கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 16, 2013
பார்வையிட்டோர்: 17,785 
 
 

வெள்ளவத்தையிலுள்ள அந்த கல்யாண சந்தைக்கு சாரு வருவது இது முதற் தடவையல்ல ஏற்கனவெ பல எல்லைகள் கடந்த ஒரு யுகமாக வந்து போய்க்கொண்டிருப்பதாக அவளால் நினைவு கூறமுடிந்தாலும், மாறுபட்ட கோணத்தில்,முற்றிலும் நிலையிழந்து விட்ட வெறும் நிழல்கோலமாய், இன்று அவளின் இந்தப்பிரவேசம் அடிக்கடி திறந்து மூடப்படுகின்ற வாசற் கதவருகே சன்னமாய் நிலைகொண்டு நிலைத்திருந்தது.

அவள் அப்படி வந்து நிற்க நேர்ந்து வெகு நேரமாகிறது. முண்றாவது மாடி வரை, கால் முட்டி வலிக்க ஏறி வந்ததால் மூச்சு வேறு வாங்கியது. வாழ்வில் தவிர்க்க முடியாமல் நேர்ந்து விடுகின்ற இந்த உடல் ரீதியான வருத்தங்களும் வலிகளும் பொருட்படுத்தாத உளம் சார்ந்த கடமை வேள்வி ஒன்றிலேயே கண்ணும் கருத்தாக இருக்கின்ற அவளுக்கு உணர்ச்சிபூர்வமான அறிவின் ஆளுமைக்குட்பட்ட தெளிவான வாழ்வின் சித்தாந்தங்களே மிக அதிகமாக பிடிபடும் அதனால் எந்தப்பின்னடைவிலும் சிக்காத தானே தனித்து நின்று பிரகாசிப்பது போல அவளுள் பிறர் கண்ணுக்குப் பிடிபடாத ஆத்ம தரிசனமான ஒரு விழிப்பு நிலையே இருந்த போதிலும் அதை மறந்துவிட்டு சராசரிப் பெண் போலவே அவளின் வெளிப் பிரக்ஞையாய் வருகின்ற இந்த வாழ்வியல் அநுபவங்களையே ஒரு கர்ம யோகமாயவள் ஏற்று வாழ்கின்ற நிலையில்தான் கடைசிப் பெண்ணுக்கு வரன் தேடி மீண்டும் அவள் இங்கு வர நேர்ந்திருந்தது இதற்கு முன்னும் பல முறை அங்கு வந்து போன் ஞாபகம் இன்னும் மறக்கவில்லை. அக்கல்யான சந்தையில கனகச்சிதமாக கடை விரித்து வியாபாரம் பண்ணிப் பணம் கறக்கும் புரோக்கர் சதாசிவத்தோடு அவளுக்கு நெடுங்காலமாய் பழக்கம்.அவர் ஏனைய புரோக்கர் போலன்றி முழுவது மாறுபட்ட தோரணையில் களை கட்டி நிற்கும் அந்த கல்யாண காட்சி அறைக்கு ஏற்ப அவளும் ஒரு கம்பீரமான கனவான் மாதிரியே ஆடம்பர உடையலங்காரங்களுடன் சதா சிரித்த முகத்தோடு பளிச்சென்று தோன்றுவார். சிரித்து சிரித்து நிறைய பேசுவார்.அவரின் அறை சின்னதாக இருந்தாலும் சுவர் அலுமாரிகளில் தரம் பிரிக்கப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் வர்ண வர்ணப் பைல் அடுக்குகளோடு ஒரு கலைக்கூடம் மாதிரியே அவரின் கை வண்ணத்தால் மெருகூட்டப்பட்ட அழகோடு சோபை கொண்டு நிற்பதாய்படும் அதனோடு ஒட்டாத வெறும் நிழல் போலச் சாரு இன்னும் வாசலிலேயே நிலை தளர்ந்து நின்றுகொண்டிருந்தாள். அவள் அப்படி வந்து நிற்பதைக் கூடக் கவனிக்க மறந்து அவர் போனில் யாருடனோ வெகு சுவாரஸ்யமாக கதைதுக்கொண்டிருந்தார்.அப்படிக்கதைக்காவிட்டால் பணம் மீது கொண்ட குறியே தவறிப் போகும். அவருக்கு அது ஒன்றே இலக்கு. அப்படியிருக்கும் வரை மற்றவையெல்லாம் வெறும் நிழல்களே. எவருக்கும் வாழ்க்கை கொடுபதற்காக அவர் இதை நடத்தவில்லை..

போன் பேச்சு முடிந்த பிறகுதான் அவரின் கவனம் சாரு மீது திரும்பியது.

என்ன அன்ரி நிக்கிறியள் வந்து கன நேரமே, என்று கேட்டவர் யாரோ ஒரு இளம்பெண்ணைத் திரும்பி பார்த்துக் குழைந்து கூறினார்.

“தங்கச்சி உந்தப் பைல்களை கீழே வைக்கிறியளே, இந்த அன்ரி இருக்க வேணும்”
அவளும் பைல் கவனம் கலைந்து அப்படியே செய்து விட்டுச் சாருவை நிமிர்ந்துச் சிரித்தவாறு கூறினாள் “வந்து இருங்கோ அன்ரி”

அவள் அப்படிக் கன்னம் குழிவிழச் சிரிக்கிற போது மிகவும் அழகான ஒரு தேவதை போல் தோன்றினாள் அதைக் கண்குளிரப் பார்த்தவாறெ சாரு அவசரமாக நடந்து வந்து அவளருகே அமர்ந்து கொண்டாள். இனிப்புரோக்கர் அவளுக்கான் பைல்களை எடுத்துக்கொடுத்தால்தான் அவளும் பைல்களினுள் தலை நுழைத்து எதையும் தேடலாம்.

இந்த தேடல் அவசியமானது மட்டுமல்ல, வழ்வின் கடைசி வழிக்கும் விதி எழுதிய கணக்காய் அது முடிவாகும். அது பிழைத்தால் எல்லாமே பிழைக்கும் உயிர் விட்ட வாழ்க்கைதான். எப்படியிருந்தால் என்ன வாழ்க்கையைத்தேடுவோம் என்ற நிலைதான். சாரு அப்போது கூட விழித்துக்கொண்டுதானிருந்தாள். நெருப்பில் நிற்பது போல எது சுட்டாலும் இந்த விழிப்பு நிலை தொடரும். அவள் சடாரென்று கண்கள் விழிப்புற்று அருகிலிருக்கும் அப்பெண் மீது கவனம் கொண்டு கேட்டாள்.

“நீங்கள் ஆருக்கு பார்க்கிறீர்கள்”?

“ஏன் எனக்குதான் அன்ரி பார்க்கக்கூடாதா”? என்றாள் அந்தப்பெண் “எப்படிப் பார்த்தாலும் இது சகஜமாகப் படவில்லை

பெரும்பாலும் இந்த மகத்தான பொறுப்பை பெரியோர்களே வந்து பாப்பதுண்டு. இதற்கு மாறாக இவள் வந்து பார்ப்பதாக சொல்கிறாளே அதுவும் எவ்வளவு வெளிப்படையாகத் தனக்கென்று தலை நிமிர்ந்து சொல்கிறாளே ஏன் இவளுக்கென்று பார்க்க வீட்டில் பெரியவர் ஒருவர் கூட இல்லையா இதை இவளிடம் போய் எப்படிக் கேட்க முடியும்.”

“என்ன அன்ரி யோசிக்கிறியள்”?

“இல்லை உங்களிடம் ஒன்று கேட்கலாமென்று யோசிக்கிறேன்”

“தாராளமாகக் கேளுங்கோவன்”

“ஏன் இதை நீங்கள் பார்க்க வேணும்? அப்பா அம்மா வந்து பார்க்கலாம்தானே”

“கிழிச்சினம் அவையள் பார்த்த விதி தான் இப்ப எனக்கு எல்லாம் முடிஞ்சு
போச்சு”

“என்ன சொல்லுறீயள்”?

“அதுதான் அன்ரி. நான் வாழாத கதையைச் சொல்லுறன். அப்பா பார்த்துப் பார்த்து ஒரு கல்யாணம் செய்து வைத்தாரே எனக்கு. அதைப்பற்றிச் சொல்லுறன்”.

“ஏன் என்ன நடந்தது?“

“ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளை எனக்கு. அதுவும் அமெரிக்காவிலே என்றால் கேட்க வேணுமே? நல்லாய் படிச்சவன்தான். கை நிறையப் பணம் சம்பாதிக்கிறவன்தான். இருந்துமென்ன. அவனை நம்பி நான் ஏமாந்து போனதான் மிச்சம். ஒன்றும் எனக்கு மிஞ்சேலை. உணர்வுகளாலே அவனோடு வாழ்லாமென்பதே வெறும் கனவாகிப்போச்சு. துளி கூட என் மீது அன்பில்லாத ஒருவனோடு வாழ்வெ பிடிக்கேலை. அவன் ஒரு மிருகம். குடிகாரன் பொம்பிளைப்பொறுக்கி அவனோடு வாழ்ந்ததே தீட்டுக் குளித்த மாதிரி இருக்கு எனக்கு. இப்ப எல்லாம் போய் நான் புது மனுஷி எனக்கு ஒரு வாழ்க்கை வேணும் அது ஒரு நல்லவனோடு நான் வாழ வெணும். அதுக்காகத்தான் இப்ப நானே எனக்குத்தேடுகிறேன்”.

அவள் உணர்ச்சி முட்டிப் பேசி முடித்துவிட்டு மீண்டும் பைலில் மூழ்கிப் போனபின் நீண்ட அமைதி நிலவிற்று.சாருவிற்கு அவள் பேசியதெல்லாம் ஜீரணமாகவே வெகு நேரம் பிடித்தது. ஏனெறால் அவள் உலகம் வேறு. என்ன நடந்தாலும் கற்பே வாழ்வென்று நம்புகின்ற ஒரு மறு துருவம் அவள். அதனால்தானோ என்னவோ, உணர்வுகள் எப்படிப் போனாலென்ன! மனம் அழிந்து சாம்பலாகிப் போனால்தானென்ன! அவள் வாழ்வது போன்றே ஒரு பாவனை. வெளி வேஷம் வெறும் நடிப்பு.

இதையெல்லாம் நினைக்கச் சாருவிற்கு அழுகை குமுறியது. இழப்பு வாழ்க்கை ஒன்றே முடிவாகி அவள் தனித்துப்போய் விட்ட மாதிரியும் பட்டது. ஒன்றும் மிஞ்சாத உயிரையே குடித்து விட்ட வெறும் நிழல் வாழ்க்கைதான் இப்போது அவளுக்கு. எனினும் சமூக அளவில் அவளின் பொய்யான இந்த இருப்பு கூட மெய்யாகவே படும். இழப்பு வாழ்க்கையில் அவள் எப்படித் தோலுரிந்து போனாலென்ன! அவள் தலையில் ஒளி பளீரிட்டு மின்னுகிறதே, இன்று கூட ஒரு கீரீடம். கற்பின் சிகரத்தை எட்டிப் பிடித்த்தாகவே நம்ப வைக்கிற அந்தக்கீரீடம்! அதற்கான கெளரவ விருது, ஒரே ஒரு தாலி. ஒன்றுபட்டு வாழ்வது போல் காட்ட முனையும் ஒரே ஒரு வாழ்க்கை! யாருக்காக எதன் பொருட்டு இந்த முட் படுக்கை?

“என்ன அன்ரீ யோசிக்கிறீர்கள் நான் எடுத்த இந்த முடிவு சரிதானே?” சொல்லுங்கோ அன்ரீ! மீண்டும் அந்தப் பெண்ணின் குரல் காற்றில் அலை மோதி அடங்கிப்போனது இதற்குப் பதில் சாருவிடமிருந்து வெகு நேரத்திற்குப் பிறகு சற்று மெதுவாகவே வந்தது.

“உன் முடிவுக்கு என் வாழ்த்துக்கள்!”

இதை அவள் சொல்லியிருக்கக் கூடாதுதான். ஏனென்றால் அவளைச் சுற்றி வேலி போட்ட உலகம் இருக்கிறது. வாழ்க்கை பற்றிப் பெரிதாகவே யோசிக்கிற மனிதர்கள் கூட இருக்கிறார்கள். இதோ இருக்கிறார்களே! ஒன்று, இரண்டல்ல.மனித வெள்ளக் கணக்கில் நீண்டு நிலைத்த அவர்கள் முகங்கள், அதில் தொங்கி வெறித்த பார்வைகளோடு ஆளையே சூறையாடி விட்டுபோகும் விழிகள், இதிலெல்லாம் அகப்பட்டு மாய்ந்து போகவே, சாருவிற்கு இப்படி ஒரு கிரீடம். அதுவும் குத்தி வருத்துகின்ற முட் கிரீடம். ஆனால் இப்பெண்ணோ இப்பார்வைகளை விட்டு, எங்கோ பிரிந்து போன மறு துருவமாயல்ல,அதிலும் மேலான துருவ நட்சத்திரமாகவே, உயிரில் ஒளிக்காந்தியேறி நிற்பது போல்பட்டது. சாருவிற்கு முன்னால் அவள் மட்டுமே காணக்கூடியதாக இந்த ஒளி முகம். அதற்கொரு மெய்யான சாட்சி தேவதையாக அவளும், அவள் கொண்டிருக்கிற அப்போதைய இருப்பு நிலையும். சாருவின் கண்களை விட்டகலாத நித்ய சோதிப்பிழம்புகளாகவே ஒளி கொண்டு மின்னுவது போல், அவள் அப்படியே புல்லரித்துப்போனாள்.

அவளைச் சூழ்ந்து,மூடி மறைக்கின்ற வாழ்க்கை பற்றிய இருளினூடே பார்த்த போதே அப்படிப் புரிந்தது இந்தப் புரிதலும், அதனோடு தொடர்பான எல்லையற்ற மகிழ்ச்சியும் அவளுக்கு மட்டுந்தான். சூழ்ந்து வேடிக்கை பார்த்து, மேளம் கொட்டிச் சந்தோஷம் கொண்டாடுகிற வெளியுலக மனிதர்களைப் பொறுத்தவரை, இப் பெண்ணின் கதையல்ல, அவளின் பெறுமதிமிக்க உயிரே, அவர்களின் மன உலையில் வீழ்ந்து வெந்து போகின்ற வெறும் நிழல் துரும்பாகவே உறுத்தி விட்டு மறைந்து போகும்.

அதை ஒரு பொருட்டாகவே கருத்தில் கொள்ளாமல், மனம் ஒன்றி, அவள் தேடுகின்ற அந்தப் புது வாழ்க்கை, நன்றாகவே விடியுமென்று சாரு நம்பினாள்.ஏனென்றால் ஒரு முள் பயணத்தின் தொடக்கம் அவளுடையது.

– மல்லிகையில் பிரசுரமானது.

விபரக்கொத்து
இயற்பெயர் மாதினியார் ஆனந்தநடராஜா.புனை பெயர் ஆனந்தி.சொந்த இடம் யாழ்ப்பாணம் ஏழாலை.தற்போதைய இருப்பிடம். இல 8/1B ரூபசிங்க வீதி நெதிமால தெகிவளை இலங்கை. நான் நீண்ட காலமாக எழுதி வருகிறேன்.முதலில் தமிழன் என்ற பத்திரிகையில் அரசியல் கட்டுரை எழுதினேன்.பின்னர் தமிழன், ஈழநாடு,வீரகேசரி,‘நான்’என்ற உளவியல் மஞ்சரி மல்லிகை ஜீவநதி ஆகிய பத்திரிகைகளில் எனது ஏராளமான சிறுகதைகள் பிரசுரமாகின.தொடர்ந்து இன்னும் எழுதி வருகிறேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *