முனைவர் முருகேசன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 17, 2014
பார்வையிட்டோர்: 8,500 
 
 

1

பல அறிஞர்களையும் விஞ்ஞானிகளையும் உருவாக்கிவிட்ட பின்னும் அந்த கல்லூரி தலைக் கனமின்றி அமைதியாகவே இயங்கிக் கொண்டிருந்தது. அங்கு ஓர் வகுப்பறை மட்டும் சற்று சப்தமாகவே காணப்பட்டது. பல கூத்துகளும் கிண்டல்களும் அங்கு அரங்கேறிக்கொண்டிருந்தன. இவ்வளவு சலசலப்புகளுக்கு மத்தியிலும் மாணவர்கள் யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். திடீரென உள்ளே நுழைந்தார் வகுப்பாசிரியர் முருகேசன். வகுப்பே நிசப்தமாயிற்று. அவர் மேலிருக்கும் மரியாதையினாலோ, பயத்தினாலோ அன்று. அவர் கூறும் வழக்கமான அந்த மூன்று சொற்களை எதிர்பார்த்து, “டுடே நோ கிளாஸ்”

அவர் பேசத்தொடங்கும் முன்பே மாணவர்கள் அவரை போல் பேசி கிண்டலடிப்பது அவர் காதுகளில் விழாமலில்லை. ஆனால் அவர் அதை கண்டுக் கொள்ளாது, அன்றும் வகுப்பை புறக்கணிப்பதையே தன் முழு நோக்காக கொண்டிருந்தார். மாணவர்கள் அமைதியான பின், முருகேசன் பேச தொடங்கினார், ” இன்னைக்கு கிளாஸ் இல்ல. வீ ஹாவ் ஏ மீட்டிங். எல்லாரும் ஆடிட்டோரியம் வந்துருங்க” என்றவாறே அறையை விட்டு வெளியேறினார்.

முருகேசன் அந்த கல்லூரியில் கணக்காசிரியராக பணியாற்ற தொடங்கி கிட்டதட்ட ஐந்து ஆண்டுகள் முடிந்திருக்கும்.அரசு கல்லூரி ஒன்றில் இளநிலை படிப்பை முடித்துவிட்டு, வேலை தேடும் படலத்தை தொடங்கினார். ஆனால் அது வெற்றி பெறவில்லை. மீண்டும் படிப்பை தொடர்ந்தார். முதுநிலை பட்டமும் கிடைத்தாகிவிட்டது. எந்த வேலையும் கிடைக்கவில்லை எந்த நிலையில்தான் அந்த விரிவுரையாளர் வேலை அவருக்கு கிட்டியது. தன் தந்தை இரைத்த பணத்திலும், ஓர் அரசியல்வாதியின் செல்வாக்கிலும் கிட்டிய வேலை அது.

முருகேசன் வசதி படைத்த குடும்பதில் பிறந்தவர். தன் சம்பாத்தியம்தான் தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டுமென்ற நிலையில்லை. அவர் வேலைக்கு போக வேண்டுமென்று யாரும் அவரை வற்புறுத்தவுமில்லை. ஆயினும் உத்யோகம் புருஷ லக்சனமாயிற்றே ! அதனால்தான் அவர் அந்த வேலையில் சேர்ந்தார். பெயருக்கென்ற ஓர் வேலையென்றே அவர் அதை கருதினார். அவர் கல்லூரியில் சேர்ந்த புதிதில் தான் மிகவும் கண்டிப்பானவன் எனக் காட்டிக்கொள்ள பல முயற்சிகளை மேற்கொண்டார். மாணவர்களிடம் சற்று முரட்டு தனமாகவே நடந்துக் கொள்வார். ஆனால் அவர் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் வீண். மாணவர்களின் நகைபுக்குள்ளானதே மிச்சம்.

2

கணக்கு பாடங்களை மனப்பாடம் செய்துவந்து வகுப்பில் ஒப்பிப்பதையே அவர் வழக்கமாக கொண்டிருந்தார். அவை மாணவர்களுக்கு புரிகின்றனவா என்பது பற்றி அவர் கவலைப் பட்டதில்லை. அது தனக்கு அவசியமில்லை என்றே அவர் எண்ணினார்.

சிறு வயதிலிருந்து கணக்கு பாடமென்றால் அவர் வயிற்றில் புளியை கரைக்கும். கல்லூரியிலும் சில அரியர் வைத்த ஞாபகம். ஆனால் ஒரு வருடத்திற்க்கு முன்பு எப்படியோ கணக்கில் முனைவர் பட்டமும் பெற்றுவிட்டார். அது எப்படி என்பது அவருக்குதான் வெளிச்சம்…

முனைவர் பட்டம் பெற்ற பின் அவர் வகுப்பிற்க்கு அதிகமாக வருவதில்லை. அப்படியே வந்தாலும் எதையாவது ஒப்பித்துவிட்டு பாடம்
முடிந்துவிட்டது என்பார். அவர் வகுப்பிற்க்கு வராததையெண்ணி மகிழ்ச்சியடைந்த மாணவர்களும் உண்டு. அவர் வகுப்பில் யாரும் கேள்வி கேட்பதை விரும்பமாட்டார். சிலர் கேள்வி எழுப்பினாலும், அவர் கூறும் ஒரே பதில், “நோ! ப்ராப்ளம் ! ஐ வில் கிவ் நோட்ஸ்”

இக்காரணங்களால்தான் மாணவர்கள் அவரை வெறுத்தனர் என்பதை சொல்லவும் வேண்டுமா? குறிப்பாக நிரஞ்சன் அவனை மிகவும் வெறுத்தான். நிரஞ்சன் படிப்பில் கெட்டிக்காரன், கல்லூரியில் மிகவும் பிரபலமான மாணவன். ஆசிரியர்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் தான். ஆனால் முருகேசனை கண்டாலே அவனுக்குள் வெறுப்புதான் மிஞ்சும்.

“தான் கற்ற கல்வியை பிறருக்கு போதிப்பதை வெறும் தொழிலாக கருதாமல் சேவையாக கருதும் ஆசிரியர்கள் மத்தியில் முருகேசன் போல் மெத்தனம் எண்ணம் கொண்ட சிலரும் இருக்கத்தானே செய்கிறார்கள்.
ஏன் நம்ம ஸ்கூல் கிருபா சார் இல்ல..நம் கல்லூரியிலும் ஜேம்ஸ் சார், இளங்கோ சார்லாம் எவ்வளவு சிறந்த ஆசிரியரா இருக்காங்க..இவர் மட்டும் ஏன் இப்படி இருக்கார்!” என்று நிரஞ்சன் தன் நண்பர்களிடம் புலம்பிக்கொண்டிருப்பான். ஒரு ஆசிரியரின் கடமையை முருகேசன் சரிவர செய்யவில்லை என்ற கருத்தை அவரிடமே பலமுறை கூறியிருக்கிறான். அதனால் முருகேசனும் நிரஞ்சனை கண்டாலே எரிந்து விழுவார்.

நிரஞ்சன் படிப்பில் கெட்டிக்காரனாதலால், அவனின் இண்டெர்னல்ஸ் மார்க்கை முருகேசனால் குறைக்க முடியவில்லை. இருந்தாலும் அவனை கடிந்துரைப்பதையே அவர் வழக்கமாக கொண்டிருந்தார்.நிரஞ்சனுக்கும் முருகேசனும் நடக்கும் பனிப்போர் அந்த கல்லூரியில் மிக பிரபலம்…

3

மணி காலை 10. அனைத்து மாணவர்களும் “ராஜம் ஹால்” ஆடிட்டோரியத்தில் அமர்ந்திருந்தனர். பலர் பேசிக் கொண்டும், பலர் பெண்களை கவர்வதற்க்கு வேலை செய்வது போல் பாவனை செய்துக் கொண்டுமிருந்தனர். மொத்தத்தில் அங்கு எழும்பிய இரைச்சலில் அந்த இடம் சந்தை கடைபோல் காட்சி தந்தது.

அங்கு கல்லூரி முதல்வரின் வருகையை கண்டதும் அனைவரும் அமைதியாயினர்.அவன் உடன் வந்திருப்பவரே சிறப்பு விருந்தினர் என்பது அவர் அணிந்திருந்த கோட்டு சூட்டிலிருந்து தெரிந்தது. மாணவர்கள் அமைதியான பின் கல்லூரி முதல்வர் பேச தொடங்கினார்.

“இன்னைக்கு ஏன் இந்த கூட்டம் வச்சாங்கணு நீங்க யோசிக்கிறது புரியுது.
நம்ம கல்லூரில ஆங்கில ஆசிரியரா பணியாற்றுன பேராசிரியர்.செந்தில், உங்கள்ல பல பேருக்கு தெரிஞ்சிருக்காது. அவருக்கு இன்னைக்கு 25ஆவது நினைவு தினம். அவருக்கு அஞ்சலி செலுத்தவே இந்த கூட்டம்.

இங்கு மேடையில் அமர்ந்திருக்கும் சிறப்பு விருந்தினர் வேற யாருமில்ல. இந்த கல்லூரியின் முன்னாள் மாணவர் பிரபாகர். இன்னைக்கு மிகப் பெரிய நிறுவனமான ‘டெச்னோ’வின் இயக்குனர்.அவர் செந்தில் சார் கிட்ட படிச்சவர்தான். செந்தில் சார் பற்றி நான் பேசுரதவிட, திரு.பிரபாகர் பேசுனா இன்னும் பொருத்தமா இருக்கும்.”

பலரின் கைத்தட்டல்களுக்கிடையே பிரபாகர் பேச தொடங்கினார்.

“ஹலோ ஜூன்ஸ். அக்சுயளி நான் இன்னைக்கு கனடா போறதா இருந்தது.செந்தில் சார்க்கு அஞ்சலி கூட்டம்னு சொன்னதும் உடனே கனடா டிரிப்ப கேன்ஸல் பண்ணிட்டேன்” என்று வழக்கமாக அனைத்து சிறப்பு விருந்தினரும் கூறும் அதே கதைகளை கூறத் தொடங்கினார் பிரபாகர். அவர் மட்டும் என்ன விதிவிலக்கா…!

“செந்தில் சார் ஒரு ஆசிரியராக பழகியதை விட, ஒரு தகப்பன் மாதிரிதான் எங்ககிட்ட பழகினார். பஞ்சுயாலிட்டி என்றால் அது செந்தில் சார் தான்,

“அது மட்டுமில்ல, பாடம் நடத்துவதிலையும் அவர் எக்ஷ்பெர்ட்.அவர் வகுப்பு எங்களுக்கு போர் அடிச்சதேயில்ல, அவ்வளவு சுவாரஸ்யமா நடத்துவார். எவ்வளவு கஷ்டமான பாடத்தையும் எளிதா புரிய வைப்பார். வகுப்பில் இருக்கிற அத்தனை பேருக்கும் புரிஞ்சாதான் அடுத்த பாடத்தை ஆரமிப்பார்”

மாணவர்களும் வழக்கம் போல் எதற்க்கு கை தட்டுகிறோம் என்று தெரியாமல் கைதட்டிக் கொண்டிருந்தனர்.

இதையெல்லாம் வடக்கு மூலையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் நிரஞ்சன். செந்தில் சாரை பற்றி கேட்க கேட்க அவன் மனதினுள் ஏதேதோ எண்ணங்கள், அலைமோத தொடங்கிற்று.

“அதெப்படி அவர் இவ்வளவு நல்லவரா இருக்க முடியும்.ஒரு வேலை இவர் சொல்றது பொய்யா இருக்குமோ ?

இல்ல இவ்வளவு பெரிய மனுஷன் பொய் சொல்ல மாட்டார். இவ்வளவு நல்லவங்க மத்தியில் இந்த முருகேசன் மட்டும் ஏன் இப்படி ?”

“இப்ப மட்டும் அந்த மைக் ஏன் கையில கிடைச்சா…அந்த முருகேசனோட வண்டவாளத்தெல்லாம்….

ச்சே. இப்படி ஒரு மனுசனா.,, அவன் சரியானா….” என்று முருகேசனை பற்றி ஆக்ரோஷமாக சிந்தித்தவாறே சிறப்பு விருந்தினரையே முறைத்துக் கொண்டிருந்தான் நிரஞ்சன்.

திடீரென மாணவர்கள் வெளியே வேகமாக ஓடிக் கொண்டிருந்தார்கள். ஸ்நாக்ஸ் தர தொடங்கிவிட்டார்கள் போலும். வழக்கமாக கல்லூரிகளில் மீட்டிங்கிற்க்கு முழு மனதுடன் வருவது இரண்டு பேர். ஒன்று முன்னின்று நடத்துபவர். இன்னொருவர் சிறப்பு விருந்தினர். மீதி அனைவரும் ஸ்நாக்ஸிற்காக வருபவர்களே…

4

அந்த கல்லூரி பல ஆசிரியர் தினங்களை கண்டுவிட்டது. பல நூறு அதிகாரிகளை உருவாக்கிவிட்டது. சில சமூக விரோதிகளையும்தான்…

இன்று, நிரஞ்சன்,மன்னிக்கவும் மிஸ்டர். நிரஞ்சன் மிகப் பெரிய நிறுவனமான ‘சண்ட்ஸ்’ என்டர்ப்ரைஸின் நிறுவனர். தன் அலுவலகத்தில் அமர்ந்து மடிக்கணினியில் வேலை செய்துக் கொண்டிருந்தார்.

“மே ஐ கம் இன் சார்” என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார் நிரஞ்சனின் காரியதரசி.

“யா!”

“சார் உங்கள பார்க்க ஒரு பெரியவர் வந்திருக்கார்.”

“நான் பிஸி…”

“இல்ல சார். உங்க கல்லூரி புரொஃபசர்னு சொன்னார் “..அதான்..”

“கல்லூரி புரொஃபசரா..!”

நிரஞ்சனின் முன் பழைய நினைவுகள் எஃப் ஒன் கார்களைவிட வேகமாக ஒடியது.

“பேர் என்ன சொன்னார் ?”

“புரொஃபசர் டாக்டர் ஜேம்ஸ்”

நிரஞ்சன் தன் இருக்கையிலிருந்து எழுந்து வாசலை நோக்கி வேகமாக நடந்தார்.

5

“வாங்க சார்.. எப்படி இருக்கீங்க.. உக்காருங்க..” என்றபடி அவரை வரவேற்பறையில் இருந்த சோபாவில் அமர்த்தினான்.

“.நல்ல இருக்கேன் நிரஞ்சன். நீ நல்ல நிலைமையில இருக்கிறத பார்க்கிறப்போ எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.

உன் கம்பெனி இன்னைக்கு மிக மிக பிரபலமாச்சே ! ஏன் மாணவன் நிரஞ்சன்னு சொல்றது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.

ஆனா நீ தான் காலேஜ் பக்கமே வரதில்ல..”

“சார் கொஞ்சம் பிசி. அதான் ….”

“சும்மா கேட்டேன்பா..நீ கோச்சுக்காத “

“உங்க மேல எனக்கு என்ன சார் கோபம். நான் இன்னைக்கு நல்லாயிருக்குறதற்க்கு நீங்க தான் சார் காரணம்”

“என் நிரஞ்சன் இன்னும் அப்படியே இருக்கான். இப்ப நான் தான் கல்லூரி முதல்வர்…”

“வாழ்த்துக்கள் சார். நான் வேற மறந்துட்டேன்.என்ன சாப்பிடுறீங்க ?” நிரஞ்சன் தன் காரியதரசியை நோக்கினான். அவர் குளிர் பானம் எடுத்து வர அங்கிருந்து நகரும் போது, அவர் கையை பற்றினார் டாக்டர் ஜேம்ஸ், “அதெல்லாம் வேணாம் தம்பி. நிரஞ்சன், வர 23ஆம் தேதி நம்ம கல்லூரியோட 100ஆம் ஆண்டு விழா. நீ கட்டாயம் வரணும். காலையில் 9 மணிக்கு தொடக்க விழா, உன் தலைமையில் நடக்கணும்னு ஆசைப் படறோம்”

நிரஞ்சன் நிமிர்ந்து தன் காரியதரசியை நோக்கினான்.

“சார் நீங்க அன்னைக்கு காலையில சிங்கப்பூர்ல இருக்கணும். கம்பெனி எக்ஸ்பான்சென் பற்றி ஃபாரீன் இன்வெஸ்ட்டெர்ஸ் கிட்ட பேசனும்” என்றார் காரியதரசி.

“நிரஞ்சன் நீ வருவேன்னு காலேஜ் ஸ்டாஃப்ஸ் எல்லாம் எதிர்பார்க்கிறோம்”

சிறிது நேரம் யோசித்த நிரஞ்சன் தன் காரியதரசியை நோக்கி, “சரி அந்த சிங்கப்பூர் மீட்டிங்க போஸ்ட்போன் பண்ணிருங்க .

“சார் கண்டிப்பா நான் அன்னைக்கு காலேஜ் வந்திடுறேன்”

6

23 ஆம் தேதி காலை 9 மணி. அதே ஆடிடோரியத்தில் நிரஞ்சன் அமர்ந்திருந்தான், ஆனால் இப்போது சிறப்பு விருந்தினராக..

வழக்கமான வரவேற்ப்புரைகளுக்கும் உபசரிப்புகளுக்கும் மத்தியில் சிணுங்கியது முதல்வர் ஜேம்ஸின் செல் ஃபோன். அதை பல முறை அவர் தவிர்த்தார். திடீரென தனக்கு பரிச்சயமான அந்த நம்பரிலிருந்து அழைப்பு வந்ததும் சற்று சந்தோசமாகவே மொபைலில் பேசத் தொடங்கினார்.ஆனால் அவர் முகம் சற்றென்று மாறியது. கண்கள் கலங்கிற்று.

கண்களை துடைத்துக்கொண்டே மைக்கை நோக்கி விரைந்தார், ”இந்த சந்தோஷமான நிகழ்வுகளுக்கு மத்தியில் ஒரு சோகமான செய்தி. நம்ம கல்லூரியில் பணியாற்றிய முருகேசன் சார், சில வருஷத்துக்கு முன்னாடிதான் அமெரிக்காவுல செட்டிலானார். அவர் நேற்று காலையில மாரடைப்பால் காலமாயிட்டார். இப்பதான் அவர் சன் ஃபோன் பண்ணினார். முனைவர் முருகேசனுக்காக 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தும்படி நான் உங்க எல்லாரையும் கேட்டுக் கொள்கிறேன்”

இரண்டு நிமிடதிற்க்கு பின் மீண்டும் பேச்சை தொடர்ந்தார் ஜேம்ஸ். “முருகேசன் சார் ரொம்ப நல்ல மனிதன். அவரை பற்றி நான் பேசுவதை விட. அவரிடம் படித்த மிஸ்டர். நிரஞ்சன் பேசினா இன்னும் பொருத்தமா இருக்கும்.

“திரு. நிரஞ்சன், சார பற்றி சில வரிகள் பேசணும்னு நான் கேட்டுக் கொள்கிறேன்”

நிரஞ்சன் இதை எதிர் பார்க்கவில்லை. சற்றே திகைப்புடன் மைக் முன் வந்து நின்றார் நிரஞ்சன். முருகேசனை பற்றிய நினைவுகள் அவன் கண்களின் முன் ஓட தொடங்கிற்று

அவன் எதிர்பார்த்த சந்தர்ப்பம் எதிர்பாராத தருணத்தில்.

““இப்ப மட்டும் அந்த மைக் ஏன் கையில கிடைச்சா…அந்த முருகேசனோட வண்டவாளத்தெல்லாம்…….”இள வயது வசனங்கள் அவன் மூளையினுள் ஒத்திகை பார்த்தது.

நிரஞ்சன் பேச தொடங்கினான்.அரங்கமே நிசப்தமாயிற்று.

“முருகேசன் சார்…………………..”

சிறிது மௌனத்திற்க்கு பின், “முருகேசன் சார், ஒரு ஆசிரியராக பழகியதை விட, ஒரு தகப்பன் மாதிரிதான் எங்ககிட்ட பழகினார். பஞ்சுயாலிட்டி என்றால் அது முருகேசன் சார் தான்…………………………”

கூட்டம் முடிந்தவுடன் அனைவரும் கலைந்து சென்றனர். நிரஞ்சனும் அரங்கை விட்டு வெளியேறினான். அங்கு வடக்கு மூலையில் அமர்ந்திருந்த மாணவன் சந்துருவையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்…..

– பிப்ரவரி 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *