“உயர உயரப் பறந்தாலும், ஊர்க் குருவி பருந்தாகுமான்னு மனிதர்கள் என்னைப் பற்றிப் பெருமையாகச் சொல்வார்கள், தெரியுமா?” என்று குருவியிடம் நக்கலடித்தது கழுகு.
“உண்மைதான். உன் பெருமை எனக்கு வராது!” என்றது குருவி தன்னடக்கமாக.
மறுநாள், வானத்திலிருந்து பொத்தென்று விழுந்தது கழுகு. பார்த்துக்கொண்டு இருந்த குருவி பதறிப்போய் கழுகின் அருகில் சென்று, “ஐயையோ! என்ன ஆச்சு?” என்று ஆதுரத்துடன் கேட்டது.
“உயர உயரப் போகிறோம் என்கிற மமதையில ரொம்ப உயரம் போயிட்டேன். ஒரு விமானத்தின் இறக்கை அடிச்சுட்டுது!” என்றது கழுகு பரிதாபமாக.
“அடடா! சரி, இரு… இதோ மருந்து கொண்டு வரேன்” என்று குருவி கிளம்ப,
“அதிருக்கட்டும். நேத்து உன்னை நான் கிண்டல் செஞ்சேன். ஆனா, பதிலுக்கு இன்னிக்கு நீ என்னைக் கேலி பண்ணலியே, ஏன்?” என்றது கழுகு.
“அது மனிதர்களோட வேலை. ‘உயர உயரப் பறந்தாலும், கழுகு விமானம் ஆகுமா?’ன்னு இந்நேரம் புதுமொழி உண்டாக்கியிருப்பாங்க!” என்று சிரித்தது குருவி.
– 19th செப்டம்பர் 2007