மனச்சரிவு விகிதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 16, 2013
பார்வையிட்டோர்: 10,147 
 
 

”ஷூட்டிங் போயிருக்கார்! இப்பப் பார்க்க முடியாது!” வாட்ச்மேன் வாசலிலேயே மறித்தார். அவர் வேலை அது. அவருக்கு என்னையோ, என் சைக்கிள் வாடகையோ, என் காலைப் பட்டினியோ தெரியாது. சுதாகரை, தர்பார் சுதாகர் என்றால் உங்களுக்குத் தெரியும். தர்பார் என்ற மசாலா சினிமாவை இயக்கி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என் மூன்று மொழிகளிலும் வெள்ளி விழா கண்டு, தமிழ் சினிமா டைரக்டர்கள் வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டும் இன்றைய தேதிக்கு நான்கு தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கியிருக்கும் ஹாட் டைரக்டர்.

மாசிலாமணி கொஞ்சம் அதிகமாகவே கொடுத்து தனக்கு முதலில் ஒரு படம் பண்ணச் சொல்லி, அதை சாதித்தும் விட்டிருந்தார். சாலிகிராமத்தில் அவருடைய அலுவலத்தைத் தேடிக் களைத்து வியர்த்து நனைந்து, ஒரு வழியாக கண்டுபிடித்து வந்து நின்றால்…. வாட்ச்மேன் சொன்னதைக் கேட்டீர்களா? அவர் வேலை அது, அவருக்கு என்னையோ, என் சைக்கிள் வாடகையோ…..

என் பெயர் கார்த்திக். வெறுமனே கார்த்திக் என்பதை விட ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் கார்த்திக்’ என்றால் பிடிக்கும். இன்னும் இரண்டு வருடங்களில் அது நடக்கும் பாருங்கள்.

”எப்ப வருவார்?” என்று நான் கேட்டதற்கு வாட்ச்மேன் மீசையைத் தடவினார். பெரிய மீசை. அதற்கு, ‘எத்தனை பேருடா இப்படிக் கிளம்புவீங்க?’ என்று நானே அர்த்தம் பண்ணிக் கொண்டு.

”அவர் வர்ற வரைக்கும் நான் வெயிட் பண்றேன்” என்று சைக்கிளை நிறுத்தினேன்.

”யோவ்… அதெல்லாம் பார்க்க முடியாதுப்பா… சொன்னாக் கேளு! முடிஞ்சா ஷூட்டிங் நடக்குற இடத்துல பார்த்துக்க….”

”தெரியாது!” – சிம்பிளான பதில். தெரிந்தாலும் சொல்லமாட்டார். நான் விடுவதாய் இல்லை. இதுவரைக்கும் எந்த டைரக்டரையும் நேரில் பார்க்க முடிந்ததில்லை. எங்கே போனாலும், ஏதாவது சொல்லி வாட்ச்மேனோ அல்லது மனைவியோ, துணைவியோ அல்லது எல்.கே.ஜி வாண்டுகளோ(டாடி சாயங்கானம் வழச் சொல்றார்!”) – அல்லது ஜிம்மியோ ஜூலியோ திருப்பி அனுப்பிவிடுவார்கள்.

இவரை இன்று பார்க்காமல் போவதில்லை. ஏனெனில் இவரைப் பற்றி நிறையப் படித்திருக்கிறேன். ஆரம்ப காலத்தில் ரொம்பக் கஷ்டப்பட்டவர் என்றும் வாய்ப்புக்காக அவர் சந்தித்த சோதனைகளையும் அவரே வார இதழில் தொடர் கட்டுரையாக எழுதி வருகிறார். கடந்த வாரம்….

‘உங்கள் திறமையில் நம்பிக்கை இருந்தால் என்னிடம் வாருங்கள்… வாய்ப்புத் தருகிறேன்!’ என்று எழுதியிருந்தார். அந்த வார்த்தைகள் தந்த உத்வேகமே… காலையிலிருந்து இந்த நிமிடம் வரை எனக்குப் பசியே இல்லாமல் செய்திருக்கிறது. என்னைப் பற்றி நான்கு விஷயங்கள் தனலெட்சுமியிடம் கேட்டால்… அந்த நான்கில் ஒன்று கார்த்திக் பசி தாங்க மாட்டான் என்பதாய் இருக்கும். (மேற்படி பெண்மணி என் அம்மா) இன்று எனக்குப் பசி இல்லை. என் உள்ளுணர்வு எப்படியும் இன்று தர்பார் சுதாகரைப் பார்த்துவிடுவேன் என்று சொல்லிக் கொண்டே இருந்தது.

அவரைப் பார்த்து என் நோட்புக்கை அவரிடம் காட்டி அதில் உள்ள கதைகளை சீன் பை சீனாகச் சொல்லி அவரை ஆச்சரியக் கடலில் மூழ்கடித்து ‘உன்னைத் தான்டா இவ்ளோ நாளா தேடிக்கிட்டு இருந்தேன்’ என்று சொல்ல வைக்க வேண்டும்.

“தம்பி… சொன்னா கேக்க மாட்டியா? அவர் வந்தார்னா என்னைத் திட்டுவார் பா…” என்றார் வாட்ச்மேன்.

“திட்டுவாரா.. எதுக்கு?”

“யாரையும் விடக்கூடாதுனு சொல்லியிருக்கார். முதல்ல அவர் அஸிஸ்டெண்ட் டைரக்டர் யாரையாவது நீ பிடிக்கணும். அவர் மூலமாத் தான் நீ உள்ளேயே வர முடியும்.”

“வேற வழி கிடையாதா?”

“இருக்கு. அதுக்கு நீ சதா இங்கேயே நிக்கணும், திட்டினா வாங்கிக்கணும், அவரா மனசு மாறி கூப்பிடற வரைக்கும் நிக்கணும்… முடியுமா?” என்றார் வாட்ச்மேன்.

முடிவு பண்ணிவிட்டேன். ” முடியும்.” -என்றேன்

“அப்ப நில்லு!”

இயக்குனர் ஆவதே லட்சியம் என்றான பிறகு இப்படி நிற்பதெற்கெல்லாம் அஞ்சுவேனா என்ன? அதிலும் எனக்கு மிகவும் பிடித்த தர்பார் சுதாகரைப் பார்ப்பதற்கு எத்தனை நாள் வேண்டுமானாலும் காத்திருக்கலாம்.

எனக்கு இந்த கிறுக்கு இயற்பியல் படிக்க காலேஜ் சேர்ந்த போது பிடித்தது. ஏதோவொரு சினிமாவை இப்படி எடுத்திருக்கலாம், அப்படி எடுத்திருக்கலாம் என்று தொடங்கிய பேச்சு, சினிமா பைத்தியமான என் நண்பன் விவேக்கை உசுப்பேற்றவே…

“சொல்றது ஈஸி.. நீ ஒரு படம் பண்ணிப் பார் தெரியும்!” -என்றான்.

‘செய்தால் என்ன?’ என்று அன்று தோன்றிய எண்ணமே இன்று வரை விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது.
நிறைய படிக்க ஆரம்பித்தேன், நிறைய எழுத ஆரம்பித்தேன், நிறைய சினிமா பார்க்க ஆரம்பித்தேன். பி. எஸ்ஸி முடித்தவுடன் மெலிசாகத் தாடி வளர்த்துக் கொண்டு சென்னை வந்துவிட்டேன். அப்பாவுக்கு விவசாயம். கொஞ்சம் நிலமும், கொஞ்சம் பணமும் இருக்கிறது. அண்ணனும் இருக்கிறான்.

“இஷ்டம் போல் செய்.. ஆனா எங்கிட்ட இருந்து சல்லிக் காசு கிடைக்காது” என்றார் அப்பா. சினிமா அவருக்குப் பிடிக்காது. அம்மா அப்பாவுக்குத் தெரியாமல் சிவாஜிப் படம் பார்ப்பாள். அப்பாவுக்குத் தெரியாமல் ஐயாயிரம் கொடுத்தாள்.

“பெருசா வா…” என்றாள். இன்னும் வரவில்லை. சென்னை வந்து ஆறு மாதம் தானே ஆகிறது…இந்த ஆறு மாதமாக எனக்கு உதவியாக இருப்பது என் நண்பன் விவேக் தான். எப்படியும் நான் டைரக்டர் ஆகிவிடுவேன் என்று என்னைவிட அவனுக்கு நம்பிக்கை அதிகம். இன்ஷுரன்ஸ் விற்றுக் கொண்டிருக்கிறான். மாதம் பனிரெண்டாயிரம் சம்பளம். பாதி வீட்டிற்கு அனுப்பிவிடுவான். சாப்பிடுவதற்காக அவன் கொடுக்கும் காசில் ஏதாவது புத்தகம் வாங்கிவிடுவேன். அல்லது சினிமா டிவிடி வாங்கிவிடுவேன். பல நாட்கள் நாயர் டீயும் வடையும் எனக்கு போதுமானதாக இருந்தது. இன்று அதுவும் இல்லை. பசியும் இல்லை.

மதியம் இரண்டு மணிக்கு செர்ரிச் சிவப்பில் அந்த சைலோ கார் தெருமுனையில் திரும்பியதுமே வாட்ச்மேன் கதவைத் திறந்தார். என் குருநாதர்(முடிவே பண்ணிட்டேன்) வருகிறார் போலும். கார் நெருங்கியதும் நானும் வாட்ச்மேனும் வணங்கியதை அவரும் கவனிக்கவில்லை, அருகிலிருந்த மாசிலாமணியும் கவனிக்கவில்லை.

“அண்ணே கொஞ்சம் சொல்லுங்கண்ணே…” என்றேன் வாட்ச்மேனிடம். முதன்முறையாகச் சற்று மென்மையாகப் பார்த்தார்.

“இப்பப் போய்ச் சொன்னா திட்டுவார். அனுப்பச் சொல்வார். நாலு மணிக்கு வா..” என்றார் கரிசனமாக. சரி இப்போது கிளம்பிவிட்டு நான்கு மணிக்குத் திரும்பலாம் என்று சைக்கிளருகே வந்தேன்.

“தம்பி இங்க வா…” அழைத்தார் வாட்ச்மேன்.

“என்ன அண்ணே?”

“அதோ பைக்ல வர்றார் பாரு.. அவருதான் அசோசியேட்டு, அவர் கிட்ட பேசிப்பாரு…”

“தேங்க்ஸ் அண்ணே…”

அந்த அசோசியேட் வந்தவுடன் ” வணக்கம் சார்..” என்றேன். அவருக்கு வயது முப்பதுக்குள் இருக்கும். டீ.ஷர்ட், ஜீன்ஸில் இருந்தார். பைக்கிலிருந்து இறங்கி என்னருகில் வந்து “என்ன வேணும்?” என்றவர், என் கையில் நோட்புக்கைப் பார்த்தவுடன்…

“அடுத்தப் படத்துக்கு ட்ரை பண்ணுங்க…இப்பவே சார்கிட்ட ஆறு பேர் இருக்காங்க…” என்றார். என் பதிலுக்குக் காத்திராமல் உள்ளே சென்றார்.

“சார் உங்க நம்பர் தர முடியுமா ப்ளீஸ்…” என்று பின்னால் ஓடினேன்.

“எதுக்கு? தேவையில்லை..நேர்ல வாங்க…”

“சரி சார்..”

கொஞ்ச நேரம் அவர் உள்ளே போய் ஹாலைக் கடந்து ஒரு ரூமில் மறையும் வரை நின்றேன். திரும்பி கேட் அருகில் வரும் போது ஒரு சின்ன வயலட் நிற பீட் கார் வந்து நின்றது. வாட்ச்மேனைக் காணவில்லை. உள்ளிருந்து ஒரு ஐம்பது வயதுப் பெண்மணியும், பதினெட்டு வயது மதிப்பில் ஒரு இளம்பெண்ணும்(எலுமிச்சை நிறம்) இறங்கினார்கள். உதட்டில் வண்ணமும், உடம்பில் வாசனையுமாக ஆளைத் தூக்கியது. நல்ல அழகான முகம். இடுப்புக்கு கீழே உடம்போடு சேர்த்து தைத்தது மாதிரியான கறுப்பு நிற லெகின்ஸும், வெள்ளை நிற டாப்ஸும் அணிந்திருந்தாள். எந்த உடை அணிந்தாலும், அந்த உடையைத் தாண்டித் திமிறும் தனது உடைமைகளால் அந்த உடைக்கே அணி சேர்க்கும் அழகு அவளுக்கு.

“சார் இருக்காரா…?” – என்னைப் பார்த்து அந்த ஐம்பது கேட்டது. அந்தப் பெண் கையில் ஒரு ஆல்பம் இருந்தது. எனக்கு சடுதியில் எல்லாம் புரிந்தது. ஹீரோயின் சான்ஸ் தேடி வந்திருக்கிறார்கள்.

“இருக்கார்.. உள்ள தான் இருக்கார். நீங்க..?- என்று பதினெட்டைப் பார்த்தேன்.

“அவரோட நெக்ஸ்ட் ப்ராஜெக்ட்கு ஹீரோயின் செலக்ஷனுக்காக வந்திருக்கோம்.” என்றாள்.

“ஓ.. ஐ ஸி..யூ ஜஸ்ட் வெயிட்..! ” (கடவுளே வாட்ச்மேன் வந்துவிடக் கூடாது)

வெளியில் ரிஷப்ஷனில் ஒரு பெரிய சோபா இருந்தது. அதில் அவர்களை உட்காரச் சொன்னேன். பஞ்சுக்கு வலிக்கும் போல் உட்கார்ந்தாள்.

“உங்களை வரச் சொல்லிருந்தாங்களா?” – நான் அந்த பதினெட்டிடம் கேட்டேன்.

“இல்லப்பா.. நாங்களா வந்தோம்.” – சொன்னது அந்த ஐம்பது.

அந்தப் பெண் அழகாய் முடியைப் கோதிக் கொண்டே..”நீங்க இங்க…?” -என்றது.

“நான்…நான்.. இங்க அசோசியேட்..கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார் இப்ப தான் வந்தார். நான் போய் சொல்றேன்.”

“கூல்!” என்றாள் அவள்.

“டோன்ட் மைண்ட்.. உங்க புரொஃபைலை நான் தெரிஞ்சுக்கலாமா… சார் கிட்ட சொல்றதுக்கு வசதியா இருக்கும்.”

“விஸ்காம் கிராஜுவேட்..கொஞ்சம் மாடலிங் பண்ணியிருக்கேன். குயில் சோப் விளம்பரம் தெரியுமா?”

‘குயில் சோப்பா யாருக்குத் தெரியும்…?’ – “யெஸ் பார்த்துருக்கேன். அதான் எங்கேயோ பார்த்த முகமா இருக்கேனு யோசிச்சேன். ரொம்ப அழகா குளிப்பீங்க..”

“வாட் யூ மீன்?”

“அதான் அந்த விளம்பரத்துல தொட்டில குளிக்கறது நீங்க தானே?”

“மிஸ்டர் அது டிடெர்ஜெண்ட் சோப். அந்த விளம்பரம் இன்னும் டி.வில வரல. மவுண்ட் ரோட்ல ஒரு ஹோர்டிங் இருக்கு அவ்ளோ தான்.”– முறைத்தாள்.

“அப்ப அது வேற சோப் போல.. ஆனா அவளும் உங்களை மாதிரியே அழகா…” -அவள் இடைவெட்டி,

“சாரை எப்ப பார்க்கலாம்?” என்றாள். நெற்றிப் பொட்டில் கையைத் தேய்த்து தலைவலி போல் பாவனை செய்தாள்.

“உங்க பேரு?”

“ஆராதனா”

நிஜ அசோசியேட் உள்ளிருந்து வருவதைப் பார்த்தேன். அவர் இவர்களருகில் வருவதற்குள் நான் அவரிடம் ஓடினேன்.

“என்ன?”

“தெரிஞ்சவங்க சார்.. அதோ அங்க உட்கார்ந்திருக்காளே.. அவ எனக்கு ஃப்ரெண்ட். விஸ்காம் முடிச்சிருக்கா.. ஹீரோயின் சான்ஸுக்கு வந்திருக்கா…”

“அப்ப நீ?”

“நானும் தான். அவ ஹீரோயின், நான் டைரக்டர். ஸாரி அஸிஸ்டெண்ட் டைரக்டர்.”

அவர் என்னை ஏற இறங்கப் பார்த்தார். என்ன நினைக்கிறார் என்பதைக் கண்களைப் பார்த்து கண்டுபிடிக்க முடியவில்லை.

உள்ளே ஒரு ரூமுக்கு அழைத்துச் சென்றார் அசோசியேட். ரூமில் ஒரு பெரிய மெத்தை தரையில் விரிக்கப்பட்டு, உருண்டை உருண்டையான திண்டுகளுக்கு மத்தியில் என் குரு நாதரும் தயாரிப்பாளர் மாசிலாமணியும் உரக்கச் சிரித்துக் கொண்டிருந்தனர். தட்டில் முந்திரி பக்கோடாவும், இறக்குமதி சிகரெட்டும் சிதறிக் கிடந்தன.

“கழுதை வந்தா வரட்டும். இல்லேன்னா ஆயிரம் குட்டிங்க” என்று மாசிலாமணி பேசிக்கொண்டிருக்கும் போது நம் அசோசியேட் பவ்யமாக தர்பார் சுதாகரிடம்

“ஹூரோயினுக்கு ஒருத்தியை அழைச்சுட்டு வந்திருக்கார் இந்தப் பையன்.”

“உள்ளே வாப்பா..” என்றார் தர்பார் சுதாகர். நான் சற்று படபடப்புடன் அருகில் சென்று,

“வணக்கம் சார். உங்க படம்னா எனக்கு…”

“பேர் என்ன?”

“கார்த்திக்”

“பொண்ணு எங்க?”

“வெளில சோபால”

“ஆல்பம் இருக்கா?”

“இருக்கு”

“சார் அப்படியே எனக்கும் அஸிஸ்டெண்ட் டைரக்டர் சான்ஸ்…?”

“நிறைய பேர் இருக்காங்கப்பா..”

“சார்.. சார்.. நீங்க மனசு வெச்சா முடியும் சார். எங்கிட்ட.. ” -கையிலிருந்த நோட்புக்கைப் பிரித்தேன்.

“அதை அப்படியே மூடு. உன் கதை உங்கிட்டேயே இருக்கட்டும்.” -என்று விட்டு “மூர்த்தி நீ கிளம்பு டைம் ஆகிடும்.” அருகிலிருந்த அசோசியேட்டை எங்கோ அனுப்பினார்.

என்னிடம் திரும்பி.. “சரி நீ போய் ஹால்ல வெயிட் பண்ணு. இதோ வர்றேன்.”

“சார் எனக்கு சான்ஸ்…?”

“பார்க்கலாம் பா… ”

வெளியில் வந்தேன். கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. ஆராதனாவிடம் சொல்லி அவளையும், அவள் அம்மாவையும் ஹாலுக்கு அழைத்து வந்தேன். சற்றைக்கெல்லாம் டைரக்டரும் மாசிலாமணியும் வந்தனர்.

மூவரும் எழுந்து நின்றோம். இங்கே தான் என் திறமையைக் காட்ட வேண்டும். ஆராதனாவைப் பொறுத்தவரை நான் அவருடைய அசோசியேட். டைரக்டருக்கு நான் ஆராதனாவை அழைத்து வந்தவன். இப்படியும் தெரிய வேண்டும் அப்படியும் தெரிய வேண்டும். சமாளிக்கலாம்.

“உட்காருங்க.. பேர் என்னம்மா?”

“ஆராதனா சார்”

“நல்ல பேரு. ஆல்பம் கொடு!”

எதிரே இருந்த சோபாவில் அமர்ந்தார். மாசியும் அருகே. எதுவும் நடித்துக் காட்டச் சொல்வாரோ? சிறிது நேரம் புரட்டினார்.

“லுக் நல்லா இருக்கு. ஃபோட்டோஜெனிக் ஃபேஸ் தான்” – என்றார்.

ஆராதனா முகத்தில் சிரிப்புடன் “தேங்க் யூ சார்” -என்றாள்.

“கிளாமர் பண்ணுவியாம்மா?” – மாசிலாமணி கேட்டார்.

“பண்ணுவா சார்” – சொன்னது அவள் அம்மா(?)

டைரக்டர் நமட்டுச் சிரிப்பு சிரித்தார். ஆராதனாவைப் பார்த்து “நீ சொல்லும்மா?” – என்றார்.

“கதைக்குத் தேவைன்னா பண்ணலாம் சார்” – இப்போது சுதாகரும் மாசியும் உரக்கச் சிரித்தனர். பிறகு “தேவை… கண்டிப்பா தேவை!” – என்றார் சுதாகர் சிரிப்பினூடே.

“கொஞ்ச நேரம் வெயிட் பண்ணும்மா” என்றுவிட்டு எழுந்தார் டைரக்டர். ஆல்பத்தை அவளிடம் கொடுத்துவிட்டு என்னிடம் “ரூமுக்கு வாப்பா” என்றுவிட்டு நகர்ந்தார். மாசிலாமணி அவரிடம் ஏதோ கிசுகிசுப்பாய் பேச, நான் அவர்களைத் தொடர்ந்தேன்.

ரூமுக்குச் சென்றதும் டைரக்டர் சிகரெட் பற்ற வைத்தார். திருப்தியாக இழுத்துவிட்டு என்னிடம்…
“பொண்ணு எப்படி?” – என்றார்.

“நல்ல பொண்ணு, திறமைசாலி” – என்றேன்.

“திறமைசாலி ஓகே. புத்திசாலியா?” -இது மாசிலாமணி. இதில் ஏதோ உள்ளர்த்தம் இருப்பது போல் உணர்ந்தேன். இருவரையும் மாறி மாறிப் பார்த்தேன். பிறகு டைரக்டர்,

“பொண்ணு அட்ஜஸ்ட் பண்ணுவாளா? ” – எனக்கு முதலில் புரிந்து கொள்வதில் சற்று சிரமம் இருந்தது. எதை உணர்த்துகிறார்கள் என்று குழம்பி,

“புரியலையே சார்” -என்றேன்.

“இது கூட புரியலையா?” -என்றார் டைரக்டர். இப்போது எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது. நான் மவுனமாக இருந்தேன்.

“என்னப்பா கேட்டுட்டு இருக்கேன். நீ ஒண்ணுமே சொல்ல மாட்ற…”

“சார்! அது எனக்கு தெரியாது சார்.” -எனக்கு குரல் கம்மிற்று.

“நீ அவளுக்கு நெருங்கிய ஃப்ரெண்ட் தானே?”

“அப்படியெல்லாம் கிடையாது சார். ஜஸ்ட் பழக்கம் அவ்ளோ தான்.”

“சரி.. உனக்கு அஸிஸ்டெண்ட் சான்ஸ் உறுதி. பட் நீ எனக்கு இந்த ஹெல்ப் பண்ணணும்.” -நான் மவுனமாக இருந்தேன்.

“அந்தப் பொண்ணை செகண்ட் ஹீரோயின் ஆக்கிடறேன். எங்களை அட்ஜஸ்ட் பண்ணுவாளா? பண்ண வைக்க முடியுமா உன்னால? நாங்களே கேட்டா அது நல்லா இருக்காது பாரு.”

எனக்குள் இருந்த தர்பார் இடிந்து நொறுங்கி வெறும் சுதாகர் மட்டும் கேவலமாய் என் கண்களுக்குத் தெரிந்தான். எப்படி வெளிப்படையாக வெட்கமில்லாமல் கேட்கிறான். ஆமாம் ‘ன்’ தான். அவனுக்கென்ன மரியாதை?

“என்னப்பா சொல்றே..?” பக்கத்திலிருந்த கிழ ஜந்து என்னைப் பார்த்து கேட்டது.

இருவரையும் நான் சற்று உஷ்ணத்துடம் பார்த்தேன். சற்றுக் கோபத்துடன், “அது என் வேலை இல்ல. நீங்களே கேட்டுக்கங்க?” -என்றுவிட்டு நான் வேகமாக வெளியே வந்தேன். ஹாலில் ஆராதனா

“என்ன ஆச்சு?” என்றாள். நான் அவளையே ஏற இறங்கப் பார்த்தேன். எதையோ உணர்ந்தவள் போல்,

“சும்மா சொல்லுங்க.. வேற எதுவும் எதிர்பார்க்கிறாரா?”

“வேற…?”

“அதான்…” -என்றவள், என் பதிலுக்குக் காத்திராமல் “ஓகேனு சொல்லுங்க”

அடிப்பாவி ஆராதனா நீ இவ்ளோ தானா? விஷயம் ரொம்ப சிம்பிளாக முடிந்துவிட்டது. இவள் சம்மதத்தை இவளே சொல்லாமல் நான் போய்ச் சொன்னால் எனக்கு ஒரு லைஃப் உறுதி. என்ன செய்யலாம்?

அட நான் ஒரு கிறுக்கன் சார்.. இதையெல்லாம் போய் உங்ககிட்ட சொல்லிட்டு இருக்கேன். ஆமா… நீங்க கிரெடிட் கார்டு தானே கேட்டீங்க? இதோ இந்த அப்ளிகேஷனைப் பூர்த்திப் பண்ணிக் கொடுங்க. ஒரே வாரத்துல ரெடி பண்றேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *