கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: October 20, 2023
பார்வையிட்டோர்: 3,060 
 

“எப்படியும் AEO ப்ரோமோஷனை வாங்கறோம்…!” – சூளுரைத்தார் தம்புசாமி.

“எப்படியும்னா…? புரியலையே…!” – நெற்றி சுருக்கிக் கேட்டான் மனோகர்

“எல்லாத்தையும் விளக்கமாச் சொல்ல முடியுமா? வாங்கறோம்னா வாங்கறோம்…!”- அதைச் சொல்லும்போது தம்புசாமியின் கண்கள் வீட்டின் பின்கதவைப் பார்த்தன.

“ஸ்ரீஸ்ரீவேங்கடேஸம் மனசாஸ்மராமி… ஸ்ரீவேங்கடேசம் மனஸாஸ்மராமி… ஸ்ரீவேங்கடேசம் மனஸாஸ்மராமி…” – கைப்பேசியில் பக்திப் பாடல் ஒலித்தது.

மனோகர் தன் தலையைத் தொட்டு, “தலைமை ஆசிரியர் அழைக்கிறார்..” – என்று தம்புசாமியிடம் சங்கேதமாகத் அறிவித்தான்.

“ஹலோ… குட் ஈவினிங். சொல்லுங்க சார்…”

“மிஸ்டர் மனோகரன் ! , நாளைக்குக் காலைல, உங்களுக்குக்கு தென்னையம் பேட்டை வெல்ஃபேர் ஸ்கூல்ல ‘ஸ்கிரைப் டூட்டி’ போட்டு ஆர்டர் வந்திருக்கு. போயிட்டு வந்திருங்க.”

“சரிங்க சார்…!”

“ஓ.ஏ. மூலமா ரிலீவிங் ஆர்டர் அனுப்பறேன்.”

“ஓ.கே. சார்…!” – டூட்டியை ஏற்றுக்கொண்டான் மனோகர்.

ததம்புசாமி புறப்பட ஆயத்தமானார். போன் வருவதற்கு முன் பேசிய பேச்சைத் தொடர்ந்தார்.

‘யாரைப் பார்த்து எந்தெந்த வழியில் முடிக்கணும்… யாருக்கு எங்கே வெச்சி எது கொடுக்கணும்’ என விளக்கினார்.

“எப்படியோ இந்த ஏ.இ.ஓ, ப்ரமோஷனை வெற்றிகரமாக முடிப்போம்…!”-உறுதியாகச் சொன்னார். ‘இதனால பாதிக்கப்படப்போவது யார்…?’ என்றும் சூசகமாகத் தெரிவித்தார்.

உத்தேசமாக ரொக்கம் எவ்வளவு தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் கோடி காட்டிவிட்டுத்தான் சென்றார், தம்பு.

‘அரசியல் அறிவியல்’ தேர்வு நாள். தேர்வரைக்குள் வந்துவிட்டார், மனோகரன். ஒரே ஒரு தேர்வர்தான் அந்த அறையில். பெயர் மாசிலாமணி.

இரண்டடிக்கும் குறைவான உயரத்தில் குழந்தைபோல் இருந்தாள், அவள்.

DWARF டார்ஃப்(DWARF) என்ற பிரிவில் அவள் மாற்றுத் திறனாளியானாள்.

கல்வித்துறை அந்தப் பெண்ணிற்கு ‘ஸ்க்ரைப்’ (சொல்வதை எழுதும் ஆசிரியரை) அனுமதித்திருந்தது.

கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு எழுதவே முடியாத நிலையில் உள்ளவர்கள். கருத்துக்களை நன்கு மனதில் வாங்க முடியும்; ஆனால் மொழியை அறியமுடியாத டிஸ்லெக்ஸியா என்கிற குறைபாட்டினர். ‘சைல்ட்வுட் டிஸ்-இன்டகரேடிவ் டிஸ்ஆர்டர்’ என்று சொல்லக்கூடிய ‘ஆட்டிசம்’ என்ற மன இறுக்கக் குறைபாடு உடையவர்கள். டார்ஃப் எனும் வயதுக்குத் தக்கபடி உடல் வளர்ச்சி இல்லாதவர்கள்…

இது போன்றக் குறைபாடு உள்ளவர்களுக்குப் பொதுத் தேர்வு நேரங்களில் சொல்வதை எழுத ஆசிரியர்களை நியமிப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

“ஆ‘ஆட்டிசம் குறைபாடு உள்ளவர்களுக்குத் தனிப்பள்ளி அமைத்தால் என்ன?” என்றெல்லாம் பேசுபவர்கள் உண்டு; உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானிகளான, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், சர் ஐசக் நியூட்டன், தாமஸ் ஆல்வா எடிசன், சார்லஸ் டார்வின், ஓவியர் லியனார்டோ டாவின்ஸி, அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி…

இப்படிப் பற்பலர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுத் தன் தனித் திறமைகளால் புகழ் பெற்றவர்கள்…” என்ற விவரங்களையெல்லாம் அவர்கள் முன் வைப்பது ஒன்றே அவர்களுக்கெல்லாம் ஒரே பதில் !

மாசிலாமணி தேர்வரையில் போடப்பட்டிருந்த அகலமான மேசையின்மேல் ஏறி ஒரு புறம் உட்கார்ந்தாள்.

17 வயது ஆகும் அவள், இரண்டு வயதுக்குழந்தையின் உயரமும், அங்கங்களுமாக இருந்தாள். அவள் முகத்தில் சிறிதும் தாழ்வு மனப்பான்மை இல்லை.

“சார்…!”

“சொல்லுமா…!” என்ற மனோகர் சார் முகத்தில், ‘பாவம்… இந்தப் பொண்ணு…!’ என்ற அனுதாப உணர்வு பிரதிபலித்தது.

“சார். நான் ‘ஸ்போர்டிவ்’வாத்தான் இருக்கேன். என்னைக் கண்டு யாரும் அனுதாபப்படறதை நான் விரும்பவேமாட்டேன்.

‘Please be sportive Sir” என்று புன்னகைத்தாள் அவள்.

‘உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்…’ என்று சொன்னானே பாரதி.. அதன் பிரதிபலிப்பாக இருந்தது மாசிலாமணியின் பேச்சு.

அறைக்கண்காணிப்பாளர் வந்தார். மாசிலாமணி தன் சின்னஞ்சிறு கைகளால் வினாத்தாளை வாங்கினாள்.

“சார்..”

“சொல்லுமா”

“இந்தாங்கசார் வினாத்தாள்.” – வினாத்தாளை மனோகர் கையில் கொடுத்தாள்.

“முதல் பக்கத்துல கார்னர்ல உள்ள கட்டத்துல, மற்ற ஒற்றைப்படைப் பக்கத்துலயும் என் நம்பரைப் போடுங்க சார்…!”

தன் பதிவெண்ணைச் சொன்னாள்.

“பதினைஞ்சி நிமிஷம் படிக்கற நேரம்தானே சார்.”

“ஆமாம்..”

“சார் நான் அதைப் பாத்துப் படிக்க ரொம்பச் சிரமப்படுவேன். ஒவ்வொரு கேள்வியா படிச்சி, அதோட ஆப்ஷன்களையும் சொல்லுங்க சார்…!”

“சொல்றேம்மா…!” என்ற மனோகர், அரசியல் அறிவியல் வினாத்தாளைப் பார்த்து வாய்விட்டுப் படித்தார்.

செல்வத்துள் செல்வமான செவிச்செல்வத்தின் தயவால் கூர்ந்து கவனித்தாள், மாசிலாமணி.

விடைத்தாள் வழங்குவதற்கான மணி அடித்தது.

விடைத்தாளை வாங்கினாள். தன் சின்னஞ்சிறிய கைகளால் கண்களுக்கருகில் கொண்டுபோய்க் கூர்ந்து பார்த்தாள்.

தன் புகைப்படம்தானா, என்பதையும், தன் பதிவெண்ணையும் சரிபார்த்தாள். தன் சின்னஞ்சிறிய விரல்கள் தாங்கிய மெல்லிய பேனாவால் ‘மாசிலாமணி’ என்று மாணவர் கையொப்பம் என்கிற இடத்தில் ஒப்பமிட்டாள்.

இஇப்போது முதல் பகுதியான, ஒரு மதிப்பெண் கேள்விகளையும், அதற்கான ஆப்ஷன்களையும் படித்தார் மனோகர். அவர் படிக்கப் படிக்க, அ, ஆ.. ஈ.. என்று விடைக்கான ஆப்ஷன்களையும், விடையையும் தன் கீச்சுக் குரலில் சொன்னாள், மாசிலாமணி.

ஒரு கேள்விக்கு ஆப்ஷன் தெரியாமல் விழித்தபோது, “எனக்குத் தெரியும்.. சொல்லட்டுமா?” என்று கேட்டார், மனோகர்.

“சார் ப்ளீஸ்… அது மட்டும் செஞ்சிராதீங்க. நான் சொல்றது தப்பா இருந்தாலும். அதையே எழுதுங்க!” – தன் கருத்திலும், செயல்பாடுகளிலும் உறுதியாக இருந்தாள் மாசிலாமணி.

“சார், நீங்க ஸ்கேலை அழுத்திப் பிடிச்சிக்கோங்க சார். நான் பென்சிலால கோடு போடறேன்.” என்று ஆர்வமாய் ஒவ்வொரு விடைக்கும் அடியில் பென்சிலால் கோடு போட்டாள் அவள்.

தேர்வு முடிவதற்கு பதினைந்து நிமிடங்கள் இருக்கும்போது, மீண்டும் முதல் கேள்விமுதல் எழுதியதைப் படித்துக் காட்டச் சொன்னாள், மாசிலாமணி.

இந்த முறை, சில தவறுகளை அடித்துத் திருத்தச் சொன்னாள். தேர்வு முடிவதற்கான மணி அடித்தது.

விடைத்தாளை ஒப்படைத்துவிட்டுத் திரும்பும்போது, பள்ளியின் நுழைவாயில் அருகில், தன் அம்மாவோடு நின்றிருந்தாள், மாசிலாமணி.

“இத்த சார்தான் எனக்கு ‘ஸ்க்ரைப்பு’ம்மா…” – மனோகரனை அறிமுகப்படுத்தினாள், அவள்.

“ஒங்களை மாதிரி உள்ளவங்களாலத்தான் என் மக மேலேமேலே உயர்ந்து வரா சார்…!”- கையெடுத்துக் கும்பிட்டாள், அந்தத் தாய்.

“பொண்ணு ரொம்ப ஸ்மார்ட்டும்மா. தன்னம்பிக்கை நிறைஞ்ச பொண்ணு. கள்ளங்கபடமில்லாம நேர்மையா வளர்த்திருக்கீங்க. நிச்சயமா நல்லா வருவா மாசிலாமணி…!” – மனதார வாழ்த்தினார், மனோகர்.

“எந்த ஜன்மத்துல எந்த குடியைக் கெடுத்தோமோ, நீ இப்படி வளர்ச்சி இல்லாம பிறந்துட்டே. நீ மனசரிஞ்சி, சின்னத் தப்புக்கூட பண்ணாதே. நிச்சயமா நீ உயர்ந்து வருவே”ன்னு எங்கம்மா அடிக்கடி சொல்வாங்க சார். நீங்களும் அதையே சொல்றீங்க.” – உணர்ச்சிவசப்பட்டு, கீச்சுக்குரலில் கூறினாள் மாசிலாமணி. அந்தச் அவளின் சின்னஞ்சிறு கண்கள் பனித்தன.

மனோகரின் நினைவுகள் மாசிலாமணியையேச் சுற்றிச் சுற்றி வந்தன. தன்னுடைய உருவக் குறைபாடு பற்றிச் சிறிதுகூட தாழ்வு மனப்பான்மையற்ற குணம் எப்படிச் சாத்தியமானது அவளுக்கு !

யாரையும் தன்னோடு ஒப்பிட்டுப் பார்த்து வருந்தாது, தனித்து நிற்கும் குணம் வந்தது எப்படி அவளுக்கு!

‘நமக்காக ஆசிரியர் தேர்வு எழுதுகிறார். நமக்குத் தெரியாத கேள்விகளுக்கு ஆசிரியரையே கேட்டுச் சரியான விடை எழுதச் சொன்னால் என்ன?’ என்று அட்வாண்டேஜ் எடுத்துக் கொள்ளாமல், கிடைத்தவரை லாபம் என்ற சுயநலம் சிறிதும் இல்லாமல் இருப்பது எப்படிச் சாத்தியம் ! ‘வறுமையில் செம்மை என்பது இதுதானோ?’

வசதி வாய்ப்போட, நல்ல திடகாத்திரமான நிலைலதானே நான் இருக்கேன்…! என் சீனியாரிடிக்கு, அடுத்த வருஷம் ஏ.இ.ஓ. பதவி உயர்வு தானாகவே வருமே…! என்னை விடச் சீனியர்களுக்கான பதவி உயர்வு வாய்ப்பைத் தட்டிப் பறிச்சி, இந்த வருஷமே ப்ரமோஷன் வாங்க நினைக்கிறோமே? அதுக்காக திட்டம் தீட்டறோமே? இது எப்படி ஞாயமாகும் ? நூறு சதவிகித மாற்றுத்திறனாளிக்கு இருக்கற நூறு சதவிகித தன்னம்பிக்கையும், நேர்மையும் என்னிடம இல்லாமல் போனது எப்படி?’ – தன் இழிசெயல் நினைத்துக் கழிவிரக்கத்தில் கலங்கினான், மனோகர்.

செல்போனில் தம்புசாமியின் எண்களை அழுத்தினான்.

ஹலோ கூறிவிட்டுச் சொன்னான்.

‘ப்ரமோஷன் வரும்போது இயல்பா வரட்டும் பின்கதவு மூலம் ஒண்ணும் மெனக்கடவேண்டாம் தம்பு.

– ஜூலை 2023, அனிச்சம் சிறுகதைப் போட்டி 2023, இரண்டாம் பரிசு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *