போராளிகள் காத்திருக்கின்றனர்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 29, 2024
பார்வையிட்டோர்: 2,771 
 
 

 (2016ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-5அத்தியாயம் 6-10

அத்தியாயம்-1

தொங்குசதை வலக்கரத்தை மெதுவாக உயர்த்தி, உயர்த்தி; முதுமை கண்டு நடுங்கிக்கொண்டிருந்த விரல்களை நிரைப்படுத்தி, நிரைப் படுத்தி; 

கண்களுக்கு நிழல்தேடிக்கொண்டே சந்தியாக்கிழவன் கடலின் அந்தத்தை நோக்கினான். 

‘பிரளயம் ஒன்று வரத்தான் போகுது’ என்று அடிமனதுக்குள் தீர்மானித்துக் கொண்டான். 

தெற்குநோக்கித் தெற்குநோக்கி, கிழக்கு நோக்கிக் கிழக்குநோக்கி, மேற்குநோக்கி மேற்கு நோக்கி சந்தியாக் கிழவன் நின்றநிலை, வெளிப் பிரதேசம் ஒன்றில் நின்று எல்லை காக்கும் போர்வீரன் ஒருவன் எதிரி களின் தலைக்கறுப்புக் கண்ணுக்குத் தெரிகிறதா என்று அலசிப் பார்ப்பது போலத்தான் இருந்தது. 

‘எட பேதிறு, எடபொடி, கடல் மணக்குதடா மோனை; பிரளயந்தான் வரப்போகுது!’

பக்கத்தே நின்ற பேதிறுவை விழித்து சந்தியாக்கிழவன் கூறினான்; புயலோ பிரளயமோ வரப்போவதற்கான அறிகுறியை நன்றாகக் கணித்துவிட்டுத்தான் அவன் இப்படிக் கூறினான். 

அவனுக்குக் கடல் மணத்துவிட்டது. அதன் வாசனையை அவன் நன்கு சுவாசித்துவிட்டான். அது நிச்சயமாகச் சூறாவளி பிரளயத்துக் கான வாசனையாகத்தான் இருக்க முடியும். சந்தியாக் கிழவனுக்கு இது பழக்கப்பட்ட அனுபவந்தான்! 

‘என்னெனை பிரளயமாணை வரப்போகுது?’ என்று சிலாகித்துக் கொண்டே பேதிறு கிழவனுக்கு மிகவும் சமீபமாக வந்தான். அவன் வாயில் புகைந்து கொண்டிருந்த கோடா போடாத புகையிலைச் சுருட்டின் வாசனை கமகம என்று வீசியது. புகைத் தளிர்கள் மெதுவாக வீசிய காற்றிடையே கரைந்து அழிந்தன. 

மடிப்பெட்டியைத் திறந்து அதிலிருந்து புகையிலையை முறுக்கித் திருகி வாய்க்குள் வைத்தபடியே சந்தியாக் கிழவன் மறுபடியும் கடலின் அந்தத்தைக் கூர்ந்து கூர்ந்து பார்த்தான். இலாவகமாக வளைந்த கிறிஸ் கத்தியைப் போன்ற இமை மயிர்கள் அணிவகுத்து நிற்க, ஆழத்தி லிருந்த விழிகளைக் கூர்மைப்படுத்திக் கொண்டே அவன் மறுபடியும் மேற்குக் கிழக்குத் தெற்காக நோக்கினான். 

வானத்தின் அந்தம் மூடமிட்டுக் கறுத்துக் கிடந்துவிட்டு, வேகமாக மேலெழுந்து பரவுவது அவனின் கூரிய கண்களுக்குத் தெரிந்தது. இருந்தாற்போலக் காற்றுச் சுழித்துக்கொண்டது. 

‘மோனை, வாடைக் கொண்டலுக்கை மூடம்போடுது தெரியேல் லையே’ 

சந்தியாக் கிழவன் பேதிறுவிடம் ஒரு கேள்வியைக் கேட்டான். இதுவரை அமைதியாகக் கிடந்த கடல் இப்போது பெருமூச்சுவிடத் தொடங்கிவிட்டது. 

கிழவனின் கேள்விக்குக் கிழவனின் வழியிலேயே பதில் சொல்லி அங்கீகரிப்பதைப்போன்று, ‘ஓமெணை அப்பா, வெள்ளமும் நுகைக்கு தெணை?’ என்று தாழ்ந்த குரலில் பேசினான் பேதிறு. 

‘மோனை கடல் மணக்குதேடா, காத்தோடை பிரளயந்தான் வரப் போகுது! வடுவோடின கடல் நுகைக்கத் துடங்கியிட்டுது, ஐயோ வலையும் புதைச்சபடி பாட்டிலைக் கிடக்குது. இந்தப் பேயனை இன்னுங் காணேல்லை! எந்தக் கள்ளுக் கொட்டில்லைக் குடிச்சுப் போட்டுக் கிடக்குதோ! சேமாலைப்பிட்டியிலை கிடக்கிற வலை துலைஞ்சதுதான் அந்தோனியாரே!’ 

அலுத்துக் கொண்டே சந்தியாக் கிழவனின் நெஞ்சு ஏங்கியது. மருமகன் முத்துராசனை உள்ளுக்குள் நெஞ்சு திட்டித் தீர்க்கிறது. 

சந்தியாக் கிழவனின் மருமகன் முத்துராசாவும் மிகவும் குடிகாரன். கடலிலிருந்து வெளியேறிவிட்டால் நேராக அவன்போவது தம்பிப் பிள்ளையின் கள்ளுக்கொட்டிலுக்குத்தான். கடலிலிருந்து கொண்டு வரும் மீன்களைச் சந்தைப்படுத்த மனைவி வறோணிக்காவும், மாமன் சந்தியாக் கிழவனும் இருக்கின்றனர். அவனுடன் பங்குத் தொழில் நடத்தும் கூட்டாளிகள் எவருமில்லை. இதனால் அவனுக்கு மீன் சந்தைப்படுத்துவது பற்றி அக்கறையும் இல்லை. ‘அலஸ்’ என்ற ஒருவனை நித்தக் கூலியாக உதவிக்கு வைத்துக்கொண்டு தொழில் நடத்துகிறான். ‘அலஸ்’ என்ற அந்த ஊமையால் அவனுக்கு எந்தவித இடைஞ்சலும் இருந்ததில்லை. நிதமும் அவனுக்கு ஐந்து ரூபா கூலி என்றோ ஒருநாள் பிடிபாடு அதிகமானால் மேலதிகம் ஒன்றோ இரண்டோ விட்டெறிவான். தோணி கரைக்கு வந்துவிட்டதால் அலஸ் யாருக்குமே சொல்லிக் கொள்ளாமல் கடிப்பு வலை, கம்புதடி, சவள் பலகை ஆகியவைகளைக் காவிக்கொண்டு போய்விடுவான். மறுபடியும் மறுநாள் செம்முகப் படுத்தல் கிழக்கே கண்டபோதுதான் பட்டி இழுப்பதற்குப் போவதற்காக அலஸ் வருவான். இதனால் இந்த வேளை அவனைத் தேடிப் பிடிக்கச் சந்தியாக்கிழவன் நினைக்கவில்லை. எனவே கிழவன் மருமகனைக் காணவில்லையேயென ஏங்கினான். மனதுக்குள் திட்டினான். 

எடி புள்ளை வறோணிக்கா! கடல் கறுத்துப் போய்க் கிடக்குதடி, உந்தப் பொடியனைத் தேடிப்பிடிச்சுச் சேமாலைப்பிட்டிக்குப் போய் வலையைப் பிடிங்கியரச் சொல்லனெடி’ என்று கிழவன் மகளுக்குக் கேட்கக்கூடியதாக அலுத்துக்கொண்டான். 

கடலுக்கும் வீதிக்குமிடையே போடப்பட்டிருந்த சலவைக் கல்லில் சக்கப்பாணிய (சம்மணமிட்டவளாக) இருந்து சுங்கானைப் புகைத்துக் கொண்டிருந்த வறோணிக்கா, ‘அவர்களை எங்கபோய்த் தேடுறதாக்கும்!’ என்று அலுத்துக் கொண்டாள். பின்பு ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு, ‘அவர்கள் எந்தக்களுக் கொட்டிலுக்கை கிடக்குதோ’ என்று தன் மனதுள் நெடுங் காலமாக வைத்துக்கொண்டிருந்த புகைச்சலை வெளியேற்றினாள். 

‘எட அந்தோனிக் கிழவா, அங்கை பார் கடல் கறுத்துவாற மாதிரியை. எடி காத்தும் கிளம்பப்போகுது போலை கிடக்கு ‘என்று குரல் வைத்துக் கொண்டே பக்கத்து வீட்டுச் சவினம் வீதிக்கு வந்தாள். 

‘புயலும் பிரளயமும் வரப்போகிறது’ என்ற ஊகம் வலுப்பட்டு வரவர சந்தியாக்கிழவனின் நெஞ்சுக்கொதிப்பும் அதிகரித்துக்கொண்டே வந்தது. 

செபமாலைப்பிட்டியில் புதைக்கப்பட்டிருக்கும் களங்கண்டி வலைக்கு ஆயிரத்தைநூறு ரூபா செலவு செய்து இன்னும் ஒருமாதங் கூட ஆகவில்லை. இப்போது இரண்டாவது புதைப்புத்தான் நடந்திருக் கின்றது. இன்னும் பத்தில் ஒருபங்கு பணத்திற்குக்கூடப் பிடிபாடு ஆக வில்லை. அதற்கிடையில் சூறாவளி வந்து அந்த வலையை அள்ளிச் சென்றுவிட்டால்… 

சந்தியாக்கிழவன் இன்னும் கடலையே பார்த்துக்கொண்டிருந்தான். அடிவானத்து மூட்டம் அசுரவேகத்தில் மேலெழுந்து பரவி, மாலைப் பொழுதின் ஜோதிச் செக்கரை விழுங்கிவிட்டது. அங்கே மின்னல் கோடிட்டுக் கோடிட்டு விளையாட்டுக் காட்டுகிறது. 

காற்றுக் குளிர்ந்து வந்தது. 

இரண்டொரு துமிகள் அங்குமிங்குமாக விழுந்தன. அவை கடற் பரப்பின் நெஞ்சிலே இதமான ஓசையைக் கிளப்பின. 

மெதுவான பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்த கடல் சீறத்தொடங்கி விட்டது. 

கடற்கரை எங்கும் ஒரே பரபரப்பாக இருந்தது. 

நான்கு நாட்களாக ஒரே தூறலும் சிதறலுமாக இருந்த மழை காலை தான் சற்று வெளுத்து வானம் சிரித்தது. நான்கு நாட்களுக்கிடையில் அமந்து புளித்துக் கிடந்த கூறைப்பாய்ச் சீலைகளையும் துண்டு துணி களையும் கரை நீளம் காயவைத்திருந்தார்கள். மாலையாவதற்குள் மறுபடியும் மழையும் காற்றும் வந்துவிட்டதே! 

எல்லோரும் இதை வெறும் மழையென்றுதான் நினைத்தனர். ஊரில் உள்ள இரண்டொரு வலைகளைத் தவிர ஏனைய வலைகள் யாவும் கடலில்தான் புதைத்து வைக்கப்பட்டிருந்தன. கடந்த நான்கு நாட்கள் துந்துமிமழை (தூரல்மழை) இருந்தமையால் மீன் பட்டிருந்தது. 

மண்டைத்தீவை அடுத்துள்ள மீன்பாட்டில் புதைக்கப்பட்டிருந்த வலைகளுக்கு விளைமீனும் சீலாமீனும் பட்டிருந்தது. தலைமுனைக் கெந்தை மீன்பாட்டில் புதைக்கப்பட்டிருந்த பதினைந்து வலைகளுக்குப் பலதும் பத்துமாகப் பிடிபாடு நிறைய இருந்தது. 

இந்த நான்கு நாட்களிலும் ஊருக்கென்று பொதுவான பேரதிர்ஷ்டம் வந்துவிட்டதைப்போல கடற்கரையெல்லாம் மீனாகவே இருந்தது. 

செபமாலைப்பிட்டியில் எட்டுப்பாடுகள் போடப்பட்டிருந்தன. இந்த எட்டுப்பாடுகளுக்கும் நட்டுக்கு நடுவேதான் முத்துராசன் பாடடைத்திருந்தான். இந்த எட்டுப்பாடுகளுக்கும் இல்லாத விதத்தில் நட்டுக்கு நடுவாக இருந்த முத்துராசனின் பாட்டுக்குமட்டும் கடல் விரால் மீன்கள் எப்படி வந்து சேர்ந்தனவோ? 

மழைகொட்டத் தொடங்கிவிட்டது. காலையிலிருந்து கடல் வடுவில்தான் ஓடிக்கொண்டிருந்தது. அது இப்போது நுரைத்துப் பொங்கிப் பிரவாகித்துக்கொண்டிருந்தது. 

காலையிலிருந்து வீசிவந்த சோழகக்கச்சான் இப்போது வாடைக் கொண்டலாகி எதிர்மாறாகத் திசை திரும்பிவிட்டது. 

பேயிருள் வந்துவிட்டது. 

ஊரில் குய்யோ முறையோ என்ற கூச்சல் எதுவும் கேட்கவில்லை. கடலின் கோர இரைச்சலும், மழையின் ஓங்காரமும் ஊரின் குரல் களை விழுங்கிவிட்டன. கரையோர வீதியின் மின்சாரக் கம்பங்கள் வெளிச்சத்தை விழுங்கிவிட்டுப் பட்டமரமாக நின்றன. 

மின்னல் ஒன்று பளிச்சிட்டது. 

கொண்டலுக்குள் இடிமுழக்கம் பீரங்கி வெடிப்போலக் கேட்டது. சந்தியாக்கிழவன் இப்போது வீட்டு விறாந்தையில் இருந்து திடுக்குற்ற இடிவந்த திக்கை நோக்கினான். 

கண்களுக்கு ஒரு மண்ணுத் தெரியவில்லை. 

நலங்கல் போர்வையால் இறுக மூடிக்கொண்டு அவன் சுருண்டுப் படுத்துவிட்டான். 

அத்தியாயம்-2

மருமகன் முத்துராசன் இப்போதுதான் வீட்டிற்கு வந்திருந்தான். அவன் அடுக்களைக்குள் வரோணிக்காவிடம் அட்டாகாசம் செய்துகொண்டது சந்தியாக்கிழவனின் காதுவரைக் கேட்டது. 

முத்துராமன் தலைதூக்க முடியாத மதுவெறியில் வந்திருந்தான். 

‘ஊரவையெல்லாம் தங்கடை தங்கடை வலையளை நினைச்சு ஏங்கிச் சாகேக்கை இந்த மயிர் வெறியிலை செல்லங் கொண்டாடுது’ என்று சந்தியாக்கிழவன் மனதுக்குள் பொரிந்துகொண்டான். மனதில் பட்டதையெல்லாம் மனைவி வறோணிக்காவைப்போல அவன் மருமகனிடம் பட்டென்று சொல்லிவிட முடியாது. 

முத்துராசன் வெறி மயக்கத்தின் சேட்டைகளையெல்லாம் மனைவி வறோணிக்காவிடம் காட்டுகிறான். இந்த வேளை அவனுக்கு உலகத் தைப் பற்றியெல்லாம் கவலையில்லை. புத்தம் புதிய வலை கடலுக்குள் நிற்கிறதே என்பதைப்பற்றிய சிந்தனை துளிகூட இல்லை. ஆனால், மகள் சொர்ணம் ‘சாப்பிட்டாளா? படுக்கைக்குப் போனாளா?’ என்பவைகளைப் பற்றிய கவலை இருக்கவே இருக்கிறது! சொர்ணத்தைப் பற்றிய கேள்விகளால் சந்தியாக் கிழவனின் பேரையும், புகழையும் அந்தப் புதையல் காப்பாற்றிவிடும். இதற்கு அனுபவத் திறமை நிறைய வேண்டும். இந்த அனுபவத் திறமையை ஐம்பது ஆண்டுகளில் தொழிலி லிருந்து அவன் பெற்றுக் கொண்டிருந்தான். 

செபமாலைப்பிட்டியில் இந்த வலையைப் புதைப்பதற்கு முன் ‘நச்சுவாலி’ என்ற பாட்டில்தான் முதன் முதலில் புதைத்தான். 

கைக்கு எட்டாத நீரில் சாகசம் புரிந்து, ஊமை அலசுக்கும் சொல்லித் தந்து, வலைப்புதையலை முடித்தபோது கிழவனுக்குப் போதும் போதுமென்றாகி விட்டது. 

இன்று போலத்தான் அன்றும் கிழவனுக்குத் தூக்கம் வரவில்லை. அடிவானத்தில் விடிவெள்ளி முளைத்துவிட்டபோது ஊமை அலசையும், மருமகன் முத்துராசனையும் தூக்கத்திலிருந்து எழுப்பி, கடிப்பு வலையையும் கையில் தூக்கிக் கொடுத்துக் கிழவன் அனுப்பி வைத்தான். அவர்கள் திரும்பி வரும்வரை கரையிலேயே காத்திருந்தான். 

இந்த வலையின் கன்னிப் புதையலுக்குக் கடல்கன்னி நிறைய அள்ளிக் கொடுத்துவிட்டாள். நாலு பறி விளை மீனும் மூன்று பறி சீலாமீனும் பட்டிருந்தது. 

அந்த முதல்நாள் இன்பத்தை இப்போது சந்தியாக்கிழவன் நினைத்துப் பார்க்கிறான். சேற்றுக் கடலிலே புதைக்கப்பட்ட பட்டிவலைக் கம்புபோல் அந்த முதல் நாள் நினைவு அவன் மனதோடு ஆழமாகப் புதைந்து கிடக்கிறது. 

தொலைவில் எங்கோ ஒரு பெரும் மரம் அடிசாய்ந்து விழுவது போன்ற ஓசை அவன் நினைவைக் கலைத்தது. 

அந்த ஓசை வீதிக்குச் சமீபமாகக் கிழக்கு நோக்கிக் கேட்டது. அது நிச்சயமாக வீதிக்கப்பால் தண்ணி வடியும் வாய்க்கால் பக்கமாக நின்ற பூவசர மரத்தின் ஓசையாகத்தான் இருக்க வேண்டும்! 

சந்தியாக்கிழவனின் நெஞ்சு குபீரென்றது. ‘அந்த மரத்திற்கும் தனக்கும் ஒரு வயது’ என்று அவன் கூறிக் கொள்வானே அந்த மரமா சாய்ந்துவிட்டது? 

அந்த முதுமரம் இந்தச் சந்தியாக் கிழவனைப்பற்றி ஓராயிரம் கதைகளைத் தன்னுள்ளே சேகரித்து வைத்துக்கொண்டிருந்தது. 

சந்தியாக்கிழவன் இளவட்டப் பயலாக மாங்கொட்டை விளை யாட்டு, கெந்தியடித்து விளையாடியதெல்லாம் இந்த மரத்தின் பக்கமாகத்தான். அது அப்போது சின்னஞ்சிறியதாக இருந்தது. அது இப்போது கணக்கற்றக் கெட்டுக் கிளைகளைப் பரப்பி, தன்னையே கோறையாக்கிக்கொண்டு கடைசியில் அடிசாய்ந்துவிட்டது. 

சந்தியாக்கிழவன் தனது வாழ்க்கையிலேயே நினைவில் நின்ற சம்பவங்கள் சிலவற்றை அசைப்போட்டுப் பார்க்கிறான். அவை களெல்லாம் அந்த மரத்தின் சாட்சியாக நடந்திருப்பதாகப் பட்டது. 

என்றோ செத்துப்போன முதல்தாரம் அனந்தாசியுடன் கழித்த முதல் இரவு… 

ஊருக்குள் நடந்த தேவசகாயம்பிள்ளை நாடகத்தில் தான் தேவ சகாயம்பிள்ளையாக வெள்ளுடுப்புடன் பணக்கூத்தாடியது… 

இரண்டாவது மனைவியாகிய மரியாச்சியைச் சந்தித்தது… 

மகள் வரோணிக்காவும், முத்துராசனும் சந்தித்ததைப் பார்த்துவிட்டு மால்தடியால் முத்துராசனைஅடித்தது… 

முதன்முதலாக தனது வலையில்பட்ட பத்தடி மீன் ஒன்றை இழுத்து வந்து அந்தக்காலத்து ஐம்பது ரூபாவுக்கு விலைகூறி விற்றது. எல்லாமே அந்த மரத்தடியில் தான்… 

இந்த நாட்களையெல்லாம் அவன் எண்ணிப் பார்த்த போது, இரண்டாவது மனைவி மரியாச்சியுடன் கழித்த நாட்கள். 

தான் தேவசகாயம்பிள்ளையாக வந்து சிங்கக் கூட்டில் தள்ளப்பட்டு, படித்ததொன்றைக் கேட்டுவிட்டு மரியாச்சி விம்மி விம்மி அழுது… 

இதை அவன் பலதடவைகள் எண்ணி எண்ணிப் பார்த்துக்கொள் கிறான். 

இப்போது தன்னந்தனியான ஒரு பெருமூச்சு எழுந்து வந்துவிட்டது. நலங்கிப்போன போர்வையை இழுத்தெடுத்து மூடிக்கொண்டு அவன் தூங்க முற்படுகிறான். முடிவில் இலேசான தூக்கம் வந்தது. ஆனாலும் இடையிடையே தூக்கம் கலைந்து கொண்டே இருந்தது! கண்விழித்த போதெல்லாம் காற்றின் பைசாச பலம் அதிகரித்து அதிகரித்து வருவதாகத்தான் பட்டது. ஒருதடவை அவன் கண்விழித்து கண் களைக் கூர்மைப்படுத்திக்கொண்டு கடலின் வெறியையும் கவனித் தான். கடல் வீட்டுக்குப் பக்கத்தே வந்துவிட்டது போன்ற உணர்வு தோன்றியது. கடற்கரைக்கு இப்பால் மேடாகிக் கிடந்த வீதியையும் மேவிக்கொண்டு கடல் வந்துவிட்டதாகக் கிழவன் கண்டான். 

தலைமாட்டுக்குள் கிடந்த நெருப்புப்பெட்டியை எடுத்து ஒரு குச்சியை உரசிப் பார்த்தான். கடமைக்கு ஒரு தடவை மின்னிச் சிணுங்கி விட்டு அது மடிந்துவிட்டது. மறுபடியும் ஒரு குச்சியை உரசினான். அதுவும் மின்னிச்சிணுங்கி மடிந்துபோயிற்று. 

மிகுந்த பிரயாசத்தின்மேல் எழுந்து விறாந்தைக்கு வந்த சந்தியாக் கிழவன் விறாந்தைக்கு வெளியே தலையை நீட்டி வானத்தைப் பார்த்தான். வானம் பயங்கரமாகக் கறுத்துக் கிடந்தது. காற்றில் சிதைந்து சிதறலாகிவிட்ட மழை பலமாக முகத்தில் அடித்தது. 

இந்த வயதில், இந்தச் சூழ்நிலையில் துணிச்சலுடன் விறாந்தையால் இறங்கி வெளியேவரும் துணிச்சல் சந்தியாக் கிழவனைத் தவிர வேறு யாருக்குமே வந்திருக்க முடியாது. தாழ்வாரத்தைத் தாண்டி அப்பால் ஒரு அடியை நகர்த்தியபோது கிழவன் சற்றுத் தடுமாறிப் போனான். கால் அடி சறுக்க முற்பட்டபோது, வேலியோடு ஊன்றி வைக்கப் பட்டிருந்த மரக்கோலை அவனின் வலிய கரங்கள் பற்றிவிட்டன. சமாளித்துக்கொண்டு அவன் படலையை நோக்கி வந்தான். படலையும், படலை வேலியும் இருந்த இடம் வெறிச்சோடிக் கிடந்தது. பார்வையை மீண்டும் நிதானித்துக்கொண்டு அவன் கடலை நோக்கினான். கடல் வீதியின் மேல் விளிம்போடு மோதி வழிவதும், மோதுவதுமாக இருந்தது கரையோடு கட்டிவைக்கப்பட்டிருந்ததோணிகள் வீதியோடு மோதி மோதி அல்லோலகல்லோலப்பட்டன. 

‘ஐயோ தேவனே, அந்தோனிக்கிழவா!’ என்று கிழவன் குரல் வைத்தான். ஊரும், ஊருக்கான செல்வங்களும் அழிந்துபோகின்றன என்று திகில் அவனைக் கத்த வைத்தது. 

‘வறோணிக்கா, வறோணிக்கா!’ என்ற அவனின் தொடர்ச்சியான குரலைப் பேய்க்காற்று அழித்துக்கொண்டிருந்தது. 

அத்தியாயம்-3

இரண்டு இரவுகளையும், ஒரு பகலையும் சேர்த்து தன்அசுர ஆட்சியை நடத்திவிட்டு, மறுநாட் காலை பேய்க் காற்று ஓய்ந்து போய்விட்டது. 

ஊரெல்லாம் திரண்டு கடற்கரைக்கு வந்துவிட்டது. 

கடற்பரப்பெங்கும் செம்புழுதி நிறமாகிக் கலங்கிப்போய்க் கிடந்தது. தோணிகள் யாவும் வீதியோரத்துடன் ஒதுங்கிச் சரிந்து கிடந்தன. கரையோரப் பரப்பில் வலைகளைக் காயவைப்பதற்காகப் போடப் பட்டிருந்த கம்புகளும் அத்தோடு குப்பைக் கூளங்களும் அடைந்து போய்க்கிடந்தன. 

இரணைதீவுக் கரையில் வலை புதைப்புக்காகச் சென்றிருந்த இருபது வள்ளங்களின் கணக்கெடுப்பில் நாற்பத்தெட்டுப் பேர்கள் இன்னும் திரும்பி வரவில்லையென்பது ஊர்சிதமாகிவிட்டது. 

கரையோரமெங்கும் எழுந்த பிரலாபங்கள் வான முகட்டைத் தொட்டன. 

பெண்கள் விழுந்து புரண்டனர். குரல்கள் சோர்ந்து போகும்வரை அவர்கள் பிரலாபித்தனர். யார் யாருக்குத் தேறுதல் கூறுவது? 

பலர் பலவிதமான அபிப்பிராயங்களைக் கூறினர். எல்லோர் முகங் களிலும் மரணக்களை ஒட்டிக் கிடந்தது. ஆனால், சந்தியாக்கிழவன் மட்டும் தன் அனுபவத்தை ஒட்டித் தனது அபிப்பிராயத்தை நிதான மாகக் கூறினான். 

முந்தானாள் மூன்று மணிவரையில்தான் இவர்கள் புறப்பட்டிருக் கின்றனர். இவர்கள் புறப்பட்டபோது வானம் நன்றாக வெளித்திருந்தது. அப்போது காற்று வாடைக்கச்சானாகத்தான் இருந்திருக்கிறது. அந்தக் காற்றோடு இவர்கள் பாதித் தூரத்தைத் தாண்டியிருக்க முடியும். சுமார் ஐந்து மணிக்குமேல் இலேசான கொண்டல் வீசியிருக்கிறது. இந்த ஒரு மணி நேரத்தில் இந்தத் தோணிகள் பாய்களைப் பக்கவாட்டில் சரிய விட்டு சுமார் எட்டு மைல்களைத் தாண்டியிருக்க முடியும். சுமார் ஆறுமணி வரையில்தான் பெருங்கொண்டலும், தூற்றலும் தொடங்கி யிருக்கிறது. அதுவும் அரைமணி நேரம் அது சுழன்று சுழித்துக் கொண்டே இருந்திருக்கிறது. இந்த அரைமணி நேரந்தான் மிகவும் இக்கட்டாக இருந்திருக்கும். எப்படியோ இந்த நிலையைச் சமாளித்து இந்தத் தோணிகள் யாவும் வலைப்பாட்டைத் தாண்டி இரணை தீவுக் கரையை அடைந்திருக்க முடியும். 

நீட்டி முடக்கிச் சந்தியாக்கிழவன் இந்த முடிவைத்தான் கூறினான். அவனுடைய மனத்தில் இந்த நாற்பத்தெட்டுப் பேர்களும் இரணை தீவுக் கரையில் பவுத்திரமாக இருப்பதாகவே தோன்றியது. ஏனோ இந்த முடிவை அவன் திரும்பத்திரும்பக் கூறிக்கொண்டே இருந்தான். வான சாஸ்திரமோ, கால அளவைகளோ கற்றிருக்காத சந்தியாக்கிழவனின் முடிவை எல்லோரும் ஆமோதித்தபோது அவன் தனது கடைக்கண் களிலே வழிந்த நீரை ஒருவருக்கும் தெரியாமல் துடைத்துக்கொண்டான். 

தனது இளங்கணவனைப் பறிகொடுத்துவிட்டு வீதியின் சந்து முனையில் நின்று விம்மிய நேசம்மாவின் விம்மலோசை சந்தியாக் கிழவனுக்குக் கேட்டுவிட்டது. அவன், அவளண்டை சென்று, அவள் தோள்களைத் தட்டி ‘எடி பிள்ளை பயப்பிடாதை!’ என்று அவளைத் திடப்படுத்தினான். 

சந்தியாக்கிழவன் ஒரு தடவை, இரு தடவைதான் எதையும் சொல்லுவான். இதை யாரும் ஏற்காமல் தட்டிப் பேசினால் அவனுக்குக் கோபம் புட்டுக்கொண்டு வந்துவிடும். ‘நான் சொல்வது நிச்சயமாகச் சரியானதுதான்’ என்று அசைக்க முடியாத முடிவே அப்படி அவனைக் கோபப்பட வைத்துவிடுகிறது. 

நேசம்மா மீண்டும் மீண்டும் அழுது சிணுங்கிக் கொண்டேயிருந்தாள். இரண்டு தடவை அவள் தோள்களைத் தட்டி, பரிவோடு தடவி அவளைச் சமாதானப்படுத்த முயன்ற கிழவனுக்குப் படக்கென்று கோபம் வந்துவிட்டது. ‘எடிநேசம், எடி!’ என்று பலமாக அதட்டினான். அந்தத் தணவேளை நேசம்மா சந்தியாக்கிழவனின் முகத்தைப் பார்த்து விட்டாளோ என்னவோ அப்படியே அசந்து போய்விட்டாள். 

சந்தியாக்கிழவனின் முகம் குபீரென்று சிவந்துபோய்விட்டது. கண்கள் அனல்போலத் தகித்துக்கொள்ள, காதுவரை வளர்ந்து கிடந்த நரைமீசை படபடக்க, அவன் நிலைகுத்தி நின்ற காட்சியைப் பார்த்துச் சூழ நின்றவர்களே ஏங்கிப் போயினர். 

முகத்தைத் துடைத்துக்கொண்டு நேசம்மா உள்ளே போய்விட்டாள். ‘எடே பொடியன் வாருங்கடா!’ என்று கிழவன் குரல் வைத்தான். சுமார் பத்து இளைஞர்கள் கிழவனைச் சூழ்ந்து வந்து விட்டனர். நீர் கோலிச் சரிந்து கிடந்த வள்ளங்களைச் சீர் செய்யும்படி கிழவன் ஆக்ஞை பிறப்பித்தான். 

சுமார் அரைமணி வேளைக்குள் ஐந்து தோணிகள் பிரயாணத்துக்குத் தயாராகிவிட்டன. 

கடற்கரையில் ஏங்கிக் கிடந்த மனிதக் கூட்டம் அந்தத் தோணிகளை வழியனுப்பி வைத்தது. 

‘ஆரும் அழப்படாது!’ என்ற சந்தியாக்கிழவனின் கட்டளையை முடிந்தவரை எல்லோரும் காப்பாற்றிவிட்டனர். 

கடல்பரப்பில் அணிவகுத்துச் செல்லும் ஐந்து தோணிகளின் முன் தோணியின் அணியத்திலே, கூனிக் கிடந்த நெஞ்சை நிமிர்த்திக் கொண்டே சந்தியாக்கிழவன் போர் வீரனைப்போல நின்றான். 

வானம் நன்றாக வெளுத்துவிட்டது. மழைத்துளிகளே இல்லை. கொண்டல்தன் பொல்லாத சிறகுகளை முற்றாகவே சுருக்கிக்கொண்டு விட்டது. ஆனால், அந்தக் கடற்ரையோடு கிடந்து, செத்துப் போய் விட்டதாகவே பெரும்பாலும் கருதப்பட்ட அந்த நாற்பத்தியெட்டு ஜீவன்களையும் நினைத்துக்கொண்டு காத்திருக்கும் நூற்றுக்கணக்கான ஜீவன்களின் மனதில் அமைதியே வரவில்லை! 

‘அவர்கள் பத்திரமாக இரணை தீவுக் கரையில் இருக்கிறார்கள்’ என்று சந்தியாக்கிழவன் மட்டுந்தான் சொன்னான். அந்த ஒரு கிழவனின் தீர்க்கதரிசனத்தை நம்பிக் கொண்டு இந்த மனிதர்கள் கரையோடு காத்திருக்கின்றனர். 

இன்றுவரை கடல் சம்பந்தமான கணிப்பீட்டில் சந்தியாக்கிழவனின் நாவு பொய்த்ததில்லை. 

கடல் மணத்துவிட்டால் அந்த மணத்தைச் சுவடு பிடித்து அடுத்த நிமிடத்தில் ஊதப்போகும் காற்றை அவன் சொல்லிவிடுவான். 

கடலின் நுகைப்பையும் வடுவையும் அவதானித்து இன்ன இன்ன வலைப்பாட்டில் இன்ன இன்ன மீன்கள்தான் படும் என்று அவன் சொல்லிவிட்டானானால் அப்படியேதான் மீன்கள் பட்டிருக்கும்! 

அடிவானத்தில் சுருக்கங்களையும் அவை அசைந்து செல்லும் வரிசைகளையும் அவதானித்து இத்தனை மணி வரையில் அல்லது இத்தனை நாள்வரையில் மழை வரும் என்று சொல்லிவிட்டானானால் அந்த மழை வந்தே தீரும். 

இன்ன காற்று இப்படி ஊதினால் இன்ன காற்றுப் பிறக்கப் போகிறது. என்று சொல்வானானால் அந்தக் காற்றுப் பிறந்தே தீரும். 

சுமார் பத்து விருடங்களுக்குமுன் ஒருநாள் நெடுந்தீவுக் கரையின் வலைப் புதையலுக்குப் போய்வந்து அவன் ஒரு ஆரூடம் சொன்னான். சுமார் நாற்பது முழத்திற்கும் அதிகமான திமிங்கிலம் ஒன்றுக்கு நோய் கண்டிருப்பதாகவும், இரண்டொரு நாட்களுக்குப்பின் அது பெருங் கடலில் இருந்து விடுபட்டுக் களத்துக்கு வந்துவிடுமென்றும் அது நிச்சயமாக இக்கரைக் களத்தில்தான் உயிர்விடுமென்றும் சொன்னான். அதன்படியே சில நாட்களில் கிளக்கரியாலைக் களத்தில் இராட்சத திமிங்கிலம் ஒன்று மலைபோலக் கிடந்தது. அரசாங்க கடல் அளவை யாளர்கள் அதன் நீளம் அறுபது அடி என்றார்கள். களத்திற்கு வந்த தன்மேல்தான் அது தனது ஜீவனை விட்டிருக்க வேண்டுமென்றார்கள். 

இத்தனை அனுபவம் வாய்ந்த சந்தியாக்கிழவன் இந்த நாற்பத்தி யெட்டுஜீவன்களும் இரணைதீவுக் கரையில் பத்திரமாக இருப்பதாகக் கூறினானாயினும் மனமா கேட்கிறது! கிழவனின் தோணி அணிவகுப்பு கண்களுக்கு மறைந்துவிட்டபோது அவர்கள் மீண்டும் பிரலாபிக்கத் தொடங்கிவிட்டனர். 

அத்தியாயம்-4

கோரிமுனையைத் தாண்டிக்கொண்டு தோணிகள் ஐந்தும் அணிவகுத்துச் சென்றன. 

கிழவன் இப்போதும் அணியத்தில் அதிகார தோரணையில் எழுந்து நின்றபடியே கண்களை நாற்றிசைகளிலும் ஊரவிட்டுக் கொண்டிருந்தான். 

ஒவ்வொரு தோணியிலும் மூன்று, நான்கு பேர்களாக இருந்தனர் அவர்களில் இளைஞர்கள் தோணிக்கு இருவர் வீதமே இருந்தனர். மற்றவர்கள் வயதானவர்கள். இளைஞர்களே தோணிகளைச் செலுத்திக் கொண்டிருந்தனர். 

சந்தியாக்கிழவன் நின்ற தோணியில் இரண்டு இளைஞர்கள் மட்டும் இருந்தனர். அவர்களில் ஒருவன் தோணியின் கீழ் சவள் பலகையை மாட்டிச் சுக்கான் பிடித்துக்கொண்டிருந்தான். 

அந்த இளைஞர் மிகவும் துடிதுடிப்புள்ளவனாக இருந்தான். துரு துருவென்ற அவன் கண்கள் சதா சுழன்றுகொண்டே இருந்தன. சகல தோணிகளுக்கும் மேல் அவன் அதிகாரம் செலுத்துபவன் போல் பாவனை செய்துகொண்டிருந்தான். 

சின்னஞ்சிறிய ஆனால் எடுப்பான உடல். சற்றே சரிந்து பூனைக் கண்கள். 

அவனுக்கு வயது இருபதுகூட இருக்காது. 

இயற்கையாக அவன் நிறம் சிவப்புத்தான். ஆனாலும் சதா கடல் அடிபட்டு அது கண்டிப்போயிருந்தது. 

அடிக்கொருதடவை அவன் பேசிக்கொண்டே இருந்தான். 

வெப்பத்தாலும் காற்றினாலும் உலர்ந்துபோகும் பாய்ச் சேலைக்குத் தண்ணீர் அடிக்கும்படி அவன் மற்றவனை அடிக்கடி பணித்தான். அத்துடன் இடையிடையே காணாமல் போய்விட்டதாகக் கருதப்படும் நாற்பத்தெட்டுப் பேர்களைப் பற்றியும், அவர்கள் துரதிர்ஷ்டத்தைப் பற்றியும் தன் மனதுக்குச் சாந்தி தேடிக்கொள்வதற்காக, சந்தியாக் கிழவனிடம் அடிக்கொரு கேள்வியைக் கேட்டுக்கொண்டிருந்தான். 

கிழவனின் சுபாவம் அவனுக்கு நன்றாகத் தெரியும். அதனால் மிகவும் நாசூக்காக – கிழவன் சினப்பட்டுக் கொள்ளாத விதத்தில்தான் கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தான். 

கிழவன் இந்த இளவட்டப் பயல் மரியதாசனுடன் இதற்குமுன் இப்படி நெருங்கிப் பழகவில்லைதான் ஆனாலும் அவன் பேசும் விதத்தையும் இலாவகத்தையும் இனங் கண்டுகொண்டு மனதுக் குள்ளாகவே அவனின் சாதுரியத்தை மெச்சிக்கொண்டான். 

‘எட பொடி, கச்சானுக்கை சாய வாடா!’ என்று திடீரெனச் சந்தியாக் கிழவன் குரல் கொடுத்தான். 

மரியதாசனும் மிகவும் இலாவகமாக சவள் பலகையைப் பணியத் தள்ளி, மடக்கி, தோணியை மேற்குப்புறம் இலேசாகச் சரியவிட்டான். ஏனைய தோணிகளும் இப்படியே சரியவந்தன. கிழவன் கண்களுக்கு நிழல் வைத்துக்கொண்டு பார்வையை நிதானப்படுத்தினான். 

சற்றுத்தொலைவில் நீர்மட்டத்தோடு நின்று தளம்பும் ஒரு தோணி யின் வங்குக் கண்களுக்குத் தெரிந்தது. 

‘பொடி, கொண்டலோடை அகலவாடா’ என்று கிழவன் வேறோர் கட்டளையைப் பிறப்பித்தான். மரியதாசன் அப்படியே செய்தான். 

கிழவன் ஏக்கத்தோடு அத்தோணியைப் பார்த்தான். 

அவன் நெஞ்சு சில்லிட்டு விறைத்தது. 

எல்லோரும் இரணைதீவுக் கரையில் பவுத்திரமாக இருப்பதாகச் சோதிடம் கூறியவனல்லவா! இப்போது ஒரு தோணி ஆழக் கடலில் கிடக்கிறது. 

‘ஐயா, அந்தோனிக்கிழவா!’ 

கிழவன் வானத்தைப் பார்த்து ஏங்கிக் குரல் வைத்தான். 

மரியதாசன் மெதுவாக, மெதுவாகத் தோணியை நிறுத்தினான். 

ஏனைய தோணிகளும் குறிப்பறிந்து, நீரில் அந்தரத்தில் அமிழ்ந்து மிதக்கும் அந்தத் தோணியை வளைத்துக்கொண்டு நின்றன. 

தண்ணீர் மட்டத்தோடு மிதக்கும் அந்தத் தோணியை அடையாளம் காணத்தான் எல்லோரும் முயன்றனர். 

உள்ளே எதுவுமேயின்றி அந்தத் தோணி வெறுமனே கிடந்தது. தண்ணீர் மட்டத்தைவிடக் கீழே செல்லாமல் மிதக்கும் வல்லமையை அந்தத்தோணி பெற்றிருக்கிறது. 

ஆசினிப் பலாமரத்தில் அந்தத் தோணி கோதி எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதுதான் அதற்கு இத்தனை வல்லமை இருக்கிறது! 

‘இது எங்க ஊரானல்ல’ என்று முதலில் பேசியவன் மரியதாசன்தான். எந்த அடையாளத்தைக்கொண்டு அவன் இதைக் கூறினானோ? வெளி யாக இதற்கான காரணங்கள் இல்லையாயினும், மனது அனுமானித்துக் கொண்டே ஒன்று இப்படி அவனைக் கூறவைத்திருக்கிறது. ‘ஐயோ, சந்தியோண்ணையின்ரை ஆசிநீர் தோணிதானிது!’ 

இப்படி மறு தோணியிலிருந்த ஒருவன் அடம் பிடித்தான். 

காணாமல் போனதாகக் கருதப்படும் சந்தியோவின் தோணியும் ஆசிநீர்த் தோணிதான்! அதை வைத்துக்கொண்டுதான் இவன் இப்படி அடம் பிடிக்கிறான். 

சந்தியாக்கிழவன் ஒரு கணம் தன் தோல்வியை ஒப்பக்கொண்டு விட்டான். ஆனாலும் மறுகணவேளை அவனுக்கு மறுபடியும் தெம்பும் துணிவும் வந்துவிட்டன. 

பீதியாலும் பச்சாத்தாப உணர்வினாலும் ஏங்கிப்போனவர்களை ஒரு தடவை அவன் ஏறிட்டுப் பார்த்தான். ஆனாலும் வாய்திறந்து, ‘இது வெளியூர்த் தோணிதான்’ என்று அவனால் கூறிவிட முடியவில்லை. ‘எங்க ஊர்த்தோணியோ அல்லது வேற்றூர்த் தோணியோ என்னவாக இருந்தாலும் இந்தத் தோணி எங்கோ ஆட்களைக் கடலுக்குப் பலியாக்கி விட்டுத்தான் வருகிறது’ என்று அவன் மனதுக்குள்ளிருந்து குரலொன்று எழுந்து வந்தது. 

சந்தியாக்கிழவன் ‘எதையோ நினைத்துக்கொண்டு கிழக்கு மேற்காக அகல வரும்படி மற்றத் தோணிகளுக்குக் கட்டளை பிறப்பித்தான். 

தோணிகள் இரண்டிரண்டாகப் பிரிந்து கிழக்கு மேற்குமாக அகன்று போயின. 

யேசுதாசன் சவளைப் பணிவிலிருந்து மேல்நகர்த்தி நட்டுக்கு நடுவாகத் தனது தோணியை இட்டுச் சென்றான். ஏதோ ஒரு துக்க கரமான காட்சியைக் காணப்போவது போன்ற மன உணர்வு அவனை உந்தித் தள்ளவே அவன் கண்களைக் கூர்மைப்படுத்திக்கொண்டு கலங்கிச் சிவந்துபோய்க் கிடந்த கடல்பரப்பைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தான். ‘சந்தியாப்ப்பா!’ என்று கத்தினான். அத்தோடு மட்டும் நின்றுவிடாமல் சந்தியாக்கிழவனின் ஆக்ஞையையும் எதிர்பார்க்காமல் சவளைத் தண்ணீருக்குள் ஆழத் துழாவி மேற்கு நோக்கித் தோணியைத் திருப்பினான். 

அந்தப் பக்கமாக அவன் எதைக் கண்டுவிட்டான்? 

தோணியின் அணியத்திற்கு முன்னால், தண்ணீர்ப் பரப்பின்மேல் குப்புறப்பாட்டில் ஒரு மனிதக்கட்டை! 

சவள் பலகையைத் தூக்கித் தோணிக்குள் போட்டுவிட்டு, சந்தியாக் கிழவனை நோக்கி அணியம்வரை அவன் பாய்ந்து சென்றான். ஆனால், அதற்கிடையில் சந்தியாக்கிழவன் முந்திக்கொண்டு விட்டான். 

நீர்மட்டத்தில் மிதந்து வந்த அந்த மனிதக்கட்டையைத் தன் தொங்கு சதைக் கரத்தால் எட்டிப் பிடித்துவிட்ட சந்தியாக்கிழவன், ‘எடமோனை!’ என்று யேசுதாசனை அழைக்க வாயுன்னுமுன், யேசுதாசன் அந்த மனிதக் கட்டையின் மறுகரத்தை எட்டிப் பிடித்துவிட்டான். தோணி யின் பாய்ச் சேலையைப் பிடித்துக்கொண்டிருந்தவன், பாய்ச்சேலையை விட்டுவிட்டுப் பாய்ந்தோடி வந்தான். பாய்ச்சேலை கைப்பறிந்ததும் தோணி ஒரு தடவை பக்கவாட்டில் சரிந்து அவலப்பட்டது.’எட மடையா!’ என்று சந்தியாக்கிழவன் கத்தினான். 

பாய்ச் சேலையைப் பிடித்திருந்தவன் மிகவும் பயந்த சுபாவம் உடையவன். நீர்மேல் மிதந்துவந்த மனிதச்சட்டையும், சந்தியாக் கிழவனின் அதட்டலும் அவனை மேலும் பயங்கொள்ள வைத்து விட்டன. அவன் நா குளறியது. சண வேளைக்குள் கிழவனின் எலும்புக் கரம் அவன் உடலில் ஓய்வு கண்டது. இந்த வேளை இப்படிப் பயந்தாங் கொள்ளித் தனமாக நடந்துகொண்டமைக்குச் சரியான தண்டனை யாகும். கிழவனின் பலமான தாக்குதலையும் சமாளித்துக் கொண்ட அவன், அந்த மனிதக் கட்டையின் கழுத்துப்புறம் கைகொடுத்து ஒத்தாசை செய்தான். 

மேற்கு கிழக்குப் பக்கங்களால் பிரிந்து சென்றவர்களுக்காக யேசுதாசன் குரல்வைத்தான். எப்போதையும் போன்ற சாதாரணமான குரலல்ல அது! இந்தக் குரல் அவர்களுக்கு மிகவும் தாக்கத்தைக் கொடுத்தது. 

அவர்களின் நெஞ்சங்கள் மரண பீதி கண்டு விறைத்துப்போய் விட்டனவா? 

‘யேசுவே!’ என்று வானத்தைப் பார்த்தான் ஒருவன். 

‘அந்தோனிக் கிழவா!’ என்று வடகரையில் கண்களை வீசினான் வேறொருவன். ஊரில் உள்ள அந்தோனியார் கோவிலின் மொட்டைக் கோபுரத்தைக் கண்களால் பார்த்துவிட வேண்டுமென்ற அங்கலாய்ப்புத் தான் அது! 

ஒரு தோணிக்குள்ளிருந்து, தனது இரத்த உருத்தானை இழந்து விட்டதாகச் சிணுங்கினான்இன்னொருவன். 

சந்தியாக்கிழவனும், யேசுதாசனும், மற்றவனுமாகச் சேர்ந்து ஒரு மனிதக் கட்டையைத் தூக்கித் தோணி வங்குக்குள் போட்டதை எல்லாருமே கண்டுவிட்டனர். 

அந்தக் கட்டை இவர்களுக்கு நன்றாகத் தெரிந்தது. 

அது கறுப்பாக இருந்தது! 

அதன் கைகள் தடிபோலப் புடைத்து நீட்டிக்கொண்டிருந்தன. 

அத்தியாயம்-5

சந்தியாக்கிழவன் தன் கைப்படஐந்து மனிதக் கட்டைகளைத் தூக்கி எடுத்துவிட்டான். 

மொத்தமாக எடுக்கப்பட்ட மனிதக் கட்டைகளின் எண்ணிக்கை எட்டு அவைகளில் எதுவுமே ஊரிலிருந்து காணாமல் போனவர்கள் என்று கருதப்பட்டவர்களுடையதாக இல்லை. இதனால் இவர்கள் யாருமே மகிழ்ச்சியடைந்தாகவும் இல்லை. இனந்தெரியாத அந்த மனிதக் கட்டைகளுக்காக இவர்கள் பச்சாதாபப்பட்டார்கள். 

கண்டெடுக்கப்பட்டவர்களில் அறுவர் இளம் வயதுடையவர்களாக இருந்தனர். இருவர் சற்று வயதானவர்கள். 

ஒருவனின் கழுத்தோடு கருநிறமான நடாவில் குருசு ஒன்று ஒட்டக் கட்டப்பட்டிருந்தது. 

இன்னொருவன் கழுத்தில் சிறிய வரவணிக்கம் ஒன்று கட்டப் பட்டிருந்தது. 

வேறொருவன் அரையோடு ஒரு பரிசுத்த உத்தரியத் துணி முடியப் பட்டிருந்தது. 

வயதாகிவிட்டவனின் இடது தோள் மூட்டில் ஒரு தேவதூதனின் உருவம் பச்சையாகக் குத்தப்பட்டிருந்தது. இதன் கீழ் சில எழுத்துக்கள் தெரிந்தன. அவை சிங்களத்தில் இருந்தன. 

கிட்டத்தட்ட எல்லோருமே ஒரு கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். 

இப்போது சந்தியாக்கிழவன் தோணியின் அணியத்தில் கரத்தை தலைக்கு முண்டுக் கொடுத்துக்கொண்டு வியாகுல நிலையில் இருந்தான். 

தோணி ஓடிக்கொண்டிருந்தது. 

எதையோ எண்ணிக்கொண்டு சந்தியாக்கிழவன் எழுந்தான். கபிஷணத்தை மட்டும் விட்டுவிட்டு தனது வேட்டியை உரித்தெடுத்தான் வேளையோடு அணியமுடுக்குக்குள் செருகி வைத்திருந்த நலங்கள் போர்வையையும் எடுத்துக்கொண்டு தோணியின் நடு வங்குக்குள் வந்தான். அம்மணமாகக் கிடந்த மனிதக் கட்டைகளை அவைகளால் இழுத்து மூடினான். அந்த வேளை ஒவ்வொரு மனிதக் கட்டைகளின் நெற்றியிலும் சிலுவை அடையாளமிட்டு, ‘கர்த்தரே, இவர்களை உமது இராச்சியத்தில் சேர்த்துக்கொள்ளும்’ என்று முணுமுணுத்துக் கொண்டான். 

‘யாரோ, யார்பெற்ற மக்களோ! எல்லோரும் கர்த்தரின் பிள்ளைகள்’ என்று கோயில் குருவானவர் கூறிக் கொள்ளும் வார்த்தைத் தொடர் இப்போது அவன் காதுகளுக்குள் கேட்பது போலிருந்தது. உலக சகோதரத்துவத்தை நிரந்தரமாக உத்தரவாதப்படுத்தவோ, அன்றி வேறெதற்காகவோ யார் எப்படிக் கூறிவைத்தாலும் இப்போது இந்த வார்த்தைத் தொடருக்குச் சந்தியாக்கிழவன் தன் இதயத்தையே இழந்திருந்தான். 

கட்டைகளை அரையுங் குறையுமாகப் போர்த்தி முடிந்ததும் அவன் தோணிக்குள் முழந்தாள் படியிட முயன்றான். தோணியின் ஆட்டமும் வங்குப் பலகைகளின் வளைவுப் பெருமுருத்துகளும் அவனுக்கு முழந்தாள் படியிட இடந்தரவில்லை. 

‘சர்வ வல்லையுள்ள பிதாவே, 
மெய்யான தேவனே, 
பாவியாயிருக்கிற இவர்களின் பாவங்களை மன்னித்துக்கொண்டு,
இவர்களை இரட்சித்தருளுஞ் சுவாமி, 
சுவாமி கிருபையாயிரும், 
கிறீஸ்துவே கிருபையாயிரும்!’ 

இந்த வார்த்தைகளுக்குமேல் பேசவோ, குந்தியிருக்கவோ கிழவனால் முடியவில்லை. முறையே நெற்றியிலும் மார்பிலும், தோள்களிலுமாக வலக்கரத்தால் தொட்டு, ‘ஆமன் யேசு’ என்று முடித்துக் கொண்டே எழுந்திருந்தான். 

கிழவனின் இந்தக் கிரியைகளையெல்லாம் பச்சாத்தாப உணர்ச்சி யோடு பார்த்துக்கொண்டிருந்த யேசுதாசன், சவள் பலகையை மறந்து விட்டானோ தெரியவில்லை. தோணி சற்றுத் திசைமாறி ஓடிக் கொண்டிருந்தது. அவன் கண்களுக்குள் நீர் முட்டிக்கொண்டு நின்று அவன் பார்வைக்குத் திரைபோட்டது. போர்வைக்கு வெளியே நீட்டிக் கொண்டு நின்ற கால்களில் ஒன்றைச் சற்று நகர்த்திப் போர்வைக்குள் விடவேண்டுமென்று நினைத்தான். ஆனாலும் அந்த நினைவுப்படி அவன் அவயவங்கள் செயல்படவில்லை. மெதுவாகப் பொங்கிப் பொங்கி வந்த அலைகள் தோணியில் பட்டு மோதிய போதெல்லாம் நீர்ச் சிதறல்கள் உள்ளே பாய்ந்து அந்தக் காலை நனைத்தபோதெல்லாம் அவன் மனதால் கூசினான். செத்துப்போன அந்தக் கட்டை பல மணி நேரமாகத் தண்ணீரில் கிடந்திருக்கிறது என்ற நினைவுகூட வரவில்லை. பரிசுத்தப்படுத்தப்பட்ட ஒரு வஸ்துவின்மேல் பிற அழுக்குகள் படிவது போன்ற உணர்வுதான் அவனுக்குத் தலைதூக்கி நின்றது. அவனின் பூனைக்கண்களை நிறைத்து நின்ற நீர் வெட்டுண்டு சிதற அவன் கண்களைத் துடைத்துக்கொண்டான். 

திடீரென்று சந்தியாக்கிழவன் குரல் வைத்தான். இரணைதீவுக் கரையைக் குறிவைத்து இனித்தோணிகள் திரும்ப வேண்டும். 

பாய்மரத்தைத் தாழ இறக்கி, மறுபடியும் பக்கவாட்டில் தொய்ய விட்டு, பின் நகர்த்தி மறுபடியும் உயர ஏற்றவேண்டும். அதைச் செய்யும்படி கிழவன் பணித்தான். சற்று வேளைக்குள் எல்லாப் பாய் மரங்களும் பக்கவாட்டில் விம்மி உயர்ந்தன.தோணிகள் இப்போது வலப்புறம் சாய ஓடின. 

வெய்யில் சுள்ளென்று சுட்டது. 

கிழவன் கண்களைக் கூர்மைப்படுத்திக்கொண்டு தூர நோக்கினான். கண்களுக்கு எட்டாத தூரத்தில் கடல் புள்ளுகள் கூட்டமாகச் சுற்றிச் சுற்றிப் பறந்தன. 

இன்னோர் தடவை இப்போது பெற்ற அனுபவத்தை பெறவேண்டும் போல இருப்பதாகக் கிழவனின் அடிமனம் எண்ணியது. 

கடற்புள்ளுகள் ஏன் இப்படிப் பறக்கின்றன? 

கடலின் மேற்பரப்பில் உலாவும் சிறுமீன் கூட்டத்தைக் கண்டு விட்டால் அவை இப்படிச் சுழன்று சுழன்று வட்டமிடும். அல்லது தண்ணீர் மட்டத்து மிதப்புகள்ஏதும் தென்படும்போதும் அவைகள் இப்படிப் பறப்பதுண்டு. 

கிழவனின் கட்டளைக்குக் காத்திருக்காமல் யேசுதாசன் பறவைகள் வட்டமிடும் இடத்தை நோக்கித் தோணியைத் திசைதிருப்பினான். எல்லாத் தோணிகளும் அந்தக் குறியை நோக்கித் திரும்பிவிட்டன. 

கண்களுக்கு எட்டும் தூரத்திற்குத் தோணிகள் வந்துவிட்டன. கடலின் நெஞ்சின்மேல் அங்குமிங்குமாக மங்கலான கோடுகள் தெரிந்தன. 

அவைகள் கச்சானை நோக்கி நோக்கி நகர்ந்து நகர்ந்து சென்றன. தோணிகள் சமீபத்துச் சமீபத்து வந்தபோது கடற்புட்கள் கலைந்து கலைந்து பறந்து கொண்டிருந்தன. 

சந்தியாக்கிழவன் அணியத்தில் எழுந்து நின்று கொண்டிருந்தான். ஒரு சவள் பலகை மிதப்பதாகவோ அல்லது அந்தப் பலகையில் ஒருவன் இறுகப் பிடித்துக்கொண்டு கிடப்பதாகவோ ஒரு மங்கலான தோற்றம்! 

கிழவன் யேசுதாசனை அவசரப்படுத்தினான். முதலில் தனது தோணிதான் அந்த இடத்தை அடையவேண்டுமென யேசுதாசன் நினைத்தானோ என்னவோ, தோணி குதித்துக் குதித்து ஓடியது. 

கிழவனுக்கு முன்னால் ஒரு மரக்கோல் மிதந்துவந்து பின் சென்றது. அதற்கும் அப்பால் இரண்டொரு பலகைகள் மிதந்துவந்து பின்சென்றன. புள்ளுக்கூட்டம் கத்திக்குரல் கொடுத்துக்கொண்டு கலைந்து சென்றது. கிழவனின் மனக் கண்ணுக்கு மட்டும் தெரிந்ததான அந்த மங்கல் தோற்றம் இப்போது உண்மையாகவே ஆகிவிட்டது. 

ஒரு மனிதக்கட்டை தெரிந்தது. 

அது ஒரு சவள் பலகையை வருடிப் பிடித்த நிலையில் தெரிந்தது. 

அதன் பாதிப் பக்கம் தண்ணீருக்குள் அமிழ்ந்த நிலையில் தெரிந்தது. தோணி அதைச் சாடி மருவியபோது சந்தியாக்கிழவன் ‘லபக்’ கென அந்த மனிதக்கட்டையைப் பிடித்தான். அப்போது எதிர்பார்க்காத விதத்தில் அவன் கால்கள் சறுக்கி, உடல் முன் சரிந்து, அந்த மனிதக் கட்டையோடு சேர்ந்துகொண்டு கிழவன் விழுந்து விட்டான். 

சணவேளைதான்! 

யேசுதாசன் கடலில் குதித்தான். 

அவனைத் தொடர்ந்து தோணியின் பாய்ச்சேலையைப் பிடித்துக் கொண்டிருந்த மற்றவனும் பாய்ந்துவிட்டான். 

அந்த இருவரும் சந்தியாக்கிழவனுக்காகக் கடலில் குதிக்கவில்லை. உயிராகவோ அல்லது உயிர் பிரியும் தறுவாயிலோ கிடக்கும் அந்த மனிதக் கட்டை கடைசி வேளையில் நீரில் மூழ்கி இறந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான். 

சந்தியாக்கிழவன் ஒரு தடவை கடலின் அடிவயிறுவரை ஓடிச் சுழித்து, கால்களால் அதன் அடிவயிற்றை உதைத்து தள்ளிவிட்டு அம்புபோல நீரை ஊடறுத்துக் கொண்டே வெளியே வந்தபோதே, யேசுதாசனும் மற்றவனும் அந்த மனிதக் கட்டையைத் தோணிக்குள் ஏற்றிக் கொண்டிருந்தனர். 

அதுஒரு இளைஞனின் உடல். அதிலே உயிர் இருந்தது. இரண்டு நாட்களாக அவன் அந்த சவள் பலகையைப் பிடித்தக்கொண்டு கிடந் திருக்கிறான். அதனால் அவன் உடம்பின் சில பகுதிகள் விறைத்துப் போய்விட்டன. வாய் கிட்டிப்போயிருந்தது. 

அவனின் கால்களை அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பிரித்து வைத்து, 

அவன் கைகளை மேலும் கீழுமாக ஆட்டி அசைத்து, 

அவன் மார்பை வருடி வருடி, நசித்து நசித்து, 

அவன் மோவாய்க் கட்டையில் வாயை வைத்து இழுத்துத் துப்பித் துப்பி, அவன் கழுத்தை அங்குமிங்குமாக ஆட்டி அசைத்துத் திருப்பி, அவனைக் குப்புறத் தள்ளி முதுகிலிருந்து நெரித்து நெரித்து யேசுதாசன் அவனுக்கு முதல் சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தான். இந்தச் சிகிச்சை முறையை அவன் எந்தப் பள்ளியிலும் படிக்கவில்லை. 

இளைஞனின் முனகல் கேட்டது. 

சந்தியாக்கிழவன் குனிந்தபடி அவனின் வாயைப் பார்த்துக் கொண்டிருந்தான். கிழவனின் தலையிலிருந்து சொட்டிய நீர்த்துளிகள் இளைஞனின் முகத்தில் விழுந்து கொண்டிருந்தன. அந்த நீர்ச் சொட்டு களோடு அந்த இளைஞனின் கண் கடைகளிலே வழிந்த கண்ணீரும் கலந்திருக்க வேண்டும். 

அவன் ஏதோ பேச முயன்றான். 

‘மகன்; மகன்’ என்று சந்தியாக்கிழவன் அவனை அழைத்தான். அவனும் பதிலுக்கு ஏதோ பேச முனைந்தான்; மிரளமிரள விழித்தான். 

பக்கத்தே கிடந்த மனிதக் கட்டைகளை அவன் கண்கள் கண்டிருக்க வேண்டும். வாய் திறந்து கத்த முனைந்து முனைந்து இறுதியில் குரல் வைத்தான். பின்பு சிங்களத்தில் ஏதோ பேசினான். வானத்தை நோக்கி அவன் கைகள் உயர்ந்தன. 

ஏனைய தோணிகளும் வந்து சேர்ந்துவிட்டன. 

சற்றுவேளை ஆரவாரத்தின்பின் கிழவன் அபிநயப் பாஷையில் அந்த வாலிபனுடன் பேசினான். எத்தனை பேர்கள் வந்தீர்கள்? என்று அவன் கேட்டான். அவன் இரு கரங்களையும் மேலுயர்த்திப் பத்து விரல் களையும் காட்டினான். 

கிழவன் மற்றவர்களுடன் சேர்ந்து கணக்கெடுத்ததில் பத்து சரியாக இருந்தது. கிழவன் மறு தோணிக்குள் பாய்ந்து தாவிக்கொண்டே மற்றத் தோணிகளில் கிடந்த மனிதக் கட்டைகளையும் தன் தோணிக்குள் சேர்ப்பீத்து விட்டுத் தோணியை ஊருக்குக்கொண்டு செல்லும்படி யேசுதாசனுக்கும் மற்றவனுக்கும் கட்டளையிட்டான். யேசுதாசனின் தோணி கரையை நோக்கிப் பாய் சாய்த்து ஓடியது. 

– தொடரும்…

– கே.டானியல் படைப்புகள் – சிறுகதைகளும் குறுநாவல்களும் (தொகுதி இரண்டு), முதற் பதிப்பு: 2016, அடையாளம், திருச்சி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *