புலி பூனையாகலாமா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 5,422 
 
 

மானேஜிங் டைரக்டர் ரகோத்தமனின் பர்ஸனல் செகரட்டரி மாலினி சொன்ன அந்தத் தகவலைக் கேட்டதும் என் ரத்த அழுத்தம் ‘ஜிவ்”வென்று ஏறியது.

“என்ன….என்ன சொல்லறீங்க…மாலினி…இந்த வருஷ ஆண்டு விழாவுல நடக்கற செஸ் போட்டில நான் கலந்துக்க வேண்டாம்னு எம்.டி.சொன்னாரா?…வொய்?” எனக்குள் கோபமும் ஆற்றாமையும் கொந்தளித்துக் கொண்டிருக்க, மறுபடியும் கேட்டேன்.

“மாலினி…நீங்க நிஜமாத்தான் சொல்லறீங்களா?”

“ப்ச்…என்ன சார் நீங்க?…பொய்யான ஒரு செய்தியை எம்.டி. சொன்னதாச் சொல்ல எனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?”

எனக்குக் குழப்பமாயிருந்தது.

ஆரம்பத்திலிருந்து நடந்தவற்றையெல்லாம் வரிசையாக நினைத்துப் பார்த்தேன். பத்து வருடங்களுக்கு முன் இதே எம்.டி.யின் எதிரில் இண்டர்வியூவுக்காக அமர்ந்திருந்த நான்… அந்த இண்டர்வியூவில் வெற்றி பெற்றதே செஸ் விளையாட்டில் மாவட்ட அளவில் சாம்பியனாகவும்…மாநில அளவில் ஒன்றிரண்டு கோப்பைகளையும் வென்றவனாகவும் இருந்ததினால்தான்.

எம்.டி. ரகோத்தமன் ஒரு தீவிர செஸ் பிரியர் என்கிற காரணத்தால் நான் அவரிடம் ஒரு தனிப்பட்ட செல்வாக்கு பெற்றிருந்தேன். செஸ் விளையாட்டில் தனக்கிருந்த ஆர்வத்தின் காரணமாய் ஆண்டு தோறும் விமரிசையாகக் கொண்டாடப்படும் தன்னுடைய ‘ரகோன் குரூப் ஆஃப் கம்பெனி”களின் ஆண்டு விழாவில் ஒரு மாபெரும் செஸ் போட்டி நடத்தி ‘ரகோன் கோப்பை”யை வழங்கிக் கொண்டிருந்தார்.

இதில் என்ன விஷேசமென்றால், நான் வேலைக்கு சேர்ந்த வருடத்திலிருந்து அதாவது கடந்த ஒன்பது வருடங்களாக அந்தக் கோப்பையை தொடர்ந்து கைப்பற்றிக் கொண்டிருந்த என்னை அந்த ஒரே காரணத்திற்காக ஜெனரல் மேனேஜர் ஆக்கியவர் இந்த எம்.டி. ரகோத்தமன்.

“ஏன்?…ஏன்? எம்.டி.அப்படிச் சொல்லியிருப்பார்?…தொடர்ந்து ஒன்பது வருடம் கோப்பையை வென்ற நான் இந்த வருடமும் வென்று பத்தாண்டுச் சாதனை படைக்க நினைத்திருந்தேனே… இப்படித் திடீரென்று தடை போட்டுவிட்டாரே…ஏன்?”

இந்தத் தடை உத்தரவு என் மனத்தைக் காயப்படுத்தியதோடல்லாது எனக்குள் ஒரு அவமான உணர்வையும் விதைத்தது. “கம்பெனிக்குள் ஒரு “செஸ் சொஸைட்டி”யை ஏற்படுத்தி பல பேருக்கு அதைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும் என்னை இப்படி அவமானப்படுத்தி விட்டாரே… இனி எப்படி நான் அவர்கள் முகத்தில் விழிப்பேன்”

நீண்ட நேரக் குழப்பத்திற்குப் பின் எம்.டி.யை நேரிலேயே சந்தித்து இதைப் பற்றிக் கேட்டு விடுவதென முடிவு செய்து எம்.டி.யின் அறை நோக்கி நடந்தேன்.

‘ஸாரி சார்…எம்.டி. கிட்ட நீங்க வெய்ட் பண்ணிட்டிருக்கற விஷயத்தைச் சொன்னேன் அவரு ரொம்ப பிஸியா இருப்பதனால இன்னிக்கு உங்களை மீட் பண்ண முடியாதுன்னுட்டார்…ரெண்டு…மூணு நாள் கழிச்சு அவரே கூப்பிடறதா சொல்லியிருக்கார்”

அந்த நிராகரிப்பும் கூட ஒரு அவமானப்படுத்தலின் வெளிப்பாடுதான் என என் உள் மனம் சொல்ல. நொந்து போய்த் திரும்பிய என்னை,

“சார்…ஒன் மினிட்” மறுபடியும் நிறுத்தினாள் அந்த மாலினி.

சலிப்புடன் திரும்பிப் பார்த்தேன்.

வேகவேகமாக என் அருகில் வந்து கையிலிருந்த ஆண்டு விழா அழைப்பிதழை என்னிடம் நீட்டி, “சார்…எம்.டி.இதை உங்ககிட்ட கொடுக்கச் சொன்னார்”

வாங்கித் திறந்து பார்த்தேன்.

“பத்தாம் ஆண்டு ‘ரகோன் கோப்பை” செஸ் போட்டி”

கோப்பையை வழங்குபவர் : ‘செஸ் கிங்’ திரு.திவாகர், ஜெனரல் மேனேஜர், ரகோன் குரூப் ஆஃப் கம்பெனீஸ்”

எனக்கு சிரிப்புத்தான் வந்தது. நான் கலந்து கொள்வதைத் தடுத்து நிறுத்தி விட்டு… அதை மறைக்க இப்படியொரு டிரிக்கா?..நான் ஒண்ணும் சின்னக் குழந்தையில்லை… இந்த மிட்டாய்க்கெல்லாம் ஆசைப்பட, மனதிற்குள் நினைத்துக் கொண்டு அந்த மாலினியைப் பார்த்து, “எம்.டி.கிட்ட சொல்…நான் போட்டி நடக்கற தினத்தன்று வரப் போவதில்லை…அதே மாதிரி இந்த ஜி.எம். போஸ்டிலேயும் தொடரப் போவதில்லை….என்று”

சொல்லி விட்டு “விருட்”டென்று நகர்ந்தேன்.

நான் எதிர்பார்த்தது போலவே என் அதிரடி வைத்தியம் நன்றாகவே வேலை செய்தது. இரவு பத்து மணி வாக்கில் அவரே போனில் அழைத்தார்.

“மிஸ்டர் திவாகர்… ஏன் இந்த அவசர முடிவு… நான் கம்பெனியோட எம்.டி.யா இருந்தாலும் உங்களோட ரசிகன்….உங்களோட செஸ் ஆட்டத் திறமைக்கு என்றைக்குமே மதிப்புக் குடுக்கறவன்…”

“அதனாலதான் போட்டியிலேயே கலந்துக்கக் கூடாதுன்னு உத்தரவு போட்டீங்களா?” ஆவேசமாய்க் கேட்டேன்.

மெலிதாகச் சிரித்த எம்.டி. “யு ஸீ மிஸ்டர் திவாகர்… நான் எதைச் செய்தாலும் ஒரு காரண காரியத்தோடதான் செய்வேன்…இப்ப உங்களுக்கு எதுவும் புரியாது… போட்டியன்னிக்கு வாங்க… நீங்களே புரிஞ்சுக்குவீங்க”

சில விநாடிகள் யோசித்து விட்டு, “ஓ.கே. சார்… நீங்க சொன்னதுக்காக நான் வர்றேன்…வந்து பார்க்கறேன்”

*****

போட்டி தினம்.

அடுத்தடுத்து நடைபெற்ற பல லீக் போட்டிகளில் பலர் வென்று… பலர் தோற்று… கால் இறுதி…. அரையிறுதி… என நகர்ந்து… நகர்ந்து…

மாலை வாக்கில் இறுதிப் போட்டி துவங்கியது.

ரகோன் குரூப்ஸின் மூன்றாவது யூனிட்டில் சாதாரண ஃபிட்டராகப் பணிபுரியும் அந்தச் சின்னப் பையனின் அசத்தலான காய் நகர்த்தல் பல பேரை புருவம் உயர்த்த வைத்தது, என்னையும் சேர்த்துத்தான். “வாவ்… பிரில்லியண்ட் மூவ்” என்னையுமறியாமல் பல தடவை நானே கூவிவிட்டேன்.

அவனுடன் போட்டியிடும் சீனியர் என்ஜினியர் செல்லத்துரையின் திணறல் பலரை “த்சொ…த்சொ…” சொல்ல வைத்தது. இந்த செல்லத்துரை கடந்த நான்கு வருடமாக என்னுடன் போட்டியிட்டு தோற்று… இரண்டாமிடம் பெற்றவன். இந்த வருடம் முதலிடம் எனக்குத்தான் என்று நேற்று வரை எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தவன்.

இரவு வரை நீடித்த போட்டியில், அந்த ஃபிட்டர் பையன் ஜெயித்து விட, அவமானத்தால் குன்றிப் போனான் சீனியர் என்ஜினீயர் செல்லத்துரை.

கோப்பை வழங்கும் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அந்தப் பையனுக்கு என் கையால் கோப்பையை வழங்கி… வாழ்த்துக் கூறி விட்டு வீடு திரும்பினேன்.

இரவு.

மொட்டை மாடியில் மினி வாக்கிங் பண்ணிக் கொண்டிருந்த போது மொபைல் ஒலித்தது. எடுத்துப் பார்த்தேன். எம்.டி.

“சொல்லுங்க சார்!”

“என்ன மிஸ்டர் திவாகர்… அந்தச் சின்னப் பையனோட ஆட்டம் எப்படி?”

“ம்ம்ம்…அபாரம் சார்… அவனோட சில மூவ்கள் இன்னமும் கண்ணுக்குள்ளாரவெ நிக்குது… என்னையே அசத்திட்டான்னா பார்த்துக்கங்களேன்”

“மிஸ்டர் திவாகர்… அவனைப் பற்றியோ… அவனோட ஆட்டத் திறமை பற்றியோ இதுவரை நீங்க கேள்விப்பட்டதே இல்லையா?”

“நோ சார்… இன்னிக்குத்தான் இந்தப் பையனையே நான் பார்க்கறேன்… நம்ம செஸ் சொஸைட்டில கூட இவன் மெம்பரில்லை…”

“பட்… நான் கேள்விப்பட்டிருக்கேன் திவாகர்… இவனோட ஆட்டத்தையும் ரெண்டு மூணு தடவை வெளியில பார்த்திருக்கேன்!… “யாரு?…என்ன?” ன்னு விசாரிச்சப்பத்தான் இவன் நம்மளோட மூன்றாவது யூனிட்ல வேலை பார்க்கற ஃபிட்டர்ன்னும்… இந்த ஆண்டு விழா போட்டில கலந்துக்க இவனும் பெயர் குடுத்திருக்கான்னும் தெரிஞ்சுது… அதனாலதான்… நீங்க கலந்துக்க வேண்டாம்னு தடை போட்டேன்”

எனக்குக் குழப்பமாயிருந்தது. “சார்… நீங்க சொல்றது எனக்குப் புரியலை”

“யெஸ் மிஸ்டர் திவாகர்… என்னைப் பொறுத்தவரை நீங்கதான் செஸ் ஆட்டத்தின் கடவுள்! பத்து வருஷமா உங்க ஆட்டத்தைப் பார்த்துப் பார்த்து ரசித்தவன் நான்… அப்படிப்பட்ட நீங்க… ஒரு சாதாரண ஃபிட்டர் பையன்கிட்டத் தோற்று விடக் கூடாதுன்னுதான் நீங்க அவனோட விளையாடறதையே தடுத்தேன்… அதற்குப் பதிலா உங்க கையால கோப்பையைக் குடுக்க வெச்சு… உங்களை இன்னும் அதிகமா உயர்த்தினேன்”

“சார்…”

“தயவு செய்து உங்க திறமை மேல நான் நம்பிக்கை இழந்துட்டேன்னு மட்டும் நினைச்சிடாதீங்க… ஒன்பது வருஷமா கோப்பையைத் தட்டிக்கிட்டு ஒரு புலி மாதிரி உலாவிட்டிருக்கற நீங்க….ஒரு சின்ன அதிர்ச்சி தோல்வியினால பூனையா மாறிட நேர்ந்திடுச்சுன்னா… ஓ காட்… என்னால அதைத் தாங்கிக்க முடியாது…திவாகர்…!” பேச்சை சட்டென்று அவர் நிறுத்திக் கொள்ள,

“சா….ர்”

“திவாகர்…என்னோட இந்தச் செயல்ல ஏதாவது தவறோ… அல்லது உங்க மனசை புண் படுத்தற மாதிரி ஏதாவது இருந்தாலோ… என்னை மன்னிச்சிடுங்க… ப்ளீஸ்”

சொல்லிவிட்டு அவர் தொடர்பைத் துண்டித்ததும், நான் என் விழியோரம் திரண்டு நின்றிருந்த கண்ணீர்த் திவலையை விரலால் சுண்டியெறிந்தேன். “ஒரு வேளை அவர் நினைத்தது போலவே நான் அந்தச் சின்னப் பையன்கிட்டத் தோற்றிருந்தால்… என்னால் அந்த அவமானத்தைத் தாங்கிக்க முடியுமா?”

நினைக்கும் போதே உடல் சிலிர்த்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *