கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 21,618 
 
 

மேல மலை இறங்கிக் கொண்டு இருந்தான் சிவனாண்டி உச்சி சாய்ந்து. மேற்கில் படிய ஆரம்பித்த பகலவன், அவன் முதுகில் உப்புக் காய்ச்சிக்கொண்டு இருந்தான். மணி மூன்று கடந்திருக்கும். தலையில் மரச் சீனிக் கிழங்கு நிரப்பாகத் திணித்து அடுக்கப்பட்ட சாக்கு. ஓடி இறங்கி ஊருக்குள் போனால்தான் நாலு மணிக்காவது தராசும் படியுமாக யாவாரம் தொடங்க முடியும்.

எப்படிப் பார்த்தாலும் நூற்றிருபது, நூற்று முப்பது ராத்தல் இருக்கும். சிவனாண்டி நல்ல சுமட்டுக்காரன். இருபத்தைந்து ஆண்டுகளாக மலை ஏறுகிறான். மலைக் கூப்புகளில் மரச் சீனிக் கிழங்கு நிலுவை கிடையாது. ஓரடி இடைவெளியில், இரண்டு கைகளுக்கு இடையிலும் சேர்த்து எடுக்க முடிகிற கிழங்கு ஒரு பூட்டு எனப்படும். விலையைக் கூப்புக்காரர் தீர்மானிப்பார். ஒரு பூட்டுக் கிழங்கு என்பது நாலு ராத்தலுக்குக் குறையாது. அன்றைய விலை பூட்டு ஓரணா.

நல்ல கிழங்கு, பிடுங்கும்போதே தெரிந்தது. கன்னங்கரிய மேல் தோல். வெள்ளை வெளேர் என உள் தோல். அடி பெருத்து, நுனி குறுகி, கூம்பு வடிவத்தில் ஓரடி நீளத்தில் தெறிப்பான கிழங்குகள். கிழங்கின் தூர் கைப்பிடிக் கனம் இருக்கும். சாக்கில் அடுக்கி, சுமந்து கீழே இறக்கி எடை போட்டு விற்கும் வரை கிழங்கு உடையாது. தொடையில் அடித்து உடைத்துப் பார்த்தால், பால் வெள்ளையாகக் கிழங்கு வெகுளியாகச் சிரிக்கும்.

பெருந்தவம்1மரச் சீனியில், அந்த நாட்களில் நாலைந்து ரகங்கள் இருந்தன. செடிக்கே ஊருக்கு ஒரு பெயர். மரச் சீனி, மர வள்ளி, ஏழிலைக் கிழங்கு, குச்சிக் கிழங்கு, டேப்பியோக்கா என்றெல்லாம் கூப்புக்காரர்களின் வர்த்தமானம் கேட்டுக் கேட்டு, சிவனாண்டிக்குக் கிழங்குகளின் பெயர் தெரியும். பார்த்தால் அடையாளம் தெரிந்துகொள்வான். நீங்கள் பார்த்ததும் இது இட்லி, கொழுக்கட்டை, இடியாப்பம், புட்டு என அடையாளம் தெரிந்து கொள்வது இல்லையா?

செங்கொம்பன் என்றோர் இனம் உண்டு. செடியின் தண்டு, இலைக் காம்பு எல்லாம் சிவப்பாக இருக்கும். கிழங்கில் சித்துக் கசப்பு உண்டு. அடுப்பில் போட்டால் வேகவே வேகாது. இது, மாவுக்கு அடிக்கத்தான் லாயக்கு.

கோயில் வெள்ளை என ஒன்று உண்டு. இந்தக் கிழங்கின் மேல் தோல் தவிட்டு நிறத்திலும் உள் தோல் வெள்ளை நிறத்திலும் இருக்கும். இதிலும் கொஞ்சம் கடுப்பு உண்டு. வேகலாமா, வேண்டாமா என நீண்ட நேரம் யோசிக்கும். மாவுக்குத்தான் இதையும் பயிர் செய்வார்கள். தீத்திக் கிழங்கு என்ற பெயரே தீவனத்தை நினைவுபடுத்துவது. தீனி, தீற்றி, தீத்தி என்று போகிறது சொல். ‘தானும் திம்பான்… கூட இருக்கப்பட்டவனையும் தீத்திப்பான்’ என்பது வழக்கு. உள் தோலும் ஆகாரத்துக்கு உகந்தது. அடுப்புக் கங்கில் ஐந்து நிமிடங்கள் வைத்து எடுத்தால் புட்டு மாவுபோல வெந்து உதிரும்.

நான்காமவன் கரிகாலன். பெயர் சொல்லாமல், முன்பே இந்தக் கிழங்குபற்றிச் சொன்னோம். தீ என்று சொன்ன உடனேயே வேக ஆரம்பித்துவிடும். சிவனாண்டிக்குத் தெரியாமல் வேறு சிலவும் இருக்கலாம். எதிர்காலத்தில் வளர்த்து எடுக்கப்படலாம். எதுவானாலும் பச்சையாகத் தின்பது உகந்தது அல்ல. ஆசைக்கு ஒரு துண்டு தான் அளவு. மீறினால் பித்தம் பிரட்டும். ஆகவே, வேகவைத்துத் தண்ணீர் இறுத்துவிடுவார்கள். காயவைத்து மாவடிக்கும்போதும், கண்டம் வெட்டிப் பாறையில் உலர்த்தி, வாங்கி வந்து வீட்டில் நனையப்போட்டு புட்டுக்கு இடிக்கும்போதும் இந்தப் பித்தம் எங்கே போகும் என்றே தெரியவில்லை. ஒருவேளை உலர்வதால் மாயுமாக இருக்கும்.

கிழங்கு பிடுங்குகிறார்கள் கூப்பில் என்கிற சேதி, எந்தக் கூப்பு என்ற தகவலுடன் காற்றில் மிதந்து வரும். காற்று வதந்திகளை மட்டுமே பரப்புவது இல்லை. விதையை, நோயை, தட்பத்தை, வெப்பத்தை, கானத்தைப் பரப்பும். மழையைக் கொணரும், மாரியைத் துரத்தும், பருவமான பயிர்கள் கதிர் தள்ள உதவும், கதிரான பயிரின் பால் குடித்துப்போகும், காதலியாகக் கொஞ்சும், பகைபோல் வெருட்டும். ஆனி ஆடிக் காற்றுக்கு அம்மியும் குழவியும் பறக்கும்.

காற்றில் சேதி வந்ததும் சிவனாண்டி பெரிய சாக்கு ஓட்டைகளைத் தைத்து, சீர் பார்த்து, வாய்க்கட்டும் சணலால் சுருட்டிக் கட்டி வைப்பான். சேவல் கூப்பிட எழுந்து, உமிக் கரியால் பல் துலக்கி, முகம் கழுவி, உப்புப் போட்டு ஆற்றிய பழஞ்சித் தண்ணி இரண்டு போணி குடித்து, சாரத்தை மடித்துக் கட்டி, துவர்த்தை தலையில் சுற்றி, கூப்புக்கு மலை ஏறத் துவங்குவான்.

தடம் தெரியும்போதே ஊர் தாண்டி, வயற்காடுகள் தாண்டி, ஓடைக்கரை தாண்டி, பனை விளைகள் பல கடந்து, சுடலை மாடன் காவல் காக்கும் மயான பூமிகள் போக்குவிட்டு, அனந்தனாற்றுப் பாலம் ஏறி இறங்கி மலையடிவாரம் வந்து மலை ஏறணும். சூரியோதயம் ஆகி ஏழெட்டு நாழிகை ஆகிவிடும் மரச் சீனிக் காடு கிடக்கும் கூப்பு சேர. கிட்டத்தட்ட பாதி மலை ஏறணும் கிழங்கு பயிராகும் சமதளம் அடைய. அப்படி முற்று முழுதாகச் சமதளம் என்றும் சொல்லிவிட இயலாது. மேடும் பள்ளமுமான சிறு பாறைகள் குறுக்கிடும் மண் பரப்பு.

கிழங்கு வாங்கப் போகும் அவனைப் போன்றோர் போய்ச் சேரும் முன்பே கூப்புக்காரர் இரண்டு மூன்று பேர் வந்து சேர்ந்திருப்பார்கள். அனந்தனாற்றுப் பாலம் கடக்கும்போதே புறம்போக்குக் காட்டு விளையோரம் படுக்கப்போட்டிருக்கும் சைக்கிள்களைக் காணலாம். எவராயினும் அந்த ஈட்டானில் இருந்து ஏறித் தான் ஆக வேண்டும்.

மரச் சீனி விளையை அடைந்ததும் பாறை மேல் குத்தவைத்து உட்கார்ந்து ஓய்வெடுக்க இயலாது. கிழங்கு பிடுங்க வேண்டும். மரச் சீனி பயிரிடும்போது, நாலு மண்வெட்டி மண்ணை இரண்டடி உயரத்தில் மண்ணும் சரளைக் கற்களுமாகக் கிடக்கும் மண்கொவர்ந்து பொங்கி, கீழே இருக்கும் கிழங்குகளின் தடிப்பால் வெடித் துக் கிடக்கும். சற்று மூச்சுப் பிடித்து, மரச் சீனிச் செடியில் தூரைப் பிடித்து நட்டுக் குத்தறத் தூக்க வேண்டும். ஏழெட்டு ராத்தல் எடை இருக் கும் பெரிய, சிறிய கிழங்குகளுடன் செடி மூட்டோடு மேலே வரும். கீழே சாய்த்துவிட்டு அடுத்த மூடு. தனது தேவைக்குப் போதும் என்கிற தீர்மானம் வரும் வரை மரச் சீனி மூடு களைக் கிழங்குகளுடன் பிடுங்கிச் சாய்த்த பின், செடிகளில் இருந்து கிழங்குகளைப் பறித்துக் குவிக்க வேண்டும்.

பெருந்தவம்2சிவனாண்டியைப் போல, பத்துப் பன்னிரண்டு பேர் வந்து மரச் சீனிக் கிழங்குகளைப் பறித்துக்கொண்டு இருப்பார்கள். சைக்கிள் பாரம் அடிப்பவர், சுமட்டுக்காரர், பனை ஓலைக் கடவப்பெட்டி கொண்டுவரும் தாய்மார், ஒன்றிரண்டு சிறுவர், பதினைந்து பதினாறு வயதுப் பிராயத்தே.

பெரிய கிழங்கு, சின்னக் கிழங்கு என்று கழித்து வாங்க ஏலாது. கலந்துதான் பூட்டும் போடுவார் கள். அவரவர் பிடுங்கிப் பறித்த குவியல் முன் நின்றுகொள்ள வேண்டும். காசு வாங்கிக்கொண்டு பூட்டு எண்ணிப் போடுவார்கள். சில கிழங்குகளை ‘லாபம்’ என்று சொல்லிப் போட்டாலும், ‘வீட்டுக்கு அவிச்சுத் திங்க’ என்றும் சில எடுத்துக்கொள்ளலாம். ஒன்றும் சொல்ல மாட்டார்கள். சுமக்கு மட்டும்; காசு இருப்பது போலவும் வாங்கலாம்.

கிழங்குகள் சாக்கினுள் புன்னைக் காய்கள்போல் இடம் தேடித் தானாகச் சென்று அமர்ந்து கொள்ளாது. நீள வாக்கில், நிப்பாட்டில் கோலத்தில் நேராகவும் தலைகீழாகவும் இண்டு இடுக்குப் பார்த்துச் செருக வேண்டும். வெளி பார்த்து, இடம் பார்த்துச் செருக வேண்டும். வாங்கியதை மூடையாக நிரப்பாக அடுக்கி முடித்ததும், கிழங்கு பிடுங்கிய மண் குவியல்களில் கூர்க் கொம்புகள் கொண்டு கிளைத்துப் பார்த்தால் தப்புக் கிழங்குகள் கிடைக்கும். தானாகத் தப்பியவை; வேண்டும் என்றே தப்பவிடப்பட்டவை அல்ல. பொறுக்கப்பட்ட தப்புக் கிழங்குகளைப் பார்த்தே கூப்புக்காரர், கள்ளத்தனம் கண்டுபிடித்துவிடுவார். தப்புக் கிழங்குகளை இலவசமாகவே எடுத்துக்கொள்ளலாம். எப்படியும் நாலைந்து ராத்தல் கிடைக்கும்.

கடவம் ஆனாலும் மூடையானாலும் காட்டில் சுமை எடுக்கும்போது மட்டும்தான் தூக்கிவிட இரு கைகள் இருக்கும். பிறகு, எல்லாம் விதிப் பலன்.

கிழங்கு அடுக்கி, சாக்கு முழுத்து, வாய்ப் பூட்டுப் போட்டுக் கட்டி, குறுக்கு நிமிரும்போது, சுட்ட கிழங்கின் மணம் கிளர்ந்து வீசும். முதலில் பிடுங்கப்பட்ட செடிகளில் இருந்து பறிக்கப்பட்ட கிழங்குகளில் கூப்புக்காரர் ஒருவர் தலை எண்ணி, நல்ல பருத்துத் திரண்டு விம்மியவற்றைப் பொறுக்கிப்போவார். பாறை மீது காட்டு விறகுகள் சேர்த்துத் தீ மூட்டி, தீக்கங்குகள் விழுந்ததும் கிழங்குகளை அடுக்கி, அதன் மேல் ஆழப் பறித்த தீக் கங்குகளால் மூடி, கிழங்கு சுடுவார்.

மேல் தோல் கருகி, உள் கட்டி வெண்தோலும் கருகி, கிழங்கு வெந்து வெடித்து மலர்ந்திருக்கும். தீக்கங்கு மூட்டத்தைக் கலைத்துவிட்டு, கிழங்குகளைச் சூடு பொறுக்கப் பொறுக்கி, கரிந்த தோல்களைத் தட்டி, வாழை இலையில் அடுக்கிவைப்பார். மரச் சீனிச் செடிகளின் வெளி வட்டத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கத்திரிச் செடிகளும் காந்தாரி மிளகாய்ச் செடிகளும் காய்த்துக் கிடக்கும். காந்தாரி மிளகாய் என்பது மிளகாயில் சின்ன ஊசி ரகம். காரம் பத்து மடங்கு. இரண்டு கை கத்திரிக்காய்களைப் பறித்து தீக்கங்கில் போட்டுச் சுட்டு எடுப்பார். பாறை மேல் சற்று நிரப்பான பகுதி ஏற்கெனவே கழுவப்பட்டுக் கிடக்கும். சிவலிங்கம்போல் வடிவுள்ள பாறைத் துண்டு ஒன்று குழவி. பிறகென்ன, கீழே இருந்து கொண்டுவந்த பரல் உப்பு, புளிச் சுளைகளுடன் காந்தாரி மிளகாய், சுட்ட கத்திரிக்காய் சேர்த்து நெய் நொறுங்கச் சதைத்து, குப்பியில் கொண்டுவந்த தேங்காய் எண்ணெயைக் கணிசமாக விட்டுக் குச்சியில் கிளறினால் தீர்ந்தது சோலி.

சுட்ட கிழங்குக்குச் சுள்ளென்று இருக்கும். கூப்புக்காரரும் அவரது வேலைக்காரர்களும் கிழங்கு வாங்க வந்தவர்களுமாக சமபந்தி போஜனம். கால் துண்டு இலையில் சுட்ட கிழங்கும் சம்மந்தியும் எடுத்துப் போடுவார் கூப்புக்காரர். கூடி இருந்து தின்பது ஏதோ மதச் சடங்கு போலிருக்கும். பக்கத்திலேயே சலசலத்து ஓடி இறங்கும் காட்டு நீரோடை. கொள்ளுமட்டும் இரு கைகளாலும் கோரிக் குடித்து, முழங்கால், முழங்கை, கழுத்து, முகம், நெஞ்சு என நீர் அறைந்து வியர்வை உப்புப் போகக் கழுவிக்கொள்ளலாம்.

தலையில் சுமடு எடுத்த பின் நீ யாரோ? நான் யாரோ? மலை இறங் கும்போது கழுத்து உறைப்பும் கால் உறுதியும் என்னைப் பார், என் அழகைப் பார் என்னும். அனந்தனாற்றுப் பாலம் வரைக்கும் எல்லோருக்கும் ஒரே தடம்தான். ஆடு மாடுகள், மனிதர்கள் நடந்து பழகிய ஒற்றையடித் தடம். தடத்தின் பக்கவாட்டுகளில் பெயரறியாப் பல செடிகள். காளை முள், அழிசு, ஈச்சம் புதர், கள்ளி…. பெருவிரல் நுனிகளுக்குக் கண் திறந்து தடம் பார்த்து சரளைக் கற்கள், மகடிக்கும் சிறு பாறை தவிர்த்து, மழை பெய்திருந்தால் வழுக்கும் தரை பதனம் பார்த்து… தினமும் ஏறியிறங்கும் தடம் என்றாலும், கால் தடுக்கி விழுந்தால், மேலே விழும் கிழங்குச் சாக்கு போகும் வழிக்குச் சங்கு ஊதும்.

பெருந்தவம்3சிலர் அனந்தனாற்றுப் பாலக் கலுங்கில் குனிந்து, நரக்கி நரக்கி மூடையைச் சாய்த்துவைத்து, வியர்வை ஆற்றிக்கொள்வது உண்டு. சும்மாடாகத் தலையில் இருந்த துண்டை உதறி, தலை முடி கோதி, தலையை இடதும் வலதுமாக வெட்டிச் சொடக்கு எடுத்து, வியர்வை துடைத்து, முட்டுப் போட்டுக் குனிந்து மூடையை இழுத்து வெட்டி வெட்டித் தலைக்கு ஏற்றிக்கொள்வது உண்டு. மாடு மேய்ப்போர், காணம், கடலை என விதைத்திருந்தோர் வேலைக்கு வந்திருந்தால், சுலபமாகச் சாக்கு தலைக்கு ஏறிவிடும்.

கண் வெட்டத்தில் எவராவது தென்படுகிறார்களா என்று பார்த்தான் சிவனாண்டி. நேரமும் ஆகிவிட்டது அன்று. பாலக் கலுங்கு ஈட்டானில் மூட்டையை இறக்காமல் அஞ்சலோட்டமாகப் போய்க்கொண்டே இருந்தான். கூப்புக்காரர்கள் சற்றுப் பிந்திதான் இறங்குவார்கள். சில நாட்கள் சாய்ந்த பாறையோரம் தென்னை ஓலை தட்டிக் கட்டி மறைந்த குடிசையில் இரவு தங்கிவிடுவதும் உண்டு.

மரவள்ளிக் கிழங்கு என்பது சேனைக் கிழங்கோ, சேப்பங்கிழங்கோ அல்ல; வாரக் கணக்கில் ஒன்றும் ஆகாமல் கிடப்பதற்கு. அன்று பிடுங்கியதை அன்றே அவிக்க வேண்டும். ஒரு நாள் கிடந்தாலும் கிழங்கு கறுத்துப் போகும். அல்லது தண்ணீரில் போட்டு வைத்திருந்தால் மேலும் ஒரு நாள் கிடக்கும்.

மிகவும் குறுக்குக் கடுத்தால், தோளுயரத்தில் ஊருக்கு ஒன்றுஇரண்டு சுமைதாங்கிக் கற்கள் நட்டு வைத்திருப்பார்கள். இரண்டு கல் தூண்கள் நாட்டி, குறுக்கே ஒரு கல் தூண் போட்டு, வயிற்றுச் சூலியாக இறந்துபோன பெண்களுக்காக எல்லாம் ஒரு பரோபகாரம்தான். பார வண்டி கள் அதிகம் போகும் ஊர்களில் வண்டி மாடுகளுக்குத் தண்ணீர் காட்ட கல் தொட்டிகள்கூட அடித்துப் போட்டிருப்பார்கள்.

வேகும் கிழங்கானால் சடாரென விற்றுத் தீர்ந்துபோகும். வேகாத கிழங்கைப் பொய் சொல்லி விற்றால், அடுத்த நாள் ஊருக்குள் இறங்க முடியாது. முறம் கொண்டு சாத்து முறை கிடைக்கும். இன்று அந்தக் கவலை இல்லை. இரண்டு ராத்தல் ஓரணா என்று விற்றால், நான்கு ரூபாயும் வீட்டுக்கு அவிக்கக் கிழங்கும் மிஞ்சும். கடைசியில் விற்காமல் தங்கும் நரங்கல், உடைசல், கோணல், வேர்க் கிழங்குகள் வீட்டுக்கு. பதிவுக் கச்சவடம் என்பதால் கடனும் போகும். கடன் சேர்ந்துபோனால் அரிசியோ, நெல்லோ அளந்தும் தருவார்கள்.

பெரும்பாலும் பெரிய படிப்புரை இருக்கும் வீடாகப் பார்த்து சாக்கை இறக்குவான். தராசும் படியும் அங்கேயே ஒரு வீட்டில் கொடுத்துவைத்திருப்பான். சாக்கை அவிழ்த்ததும் கண்ணில் படும் முதல் பெண்மணியை விளித்து, ”யக்கா… இதை ஒரு அஞ்சு மினிட் அடுப்புக் கங்கிலே பூத்து வெச்சு எடுத்தாக்கா” என்பான், பெரிய கிழங்கு ஒன்றைக் கொடுத்து.

யாவாரம் களை கட்டும். எப்போதும் அவன் நிறுவை தாராளமாகவே இருக்கும். சிவனாண்டிக்கு கள்ளத் தராசு பிடிக்கத் தெரியாது என்றாலும், நிறுத்து முடிந்த பின் சாக்கினுள் கைவிட்டு சின்னதாகக் கிழங்கு ஒன்று எடுத்துக்கொள்வார் கள் உரிமையுடன்.

சில வீடுகளில் அந்திக் கடையில் வாங்கி வரும் சாளை, அயிலை, அல்லது நெத்திலிப் புளிமுளத்துடன் கிழங்குக் கறி. சில வீடுகளில் கண்டம் வெட்டிப் போட்டு அவித்து, தண்ணீர் இறுத்து சுட்ட மிளகாய், பூண்டு, உப்பு, சின்ன உள்ளி சேர்த்து நசுக்கிய சம்மந்தி தொட்டுக்கொள்ள. சில வீடுகளில், சின்னச் சின்னத் துண்டுகளாக நறுக்கி, அவித்து, தண்ணீர் இறுத்து, கடுகு உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய் வத்தல் போட்டுத் தாளித்துக் கொட்டிக் கிளறி, தேங்காய்ப் பூ தூவி இறக்கினால் தாளித்த கிழங்கு.

அவியாத கிழங்கு என்றால் அதற்கு வேறு வைத்தியம் பார்க்கணும். கொஞ்சம் அரிசியுடன் சேர்த்து அரைத்து அடைபோலச் சுடலாம். கிழங்கு ரொட்டி என்பார்கள்.

ஓரணாவுக்கு இரண்டு ராத்தல் கிழங்கு வாங்கினால், சின்னக் குடும்பம் ஒரு வேளை பசியாறும்.

எந்தக் கோயிலிலாவது சாமிக்கு நைவேத்தியத்துக்குக் கிழங்கு அவித்துவைக்கிறார்களா என்று தெரியவில்லை. அக்காரவடிசிலும், நெய்யப்பமும், அப்பமும், மோதகமும், அதிரசமும், அரிசிப் பாயசமும், கொழுக்கட்டையும், தோசையும், சுண்டலும், வடையும், புட்டமுதும், பஞ்சாமிர்தமும், நெற்பொரியும், லட்டும் தின்னு சொகுசு கண்ட சாமிக் குலம். அவர்களுக்கு

பஞ்சமா, விலைவாசியா என்ன கிடக்கிறது மரவள்ளி தின்ன? மிகப் பழைய காலத்து மனிதர்கள் கடவுள் கள். மரச்சீனிக் கிழங்கு இன்னும் நாஞ்சில் நாட்டின் கல்யாணப் பந்திக்கே வந்து சேரவில்லை.

காலணா, அரையணா பாக்கிவைத்துவிடுவார்கள். முறித்துப் பேசினால் யாவாரம் போச்சு. சிலரிடம் உண்மையிலேயே இருக்காது. நினைவிருந்தால் அடுத்த நாள் கேட்டு வாங்கலாம். சிலருக்கு அது ஒரு விலை குறைத்து வாங்கும் உத்தி. கிட்டத்தட்ட சிவனாண்டிக்கு இந்த யாவாரம் நாயர் பிடித்த புலி வால். ஒரு வகையில் வாழ்க்கையே நாயர் பிடித்த புலி வால்தான். கச்சவடம் நிறுத்தினால் எப்படியும் இருபது, முப்பது போய் கடன் நின்றுபோகும். எந்தக் காலத்திலும் வசூல் ஆகாது. சரி, இதை நிறுத்தி விட்டு வேறு வாத்தியார் வேலைக்கா போக இயலும்?

கொழுஞ்சிக் குழை பிடுங்கிக் கட்டிக்கொண்டு வரலாம். சுக்கு நாறிப் புல் அறுத்துக் கட்டி வரலாம். மலம்புல் அறுக்கலாம். விறகு வெட்டி வந்து விற்கலாம். கறிச் சக்கை யாவாரம் செய்யலாம். காவேரி ஆறு கஞ்சியாகவே ஓடினாலும் நாய் நக்கித்தானே குடிக்கணும்?

எல்லோரையும் போல ரூபாய்க்கு மூன்று படி அரிசியை நம்பித்தான் ஓட்டுப் போட்டான் சிவனாண்டி. ஆட்சிக்கு வந்ததும் அயத்துப் போயிற்று எல்லோருக்கும். கும்பி மறக்குமோ வேளைக்குப் பசிக்க?

கட்சிக்காரர்களும் கட்சிக்காரர்களுக்குக் காசு கொடுத்தவர்களும் கள்ளுக் கடை, சாராயக் கடை ஏலம் எடுத்தார்கள். ஊருக்கு வெளியே, சற்று உள் ஒதுங்கி, கள்-சாராயக் கடைகள் வந்தன. முடைந்த தென்னை ஓலைக் கூரையும் பக்க நிரைசலுமாக பெருங்கூட்டம் சாய்ந்தது. கடை வாசல்களில் வறுத்த சாளை, அயிலை, செந்நவரை என மலிந்த மீன்கள். அவித்த தாராக் கோழி முட்டை, கடலை சுண்டல், காரச்சேவு, கண்டம் வெட்டி அவித்த மரச் சீனிக் கிழங்கு.

அன்றைய யாவாரம் முடிந்து, வெறும் சாக்கைக் கக்கத்தில்வைத்துக்கொண்டு, சிவனாண்டி வீட்டுக்கு நடந்தான். ஒரு டீயும் குடித்து, பீடியும் பற்றவைத்து கால்களில் தெம்மாங்கு சலங்கை கட்டி ஆட…

நான்கு கள் – சாராயக் கடைகளுக்கு, மேற்படி தீனிகளை விற்க ஏற்றிருந்த கீழூர் சுப்பையா அண்ணாச்சி, சிவனாண்டியை வழி மறித்தார்.

”ஏய் செவனாண்டி… வா! யாவாரம்எல்லாம் முடிஞ்சு வீட்டுக்குப் போற யாக்கும்? என்னா, வெறும் சாக்கை சுருட்டிட்டுப் போற?”

”வள்ளிசா வித்துப்போச்சு அண்ணாச்சி. வீட்டுக்குக்கூட இன்னைக்குக் கெழங்கு இல்ல… போற வழியில அரிசியும் மீனும் வேண்ட ணும்.”

”தெரியுமில்லா ஒனக்கு? நாலு கள்ளுக் கடைக்கு நாந்தான் சாக்னாக் கடை.”

”அது எப்படி அண்ணாச்சி? ஒரே ஆளு நாலு கடை எப்பிடி பாப்பேரு? நீரு என்ன பி.யூ.சின்னப்பா நடிச்ச ஜகதலப் பிரதாபனா?”

”பாரு… இதுக்குத்தான்… இதுக்குத்தான் நீ கௌங்கு சுமக்கப்போறே. நான் காலாட்டிக்கிட்டு இருந்து யாவாரம் பாக்கேன்.”

”சம்பளத்துக்கு ஆளு வெச்சிருக்கீரா?”

”சம்பளத்துக்கு ஆளு வெச்சு நொட்னாப்பிலே தான்… விக்கதுலே பாதி அவன் கொண்டுக்கிட்டுப் போவான்… நாம விரலைச் சூப்பீட்டுத் தெருவோட போலாம்.”

”பின்னே என்னதான்

செய்யேரு?”

”ஒரு கடையிலே நான் இருப்பேன்… ஒண்ணுலே எம் பொண்டாட்டி இருப்பா… ஒண்ணுலே எங்க அம்மை… ஒண்ணுலே என்னோட மாமியாரு.”

”நாசமாப்போச்சு… கள்ளுக் கடை வாசல்லே?”

”எலே, மாந்தையா? எம் பொஞ்சாதிக்கு அம்பது வயசாகு. எல்லாம் நிண்ணாச்சு. அம்மையையும் மாமியாளையும் கடத்தீட்டுப் போயி என்ன செய்ய? அது கெடக்கட்டும். ஒன்னைக் கூப்பிட்டது வேற ஒரு காரியத்துக்காக்கும். நல்ல கெவனமாக் கேளு… சங்கதி வெளையாட்டுல்ல. தெனமும் எனக்கு அம்பது ராத்தல் மரச் சீனிக் கௌங்கு வேணும். நல்ல மொறட்டுக் கௌங்கா, சட்னு வெண்ணெ மாதிரி வேகக்கூடிய நாட்டு… கடுப்போ கசப்போ இல்லாம… என்ன நான் சொல்லுகது? நீயும் நம்ம பய… ஒனக்கு ஒரு ஏந்தலாட்டு இருக்கும்… அதான் உன்னைக் கூப்பிட்டுக் கேக்கேன். எனக்கு வேற ஆளு கெடைக்காம இல்ல.”

”கொண்டாறதுலே பாதிச் சாக்கு உமக்குப் போட்டுட்டா, நான் பொறகு ஊருக்குள்ளே என்னத்தைக் கொண்டுகிட்டுப் போயி விக்கது?”

”நீ ஒரு மட சாம்பிராணி… மொத்தமா ஒரு இடத்திலே கொண்டுபோட்டுட்டு காசு மாறப்பட்ட வழியைப் பாப்பியா? ஊருக்குள்ளே போயி, கடனுக்கு கூவிக் கூவி விப்பியா?”

”அதுக்கில்லே… பத்து அறுவது குடும்பம் எனத்த கெழங்கை நம்பிப் பசியாறும்.”

”நீ கடனுக்குத் தராண்டாம்டே… ரொக்கம். முன் கூறா வேணும்னாலும் வாங்கிக்கோ. என்னா, நாளையிலேர்ந்து போடுகியா?”

”பாக்கட்டும்… யோசிச்சுச் சொல்லுகேன்.”

”இதுலே யோசிக்கதுக்கு என்ன மயிரு இருக்குலே? இல்லேண்ணா ஒரு காரியம் செய்யி… ஒம் மகனுக்கு என்ன வயசாகு?”

”ஏன்? எதுக்கு? பதினஞ்சு…”

”கூடக்கூட பாத்திருக்கேன்… கை காலு தெறனாத்தான் இருக்கான். மலைக்குப் போகச்சிலே கூடக் கூட்டீட்டுப் போலே. ஒரு குட்டிச் சாக்கு கௌங்கு செமக்க மாட்டானா? பாடுபட்டாத்தானே சாப்பிட முடியும்? தொழிலும் பழகின மாதிரி இருக்கும்ல!”

”படிக்காம்ணேன்… பத்து போறான். நல்ல படிப்பாம்ணேன்… பதினொண்ணு பாஸாயிட்டாம்ணா, நம்ம எம்மெல்லே கிட்ட சொல்லி எங்கினயாச்சும் சேத்து விட்டிரலாம்.”

”ஆமா! எம்மெல்லே ஒங்களுக்கு செரைக்கதுக்குத்தான் செயிச்சு வந்திருக்கான். சொளையா இருவத்தஞ்சாயிரம்… பப்ளிக் சர்வீஸ் எளுதுனா? வெச்சிருக்கியா ரொக்கம்?”

”என்னது?”

”ஆமா, பொய்யா சொல்லுகேன்? அதும் உள்ளூர்லே இனவனுக்கு செய்தா ஊரெல்லாம் பாட்டு ஆயிரும்னு, வடமதிக்காரனுக்குத்தான் செய்யானாம். காலம்பற ஒரு நாளு அவன் வீட்டு வாசல்லே போயிருப் பாரு… அவனவன் பெரிய சஞ்சியிலே நோட்டுக் கட்டு வெச்சுக்கிட்டு காத்து கெடக்கதை. தேங்கா வித்தது, மாங்கா வித்தது எல்லாம் இவனுக்குப் பொந்திலேதான்… அதுனால பேசாம ஒம் மகனைக் கூடக் கூட்டீட்டுப் போ…”

”படிக்கப்பட்ட பயல்லாண்ணேன்…”

”ஆமா, படிச்சு பெரிய ஜில்லா ஜட்ஜா ஆகப் போறான். போலே, புத்தியிட்டுப் பொழைக்கப்பட்ட வழியைப் பாரு.”

சிவனாண்டியின் மண்டைக்குள் யோசனைக் கதிர்வீச்சுகள் குறுக்கும் நெடுக்குமாகப் பறந்து பாய்ந்தன.

அடுத்த நாள் காலை சிவனாண்டியுடன் அவன் மகன் குமராண்டியும் மரச் சீனி வாங்கப் போனானா?

குமராண்டி போகவில்லை.

போயிருந்தால் அவனுக்கு இந்தக் கதையை எழுதிக்கொண்டிருக்க வாய்ப்பு இருந்திருக்காது!

– நவம்பர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *