கட்டாயம் ஹெல்மெட் போட வேண்டும் என்று நீதிமன்ற உத்திரவு வந்து, அதை காவல் துறை தீவிரமாக அமுல் படுத்தத் தொடங்கியதில் நந்த குமாருக்கு ரொம்ப சந்தோஷம்!
வீட்டில் எல்லோருக்கும் டூவீலர் இருக்கிறது! காலையில் அக்கா சித்ரா ஆபிஸுக்குப் போக ஸ்கூட்டியை எடுக்கும் பொழுது, “கஷ்டப்பட்டு தலை வாரினேன்!…அத்தனையும் கலையப்போகிறது!” என்று முணு முணுத்துக் கொண்டே ஹெல்மெட்டை எடுத்து தலையில் வேண்டா வெறுப்பாக அணிவாள்!
அண்ணன் வாசு ஹெல்மெட்டை எடுத்து மாட்டும் பொழுது, “இந்த சனியனை வேறு தினசரி சுமக்க வேண்டியிருக்கு!…காதும் கேட்க மாட்டேன்கிறது…விசில் சத்தம் வேறு!…சைடில் எவனாவது வந்தாக் கூடத் தெரிவதில்லை!..” என்று ஓங்கி ஒரு குத்து குத்தி விட்டு ஹெல்மெட்டை எடுத்து மாட்டுவான்!
அப்பா தன் டி.வி.எஸ் 50 க்குப் பின் இளநீரைக் கட்டித் தொங்க விடுவது போல் ஹெல்மெட்டைக் கட்டி சைக்கிள் பூட்டு போட்டு பூட்டி விட்டு வண்டியை எடுப்பார்
அதற்குள் அம்மா “எதற்கு இப்படி கட்டிச் தொங்க விடறீங்க!….நல்லாவா இருக்கு?…”என்பாள்.
“ திருட்டு போகாம இருக்க ஜாக்கிரதை தான்!, போலீஸ்காரன் எங்கே நின்று பிடிப்பான் என்று எனக்குத் தெரியும்!….அந்த இடத்திற்கு சற்று முன்பே நின்று எடுத்து மாட்டிக் கொள்வேன்….கொஞ்சதூரம் போய் தலை மறைந்ததும் எடுத்து பத்திரப் படுத்தி விடுவேன்!…காவல் துறைக்கு ஒரு மரியாதை கொடுத்த மாதிரி இருக்கும்!….” என்பார் அப்பா!
நந்த குமார் மட்டும் விதி விலக்கு ஹெல்மெட்டும் கையுமாகவே திரிவான், இந்த வருடம் தான் கல்லூரியில் பி.யூ.சி. யில் சேர்ந்திருக்கிறான். தினசரி கல்லூரிக்கு போகும் முன் ஹெல்மெட் அணிந்து கொண்டு ரேஸில் போவது போல் பறந்து செல்வான்.
ஒரு முறை நண்பன் கேட்டான் “ஏண்டா!….நந்து முன்பெல்லாம் பைக்கை எடுத்துக் கொண்டு எங்க வீட்டிற்கு கூட வர மாட்டாய்!..இப்ப எங்க போனாலும் பைக்கில் தானே போகிறாய்?…”
“ எல்லாம் இந்த ஹெல்மெட் மகிமை தான்!…எனக்கு பதினேழு வயசு தான் ஆகிறது!…லைசன்சு வாங்க இன்னும் ஒரு வருஷம் காத்திருக் வேண்டியிருந்தது!..இப்ப இந்த ஹெல்மெட்டால் முகத்தை முழுவதையும் மூடிக் கொள்வேன்! புத்தம் புதிய பைக்..நல்ல டிரஸ்.. இப்ப இந்த ஐயாவை வழியில் போலீஸ் நிறுத்த மாட்டாங்க!..” என்றான் தெம்பாக!ஸ
– ஆகஸ்ட் 2016 பொதிகைச் சாரல்