அவன் அங்கே வந்து சேர்ந்தபோது நண்பகலாகிவிட்டது!
பல வருடங்கள் கழிந்த பின்னும் அவன் வாழ்ந்த வீதி முற்றிலும் தனது பழைய அடையாளங்களை இழக்காமல் இருந்தது. அந்த நீண்ட வீதியின் பெருகிய கிளைகளின் ஊடே முருகன் தியேட்டரும், ஜாஸ்மின் அக்கா வீடும், ராஜாஜி வாசக சாலையும், ராதாசாமி பள்ளிக்கூடமும் மறைந்துகிடக்கின்றன. தன் அடையாளம் முற்றிலும் இழந்து வரும் நிலையில் ஒரு செம்மையான பயம் தாக்க, கிளம்பிய புள்ளிக்கே மீண்டும் வந்த அவன் தேடுவது பெரிதாக ஒன்றும் அல்ல… தன் பெயரை!
பல புதிய அங்காடிகளின் நடுவில் பாண்டி கடை மட்டும் பழைய மாதிரியே இரண்டு பிரிவுகளுடன் இயங்கி வருகிறது. பெரிய பெரிய கண்ணாடி சீசாக்களில் இன்னமும் தேன் மிட்டாய் விற்கும் பாண்டி கடை. தேங்காய்ப் பத்தைகளுக்கு கை நீட்டிய வண்ணம் மகளிர் இன்னமும் நிற்கும் பாண்டி கடை. பெரிய பாண்டியின் மகன்கள்தான் கடையைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களுடன் இதே வீதியில் பச்சைக் குதிரை, கிளித்தட்டு என பொழுதுக்கும் விளையாடியவன்தான் அவன். பாண்டியின் மகன்களில் ஒருவனிடமாவது தனது அடையாளத்தைக் கூறி காற்றில் கரைந்துவிட்ட தன் பெயரை மீட்டுக்கொண்டு வர இயலாதா?
நெடுநேரம் கடை வாசலில் நின்ற பயனாக, கடைப் பையன் ஒரு ரூபாய் நாணயத்தை வந்து நீட்டினான். தனது தேடுதல் முற்றிலும் அவமானப்படுத்தப்பட்டதை விரும்பாத அவன், பாண்டி கடையைவிட்டு அகன்றான். பல ஆண்டுகள் ஆன பின்பும் பாண்டி கடை என்ற தனது பெயரை இழக்காத அந்த அங்காடியின் மீது லேசாகப் பொறாமை கிளர்ந்தது.
அவனுக்கு வைக்கப்பட்ட பெயரில் புதுமை எதுவும் இல்லை. அது ஒரு சாதாரணப் பெயர். வம்சாவளித் தொடர்ச்சி. அந்தக் காலத்தில் பெயர் வைக்க எவரும் பெரிதாக அக்கறை எடுத்துக்கொள்வது இல்லை. இப்போதெல்லாம் அகர வரிசையில் பெயர்கள் சூட்ட வசதியாக சந்தையில் பலவிதப் பெயர்ப் புத்தகங்கள் வந்துவிட்டன. அவனுடைய அப்பாவின் காலங்களில் பெயர் வைப்பதற்கு அதிகம் சிரமப்படாமல், மூத்த பிள்ளைக்கு அப்பாவின் அப்பா பெயர்வைக்கப்படும். இளையவனுக்கு, அம்மாவின் அப்பா பெயர். அவனுக்கு அடுத்த தலைமுறையில்தான் பெயர்கள் இரண்டாகப் பிரிந்தன. பதிவுப் பெயர் ஒன்று; விளிக்கும் பெயர் ஒன்று. கிருஷ்ணமூர்த்தி, ராமசாமி போன்ற பெயர்கள் கிஷோர், ரமேஷ் எனப் புது வடிவம் அடைந்தன. அவனுக்கு அவனுடைய கொள்ளுப் பாட்டனார் பெயரைத்தான் சூட்டினார்கள்.
ஆரம்ப நாட்களில் அவனுடைய பெயர் இந்த ஊரின் வீதிகளில்தான் அலைந்துகொண்டு இருந்தது. பலமுறை அவனது நண்பர்களாலும் நெருங்கிய, நெருங்காத உறவினர்களாலும் அழைக்கப்பட்டது. அவனுடைய பெயருக்கு அடைமொழிகள் பல இருந்தன. அவன் சாதி முன்னால் ஒட்டிக்கொண்டு இருக்கும். சற்று பூசிய உடல்வாகு ஒட்டிக்கொண்டு இருக்கும். படிப்பாளி, அழுகுணி என்றெல்லாம் அவன் பெயருக்கு ஜிகினா ஒட்டிய காலங்கள் உண்டு. ஆனால், அவன் தாயார்தான் அவன் பெயரைத் தொட்டிலில் இட்டபோது எவ்வளவு ஆசையுடன் கூப்பிட்டு இருப்பாளோ, அதே ஆசையுடன் கடைசி வரை கூப்பிட்டு வந்தாள். அதிர்ஷ்டம் செய்யாத அந்தப் பெயரின் செல்ல விளி இளம் வயதில் அவன் தாயாரின் மரணத்துடன் மறைந்துபோனது.
அவனுடைய மனைவி அவனை, ‘என்னங்க?’ என்றோ, தன் மூத்த மகனின் அப்பா என்றோதான் கடைசி வரையில் அழைத்து வந்தாள். திருமணமான புதிதில் ஒரே ஒரு முறை கண்கள் கிறங்க டேய் என்ற விளியுடன் அவன் பெயரை உச்சரித்தாள். புருஷன் பெயரை விளித்தால் தாலி தங்காது என்ற நம்பிக்கையுடன் அவன் பெயரை உச்சரிக்காமல் போய்ச் சேர்ந்துவிட்டாள். மருமக்களும், பேரன் மனைவிகளும் தத்தம் கணவரை எவ்வித முன்பயமும் இன்றிப் பெயர் சொல்லித்தான் அழைக்கின்றனர். பெண்கள் வாழ்வில் கணவன் உயிரைவிடப் பல முக்கிய விஷயங்கள் இப்போது இருக்கின்றன.
அந்த வீதியில் அமைந்த பல வீடுகளில்தான் அவனது பால்ய நண்பர்கள் பலர் இருந்தனர். பள்ளிக்கு நடந்து செல்லும் நெடும் பயணங்களின்போது உடன் வந்த அவன் தோழர்களின் பெயர்களை அவன் மறக்கவில்லை. தர்மராஜ், நடேசன் மற்றும் ராமநாதன் இவர்களுடன் வீதியை அடைத்துக்கொண்டு பைக்கட்டை இரண்டு தோள்களில் வழியவிட்டு கழுத்தில் சுருக்குபோல மாட்டி ஒரு கையில் பிடித்தபடி அவர்கள் உலகை அளந்த நாட்கள் எல்லாம் நேற்று நடந்ததுபோல உள்ளது. ராமநாதன் பெயர் மட்டும்தான் நினைப்பதற்கு இருக்கிறது. நடேசன் மகனுடன் அமெரிக்காவில் தங்கிவிட்டதாகக் கேள்வி.
தர்மராஜ் பெரிய பேக்கரி கடைவைத்து அந்த ஊரின் மிகச் சிறந்த புள்ளிகளில் ஒருவனாக மாறி இருப்பது மகிழ்ச்சியை அளித்தாலும், அந்த ஊரின் மிகப் பெரிய பேக்கரிக்குத் தன் பெயரைவைக்காமல் ஜெயராம் பேக்கரி எனப் பெயர்வைத்தது ஏன் எனத் தெரியவில்லை. இன்னமும்கூட தர்மராஜ் என்றதும் மஞ்சள் கறை படிந்து சற்று முன்னால் தூக்கிய பற்கள்தாம் நினைவில் நிற்கிறது.
பெயர் என்பதன் தன்மை குறித்து அவனிடம் பேசுவதற்கு ஏராளமான விஷயங்கள் உள்ளன. அவனுடைய பெயர் அவன் அலுவலகப் பதவியில் இருந்து விலகும் காலம் வரை பல மாறுதல்களை அடைந்தன. தன்னுடைய சீனியர்கள் ‘டேய்’ என விளியுடன்தான் அவன் பெயரை அழைப்பார்கள். காலம் செல்லச் செல்ல… சீனியர்கள் தங்கள் பெயர்களையும், அவன் பெயரையும் எடுத்துக்கொண்டு வெவ்வேறு ஊருக்கு மாறிப் போனார்கள். ஜூனியர்கள் அவன் பெயருடன் ஒரு ‘அண்ணா’ அல்லது ‘சார்’ சேர்த்துக்கொள்வார்கள். அவன் பதவியில் இருந்து ஓய்வுபெறும்போது முற்றிலும் ‘சார்’ என்ற விளியானது. பெரியவர், மெத்தை வீட்டுக்காரர், தாத்தா எனத் தன் பெயர் முற்றிலும் மூலைக்குத் தள்ளப்பட்டபோதுதான் முதுமை உண்பது இளமையை மட்டுமல்ல; ஒருவனின் பெயரையும்தான் என்பது புரிந்தது. பென்ஷன் பணம் வாங்கச் சென்றால்கூட, காசாளர்கள் அடையாள வில்லை எண்ணைத்தான் அழைப்பார்களே அன்றி, பெயர் சொல்லி அழைக்க மாட்டார்கள். பெயர்இன்மையின் பயம் அறியாதவர்கள். இப்போது அதுவும் இல்லை. வெறும் பிளாஸ்டிக் கார்டைத் தேய்த்துப் பணம் எடுத்துக் கொள்ளலாம். பெயர் 16 இலக்கச் சேமிப்புக் கணக்கின் எண்ணாகிப்போனது. அழைக்கப்படாத தன் பெயர் அவனுக்கே மறந்துவிடுமோ என அச்சமானது. செவியில் விழாத தன் பெயரைக் கேட்க ஆசைப்பட்டுதான் இப்படிச் சொந்த மண்ணில் அவன் அலைகிறான்.
”யாரு வேணும்?” – நடுத்தர வயது இளைஞன் கதவு திறந்து கேட்டான். கூர்க்கா, நாய் போன்ற இடையூறுகளைக் கடந்து செல்ல வேண்டிய பிரமாண்ட பங்களா வீடு அது.
”தர்மராஜ் இருக்கானா?” எனத் தனது நண்பனை அவனது பால்ய நினைவுகளுடன் கேட்டான்.
சற்று தடுமாறிய அந்த நடுத்தர வயதுக்காரன் உள் பக்கமாகத் திரும்பி, ”தர்மராஜ், ஒன்னத் தேடிட்டு ஒரு பெரியவர் வந்திருக்காரு. யாருன்னு பாரு” என்றான்.
அவன் சற்றும் எதிர்பாராத சின்னஞ்சிறு பாலகன் வெளியில் ஓடி வந்து, ”யாருப்பா?” என்றான்.
அர்த்தம் புரிந்து சிரிப்பு வந்துவிட்டது. ”நான் தேடி வந்த தர்ம ராஜுக்கு என் வயசு இருக்கும்” என்றான்.
அந்த நடுத்தர வயதுக்காரன் அவனை உயர்ந்த கூடத்துக்குள் அழைத்துப் போனான். மழமழ என புதுக் கருக்குடன் விளங்கிய கூடத்தின் சுவரின் மேல் பகுதியில் பெரிய கண்ணாடிச் சதுரத்தின் பின் கறுப்பு-வெள்ளைப் படத்தில் பெரியவர் ஒருவர் சிரித்துக்கொண்டு இருந்தார். படத்துக்குப் பெரிய சந்தன மாலையை அணிவித்து இருந்தார்கள்.
தனது பெயர் மெள்ள மெள்ள உதிரத் தொடங்கியதை அவன் விரும்பாமல் வெளியேறினான்.
மேலும், கட்டப்பட்ட அவன் நண்பர்களின் வீடுகளில், அவன் பெயர் மரச்சட்டம் போட்ட கண்ணாடிப் படங்களில் சிறைப்பட்டுக்கிடந்தது.
குந்தி நினைத்திருக்க மாட்டாள், அவளுடைய நான்கு பிள்ளைகளின் பெயர் நெடுங்காலம் உலகில் பலரால் உச்சரிக்கப்படும் என்று. மரியன்னையும் இயேசுவுக்குப் பெயரிடும்போது மிகச் சாதாரண மனநிலையில்தான் இருந்திருப்பாள். தமிழர் வரலாற்றில் பெரும்பாலும் எல்லாமே காரணப் பெயர்கள்தான். கரிகாலன், நக்கீரன், சீத்தலைச் சாத்தன், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், இதுபோல. இளங்கோ, கபிலன் போன்ற பெயர்கள் மீண்டும் மீண்டும் வைக்கப்படும் என்ற நம்பிக்கையில் வைக்கப்பட்ட பெயர்கள் அல்ல. கலைஞர்களுக்குக் கவலை இல்லை. ஒன்றுக்கு இரண்டு பெயர்கள். சுப்பையா என்ற இயற்பெயரை யார் நினைவில் வைத்துக்கொள்வார்கள், பாரதியார் என்ற புனைபெயர் உலகெல்லாம் உச்சரிக்கப்படும்போது?
‘யாராவது என்னைப் பேர் சொல்லிக் கூப்பிடுங்களேன்’ எனப் பலமாகக் கூவினான்.
”என்னா சாமி சொன்னீங்க?” என்ற குரல் கேட்டுத் திரும்பினான். காவியுடுத்து வற்றிய வயிறுடன் ஒரு கோயில் பிச்சைக்காரன் அழைத்தான்.
அவன் பதில் எதுவும் சொல்லவில்லை.
”ஒங்களுக்காவது ராமா, கிருஷ்ணான்னு பேரு உண்டு. எங்கள மாதிரி பிச்சைக்காரனுங்களுக்குப் பேரே கிடையாது சாமி. பரதேசி, பண்டாரம் இதெல்லாந்தான் பேரு. குருட்டுப் பிச்சைக்காரன், நொண்டிப் பிச்சைக்காரன்னுதான் கூப்பிடுவாங்க” என்றான். இவன் யார்? பிச்சைக்காரனா? சித்தனா?
அந்தக் கோயிலை ஒட்டிய வீட்டின் அருகில் பழைய நினைவுகளுடன் போய் நின்றான்.அவனு டைய பள்ளித் தோழன் சுந்தரேசனின் வீடு. இந்த ஊரில் இரண்டு வீடுகளுக்கு ஒரு சுந்தரேசனும், மீனாட்சியும் இருப்பார்கள். பெயரைவைத்து ஊரைச் சொல்லிவிடலாம்-நடராஜன் என்றால் சிதம்பரம்; அகிலா என்றால் திருச்சி; கற்பகம் என்றால் சென்னை; சட்டநாதன் என்றால் சீர்காழி; சுகவனம் என்றால் சேலம்.
இந்த சுந்தரேசனுக்கும் அவனது பெயருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. விலை உயர்ந்த தபால் தலைகளைச் சேகரிக்கும் பழக்கம் அப்போது சிறுவர்கள் மத்தியில் பிரபலம். வெவ்வேறு நாடுகளின் வண்ண ஓவியங்களாகத் திகழும் தபால்தலைகளைக் காட்டிப் பீற்றிக்கொள்ளும் சுகம் இந்த கூரியர் காலப் பிள்ளைகளிடம் இருக்குமா? சுந்தரேசன் வைத்திருந்த கிடைத்தற்கு அரிய சுவிட்சர்லாந்து தபால்தலை இவனுடைய கைகளுக்கு வந்துவிட்டது. ‘ஒன்னய இனிமே பேர் சொல்லிக் கூப்பிட மாட்டேன்’ என சுந்தரேசன் சூளுரைத்தான். காலம் தூக்கி எறிந்ததில், வெவ்வேறு ஊர்களில் சாராய், சித்தப்பாவாய், அப்பாவாய், மாமாவாய், தாத்தாவாய் மாறிய, அழைக்கப்படாத தன் பெயர் சூளுரைத்தவனால் மீண்டும் அழைக்கப்படாதா என நண்பன் வீட்டின் முன்னால் நிற்கிறான் அவன்.
சமீபத்திய அனுபவம் காரணமாக வீட்டில் இருந்து வெளியில் வந்தவனிடம், ”கிட்டத்தட்ட என் வயசுள்ள சுந்தரேசன் என்கிறவர் ரொம்ப முன்னால் இந்த வீட்டுலதான் இருந்தார். நான் அவர்கூடப் படிச்சவன். அவர் இருந்தா இப்போ பார்க்க முடியுமா?” என்றான் அவன்.
”வாங்கோ” என்று உள்ளே அழைத்துச் சென்றவனுக்கே வயது 50 கடந்திருக்கும்.
”நீங்க சொன்னது என்னோட அப்பாதான். உள்ள படுத்துண்டு இருக்கார்.”
இந்த சுந்தரேசனிடம் பழைய சுந்தரேசனைக் காண முடியவில்லை. மயில்கண் வேட்டி, நெகிழ்ந்த ஒடுங்கிய இடுப்பு, வெள்ளை மயிர்கள் பரவிய கூடான வெற்று மார்பு, பற்களை இழந்த தாடைகள், சூளுரைத்த அந்தப் பேச்சு எங்கே?
”அப்பாவின் நெடுநாளைய புகை பழக்கம் காரணமாகத் தொண்டையில் முற்றிய கேன்சரால் அவஸ்தைப்படுகிறார். பேச்சுப் பயிற்சி கொடுத்தால் அன்றி, அவரால் பேச இயலாது. இரண்டு நாட்களாகப் பேச்சுப் பயிற்சி கொடுக்கும் செவிலி வரவில்லை. உங்களை அவரிடம் யார் என்று நான் அறிமுகப் படுத்தட்டும்?” என சுந்தரேசனின் மகன் நல்ல ஆங்கிலத்தில் கேட்டான்.
”எட்டாவது வரைக்கும் கூடப் படிச்சவன். ஸ்டாம்ப் திருடினவன்னு சொல்லுங்க போதும்” என்றான் அவன். குரல் தழைந்தது.
மகன், சுந்தரேசனின் அருகில் காது வரை குனிந்து அவனை அறிமுகப்படுத்தினான். சுந்தரேசனின் உடலில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. ஓர் உயிர்ப்பின் ஓட்டம் நாடிகள் எங்கும் ஓடியது. கண்களில் பழைய மின்னல் எட்டிப்பார்த்தது. வலது கரம் படுக்கைத் தலையணையின் ஓரங்களைத் துழாவ, மகன் ஜன்னல் விளிம்பில் எடுத்துவைத்திருந்த மூக்குக் கண்ணாடியை எடுத்து தந்தைக்கு மாட்டிவிட்டான்.
சுந்தரேசன் அவனை நன்றாகக் கூர்ந்து பார்த்தான். முகத்தில் அபார மலர்ச்சி. வா என்றொரு சிரிப்பு. அவன் அருகில் சென்றதும் கைகளைப்பற்றி ஏதோ பேசினான். காற்றொலி மட்டும் வெளிவரும் குழறலான மொழி, புரியாத மொழி.
மகன் குனிந்து அப்பாவின் அருகில் காதைக் கொண்டுபோனான். பிறகு மொழிபெயர்த்தான்.
”மிகவும் உணர்ச்சிவசப்படுகிறார். உங்கள் வகுப்பு மாணவர்களின் பெயர்களை அகர வரிசையில் நினைவுகூர்கிறார்.”
அவன் மனதில் அந்த வருகைப் பதிவேடு ஓடியது. ஆனந்த்;அருள் பிரசாத்; பால முருகன்; பாஸ் கரன்; சந்திரசேகர்; டேனியல்; டேவிட்; ஈஸ்வரன்; ஃபக்ருதீன்; எல்.கோவிந்தன்; பி.கோவிந்தன்; ஹரிஹரன்; ஐசக் இமானுவேல்; ஜகன்னாதன்; கலையரசன்; கண்ணன் கார்மேகம்…
”சற்றேறக்குறைய அவர் தன்னுடன் பயின்ற அத்தனை நண்பர்களுடனும் தொடர்புகொண்டுவிட்டாராம். பெயர் சொல்லி அழைக்க முடியாவண்ணம் எல்லா நண்பர்களும் முதுமை காரணமாக இறந்துகொண்டே இருக்க… அவருடைய தேடுதலில் அகப்படாமல்போனது உங்கள் பெயர் மட்டும்தானாம். உங்களைச் சந்தித்தது மிக மகிழ்ச்சியாக இருக்கிறதாம்” என ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தான் மகன்.
”முதுமையின் பெருமையே சக வயசாளியின் இருப்பை அறிவதுதான்” என்றான் அவன். மகன் புன்னகையால் ஆமோதித்தான்.
சுந்தரேசன் அருகில் அவன் போனான். சுந்தரேசன் அவன் கைகளைப் பற்றியவண்ணம் உதடுகளால் அவன் பெயரை உச்சரிக்க முயற்சி செய்தான். குழறலில் அவன் பெயர் உச்சரிக்க முடியாமல்போனது.
”கேன்சர் செல்கள் அவர் மூச்சுப் பாதையை அரித்துவிட்டன. எதன் காரணமாக உயிருடன் இருக்கிறார் என்பது மருத்துவ அதிசயமாக இருக்கிறது என டாக்டர்கள் கூறுகின்றனர்.”
”என் பெயரை உச்சரிப்பதற்காக” என்றான் அவன்.
மகனுக்குப் புரியவில்லை.
“There is nobody to call me by my name. தெரியுமா சுந்தரேசன்?” என்றபோது அவனிடம் ஒரு சிறுவனின் கேவல் வெளிப்பட்டது.
”இரண்டு நாட்கள் கழித்து வேண்டுமானால் வாருங்கள். நாளை பேச்சுப் பயிற்சி கொடுப்பவன் வந்துவிடுவான்” என்றான் மகன்.
அவன் மிகவும் சோர்ந்து தன் கரங்களை விடுவிக்க முயற்சி செய்ய, சுந்தரேசன் விடவில்லை.
ஒரே ஒரு கணம்தான். தன் சுவாசம் முழுவதையும் ஒருநிலைப்படுத்தி, கேன்சரால் வலிக் கும் தொண்டையைச் சீர்படுத்தி, பலத்த முயற்சியுடன் எத்தனிக்க, சுந்தரேசன் வாயில் இருந்து கேட்பதற்கு ஏங்கிக்கொண்டு இருந்த அவன் பெயர் பொங்கி வழிந்தது.
”சகஸ்ர நாமம்… டேய், சகஸ்ர நாமம்.”
பெயர் அங்கே உயிர் பெற்றது!
– ஜூன் 2010