கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 10, 2023
பார்வையிட்டோர்: 315 
 
 

வாசல் கதவு திறக்கும் சப்தம் கேட்டது. சுப்ரமணியாகத்தான் இருக்கும். சொன்ன நேரத்திற்கு வந்து விட்டான்.

‘ஞாயிறு காலை பத்து மணிக்கு’ என்றால் மிகச் சரியாக ஹால் கடிகாரம் சங்கீதம் எழுப்புகிற நேரத்தில்.

“வாடா.. கன் டைம். நீ வரலேன்னா என்ன செய்யறதுன்னு டென்ஷன்ல இருந்தேன்” என்றேன்.

மிக நிதானமாய் அரசு முறை பயணத்தில் வந்தவன் மாதிரி நடந்து சுற்றுப் பிரதேசங்களைப் பார்வையால் அலசினான்.

“கேசட் கொண்டு வந்தியா”

குரல் என்னையும் மீறி பரபரத்தது.

வீட்டில் என்னையும் இப்போது வந்த சுப்ரமணியையும் தவிர வேறு யாரும் இல்லை. ஊஹூம். இன்னொரு நபரும் இருக்கிறார். வீட்டுக்குள் இல்லை. வெளியில்..

“பிளாஸ்க்குல காப்பியா” என்றான் மேஜை மீதிருந்ததைப் பார்த்து.

“எடுத்துக்கோ. சாப்பாடு ஆச்சா”

காப்பியின் மணம் எனக்கும் வீசியது.

அதே நேரம்..

‘ழெங்கா.. ழேய்.. ழெங்கா’

வாசல்புறமிருந்து குரல் கேட்டது.

சுப்ரமணி காபியை மேலே சிந்திக் கொண்டான். வழிந்ததைத் துடைத்துக் கொண்டான்.

“யா.. யாருடா அது”

“ப்ச்..என்னோட தலைவிதி. இன்னைக்கு எல்லாரும் ஜாலியா பங்களூர் மேரேஜுக்குப் போயிருக்க.. நான் மட்டும் ப்ரெட் ஸ்லைஸ்.. ஆப்பிள்னு அனாதையா ஒக்கார்ந்திருக்கேனே”

என் குரலில் வெறுப்பு பூர்ணமாய் வெளிப்பட்டது.

“உன் பிரதர்னு சொல்லுவியே.. அவனா.. ஸாரி. அவரா”

“அவனேதான்”

“அவரை ஏதோ இல்லத்துல விட்டு வச்சிருக்கிறதா”

“எங்கேயும் இருக்காது. ரெண்டே மாசம். ஏக ரகளை பண்ணி திரும்பி வந்துட்டான். கட்டின பணம் பூரா வேஸ்ட். அழைச்சுகிட்டு போங்கன்னு டெலிகிராம் கொடுக்கிற அளவு ரோதனை பண்ணியிருக்கான்.”

“பாவம்டா. அவரை நான் பார்த்ததே இல்லை. எங்கே.. நான் உள்ளே வரப்ப கவனிக்கலியே”

சுப்ரமணி எழுந்துவிட்டான்.

“ப்ச்.. ஒக்காருடா. பெரிய விஐபி. நீ அவசியம் பார்க்கணுமா”

“பிளீஸ்ரா”

“ழெங்கா.. ழேய்”

மீண்டும் அந்தக் குரல். தகரத்தைத் தரையில் தேய்த்த மாதிரி கர்ண கடூரமாய் தூக்கிப் போடுகிற அலைவரிசையில் கேட்டது.

“சனியன். பேசாம கிடக்கறதா பாரேன்”

பின்னாலேயே நானும் போனேன்.

வீட்டின் முன்புறம் இடப் பக்க மூலையில் சின்னதாய் ஷெட். ஆஸ்பெஸ்டாஸ் தொங்கிக் கொண்டிருந்தது.

காற்றோட்ட வசதிக்காக சிமிண்ட் ஜன்னல்.

“அங்கேதான் இருக்கான்” என்றேன் வெறுப்புடன் சுட்டிக்காட்டி.

ஒருவித ஆர்வமுடன் சுப்ரமணி ஷெட்டை நெருங்கினான்.

பாதி உடைந்து தொங்கிய கதவு வழியே எட்டிப் பார்த்தான்.

பிரேதக் களை முகத்தில் சொட்ட, செம்பட்டை தலைமுடி தடித்த பிரஷ் போல சிலுப்பி நிற்க, புழுதி படர்ந்த உடம்பும், வெறித்த பார்வையுமாய் அந்த உருவம் கண்ணில் பட்டது.

சுப்ரமணியை வெறித்தது. மெல்ல எழுந்து நின்றது. கை உயர்த்தி கோணலாய் சிரித்தது.

“குட் மார்னிங்”

“கு..குட் மார்னிங்”

“நீ.. நீ.. நாணாதானே”

அருகில் வந்து கை நீட்டித் தொட முயன்றது.

“டேய்.. கையை எடுரா” என்று அருகே போய் இரைந்தேன்.

“ழெங்கா.. தண்ணி வேணும்டா”

“கொண்டு வரேன். போய் உட்காரு”

“ழெங்கா.. பசிக்குதுடா”

“சனியனே.. இப்பதானே தட்டு நிறைய சோத்தைக் கொட்டினேன். பிசாசு மாதிரி திங்கறியே”

சுப்ரமணிக்கு ஏனோ இந்த வகை உரையாடல் பாதித்தது. அடி வயிற்றில் ஏற்பட்ட சுரீர் இன்னமும் அடங்கவில்லை.

இப்படியும் ஒரு பிறப்பா.. கூன், குருடு, செவிடு, பேடு நீங்கிப் பிறத்தலரிது..

கடவுளே என்னைக் காப்பாற்றினாய்.

“பாவம்டா. தாகமா இருக்கும் போலிருக்கு”

“அதெல்லாம் ஒண்ணுமில்லே. என்னை விரட்டணும். வேலை வாங்கணும்”

“இங்கே அசெளகரியமா இருக்குமே. ஹால்ல ஒரு ஓரமா உட்கார வச்சு..”

சுப்ரமணி முடிக்கவில்லை. எனக்கு முகம் கடுத்தது.

“மணி.. உனக்கு இவனைப் பத்தி தெரியாது. ஒரு தடவை எங்க மன்னி ஊர்லேர்ந்து வந்தப்ப இதே மாதிரி.. இவனைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டா. கூட்டிண்டு வந்தா.. தடால்னு மேலே பாஞ்சு.. கையைப் பிடிச்சு.. அசிங்கம் பண்ணிட்டான். பிரிச்சு விடறதுக்குள்ளே வெலவெலத்துப் போயிருச்சு. நீ வா. உள்ளே போலாம்” என்றேன்.

சுப்ரமணி அரை மனதாய்த் திரும்பிய அந்த வினாடியில் அவன் கையைப் பற்றிக் கொண்டது. எச்சில் ஒழுகி மேலே தெறித்தது.

“பைசா.. பைசா.. கொழு”

“ஏய்.. விடுரா”

“இரேன் ரெங்கா.காசுதானே.. நான் தரேன்”

ஒரு ரூபாய் நாணயத்தைத் துழாவி எடுத்துக் கொடுக்கப் போனபோது தட்டிப் பறித்தேன்.

“பேசாம வா. முழுங்கி வச்சு பிராணனை வாங்கும்”

சுப்ரமணிக்கு அதற்கு மேல் சுதந்திரமற்று செய்வது அறியாது என்னைப் பின் தொடர்ந்தான்.

விசிஆரில் கேசட் சொருகி டியூன் செய்ய அலைகள் முடிந்து படம் தெரிந்தது.

“எப்படிரா கிடச்சுது.. புத்தம் புதுப் படம்” என்றேன் விழிகள் விரிய.

“ம்.. ஒரு நண்பன் கடையில் இருந்தது. துபாய் பிரிண்ட்”

சுவாரஸ்யம் என்னை ஆக்ரமிக்க, சுப்ரமணியை மறந்து போனேன்.

சட்டென்று நினைவு வந்து திரும்ப, சுப்ரமணி இல்லை. எங்கே போனான்?டிவியை ஆஃப் செய்து விட்டு வெளியே வந்தேன்.

ஷெட் அருகே தண்ணீர் சொம்புடன் நின்றிருந்தான். நீர் வழிந்த உதட்டுடன் என் அண்ணா.

“சார்.. நீங்க வேலை பார்க்கழீங்களா”

“ஆமா. பெரிய ஆபீஸ். நெறைய பேர் இருக்கோம். ரூம்ல ஏஸி பண்ணியிருக்கும். மழை பேஞ்சா ஜில்லுன்னு இருக்குமே. அது மாதிரி ஜில்லுன்னு”

சராசரி மனிதனிடம் பேசுவது போல பேசிக் கொண்டிருந்தான்.

“காழ்.. இருக்கா”
“காழா”

“அதான்.. டுர்ர்.. காழ்”

“ஓ. காரா.. இருக்கே. பெரிய கார். ஸ்பீடாய் போகும்”

முட்டாள்.

ஒரு ஞாயிறு பற்றி பேசி நிர்ணயித்த அட்டவணைகளை உதாசீனப்படுத்தி இங்கே வந்து நிற்கிறான்.

என்னுள் கண்மூடித்தனமாய் கோபம் கிளர்ந்தது.

என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான்?

“வாடா. ஹி ஈஸ் இண்ட்ரஸ்டிங்.. ரொம்ப ஆசையாப் பேசறார். நான் சொன்னா நல்லா புரிஞ்சுக்கிறார்”

சுப்ரமணியின் கையை அவன் வருடிக் கொண்டிருந்த வினோதம் என் பார்வையில் பட்டது.

“ஏண்டா.. ஒனக்கென்ன பைத்தியமா.. இவன் கூட வந்து வேலை மெனக்கெட்டு நிக்கறியே”

என்னையும் மீறி வார்த்தைகள் தடித்தன.

என் இரைச்சல் அண்ணனைப் பாதித்து, பற்றியிருந்த கையை உதறி ஷெட்டின் பிறிதொரு மூலையில் ஒடுங்கிக் கொண்டான்.

சுப்ரமணி நிதானமாய் என்னைப் பார்த்தான்.

“எனக்கு.. பை காட்ஸ் கிரேஸ்.. பைத்தியம் இல்லைடா. அதனாலேதான் அவரோட பேசிகிட்டிருக்கேன்”

– பெப்ரவரி 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *