மான் இறைச்சி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 7, 2022
பார்வையிட்டோர்: 1,909 
 
 

(2003 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அங்கிருந்த எல்லோருமே ஆனந்தமாக இருந்தார்கள். எல்லாமே நல்லபடி நடந்து கொண்டிருந்தன. சகலருக்கும் சகலவற்றையும் பிடித்துப் போயிற்று. திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டாயிற்று. பரிமாறப்பட்ட இறைச்சிக்கறி பந்தியிலே மிகவும் விளம்பரம் பெற்றுவிட்டது. அப்படி என்னதான் அந்தக் கறிக்குப் பெருமை.

இள வயது மான் இறைச்சியை தேனிலே ஊற் வைத்துச் சில காலத்தின் பின் நெருப்பிலே பதப்படுத்தி ருசி பார்த்துச் சமைக்கப்பட்ட கறியல்லவா அது.

இந்த விடயத்தை. இப்படி – ஏன் தான் அமர்க்களப்படுத்துகின்றார்கள் இங்கு ஏதும் மோசமான குறைபாடுகள் மறைக்கப்படுகின்றதோ? என்று சிலர் நினைக்கலாம். அப்படி ஒன்றுமே இல்லை. தன்னுடைய திருமண விடயங்களிலே ஆரம்பம் முதல் இறுதி வரை நடக்க இருக்கின்ற நிகழ்வுகளை மாப்பிள்ளை வீட்டார் மறக்காமல் இருப்பதற்காகப் புதுமைகள் படைக்க வேண்டுமென்று பெண்ணுடைய தந்தை விரும்பினார்.

மாப்பிள்ளைக்கு மான் இறைச்சி என்றால் மிகவும் பிரியம். அப்போ திருமணத்திற்கு இப்படி மான் இறைச்சி போடுவீங்களா என்று கேட்டுவிட்டார். எதிர்கால மாப்பிள்ளை அதுவும் எதிர்கால மனைவியின் காதிலேதான் கேட்டார்.

பாவம் அந்தப்பிள்ளை வெயிலிலே போட்ட தும்பைப் பூவானாள்.. கண்ணீர் கரித்தன. அவளின் தந்தையாருக்கு புரைக்கேறியது. அவ்வளவு பாசத் தொடர்பு. முதலில் அவர் மகளையே பார்த்தார். மகளுடைய கண்கள் அவருக்கு சொல்லிய செய்தி அவரின் உச்சந் தலையில் உரத்து இடித்தது. ஏனம்மா என்றார். பிறகு சொல்கிறேன் என்று கண்கனாலே சொன்னாள்.

எல்லோரும் போய் விட்டார்கள். அப்பாவின் அருகிலே வந்த மகள், எனக்குத் திருமணமே வேண்டாமப்பா என்றாள். சகல உலகங்களும் சுழன்று வருவது போல் உணர்வு அவருக்கு. என்னை மன்னிக்க வேண்டுமப்பா. உங்களை துன்புறுத்த வேண்டுமென்று நான் எப்பொழுதும் நினைத்ததே இல்லை. ஏனோ தெரியவில்லை. அப்பாவுக்கு பிடிக்காத எதையும் எனக்கு வரப்போகின்ற கணவரிடம் நான் எதிர்பார்க்கவில்லை. திருமணத்திலன்று உங்கள் மாப்பிள்ளைக்கு மான் இறைச்சி சமைக்கட்டாம். ஆனால் நீங்கள் சாப்பிடுவதில்லையே அப்பா.என்றாள் மகள்.

தனக்குள்ளே எடுத்துக் கொண்ட சத்தியத்தை தானாகவே உடைப்பதற்கு தந்தை முன் வருகின்றார். ஏனப்பா, நீங்கள் ஏன் மான் இறைச்சி சாப்பிடுவதில்லை? என்று கேட்டாள் மகள். அவர் தனது சத்தியத்தைப் பற்றி சொல்ல விரும்பவில்லை. மகளைச் சாந்தப்படுத்துவதற்காக புள்ளிப் புள்ளி மானே துள்ளித் துள்ளி ஓடி வா……… எனும் பாட்டிற்கு எத்தனை முறை அபிநயம் பிடித்துக் காட்டிருப்பாய் உனக்கு ஞாபகம் இருக்கின்றதா? என்றார். நீ உண்மையாகவே. மான் போல் நடித்துக் காட்டியதால் உன்னிலிருந்த அனுதாபம் மானிலும் வந்துவிட்டது. என்றவர் இது பிரச்சினையே இல்லை திருமணத்தில் நாங்கள் மான் சமைத்து சந்தோசமாகக் கொண்டாடுவோம் என்று மகளைச் சாந்தப்படுத்தி விட்டுச் சென்றார்.

அப்படி என்னதான் அவர் மானுடன் சத்தியம் செய்து கொண்டார்?

கடந்த நூற்றாண்டின் ஐம்பதுகளில் அவர் ஒரு அழகான இளைஞன். ஆறடி உயரம் வாட்டசாட்டமான கட்டுடல். இவரது தந்தையார் புணாணையிலே சேனை செய்யும் போடியராக இருந்தார். சோளம், கத்தரி,மரவள்ளி,பயிற்றை, குரக்கன், இறுங்கு, மிளகாய், வெண்டி, தக்காளி, வற்றாளை, சுரக்காய் போன்ற சகல பயிர்களும் பயிரிடப்படும். விரால், கனையான். யப்பான், சுங்கான், என்று கருவாட்டுக்கும் பஞ்சமில்லை. காட்டுக்கோழி, உடும்பு, முயல், மான், மரை என்று இறைச்சிக்கும் பஞ்சமில்லை. இந்த வாழ்கை இனிவரவே வராது. வாரத்திற்கு ஒரு மான் என்று வேட்டையாடுவார்கள். மானின் ஈரல்தான் நம்முடைய மணப்பெண்ணின் தந்தையாரின் பிரதான சாப்பாடு.

வாகனேரி, புணாணை, கடவத்தைமடு ஆகிய இடங்களில் வாழைச்சேனை தமிழ்க்கிராமத்தின் கிழக்குப் பக்கத்திலேயுள்ள பேத்தாழைக் கிராமத்தவர்கள் அனேகமானோர் பஞ்சமென்பது என்னவென்றே தெரியாமல் சேனை செய்த காலமது. சங்கத்துச்சேனை, ஒப்பந்தச்சேனை என்று காட்டுத் திணைக்களத்தோடு ஒப்பந்தம் பேசித் தொழில் பார்த்த காலம். வசதியான சோலைகளிலே வளமான நிலம் பார்த்துக் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து பயிர்ச்செய்கை செய்தார்கள்.

நமது பெண்ணின் தந்தையார் வேட்டையிலே மிகவும் பிரியமானவர். அதிலும் மான் வேட்டையில் மிகவும் பிரியமானவர். ஒருநாள் தன்னந்தனியே காட்டிலே புகுந்தார். மருந்துத் துவக்கு ஒன்று கையிலே இருந்தது. பக்கத்து வட்டாரத்து பயிர்ச்செய்கையாளர்கள் பன்றிக்கும் யானைக்கும் வைத்திருந்த பொறியிலே நடுக்காட்டிலே மாட்டிக் கொண்டார்.

அது ஒரு தந்திரப் பொறி. அப்போது ஒரு பெரிய வீர மரத்திலே அவர் தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருந்தார். அது ஒரு யானைப் பொறி. ஒரு மரம் மட்டும் தனியே நடுவில் நிற்க. வளைத்து நிற்கும் மரங்கலெல்லாம் சரிந்து விழக்கூடிய வகையிலே அமைந்திருக்கும். பெரிய ஒசை. பறவைகள் கீச்சிட்டன, சில்வண்டுச்சத்தம் ஒருமுறை நின்று மீண்டும் ஒலித்தது.

மானைத் துரத்தி வந்தவர் வகையறியாது தொங்கினார். மாலை வந்துவிட்டது. போடியாரின் மனைவி பக்கத்துச் சேனை அப்புவிடம் குறி பார்க்கப் போனார். அவர் பாக்கு வெட்டி தொங்குவது போல் குறியில் வெளிப்படுத்தினார்.

நாட்கள் கடக்கின்றன. ஒன்று இரண்டல்ல ஆறு நாட்கள். அவருடைய கொழுப்புப்படைதான் அவரைக் காப்பாற்றியிருக்க வேண்டும். நோயே படாத சுத்தமான தானியங்களும் தேனும் இறைச்சியும் உண்ட உடலல்லவா.

குடி நீர்தான் பிரச்சனை. அவர் தைரியத்தை இழக்கவில்லை . மிகவும் சாதாரணமாகப் பறவைகளுடனும் காட்டு மரங்களுடனும் அவர் பேசத் தொடங்கினார். காட்டுச்சேவலையும் மான்களையும் ஒசையெழுப்பி தனக்கு அண்மையில் வரவைத்து சுட்டு மகிழ்பவரல்லவா! அவர் தைரியத்தை இழக்காமல் கலைமானைப் போல் ஓசை எழுப்பினார். அவருடைய கண்கள் இப்பொழுது மிருகங்களுடன் பேசப் பழகிக் கொண்டன. மான்களின் கூட்டம் இப்பொழுது அவருக்கு நண்பர்களின் கூட்டமாகிவிட்டது.

தலைகீழான வாழ்கையிலும் ஒரு சந்தோசம் கொண்டார். மர அணில் கொறித்த பழங்கள்தான் அவரது உயிர் ஊசலாடுவதற்கு இப்பொழுது காரணமாகிவிட்டன.

பக்கத்து சேனைத் தொழிலாளிகளுக்கு வழக்கமான யானையின் பிழிறல் காதுகளுக்கு கேட்கவில்லை. எனில் பரீட்சிக்க வருவார்கள். பலவீனமான யானையை அடித்தே துரத்துவார்கள். மூன்று நாட்கள் முந்தி வந்தவர்களுக்கு வாழ்நாள் பூராகவும் அந்தச் சம்பவத்தை மறக்கவே முடியவில்லை.

இவ்வாறு இவர் ஏழுநாட்கள் உயிரோடு இருந்தார் மனித மனத்தின் வலிமையை எடை போட முடியாது என்பதற்கு அவர் சாட்சியானார். அன்றிலிருந்து அவர் மான் வேட்டையாடுவதில்லை, மான் இறைச்சி உண்பதில்லை.

இப்பொழுது மகளுக்காக அவர் சத்தியத்தை உடைக்கத் தயாராக இருக்கின்றார்.

– மறைமுகம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: ஏப்ரல் 2003, கலாச்சாரப் பேரவை பிரதேச செயலகம், வாழைச்சேனை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *