புதைக்குழி மனிதர்கள்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 11,680 
 

“”கீரைக்கு உப்பில்லாத புலவனுக்கு, மன்னன் பொற்கிழி கொடுத்தான் அன்று. இன்று, மாதம் ஐம்பதாயிரம் வருமானமுள்ள வசதியானவனுக்கு பாராட்டு, பட்டயம், பொற்கிழி கொடுக்கறாங்க… என்ன நியாயம் இது.

“”மொழிக்காக, இலக்கியத்துக்காக அரும்பாடுபட்டு ஆராய்ச்சி பண்ணி, தன் கைப்பொருள் இழந்து, வறுமையால் வாடும் என் போன்றவர்களை ஆதரிக்க யாரும் தயாரில்லை. என்னை ஆதரிப்பதால், ஆதரிப்பவருக்கு என்ன லாபம். என்னால் அவர்களுக்கு என்ன செய்ய முடியும்.

புதைக்குழி மனிதர்கள்

“”பிரபலமானவர்களை, வசதியானவர்களை, செல்வாக்கு உள்ளவர்களை பாராட்டினால், போற்றினால், விழா எடுத்து கொண்டாடினால்… பிறகு பதிலுக்கு அவர்களும் பாராட்டுவர், போற்றுவர், ஏதாவது காரியம் முடித்துக் கொடுப்பர்.

“”மியூச்சுவல் அண்டர்ஸ்டாண்டிங். என் முதுகை நீ சொறிஞ்சு விடு; உன் முதுகை நான் சொறிஞ்சு விடறேன்… அவ்வளவுதான்… என்ன நான் சொல்றது…” என்றார் புலவர் அழகேசனார்.

அறுபது வயதிருக்கும். மெலிந்து கருத்த உடம்பு; தாடி, மீசை தாராளமாக வளர்ந்திருந்தது.

ஜிப்பாவும், காவியேறிய வேட்டியும் அணிந்திருந்தார். கழுத்தில் இரண்டு மணி மாலைகள் தொங்கிற்று. அறை முழுக்க லேசான ஈரம் பரவியிருந்தது.
அங்கிருந்த புத்தகங்கள், காகிதங்கள் பழையனவாகவும், செல்லரித்தும் கிடந்தது. வறுமை தாண்டவமாடியது.

இதை மறைக்க அழகேசனார், சில முயற்சிகள் செய்திருந்தார். புது நாற்காலிகள் இரண்டு, காபி பிளாஸ்க், விலை உயர்ந்த சிகரட் பாக்கெட் மற்றும் சட்டையில் எட்டிப் பார்க்கும்படி மடித்து வைக்கப்பட்டிருந்த நூறு ரூபாய் நோட்டு.

எல்லாம் இந்த இடத்துக்கு அந்நியமாய் இருந்தது.

“எல்லாம் இரவலாக இருக்கும்…’ என்றான் மெல்லிய குரலில் ரகு.
நானும், அவனும் ப்ரண்ட்ஸ்; வங்கியில் பணியாற்றுகிறோம். எனக்கு எழுத்து, அதை சார்ந்த விஷயங்களில் கொஞ்சம் ஆர்வம்.

ஞாயிறு செய்தித்தாளில், “இன்றைய நிகழ்ச்சி’யை தான் முதலில் பார்ப்பது. நூல் வெளியீட்டு விழா, நூல் விமர்சனக் கூட்டம், இலக்கியச் சந்திப்பு. இப்படி ஏதாவது கண்ணில் பட்டால் விடுவதில்லை.

அண்ணாசாலை தேவநேயப் பாவாணர் அரங்கம், எழும்பூர் கன்னிமரா நூல் நிலைய வளாகம், புக் பாய்ன்ட்… உள்ளிட்ட, எதாவது ஒரு இடத்தில் நான் மேய்ந்து கொண்டிருப்பேன். எனக்கு நண்பனாக வாழ்க்கைப்பட்ட காரணத்துக்காகவே, ரகு என்னோடு சேர்ந்து திரிவான்.

கூட்டங்கள் தவிர, சில நேரம் எழுத்தாளர் வீடுகளுக்கே போய், பேசிக் கொண்டிருந்து விட்டு வருவதும் உண்டு.

வெளி உலகில் ஆச்சர்யமாகப் பார்க்கப்படும் எழுத்தாளர்களின் உள் வாழ்க்கை, எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வமே என்னை உந்தும்.

ரொம்ப பர்சனலாக போவதில்லை. குடும்பம், பொருளாதார நிலை, எழுத வந்த காரணம், எழுத்தின் எதிர்காலம் என்று, பொதுவாகத்தான் பேசுவது.
“எங்க ஏரியாவுல ஒருத்தர் இருக்காரு. எழுத்தாளர் மற்றும் சொற்பொழிவாளர்ன்னு சொல்லிக்குவார். கையில் எப்போதும் பேப்பரும், பேனாவுமாய் இருப்பார். அவ்வப்போது, வெளியில் கூட்டங்களுக்கு போய் வருவார்.

“அவர் வீட்டில், இலக்கியக் கூட்டம் கூட நடத்தறார்… என்னைப் பார்த்தால் சிரிப்பார். அதற்கு என்ன அர்த்தம்ன்னு தெரியாது.என்னிடம் ஏதேனும் எதிர்பார்க்கறாரான்னு தெரியல முரளி. வாயேன் ஒரு சண்டே, அவரைப் பார்த்து வைப்போம்…’ என்றான் ரகு.

அழகேசனார் என்ற பெயரை, எங்காவது கேட்டிருக்கோமா… என்று யோசித்துப் பார்த்தேன்.

நினைவுப் பிரதேசத்தில் எங்கு தேடியும், அந்த பெயர் தட்டுப்படவில்லை.
கடலுக்கு மேலே அலைகளும், மீன்களும் தெரியும். கண்ணுக்கெட்டாத ஆழத்தில்தானே சில அற்புதங்கள் மறைந்து கிடக்கின்றன.

நான் அவரைப் பார்க்க சம்மதித்தேன்.

சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் ஒன்றுமில்லாத ஞாயிறை தேர்ந்தெடுத்து, ரகுவுக்கு தெரிவித்தேன்.

வழியில் பழங்கள், இனிப்புகள் வாங்கி, ரகு வீட்டிற்குப் போய், அங்கிருந்து அழகேசனார் இல்லம் போனோம்.

நான் வருவதை, ரகு முன்கூட்டியே அவருக்கு தெரிவித்திருந்தானாம்.

“”ஆக்சுவலா… நான் இப்ப செங்குன்றம் போயிருக்க வேண்டியது. அங்கே ஒரு கூட்டத்துக்கு என்னைத் தலைமையேற்க கூப்பிட்டிருந்தாங்க. நீங்கள் நல்ல ரசிகர்ன்னும், என்னைச் சந்திக்க ஆவலாய் வர்றீங்கன்னும், ரகு தம்பி சொன்னதும், கூட்டத்தை தவிர்த்துட்டேன்.

“”கடவுளை விட அடியார், பெரியவர்கள். அடியார்க்கு செய்யும் தொண்டு, இறைவனுக்கு செய்யும் தொண்டு. கலைஞனைவிட ரசிகன் பெரியவன். ரசிகன்தான் முதலில்…” என்று வரவேற்றார்.

பார்வை அலைபாய்ந்தது அவருக்கு.

என் தோற்றத்தை வைத்து, என்னை எடை போடுபவராக, ஏதோ எதிர்பார்ப்பவராக தோன்றியது.

என் கையில் இருந்த பட்சணப் பையைக் கண்டதும், அவர் முகத்தில் மெலிதாக சந்தோஷ ரேகை ஓடி மறைவதைக் கண்டேன்.
வாங்கி வந்ததை அவரிடம் கொடுத்தேன்.

“”எதுக்கு இதெல்லாம்…” என்று அசட்டுச் சிரிப்புடன் பெற்றுக் கொண்டார்.

“”நான் இதெல்லாம் எதிர்பார்க் கிறவனில்லை…” என்றார்.

“”இருக்கட்டும்… எனக்காக ஒரு நிகழ்ச்சியைக் கேன்சல் பண்ணியிருக்கீங்க. போயிருந்தால் உங்களுக்கு சம்பளம் கிடைச்சிருக்கும்; அது கெட்டுப் போச்சு…”

“”அப்படி யெல்லாம் இல்லை. நான் பொருள் எதிர்பார்த்து எங்கும் போறதில்லை. வாழ்க்கை, பொருள் உள்ளதாய் இருக்கணும். அதுதான் கொள்கை. கூட்டங்களுக்கு கவுரவ விருந்தாளி நான். சினிமாவுல நட்புக்காகவோ, வேறு காரணத்துக்காகவோ சில காட்சிகளில் நடித்து கொடுத்தால், “கவுரவ நடிகர்’ன்னு போடறாங்கள்ல… அதுமாதிரி; உட்காருங்க…” என்றார்.

பிளாஸ்க்கிலிருந்து, காபி கொடுக்க முனைந்தார்.

“”இப்பதான் சாப்பிட்டோம்,” என்று தவிர்த்தோம்.

அந்தக் காபி இருந்தால், அவர் இரண்டு வேளை குடிப்பார்.

தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

“”அடியேன் தென் தமிழகத்தைச் சேர்ந்தவன். ஏழு பிள்ளைகளில் ஏழாவது பிள்ளை. சுந்தரமூர்த்தி நாயனாருக்கு, அன்னை ஞானப் பால் ஊட்டினாள். காளிதாசன் நாவில், ஓம் என்று எழுதிக் காட்டினாள். ஏழு வயதில் என்னை ஆட்கொண்டாள். எட்டு வயதில் கவிதை பாடினார் பாரதி என்பர்; அடியேன் ஏழு வயதில் பாடினேன்.

“”நான் படித்த பள்ளியும், நான் பிறந்த ஊரும் என்னைக் கொண்டாடியது. பதினாறாம் வயதில், பாட்டுகளை சுமந்து, நாடு முழுக்க பல்லாயிரம் மைல்கள் நடந்தே பயணித்தேன். பள்ளித் தலங்களில், கோவில்களில், மடங்களில் எல்லாம் போய் பாடினேன்.

“”எந்த பத்திரிகையும் என்னை கண்டுகொள்ளவில்லை. யாரும் எனக்கு பட்டு கம்பளம் விரிக்கவில்லை. இப்போது விளம்பரத்துக்காக நடக்கின்றனர். ஊருக்குள் நுழையும் போது நடிக்கின்றனர்; இரண்டு ஊர்களுக்கு மத்தியில் உள்ள தூரத்தை காரில் கடக்கின்றனர்.

“”பி.ஏ., இலக்கியம் தேறினேன். கல்லூரியில் கற்றது கால் பங்கு, தேடித்தேடி கற்றது முக்கால் பங்கு. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்கணக்கு எல்லாம் தலைகீழ் பாடம். என் இலக்கியப் புலமைக்காகவே, மணக்கத் துணிந்தாள் மகாலட்சுமி; இரண்டு புதல்வர்கள்.

“”இல்லறக் கடமைகளை இலக்கியம் கொண்டு நிறைவேற்ற முடியவில்லை. “இல்லானை இல்லாளும் வேண்டாள், ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்…’ அல்லவா? என்னை என் போக்கில் விட்டுவிட்டனர். நானும், “என் காலம் வெல்லும்; வென்ற பின் வாங்கடா வாங்க…’ என்றிருக்கிறேன். வெற்றியோ… தொடுவான் போலவும், மாயமான் போலவும் இருக்கிறது. ஒரு சிலருக்கு வெற்றி மடியில் வந்து விழும் கனியாய் இருக்கிறது…” என்றார், சோகமும், நகைச்சுவையும் இழைய.

“”எவ்வளவு நூல் எழுதியிருக்கீங்க?”

“”போட்டது ஒரு நூல்தான்; ஆனால், இருபது, முப்பது நூல் போடற அளவுக்கு எழுதி, சேர்த்து வச்சிருக்கேன் ஊர்ல. இந்தப் பிறவியில் இன்னொரு நூல் போட முடியும்ன்னு அடியேனுக்கு நம்பிக்கை இல்லை. ஒரு நூல் வெளியிடவே அரும்பாடு பட்டேன்.

“”வெளியீட்டுக்கு வந்தவர்கள், ஒருத்தர் கூட விலைக் கொடுத்து வாங்கலை. “கடைவிரித்தேன், கொள்வாரில்லை…’ என்ற கதையா போச்சு. பிறகு இலவசமாத்தான் கொடுத்தேன்… இப்பெல்லாம் என்னத்தையோ எழுதறாங்க. பளபளப்பா போட்டுக் கொடுக்க ஆளிருக்காங்க…

“”வெளியீட்டு விழாவை திருவிழா போல நடத்தறாங்க… அரசியல்வாதிங்க, தொழிலதிபருங்க, சினிமாக்காரங்களா குவியறாங்க… மேடையிலயே வித்துப் போகுது எல்லாம்… என்ன மாயமோ… விடுங்க. நான் இப்படித்தான்… புலம்பல்தான் பிழைப்புன்னு ஆயிடுச்சு… பாவம்… நீங்கள் தேடி வந்தது என்னமோ…?”

“”படைப்பாளிகளை சந்திக்கறது பிடிக்கும். உங்களைப் பத்தி கேள்விப்பட்டு வந்தேன். எழுதற எல்லாருமே வசதியா இருப்பாங்கன்னு சொல்ல முடியாது;ஆனால், ஏன் வசதியா இல்லைன்னு யோசிக்கறது உண்டு. இப்போ உங்களைப் பார்க்கும் போது, அந்தக் கேள்வி இன்னும் பெரிசாகுது…”

“”சேர்ந்தே இருப்பது வறுமையும், புலமையும்…” என்று சிரித்தார்.

“”கொடுத்துச் சிவந்தது புரவலர் கைகள்; எண்ணிச் சிவந்தது புலவரின் நெஞ்சம். சதா படைப்பிலேயே தோய்ந்திருப்பதால் வேறெதன்மீதும் அவனுக்கு சிந்தனை போறதில்லை… ஆனால், எல்லாரும் அப்படியல்ல. கூழுக்கு பாடினாள் அவ்வை; பொன்னுக்குப் பாடினான் கம்பன்.

“”இன்று விருதுகளையும், பணமுடிப்புகளையும் குறிவைத்து எழுதுகின்றனர்… நமக்கு அது பிடிக்காது. சந்தர்ப்பம் சரியாக வாய்த்தவர்கள் வெளிச்சத்தில் இருக்கின்றனர். மறுபக்க இருட்டில் நாங்கள். இருளில் நின்று நடனமாடினால், யாருக்கு தெரியும்?”

“”சொல்றனேன்னு தப்பா நினைக்காதீங்க. உங்கள் கிட்ட தோற்றுவிட்ட ஆதங்கமும், ஜெயிப்பவர்கள் மீதான கசப்பும் வெளிப்படையா தெரியுது. ஐம்பதாண்டு இலக்கிய வேலையில், ஒரு பொழுதாவது வெற்றி பெற என்ன வழின்னு யோசித்தது உண்டா… அதற்காக முயற்சித்தது உண்டா… உங்களிடம் என்ன குறையென்று ஆராய்ந்தது உண்டா?

“”எழுதினால் மட்டும் போதுமா… “சந்தைக் கடையானாலும் கூவித்தான் விற்க வேண்டும்…’ என்ற பழமொழி, உங்களுக்கு தெரிந்திருக்கும். சந்தைக் கடையில், எப்போதும் கூச்சலாகத்தான் இருக்கும். என் குரல் எப்படி எடுபடும்ன்னு மயங்கி உட்கார்ந்திருந்தால், உங்கள் சரக்கு எப்படி விற்கும்.

“”பரபரப்பான காலம் இது. எத்தனை பெரிய திறமைசாலியானாலும் யாரும் தேடி வந்து வேண்ட மாட்டாங்க. கீரைக்கு <உப்பில்லாத அளவுக்கு வறுமையில் வாடிய புலவன் கூட, மன்னனை தேடிப்போன போதுதான் பொற்கிழி கிடைத்திருக்கும். அரண்மனைக்குள் போய் பாடி, தன் திறமையை வெளிப்படுத்தி, மன்னனையும், அவன் கொடையையும் பாடித்தான் பரிசு பெற்றிருப்பர்.

“”பேரும் புகழும் கிடைக்க, நாடிப் போக வேண்டும்; தகுந்தவர்களைக் கண்டு பேச வேண்டும். இன்று பிரபலமாய், செல்வாக்காய் இருக்கும் படைப்பாளிகள் எல்லாம், எழுதியதை எடுத்துக் கொண்டு எத்தனை படிகளை ஏறி இறங்கினர், எப்படி அலைந்தனர் என்பது எனக்கு ஓரளவு தெரியும்.

“”அவர்களின் வெற்றியை விமர்சிப்பது, நம் பலவீனம். உங்க மேலயும், <உங்கள் படைப்பின் மேலயும் நம்பிக்கை இல்லாததாலும், முறையான வழியில் கடுமையாக உழைக்காததாலும்தான், தோல்வி ஏற்படுதுங்கறேன் நான்… என்ன சொல்றீங்க?” என்று கேட்டேன்.

வாயடைத்துப் போனார்… கோபமாகவும் இருந்திருக்கும். தலை உயர்த்தி, “”நீங்கள் பார்வையாளர்… சுலபமாக அபிப்ராயம் சொல்லிடுவீங்க. என் நிலையிலிருந்து பார்த்தால் உண்மை சுடும். மத்தவங்க தோள்ல உட்கார்ந்து பயணம் செய்யற ரகமில்லை நாங்க. முட்டி தேய, ரத்தம் கொட்ட, தவழ்ந்து போறவங்க நாங்க…”

“”காயப்படுத்தணும்ன்னு அப்படி கேட்கலை. தப்புன்னா மன்னிச்சிருங்க. ஆயிரம் வார்த்தைகளை விட, ஒரு செயல் பெரிது. எழுதி வச்சதை எல்லாம் கொண்டு வாங்க. வெளியிட பரிசீலனை செய்து, தகுதியுள்ளவைகளைத் தொகுத்து, புத்தகம் போட நாங்கள் உதவறோம்…”

அவர் என்னையும், ரகுவையும் மாறிமாறிப் பார்த்து, “”இப்படி உணர்ச்சி வசப்பட்டு பேசினவங்க எல்லாம், வீடு தேடிப் போனப்ப முகம் திருப்பிகிட்ட அனுபவம் உண்டு. இப்படித் தான் ஒரு செல்வந்தர்…” என்று ஆரம்பித்தார்.
நாங்கள் கிளம்பி விட்டோம்.

“”புதைச்சேற்றில் சிக்கிக் கொண்ட மனிதனால் தானாக வெளியேற முடியாது. உதவிக்கு கை நீட்டினாலும் ஏற்க மறுத்தால், என்ன செய்வது?” என்றேன்.

“”ஒண்ணும் செய்ய முடியாது…” என்றான் ரகு.

– ஆகஸ்ட் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *