கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 12,666 
 

மழை அப்போது தான் பெய்யத் தொடங்கியது. ஏ.ஆர்.ரகுமான் இசை போல மென்மையாக ஆரம்பித்து அட்டகாசமாய் அதிரத் தொடங்கியது. எனக்கு எப்போதுமே மழையை ரசிக்க மட்டுமே பிடிக்கும், நனையப் பிடிப்பதில்லை. மழைக்கு முந்திய குளிர்ந்த தென்றலும், மழை பெய்யும் பொழுது எழும் மண்வாசமும், மழை பெய்து முடித்த பின் மரங்கள் கொண்டாடும் பசுமையும் பிடிக்காதவர்கள் யாரும் இருப்பார்களா என்ன?.

வீட்டின் ஜன்னலுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அம்மா போட்டுத் தரும் காப்பியைக் குடித்துக் கொண்டே மழையை வேடிக்கை பார்ப்பது எனக்கு மிகப் பிடித்த பொழுது போக்கு. ஒவ்வொரு முறையும் மழை என் அம்மாவின் காப்பியின் சுவையைக் கொஞ்சம் கூட்டிப் போயிருக்கிறது. மழை பெய்யும் பொழுதெல்லாம் மின்சாரம் தடை படுவதென்பது எங்கள் ஊரின் எழுதப்படாத விதி. சிற்சில இடங்களில் மட்டுமே விதிமுறைகள் மீறப்படுவது விரும்பப் படுவதில்லை. அன்றைக்கும் மழை எங்கள் வீட்டிற்குள் டி.வி.யின் இரைச்சலற்ற, மெழுகுவர்த்தியினால் மெருகூட்டப்பட்ட இரவினை பரிசாக தந்து சென்றது.

அடுத்த பிறவியில் நம்பிக்கையில்லாத போதும் அறியப்படாத நிகழ்வுகளில் நிலவும் ஒரு ஈர்ப்பு எப்போதுமே குறைந்ததில்லை. அதனால் அடுத்தொரு பிறவி வாய்க்குமானால் மழையாகப் பிறக்கும் வரமே வேண்டிக்கொண்டேன் அதிகம் பழக்கமில்லாத இறைவனிடம். மழை மட்டுமே அனைவராலும் விரும்பப் படுகின்ற விருந்தாளி. அழைக்காமலே வரும் நண்பன்.(மழை ஆண்பாலா ? பெண்பாலா ?). தீண்டாமை தீண்டப்படாத சமூக சேவகன். எதிர்ப்பார்ப்புகளின்றி உதவும் துணைவன். இப்படி எண்ணற்ற கற்பனைகளுடன் உறங்கியும் போனேன்.

மழைக்கு மறு நாள், மழையை நானும் என்னை மழையும் மறந்து போயிருந்தோம். சிறு வயதில் பள்ளிக்கூடம் பெற்றிருந்த இடத்தை இப்போது அலுவலகம் கைப்பற்றிக் கொண்டது. பிடிப்பதேயில்லை போவதற்கு. மிச்சம் வைத்துச் சென்ற நேற்றைய வேலைகள் என் அவசரத்தை அவசியப்படுத்தின. அம்மா பண்ணி வைத்த இட்லிகள் நாலை உள்ளே தள்ளிவிட்டு அவசரமாய்ச் சென்று ஆட்டோ பிடித்தேன். நான் தாமதமாகச் செல்லும் நாட்களிலெல்லாம் எனது மானேஜர் சீக்கிரம் வந்து தொலைவார். வேண்டிக்கொண்டேன்.

சற்று வேகமாகச் செல்லுமாறு ஆட்டோ ஓட்டுனரை கேட்டுக்கொண்டேன். சொன்னதைக் கேட்கும் ஆட்டோ ஓட்டுனர் வாய்க்கப் பெற்றேன். பைக்கில் செல்லும் போது ஆட்டோக்காரனையும், ஆட்டோவில் செல்லும் போது பைக்காரனையும் தூற்றும் ஒரு சராசரி இந்தியன் நான் என்பதை மீண்டும் ஒரு முறை நிருபித்துக் கொண்டேன். மூன்றே வினாடித் தாமதத்தினால் அறுபது வினாடிகள் சிக்னலில் சிக்கிக் கொண்டோம். அப்போது தான் அவரைப் பார்த்தேன் நடை பாதையின் ஓரத்தில் தன் இரு கைகளையும் மார்போடு அனைத்து பிடித்துக் கொண்டவாறு படுத்திருந்தார். வயது எழுபதிருக்கலாம். சுருளான பரட்டை முடி. கத்தி பட்டு வருடங்களாயிருக்கும் தாடி.என்பு தோல் போர்த்திய உடம்பு. கண்டிப்பாக உண்டு பல நாள் ஆகியிருக்க வேண்டும். பசி என்னும் கொடிய வியாதியால் பாதிக்க பட்டவர் போல் தெரிந்த்தது. இருப்பதே தெரியாதவாறு இருந்த வயிற்றில் இருக்கிக் கட்டப்பட்டிருந்தது வேட்டி. இல்லை இல்லை துண்டு. அதுவும் நனைந்து போயிருந்தது. அவரது உடல் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது. அவர் எதையோ முனுமுனுத்துக் கொண்டிருந்தார். எனக்கு சுருக்கென்றிருந்தது. இத்தனையும் பார்த்துவிட்டு அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டேன். அறுபது வினாடிகள் கடந்து போய் ஆட்டோ புறப்பட்டிருந்தது.

அன்று ஏனோ மதியம் சாப்பிடவில்லை. வயிறு சரியில்லை என்று நண்பர்களிடம் காரணம் கூறினேன். மனது பாரமாக இருந்தது. அலுவலகத்திலிருந்து சீக்கிரம் கிளம்பிவிட்டேன். அந்த சிக்னலில் காலையில் பார்த்த பெரியவரைத் தேடினேன். காணவில்லை. அதன் பிறகு எப்போதுமே அவரைப் பார்க்கவில்லை.

இப்போதெல்லாம் நான் மழையை ரசிப்பதில்லை.

– செப்டம்பர் 29, 2010

Print Friendly, PDF & Email

1 thought on “மழை

  1. நீங்கள் சொல்வது முற்றிலும் புரியவில்லை, இடையில் திசை மாறி விட்டதாக நான் உணர்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *