கெளரவத்துக்குப் பிறந்தவர்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 22, 2013
பார்வையிட்டோர்: 10,312 
 

அம்மா, நா ஸ்கூலுக்கு போய்ட்டு வரேன் என கிளம்பிய தாரினியை தடுத்து நிறுத்தினார் அவள் தந்தை.

எங்கடி கெளம்பிட்ட?

ஸ்கூலுக்குப்பா.

நீ ஸ்கூலுக்கெல்லாம் போக வேணாம் போயி சமையலைப் பாரு என்றார் அப்பாவினுடனிருந்த மாமா.

ஏன் மாமா ஏன் நா ஸ்கூலுக்கு போகக்கூடாது? என இயன்றவரை பொறுமையுடன் கேட்டாள் தாரினி. அன்று அவளுக்கு பன்னிரெண்டாம் வகுப்பு அரையாண்டு கடைசித் தேர்வு.

ம்ம் பக்கத்துவீட்டு பட்டு எவங்கூடவோ போயிட்டா, அதான்.

அவ போறதுக்கும் நான் ஸ்கூலுக்கு போறதுக்கும் என்ன மாமா சம்பந்தம்?!

பொட்டைக் கழுத, என்னடி மாமாவ எதுத்து கேள்வி கேக்குற உள்ள போ, ஏய் மஞ்சு என்ன புள்ள வளத்துருக்க, வீதியில நின்னுக்கிட்டு ஆம்பிள்ளைங்கள எதுத்து வேற பேசுறா?

ஏன் அவங்களுக்கு மட்டும்தான் புள்ளயா உங்களுக்கு இல்லியா? நீங்க சரியா வளர்க்குறது…. நாவோடு ஒட்டி நின்ற எழுத்துக்களை விழுங்கியவாறு மிரட்சிப் பார்வை பார்த்தபடி வீட்டுக்குள் போனாள் தாரினி!

ம்மா, இன்னிக்கு கடசி பரிச்சை, இன்னிக்குபோயா அப்பா இப்படி ஆர்பாட்டம் செய்யனும்?

என்னடி வாய் நீளுது?!, நேத்து உங்கூட படிச்சவ ஒரு துளுக்கன் கூட ஓடிப்போயிட்டா, தெரியுமில்லே? உங்கப்பா ஊர் பெரியாம்பிளை, உன் பேரு கெட்டா, அவருக்குத்தானே அவமானம்!

விசும்பலை அடக்கியபடி அறைக்கதவை அறைந்து சாத்தி தாளிட்டுக்கொண்டாள் தாரினி.

அடுத்தமுறை கோவத்தை கதவுல காட்டுனே, கையில சூடு வெச்சிடுவேன் என கறுவினாள் தாய்!

தாரினியுடன் பயின்ற மாணவி ஓடிப்போன பின்னர், அந்த தாய்க்கு பயம் வந்திருந்தது.

அதே, “ஊர் பெரியாம்பிளை மவ, படிக்கலியா?!” என்ற வார்த்தைக்காகவும், மகளின் கண்ணீருக்காக வக்காலத்துவாங்கிய தன் அக்காவின் பேச்சை தட்ட முடியாததாலும் தன் செல்வாக்கை பயன்படுத்தி (காசுதான்) அவளை இறுதித் தேர்வை மட்டும் எழுத அனுமதித்தார்.

தேர்வு முடிந்த கையோடு திருமணம் என்ற சத்தியவாக்கை பெற்றுக்கொண்டபின்னர்தான்.

பள்ளியிலேயே சிறப்பான மாணவியாதலால் தலைமை ஆசிரியர் மேற்கொண்டு படிக்க வைக்கச்சொல்லி மிகவும் கேட்டுக்கொண்டார்.

அழகான, அன்பான தன் மகளுக்கு தன்னைவிட சொத்து பத்தும், அழகும், அதிகம் இருக்கும் மாப்பிள்ளையைத் தேடிப்பிடித்தார். நிச்சயத்துக்கு வந்த அந்த வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு மாநிறமான நம் தாரினியின் மீது பெரிதாய் ஈடுபாடு எதுவும் இல்லை. தன் தந்தையின் மேலிருந்த பயத்தினால் பெண் ஃபோட்டோவை முன்னமே பார்த்திராமல் போன தன் மடத்தனத்தை நொந்துக்கொண்டு அப்பாவை பழிவாங்கவென்றே பேசினான்.

பொண்ணுக்கு இன்னும் பதினெட்டு வயசு ஆவல, நான் அமெரிக்காவுக்கு போயிடுவேன், குறைஞ்சது பொண்ணுக்கு ஒரு டிகிரியாச்சும் இருக்கனும் என கட்டளைகள் விதிக்க நிச்சயம் முடிந்துவிட்ட காரணத்தால் தலையை ஆட்டி வைத்தார் நம் தாரினியின் தந்தை. இதைக்கேட்டு விழிநீர் அரும்ப பாதி இமையுயர்த்தி நன்றிப்பார்வை வீசிய அந்த பொந்நிறப்பாவையின் மேல் அவனுக்கே தெரியாமல் ஈர்ப்பு வந்து அதை அவன் உணராமல், வேண்டாவெறுப்பாகவே நிச்சயத்தன்று மோதிரம் மாற்றியது தனிக்கதை.

ம்மா, அப்பா வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து நான் வீட்டை விட்டு கோயிலுக்கு, பக்கத்துவீட்டுக்கு, ஏன், மொட்டைமாடிக்குக்கூட போறதில்லை, பள்ளிக்கூடத்தை ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் முடிச்சேன், இந்த வயசுலயே கல்யாணத்துக்குக் கூட சம்மதிச்சிட்டேன், நல்லவேளையா அவர் என்னை மேல படிக்க சொல்லிருக்கார், பரிசமும் போட்டாச்சு இன்னும் என்னம்மா பயம்? என்னை ஏம்மா கரஸ்பாண்டன்சில படிக்க சொல்ற?!

ஏன் மவராணிக்கு டெய்லி மினுக்கிக்கிட்டு காலேசுக்குப் போயி படிச்சாத்தான் படிப்பு ஏறுமோ? வூட்டுல உக்காந்து படிச்சா ஏறாதோ? என்ற அம்மாவை திடுக்கிட்டுப்பார்த்தாள் மகள்.

உங்கப்பங்கிட்ட தலபாட அடிச்சிக்கிட்டேன், வயசுக்கு வந்தபின்ன அடுப்படில கெடக்கப்போற பிள்ளைக்கு படிப்பெதுக்குன்னு, கேட்டானா கிறுக்குப்பய, மவ படிக்கட்டும்னு படிக்கவெச்சான்! கெளரதியா இருப்ப, மருவாதியா பேசுவனு பாத்தா நீ என்னமோ மவராணி கணக்கா அதிகாரம் பண்ணுற என்று தாரிணியின் தலையில் குட்டினாள் பாட்டி.

அத கேளுங்கத்த நல்லா…

ம்ம்க்க்கும் இப்ப மட்டும் அத்தை மேல பாசம் வந்துருச்சாக்கும் என நினைத்துக்கொண்டாள் தாரினி.

தடிக்கழுதை, அத்தக்காரிக்கு போனப்போட்டு அழுது பரிட்சைக்கு போவுற, இதயும் அவகிட்டயே கேளுடி, நாங்களே நகை தொகைன்னு கேட்டாக்கூட சரின்னு பெரீய்ய எடமா பாத்து உன்ன சீக்கிரம் கட்டிப்புடலாம் வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு அலையிற பயம் வுடும்னுபாத்தா மாப்பிள்ளை படி படிங்கிறாரு, வேற வழியில்லாம பலிகெடாவாட்டம் சரின்னு மண்டைய ஆட்டுன ஆர்டரு போடுரியோ ஆர்டரு?

அம்மா, உன்மேல இருக்க கோவத்துல அத்தை எனக்கு சப்போர்ட் பண்ணினாங்க, அவங்கமேல இருக்க வெறுப்புல என்மேல கோவத்தை வளத்துக்கிற நீ. என்ன பேசுற நீ?

என்னடி நாக்கு நீளுது? ஆமா, நிச்சயத்துக்கு வந்த பையன் கல்யாண தேதி வாசிக்கிறப்போ உன்ன படிச்சாத்தான் கட்டிக்கிவேன்னு சொல்றாவளே, நீ அவருக்கும் தூதுவிட்டு மயக்கிட்டியா?!

ச்சே, என்னம்மா பேசுற நீ?

இருக்கத தானடி பேசுறேன்?

பாரும்மா வாய்க்கு வந்தபடி பேசாத, உங்க மாப்பிள்ளைய நா இதுவரை பாத்ததுகூட இல்ல.

அடியாத்தி, என்னடி ஊடு அதிருறாப்புல கத்துற, வாக்கப்பட்டு போறவூட்டுல இப்படிக்கத்தி மானத்தை வாங்கிப்புடாத, உன் மாமியாக்காரி என்னை மாதிரி பொறுமையா இல்லாம இருந்திட்டா?

இருந்திட்டா?

ம்ம்ம், உன் திமிருக்கு உன் தலமுடிய ஆஞ்சிபுடுவா, பின்ன உன் நாக்குல சூடு வெச்சிருவா! மேனா மினுக்கி.

அம்மா, இப்ப நா என்ன சொல்லிட்டேன்னு இப்படிலாம் பேசுற?

ஒன்னும் இல்லடியம்மா ஒன்னும் இல்ல! நீ காலேசுக்குப் போ, கூத்தடிக்கப்போ எனக்கென்ன நீ எக்கேடும் கெட்டுப்போனா? உங்கப்பங்கிட்ட பேசிக்க!

என்னடி எங்கிட்ட பேசனும்?

ம்ம் உங்க புள்ளைக்கி, காலேசுல படிக்கனுமாம்!

இவ ஏன்டி வெளிய போறதுல துடியா இருக்கா? என்னடி விசயம்?

ஒன்னும்மில்லப்பா, இப்ப நா என்ன செய்யனும்?

ம்ம், மாப்பிள்ளைக்கு நீ படிக்கனுமாமில்லை?!

ஏன்டா மாப்பிள்ளைய மாத்திப்புட்டா என்ன, உன் நண்பன் புள்ளன்னு பாக்கிறியா?

அட, அதில்லம்மா! நண்பனா இருந்தா என்ன, எதிரியா இருந்தா என்ன? காசிருக்கு, புள்ளை நல்லாருக்கும். பரிசம் போட்டபின்ன மாப்பிள்ளைய மாத்தினா நம்ப மானம் என்னம்மா ஆவுறது? அப்பத்தான் பயலுக்கு இவளையும் அங்க இழுத்துக்கிட்டு போற யோசனை வந்துச்சாம், அதான் இவள படிக்கச்சொன்னானாம், அவங்கப்பன் சொல்றான், என்னா செய்ய?

என்று அலுத்துக்கொண்டபடி டாக்டராகும் எல்லா வாய்ப்பும், திறமையும் கொண்ட மகளை, அவளின் வண்ணமயமான கனவுகளை அடித்து நொறுக்கியபடி மறுபடியும் பஞ்சாயத்துக்குக் கிளம்பினார் கெளரவத்துக்குப் பிறந்தவர்!

கண்ணீரோடு அறைக்குள் முடங்கிக்கொண்டது அந்த கூண்டுக்கிளி!

(பி.கு: கிராமங்களில் மட்டுமல்ல, நகரங்களிலும் ஓடிப்போன ஒரு பெண்ணைக் கண்டு தன் பெண்ணும் அப்படி செய்வாளோ என்று அஞ்சி நம்பிக்கை இல்லாமல் பெண்ணின் வாழ்வில் படிப்பை கேள்விக்குறியாக்கும் பெற்றோர்கள் இருந்துகொண்டேதான் இருக்கிறார்கள்)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *