மனதிற்கினிய மேரி டீச்சர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 16, 2012
பார்வையிட்டோர்: 11,271 
 
 

ருத்துவக்குடி என்ற உடைந்த சிமெந்ட் பலகையருகே காரை நிறுத்தினான் ரகு. கண்ணாடிக் கதவைக் கீழிறக்கி, பலகையருகே கைக்குழந்தையோடு நின்றிருந்தப் பெண்ணிடம் “அம்மா.. இது மேல்மருத்துவக்குடி தானே?” என்று கேட்டான்.

“ஆமாம்.. யாரைப் பாக்க வந்திங்க?”

சொன்னான்.

“தெரியாதுங்களே.. தபாலாபீஸ் ஐயாட்டே கேட்டுப் பாருங்க..” என்றுத் தெருக்கோடிக்கு வழி சொன்னாள் குழந்தைக்காரி.

தபாலாபீஸ் எதிரே நிறுத்தி, காரிலிருந்து கைப்பெட்டியை எடுத்துப் படியேறி வருமுன், வாசலுக்கு வந்தார் ஒரு பெரியவர். “வணக்கம். நீங்க யாரு? என்ன வேணும்? இன்னிக்கு தபாலாபீஸ் லீவாச்சே? பள்ளிக்கூடத்தைப் பாக்க வந்தீங்களா?”

விழித்த ரகுவிடம், “நான் போஸ்ட்மாஸ்டர் கம் ஹெட்மாஸ்டர். பேரு சகாயம். இது போஸ்டாபீஸ் கம் எலிமென்டரி ஸ்கூல். இங்க சுத்துவட்டாரக் கிராமத்து ஜனங்க பத்து இருவது வருசமா மெட்ராசு பெங்களூர் வெளிநாடுனு போனவங்க யாரும் திரும்பலே.. குடும்பங்கள் பெயர்ந்துகிட்டே இருக்கு.. இன்னும் பட்டா போட்டு விக்காத நிலங்கள்ள வேலை செய்யுறவங்க பிள்ளைங்களுக்கு நானும் என் பெஞ்சாதியும் பாடம் சொல்லித்தரோம். அப்பப்போ டொனேஷன் குடுக்க யாருனா வருவாங்க.. அதான் அப்படிக் கேட்டேன்.. ஹ ஹ.. சொல்லுங்க உங்களுக்கு என்ன ஆவணும்?” என்ற போஸ்ட்மாஸ்டரை இப்போது ரகுவுக்குத் தெளிவாக அடையாளம் தெரிந்தது. எனினும், தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ளத் தயங்கி, “சார்… இங்கே மேரி டீச்சர்னு இருந்தாங்க. கிட்டத்தட்ட நாப்பது வருசத்துக்கு முந்தி.. இப்ப இங்க இருக்காங்களா தெரியாது.. இருந்தா சந்திச்சுப் பேசலாம்னு வந்தேன்” என்றான்.

“மேரி டீ ச் ச ரா?” என்றப் பெரியவர் அவனை ஏற இறங்க ஆழப்பார்வை பார்த்து, “நீங்க யாரு தெரியலியே?” என்றார்.

என்ன சொல்வது என்று தயங்கிய ரகு, திட்டமின்றி வளர்ந்தத் தாடியை நன்றியோடு தடவியபடி “வேண்டியவன்” என்றான். ஒருவித வேகமும் எதிர்பார்ப்பும் கலந்து, “எங்க இருக்காங்கனு தெரியுமா சார்?” என்றான்.

மேல்மருத்துவக்குடியில் அப்பொழுது உயர்நிலைப்பள்ளி இருந்தது. எட்டாம் வகுப்புக்கு மேல் அநேகமாக யாரும் படிக்கமாட்டார்கள் என்றாலும் மேல்நிலை வகுப்புக்களில் சிலராவது படித்தார்கள். அந்த வருடம் பத்தாம் வகுப்புக்கு முன்னேறியிருந்த ஆறு பேரில் ரகு ஒருவன்.

முதலில் ரகுவைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். காலை ஏழு மணிக்குள் அக்ரகாரத்துப் பவழமல்லி மரங்களை உலுக்கி, தரையில் கம்பளமாய்ப் பரந்திருக்கும் பூக்களை ஒன்றுவிடாமல் எடுத்து ஒவ்வொரு வீட்டுக்கும் இவ்வளவு என்று அவனே பங்கு போட்டுக் கொடுப்பான். எட்டு மணி வரை சிவன் கோவில் வாசலில் ‘குடியானவ’த் தெருப்பிள்ளைகளுடன் உடைத்த மரக்கிளைகளை வைத்து ஹாக்கி விளையாடுவான். எட்டரை மணி வரை கோயில் குளப்படியில் உட்கார்ந்து பாரதியார் கவிதைகளை உரக்கப் படிப்பான். ஒன்றிரண்டு பேர் அவன் படிப்பதைக் கேட்டு ரசிப்பார்கள். பிறகு குளத்து நடுவிலிருந்த மணிமண்டபத்துக்கு நீந்தி, அங்கே பத்து நிமிடம் போல் அமைதியாக உட்கார்ந்திருப்பான். அதற்குள் “ரகு” என்ற குரல் வரத்தொடங்கும். மீண்டும் படித்துறைக்கு நீந்தி, வீட்டுக்கு ஓடுவான். குளித்து, அப்பா தயாராக வைத்திருக்கும் மிளகாய்ப்பொடி எண்ணை தடவிய இட்லிகள் ஏழெட்டை விழுங்குவான். மிதமாக உப்பு பெருங்காயம் கரைத்த நீர் மோர் பருகுவான். படமாகத் தொங்கிய அம்மாவை வணங்கிவிட்டு, அடுத்தப் பதினைந்து நிமிடங்களில் கிளம்பி ஒன்பதரைக்குப் பள்ளிக்கூடம் வரும் பொழுது சரியாக முதல் மணி அடிக்கும். நேராகப் பிரார்த்தனை மையத்துக்குச் சென்று சகாயம் டீச்சருடன் சேர்ந்து நீராறும் கடலுடுத்த, வாழிய செந்தமிழ் தொடர்ந்து அன்றைய செய்திகள், பொன்மொழிகள் என்று இரண்டு பக்கம் படிப்பான்.

மேற்சொன்னவற்றில் ஏதாவது ஒன்று கணம் தப்பி நடக்குமா என்றால் நடக்காது, நடக்கவில்லை. ரகு எதையாவது தவறிச் செய்தானா, உற்சாகம் இழந்து கைவிட்டானா என்றால் இல்லை – பத்தாம் வகுப்பில் முதல் நாளன்று மேரி டீச்சரைச் சந்திக்கும் வரை.

அடுத்து மேரி டீச்சரைப் பற்றிக் கொஞ்சம் சொல்லியாக வேண்டும். பார்த்தக் கணத்தில் கேட்டதையெல்லாம்.. கேட்காததையெல்லாம்.. அவர் காலில் கொட்டி சரணாகதி என்று விழத்தூண்டும் முகம் மேரி டீச்சருக்கு. கருணையும் அழகும் கம்பீரமும் கலந்தக் களையான முகம். அவர் தெருவில் இறங்கி நடந்தால், வேகும் வெயிலை மேகம் மூடும். காற்று சங்கீதம் படிக்கும். எங்கிருந்தோ கிளிகளும் குருவிகளும் அவருக்குக் காவலாகப் பறக்கும். குழாயடியில் சண்டை போட்டவர்கள் சமாதானமாகிக் கட்டிப்பிடித்துக் கொள்வார்கள். எல்லாவற்றிலும் இனிமையான மிதம் கலந்திருக்கும் நாட்கள் வரும்பொழுது “இந்த வருசம் ஒரு பத்து மேரி டீச்சர் நாள் கிடைச்சுதோ பிழைச்சோமோ!” என்பார்கள். மாணவர்கள் போதாதென்று உடன் வேலை பார்த்த ஆணாசிரியர்கள் அக்கம்பக்கத்தில் இருப்போர் என்று அத்தனைபேரும் “மேரி மேரி” என்று ஏதோ ஒரு வகையில் அவருக்குப் பணிவிடை செய்வதில் குறியாக இருந்தார்கள்.

கேளாமல் கிடைத்த அத்தனை பணிவிடைகளும் உபசாரங்களும் ஆராதனையும் அவருக்கு எந்தவித சலனத்தையோ கிளர்ச்சியையோ உண்டாக்கவில்லை – பத்தாம் வகுப்பு மாணவன் ரகுவைச் சந்திக்கும் வரை.

முதல் நாள் வகுப்பில் நுழைந்துத் தன்னை அறிமுகம் செய்து கொண்ட மேரி, “பத்தாம்பு எஸெல்சி ரெண்டுத்துக்கும் நான் தான் உங்க க்ளாஸ் டீச்சர். பேர் சொல்லுங்க” என்றார். வரிசையாக அறிமுகம் செய்துகொண்டவர்களில் ரகு சற்று அதிகமாகத் தன்னைக் கவனிப்பதைக் கவனித்தார் மேரி. ஆங்கிலம், தொடர்ந்து கணிதம், அறிவியல், வரலாறு, தமிழ் என்று வகுப்புக்கள் முடிந்ததும் மாலையில் வாளி தண்ணீர் கந்தல் துணி சகிதம் அறைக்குள் நுழைந்த ரகுவை, மறுநாளுக்கான கணக்குப் பாடத்தைப் புரட்டிக் கொண்டிருந்த மேரி டீச்சர் கவனித்து, “என்ன ரகு, வீட்டுக்குப் போகலே?” என்றார்.

“போர்டு ரொம்ப அழுக்கா இருக்குது.. துடைச்சிட்டு நாளை விவரம் எழுதிட்டு போறேனே? உங்க அனுமதி கேட்டு உள்ளே வந்திருக்கணும்..” என்று தயங்கினான்.

“போவுது விடு.. அனுமதி கேட்டதா நெனச்சுக்குறேன், சரியா? எப்படியும் புனிதம் வந்து சுத்தம் செய்வா இல்லியா? நீ வீட்டுக்குப் போ சீக்கிரம்.. உன் நண்பர்களோட விளையாடு.. போ”.

“இல்லே டீச்சர்.. எல்லாம் எடுத்தாந்துட்டேன்.. இன்னிக்கு க்ளீன் செஞ்சுடறேன்” என்று அவசரமாகக் கரும்பலகையைச் சுத்தம் செய்தான் ரகு. பிறகு மேரி கிளம்பும் வரைக் காத்திருந்து, “டீச்சர்.. நான் உங்க கூட நடந்து வரட்டுமா? நீலக்குடி தானே போறீங்க? என் வீடும் அங்கதான்” என்றான். மேரியைக் கேளாமலே அவர் கையிலிருந்த நாலைந்து புத்தகங்களையும் பேப்பர் கட்டையும் எடுத்துக் கொண்டான். “ரொம்ப நன்றிப்பா.. ஆனா அவசியமில்லையே?” என்றார் மேரி.

மரைக்காயர் தெருவில் திரும்பிய மேரி, “நான் போய்க்கிறேன்.. நீ பத்திரமா போ.. நாளைக்கு ஸ்கூல்ல பார்க்கலாம்” என்றார். டீச்சர் மறையும் வரைக் காத்திருந்த ரகு, வேகமாக வீட்டுக்கு ஓடினான். அவனுள் புது உணர்வுகள் தீப்பொறியாய்ச் சிதறின.

மறுநாள் காலை ஒன்பது மணிக்கு மரைக்காயர் தெருமுனையில் மேரி திரும்பியதும் அங்கே நின்றிருந்த ரகுவைக் கவனித்து மென்மையாகச் சிரித்தார். “நானும் உங்க கூட வரலாம்னு வந்தேன் டீச்சர்.. ஆச்சரியமா இருக்கா?” என்றான்.

“ம்ம்.. ஆச்சரியம் இல்லேனு தான் சொல்லணும்.. ஆமா.. இது என்ன இன்னிக்கு சைக்கிள் கொண்டாந்திருக்கே?” என்றார்.

“இது எங்கப்பா சைக்கிள்.. எப்பனா யூஸ் பண்ணுவாரு. நான் இன்னிக்கு எடுத்தாந்தேன்.. ஈசியா டபுள்ஸ் அடிப்பேன்.. உங்களை ஸ்கூல்ல இறக்கி விடறேன்.. பயப்படாம உக்காருங்க” என்று பின்னிருக்கையைத் தட்டினான்.

“வேணாம்பா.. எனக்கு இந்த நடை பிடிச்சிருக்கு” என்று நடக்கத் தொடங்கினார் மேரி. ரகுவின் முகத்தில் தோன்றி மறைந்த ஏமாற்றத்தைக் கவனித்தார். நொடியில் திரும்பிய புன்னகையுடன், “பரவாயில்லை டீச்சர்.. உங்க புக்ஸையாவது குடுங்க, சைக்கிள் சுமக்கட்டும்” என்று அவரிடமிருந்து புத்தகங்களை வாங்கி கேரியரில் வைத்தான். டீச்சருடன் சைக்கிளைத் தள்ளியபடி நடந்தான். மனதுள் சிரித்த மேரி எதுவும் சொல்லாமல் நடந்தார். தன்னுடன் வருவதில் இவனுக்கு எத்தனை சந்தோஷம்! அவனாகப் பேசட்டும் என்று அமைதியாக நடந்தார். ரகு பேசவில்லை. ஸ்கூல் முனையருகே வந்ததும் திடீரென்று தயங்கிய ரகு, “டீச்சர்.. இந்தாங்க உங்க புக்ஸ்.. நீங்க தனியாவே போங்க.. நான் பொறுத்து வரேன்.. புரிஞ்சுக்காம ஏதாவது பேசுவாங்க சில பேர்” என்றான்.

முதிர்ச்சொற்களைக் கேட்டுத் திகைத்த மேரி, “புரியலியேப்பா?” என்றார்.

அடுத்த சில வாரங்களுக்கு ரகு, மேரி டீச்சரிடம் அதிகம் பேசவில்லை. காலையில் மரைக்காயர் தெரு முனையில் மேரி டீச்சரின் கைப்புத்தகங்களை வாங்கிப் பள்ளிக்கூடம் வரை சுமப்பதிலாகட்டும்… வகுப்பில் டீச்சர் சொல்வதை கவனிப்பதிலாகட்டும்.. மாலை மூன்று மணிக்கு வகுப்புக்கள் முடிந்ததும் கரும்பலகையைச் சுத்தம் செய்வதிலாகட்டும்.. எல்லாம் முடிந்ததும் மேரி டீச்சரின் புத்தகப்புரட்டல் ஓசைகளை உள்வாங்கியபடி கடைசி பெஞ்சில் சில நாட்கள் ஐந்து மணி வரைக் காத்திருப்பதிலாகட்டும்.. எந்த விதப் பேச்சு வார்த்தையும் காணவில்லை. மாறாக அவனுடையச் செய்கைகளில் சூரியன் தோன்றி மறையும் நியமத்தின் அமைதியும் விளங்காத அற்புதமும் இருந்தது. பூக்கள் மணம் வீசுவதன் புரியாப் புதிர் இருந்தது. மழைத்துளியின் அதிசயமும் மின்னலின் சாகசமும் புதைந்திருந்தது. மாலை ஐந்து மணி வரை படித்துக் கொண்டிருந்த மேரி தலை நிமிர்ந்து, “என்ன ரகு, இன்னுமா இங்கே இருக்கே? வீட்டுக்குப் போக வேணாமா?” என்பார். அந்த முக நிமிர்தலுக்காகவே காத்திருந்தவன் போல் பரவசமாகி, டீச்சரின் புத்தகங்களையும் சமீபமாக அவர் கொண்டு வரத்தொடங்கியிருந்த நீலப்பூப்போட்ட மஞ்சள் குடையையும் எடுத்துக் கொண்டு சைக்கிளில் அமைதியாக உடன் நடந்து வருவான்.

திடீரென்று ஒரு நாள் பேசத் தொடங்கினான். வழியெல்லாம் பேசினான். தனக்குப் பிடித்த பாரதி கவிதைகளைப் பற்றிச் சொன்னான். மேரி டீச்சர் வந்த பிறகே ஷெல்லி கீட்ஸ் மில்டன் என்று படிக்கத் தொடங்கியிருப்பதாகச் சொன்னான். பிடித்த கண்ணதாசன் வரிகளைப் பற்றிப் பேசினான். காலையில் கோவில்குளத்தில் நீந்தும் பொழுது பார்த்த சிறு மீன்களைப் பற்றிச் சொன்னான். பெருவயல் தாண்டி காவிரிக் கரை பற்றிப் பேசினான். கரை மணலில் புதைந்திருந்தச் சிறு ஊற்றுக்களைப் பற்றிப் பேசினான். கரையில் இருந்த ஆலமரம் பற்றிப் பேசினான். ஆலமரத்தில் கூடு கட்டியிருந்த மஞ்சள் சிறகுப் பறவைகள் பற்றிப் பேசினான். சில மாலைகளில் மெல்லிய குரலில் சினிமாப் பாடல்களை முணுத்தான்.

“என்ன பலமா பாடுறே?” என்றார் மேரி.

“நீங்க ஊருக்கு வந்ததுலந்து மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு டீச்சர்.. உங்களுக்கு இந்த ஊர் பிடிச்சிருக்கா?”

“ம்”

“பள்ளிக்கூடத்தை.. ஜனங்களை.. ”

“ம்”

“எ.. ன்.. னை?”

சிரித்தார் மேரி. “தினம் ஸ்கூலுக்கு வரே, எல்லா வீட்டுப்பாடமும் ஒழுங்கா செய்யுறே, வகுப்புல கவனமா இருக்கே.. அப்புறம் மாலை கரும்பலகை சுத்தம் செஞ்சு சாக்பீஸ் டஸ்டர் எல்லாம் எடுத்து வைக்கறே.. போதாம தினம் என் புக்ஸையெல்லாம் சுமந்து என் கூட துணைக்கு வேறே வந்திட்டிருக்கே.. உன்னைப் பிடிக்காமல் இருக்குமா? ஏன் அப்படி கேக்குறே?”

ரகு பதில் சொல்லவில்லை. தலை குனிந்து நடந்து வந்தான். அவனது முகத்தைக் கவனிக்க முடியாதபடி நடந்து கொள்கிறான் என்று புரிந்துகொண்ட மேரி சற்று வியந்தார். “ரகு.. நீ பெரியவனா வளந்ததும் என்ன செய்யுறதா எண்ணம்?”

“இப்பவே நான் பெரியவன் தான் டீச்சர்” என்ற ரகுவின் உடனடி பதிலில் தேவைக்கதிகமான அழுத்தம் இருந்ததாகப் பட்டது.

“அதில்லப்பா.. என்ன மேற்படிப்பு, என்ன தொழில், இதெல்லாம் யோசிச்சு வச்சிருக்கியா?”

“ஒரு எழுத்தாளனாகணும்னு ஆசை டீச்சர். அப்பப்போ கவிதைகள் எழுதுவேன். பாரதியார், பாரதிதாசன், தாகூர் எல்லாம் படிச்சிருக்கேன். அவங்களைப் போல எழுதணும்னு ஆசை”

“யப்பாடி! எழுத்தாளரா? பெரிய லட்சியம். நிறைய உழைக்கணும்.. படிக்கணும், எழுதிப் பழகணும், நிறையப் பயிற்சி செய்யணும்..”

“தெரியும் டீச்சர்.. நேரம் கிடைக்குறப்பல்லாம் பயிற்சி செய்வேன்.. உழைப்பேன்”

“இப்படி ஸ்கூல் விட்டதும் பலகை கழுவுறதும், என்னோட வந்திட்டிருக்குறதும்… இந்த நேரமெல்லாம் உன் லட்சியத்துக்கு செலவழிக்க உதவியா இருக்குமில்லே?”

“உங்க கூட செலவழிக்கிற இந்த நேரம் எனக்கு ஒரு புத்துணர்ச்சியைக் குடுக்குது டீச்சர்.. என் லட்சியத்துக்கு ஒரு காரணம், ஒரு நியாயம் கிடைக்குது டீச்சர்.. என்ன இப்படிக் கேட்டுட்டீங்க?” என்றான் ரகு. அவன் முகம் வாடிய வேகத்தில் மீண்டும் மலர்ந்ததை கவனித்து வியந்தார் மேரி. சரியான பதில் சொல்லத் தெரியாமல் அமைதியாக நடந்தார்.

மேரி டீச்சர் முன் வந்து நின்று “டீச்சர்… நான் ஒண்ணு கேட்டா தருவீங்களா?” என்றான்.

“கேக்கறதைப் பொருத்து.. என்னால முடிஞ்சா..”

“உங்க ஓய்வு நேரத்துல சில மணித்துளிகள் டீச்சர்” என்றான். “நாளைக்கு சனிக்கிழமை. சாயந்திரம் காவேரிக்கரைக்கு வரீங்களா? ஒவ்வொரு சனிக்கிழமையும் அஞ்சு மணிக்கு அங்கே இருப்பேன். ஆலமரம், மகிழமரம், மணல் எல்லாம் ரம்மியமா இருக்கும். சின்ன சின்ன ஊத்துக்கள் தோண்டலாம். காத்தாடி விடலாம். ஆத்துக்கு அந்தப்பக்கம் கூட்டம் கூட்டமா மயில் ஓடுறதைப் பார்க்கலாம்.. சில சமயம் மணல்லயே பட்டாம்பூச்சி பிடிக்கலாம்.. இல்லே சும்மா மணலோரமா நடந்துட்டே இருக்கலாம்.. சூரியன் மறையுறப்ப காவேரித் தண்ணியோட மணலெல்லாம் ஜொலிக்கும்.. சலிக்காம பாக்கலாம். வரீங்களா?”

“பட்டாம்பூச்சி, மயில், சன்செட்.. எனக்குப் பிடிச்சதா சொல்றியே?”

“அப்போ வரீங்களா?”

“ம்ம்ம்… என்னால் முடியாதுப்பா. சாரி..”

“பிக்னிக் மாதிரி.. நான் வீட்டுலந்து இட்லி தோசை எடுத்துட்டு வரேன்.. என்னோட கவிதை நோட்டையும் எடுத்துட்டு வரேன்.. நீங்க கேட்ட கவிதையை அங்கயே எழுதித்தரேன்..”

“பெரிய திட்டமெல்லாம் போட்டிருக்கே?”

“வரேன்னு சொல்லுங்க”

“இன்னொரு சமயம்.. ஒகே?”

ரகு வற்புறுத்தவில்லை. அதிகம் பேசவும் இல்லை. மரைக்காயர் தெரு வந்ததும் வழக்கம் போல மேரி விலகி நடக்காமல் தயங்கினார். “ரகு..” என்றார். அதற்குள் ரகு சைக்கிளில் ஏறி மறைந்துவிட்டான். “ரகு.. நாளைலந்து என் கூட வரவேண்டாம்..” என்று சொல்ல எண்ணியதை சொல்லாமலே மெள்ள வீட்டுக்கு நடந்தார் டீச்சர்.

மரைக்காயர் தெருவில் திங்கட்கிழமை காலை ரகு தனக்காகக் காத்திராதது கண்டு வியந்தார் மேரி. வகுப்பில் ரகு தன்னை வழக்கம் போல் தேவைக்கதிகமாக கவனிக்காததைக் கவனித்தார். மாலையில் பலகை சுத்தம் செய்யவோ மீண்டும் வீடு வரை உடன் நடந்து வரவோ முன்வராதது இன்னும் வியப்பாக இருந்தது. ‘நான் பிக்னிக் வராததினால் கோபமோ? ஒரு வேளை ஒரு வேளை.. என் மனதைப் புரிந்து கொண்டானா?’ என்று குழம்பினார்.

மேரி டீச்சரோடு தினம் பழக முன்வரவில்லையே தவிர, வகுப்பில் ரகு மிகுந்த கவனம் செலுத்தினான். வகுப்பில் கொடுத்த ஆங்கில கணித தமிழ் பாடங்களை அலசித் தள்ளினான். மெர்செந்ட் ஆப் வெனிஸ், க்ரேட் எக்ஸ்பெக்டேஷன்ஸ், மணிமேகலை என்று அவனுடைய கட்டுரைகளைப் படித்துப் பிரமித்துப் போனார் டீச்சர்.

இரண்டாவது திங்கட்கிழமை தன் மேஜையில் ஒரு பட்டாம்பூச்சி இருப்பதைக் கவனித்தார் மேரி. உயிரோடிருப்பதாக எண்ணி அதைத் தட்டிவிடப் போனவர், இறந்த பட்டாம்பூச்சி பதப்படுத்தப்பட்டு ஒரு சிறு மரத்தட்டில் ஒட்டப்பட்டிருப்பதைக் கவனித்தார். ரகு இருந்த திசையைப் பார்த்தபோது, பக்கத்து மாணவனோடு வேண்டுமென்றே நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பதைக் கவனித்தார். அந்த வாரம், தினம் ஒரு பட்டாம்பூச்சி அவர் மேஜையை அலங்கரித்தது.

மூன்றாவது திங்கட்கிழமை தன் மேஜை மேல் ஒரு அழகான பெரிய மயிலிறகு செருகப் பட்டிருப்பதைக் கவனித்தார். மயிலிறகின் அழகைப் பிரமித்தவாறு ரகு இருந்த திசையில் பார்த்தபோது, வழக்கம் போல் ரகு வேறு ஏதோ கவனத்தில் இருந்தான். அந்த வாரம் முழுதும் விதவிதமான மயிலிறகு அலங்காரங்கள் அவர் மேஜையை அலங்கரித்தன.

அடுத்த வாரம் ரகு பள்ளிக்கு வரவில்லை. அவனை அடிக்கடி நினைத்துக் கொண்ட மேரி டீச்சருக்குத் தன் மேல் எரிச்சல் வந்தது.

ஐந்தாம் வாரம் திடீரென்று ரகு மறுபடி பலகை துடைக்கத் தொடங்கினான். மாலை சைக்கிளுடன் டீச்சருக்காகக் காத்திருந்து புத்தகங்களை வாங்கிக் கொண்டபோது எதுவும் பேசவில்லை. தானும் எதுவும் பேசாமல் அவனிடம் புத்தகங்களைக் கொடுத்ததை உணர்ந்தார் மேரி. காலையிலும் மாலையிலும் தினம் வழியில் எதுவும் பேசாமல் நடந்தார்கள். வகுப்பில் அவன் மீது தேவையில்லாமல் தன் கவனம் செல்வதைத் தவிர்க்க முயன்றார் மேரி.

ஆறாம் வாரம் வெள்ளிக்கிழமை, பள்ளிக்கூடத்தில் திடீரென்று சர்க்கிள் இன்ஸ்பெக்டர் வந்துவிட, ஒரே கலவரம். ஒவ்வொரு வகுப்பாக வந்து கேள்வி கேட்டார். மாலை மூன்று மணிக்கு இன்ஸ்பெக்சன் முடிந்து சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மாணவர்களுக்குப் பரிசும் பத்திரமும் கொடுத்தார். தனக்கான ஜீப் வரும்வரை விளையாட்டாகப் புதிர் போட்டுக் கொண்டிருந்தார். மாணவர்களின் முறை வந்தபோது ரகு எழுந்து, “சார்.. ஒரு வயசுனு சொல்லலாம், பத்து வயசுனு சொல்லலாம், முப்பது வயசுனு சொல்லலாம், எழுபது வயசுனும் சொல்லலாம். ஒரே நேரத்துல வித விதமா வயசாகக் கூடியது ஒண்ணே ஒண்ணுதான் இந்த உலகத்துல.. அது என்ன?” என்றான். மாணவர்கள் விழித்தார்கள். இன்ஸ்பெக்டர் சிரித்து, “இதை உங்க டீச்சர் தான் சொல்லணும். மிஸ் மேரி. நீங்களே சொல்லுங்க.. உங்க ஸ்டூன்ட் தானே புதிர் போடுறாரு?” என்று சமாளித்தார். மேரி சற்று யோசித்தார்.

“நானே சொல்லிடறேன்” என்றான் ரகு. “மனம்” என்றான். மேரி டீச்சர் சபையில் விடை தெரியாமல் தடுமாறுவது அவனுக்குப் பொறுக்கவில்லை என்பது பலருக்கும் புரிந்தது என்பதை ரகு பொருட்படுத்தவில்லை.

மாலை வழியில் இருவரும் வழக்கம் போல் பேசிக்கொள்ளவில்லை. ரகுவின் புதிரும் விடையும், மேரியின் மனதை வண்டாகக் குடைந்தெடுத்தது. வீட்டுக்குள் நுழைந்தபோது மனம் கனத்திருந்தது.

மறுநாள் சனிக்கிழமை. மாலை ஐந்து மணிக்கு ரகு காவேரிக் கரைக்கு வந்தபோது, மகிழ மரத்தடியில் மேரி டீச்சர் குடையோடு நின்றிருப்பதைப் பார்த்தான். வேகமாக ஓடி மேரி டீச்சரைக் கட்டிக்கொள்ளாதக் குறையாக அவர் முன் நின்றான். “வந்துட்டீங்களா? வாங்க வாங்க” என்று அவர் பதிலுக்குக் காத்திராமல் அவருடைய கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு காவிரிக்கரைக்கு ஓடத்தொடங்கினான். “ஏய்.. நில்லு.. நில்லு” என்று நிதானித்துத் தோற்ற மேரி, அவனுடன் ஓடினார்.

அடுத்த ஒரு மணி நேரத்துக்கு பட்டாம்பூச்சி துரத்தினார்கள். நீரில் அளைந்தார்கள். ஊற்று தோண்டினார்கள். தட்டையான கூழாங்கற்களை தண்ணீரில் தட்டி எறிந்து, எத்தனை முறை தத்தி மூழ்கியது என்று கணக்கிட்டார்கள். அவ்வப்போது கத்திப் பறந்த மயில் கூட்டத்தைப் பார்த்துச் சிலிர்த்தார்கள். ஆலமரத்தடியில் ரகு கொண்டு வந்திருந்த மிளகாய்ப்பொடி இட்லியை சுவைத்தவாறு, அவன் எழுதியக் கவிதைகளைப் படித்தார்கள். காரணமில்லாமல், காரணத்துக்கான அவசியமில்லாமல், மனதாரச் சிரித்தார்கள். தங்கள் கைகளை மணலில் புதைத்து வேகமாக இழுத்த போது உண்டான மணற்பிளவு வடிவங்களைப் பற்றிப் பேசினார்கள். மேரி டீச்சரின் புடவைத் தலைப்பும் தலைமுடியும் காற்றில் படபடத்ததைக் கண்ட ரகு, “எனக்குப் படம் வரையத் தெரிஞ்சா உங்களை இப்பவே படமா வரைவேன்” என்றான். “என்னப்பா ஏமாத்திட்டியே? உனக்குப் படம் வரையத் தெரியும்னு நெனச்சனே?” என்று சிரித்த மேரி டீச்சர், அவனுடைய கவிதை நோட்டை வாங்கினார். “கொஞ்சம் அப்படியே உக்காரு” என்று அவனை அழுத்தி உட்கார வைத்தார். நிமிடங்களில் அவனையும் சூழலையும் வரைந்து அவனிடம் கொடுத்தார். “என்னுடைய பரிசு” என்றார்.

“பரிசா? எதுக்கு?”

“நீ மட்டும் பட்டாம்பூச்சி மயிலிறகுனு எனக்குத் தரலியா?” என்று மேரி அவன் முகத்தைப் பார்த்தார்.

ரகு மலர்ந்து சிரித்தான். “தேங்க்ஸ் டீச்சர்”.

சூரியன் மறையத் தொடங்கியதும் மணலோரமாக நடந்தார்கள். திடீரென்று தூறல் தொடங்க, மகிழமரத்துக்கு ஓடினார்கள். டீச்சரை இழுத்துக் கொண்டு, கவிதை நோட்டை மறைத்துக் கொண்டு, ரகு ஓடினான். மரத்தடியில் இருவரும் விழுந்தார்கள். மூச்சு முட்டி அடங்கியதும் சிரித்தார்கள். “நனைஞ்சுட்டோம் போலிருக்கே? படம் அழிஞ்சுடுச்சா?” என்றார் மேரி. சட்டைக்குள்ளிருந்து படத்தை எடுத்த ரகு, “நான் சாகற வரைக்கும் அழியாது டீச்சர்” என்றான்.

மழை வலுக்கத் தொடங்கியது. இருவரும் மரத்தடியில் டீச்சரின் மஞ்சள் குடைக்குள் நெருங்கி ஒண்டினார்கள். மழை பெய்து ஓய்ந்தது. சூரியன் அனேகமாக மறைந்து விட, மாலையும் இரவும் சந்திக்கும் நேரம். “நான் இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன் டீச்சர்” என்றான் ரகு.

“நானும் தான்”

“இந்த சந்தோஷம் நிலைக்காது இல்லியா டீச்சர்? அதைச் சொல்லத்தானே வந்தீங்க?”

சற்றே திடுக்கிட்ட மேரி அமைதியாக, “உனக்கே இது புரியுதா ரகு?” என்றார்.

“ஆமாம். எங்கப்பாவுக்குத் தெரிஞ்சா தோலை உரிச்சுடுவாரு. மத்தவங்களுக்கும் புரியாது. ஏன் இங்க வந்தோம்னு இருக்கு டீச்சர்..” என்ற ரகு, குலுங்கி அழுதான்.

அவனுடைய கைகளை மெள்ளப் பிடித்துக் கொண்ட மேரி, “போவுது விடு, ரகு” என்றார்.

“யாருக்குப் புரியாமப் போனாலும் பரவாயில்லை டீச்சர். இந்த நிலமை எனக்கு பிடிச்சிருக்கு” என்றான்.

மேரி எதுவும் சொல்லவில்லை.

“ஆனா அதைத் தொடர முடியாதுனு நீங்க நினைக்கறது எனக்குத் தெரியும் டீச்சர். மனசுக்கு வயசு கிடையாதுனு நான் சொன்னது இதை வச்சுத்தான்”

“உனக்கு எத்தனை வயசு ரகு?”

“பதினஞ்சு முடியப்போகுது டீச்சர்”

“எனக்கு இருபத்தது மூணு”

“இன்னும் பத்து வருசத்துல இந்த வயசு வித்தியாசம் பெரிசாத் தெரியாது இல்லியா டீச்சர்?”

“ஆனா இப்பத் தெரியுதே ரகு? நாம இப்பத்தானே.. இந்தக் கணத்துல தானே.. வாழ்ந்துட்டிருக்கோம்?”

“சில சமயம் எனக்கு இப்பவே இருபத்தஞ்சு வயசு போலத் தோணுது டீச்சர்”

மேரி சிரித்தார். “எனக்கு அதுல சந்தேகமே இல்லை” என்றார். பிறகு ரகுவின் கைகளைப் பிடித்து, “ரகு, நாம இன்னிக்கு இதைப் பத்திப் பேசி முடிவெடுத்தாகணும், புரியுதா? அந்த முடிவை ஏத்துக்குற பக்குவம் உனக்கு இருக்குனு தெரியும். மனசுக்கு வயசில்லைனு சொன்ன முனிவனாச்சே நீ?”

“சொல்லுங்க டீச்சர்” என்றான் ரகு, கைகளை விலக்காமல்.

“மொதல்ல இதைப் புரிஞ்சுக்க. நாம ரெண்டு பேரும் மிக நெருக்கமானவர்கள். அது மாறப்போவதில்லை. இந்தச் சூழலில்.. இப்போதைக்கு.. நண்பர்கள் என்ற முறை மட்டுமே ஒத்து வரும். வேறே எதுவும் முறையற்றதாகும்”. பதில் சொல்ல வந்த ரகுவைத் தடுத்து, “நான் இதுவரை சந்திச்ச மாணவர்களில் நீ தான் எனக்கு மிகவும் பிடித்தமானவன், நெருக்கமானவன், வெரி ஸ்பெஷல். அதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அதே போல நீ சந்திச்ச டீச்சர்கள்ள என்னை உனக்கு பிடிச்சிருக்கு இல்லையா.. உனக்காக நானே சொல்லிடறேன்” என்ற டீச்சர் அவனுடைய கைகளை விடுவித்தார்.

“உங்களை எனக்கு டீச்சர் ஸ்தானத்துக்கு மேலயே பிடிச்சிருக்கு” என்றான் ரகு. தலை குனியாமல், டீச்சரின் கண்களைப் பார்த்துப் பேசினான். மேரி வெலவெலத்துப் போனார்.

“இருக்கலாம் ரகு. நீ எனக்கு இதைச் சொல்ல வேண்டியதில்லை, உன்னுடைய செயல்களையும் உணர்வுகளையும் நான் கவனிக்கலைனோ மதிக்கலைனோ நினைச்சுடாதே, இருந்தாலும் உன் நேர்மையைப் பாராட்டறேன். சமூக நியதிகள் முறைகள்னு சில இருக்கு. பெரும்பான்மைக்காக வகுப்பட்டவை என்பதாலே, சிறுபான்மையும் அதோட ஒத்துப் போகணும். நம்ம வாழ்க்கையின் ஒழுங்குகளும் செயல்களும், ஒவ்வொரு காலகட்டத்துலயும் வயது வரம்பை வச்சே நியமிக்கப்பட்டிருக்கு. எதையும் நியமிக்கப்பட்ட வயதுக்கு முன்போ பின்போ செய்தா ஒழுக்கக்கேடாகும். சில சமயம் குற்றமாகும். நான் சொல்றது புரியுதா?”

“வயசு என்கிறது கோள் சுற்றலின் ஒரு பரிமாண விளைவு டீச்சர்.. பூமிக் கணக்குப்படி, செவ்வாயில எனக்கு இப்ப வயசு எட்டு. இன்னொரு கோள்ல முப்பத்திரண்டாக இருக்கலாம். நம்ம உலகத்துலயே நாலாயிரம் வருசத்துக்கு முன்னால என்னோட வயசு பதினஞ்சு கிடையாதுனு நிச்சயமா சொல்லலாம். ”

“மனசுக்குப் பல வயசுனு நீ புதிர் போட்டது, அப்பவே எனக்குப் புரிஞ்சு போச்சு ரகு” என்று மேரி புன்னகைத்தார்.

“வயசு.. உயரம்.. உடலின் இந்தப் பரிமாணங்கள்.. இதெல்லாம் இருந்தா நீங்க சொன்ன ஒழுங்கீனம் எல்லாம் இப்பவே சரியாகிடும் இல்லையா? மனசளவில நாம ஒரே வயசா இப்பவே இருந்தாலும் ஒரு பயனும் கிடையாது இல்லையா?”

“மனசளவில நாம ரெண்டு பேரும் ஒரே வயசுனு இப்ப சொல்லுறே.. இன்னும் பத்து வருசம் கழிச்சுச் சொல்ல மாட்டே.. அதான் வித்தியாசம்.. நம்ம வாழ்க்கை முறையின் மகத்துவம்”

“எனக்கு அது கொஞ்சம் கூடப் பிடிக்கலே. வருத்தமா இருக்கு”

“எனக்கும் பிடிக்கலே தான். ஆனா அதுக்காக அதை ஒதுக்கினா இன்னும் வருத்தமும் ஏமாற்றமும் உண்டாகலாம். ரெண்டு பேரோட சந்தோசமும் நிம்மதியும் கெட்டு வாழ்க்கை முழுக்க வருத்தப்படும்படி நேரலாம். சிக்கல்கள் போதாதுனு சட்டரீதியா வேறே சங்கடப்பட வேண்டிவரும் இல்லையா?”

“ஆமாம்”

“வயதுக்கு மீறின.. சாரி.. உனக்குத்தான் வயசுல நம்பிக்கை இல்லையே? எப்படிச் சொல்றது.. சில பேருக்கு சில உணர்வுகள் உடல் வளர்ச்சியோடு ஒத்து வளருவதில்லை..”

“காதல் மாதிரி” என்றான் ரகு, டீச்சரை நேராகப் பார்த்து.

சற்று நிலை தடுமாறிச் சுதாரித்த மேரி, “ரைட்” என்றார். “ஏன் எப்போ எப்படி வருதுனு சொல்லமுடியாது.. இந்த உணர்வுகள் இந்த நேரத்துல உனக்கும் எனக்கும் ஏற்பட்டிருக்கு என்கிறதை மட்டும் நாம் ஏத்துக்கிட்டு, சமூக நியதிகள் மற்றும் நியமங்களுக்கு ஏத்த மாதிரி நேர்மையான முடிவு எடுக்கறது தான் சரி, இல்லையா?”

ரகு வரட்டுத்தனமாக சிரித்தான். “சிலருக்கு எப்பவுமே இந்த உணர்வுகள் வருவது கிடையாது. கடமைக்காக வாழ்ந்துட்டுப் போயிடறாங்க. அவங்களுக்கெல்லாம் ஒழுக்கமோ ஒழுங்கீனமோ எதுவுமே தேவையில்லாமப் போயிடுது. வாழ்க்கையை நேசிச்சு ஒவ்வொரு கணத்தின் பெருமையையும் மதிப்பையும் உணர்ந்து வாழ நினைக்கிறவங்களுக்கு, முறை வரம்புனு ஆயிரத்தெட்டு சிக்கல். நீங்க சொல்றது சரிதான்”

“குட். ரெண்டு பேரும் இதைப் பத்திப் பேசினது முக்கியம். நீ என் கூட நேர்மையா இருந்த மாதிரி, நானும் என் எண்ணங்களை உன் கிட்டே மறைக்காம சொல்ல ஆசைப்பட்டேன். அதான் இன்னிக்கு இங்கே வந்தேன். நான் உன்னிடம் எதையும் மறைக்க விரும்பலே ரகு”

“புரியுது டீச்சர். தேங்க்ஸ்” என்ற ரகு, திடீரென்று டீச்சரின் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டான். “இந்த உணர்வு.. இங்கயே அழிய வேண்டியது தானா டீச்சர்?”

“சிக்கல் பிரச்சினையா மாறுமுன்னே முடிக்க வேண்டியது தான் முறை ரகு” என்று தன் கைகளை விடுவித்துக் கொண்டார் மேரி. ரகுவின் தலையை லேசாக வருடிக் கொடுத்தார். “இருட்டுறதுக்கு முன்னே வீட்டுக்குப் போவோம், சரியா?”

அமைதியாக நடந்தார்கள். “வாழ்க்கை ஒரு விசித்திரமான வரப்பெட்டி ரகு. ஒரு வரம் தொலைஞ்சு போச்சேனு வருத்தப்பட்டுத் திறந்தா, அங்கே இன்னொரு அதிசய வரம் காத்திருக்கும். ஒண்ணு முடிஞ்சு போச்சுனு வருத்தப்படாம, பத்து தொடங்குதேனு சந்தோஷப்படத் தெரியணும். இப்ப.. இந்தக் கணத்துல.. இந்த வரம் தொலஞ்சு போனதுல உனக்கு வருத்தம். எனக்கும் தான். ஆனா வரப்பெட்டியிலே நம்ம ரெண்டு பேருக்குமே வேறே வரங்கள் காத்திட்டிருக்கலாம்” என்றார் மேரி.

“ஒரு வரம் நம்ம ரெண்டு பேருக்குமே ஒத்து வரும்”

“என்ன?”

“நம்ம ரெண்டு பேருக்கும் பத்து வருஷம் வயசு கூடிச்சுனா?”

“அப்ப எனக்கு முப்பதுக்கு மேலே வயசாயிடும். இப்ப இருக்குற மேரி டீச்சரா இருக்க மாட்டேன். நீயும் இப்பத்து ரகுவா இருக்க மாட்டே. சரிப்பட்டு வராது”

“ஆனா அந்த வரம் உங்களுக்கு இஷ்டம் தானே?” ரகுவின் குரலில் ஆற்றாமையும் ஆத்திரமும் ஒலித்தது.

“ஈஸி ரகு. அந்த வரத்துல எனக்கு இஷ்டம் தான். போதுமா?” மேரி அவன் தலையைக் கோதினார். “இதை முடிச்சாகணும் ரகு. இந்த விஷயம் நம்ம ரெண்டு பேருக்கு மட்டுந்தான் தெரியும். நான் வேறே ஸ்கூலுக்கு ட்ரேன்ஸ்பர் வாங்கிட்டுப் போற வரைக்கும் டீச்சர் மாணவனா நடந்துக்குவோம். ட்ரேன்ஸ்பர் வந்துரும்”.

அடுத்த இரண்டு நாள் ரகு பள்ளிக்கு வரவில்லை. மூன்றாம் நாள் காலை மரைக்காயர் தெருமுனையில் சைக்கிளோடு நின்று கொண்டிருந்தான். “டீச்சர், இன்னிக்கு உங்க கூட வரேன். கொஞ்சம் பேசணும். பரவாயில்லியா?”

டீச்சர் புன்னகையுடன், “யாருப்பா நீ, ரகு மாதிரி இருக்கியே?” என்றார்.

“ட்ரேன்ஸ்பர் போடாதீங்க டீச்சர்” என்றான் நேரடியாக.

“ஏன்?”

“எங்கப்பாவுக்கு ட்ரேன்ஸ்பர் வருது டீச்சர். திங்கட்கிழமை தான் அவருக்கே தெரியும். ஜனவரி ஒண்ணாந்தேதி அவருக்கு டூட்டி ஜாயின் பண்ணனும். அதனால இன்னும் ரெண்டு வாரத்துல நாங்க மெட்ராஸ் போறோம். ப்லீஸ் டீச்சர்.. நீங்க இங்கயே இருங்க.. இங்கயே இருப்பேன்னு ப்ராமிஸ் பண்ணுங்க” ரகுவின் குரல் கம்மியது.

“ரகு.. என்ன இது.. சரி சரி.. நான் ட்ரேன்ஸ்பர் வாங்கலே.. இங்கயே இருக்கேன்.. சின்னப் பிள்ளையாட்டம்.. ஒழுங்கா நடந்து வா”

“என்னால உங்களை மறக்க முடியாது, நான் வரேன் டீச்சர்” என்ற ரகு, காத்திராமல் சைக்கிளில் வேகமாகச் சென்றான். “என்னாலும்” என்று மேரி சொன்னதைக் கவனிக்கவில்லை.

“வேண்டியவங்களா? அப்ப அவங்க இறந்து போனது உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமே?” என்றார் போஸ்ட்மாஸ்டர் சகாயம். “தெரியாதா?”

இதயம் நசுங்கியது போல் உணர்ந்தான் ரகு. “இறந்துட்டாங்களா?”

“ஆமா. ஸ்கூல்ல சேந்து ஒரு வருசத்துக்குள்ளாற இறந்துட்டாங்க. தோமையார் சமாதியில தான் புதைச்சிருக்கம். வந்து பாக்கறீங்களா?”.

மேரி டீச்சரின் கல்லறை சரியாகப் பராமரிக்கப் படாமல் அங்கங்கே விரிசலும் புதருமாக இருந்தது. கல்லறையில், “மேரி டீச்சர். தோற்றம்: நவம்பர் 6, 1950 – மறைவு: ஜனவரி 30, 1974” என்றிருந்ததைப் படித்ததும் ரகு உடைந்து போனான். ‘இங்கயே இருக்குறதா சொன்னீங்களே டீச்சர்?..’

கைப்பெட்டியைத் திறந்து உள்ளேயிருந்த படத்தைக் கல்லறை மேல் வைத்தான். படத்தில் பதினைந்து வயது ரகு, காவிரிக்கரையில் சிரித்துக் கொண்டிருந்தான். ‘டீச்சர்.. இப்ப என்னோட உடம்புக்கு உங்களை விட வயசு அதிகம்’ என்று மனதுள் வெதும்பினான். கேவிக் கேவி அழுதான்.

குறிப்பு [−]
நீங்கள் மேலே படித்தது, ரே ப்ரேட்பரி எழுதிய ‘A Story of Love’ எனும் அற்புதச் சிறுகதையின் தழுவல். தமிழில் சில ஆக்க உரிமைகளை எடுத்துக் கொண்டுள்ளேன். பிழைகளுக்கு நானே பொறுப்பு.

– 2012/08/07

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *