மண்ணின் செல்வங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 30, 2021
பார்வையிட்டோர்: 2,602 
 
 

(1987ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கந்தோரில் தன்னையும் அழைத்திருக்கிறார்கள் என்ற செய்தி ஒரு சாதாரன விவசாயி, அப்துல் ஜப்பாரின் செவி களில் நுழைந்ததும் ஒரு கணம் அப்படியே ஸ்தம்பித்து நின்றான்.

கனவா? கனவா? கண்களைக் கசக்கிவிட்டுப் பரீட்சித் துப் பார்த்தார்: ஒரு பொல்லா அசட்டுச் சிரிப்பைச் சிரித்தார். ஒரேயொரு கணம்தான்.

மகிழ்ச்சி, துன்பம், ஏக்கம், விருப்பு, வெறுப்பு அத்த னையும் கலந்து இழையோடியது. மறுகணம் அதை ஆட் கொள்வது போல் ‘கர் முர்’ என்று ஆரவாரித்துப் படை யெடுத்தது ஓர் இருமல் படலம்.

தன்னைச் சமநிலைப் படுத்திக் கொண்டு, ஒரு கல்லின் மேல் உட்கார்ந்தவர், பார்வையை நாலா பக்கமும் சுழல விட்டார்.

என்ன அற்புதமான காட்சிகள். வயலும் வயலைச் சார்ந்த நிலங்களும்.

பிறந்த மண்ணின் பசுமையான சௌந்தர்யம் அவர் நெஞ்சை அள்ளியது.

ஏரோடும், எந்திரத்தோடும் உழைத்து. உழைத்து ஓடாய்ப்போன அவருக்கு அன்று சூழவின் இயற்கை செயற்கை வினோதங்களைக் கண்குளிரப் பார்க்கப் பார்க்க சர்வாங்கமும் புல்லரித்துப் போய்விட்டது.

மண்ணிலும் வியர்வையிலும் தோய்ந்து போன அந்த அழுக்குப் படிந்த கந்தல் சேர்ட், நிறம் மாறிப்போன சாரம், தலையை மறைத்துக் சுற்றியுள்ள துவாய்.

இவைதான் பழையிலும் வெய்யிலிலும் அவருக்குப் பாதுகாப்பளிக்கும் கவசங்கள்.

வயலிலிருந்து வரும் வழியில் மஜீத் காக்காவின் கடை யில் சாம்பிராணி, ஊதுவத்தி வாங்கப்போய், ஒரு கட்டு யாழ்ப்பாணச் சுருட்டும் கையோடு வாங்கி வந்திருந்தார்.

“பீடி குடிச்சத்தினால தான் இந்த பலாய்ப் பிடிச்ச இருமல்” என்று மனைவி ஓயாது ஏச, இப்பொழுதெல்லாம் சுருட்டில் நாட்டம். ஒன்றை இழுத்தெடுத்து, குச்சியைக் கீறி துண்டுக் காகிதத்தைப் பற்றவைத்து அதிலிருந்து நெருப்பு மூட்டினார்.

“கந்தோருக்கு என்னையுமா அழைச்சிருக்கு?”

இப்படி எத்தனை தரம் தன்னைக் கேட்டுக் கொண் டாரோ? தனக்கு உரித்தான விவசாயக் காணிக்கு எத் தனை முறை உரிமை கோரியிருக்கிறான் என்பது மாத்திரம் அவருக்குத் தெரியும்.

ஒரு முறை அப்படித்தான், தனது அருமை மகள் கதீஜாவின் கல்யாயணத்திற்காகச் சீட்டுப்போட்டுச் சேமித்து வைத்திருந்த ரூபா ஐநூறையும் அப்படியே வாரிக்கொடுத்து விட்டுப் பேச்சு மூச்சற்றுக் கிடந்தார். அட்டானைச் சேனை யில் மணம் முடித்து குடும்பமாய் வாழும் மூத்த மகன் சுலைமான் வந்து ஏசிவிட்டுப் போயிருந்தான்.

இதுபோன்று எத்தனையோ சம்பவங்கள் வயல்களில் நெற்றி வியர்வையைச் சிந்தி, அறுவடையைத் தரும் பரம் பரையில் தோன்றிய அவர், தனக்கென ஒரு துண்டு நிலத் திற்கு உரிமைபெற எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத் தும், விளைச்சலுக்குப் பொருத்தமில்லாத மண்ணுக்கு இறைத்த நீராயிற்று.

புதிதாக ஏற்படுத்தப்பட்ட குடியேற்றத் திட்டத்தின் கீழ் அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த இடம் கமத் தொழிலுக்கோ, சேனை கொத்தவோ, வேறு தேவைக்கோ, நீர்த் துளியேனும் கிடைக்காத பாலைவனம்.

கொத்திப் பார்த்தும், ஆழக் கிணறு தோண்டியும் பூமித் தாயின் இதயத்தில் ஈரம் சுரக்கவில்லை.

ஒரு நீண்ட பெருமூச்சைத் தொடர்ந்து எழுந்தவர் மெல்ல நடையைத் தொடர்ந்தார்.

இருமலோடு சேர்ந்த மார்பு நோவு அவரைப் பிய்த்துத் தின்றது. நின்று நின்று நடந்தார். குறைச் சுருட்டை எறிந்துவிட்டு.

நடையில் மட்டும் ஒரு வேகமும், சுறுசுறுப்பும் எங் கிருந்து தான் வந்தனவோ, ஆண்டுகள் அறுபதை எட்ட, இன்னும் சில நாட்கள் பூதாகாரமாகக் காத்திருக்கின்றன.

மாட்டுக் கொட்டில் போல் காட்சிதரும் ஓலை வீட்டின் வாசலில் மனைவி சுலைஹா, வழிமேல் விழியாய்க் காத்துக் கொண்டிருந்தாள்.

வழக்கத்திற்கு மாறாக, அப்துல் ஜப்பாரின் முகத்தில் மகிழ்ச்சிக்களை மலர்ந்திருப்பதைக் கண்ணுற்ற அவளுக்கும் தாங்கமுடியாத களிப்பும் திகைப்பும் உள்ளத்தில் முட்டி மோதிக் கொண்டன.

“புள்ள சௌஹம்மோ, உனக்குத் தெரியுமா? கந்தோருக்கு என்னையும் கூப்பிட்டு இருக்கு.”

அவளுக்கு விளங்கி, அவள் மலரவிடும் புன்னகையை ரசித்தார்.

பின்னர் –

குளித்துவிட்டு, கொண்டு வந்திருந்த ஈச்சம் பழம், சாம்பிராணி முதலியவற்றை எடுத்துக்கொண்டு, ‘தக்கியாப்’ பள்ளிவாசலுக்குக் கிளம்பினார். வாரத்துக்கு ஒரு முறை ‘பாத்திஹா’ ஓதுவது வழக்கம்.

கிராமவாசிகளின் தேவைக்காக ஒரு சிறு பள்ளி கட்டியிருந்தார்கள். வெள்ளிக்கிழமை ‘ஜும் ஆ தொழுகைக்கு’ மட்டும், ‘பெரிய பள்ளிக்கு’ செல்லவேண்டும்.

‘தக்கியாப்’ பள்ளி கிராமத்தின் மத்தியில் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் மாலையில் பார்த்தால் அங்கே, ஒரு மின் விளக்கு மின்மினியைப் போல் எரிந்து கொண்டிருப்பது கிராமத்தின் எந்தப் பகுதியிலிருந்து பார்த்தாலும் நன்றாகத் தெரியும்.

பள்ளிவாசலுக்குப் பக்கத்தில் ஒதுங்கி பரந்திருப்பது ‘மைய வாடி.’ அந்தக் கிராமிய மண்ணில் பிறந்து வளர்ந்து, வாழ்ந்து மடிந்த பின்னர் அடக்கம் செய்யப்படவேண்டிய இடம் அது.

பள்ளியில் ‘மஃறிப்’ தொழுகைக்கு அழைப்பு மெல்லிதாக எதிரொலித்து, தொழுகை முடிந்ததும் –

“யா அல்லாஹ், இந்த மொறையாவது எங்கட நிலம் கிடைச்சிடனும் வாப்பா, அல்லாஹ்ட உதவிதான்…” மனம் நெகிழ்ந்து. கண்களில் நீர் துளிர்க்க அருட் பிச்சை கேட்டார் அப்துல் ஜப்பார்.

பள்ளியில் இருந்து கமழ்ந்த ஒரு வகை புனிதமான திவ்விய மணம் நாசியினுள் உரிமையுடன் நுழைந்து பக்திப் பரவசத்தை உண்டாக்கியிருக்க வேண்டும். அப்துல் ஜப்பார் பத்தியுடன் மனப்பூர்வமான ‘துவா’ பிரார்த்தனையில் ஆழ்ந்திருந்தார்.

பிரார்த்தனைகளை முடித்துக்கொண்டு திரும்பிக்கொண்டி ருந்தபோது நன்றாக இருட்டி விட்டது. ஆனால் ஒவ்வொரு நாளும் நடக்கும் குறுமணற் பாதை அவருக்குத் தண்ணீர் பட்டபாடு. கருமை சூழ்ந்து விட்டால் என்ன! அவர் வாழ்க்கையில் மூண்ட அந்தகாரம் அகன்று விட்டால் போதும் போதுமென்றிருந்தது அவருக்கு.

மளமளவென்று நடந்து இல்லத்தை அடைந்தார்.

“நாளை விடிஞ்சதும் கந்தோருக்குப் போகணும்…” மெல்ல அவர் வாய் முணுமுணுத்தது. சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்தார். மனத்திற்கு இதமாக இருந்தது.

“சோறு தின்ன வாங்களன் வாப்பா…” மங்கைப் பருவத்து கதீஜா அன்புடன் அழைத்தாள். அவருக்குப் பிள்ளைச் செல்வங்கள் நான்கு. மூத்தவன் தான் சுலைமான். இரண்டாவது வாரிசு ஊரிலேயே குடும்பமாய் ஒதுங்கிவிட்டான். ஓரளவு படித்தவன். நிரந்தர தொழில் ஒன்றும் இல்லை. மாமனாரின் வயல்கள் அவனது பொறுப்பில் விடப்பட்டுள்ளன. மூன்றாவது பெண் பதினாறு வயதில் வலிப்பு நோயால் இறந்து போனாள். கதீஜா கடைசிக் கொழுந்து. எளிய இராப்போசனம் மனைவி மக்களுடன் முடிந்தது. வயிறு நிறைந்ததைப்போல மனமும் இனிமையான நினைவுகளினால் நிறைந்தது.

உணவுக்குப் பின் அப்துல் ஜப்பாரின் குடும்பம், அலுவலகத்தில், காணிப் பத்திரங்கள் கொடுப்பதற்கு முன் கேட் கப்படும் சில மயக்கமான கேள்விகளுக்கெல்லாம், எப்படிப் பதில் பகரவேண்டுமென்று சுவாரஸ்யமாகக் கதைத்துக் கொண்டிருந்து விட்டு, இரவின் அமைதியைக் கெடுக்காமல் உறங்கிவிட்டது.

அப்துல் ஜப்பார் மட்டும் உறங்காமல் புரண்டு கொண்டிருந்தார். ‘கந்தோரில் என்னையும் கூப்பிட்டிருக்காங்க…’ என்ற வினா அவர் உள்ளத்தில் குமிழிட்டுக் கொண்டே இருந்தது.

‘ராஜ்ய சேவை’ முத்திரை குத்தப்பட்ட நிருபங்களுடன் பல பகுதிகளிலிருந்து உழவர்கள் – அலுவல வெளிப்பரப்பில் சங்கமமாகி இருந்தனர். விதவையானோரும் கணவன்மாருக்கு வர முடியாத நிலை ஏற்பட்டதன் காரணமாக, சில பெண்கள் இடுப்பிலொன்றும் கையிலொன்றுமாகக் குழந்தைகளைச் சுமந்துகொண்டும் வந்திருந்து தத்தம் கிராம விவகாரங்களைக் கலந்துறவாடிக் கொண்டிருக்கின்றனர்.

ஒருவகை மென் இரைச்சல் அங்கே பரவிக் கிடக்கிறது.

அப்துல் ஜப்பாருக்குத் தெரிந்த முகங்களான கலந்தர் லெப்பை, காதர் மொஹிதீன், ஆதம்பாவா போன்றோர் ஒரு குழுவாக இருந்து கருத்துக்கள் பரிமாறுகின்றனர்.

ஆதம்பாவாவின் நியாயமான கேள்வி இது –

“நம்மட பகுதியிலயும் புதிசா ஆக்கள குடியேத்துரயாம் எண்டு சொன்னாங்களே, எத்துன பேரு கடிதம் கொடுத்தாங்கோ? தெரியுமா?”

“நகருக்குப் பக்கத்தில் உள்ள இடங்களில் எல்லாம் விரும்பியபடி புதிசா குடியமர்த்தினா? அல்லது சும்மா வந்திருந் தாங்களா?”

காதர் மொஹிதீன் சந்தேகத்திற்கு பதில் இல்லை.

பலரும் கூடி , தாம் அறிந்து வைத்துள்ள விடயங்களை முன்வைத்தபோதுதான் அப்துல் ஜப்பாருக்கு ஒவ்வொன் றாகப் புரிய வந்தது. தமது பிரதேசத்தில் தாம் பிறந்த கிராமங்களுக்கு அருகே, போக்கு வரத்து, நீர், கல்வி முத லான வசதிகள் ஏற்படுத்தப்பட்ட இடங்களில் காணிகள் பகிரப்பட்டிருந்தால் … பாரம்பரிய கலாச்சாரக் கட்டுக்கோப் புகள் சிதையாமல் இருக்குமே என்று அவருக்கு ஓர் ஆதங்கம், உள்ளத்தைச் சுட்டு, கொந்தளிப்பையே ஏற்படுத்தியது.

அழைக்கப்படுபவர்கள் அலுவலகத்திற்குள் போவதும் வருவதுமாக இருந்தனர். எதிர்பார்ப்புகளுடன் செல்பவர்கள் திரும்பும்போது ‘பேயறைந்து காணப்படுகின்றனர். அங்கு குழுமியிருந்த ஏனையோர், அவர்களைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை. முழுக்கவனமும் தத்தம் பெயர்களை அழைக் கிறார்களா என்று செவிகளைத் தீட்டிக்கொண்டிருக்கும் போது தான், அந்தச் சுபவேளை வந்தது –

“அப்துல் ஜப்பார்…” என்ற குரல் வந்ததும், அவருக்கு வியர்த்து விட்டது. உயிரான ‘உரிமை’ கிடைத்து விட்டது போல் ஒருவகை உணர்ச்சி, நப்பாசை…

உள்ளே அழைக்கப்பட்டவருக்கு ‘கேள்வி – பதில்’ ‘தர்பார்’ நடந்து முடிந்தது.

“சரி நீங்கள் போகலாம், நாங்கள் அறிவிப்போம்..”; சற்றும் எதிர்பாராத இந்தப் பதில் அவரைக் கலக்கியது. தலையைச் சுற்றுவது போலிருந்தது. ஆத்திரம் பொங்கி எழுந்தது. எதையோ உருக்கமாகச் சொல்ல முயல்கிறார் . ஆனால் அந்தப் பொல்லாத கணத்தில் வார்த்தைகள் தொண்டையை அடைத்து விட்டது. அவருடைய உணர்ச்சி பாவங்களை ஒருசிலர் வினோதமாகப் பார்க்கின்றனர்.

அப்துல் ஜப்பார் அலுவலகத்திலிருந்து வெளியேறினார். அவரை வதைக்கும் பொல்லாத இருமல் படலம் மீண்டும் படையெடுக்க, இருமி இருமியே புழுவாய்த் துடித்தார்.

மானுட நேசர் ஒருவர், தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். இடுப்பைத்தடவி செருகி வைத்திருந்த இரண்டு வில்லைகளை எடுத்து வாயில் போட்டு நீரைப் பருகினார்.

வெளித்திடலை ஒட்டிய தார்ரோட்டில் ‘மினி பஸ்’ வந்து நின்றிருந்தது. சில கிராமவாசிகள் அமர்ந்திருந்தனர். அப்துல் ஜப்பார் ஏறிய சிறிது நேரத்தில் இரைச்சலை எழுப்பிக்கொண்டு ஓடத் தொடங்கியது.

அடுத்தநாள் அப்துல் ஜப்பார் வயலுக்குச் சென்றார். மனம் உடைந்து எரிந்து கொண்டிருந்ததைப்போல் அவர் உடலும் கொதியாய் கொதித்துக் கொண்டிருந்தது. அவரால் வேலை செய்ய முடியவில்லை. போத்தலில் கொண்டு வரப்பட்ட தேநீரைக் குடிக்க முயன்றார். அது கசந்தது.

உச்சி வேளையானதும் பகல் போசனத்திற்காக, கமக்காரர்கள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தனர். அருகருகே வீடுகள் உள்ளவர்களுக்கு உணவு கொண்டுவந்திருந்தார்கள்.

பெரிய வேப்பமர நிழலில் உட்கார்ந்து உணவுப் பொட்டலங்களைப் பிரிக்க வந்த சிலர், அங்கு அப்துல் ஜப்பார் நெஞ்சைப் பிடித்துக் கொண்டிருந்தைக் கண்டார்கள். பரிதாபத்துடன் தாங்கிப் பிடித்து அழைத்துச் சென்றனர். நடைப்பிணமாய் நடந்தார்.

அந்தச் சிறிய ‘பசாரை’த் தாண்டிக்கொண்டிருந்தபோது அவரது பார்வை ஒரு கடைக்கு முன்னால் நிலைக்குத்தி நின்றது.

இருவர் ‘டாம்’ இழுத்துக் கொண்டிருந்தனர்.

ஒருவர் ஒரேயொரு ‘காயை’த்தான் நகர்த்தினார். மறுகணம் எதிராக இருந்தவர் நான்கைந்து காய்களை ‘வெட்டி’ தோல்வியுறச் செய்தார்.

அனைவருக்கும் அது ஒரு சாதாரண காட்சியாகத்தான் தென்பட்டது. ஆனால் அவருக்கு மட்டும் அது ஓர் ஆழமான உண்மையை உணர்த்துவது போல் தோன்றியது. ‘எங்கட வாழ்க்கையும் ஒருவகை டாம் இழுப்புத்தான்…’ என்று அவர் முணுமுணுத்தார். அது மற்றவர்களுக்குப் புரியவில்லை. ‘காய்ச்சலால் வாய் உழறுதல்’ என்று கருதிக்கொண்டனர். ‘இந்த மண்ணின் செல்வங்கள்…’ என்று குறிப்பிட்டு எதையோ சொல்ல முயன்றார். மீண்டும் இருமல் வந்து தணிக்கை செய்து விட்டது.

முன்பு ஒரு முறை. கரும்புச் செய்கைக்காக வளம்மிக்க தனது இரண்டு ஏக்கர் நிலத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பின்புதான் தூரந் தொலைவில், தனது பிரதேசத்துக்கப்பால் – கொடுக்கப்பட்ட பாலையைக் கிளறி பிரயோசனம் இல்லாமல் சொந்தக் கிராமத்துக்கே திரும்ப வேண்டியதாயிற்று.

குறுகிய கால எல்லைக்குள் அங்கு நீர்ப்பாசனம் வந்ததும் அவர்கள் ஏமாளிகளாய் நின்றனர். அவர்கள் விட்டுவிட்டு வந்த இடங்களைப் புதியவர்கள் எப்படித்தான் ஆக்கிரமித் துக் கொண்டனரோ! அவருடைய காணிக்காகத்தான் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்.

வீட்டின் அறையினுள்ளே, பன்பாயில் அப்துல் ஜப் பாரை இருத்தினர். என்னவோ ஏதோவென்று விழுந் தடித்துக்கொண்டு வந்த, சுலைஹாவும், கதீஜாவும் அலறி விட்டார்கள்.

‘பரிசாரிட கசாய மருந்தொண்டுக்கும் கேட்கலியே…’

சுலைஹாவின் ஓலத்தைக் கேட்டு அயலவர்கள் கூடுகிறார்கள் –

அரசினர் பெரியாஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்ல ஆயத்தங்கள் நடக்கின்றன.

அன்று காலையில், அலுவலகத்திலிருந்து வந்த தந்திச் செய்தியைப்பற்றி யாரும் கவலை கொள்ளவில்லை –

‘பரம்பரை பரம்பரையாக இந்த மண்ணின் உரித்தாளிகள் என்ற காரணத்தால்…உங்களுக்குரிய காணிப் பத்திரம் வழங்கப்படுகிறது’ என்று காலந் தாழ்த்தி வந்த செய்தியை திருப்பித் திருப்பிச் சொன்னாலும் அப்துல் ஜப்பாரின் காதில் ஏறவா போகிறது.

காலங் காலமாக ஏமாற்றமடைந்ததன் ஏதிரொலிதான் அவரை அவ்வாறு செயலிழக்கச் செய்தது.

அவரை ஏற்றிக்கொண்டு, அந்த ‘மினிவான்’ இருபத்தைந்து மைல் வேகத்தில் மருத்துவ மனையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

– இரவின் ராகங்கள் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு : ஜூலை 1987, மல்லிகைப்பந்தல், யாழ்ப்பாணம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *