பொன்வண்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 21, 2021
பார்வையிட்டோர்: 2,469 
 

(இதற்கு முந்தைய ‘கர்ம பலன்கள்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது).

கர்ம பலன்கள் பற்றி உபநிடதம் விளக்குகையில், ஆயிரம் பசுக்கள் உள்ள ஒரு மந்தையில் எப்படி தனது தாய்ப்பசுவை ஒரு கன்றானது கண்டுபிடித்து அதை அடைகிறதோ, அதேபோல ஒருவனின் நல்ல கர்மமும் தீய கர்மமும் அவனை அணுகுகிறது என்கிறது.

இந்த தற்செயல் ஒற்றுமையை அறிவு பூர்வமாக ஆராய்ந்தார் பிரபல விஞ்ஞானியான கார்ல் யங் (1875-1961).

இதற்கு அவர் கொடுத்த பெயர் சிங்க்ரானிசிடி!! (Synchronicity).

சிங்க்ரானிசிடி எனப்படும் ‘அர்த்தமுள்ள தற்செயல் ஒற்றுமைகள்’ பற்றிய ஒரு முக்கிய சம்பவம் கார்ல் வாழ்க்கையிலும் நிகழ்ந்தது.

ஒருநாள் அவரிடம் சிகிச்சை பெற வந்த ஒரு பெண்மணி, தான் கண்ட கனவை உணர்ச்சி பூர்வமாக விவரித்துக் கொண்டிருந்தார். அந்தக் கனவில் அவருக்கு மிகவும் விலை மதிப்புள்ள ஒரு வைர நகை தரப்பட்டிருந்தது. அந்த நகை வண்டு போல செய்யப்பட்ட ஒரு அணிகின்ற வைரக்கல்!!

இதை அந்தப் பெண்மணி விவரித்துக் கொண்டிருந்த சமயம் கார்ல் வீட்டுச் ஜன்னலை யாரோ தட்டிக்கொண்டே இருப்பது போன்ற ஒலி எழுந்தது. இந்த ஒலியால் ஈர்க்கப்பட்ட கார்ல் ஜன்னலை நோக்கி விரைந்தார். ஜன்னலைத் திறந்தார். ஜன்னலின் வெளியிலிருந்து பறந்துவந்த ஒரு பொன்வண்டு அவர் கையில் வந்து உட்கார்ந்தது.

அதைக் கையில் பிடித்துக்கொண்ட கார்ல் தன் கனவை விவரித்துக் கொண்டிருந்த பெண்மணியிடம் அதைக்காட்டி, “இதோ இருக்கிறது உங்களின் பொன்வண்டு” என்று கூறிவிட்டு வண்டை அவர் கையில் கொடுத்தார். இதனால் அசந்துபோன அந்தப் பெண்மணிக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. மிகுந்த புத்திசாலி அவர். மெத்தப் படித்தவரும் கூட. தன் உணர்ச்சிகளை அவரால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

பிரபஞ்சத்தில் உள்ள ஏதோ ஒரு சக்தி அர்த்தமுள்ள ஒரு தற்செயல் சம்பவத்தின் மூலம் அவரைப் பூரண குணம் அடைய வைத்தது.

தன் கனவை அந்தப் பெண்மணி சொல்லிக் கொண்டிருந்தபோது ஜன்னலில் ஏன் வண்டு வந்து மோதி கார்ல் கவனத்தை ஈர்க்க வேண்டும்? அந்த வண்டும் சாதாரணமாகக் காணக்கூடிய வண்டு அல்ல. வண்டு இனத்திலேயே அபூர்வமாகக் காணப்படும் பொன்வண்டு அது!

அந்தப் பெண்மணியின் மனம் போராட்டத்தின் உச்சியில் எழுப்பிய கூக்குரலின் மூலமாக பூரண குணம் அடைய வேண்டும் என்று இருந்ததா? அவரது கூக்குரலுக்கு பிரபஞ்சத்தின் விடையா அது?

இந்த வண்டு விஷயம் இத்தோடு நிற்கவில்லை…

பிலிப் கஸினோ என்ற ஒரு எழுத்தாளர் இப்படிப்பட்ட அர்த்தமுள்ள தற்செயல் ஒற்றுமைச் சம்பவங்களைத் தொகுத்து தன்னிடம் நட்பு கொண்டிருந்த ஒரு பெண்மணிக்கு அனுப்பினார். அவர் யோகாவைக் கற்பிப்பவர். பிலிப்பின் ஆராய்ச்சியை ஒட்டி, ‘அர்த்தமுள்ள தற்செயல் ஒற்றுமையை’ இந்தப் பொன்வண்டு சம்பவம் விளக்குகிறதா என்று குழம்பியவாறே யோசித்தவண்ணம் இருந்தார் கார்ல்.

தனது வாழ்க்கையில் இப்படி சம்பவம் ஏதேனும் நிகழ்ந்துள்ளதா என அவர் நினைவுப்படுத்திப் பார்த்தார். அன்று முற்பகலில் தனக்கு ஏதேனும் கடிதங்கள் வந்துள்ளனவா என்று பார்க்க வாசலில் இருந்த தோட்டப் பகுதியை நோக்கி நடந்தார். என்ன ஆச்சரியம் ?

அங்குள்ள செடிகளின் மீதும், அதன் சுற்றுப் புறத்திலும் நூற்றுக்கணக்கான நீல நிற வண்டுகள் ஹூங்காரமிட்டுப் பறந்து கொண்டிருந்தன! அவற்றின் நீல வண்ணம் சூரிய ஒளியில் பட்டு பிரகாசமாக புது வண்ணமாக மின்னிக்கொண்டிருந்தது!!

‘நான் என்ன கனவு காண்கிறேனா’ என்று வியந்த அவரால், தான் கண்ட காட்சியை நம்பவே முடியவில்லை! 36 மணி நேரங்கள் அங்கேயே பறந்து கொண்டிருந்த வண்டுகள் திடீரென அந்த இடத்தை விட்டுப் பறந்து மாயமாயின!

உடனே அவர் பிலிப் கஸினோவுக்கு இதைப்பற்றி எழுதி, ‘ஒருவேளை அர்த்தமுள்ள தற்செயல் ஒற்றுமை தொடர்ந்து நீரோட்டம் போன்ற ஒரு தொடர் ஓட்டத்தையும் விளைவித்துக் கொண்டிருக்குமோ’ என்று வியந்தார். ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்வில் இப்படி அர்த்தமுள்ள தற்செயல் ஒற்றுமைகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அவற்றை யாரும் கூர்ந்து கவனிப்பதுமில்லை; அது சொல்லும் செய்திகளை அறிந்து கொள்வதும் இல்லை என்பதுதான் உண்மை!!

பகுப்பாய்வு உளவியலைக் கண்ட மேதையான கார்ல், சிக்மண்ட் ப்ராய்ட்; ஆல்பர்ட் ஜன்ஸ்டீன்; உல்ப்கேங் பாலி; வில்லியம் ஜேம்ஸ் போன்ற பிரபல விஞ்ஞானிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். அவர்களுடன் இணைந்து இதைத் தொடர்ந்து ஆராய ஆரம்பித்தார். நிறைய சுவையான தகவல்கள் அவருக்குக் கிட்டின.

விளக்க முடியாத தற்செயல் ஒற்றுமைச் சம்பவங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. கார்ல் கனவுகளைப் பற்றியும், ஆவிகளைப்பற்றியும், தற்செயல் ஒற்றுமைகளைப் பற்றியும் ஆராய ஆரம்பித்தார்.

நம் மனதிற்கு நான்கு பண்புகள் உள்ளன என்பது அவரது கண்டுபிடிப்பு. 1.Sensing: ஐம்புலன்கள் மூலமாக சுற்றுப்புறத்தை அறிதல்; 2.Thinking: சிந்தித்தல்; 3.Feeling: உணர்தல்; Intuiting: உள்ளுணர்வு மூலமாக ஆழ்மன ரீதியாக விஷயங்களை பகுத்துப் பார்த்தல் ஆகியவையே அந்த நான்கு பண்புகள்.

நம்ப முடியாத விஷயங்கள் திடீரென்று ஓரிடத்தில் நடந்தால், அதை வெறும் தற்செயல் ஒற்றுமைச் சம்பவம் என்று ஒதுக்கிவிட முடியாது என்றும் கார்ல் கூறினார். அவர் கூறிய இந்த சிங்க்ரானிசிடி தத்துவத்தை ஒப்புக்கொண்ட ஏராளமானோர் இதுபற்றி ஆராயத் தொடங்கினர். இவைகள் அதிகாரபூர்வமாக சரி பார்க்கப்பட்டு இப்போது பதிவு செய்யப் படுகின்றன.

அவற்றில் சில சம்பவங்களைப் பார்ப்போம்…

எழுபதுகளில் பிரபல நடிகரான Anthony Hopkins, The Girl from Petrovka என்ற படத்தில் கோஸ்ட்யா என்ற பாத்திரத்தை நடிப்பதாக இருந்தது. அவர் முதலில் அந்தப் புத்தகத்தைப் படிக்க விரும்பினார். ஆனால் லேசில் கிடைப்பதாயில்லை. ஒருநாள் லண்டனில் ட்யூப் ஸ்டேஷனில் அவர் உட்கர்ர்ந்திருந்தபோது அருகில் யாரோ ஒருவர் விட்டுவிட்டுப் பத்தகத்தைப் பார்த்தார். அது என்ன என்று எடுத்துப் பார்த்தால் அது அவர் தேடிக்கொண்டிருந்த அதே புத்தகம்தான். அதில் என்ன விந்தை என்றால், அதை எழுதியவரின் கையொப்பம் இருந்ததுதான்!!

வயலட் என்பவர் ஒரு நர்ஸ். அவருக்கு Miss Unsinkable என்ற பட்டப்பெயர் கிடைத்தது. எப்படி?

1912 ல் பயணப்பட்டு விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலைப் பற்றி அனைவரும் அறிவோம். அதில் பயணித்து தப்பியவர் வயலட். பிறகு 1916 ல் விபத்துக்குள்ளான இன்னொரு கப்பலான HMHS Britannic என்ற கப்பலிலும் பயணப்பட்டு அதற்கு நேர்ந்த விபத்திலும் தப்பித்தார். மூன்றாம் முறையாக ஆர்எம்எஸ் ஒலிம்பிக் என்ற கப்பலில் அவர் பயணப்பட்டபோது அந்தக் கப்பல் ஒரு போர்க்கப்பலுடன் மோதியது. அதிலும் பிழைத்துக் கொண்டார். இப்படி மூன்றுமுறை பிழைத்த இவரை Miss Unsinkable என்று அழைப்பது நியாயம்தானே!!

2014 ம் ஆண்டில் மலேஷியன் ஏர்லைன்ஸ் இரு கோரமான விபத்துக்களைச் சந்தித்தது. முதல் விமானம் உக்ரேனியரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அடுத்த விமானம் இந்தியன் ஓஷனில் பறக்கும்போது எங்கே என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாதபடி காணாமல் போய்விட்டது.

குறுகிய கால இடைவெளியில் இரு விமானங்களும் விபத்துக்குள்ளாயின. அதில் நெதர்லாந்தைச் சேர்ந்த சைக்கிள் ஓட்டும் வீரரான ஜோங்கே இந்த இரு விமானங்களிலும் பயணப்பட டிக்கட்டை முன்பதிவு செய்திருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் இதைவிட மலிவான கட்டணத்தில் வேறு விமானங்களில் பறக்க வாய்ப்புக் கிடைக்கவே இந்த இரு விமான டிக்கெட்டுகளையும் கேன்ஸல் செய்தார். அதிசயமாக தப்பித்தார்.

இப்படி அடுக்கடுக்காக சொல்லிக்கொண்டே போகலாம்.

சென்ற ஏப்ரலில் வந்த சிங்கிரானிசிட்டி செய்தி என்னவெனில், Prince Philip died at 9.00 am on the 9th April, the 99th day of the year at the age of 99. இது எப்படி இருக்கு?

உலகில் உள்ள அனைத்துமே பிரபஞ்சத்துடன் ஒன்றி இருப்பதால் மட்டுமே இப்படிப்பட்ட தற்செயல் ஒற்றுமைகள் ஏற்படுகின்றன என்பது கார்ல் செய்த ஆராய்ச்சியின் முடிவு.

இதன் பொருள்: கூப்பிட்டாலும் சரி, கூப்பிடாவிட்டாலும் சரி, கடவுள் இருக்கிறார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *