமில்ல?.. அப்புறம் இது இன்னா கொசுரு. நவுர்றா.”

“ஐயா சாமீ!.”

“ஏய்! நவுர்றா!.”

எனக்குக் கிழவனைப் பார்க்க பாவமாக இருந்தது. ஊரில் எல்லோரும் ஏரியிலிருந்த ரெண்டுமாசத்தண்ணியை நம்பி நாத்து நட்டு விட்டிருந்தார்கள்.எப்படியும் புரட்டாசி ஐப்பசியில் பெய்யும் பருவமழை வந்து கோர்த்துக் கொள்ளும், என்று நம்பியது பிசகாய் போயிற்று. இந்த வருஷம் மழை பொய்த்துப் போச்சுது. ஊர் வழக்கப்படி சில அடாவடிகள், வில்லுவாயன்கள் மேற்பார்வையில் முறை வைத்துத் தண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ராவும்பகலும் காவல். சாராயமும், முனியம்மா சால்னா கடையின் தலைகறியும், மூளைவறுவலும், ரத்தப் பொரியலும் சஸ்தாவாக சப்ளையாகிக் கொண்டிருக்கின்றன. கிழவன் மீண்டும் மீண்டும் அவர்களிடம் போய் நச்சரித்துக் கொண்டிருந்தான்.

“தூத்தெரி! டேய்! கெழவனை ரெண்டு போட்டு ஓட்றா.”—–ஒருத்தன் எழுந்து லுங்கியை மடித்துக் கட்ட, பயந்துப் போய் கிழவன் தூரமாய் ஓடிப்போய் நின்றான்.

“ சரிதான் வுட்றா! பாவம்டா கெழவன். ஆத்திரம், அவசரத்திற்கு நாம அவன் கிட்ட தலையைக் குடுக்கணுமில்லே?.”

“ஆங்! மொட்டை அடிப்பான்,பெருசுங்களுக்கு சதுரவட்டை அடிப்பான். வேற இன்னா தெரியும்?. ஸ்டெப் கட்டிங் தெரியுமா?,பாப் கட்டிங்?, மஷ்ரூம், சம்மர் கட்டிங்?. ஒண்ணும் தெரியாது.”——படிச்ச விடலை ஒருத்தன் கிண்டலடித்தான்.

மறுநாள் அந்தக் கிழவனைப் பார்க்க நேரிட்டது. காங்கியாத்தா கோவில் திட்டில் உட்கார்ந்துக் கொண்டு, புகையிலையை வாயில் அதக்கிக் கொண்டு, நேற்றைய கவலையை மறந்தவனாய் தெம்மாங்கு பாட்டொன்றை சத்தம் போட்டு பாடிக் கொண்டிருந்தான்.

“வேலி அழிஞ்சதின்னு, விறகுக்கு நீ வாடி
காளை ஒன்று தப்புச்சதுன்னு காட்டுவழி நான் வாரேன்.”
என்னைப் பார்த்ததும் பாடுவதை நிறுத்திவிட்டு சிநேகமாய் சிரித்தான்.

“வாங்க தம்பீ! அப்புறந்தான் கேள்விப்பட்டேன். சுந்தர வாத்தியார் வூட்டுப் புள்ளையாம?. பம்பாயில இருக்கிறதா?முருகேசு தம்பி சொல்லிச்சி, வாஸ்தவந்தானா?. கொழந்தையில பார்த்தது. அப்பல்லாம் தம்பிக்கு நாந்தானேமுடிவெட்றது?.”‘

“ஆமாம் நேத்து கம்மாங்கரையில அப்படி கெஞ்சினீங்களே, அவங்கள்லாம் விடலைப் பசங்க உம்ம பேச்சு எடுபடுமா? உன் புள்ளைய அனுப்பறதுதானே?.——-கிழவன் உடனே அழ ஆரம்பித்து விட்டான்.
“ எனுக்கு புள்ள பாக்கியம் இல்லப்பா. மூணும் பொட்டக் கழுதைங்க. ரெண்டை கட்டிக் குடுத்திட்டேன். கடைக்குட்டி காமாட்சி. வந்தேன் வந்தேன்னு நிக்கிறா. .இதுங்களை எந்தலையில கட்டிப்புட்டு எங்க வூட்டுக்காரி புண்ணியவதி சுமங்கலியா போய் சேர்ந்துட்டாய்யா..”—-

அவன் அழுகை நிற்கவில்லை. ஏன்டா கேட்டோம் என்றாகிவிட்டது.. அதற்கடுத்த நாள் ஏரிப் பக்கம் போனபோது பார்த்தால் கிழவனும், அவன் மகளும் ஆளுக்கொறு கழியில், இரண்டு பக்கங்களிலும் பிளாஸ்டிக் குடங்களை கட்டிக் கொண்டு, ஏரிக்குத் தெற்கே இருந்த தாங்கலில் (குட்டை) இருந்து தண்ணீர் சுமந்து வந்து கழனியில் விசிறிக் கொண்டிருந்தனர். காமாட்சி வியர்வையிலும், தண்ணீரிலும் தொப்பலாய் நனைந்துப் போயிருந்தாள்.. சில இளவட்டங்கள் மதகுமேல் உட்கார்ந்துக் கொண்டு, அவளை விழுங்கிக் கொண்டிருந்தனர்`. எனக்கு எரிச்சல் கொப்பளித்தது. வேகமாய் போய் கிழவனை மடக்கினேன்.

“அட புத்தியில்லாதவனே! இப்படி தண்ணி சுமந்துக் கொண்டுவந்து ஊத்தியே நெல்பயிரை காப்பாத்தமுடியுமா?. ஆவற காரியமா இது?..புத்தி மட்டா உனக்கு?..’

‘தம்பீ! வேற வழியில்லை எங்களுக்கு. ரெண்டு போகமும் சாவியாப் போச்சி. இந்த போகத்தையாவது காப்பாத்தினாத்தான் பொழைக்கஃ முடியும்.. ஊரைச் சுத்தி கடன்பா எனக்கு. ஆனவரைக்கும் பாக்கிறோம். அப்புறம் எங்கப்பன் முருவன் வுட்ட வழி..”—–கிழவனுக்காக நான் முருகேசிடம் போய் பேசினேன். அடாவடி கோஷ்டியில் அவனும் ஒருத்தன்.என்பள்ளி.தோழன்.

“அட நீ சும்மா இருப்பா. அவன் இன்னா நம்ம ஜாதியா,ஜமாத்தா?. ரெண்டு போகமா இங்க யாரும் ஒரு நெல்லுமணியை வூட்டுக்குக் கொண்டு போவல தெரியுமா?.இங்க எல்லார் வூடுகள்லேயும் இப்ப ரேஷன் அரிசியிலதான் உலை கொதிக்குது. இந்த போகமும் பள்ளக்கால்ல மட்டுந்தான் பயிரேறிச்சி. அதுவும் இப்ப கைமீறிப் பூடும் போலிருக்கு. தண்ணி அருந்தட்டலு..மூட்டை மூட்டையாய் கொட்டின எரு மண்ணாய் போச்சிப்பா.. இன்னாப் பண்ணச் சொல்ற?. பாதிப் பேரு பயிர்கள மாட்டைவுட்டு மேச்சியாச்சி. இந்த கெழவனுக்கு மட்டும் என்ன அம்மாந்திமிரு?.ஆவற காரியத்தை செய்றானா பாரு. சும்மா வீம்புக்கு செய்றான்..”

அன்றிரவு நெடுநேரம் எனக்குத் தூக்கம் வரவில்லை. பத்து வருஷங்கள் கழிச்சி எவ்வளவு ஆசையாய் பிறந்த மண்ணைப் பார்க்க ஓடிவந்தேன்?. இங்கே எல்லாமே சிதைந்து போயிருக்கின்றன. ஊரைச்சுற்றி பசுமையான வயல்வெளிகள், கன்னிகோவிலையொட்டிய பெரிய தோப்பு, சமுதாயத்தின் புளியந்தோப்பு, நாங்கள் குதித்து துவம்சம் பண்ணிய சத்தார் சாயபுவின் பம்ப்செட் கிணறு, அங்கிருந்த நூற்றுக் கணக்கான தென்னை மரங்கள். மனசில் ஓவியங்களாய் பூட்டி வைத்திருந்த காட்சிகள் அழிக்கப் பட்டிருந்தன. எல்லாம் வீட்டு மனைகளாக மாறி பயிரேறியிருந்தன, மனுஷப் பயிர்கள். ஊரைச் சுற்றிலும் இப்ப ஊர்தானிருக்கின்றது.. காலையில் பஸ் ஸ்டேண்ட் பக்கம் ஜேஜேவென்று கூட்டம். பஸ்கள் வரிசையாய் வந்து மக்களை வாரிச் சென்று டவுனுக்குள் கொட்டுகின்றன. பிழைப்பு தேடி நாலாப்புறமும் சிதறும் மக்கள். மேஸ்திரி, ஆண்கூலி, சித்தாளு, பெயிண்டர், இப்படி ஏதாவது வேலை கிடைக்கும். அங்கெயும் போட்டி.. எப்படியும் பத்துல ஏழுக்கு வேலை அகப்பட்டுடும். மிச்சமுள்ளது பத்துமணி ஈஸ்வரி பஸ்ஸில் சோர்ந்துப் போயி திரும்பும். அப்புறம் பொழுதுக்கும் மோட்டுவளையை வெறித்துக் கொண்டு, ஊர்வம்பையெல்லாம் இழுத்துக் கொண்டு….

“விவசாயம்னா ஏன் தூர ஓட்றாங்க?.”—-மொட்டச்சி வாயைக் கிளறினேன்.

“அறப்புக்கா? தூ! நாயா பேயா ஓடிஓடி நெல்லை அடிச்சி, தூத்தி ஒப்படிப்பு பண்ணி முடிச்சிட்டு சாயங்காலம் போய் நின்னா கூலி எம்மாம் தெரியுமா?. தலைக்கு நாலுபடி நெல்லு.. கட்டுபடியாவுமா? நீ டவுனுக்கு வந்து பாரு நைனா. ஜல்லி போட்ற அன்னிக்கு வடைபாயாசத்தோட சாப்பாடு போட்டு,நூறு ரூபா கூலி. பத்து மணிக்கெல்லாம் ஜில்லுன்னு கோலா கலரு.. இங்க இன்னா போடுவான்?. சாம்பார் சோத்துக்கே மூக்கால அயுவுவான். அப்புறம் ஜனங்க எங்க ஓடும்?, சொல்லு நைனா!.”

எதிர் பக்கத்து நியாயத்தைக் கேட்டேன்.

அட! அவனுங்க கேக்கற கூலியைக் குடுத்துட்டா,அப்புறம் செலவுபோக என்னா மிஞ்சும்பா.?.நாண்டுக்கிட்டு சாவ வேண்டியதுதான். மூணு போகமா கழனியில போட்டதெல்லாம் மண்ணாய் போச்சி. பொழப்பா இது?. இந்த நாட்ல வெங்காயம் கூட நாற்பதுக்கு விக்கும், ஆனா நெல்லுக்கு மட்டும் என்னைக்கும் வெலை கிடையாதப்பா.”

ஏரிக்கரையில் நின்று பார்க்க, கீழே விரியும் கழனியில் அங்கங்கே நிலங்கள் திட்டுத்திட்டாய் பயிரிடப் படாமல் முள்ளுச் செடிகள் மண்டிக்கிடக்கின்றன..பயிரேறி சிலவருஷங்களாகியிருக்கும் போல. வேதனையாயிருந்தது. இப்படி இங்கே நாட்டின் ஆதார வேர்கள் கொஞ்சங்கொஞ்சமாய் செல்லரித்துக் கொண்டு வருவதை மேலேயிருப்பவர்கள் உணர்ந்திருப்பார்களா?.

ஆயிற்று அறுவடை துவங்கி விட்டது.. சொற்பமாய் பள்ளக்கால் கழனிகளிலும்,பம்ப்செட் நிலங்களிலும் கதிர்கள் தலைசாய்ந்து கிடக்கின்றன. எனக்குக் கிழவனை நினைக்கையில் பிரமிப்பாக இருந்தது.. அந்த தளர்ந்த மனிதருக்குள்தான் எவ்வளவு வைராக்கியம்?. எல்லோருடைய கேலிப் பேச்சுக்களையுந்தாண்டி, தண்ணீர் சுமந்து வந்து ஊற்றியே பயிரைக் காப்பாற்றி விட்டானே. நம்பமுடியாத விஷயமாக இருந்தது இப்படிக் கூட நடக்க முடியுமா?. ஊரில் இவன் மேல் பலபேருக்கு எரிச்சல். தண்ணீர் போதாமல்போய் பலர் பயிரை மாட்டைவிட்டு மேய்க்கிற கதையாப் போச்சி. கிழவனும், அவர் பொண்ணும் எத்தனை நடை நடந்திருப்பார்கள்?.எத்தனை குடம் சுமந்திருப்பார்கள்.?.. கண்ணனை நினைத்து ஆண்டாள் தொடுத்த மாலையின் பூ ஒவ்வொன்றிலும் ஆண்டாளின் மனசு கலந்திருக்குமாம். அதைப் போல தலை சாய்ந்து கிடக்கும் கதிர்களின் நெல்மணிகள் ஒவ்வொன்றிலும் இவர்களின் மனசும், வியர்வையும் பொதிந்து கிடக்காதா என்ன?.
பம்ப்செட்காரர்கள் பஸ்ஸ்டேண்ட் பக்கம் நின்று அறுவடைக்கு ஆள் பிடிக்க கெஞ்சிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இவர்களை சட்டைபண்ணாமல் கூலிவேலைக்காக டவுனுக்கு பஸ் ஏறிக் கொண்டிருந்தார்கள். இவர்களைப் பார்க்க பாவமாய் இருந்தது. வீட்டிற்குத் திரும்பினேன்., எதிரே கிழவன் வந்து வழி மறித்தான்.

“நேத்தோட அறத்து, ஒப்படிப்பு பண்ணி முடிச்சாச்சி தம்பி.”—முகத்தில் பெருமை என்னமாய் பொங்கி வழிகிறது?.நினைத்ததை சாதித்து விட்ட பெருமிதம்.

“தெரியும்யா. உனது சுமாரா ராசியாச்சாமே?., ஊர்ல பேசிக்கிறாங்க.”

“உங்கிட்ட சொல்றதுக்கென்னப்பா?, கட்டு மூட்டையில பதினாறு மூட்டை தேறிச்சி தம்பி. எடை போட்டா என்னதேறுமோ?. .நேரா கமிட்டிக்கு ஏத்தலாம்னா சத்தம் வண்டி கிடைக்கல. வூட்டாண்ட அட்டி போட்டு, அடுக்கி வெச்சிருக்கேன். ஏதோ பகவான் புண்ணியத்தில படிக்குப் பாதியாவது தேத்த முடிஞ்சிதே..”:

“ஊர்ல என்ன பேசிக்கிறாங்க தெரியுமா?.நீயும் தலைவர் மாதிரி சாராயம் சப்ளை பண்ணி, அந்த அடாவடி கோஷ்டிய கைக்குள்ள போட்டுக்கிட்டு உன் கழனிக்கு திருட்டுத்தனமாய் தண்ணி பாய்ச்சிக்கிட்டியாம்..”——ஒரு வினாடி அதிர்ச்சியாய் நிமிர்ந்தவன் பொலபொலவென்று கண்ணீர் உகுத்து விட்டான்.

“இது அடுக்காதுப்பா. இதோ மேல எரிஞ்சிம்போரானே எங்கப்பன் அவந்தான் இதுக்கு கூலி குடுக்கணும். நானும் ,காமாட்சியும் பட்டபாடு இருக்குதே.”—–மேலே போர்த்தியிருந்த துண்டை எடுத்துக் காட்டினான். இரண்டு பக்கங்களிலும் தோள்பட்டைகளில் புண்ணாகி நொளநொள வென்று சீழ் கோர்த்திருந்தது. ரணத்தைச் சுற்றி சீழ் வடிந்துக் கொண்டிருந்தது. ஈ தொல்லைக்காகவே துண்டை போர்த்தியிருக்கிறான் போல.

“நான் நடவு போட்டது பிசினி நெல்லு தம்பி. மோட்டா ரகம். புஞ்சை பயிரு. இங்க எல்லாருக்கும் தெரியம்.. புழுதிகால் பயிரு, மானாவாரி. ரெண்டுசால் ஓட்டி வெதை போட்டால், சொல்ப மழைதண்ணியிலும், பனித்தண்ணியிலுமே வந்தேன்வந்தேன்னு வந்துடும்னு சொல்றது. இது கொல்லைமோட்டு பயிருப்பா.. ம்.ம் இது என்னா வெல போவுமோ?. கடன் போவ மிச்சம் என்னா நிக்குமோ?.எது எப்பிடீன்னாலும் காமாச்சிக்கு ஒஸ்தியா ரெண்டு சீலை எடுக்கணும்பா. கொயந்தை எம்மாம் பாடு பட்டுச்சி?. சாயம்போன சீலைய சுத்திக்கிட்டு திரியுது. பளிச்னு இருந்தாத்தானே வர்ற தை, மாசியிலயாவது. வெலையாகிப் போவா?. ம்.ம்..எங்கொயந்தைக்கு இன்னும் நல்ல நேரம் கூடிவரல. யாரை நொந்து என்ன பண்றது?. வர்றேன் தம்பி.”

ஆனால் கிழவன் பட்ட பாடுகள் அத்தனையும் வியர்த்தமாய் போய்விட்டதை, விடியநேரம் முருகேசுதான்

டீக்கடையில் வெச்சி சொன்னான். கிழவன் வெளியில் கட்டில் போட்டு நெல்லுக்குக் காவலாய் படுத்திருக்கும் போதுதான் இது நடந்திருக்கிறது. மறு நாள் கமிட்டிக்கு ஏற்ற வேண்டிய நெல்லு தாழ்வாரத்தில் அடுக்கிவைக்கப் பட்டிருக்கிறது. காமாட்சி பின்கட்டில் படுத்திருக்கிறாள். மாசிக்கான் கிட்ட சத்த வண்டிக்கு சொல்லியாச்சி. உள்ளே இறங்கியிருந்த ஆந்திரா சரக்கு ஜிவ்வென்று தூக்க, கண் அசந்த நேரத்தில், நடுராத்திரிக்கு மேல பத்து மூட்டை நெல்லு களவாடப்பட்டு விட்டன. கிழவன் கண் விழிக்கும்போது எல்லாம் முடிந்து போய் சரிந்து கிடந்த மூட்டைதான் கண்ணில் பட்டது. யாரென்று சொல்ல முடியும்?. அய்யோ பாவமே. அவர்கள் உழைப்பைப் பார்த்த எனக்கே தாங்கவில்லை. மனசு பதற கிழவன் வீட்டிற்கு விரைந்த போது, கிழவன் கோபமாய் இரைந்துக் கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் தலைதலையென்று அடித்துக் கொண்டு அழுதான். பறிகொடுத்தவனை நான் என்ன சொல்லி தேற்ற முடியும்?. காமாட்சி ஓரமாய் நின்று விசும்பிக் கொண்டிருந்தாள். பாவம் புதுபுடவைக் கட்டிக் கொள்ளும் நேரம் இன்னும் அவளுக்கு வரவில்லை போலும். சே! இந்த பழுத்த உடம்பு பட்ட பாட்டையும்,இந்த இளம்பெண் சிந்திய வியர்வையையும் திருடிய உத்தமர்கள் இந்த கூட்டத்தில் யார்?. கிழவன் எதுவும் பேசாமல் துண்டை உதறி தோளை மூடிக் கொண்டு மந்தைவெளிப் பக்கம் நடக்க ஆரம்பித்தான்.

எனக்குத் தெரியும் இவன் நேராய் எங்கே போவான் என்று.. சாராயக்கடைக்கு. இவன் மட்டுமில்லை, நெல்லை திருடியவன்களும் அங்கேதான் குடித்துக் கொண்டிருப்பான்கள். இத்துடன் இந்த விஷயம் முற்றுப் பெற வில்லை. இது நடந்த மூன்றாம் நாள் ஈஸ்வரன் கோவிலில் ஊர் கூட்டம் கூடியது.. முதல் வழக்கே கிழவனுடையதுதான். ஊர் பெருந்தனங்கள் முன்னிலையில் கிழவன் கையைக் கட்டிக் கொண்டு நின்றருந்தான். பெரிய பெருந்தனம் பொன்னுசாமி பேச ஆரம்பித்தார்.

“டேய் முருவா! உன்வூட்ல நெல்லு திருடு போச்சி. அநியாயந்தான். அதுக்கு ஊரு என்னாடா பண்ணமுடியும்?.நேத்து மூக்குமுட்ட குடிச்சிப்புட்டு, மேல் வரப்பு கீழ்வரப்புன்னு இல்லாம இருக்கிற எல்லா பெர்தனங்களையும் ஆத்தா அம்மான்னு திட்டியிருக்கிற. எம்மாந்திமிருடா உனக்கு?.”

“ஊர் வேலை செய்றவன், நாம போட்ற எச்சி சோத்துல வயிறை வளக்கற நாயிக்கு அம்மாந்திமிரு ஆயிப்போச்சா?டாய்!.’

முருகேசு கிழவனை அடிக்க ஓடினான். நான் அவனை பிடித்துக் கொண்டேன்.

“நேத்தே பிச்சிட்டிருப்போம். ஊரு கட்டுக்குப் பயந்து சும்மா வுட்டோம் ஹக்காங். இன்னா தெனாவட்டு?. இவனை சும்மா வுடக்கூடாதுய்யா.”——சில இளவட்டங்கள் எகிறிக் கொண்டிருந்தன.

“எல்லாம் போகத்துக்கு போகம் நாம மேரை போட்றோமில்ல?. அது பண்ற வேலைய்யா.கொழுப்பு துளுத்துப் போச்சி.டேய்! இனிமேகாட்டி அரி போடு சாமீயோவ்னு கழனியாண்ட வந்து நின்னுபாரு சொல்றேன்..”

“இன்னாடா சொல்றே? வாய்ல கொழுக்கட்டையா வெச்சிங்கீற?.பேசண்டா.”—பெரிய பெருந்தனம் சீறினார்..

“அவன்கிட்ட இன்னா கேக்கிறது?. பெரிய மனுசங்கள வண்டைவண்டையா திட்டியிருக்கான். இனிமே இதுங்க ஊர்லியே இருக்கக் கூடாது. அடிச்சி துரத்துங்கடா.”

கிழவன் தலை நிமிர்ந்து கூட்டத்தை ஒரு முறை பார்த்தான்.

“எப்போவ்! எதுவும் வில்லங்கமாப் பேசி மாட்டிக்காத. மன்னாப்பு கேட்ரு.”——காமாட்சி ஓடி வந்து கிழவன் காதில் சொல்லிவிட்டு விலகினாள். கிழவன் குனிந்து பணிவுடன் எல்லோரையும் கும்பிட்டான். பெருந்தனக்காரர்களைப் பார்த்தான்.

“சாமீ! மூணு தலைமுறையாய் நாங்க இந்த ஊர்ல ஊர்வேலை செஞ்சிவர்றோம். எங்க பாட்டன் ஆறுமுகப் பண்டிதன் சம்பாரிச்ச நிலம் இது. நாங்க கீழ்சாதிதான் சாமீ. முருகேசு தம்பி சொன்னாப்பல உங்க வூட்டு எச்சி சோத்தில வயிறு வளர்க்கிற நாயிங்கதான் நாங்க. ஆனா இன்னிக்கு இந்த நாயிங்க சோத்தை நீங்களே திருடிப்புட்டீங்களே, இது அடுக்குமா?. குடங்குடமாய் தண்ணி ஊத்தி காப்பாத்தினதை கொள்ளை வுட்டுட்டு நிக்கிறோமே. இது யார் செஞ்ச வேலையின்னு உங்களுக்கெல்லாம் தெரியாமயா இருக்குது?..பத்து மூட்டைங்களை அவ்வளவு சுலுவா கொண்டும்போயிருக்க முடியாது. நகை,நட்டா ஜோபியில போட்டுக்குனு ஓட்றதுக்கு?..அதனால இது அசலூர்காரன் வேலை இல்லை, இல்லீங்களா சாமீ.!”

”டேய்…டேய்! அளந்து பேசு. ஊர்வேலை செய்ற கீழ்சாதிக்காரன் நெல்லுமேல கைவைக்கிற ஈன ஜென்மம் இங்க எவனும் இல்லை. இது ஏதோ அசலூர்காரன் வேலைதான்..அது சரி, காவலுக்குப் படுக்கிறவன் ஃபுல்லா தண்ணியடிச்சிட்டு மெலாந்துட்டா, அது யார் குத்தம் சொல்றா.”

“அப்ப உள்ளூர்காரன் இந்த வேலையை செய்யலேன்றீங்களா சாமீ!.”

“டேய்…டேய்! பொழைக்க வந்த நாயீ, நம்மளைப் பார்த்து ஆதாரமில்லாம,திரும்பத் திரும்ப திருடன்றான், பார்த்துக்குணு நிக்கிறீங்களே. ரெண்டு போட்றா அவனை.”

நாலைந்து இளவட்டங்கள் கையை முறுக்கிக் கொண்டு வந்தன. கிழவன் இப்போது இதுஎதற்கும் மசிந்தவனாகத் தெரிய வில்லை. இப்போது உணர்ச்சிக் கொந்தளிப்பில் கழுத்து நரம்புகள் புடைத்துக் கொள்ள, அவன் குரல் உச்ச ஸ்தாயிக்கு எகிறியது.

“உள்ளூர்காரன்ல யாரும் திருடலேன்னு சொல்லிட்டீங்க இல்லே சாமீ. அப்ப எனுக்கு வழி விட்டு நில்லுங்க.. இன்னும் ஒரு மணி நேரத்தில எம்மூட்டையை நடுத்தெருவுக்கு இழுத்தார்றேன். என் நெல்லு எனுக்குத் தெரியும் சாமீ. கோணிப்பையை மாத்திட்டா தெரியாதா?… நம்ம ஊர்லியே பிசினி அறப்பு என்னுது மட்டுந்தான். என்னசாமீ செய்யட்டுமா?. இதுக்கு நீங்கள்லாம் உத்திரவு குடுக்கணுஞ்சாமியோவ்!.”—-இரண்டு கைகளையும் உயர்த்தி கூட்டத்தை நோக்கி கும்பிட்டான்.
கூட்டம் திகைத்தது. நிசப்தம். ஒருத்தரையொருத்தர் பார்த்துக் கொண்டனர். பெருந்தனங்கள் முகங்களில் ஈயாடவில்லை. அட அன்றைக்கு அடிக்குப் பயந்து ஓடிய கிழவனா இவன்?.. எனக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

‘என்னய்யா இது?. ஏதோ பொலம் தெரிஞ்சிதான் கெழவன் இந்த எகிறு எகிற்றாம் போல. எந்த மானங்கெட்டவன் இந்த வேலையைச் செஞ்சான்னு தெரியலியே. எக்குத்தப்பா மாட்டிக்கிட்டா மானம் போயிடும்யா.தெரிஞ்சா அக்கம்பக்கத்து ஊர்காரன்லாம் காரிதுப்புவான்களே.

”—–பெரியபெருந்தனம் சின்ன பெருந்தனத்தினிடம் புலம்பித் தள்ளினார்.. அவருக்கு கைகொடுக்கிற மாதிரி சில வெல்லுவாயன்கள் சீறிக் கொண்டு வந்தனர்.

“டேய்…டேய்! வுடாத அவனை.கெழக் கயிதைக்கு இன்னா திமிரு பார்த்தியா?. ஏய்! எங்காளுங்க வூட்ல நீபோயி செக் பண்ணப் போறியா?. அம்மாந்திமிராயிப் போச்சா?. ராஸ்கோலு! நாங்கள்லாம் திருடன்களாத் தெரியுதா உன் கண்ணுக்கு?.போகத்துக்கு போகம் நாங்க குடுக்கிற மேரை பண்ற வேலைடா இது. டாய்!.”[—ஒருத்தன் ஓடி கிழவனை பிடித்துத் தள்ளினான். கிழவன் நிலைகுலைந்துப் போய் தூர விழுந்தான். கூட்டம் குபீரென்று எழுந்துக் கொண்டது.. ஆட்கள் மூலைக்குமூலை எழுந்து கிழவனை கண்டமேனிக்கு திட்ட ஆரம்பித்தார்கள். அவனுக்கு ஆத்திரமாய் இருந்தது. அடக்க அடக்க அது அழுகையாய் வெடித்தது..

“தெரியும்யா! எடங்குடுக்க மாட்டீங்க. ஊர்மானம் காத்துல பறந்திடும். அதுக்கோசரம் திருட்டுக்கு துணை போவீங்க..இதுவும் திருட்ன மாதிரிதான்யா. போனாப் போவுது போ. போவட்டும்…போவட்டும்…பத்து மூட்டைதானே?. ஒழியட்டும். ஒழிஞ்சி போவட்டும்..”——-கண்ணீருடன் ஆவேசமாய் இரைச்சல் போட்டுக் கொண்டிருந்தவனை, காமாட்சி ஓடிவந்து தாங்கிக் கொண்டு ஆசுவாசப் படுத்தினாள். கிழவனின் கைகள் வெடவெடவென்று உதறிக் கொண்டிருந்தன. ஒரு நிமிஷம் நின்று சுதாரித்துக் கொண்டான். திரும்பி நின்று கூட்டத்தைப் பார்த்து சாஷ்டாங்கமாய் விழுந்து கும்பிட்டான்..

“அய்யா! நான் பேசினதுக்கு தப்பு வாங்கிக்கிறேன் சாமியோவ்! மன்னிச்சி வுட்ருங்க சாமீ!.”—-திரும்பி தன் மகளைப் பார்த்தான். வெய்யிலில் காய்ந்து கருகருத்து நிக்கிறாளே. மனசு தாளவில்லை.

” எம்மாடீ காமாச்சி! எம்மாம் பாடுடீ மவளே உனுக்கு?. கொடங்கொடமா ஊத்தி காப்பாத்தினியே, எல்லாம் போச்சிடீ! எல்லாம் போச்சே.”—–காமாட்சி விசும்பிக் கொண்டிருந்தாள்.அவளை அணைத்துக் கொண்டான். பின்பு மெல்லிய குரலில்

“போனாப் போவட்டும் போ…வுடு, நீ அயுவாத..நமக்கு மேரை குடுத்தேன் மேரை குடுத்தேன்னு மூச்சுக்கு மூச்சு சொல்லிக் காட்னாங்க இல்லே?.இந்த தபா நாம அவுங்களுக்கு மேரை குடுத்துட்டோம்டீ காமாச்சீ! புரியுதா?. மேரை வாங்கினவங்க வயிறு ரொம்பட்டும்டீ!. ஹ..ஹ..ஹா” —- அவன் பொக்கை வாயில் சிரிக்க காமாட்சி அவனை கூட்டத்தை விட்டு வெளியே இழுத்துக் கொண்டு நடந்தாள்..

– கல்கி சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதை, 20-08-2000

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *