நமது நாட்டில் பலவிதமான விளக்கங்கள் அளிக்கப்பட்டு மிகவும் பாராட்டப்படக்கூடிய உறவுகளில் முதலில் இடம்பெறுபவள் தாய்தான் அப்புறம்தான் தந்தை. இது தான் பொதுவான உலக நியதியாகவும் இருக்கிறது. ஐரோப்பிய கலாச்சாரத்தில் வளர்த்த பிள்ளை பெரியவனானதும், வேலை தேடி எங்கேயாவது சென்றுவிடுவதால், அவன் தனியாகவே தங்கி, தனக்கென்று ஒரு குடும்பத்தை உண்டாக்கிக்கொள்கின்றான், அதில் பெற்றோருடைய பங்கு மிகவும் சொற்பமாக இருக்கும். தான் பெற்ற பிள்ளை எத்தனை தவறுகள் செய்தாலும், அவைகளை திரும்ப திரும்ப செய்தாலும், அனைத்தையும் மறந்து, கோபத்தை துறந்து, அரவணைத்துக்கொள்பவளே தாய். இக்குணம் வேறு எந்த உறவுக்கும் கிடையாது. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் – இங்கே இறைவனைப் பற்றி அறிவித்த முதல் இருவரில், முதலானவளாக தாய் விளங்குகின்றாள். பிரார்த்தனை செய்யப்போகும் பொழுதும் “தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை” என்று முதலில் தாயையே புகழ்ந்து, பிறகுதான் “தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” எனக் கூறப்பட்டுள்ளது.
தாயிற் சிறந்ததொரு கோயிலு மில்லை; தாய்சொல் துறந்தால் வாசக மில்லை” என்றும் தாயின் பெருமை பேசியவர் ஔவையார். உலக மக்களானாலும் சரி, மாக்களானாலும் சரி, இனப்பெருக்கத்திற்கு இன்றியமையாதவள் தாய். இறைவன் நாடினால் ஒழிய அவளின்றி அணுவும் பிறந்திருக்க முடியாது. அடுத்தடுத்த புனர் ஜன்மம் எடுத்து மீண்டும் மீண்டும் பிரசவிக்கும் தாயின் வேதனையை கேட்கச் சகிக்க முடியாமல் பட்டினத்தாரும் மறுபிறவு எடுக்க விரும்பவில்லையாம். ஒரு பிள்ளையை பெற்றெடுக்கும் பொழுது பலவிதமான வேதனைகளை தாயானவள் சகித்துக்கொள்கிறாள். தாயானபின்புதான் ஒரு பெண் முழுமைப்பெறுகிறாள். இல்லையேல் அவள் பலர் பேச்சுக்கும் ஏச்சுக்கும் ஆளாகிவிடுகின்றாள். ஒரு பெண் தாயான செய்தியைக்கேட்டு, அவள் குடும்பமே மகிழ்ச்சிப்பெருமை கொள்கிறது. குடும்பத்திற்கு ஒரு வாரிசை உண்டாக்குபவள் தாய். ‘வாயைக்கட்டினால் பிள்ளை’ என்று சிசுவுக்கு பால் கொடுக்கும் தாயை பயமுறுத்தி தன் இஷ்டப்படி எதையும் சாப்பிட்டுவிடாமல் கட்டுப்படுத்தி விடுகின்றனர். அப்படி தன் வாயைக்கட்டிக்கொண்டு வளர்த்த அந்த வாரிசின் முதல் பள்ளிக்கூடமே அவள்தான். உலகத்தில் அனைத்து மதங்களுமே தாய்க்கு முதலிடம் தருகின்றன. ஹிந்து மதத்தவரால், தாய் தெய்வமாக வணங்கப்படுகிறாள். கிறிஸ்தவர்கள் ஏசுநாதரின் தாயையும் தெய்வமாக மதிக்கின்றனர். ஒரு நபர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், தன் மீது யாருக்கு முதலில் உரிமை இருக்கிறது என்பதை விசாரித்த போது, “முதல் உரிமை உன் தாய்க்கு”, உள்ளது என்றார். இரண்டாவதாக யாருக்குள்ளது என்று கேட்டபோது, “உன் தாய்க்கு” என்றார், மூன்றாவது முறையும் “உன் தாய்க்கு” என்றார். நன்காவது முறை, ‘உன் தந்தைக்கு…” என்றார். அதாவது, முதல் மூன்று பரிசுகளான தங்கம், வெள்ளி, தாமிரம் தாய்க்கே செல்கின்றன! நான்காவதாக ஒரு ஆறுதல் பரிசு தந்தைக்குக் கொடுக்கப்படுகிறது!
ஒரு பிள்ளையின் செய்கைகள் அவன் வளர்க்கப்பட்ட விதத்தை தெளிவாக்குகின்றன. ஆகவே, “நீ யார் பெற்ற பிள்ளையோ, நல்லா இரு…” என்று நல்ல செயல் புரியும் பிள்ளையின் தாய்க்கு நல்ல வார்த்தைகளின் சன்மானமும், “உன்னை எவ பெத்தாளோ…” என்ற அருவருப்பான வார்த்தைகளால் கெட்ட செயல் புரியும் பிள்ளையின் தாய்க்கு அவமானமும் ஏற்படுகிறது. இப்பொழுது, இவ்விருச் சூழ்நிலைகளில் வளர்க்கப்பட்ட இரு குழந்தைகளின் சரித்திரப்பகுதியை ஆராய்வோம்.
ஒரு நகரத்தில் ஏழ்மையில் வாடும் ஒரு குடும்பத்தில் பிறந்து தந்தையைப் பறி கொடுத்து அனாதையாக வளர்க்கப்பட்டான் விதவைத்தாய் சாந்தியின் ஒரே பையன் ராஜா. சாந்தியின் குடியிருப்பு மழை நீர் ஒழுகும் தென்னை ஓலைக் குடிசையாக இருந்தது. படுக்கும் தரையோ சிமெண்டு இல்லாமல் களிமண்ணால் பூசப்பட்டு அதன் மீது செம்மண் அலங்கரிக்கப்பட்டிருந்தது. குப்பையில் வீசச் சொன்ன ஒரு பழைய கந்தலான பாயை, சாந்தி தான் வேலை செய்து வந்த வீட்டிலிருந்து கொண்டு வந்து விரித்திருந்தாள். அடுத்த தெருவில் குடியிருந்த ஒரு ஆச்சாரி, பார்சல் பெட்டிகளின் பலகைகளை ஜோடித்து, பழைய தாழ்பாள் கொண்டிகளை பொருத்தி, பேருக்கு ஒரு வாசக்கதவு என்று செய்து கொடுத்திருந்தார், அது நாய்கள் வீட்டிற்குள் பிரவேசிப்பதை தடுத்ததே தவிர, பூனையையோ, எலியையோ தடுக்கவில்லை. அப்படி அவை உள்ளே வந்தாலும், பூனைக்கு வேண்டுமானால், எலி கிடைத்து விடும் ஆனால், எலிக்கோ அதன் விருப்பப்பட்ட எந்த பொருளும் உண்பதற்கில்லை. கரடு முரடாக களிகண் பூசப்பட்ட சுவறுகள் பல்லாண்டுகளுக்கு முன் வெள்ளையடிக்கப்பட்டதாக காட்சியளித்தன. அங்காங்கே சுவற்றில் இருந்த ஓட்டைகள் சுண்ணாம்பு கலவையுடன் அடைக்கப்பட்டு, ஒரு புது டிசைன் கேன்வாஸ் மீது வரைந்தது போல் இருந்தது. அறையின் ஒரு மூலையில் கால் உடைந்த பழைய மேஜை ஒன்றும், அதன் கீழ் ஒரு தகரப்பெட்டியும் அதில் சாந்தியின் துணிமணிகளும், மகன் ராஜாவின் சில சட்டைகளும், காற்சட்டைகளும் இருந்தன.
மேஜையின் மீது சமையல் செய்யும் பாத்திரங்களும், அரிசி டின், மசாலா டப்பாக்கள் சிலவும் இருந்தன. கூரையின் ஓட்டைகள் கதிரவனின் கிரணங்களை வீட்டிற்குள் பாய்ச்சி பகலில் போதுமான வெளிச்சத்தை உண்டாக்கிக்கொண்டிருந்தன. இன்னொரு மூலையில் ஓர் அடுப்பும், சில விறகு சுள்ளிகளும், அத்துடன், தேங்காய் உரித்து காய்ந்த மட்டைகளும் இருந்தன. சுவற்றின் ஒரு பக்கத்தில் காலெண்டரும், அதன் பக்கத்தில் முகம் பார்க்க ஒரு சிறு கண்ணாடியும், கண்ணாடி பிரேம் இடைவெளியில் ஒரு நீண்ட சீப்பும் பொருத்தப்பட்டிருந்தன. மொத்தத்தில் பல காலமாக ஏழ்மையில் வாடும் ஒரு வீடாக இருந்தது. உற்றார் உறவினர், வேறு ஏதோ ஒரு ஊரில் ஏழையாக இருந்ததாலும் அவர்களுக்கு பாரமாக இருக்க சாந்தியின் மனசாட்சி இடம் தரவில்லை. விதவை கோலத்திலிருந்தவளை கை கொடுக்க யாரும் முன்வரவில்லை மாறாக, அவள் தனிமையின் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளத்தான் சமுதாயம் காத்திருந்தது. ஆகவே, ஊரைவிட்டே நகரத்தில் குடியிருக்க வந்து, தன் பழைய சினேகிதியின் மூலம் ஒரு குப்பை மேட்டில் குடிசை போடும் இடம் கிடைத்ததும், தனக்கென்று ஒரு இடம் என அமைத்து, பிள்ளையுடன் வாழ்ந்து வந்தாள். சிறிது தூரத்தில் இருக்கும் பல மாடி கட்டிடத்தில் இரண்டு வீடுகளில் காலியிலும் மாலையிலும் வேலை செய்ய ஒப்புக்கொண்டாள். கிடைத்த சிறிது பணத்தில், தன் குழந்தை ராஜாவை நன்றாக பேணி வளர்த்து வந்தாள். வேலைக்கு செல்லும் பொழுது நான்கு வயதான ராஜாவையும் உடன் அழைத்து சென்று விடுவாள். அவள் வேலை செய்யும் வீட்டில் வேலை முடியும் வரை அவன் சும்மா அமர்ந்திருப்பான். வீட்டுக்காரியோ அவனை தன் பிள்ளையுடன் சேர அனுமதிக்க மாட்டாள். ஒரு நாள் வீட்டுக்காரி, காலையில் பரோட்டா ரொட்டி சுட்டுக்கொண்டிருந்தாள். தூரத்தில் அமர்ந்து ராஜா இதைப் பார்த்துக்கொண்டிருந்தான். ஒரு பரோட்டா ரொட்டி தனது பிள்ளைக்கும் ஒரு பரோட்டா ராஜாவுக்கும் கொடுத்தாள். வீட்டுக்காரியின் பிள்ளை தனக்கு முட்டை வேண்டும் என அடம் பிடித்தது. சற்று நேரம் விரட்டினாலும் வீட்டுக்காரி, தனது பிள்ளைக்கு ஒரு முட்டையைப் பொறித்துக்கொடுத்தாள். அவனோ அதையும் சாப்பிடாமல் அடம் பிடித்ததனால், பிள்ளையை விரட்டிக்கொண்டிருந்தாள், பிள்ளையை பிடித்து ரொட்டியையும் ஆம்லெட்டையும் பலவந்தமாக ஊட்டிக்கொண்டிருந்தாள். இதைக்கண்ட ராஜாவும், தன் தாயிடம், “அம்மா, எனக்கும் முட்டை வேண்டும்….” எனக் கேட்டான். சாந்தி வாய் திறக்கும் முன், அந்த வீட்டுக்காரி எஜமான்னி துள்ளி குதித்தாள், “ உம்ம்ம்ம்…. மூஞ்சிய பாரு மூஞ்சி…. ஒனக்கும் முட்டை கேக்கதாக்கும்… ஒன் அம்மா செய்கிற வேலைக்கு ஒனக்கு முட்டை ஒரு கேடா? கம்முண்ணு கொடுத்த ரொட்டியை சாப்பிட்டு தட்டு அம்மா கிட்டே குடு….” பின்னர் முணுமுணுத்தாள் “….இவங்களுக்கெல்லாம் ரொட்டி குடுத்ததே தப்பாப்போச்சு…” பிள்ளை ஏதாவது சாப்பிட்டால், இவனுக்குக் கண்ணு ரெண்டும் பிதுக்கிட்டு வருது…” ராஜாவுக்கு பயத்தால் அழுகையே வந்துவிட்டது. அம்மாவையும், வீட்டுக்காரி எஜமானியையும் மாறி மாறி கண்களில் கண்ணீர் மல்க பார்த்துக்கொண்டிருந்தான். எஜமானியம்மாவின் கண்களில் கனல் பறந்துகொண்டிருந்தது. தன் தாய் சாந்தியோ சாந்தமாக தலை குனிந்து பாத்திரங்களை தேய்த்துக்கொண்டிருந்தாள். பையன் விசும்பும் சத்தம் கேட்டு தாய் சாந்தி ராஜாவின் அருகில் சென்றாள். “அழாதே ராஜா நாம் வீட்டுக்குப்போனவுடன் உனக்கு ஒரு முட்டை பொறித்துத் தருகிறேன். அண்ணனுக்கு உடல் நலமில்லாததால் அக்கா அவனுக்கு முட்டை பொறித்துக் கொடுத்தாள், ஆகவே அழாதே, அம்மா நான் உனக்கு முட்டை பொறித்துத் தருவேன்.
சாந்தி வாங்கும் சம்பளம் வேலையில்லாத நேரத்தில் ஏற்பட்ட கடனுக்கும், அந்த மண் சுவர் குடிசைக் கடனுக்கும், ரசம் அப்பளத்தோடு இரு வேளை சாப்பாட்டிற்கும் சரியாக இருந்தது. பையனுக்கு ஒரு வாழைப்பழமோ அல்லது சாப்பாட்டுடன் தொட்டுக்க ஒரு முட்டை ஆம்லெட் செய்து தரவோ அவளால் இயலவில்லை. மாலை நேர வேலை பார்க்கும் வீட்டில் மாலையில் டீ வடித்து குப்பையில் வீசவிருக்கும் தேயிலையை பத்திரமாக ஒரு பிலாஸ்டிக் பையில் கட்டி தன் வீட்டிற்கு எடுத்து வருவாள் சாந்தி. அதை 7 மணிக்கு அல்லது, மறு நாள் காலையிலோ சிறிது நீர் ஊற்றி மறுபடியும் வேக வேத்து, வரும் தேனீரை, பாலில்லாமலேயே சிறிது சீனியிட்டு இருவரும் அருந்துவர். இது தான் அவர்களுடைய தேனீராக இருந்தது. ராஜாவுக்கு பால் போட்ட டீ எப்படியிருக்கும் என்பதே தெரியாது! வேலைக்குப்போகும் வீடுகளில் குழந்தைகள் படிப்பதை ஆர்வத்துடன் கவனிப்பான் ராஜா. அவர்களுடைய, பாடங்களைக் கேட்டே தானும் மனப்பாடம் செய்து கொண்டிருந்தான். வீட்டிற்கு திரும்பியவுடன், அவன் கேட்ட பாடங்களை அம்மாவிடம் ஒப்பித்துக்காட்டுவான். அதை அறிந்த அக்கம் பக்கத்தவர், ராஜாவுக்கு படிக்க ஆசையும், மிகுந்த ஞாபக சக்தியும் இருப்பதை கண்டு சாந்தியிடம் அவனை பள்ளியில் சேர்க்கும்படி வற்புறுத்தி வந்தனர். சாந்திக்கும் ராஜாவின் அறிவாற்றல் மீது நம்பிக்கையிருந்தது. ஆகவே, எப்படியும் அவனை படிக்க வைக்கவேண்டும் என தீர்மானித்திருந்தாள். பையன் முட்டை கேட்கின்றானே, என்ன செய்வது என்று சிறிது நேரம் யோசித்து ஒரு முடிவிற்கு வந்தாள் சாந்தி, மாலையில் வேலை முடித்து வீடு திரும்பும் பொழுது நேராக கடைக்குச்சென்று, ராஜாவுக்காக ஒரு கோழி முட்டையை வாங்கினாள், அத்துடன் சிறிது எண்ணெய்யையும் வாங்கிக்கொண்டாள். வீட்டிற்கு வந்ததும், ராஜா முட்டை ஞாபகத்திலேயே இருக்கின்றான் என்பதை சாந்தி கவனித்தாள். அவனிடம் இதமாக பேசி, அடுப்பில் வாணலியை வைத்து, கொண்டுவந்த எண்ணெய்யை ஊற்றினாள், சிறிது நேரத்தில் எண்ணெய்யும் நன்றாக காய்ந்த பிறது, முட்டையை உடைத்து எண்ணெய்யில் வறுத்தாள். முட்டை சரியாக பொறிந்தவுடன் அதை இறக்கி வைத்து, ஒரு பிலேட்டில் வைத்து ராஜாவிடம் நீட்டினாள். அவள் கண்கள் கலங்கின. ராஜாவின் இந்த அற்பமான ஆசையையும் அவளால், பூர்த்தி செய்ய இயலவில்லையே என உள்ளுக்குள் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தாள். ராஜாவோ மன மகிழ்ச்சியுடன் தாயிடமிருந்து ஆம்லெட் பிலேட்டை பெற்று, சூடு ஆறியவுடன் ஆம்லெட்டில் சிறிது பிய்த்து உண்ண ஆரம்பித்தான். அப்பொழுது அவனுடைய முக ஜாடையை கண்ட சாந்திக்குக் கதறி அழவேண்டும் போலிருந்தது. ராஜா, ஆம்லெட் துண்டை மென்றவுடன் பலவிதமாக வாயை அசைத்து, நாக்கை வெளியே நீட்டி, குமட்டிக்கொண்டிருந்தான். “அம்மா…. என்னம்மா இது, வெறும் கசப்பு…?!! என்னால் சாப்பிட முடியவில்லையே…” சாந்தி சுதாரித்துக்கொண்டு கூறினாள், “நாந்தான் சொன்னேனே, அண்ணனுக்கு உடல் நலம் சரியில்லாததால், அவன் ஆம்லெட் சாப்பிட்டான், அக்கா எப்படி அவனை மிரட்டி, விரட்டி சாப்பிட வைத்தாள் என்பதை நீ கவனிக்கவில்லையா மகனே? ஆகவேதான் நான் ஆம்லெட் செய்வதில்லை, இது கசக்கும்.” சாந்தி முட்டை சுட்ட எண்ணெய் வேப்ப எண்ணெய்யானதால் ராஜாவுக்கு முட்டை மீது ஒரு வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. “அம்மா எனக்கு வேண்டாம்மா, இனி முட்டையே எனக்கு வேண்டாம்மா…. இனி அதை நான் கேட்கவே மாட்டேன்…”
சாந்தியின் இந்த துணிச்சலான செயல், மகனின் இந்த திடமான தீர்ப்பு, ராஜாவுக்கு அவள் கொடுத்ததை உண்ணவும், உடுத்திக்கொள்ளவும், சொன்னதைச்செய்யவும் பெரிதாக உதவின. சாந்தியோ, சாப்பாட்டில் பணத்தை வீணடிக்காமல், தன் வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி, சிறிது சிறிதாக சேகரித்து, ராஜாவை படிக்க வைத்தாள். பள்ளியில் மற்ற பிள்ளைகள் முட்டையை உட்கொண்டாலும், அவர்களை உடல் நலமற்றவராக நினைத்துக்கொண்டு முட்டையை அறவே வெறுத்து வந்தான் ராஜா.
இது இப்படியிருக்க, அடுத்த ஒரு குடிசைப்பகுதியில், மற்றொரு தாயும் மகனும் தனித்தே வாழ்ந்து வந்தன. அடிக்கடி சண்டை, சச்சரவு, பிரச்சினைகள், அடிதடி, களவு, கண்டவரை கண்டபடி அவமதிப்பது, ஏசுவது, ஒழுங்கு முறையின்றி ஒரு பையன் வளர்ந்து வந்தான். தாயிடம் சண்டையிடுவது, வீட்டை விட்டு வெளியே பலநாள் தங்கிவிடுவது, மற்ற ஊதாரி பசங்களோடு சுற்றுவது போன்ற அத்தனை கெட்ட குணங்களுடன், தாயின் பயமின்றியும் அவளுடைய அரவணைப்பின்றியும் திரிந்து வந்தான் அந்த பையன். ஒரு நாள், அடுத்த வீட்டுக்கோழி வீட்டுக்குப் பின்புறம் தனக்கு வழக்கமான குப்பை மேட்டில் ஒரு முட்டையிட்டது. அதைக்கண்டுகொண்ட அந்த பையன், கோழியை விரட்டிவிட்டு, கோழிக்குச் சொந்தக்காரர் பாராமல் முட்டையை தன் வீட்டிற்கு கொண்டுவந்தான். அதை மறைக்க முயற்சிக்கும் பொழுது, அவனுடைய தாய் கண்டுகொள்ளவே, சிரித்து மழுப்பப்பார்த்தான். தாயோ விட்ட பாடில்லை, தன் பையனை அன்பாக அருகில் அழைத்து, தலையக் கோதி விஷயத்தை கேட்டு, அவன் கொண்டு வந்தது அடுத்த வீட்டுக் கோழியிட்ட முட்டை என்றதும், அவளுக்கு நாக்கில் நீர் வடிந்தது. பையனை அப்படியே வாரியணைத்து, சபாஷ் என ஊக்கமளிக்கும்படி, சற்று புன்னகையுடன் அம்முட்டையை பொறித்து இருவரும் ருசி பார்த்துவிட்டனர். அடுத்த வீட்டுக்காரரோ, குப்பை மேட்டில் கோழி முட்டையை தேடித் தேடி சளைத்து விட்டார். பையனுக்கும் தினமும் இதே வேலையாய் இருந்தது, அவன் மற்ற கோழிகள் முட்டையிடும் இடத்தையும் அறிந்து, திறமையுடன், முட்டைகளை அபேஸ் செய்து விடுவான். சில நாட்களாக முட்டையிடாத யாரோ வளர்த்த ஒரு கோழி ஒரு நாள் அவன் கைக்கு அகப்பட்டுவிட்டது. அதை வீட்டிற்கு கொண்டு வந்ததும், தாய்க்கு சந்தோஷம் பொறுக்கவில்லை, அதை வெட்டி பொறித்து விட்டனர். தேடுபவர், தேடிக்கொண்டேயிருந்தார்.
நேற்று முட்டை, இன்று கோழி, மறுநாள் வாத்து, என்று நாட்கள் நகர, அவன் திருடும் பொருட்களின் பருமனும் அதிகரித்துக்கொண்டே போயிற்று. தாயும் அவனுக்கு சமமாக அவனுடைய செயல்களுக்கு ஆதரவாக இருந்து, உழைப்பில்லாமல், தன் மகனின் திருட்டு சம்பாத்தியத்தை அனுபவிக்க தன்னை பழக்கிக்கொண்டாள்.
மறு முனையில் சாந்தி, ராஜாவை பள்ளிபடிப்பு முடிந்ததும் காலேஜில் சேர்த்து விட்டாள், தன் குடிசையில் எண்ணெய்ப் பற்றாக்குறையால் சில மணிநேரம் மட்டும் எரிந்த மண்ணெண்ணெய் விளக்கு, ராஜாவின் படிப்பிற்கு போதவில்லை. குடிசைக்கு வெளியிலும் லைட் இல்லை. ஆகவே அவனுக்கு படிக்க சிரமமாக இருந்தது. ஆகவே, வெகு தூரத்தில் இருக்கும் ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் அவனை சேர்த்து, ஹாஸ்டலில் தங்க வைத்து, அவனுக்கு வேண்டியதெல்லாம் செய்து கொடுத்தாள் சாந்தி. ராஜாவும் நேரத்தை வீணாக்காமல், தன் கடமையறிந்து, தாயின் தியாகங்களை நினைவில்கொண்டு சிறந்த முறையில் படிக்கலானான்.
ராஜா முட்டையோ ஆம்லெட்டோ உண்ணாமலிருப்பதை அறிந்த அவனுடைய நண்பர்களுக்கு வேதனையாக இருந்தது. இவன் மாமிசம், கோழி, மீன் போன்ற நாந்-வேஜ் உணவு உட்கொள்கின்றான், ஆனால், முட்டையை மட்டும் வெறுக்கின்றானே! அது ஏன்? அவர்களுக்குள்ளேயே ஒரு வாக்குவாதம் உண்டாயிற்று. ராஜாவை அழைத்து விவரம் கேட்டனர். முட்டை தனக்கு பிடிக்கவில்ல என்றும் அது கசப்பானது என்றும் பதிலளித்தான். எவ்வளவோ கூறியும் அதை அவன் கேட்ட பாடில்லை. அவனுடைய நண்பர்களும் விட்டபாடில்லை. ஒரு நாள், ஸ்பெஷல் என்று கூறி, நெய்யில் முட்டைய பொறிக்கச் செய்து, ஹாஸ்டல் நண்பர்கள், ராஜாவின் கைகளை இருக்கப்பிடித்து, அவனுக்காகவே பொறித்த ஆம்லெட்டை அவன் வாயில் திணித்தனர். இதை சற்றும் எதிர்பாராத ராஜா, தற்செயலாக ஆம்லெட்டை ருசி பார்த்தான். அவன் முகம் மலர்ந்தது.
நடந்த சம்பவத்தை தன் தாய்க்கு எழுதி, ஆச்சரியத்தை வெளிப்படுத்தினான். பொறியியல் பட்டப்படிப்பு முடிந்து, தனக்கு ஒரு பெரிய கம்பெனினில் வேலை வாய்ப்பும் கிட்டியிருப்பதை அறிவித்தவன், முட்டை எவ்வளவு அருமையாக உள்ளது என்பதை விளக்கினான். அவன் அடுத்தமுறை வீட்டிற்கு வரும்பொழுது, தானே முட்டையை பொறித்து அம்மாவுக்கு ஊட்டுவதாக ஆர்வத்துடன் எழுதியிருந்தான். இச்செய்திகளை கேட்ட தாய்க்கு ஹோ… என்று அழவேண்டும் போலிருந்தது. மிக துக்கத்துடன், தன் மகனுக்கு அநியாயம் செய்து விட்டேனோ என கூறி கதறி அழுதாள். அவன் வருகைக்காக காத்திருந்தாள்.
அடுத்த கோடியில், திருடனாக வளர்ந்து வந்தவன், திருடிக்கொண்டேயிருந்தான். அவனும் திருந்தவில்லை, அவனுடைய தாயும் அவனை திருத்த முன்வரவில்லை. சொல்லப்போனால், அவனுக்கு வேண்டிய ஆதரவை அளித்து திருட்டுப் பொருள்களை மகனுடன் சேர்ந்து அனுபவித்து வந்தாள். ஒரு நாள் ஒரு வீட்டில் திருடிக்கொண்டிருக்கும் பொழுது வீட்டார் எழுந்து கூக்குரலிடவே, அக்கம் பக்கத்தார் அவனை சுற்றி வளைத்து பிடித்து விட்டனர். தர்ம அடி நிறைய கிடைத்தது. போலிஸ் இடம் ஒப்படைக்கப்பட்டான். பல மாதங்கள் கழித்து விடுதலைப் பெற்றான். ஜெயிலில் இருக்கும் பொழுது, அவனை போலிஸிடம் ஒப்படைத்தவனை நன்கு அடையாளம் வைத்துக்கொண்டான். விடுதலைப் பெற்றதும் நேராக தாயை சந்தித்தான். அவளோ, சுகமான வாழ்வில் இருந்தாள். தன் பையனைக் கண்டதும் சந்தோஷப்பாட்டாள். அவனை ஜெயிலுக்கு அனுப்பிய பின் சிலர் எவ்வாறு அவளை திட்டி தீர்த்தனர் என்பதைச் சொல்லி அவர்களைப் பழி வாங்கும் படி தன் மகனை ஏவி விட்டாள். கோபத்தில் அனல் பறக்க கிளம்பிய அவன் நேராக சென்று தன்னை ஜெயிலுக்கு அனுப்பியவனையும் தன் தாயிடம் கலாட்டா செய்தவர்களின் இருவரையும் தீர்த்துக்கட்டினான். விஷயம் அறிந்த போலிசார் அவனைச் சுற்றி வளைத்தனர். மீண்டும் சிறை, வழக்கு, தீர்ப்பு என நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. கடைசியில், அவன் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டு அவனுக்கு தூக்கு தண்டனை அளிக்கும்படி தீர்ப்பு கூறப்பட்டது….
அங்கே குடிசையில் சாந்தி, தன் மகன் வருகையை விழிமேல் விழி வைத்து காத்துக்கொண்டிருந்தாள். காலியிலிருந்து மதியம் வரை பல யுகங்கள் கழிந்து கொண்டிருப்பதாக உணர்ந்தாள். மகனுக்கு எப்படி சமாதானம் சொல்வதென்று வருத்தமாய் இருந்தாள். அவனுக்காக முட்டைய நெய்யில் பொறித்து, முட்டை குழம்பு செய்து, முட்டை பெப்பர் மசாலா தயார் செய்து வைத்திருந்தாள். மதியம் சாப்பாட்டு வேளை, பையனும் ஆசையுடன் அம்மாவைக்காண வேகமாக வந்துக்கொண்டிருந்தான். வாசலுக்கு வந்ததும், சாந்தி பையன் வளர்ந்து விட்டானே என்றும் பாராமல், கட்டியணைத்து கண்ணீர் கொட்டினாள். அம்மாவைத் தேற்றி அவளுடைய அரவணைப்பிலேயே மகன் மெய் மறந்தான். சாந்தி அவனுக்காக முட்டை தினுசுகளை தயார் செய்து வைத்திருந்ததை ருசி பார்த்த ராஜா, குழப்பத்துடன் தாயை நோக்கினான். அவன் மனதில் வீசிக்கொண்டிருக்கும் புயலில் உள்ள கேள்விகளும் அவன் அறிந்துகொள்ள துடிக்கும் உண்மையையும் சாந்தி ஒரு கண நேரத்தில் உணர்ந்தாள். “முதலில் வயிறார சாப்பிடு மவனே” உன் குழப்பத்தை நான் நிவர்த்தி செய்கிறேன்..” என்றாள். அவனும் தலை அசைத்து, சாப்பாட்டை முடித்தான். அவன் படிப்பில் தங்கப்பதக்கம் பெற்றதையும், ஒரு வெளிநாட்டுக் கம்பெனியில் அவனுக்கு நல்ல சம்பளத்தில் வேலையும், இருக்க வீடும் கொடுத்திருப்பதாக தெரிவித்தான். இனி இந்தக் குப்பை மேட்டின் குடிசையில் வாழ வேண்டியிருக்காது, உன்னை நான் அடுத்த மாதமே என்னுடன் அழைத்துக் கொள்கிறேன் அம்மா என்று கூறி மீண்டும் தாயின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். சற்று நேரம் மௌனம் சாதித்த சாந்தி, கசப்பு முட்டையின் இரகசியத்தை வெளிப்படுத்தினாள். “நான் வேலைப் பார்த்த வீட்டுக்காரி அம்மா தன் பிள்ளைக்கு ஆம்லெட் செய்து கொடுத்தாள், அதைக்கண்ட நீயும் உனக்கும் முட்டை வேண்டும் என்று அடம் பிடித்ததக் கண்ட அவள், உன்னை பலவிதமாக திட்டினாள். உன்னை சமாதானப்படுத்தி, நான் உனக்கு ஒரு முட்டையை வேப்ப எண்ணெய்யில் பொறித்துக்கொடுத்தேன். நான் முட்டையோ, மாமிசமோ சமைத்து சாப்பிட்டு உனக்கும் ஊட்டி வளர்த்தியிருந்தால், உன்னை ஒரு நல்ல பள்ளிக்கூடத்தில் சேர்த்து படிக்கவைத்து, இன்நிலைக்கு ஆளாக்கியிருக்க முடிந்திருக்காது மவனே… என்னை மன்னித்து விடு, நான் உனக்கு செய்த காரியம் அப்பொழுது எனக்கு சரியாகப்பட்டதுதான் அதற்குக் காரணம்….” என்றாள். தாயின் சிறந்த வளர்ப்பை அறிந்த ராஜா, இருவரும் பட்ட கஷ்டங்களைக் கருத்தில் கொண்டு அவளுடைய தியாகங்களைத்தான் எண்ணிப்பார்த்தானே தவிர, சாப்பாட்டு விஷயங்கள் அவனுக்கு துச்சமாக காட்சியளித்தன. தாயும் மகனும் பல செய்திகளை பரிமாறிக்கொண்டபின், தனக்கு கிடைத்த வேலையை மேற்கொள்ள தாயிடமிருந்து விடைபெற்றுச் சென்றான் ராஜா.
மறுபக்கம், தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட பையனுக்கு தண்டணை நாள் வந்ததும், அவனுடைய கடைசி ஆசையைக் கேட்டார் ஜெயிலர். அவனோ தன் தாயை நேரில் பார்த்து அவளை அரவணைக்கவேண்டும் என்றான். அவனுடை ஆசையை நிறைவேற்ற தாய் ஜெயிலுக்குள் அழைக்கப்பட்டாள். தாயை அரவணைத்த மகன் கண் கலங்கினான். மகனே என்று ஆசையாய் அழைத்த அம்மாவின் நாக்கில் முத்தமிட ஆசைப்பட்டன் அவன். உணர்ச்சிவசப்பட்ட தாயோ, அவள் நாக்கை நீட்டினான். சிறிதும் எதிர்பாராத விதத்தில் தாயின் நாக்கை கடித்துப் துப்பினான் மகன். “இந்த நாக்கு கண்ட ருசி தான் என்னை இன்று தூக்கு மேடைக்கு அனுப்பிவிட்டது…..நான் திருடிக்கொண்டு வந்த முட்டையை நீ பொறித்து உண்ணாமல், என்னை அடித்து, அறிவுரைக்கூறி ஒழுங்காக வளர்த்திருந்தால், இந்த நிலைக்கு நான் ஆளாகியிருக்கவே மாட்டேன்…” என தாயை நொந்தினான். இதைக்கண்ட சிறை அதிராகிகள் பதற்றம் அடைந்து, தாயை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அவனுக்கு அளித்த தூக்கு தண்டனை நிறைவெற்றப்பட்டது.
ராஜா, தன் வேலையில் அமர்ந்து, தனக்காக ஒதுக்கப்பட்ட வீட்டில் தினமும் தேவைப்படும் அத்தனை உபகரணங்களையும் பொருத்தி அம்மாவையும் தன்னுடன் இருக்க அழைத்துக்கொண்டான்.
“நாம் விதப்பதையே அறுவடை செய்வோம்” என்பது உறுதி. ஆகவே பிள்ளைகளின் பிஞ்சு மனதில் பதிய வைக்கும் எண்ணங்களே அவர்களுடைய எதிர்காலத்தை நிணயிக்கும் என்பதில் சந்தேகமில்லை.