மலேசியாவில் தொலைந்த மச்சான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 30, 2012
பார்வையிட்டோர்: 11,522 
 
 

மலேசியா பணத்திற்கு என்ன பெயர் என்று அவனுக்கு ஞாபகம் வரவேயில்லை.டாலர், பவுண்ட் என்ற வார்த்தைகளே ஞாபகத்தில் திரும்ப வந்து கொண்டிருந்தன. அவனின் பொது அறிவு அவ்வளவு கூர்மையானதல்ல.யாரிடம் கேட்க,எதற்கு என்று அலுப்பில் இருந்தான். மலேசியா விமான நிலையத்தில் போய் மாற்றிக் கொள்ளலாம் என்றிருந்தான்.  விமானத்தில் வந்து உட்கார்ந்தாயிற்று.

‘’ அதுலே குடிக்கத் தண்ணி கூட குடுக்க மாட்டானே  ‘’

‘’ இண்டர்னேசனல் பிளைட் . நாலு மணி நேரப்பயணம் .சாப்பாடு நிச்சயம் இருக்குமே. நீங்க தண்ணி கூட கெடைக்காதுங்கறீங்களே. ‘’

‘’ இப்பதா டிக்கெட்டை மலிவா பண்ணிட்டாங்களே. அப்புறம் எங்க சாப்பாடு.’’

சுந்தரக்கண்ணன் சொன்னது சரியாய்தான் போயிற்று. தள்ளு வண்டியைத் தள்ளிக் கொண்டு வந்த மஞ்சள் நிறப் பணிப்பெண் எல்லோருக்கும் ஏதேனும் கேட்டு வழங்காமல் அபூர்வமாகவே சிலருக்கு ஏதோ கொடுத்துக் கொண்டிருப்பதை எட்டிப் பார்த்துத் தெரிந்து கொண்டான் துரை. தள்ளு வண்டி  அவன் பக்கம் வரும் போது காத்திருந்த பசி உச்சத்திற்கு வந்து விட்டது.ஏதாவது இறக்கியே ஆக வேண்டும்   என்ற முடிவிற்கு வந்து விட்டான்.

காபியை நீட்டி விட்டு பைவ் என்றாள் மஞ்சள் நிற அழகி. மலேசியாக்காரய்யா,ஜப்பான்காரியா..தாய்லாந்து பெண்ணா..திரு துரை திருதிருவென அவளைப் பார்த்தான்.

‘’ பைவ் ரிங்கிட் ப்ளிஸ்  ‘’

துரை நூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான்.

‘’ மலேசியா கரன்சி பிளிஸ் ‘’

துரை திருதிருவென அவளை ப் பார்த்தான்.

‘’ இண்டியன் ரூபி.. ஓகே  ‘’

கால்குலேட்டரி எடுத்து கணக்கிட்டு அவனைப் பார்த்தாள்.கால்குலேட்டர் உபயோகப்படுத்தும் அளவு தாறுமாறாய் ரிங்கிட் இருக்கிறாதா.

‘’  நைன்ட்டி ரூபீஸ் ‘’

தொண்ணூறு ரூபாய் கொடுத்து காபி சாப்பிட வேண்டுமா என்ற எண்ணம் சட்டென வந்து விட்டது. காபியில் ஈ விழுந்து விட்டது. தூசு என்று எழுந்து போய் விட முடியாது. சுத்தமாய் அப்போதுதான் காபி பொட்டலத்தை உடைத்து போட்டு கலக்கியது.

’’ டென் ரூபிஸ் நோ சேஞ்ச்.’’

தள்ளுவண்டி நகர்ந்து அடுத்த வரிசைக்குப் போய் விட்டது. தள்ளு வண்டியில் மஞ்சள் பெண் ஒரு புறம். இன்னொரு புறம் ஆண் பணியாள். மஞ்சள் பெண் என்னவென்று கேட்கிறவளாக இருந்தாள். காசு வாங்கிப் போடுகிறவளாக இருந்தாள். ஆண் சிறு பாக்கெட்டுகளை உடைத்து காபி, டீ பவுடரைக் கொட்டுவனாக, கோப்பையை நீட்டுவனாக இருந்தான்.ஆண்களே இங்கும் வேலையாளிகளா.

அய்ந்து ரிங்கிட் தொன்னூறு ரூபாய். அப்படியென்றால் ஒரு ரிங்கி பதினெட்டு ரூபாய். பத்து ரூபாய் சில்லறையும் திரும்ப வரவில்லை. நூறு ரூபாய் கொடுத்து ஒரு காபி சாப்பிட வேண்டுமா.காபி மணம் எல்லா எண்ணங்களையும் ஒதுக்கி விடச் செய்தது.

கொஞ்சம்  வலதுபுறம்  எட்டிப்பார்த்தான். மேகத்துள் விமானம் உறுமியபடி நகர்ந்து கொண்டிருந்த். கொஞ்சம்  இடது புறம்  எட்டிப்பார்த்தான். பணிப்பெண் இனிப்பு,சிக்கன் துண்டுகள், ஒரு கோப்பை இனிப்பு நீருடன் ஒரு பயணியைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

நேற்று மதியம் இண்டர் சிட்டி வண்டியில் கிளம்பும் போது கொண்டு வந்த  நெல்லிக்காய் சாதம் இன்னும் தொண்டையில் அதன் இனிப்பைக் காட்டிக் கொண்டிருந்தது.  காலைஎட்டு மணி விமானத்திற்கு அய்ந்து மணீக்கே விமான நிலையம் வந்து சேர்ந்து விட்டான்.இரவில் செண்ட்ரலிலேயே காத்திருப்பு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு தூங்கி வழிந்தான். உடம்பு அசதியில் விண்விண் என்று வலித்த்து.. பொதுக்குளியறையில் காக்காகுளியல் போட்டான். இன்னும் உடம்பு வலி அதிகமாகி விட்டது போலிருந்தது. மீனம்பாக்கம் மின்சார ரயிலில் ஏறி வந்து சேர்ந்திருந்தான்.விமானத்தில் காலை சிற்றுண்டி கிடைக்கும் என்று நினைப்பில் மண் விழுந்து விட்டது. மண் வயிற்றை நிரப்பியிருந்தால் பரவாயில்லை.காலியாகத்தான் வைத்திருந்தது. நாலு மணி நேரப் பயணத்திற்குப் பின் சாப்பாடு தேட வேண்டும், காபி நூறு ரிங்கிட் என்றால் சாப்பாடு நானூறு ரிங்கிட் ஆகி விடுமா.அக்காவிடம் புளி சாதம் கட்டிக் கொடுக்கச் சொல்லி இரண்டு நாளாக்காகிறமாதிரி கொண்டு வந்திருக்கலாம். ரிங்கிட் ரூபாய் விகிதத்தை நினைத்தால் சாப்பாடு தொண்டைக்குள் இறங்காது.    காசை செலவு செய்துவிட்டு அக்காவிடம் கணக்கு காட்டிவிட வேண்டியதுதான்.

ஒரு வரிசைக்கு ஆறு பேர் வீதத்தில் இருபத்தைந்து வரிசை இருக்கும். முந்நூறு பேர் இருப்பார்கள்,இவர்களெல்லாம் எதற்காக மலேசியா போகிறார்கள். வேலைக்காக, சுற்றிப்பார்த்து பணம் செலவழிப்பதற்காக,  கள்ளக் கட்ததல் செய்வதற்காக, எங்காவது ஓடிப்போய் விடுவதற்காக, தன்னைப் போல் மச்சானைத் தேடிப்பாபோகிற யாராவது இருப்பார்களா.

மச்சான் சவுந்திரவேல்  காணாமல் போனது மலேசியாவிலதானா. எல்லாம் துழாவியாயிற்று. மலேசியா டிக்கட் பயன்படுத்தப்பட்டிருக்கிறது..  அவர் அங்கு போய் சேர்ந்தது நிச்சயக்கப்பட்டிருக்கிறது. அதன் பின் தகவல் இல்லை. ஏதாவது தொலைபேசி தகவல் வரும் என்று காத்திருந்து அக்கா இத்தனை நாள் ஏமாந்து விட்டாள்.எப்பவாவது அடுத்தாவாரம்தா ஒரு மாசவிசா முடியுதே .  வந்துர்ரேன், என்றபடியாகப் பேசும் வார்த்தைகள்  இல்லாமல் போய் விட்டன.தகவலே இல்லாமல் போய் விட்டது.துரை மச்சானைத்தேடி மலேசியாவிற்கு கிளம்ப வேண்டியதாகி விட்டது.

சுற்றிலும் இருப்பவர்களை இரண்டு முறை சிறுநீர் கழிக்கப்போகிற சாக்கில் பார்த்து விட்டான்.பாதிப்பேர் தூக்கமுயற்சியில் இருந்தார்கள்.சிலர் கனிணியில் ஏதேதோ விளையாடிக்கொண்டிருந்தார்கள்.வீடியோ கேம் போல. சிலர் கனிணியில் குறுக்கெழுத்துப்புதிர் போட்டுக் கொண்டிருந்தார்கள்.  அபூர்வமாய் புத்தகம் சிலர் கையில் தென்பட்டது.சிலருக்கு வீட்டில் பார்க்கிற ஜேம்ஸ்பாண்டு படங்கள். இதுவெல்லாம் எதுவும் இல்லாமல் தான் மட்டும் சிறு ஜன்னலில் தெரிகிற வானத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது.இதுவென்ன மேகம் சூழ்ந்து கிடக்கிறதா. மேகத்துள் சிரம்ப்பட்டு பறந்து கொண்டிருப்பதாய் தெரிந்தது.விமானத்தை ஓட்டுகிறவன் என்று எதுவும் இல்லை. எல்லாம் ஆட்டோமெட்டிக். ஏற இறங்க, அபாயம் என்று அறிவிக்க பைலட்., விமானப்பணிப் பெண்கள். மச்சான் காணாமல் போனது போல தானும் காணாமல் போனாலும் கேட்க ஆளில்லை.

மச்சான்  பனியன் கம்பனியில் அயரன் செய்து கொண்டிருந்தவர் கனத்த பெட்டியைத் தூக்கி தோள் வலி எடுத்த காலத்தில் மெல்லிசான பெட்டிகள் வந்து விட்டன.தண்ணீரைத் தானே பீச்சும் பெட்டிகள். ரேட் பீஸ்சுக்கு அலையும் இளைஞர்கள் மத்தியில் போட்டி போட முடியவில்லை. வயசாகிறது என்று ஒதுங்கியிருக்க முடியவில்லை. கொஞ்சம் தெரிந்த ஜோஸ்யம் கை கொடுத்தது.ஒரு வருடம் வீட்டு முகப்பில் ஜோஸ்யம், மனநலன், மணப்பொருத்தம் என்றெல்லாம் போர்டு போட்டு  அனுபவம் வந்தபின்  மலேசியாவில் ஜோஸ்யத்திற்கு இருக்கும் மவுசைப் பார்த்துக் கிளம்பினார். டூரிஸ்ட் விசாவில் மாதம் ஒரு முறை  வந்து சுமூகமாக வந்து போய்க் கொண்டிருந்தார்.அக்காவும் ஒரு மாதத்திற்கு அவரைப் பிரிந்த்திருக்கப் பழகிக்கொண்டாள். மாதம் ஒரு முறை போகம் என்ற அளவில்தான் அவளுக்கு உடம்பு ஒத்துழைத்தது.அவள் பேராசைக்காரியல்ல. அப்புறம் அவர் கொண்டு வருகிற ரிங்கிட் தொகையை இந்திய ரூபாயில் கணக்கிட்டு அவள் மகிழ்ந்து கொண்டிருந்தாள். இப்படி இரண்டு வருடம் கழிந்த்து.. இந்தமுறை மலேசியா வந்தவரிடமிருந்து எந்தத் தகவலும் காணோம். காவல்துறை, இந்திய தூதர் அலுவலகத்தில் புகார் செய்வதற்கு முன்பாக வந்து விசாரித்து விடலாம் என்று அக்கா ரிங்கிட் தொகையை மனதில் கொள்ளாமல் தந்து அனுப்பி விட்டாள்.

இப்படி ஆகாயத்தில் கூட யாரும் காணாமல் போகலாம். காணாமல் போவதற்கு முன் எத்தனை கலகலப்பு என்பதை சுற்றும் முற்றும்  பார்த்தபோது தெரிந்த்து கொண்டான்.

2.

லிட்டில் இண்டியா பக்கம் நாலைந்து முறை வந்து போய் விட்டான்.நல்ல சைவ விடுதிகள் இருப்பது ஆறுதலாகப் பட்டது. இட்டிலியும் பொங்கலும் வடையும் சாதமும்  ருசியாகவே இருந்தன. ஏதாவது வாரப்பத்திரிக்கை வாங்கலாமென்றால் எல்லாம் மூன்று ரிங்கிடுக்கு  மேல்தான் இருந்தன.

கோலாலம்பூர் வீதிகளில் தமிழ்ப்பெண்களைக் கூட  புடவையில் காண்பது அரிதாகவே இருந்தது. தொடை தெரியும் குட்டைப் பாவாடைகள், பெர்முடாஸ், அரை ஜீன்ஸ்கள் என்று தமிழ் பெண்களும் மலேயர்கள், சீனர்கள் மத்தியில் தென்பட்டார்கள். வெள்ளிக்கிழமைகளிலும், திருமண நிகழ்ச்சிகளிலும், தமிழ்க்கோவில்களிலும் தமிழ்ப்பெண்கள் புடவை அணிந்து இருப்பார்களாம்.தமிழ்த்தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், செய்தி வாசிப்பில் பெண்கள் புடவை அணிந்து வருவது கட்டாயமாக இருந்தது. இப்போது அது குறைந்து விட்டது  என்று தமிழ் அமைப்பினரும், சனாதானிகளும் கண்டித்திருப்பது பற்றி சுடச்சுட படித்திருந்தது ஞாபகம் வந்தது..

நம்மூர் வேடிடி சட்டை போல் மலேயா தேசிய உடையிலும் சிலர் தென்பட்டார்கள். தலையில் குல்லா. முழுக்கைச் சட்டை. பேண்ட் மேல் சுற்றப்பட்ட கைலி. இதுதான் தேசிய உடை..

இந்த மாதம்வரும் சுதந்திரதினத்தை தேசிய தினமாகக்  கொண்டாடும்  வைபவத்தில் வீதி முழுவதும் மலேசியா தேசியக் கொடி பட்டொளி வீசிப்பறக்கிறது.1958ல் சுதந்திரம் பெற்றது.நாட்டின் தேசிய மலர் செம்பருத்தி இரும்பால் வார்த்தெடுக்கப்பட்டு வீதிமுழுக்க  விளக்குக் கம்பங்களில் மினுங்கியது.. 100 வருடத்திற்கு முன் தமிழன் கட்டிய ரயில்வே ஸ்டேசன் மின் விளக்கில் பளிச்சிட்டது.இந்தியர்களின் பெருமையைச் சொல்லும் லிட்டில் இந்தியாவிற்கு எப்போதும் மவுசுதான்.கோலாலம்பூரின் மத்தியில் தென்பட்டது ராம்லீ தெரு. ராம்லி நம்மூர் சிவாஜிகணேசன் போல் முக்கிய நடிகர்.  இவரை இயக்கிய முக்கிய இயக்குனர்களீல் ஒருவரான கிருஸ்ணன் ஒருதமிழர்.மலேசியாவின் முதல் கோடீஸ்வரர்  ஆனந்த கிருஸ்ணனுக்குச் சொந்தமானது  கோலாலம்பூரின் இரட்டை கோபுரங்களில் ஒன்று. அதை விற்றுவிட்டார். 2ஜி ஊழலில் இவர் பெயரும் அடிபட்டு பல நிறுவனப் பங்குகளை விற்றுவருகிறார். இவரின் ஒரே மகன் புத்தமத சாமியாராகிவிட்டார். இரட்டை கோபுரக் கடைகளுக்குப் போனவன் சும்மா திரும்பி வந்தான். ரிங்கிட் கணக்கில் பெருக்கிப் போட்டுப் பார்த்ததில் தாறுமாறாய் குழப்பம்  வந்தது.

பத்துமலை முருகனுக்கு எப்போதும் கூட்டம் அலைமோதும். பத்து என்றால் கல். கல் மலை. பத்து மலையைச் சுற்றிலும் ரப்பர் தோட்டங்கள் இருந்த்தாம் ஒரு காலத்தில் .1991ல் கும்பவிசேகம் கண்ட பின் மிக உயர  சிலையில் முருகன் பத்துமலை முகப்பில் சிரிக்கிறார்.

அவர் முன் நின்று செல் போனில்  ஒரு படமும் எடுத்துக் கொண்டான். பத்து  மலை முருகன் மச்சானைக்காட்டி விட்டால் காவடி கூட எடுக்கலாம் என்று பட்டது துரைக்கு.

 

பாஸ்போர்ட் எப்ப்போதும் சட்டை உள் பாக்கெட்டில் துருத்திக் கொண்டே இருந்தது. வெளியில் போகும் போது கையில் வைத்துக் கொள்ளச் சொல்லியிருந்தார்கள். எதற்கு இருக்க்கட்டும் என்றே வைத்திருந்தான்.காவல்துறையினர் யாரும் கண்ணில் படவில்லை. டிராபிக்காவலாளிகள் கூட தென்படவில்லை. எல்லாரும் மறைந்திருந்து வேடிக்கை பார்ப்பவர்களா. வாகனங்கள் ஒழுங்கு கதியில் சரியாகச் சென்றன.  குற்றம் நிகழாமல் இருக்காது. தமிழ்     நேசன், மக்கள் ஓசை, நம்நாடு என்று தினம் ஏதாவது ஒரு தினசரி வாங்குவான். குற்றங்கள் செய்திகளில் இல்லாமல் இல்லை.செய்தித்தாள்கள் எல்லாம் ஒரு ரிங்கிட்டிற்கும் அதிகமாக  இருந்தன.நம்நாடு புது தினசரி ஒரு ரிங்கிட். மொரிசியஸிற்கு பனியன் கம்பனி வேலைக்குப் போகவென்று பாஸ்போர்ட் எடுத்திருந்தான்.மூன்றாண்டுகள் முயற்சி செய்தான். பிறகு விட்டு விட்டான். அப்போது எடுத்த பாஸ்போர்ட். இதற்காகவாவது பிரயோஜனமாகிறது என்று ஆறுதலாக இருந்தது. வெளியில்  காவல்துறையினரின் பரிசோதனையின் போது பாஸ்போர்ட் கேட்பார்கள் என்றார்கள். ஜெராக்ஸ் வைத்துக் கொள்ளலாமா என்றிருந்தான். ஜெராக்ஸை நம்பமாட்டார்கள். சிக்கல் என்று உள் பாக்கெட்டிலேயே வைத்துக் கொண்டான்.

“ ஒரு மாதிரி கொடி நாடு முழுக்கப் பறக்கதுங்களே. எந்த கட்சி மாநாட்டுக்கு..” சரவணபவனில்தான் கேட்டான்,” கட்சிக் கொடியில்லெ. இந்த தேசக் கொடி. இந்தமாசம்  சுதந்திரம் வாங்குன மாசம்னாலே மாசம் முழுக்க சுதந்திரக் கொண்டாட்டம்”

சொன்னவன் புதுக்கோட்டைக்காரனாக இருந்தான்.ஏதோ வேலை என்று வந்து விட்டான். திடுமென வரும் மழை வெள்ளம். பலத்த வெயில் . இதெல்லாம் அவன் உடம்பைப் படுத்துகின்றனவாம். அடிக்கடி உடம்பு சவுகரியமில்லாமல் போய் விடுகிறது. ஊருக்குப் போய் விடுகிற கனவில் அவன் இருந்தான். தமிழ் பேசுகிற யாரிடமும் மச்சான் இங்கு வந்து தொலைந்து போய் விட்டது பற்றிச் சொன்னான்.அவர்களும் தாங்களும் யாரையாவது தேடிக்கொண்டிருப்பதாகத்தான் அவனுக்குத் தோன்றியது. அல்லது குறைந்த பட்சம் ரிங்கிட்களைத் தேடிக்கொண்டிருந்தார்கள். ” பதினெட்டு, இருபதுன்னு பெருக்கிப் பாருங்கோ. ஜிவ்வுன்னு ஏறுமே..”

கிள்ளான் பக்கம் நேற்றுப் போயிருந்தான். பழைய ரப்பர் தோட்டப்பகுதியில் ஒரு தகர சாலை போட்டு இருந்த ஒருவன் செத்துப்போயிருந்தது பற்றி மக்கள் ஓசையில் செய்தி படித்திருந்தான். டூரிஸ்ட் விசாவில் வந்து ஏதாவது வேலை செய்து கொண்டிருந்தவனாக இருக்கலாம் என்று செய்தி வந்திருந்தது.  அக்கா கொடுத்த மச்சானின் நண்பர் ஜோஸ்யகாரர்  பினாங்க் போய்விட்டிருந்தார். போனில் கேட்டபோது ஊருக்குப் போனவர் வர்லியே தம்பி என்றார். பிளைட் ஏறி இங்க வந்தது நிச்சயிக்கப்பட்டது என்றான். அப்ப போலீஸ்தா கவனிக்கணும். ஜோஸ்யகார்ர்களுக்கு  ஒரு சங்கம் இருந்தது, அதில்  மச்சான் உறுப்பினர் இல்லையாம்.

“ பாத்தின்னா சொல்லு, சங்கத்திலே சேராமெ தொழில் பண்ண வேண்டாமுன்னு..”  எல்லாவற்றுக்கும் கட்டணம் நிர்ணயித்திருந்தார்கள். அய்ந்து வெள்ளியில்லாமல்  கையை நீட்ட முடியாது. அப்புறம் தோசப் பரிகாரத்திற்கென்று ஒரு கிளைச் சங்கமும் இருந்தது. இதில் வருகிற சம்பாத்தியம் பற்றி மச்சான் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருப்பார்.ரிங்கிட் மதிப்பை பெருக்கிப் பார்த்துதான் அவர் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்த்து. மச்சான் ஒரு நுணுக்கமான ஜோசியராக அவனுக்குத் தென்பட்டிருக்கிறார். முகத்தை சற்றே மழித்து விட்டால் போதும் தனக்கு இணையான வயசாளி  ஆகி விடுவார் என்ற நினைப்பு அவனுக்கு வந்திருகிறது,  சற்றே லேசான மயிர் அவர் முகத்தை ஆக்கிரமித்திருப்பது ஞாபகம் வந்த்து. இதே ரேஞ்சில் போனால் கொஞ்ச நாளில் அவர் முகம் மறந்து போய் விடும் என்பது அவனுக்கு வருத்தம் தந்தது.  எங்காவது சின்ன வீடு செட்டப் செய்து கொண்டு அக்காவிற்குத் தண்ணி காட்டுகிறாரா என்பது சந்தேகமாய் முளைத்து துரை முகத்தில் புன்னகையை வரவழைத்தது.

கர்ணன் படம் வெளியீடு பற்றி  விளம்பரங்கள் சொல்லிக் கொண்டிருந்தன. முப்பது நாற்பது திரையரங்குகளில் ஓரிரு காட்சிகள். இது மலேசியா முழுக்கவா. கோலாலம்பூரில் இவ்வளவு தியேட்டர்களா.. குறைந்தது 15 வெள்ளி கட்டணம்.  டிஜிட்டல் படம். ஊரில் இருபது ரூபாயில் சிடி வாங்கினால் குடும்பமே படம் பார்த்து விடலாம். கர்ணன் எல்லாவற்றையும் தானம் கொடுத்து விட்டானா என்னா..மச்சானைக்கூட இந்த ஊருக்கு  தானம் கொடுத்து விட்டதாக  அக்கா இனி புலம்புவாள்.

உள்ளூர் நிகழ்ச்சி ஏதாவதற்குப் போனால் மச்சன் தட்டுப்படுவாரா.  அந்தக்  கூட்டங்களுகெல்லாம் போய் மச்சானைக்  காணவில்லை என்று புலம்பலாமா. பலன் இருந்தாலும் இருக்கும் . எதையாவது  தின்று பித்தம் தீர்ந்தால் சரி.

உள்ளூர்செய்திகளில் கண்கள் ஓடின.பிரம்மகுமாரிகள் இலவச தியானப் பயிற்சி,  வரலட்சுமி பூஜை நேரம், ஸ்கூடாயில் மனமே விழித்திடு   சுயமுன்னேற்றக் கருத்தரங்கம்,குவ்வாந்தன் மாரியம்மன் கோவிலில் வரலெச்சுமி விரதக் காப்புக் கட்டல், சுங்கைப்பட்டாணியில் தமிழரிஞருக்குப் பாராட்டு, கோலாலம்பூர் மாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்குப் பூஜை, தாமான் மேடான் துர்க்கை அம்ம்மன் கோவிலில் திருவிளக்குப் பூஜை, கிள்ளான் தாமான் செந்தோசாவில் சக்தி அம்மா ஆன்மீக ஊர்வலம், மலேசியத் திராவிடர்கழகத்தினருடன் தமிழகப் பேராசிரியர்கள் தெய்வநாயகம், தேவகலா கலந்துரையாடல்,  லாடாங் சபாக் தண்டாயுதபாணி ஆலயத்தில் பொங்கல் விழா, ஸ்கூடாய் தாமான் நேசாவில் சேதுராமனின் இலக்கிய உரை,  உலக  சமுதாயத்தில் அன்பையும் அய்க்கியத்தையும் வளர்ப்பது தமிழர் ஆன்மிவியலா பட்டிமன்றம் ஜாலான் அம்பாங்காவில், பெர்லிசில் பலரக விளையாட்டுப் போட்டி., மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்கத்தில்  சிறுவர் இளையோர் சிறுகதைப் போட்டி  பரிசளிப்பு  ஜாலான் ஈப்போவில்…  இதில் எதைத் தேடிப்போக.. எதற்குப்போனாலும் பத்து வெள்ளி கரைந்து விடும். மச்சான் பற்றியத்தகவல் கிடைக்கிறதோ  இல்லையோ   ரிங்கிட் கரைந்து விடும்.

பர்ஸை எடுத்து பார்த்துக் கொண்டான். ஒற்றை வெள்ளி நோட்டுகள் ஒழுங்காக இருந்தன. ஓரிரு இந்திய நாணயங்கள் இருந்ததை  காலையில் தான் தனியே எடுத்திருந்தான் காலையில் ஒரு காடைக்குச் சென்று மக்கள் ஓசை தினசரியையும், ஒரு மிட்டாய் பாக்கெட்டையும் எடுத்தான். தமிழ் முகமாகத்தான் கடைக்காரர் தென்பட்டார்.” நீங்க குடுத்தது இந்தியக்காசு “ மீண்டும் தேடி  நீட்டியபோது  அதுவே தான் என்றான். கொஞ்ச நேரம் ரிஙிங்கிட்டை தேடுவதில் அவன் கவனம் இருந்தது. “ என்ன அண்ணாச்சி..  வேலை தேடி வந்த ஆளா  “ என்றான். துரைக்குப் பதட்டமாகி விட்டது.

” என்னனாச்சி.. “

“ ஒன்னுமில்லெ.. ரிங்கிட் கலந்து போச்சு..”  ஒற்றை ரிங்கிட்டுகான மிட்டாய் பாக்கெட்டை எடுத்துக் கொண்டு நகர்ந்து விட்டான். ஏன் இவ்வளவு பதற்றம். இன்னும் சில நாட்கள் இங்கிருந்தால் ரிங்கிட்டில் ஆகும் செலவில்  உடம்பு பதற ஆரம்பித்து விடும் என நினைத்தான் துரை.அவனிடமாவது பாஸ்போர்ட்டைக்காண்பித்து விடலாம் என்று தோன்றியது. எதற்கு வம்பு என்று உள் பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான்.

 

3.

 

ஜோஸ்யகாரரின்   முக   நெற்றிச் சந்தனம் வேர்வையில் இடம் மாறிக் கொண்டிருந்தது. விபூதியில்லாமல்   வெறும் சந்தனமே பூசியிருப்பார் போல. ருத்திராட்க்ச மாலை சட்டைக் காலரூடே தொங்கிக் கொண்டிருந்தது.எதிரில் சுற்றியிருந்த கடவுள்களின் படங்கள் புதிதுபுதியதாய் சாமியார்களைக்  காட்டிக் கொண்டிருந்தன. குத்து விளக்கொன்று நியான் விளக்கில் பிரகாசித்துக் கொண்டிருந்தது. ஜோதிடப் புத்தகங்கள் அவனுக்கு முட்டு கொடுத்து உட்காரவைத்திருந்தது.சென்னை சென்ரலின் பின்பக்கம் நடந்த போது பெட்டிக்கடை ஒன்றின் நீட்சியாக அந்த ஜோஸ்யகாரர் உட்கார்ந்திருந்தார்.

” என்ன பிளைட்  லக்கேஜ் பேக்கா..”

“ ஒண்ணுமில்லே.. அழுக்குத்துணிதா..”

காலையில் ஏர்போர்ட்டில்  கூட கஸ்டமஸில் ஒருவன் கேட்டான்.  அழுக்குத்துணிதா என்று சொன்ன போது அவன் சிரித்தது ஞாபகம் வந்தது. அப்போது மலேசியாவில் செலவான ரிங்கிட்களைச் சரியாகப் பட்டியலிட்டு   அக்காவிடம் தர வேண்டும் என்பது ஞாபகம் வந்த்து.

“ எங்க போயிட்டு வர்ரே.. வேலை  அமையலியா. “

“ ஆமாமா.. ஒருத்தரைக் காணலே.  கெடைப்பாரான்னு பாத்துச் சொல்லு..”

துரையின் வலது கைரேகைகளை கூர்ந்து பார்த்தான். சோளிகளை உருட்டுடி விட்டான். விரல்களிலிருந்து நழுவி விழுந்தன. உதட்டைப் பிதுக்கினான்.   ’’ கெடச்சுருவாரா..”

ஜோஸ்யகாரன் சொல்வது எதுவாக இருந்தாலும் அக்காவிடம் அவன் சொல்லும் பதில் வேறாகத்தான் இருக்கும் என்று  முடிவு செய்திருந்தான் துரை.

——————————————————————-

*சுப்ரபாரதிமணியன், 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602

9486101003 /      subrabharathi@gmail.com

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *