பெரிய மனசு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 30, 2020
பார்வையிட்டோர்: 5,113 
 
 

(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

அந்தச் சிறு உருவப் பெண் ஒரு அதிசயம் என்றே எனக்குத் தோன்றுகிறது.

மிஞ்சி மிஞ்சிப் போனால் அதற்கு வயசு ஆறு அல்லது ஆறரைதான் இருக்கும். அந்த வயசுக்கு ஏற்ற வளர்ச்சி கூடப் பெற்றிருக்கவில்லை அதன் உடல். “கத்தரிக் காய்க்குக் காலும் கையும் முளைத்த மாதிரி” என்பார்களே. அதை விளக்குவதற்கு ஏற்ற உயிருள்ள உதாரணமாக ஓடியாடித் திரியும் அந்தக் குழந்தையின் பெயர் என்னவோ- எனக்குத் தெரியாது…

நாகரிக யுகத்தின் தவிர்க்க முடியாத பரிணாமங்களில் ஒன்று “ஓட்டல்களை நம்பி உயிர்வாழும் பிராணிகள் இனம்! அந்த இனத்தைச் சேர்ந்த எனக்கு இந்த நகரத்தின் எத்தனையோ ”ஓட்டல் “களைத் தெரியும், அந்த ஓட்டல்களில் உள்ளவர்களுக்கும் என்னைத் தெரியும்.

தெரியும் என்றால் என்ன! அடிக்கடி ஆஜர் ஆகி மறைகிற ஒரு முகம் என்ற அளவுக்கு அறிமுகம் ஆகியிருப்பது தவிர, நான் யார் என் தொழில் என்ன, எனது மாத வருமானம் எவ்வளவு என்பன போன்ற விவரங்கள் எதுவும் யாருக்கும் தெரியாது. அதே ரீதியில்தான் அந்தச் சிறுமியும் எனக்கு அறிமுகம் ஆகியிருந்தது.

அதற்கும் என்னைத் தெரியும். அதாவது, எந்த இடத்தில் கண்டாலும், கண்களில் சுடரொளி மின்ன, முகம் நன்கு மலர்ச்சியுற , வெண்பற்கள் தெரிய களங்கமற்றுச் சிரிப்பு வழங்கத் துணைபுரிகிற அளவுக்கு எனது தோற்றம் அச்சிறுமிக்குப் பழக்கப்பட்டு விட்டது. அது எங்குநின்றாலும், எந்தக் கூட்டத்திடையே வந்தாலும், எப்படித் திரும்பி நின்றாலும் “அதோ அந்தப் பெண்!” என்று என் மனம் கொக்கரிக்கக் கூடிய விதத்தில் அதன் உருவம் என்னுள் பதிந்திருந்தது.

விந்தையாகக் கண்டு களிப்பதற்கு ஏற்ற வேடிக்கை உருவமாகத்தான் அந்தச் சிறு பெண் விளங்கியது. என்றோ ஒருநாள் ”லேடி கிராப்” ஆகக் கத்தரிக்கப்பட்டிருந்த தலை மயிர் ஒழுங்காக வளராமல் நெட்டையும் கட்டையுமாக அடர்ந்து கிடக்கும் பரட்டைத் தலை, அது வாரிவிடப்படாமல் எப்பொழுதும் சீர்குலைந்தே தோன்றும். அந்தப் பெண் குதித்து ஓடும்போது தலைமயிர் தனி நடனம் பயிலும். தலைமயிர் எப்படிக் காட்சியளித்த போதிலும், விசாலமற்ற அதன் நெற்றியிலே சற்று பெரிதாகவே தோன்றும் சாந்துப் பொட்டு, கொலுவிருக்கத் தவறுவதே கிடையாது. அழுத்தமான வர்ணங்கள் பெற்ற முரட்டுத் துணிச் சட்டையும் பாவாடையும் தான் அணிந்திருக்கும் அச்சிறுமி, அழுக்கு முட்டிப்போனாலும் அது அம்பலமாகிவிடாது என்ற காரணத்தினாலேயே அத்தகைய துணிகளைப் பெரியவர்கள் அந்தச் சிறு பெண்ணுக்காகத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். பாவாடையும் சட்டையும் கூட சதா கட்டையானவை ஆகவே தோன்றும். பாஷன் என்றோ, குழந்தை வேகமாக வளர்கிறது என்றோ காரணம் கூற முடியாது அதற்கு. பெற்றோர் அல்லது கார்டியனின் சிக்கன நோக்கு தான் அடிப்படைக் காரணமாக இருக்க முடியும்.

வாழ்க்கை வசதிகளை வளமாகப் பெற்றிராத குடும்பத்திலே வளரும் குழந்தை அது. அதன் உருவமும் உடையும் இதை எடுத்துக்காட்டின. ஆனாலும் அது சந்தோஷமாகவே விளங்கியது. சந்தோஷமாக இல்லாமல் இருப்பதற்கே வசதி செய்து தருகிற இன்றைய சமுதாயச் சூழ்நிலையில் களிதுலங்கும் முகத்தோடு காட்சி தருகிறவர்களைக் காண்பதே மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான். ஆகவே, ஆனந்த மயமான அச் சிறு உருவத்தை எனக்கு மிகுதியும் பிடித்திருந்தது.

ஒரு ஓட்டலுக்குப் போய்வரும் பாதையிலும், அந்த ஓட்டலின் முன்னரும் அந்தப் பெண் அடிக்கடி தென்படும். பெரியவர்கள் யாருக்காகவேனும் மிக்ஸ்சர் அல்லது பக்கடா அல்லது வேறு ஏதாவது வாங்கிவர அது ஓட்டலுக்குள் பிரவேசிக்கும். அப்படி வருகிறபோதெல்லாம். அது சாவகாசமாக நின்று ஆராய்ச்சி செய்யாமல் திரும்பிவிடத் துடிப்பதே கிடையாது.

அலமாரியில் வசீகரமான, வர்ணமயமாக, எடுப்பான வெளிச்சத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இனிப்புத் தினுசுகளை ஆசையோடும் ஆர்வத்தோடும் பார்த்துக்கொண்டே நிற்கும் அது. அங்கே அருகில் உள்ளவனிடம் “அது என்ன? இது என்ன? அதன் விலை எவ்வளவு? இதன் விலை எவ்வளவு?” என்று விசாரிக்கும். அவனுக்கு அதன் தொண தொணப்பு தொல்லையாகவே படும். ஒன்றிரண்டு தடவை பதில் சொல்லிவிட்டு பிறகு “சீ போ!” என்று அவன் எரிந்து விழுவதே இயல்பாகும். முடிவில் அச்சிறுமி “கொஞ்சம் பக்கடாத் தூள் கொடேன்” என்று கேட்டபடி கையை நீட்டும். சில சமயம் கேட்டது கிடைக்கும் சில சமயம் கிடைக்காமலும் போகலாம். கிடைத்து விட்டால் அது அதிக மகிழ்ச்சி அடைவதுமில்லை. கிடைக்காது போயின் வருத்தப்படுவது மில்லை. வழக்கம்போல் சிரித்துக் கொண்டே திரும்பிவிடும்.
விளம்பரப் பகட்டும் வியாபார தடபுடலும் மலிந்துவிட்ட நாகரிக நகரத்தில் மக்களின் எண்ணத்தை, ஏக்கத்தை, ஆசையை, கனவை எல்லாம் தூண்டி விடுவதற்கு வேண்டிய வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன. அந்தச் சிறு பெண்ணின் உள்ளம் கூட நிறைவேற முடியாத எண்ணங்கள் மலரும் வனமாக, அடக்க இயலாத ஏக்கங்கள் மண்டும் குகையாக, தீர்த்து வைக்க முடியாத ஆசைகள் அலைமோதும் கடலாக, அனுபவ சாத்தியமற்ற கனவுகள் நிழலாடும் அரங்கமாகத்தான் திகழும் என்று எனக்குத் தோன்றுகிறது. ஆயினும் அந்தக் குழந்தை ஒரு போது கூடத் தன் சிரிப்பை மறந்து விடவேயில்லை. அதுதான் அந்தச் சிறு பெண்ணிடம் காணப்பட்ட விசேஷச் சிறப்பு.

அதன் தன்மைக்காக அதைப் பாராட்டலாம். தாராளமாக ஸ்வீட்டும் ஐஸ் கிரீமும் வாங்கிக் கொடுக்கலாம் என்று நான் அடிக்கடி எண்ணுவது வழக்கம். ஆனாலும் ஒரு தடவை கூட நான் அவ்வாறு செய்ததில்லை. காரணம், என் எண்ணத்தின் வள்ளல் தனத்துக்கு வேலி போடும் உரிமை எனது பொருளாதாரத்துக்கு இருக்கிறது. நித்திய நிரந்தர “பற்றாக்குறை” என்ற பெருமையை உடையது எனது பொருளாதார நிலை. பையிலே உள்ள அணாக்களை எண்ணிப் பார்த்துக்கொண்டே வயிற்றுக்கு ஈயவேண்டிய நிலையை வளர்த்துவரும் பொருளாதாரம் நினைத்தவருக்கு நினைத்ததை வாங்கி அருளத் துணை புரியுமா என்ன?

என்றாலும் கூட, ஒரு நாள் என்பையில் முழுசாக ஒரு ரூபாய் இருந்தது… ஒரு ரூபாய்! ஆகா, அதற்கு என்னென்னவெல்லாமோ வாங்கலாமே. அழகு அழகான வர்ணப் படங்கள் நிறைந்த சினிமாப் பத்திரிகையை வாங்கிக் கண்களுக்கு விருந்து கிட்டும்படி செய்யலாம். பழைய புத்தகக் கடையில் பல புத்தகங்கள் வாங்கி அறிவுக்குத் தீனிபோடலாம். இரண்டு வேளை முழுச்சாப்பாடு சாப்பிடலாம். எட்டுக் கப் காப்பி சாப்பிடலாம். (கப் இரண்டரை அணா என்று பில் போடுகிற சுரண்டல்காரர்கள் கடைகளை எட்டிப் பாராமல் இருந்தால்தான்!) ஆகா, ஒரு ரூபாயை வைத்துக்கொண்டு என்னதான் செய்ய முடியாது?

அந்தச் சமயத்தில் ஆனந்தி வழக்கம் போல் குதித்துக்கொண்டு வந்தது….. அச்சிறு பெண் சதா ஆனந்த மயமாகவே இருந்ததால் என் மனம் அதை ஆனந்தி என்று குறிப்பிடுவது வழக்கம். அதன் பெயர் எனக்குத் தெரியாது என்றுதான் நான் முதலிலேயே சொல்லி விட்டேனே!

சிரித்தபடி வந்த சிறுமி கேட்டது “ஓட்டலுக்கா?” என்று,

“ஆமா, நீயும் வாறியா?”

“ஏன்?”

“பாஸந்தி வாங்கித் தாறேன்.”

இன்று இந்தப் பெண்ணுக்கு எது வேண்டுமானாலும் வாங்கிக் கொடுக்கலாம் என்றது என் மனம்.

“பாஸந்தியா? அது எப்படி இருக்கும்?” “ஜோராக இருக்கும்!” .

“நான் இங்கேயே நிற்கிறேன். நீ வாங்கிட்டு வாயேன்” என்றது குழந்தை .

“அதுக்கு தட்டோ கிண்ணமோ தேடணுமே!”

“சும்மா கையிலேயே எடுத்திட்டுவாயேன்!”

“திரவ பதார்த்தமும் இல்லாமல் திடபதார்த்தமும் அல்லாத – அதாவது, பால் மாதிரியோ வெண்ணெய் மாதிரியோ இராமல்…”

ஒரு சிறுமியிடம் பேசுகிறேன் என்ற நினைவு உறுத்தவே நான் பேச்சை நிறுத்திவிட்டேன். என் குறைபாடுகளில் இதுவும் ஒன்று. சில சமயங்களில் சில விஷயங்களைப் பற்றி சில பேரிடம் புரியும்படியாக மிகத் தெளிவாக எடுத்துச் சொல்ல முடியாமல் நான் திணற நேரிடும்.

அது என் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றது.

“அதெல்லாம் ஏன் ! நீ என்கூட ஓட்டலுக்கு வா. உனக்கு வேண்டிய ஸ்வீட்டு வாங்கித் தாறேன்” என்றேன்.

“ஐயோ, எனக்கு வெட்கமா இருக்குமே! உன்கூட நான் எப்படி வர முடியும்?” என்று நாணிக் கோணி, தலையைச் சாய்த்துக் கொண்டு அச்சிறு பெண் கூறியது மிகவும் ரசிக்கக்கூடிய காட்சியாக அமைந்தது. என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

அதுவும் சேர்ந்து சிரித்தது.

“சரி, நீ வரவேண்டாம். உனக்கு மிட்டாய் வேண்டுமா?” என்று கேட்டேன்.

“இப்ப எதுக்கு மிட்டாயி?” என்று சவால் விடுத்தது அது.

“காசு வேணுமா? ஓரணா தாறேன்”.

“ஏன் எனக்கு உன் காசு?” என்று கேட்டுவிட்டு அது ஓடியது.

இது வேடிக்கையான குழந்தை தான் என்று நினைத்தேன் நான்.

அதன் பிறகும் அவ்வப்போது அது என் பார்வையில் பட்டுக் கொண்டுதானிருந்தது. சிரித்தது. ஏதாவது பேசும்; பேசாமலே போனாலும் போய்விடும் – இதற்கெல்லாம் ஒரு திட்டம், நியதி என்று எதுவுமே கிடையாது.

ஒரு நாள்…
.
அந்தச் சிறுமி ஓட்டலில் அலமாரி அருகே நின்று, வழக்கமான விசாரணையில் ஈடுபட்டது.

“அதோ அது என்னா?”

“லாடு”

“அது என்ன விலை?”

“மூணு அணா”

“மூணு அணா யின்னா இவ்வளவு தானே?”

மூடியிருந்த விரல்களை விரித்து, கையை நீட்டிக் காட்டியது. அதில் இரண்டு நயா பைசாக் காசுகள் மூன்று இருந்தன.

“ஊகும். இது ஓர்ணாதான்” என்றான் ஸெர்வர்.

“ஓரணாவா? இவ்வளவும் சேர்ந்தது ஒரு அணா தானா?” என்று கேட்டது குழந்தை.

“ஆமா.”

“இதுக்கு என்ன வாங்க முடியும்?”

“வடை வாங்கலாம். அல்லது ஒரு இட்டிலி வாங்கித் தின்னு.”

“தூ. அது யாருக்கு வேணும்?” என்றது அது. பிறகு மைசூர் பாகையும், ஜாங்கிரியையும், பாதுஷாவையும் சுட்டிக்காட்டி கேள்விகள் கேட்டுக்கொண்டே இருந்தது.

அவனோ பொறுமை இழந்தவனாய் எரிந்து விழுந்தான். “சீ போ!” என்று அதட்டினான்.

அந்தப் பெண்ணின் முகத்தில் ஏமாற்றத்தின் சாயை படர்ந்தது. இன்று நிச்சயமாக ஒரு ஸ்வீட் வாங்கி விடலாம் என்ற நம்பிக்கை அதன் பிஞ்சு உள்ளத்திலே பதிந்து கிடந்தது போலும். அது பாழாகிவிட்டது. அதன் நடையில் சிறிது வாட்டம் காணப்பட்டது….

வெளியே வந்ததும், அது அங்கு மிங்கும் பார்த்தபடி நின்றது.

சற்று தூரத்தில் ஏதோ பரபரப்பு, சிறு கூட்டம், அது சிறுமியின் கவனத்தைக் கவர்ந்தது; கால்களை அங்கே இழுத்தது.

நொண்டியான சிறுமி ஒருத்தி ரஸ்தாவைக் கடந்து வந்தாள். அதே சமயம் கார் ஒன்று வேகமாக வந்தது. நல்ல வேளை. அவள் பிழைத்தது ஆச்சரியம் தான். யாரோ வேகமாக நொண்டிப் பிள்ளையைப் பிடித்து இழுத்துப் பாதுகாத்தார்கள். அதற்காகத் தான் பரபரப்பும் கும்பலும்!

அவள் அழுதுகொண்டே இருந்தாள். பயமும் பசியும் அவள் உடலில் நடுக்கம் ஏற்படுத்தியிருந்தன. “ஐயோ… பசிக்குதே” என்று விம்மினாள்.

பெரியவர்கள் போதித்தார்கள். அனுதாபப்பட்டபடி போனார்கள் சிலர். கவனியாமலே நடந்தார்கள் பல பேர். இரண்டொருவர் காலணாவும் அரையணாவும் கொடுத்தார்கள்…

நொண்டிப் பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்த சிறுமியின் இதயத்திலே என்னென்ன நாதங்கள் எழுந்தனவோ! அந்த அபலையின் அழுகுரல் ஆனந்தியின் உள்ளத்தில் எந்த உணர்ச்சியைத் தொட்டதோ! சட்டென்று முன்வந்து அக்குழந்தை தன் கையிலிருந்த மூன்று காசுகளையும் நொண்டிப் பெண் கையில் திணித்தது. சிரித்தபடி ஓட்டம் பிடித்தது. அதன் முகத்தில் இயல்பான மலர்ச்சி; அதன் கால்களில் பழைய குதிப்பு!

என் உள்ளத்திலே ஒரு சிலிர்ப்பு பிறந்தது. சிறு உருவத்தினுள் உறைந்துள்ள பெரிய மனதை எண்ண எண்ண எனக்கு வியப்பு தான் ஏற்பட்டது. பெரிய உருவமும் சிறு உள்ளமும் – பருத்த உடலும் தடித்த அறிவும் – பெற்றவர்கள் மிகுந்துள்ள மனித குலத்தில் அபூர்வமாய், அதிசயமாய், ஆனந்த சொரூபமாய்த் திகழ்ந்த அச் சின்னஞ்சிறு பெண்ணைக் கையெடுத்துக் கும்பிட வேண்டும் என்று எண்ணினேன்.

ஆனால்….ஆனால்… சமூக தர்மங்கள், நாகரிக வழக்கங்கள், பண்பாடு அது இது என்ற பெயரால் எத்தனையோ வேலிகள் கட்டிப் பாதுகாக்கப்பட்டு வருகிற போலிக் கௌரவத்தைப் போற்றும் மனிதப் பிராணிகளிலே நானும் ஒருவன் அல்லனோ! ஆகவே, செயல்படமுடியாத எத்தனை எத்தனையோ எண்ணங்களைப் போலவே இந்த நினைப்பும் பிறந்த உடனேயே மக்கி மடிந்தது.

– வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2002, பாவை பப்ளிகேஷன்ஸ் வெளியீடு, சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *