புகைப்படக்கலைஞன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 24, 2024
பார்வையிட்டோர்: 591 
 
 

மெஹதிபட்டனம் பேருந்து நிலையம் சற்று விசித்திரமாக தான் இருந்தது. ஒரு பேருந்து நிலையம் போலும் இல்லாமல் மைதானம் போலும் இல்லாமல், ஒரு நெடுஞ்சாலை தாபாக் கடை போல் இருந்த அந்த இடத்தில், அவனை கவரும் வண்ணம் எதுவும் இல்லாததால், கேமராவை பைக்குள் வைத்துவிட்டு, கோல்கொண்டா செல்லும் பேருந்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

ஊர்ஊராக சென்று புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆசைதான். வாரம் ஆறுநாட்கள் வேலைக்குச் செல்ல வேண்டும். ஒரு பொதுத்துறை வங்கியில் துணை மேலாளர் வேலை. திறமையற்ற மேலாளர்களை மூன்று மொழி கெட்ட வார்த்தைகளில் திட்ட வேண்டும் என்று தோன்றினாலும், அதை செய்யாமல் வாயை மூடிக் கொண்டு வேலைப்பார்த்துவிட்டு வார விடுமுறையை எண்ணிக் காத்துக்கொண்டு வாழ்க்கையை கிடத்திக்கொண்டிருந்தான். வார கடைசியில் தூங்குவதற்கே நேரம் போதாது. இதில் எங்கிருந்து புகைப்படம் எடுப்பது!

எங்கேயோ ஒரு நல்லவேலையை விட்டுவிட்டு, மிகப் பெரிய புகைப்படக் கலைஞனாக உருவெடுக்கும் பொருட்டு ஊர் ஊராக சுற்றிப் புகைப்படங்கள் எடுத்தும் அவன் எதிர்பார்த்த கோட்டை தொட முடியாமல் போனதாலும், வங்கியில் இருந்த ஆறு இலக்க சேமிப்பு நான்கு இலக்க தொகையாக மாறிப் போனாதாலும், மீண்டும் ஒரு வேலையில் வந்து அமர்ந்துக் கொண்டான். ஒருகாலத்தில் லட்சியம் கனவு என்று பேசிக் கொண்டிருந்த தன்னை புதிய இந்த வங்கி வேலை கொஞ்சம் கொஞ்சமாக தின்றுக் கொண்டிருப்பதை அவன் உணராமல் இல்லை. இதுவரை அவனுடைய எந்தப் புகைப்படத்திற்கும் பெரிய அங்கீகாரம் எதுவும் கிடைத்ததில்லை. ஒரு பிரபல பத்திரிக்கை நடத்திய புகைப்பட போட்டிக்கு தான் எடுத்த புகைப்படத்தை அனுப்பியிருந்தான். ஆனால் வேறொரு சராசரி புகைப்படம் தேர்வாகியிருந்தது. அந்தப் புகைப்படத்தை எடுத்தவர் அந்த பத்திரிக்கை எடிட்டரின் தூரத்து உறவினரின் நண்பரின் மகனாம். இப்படி லட்சியத்தை விட யதார்த்தம் பெரியது என்பதை புரிந்துக் கொண்டதால், அவன் வங்கி வேலையை இறுகப்பிடித்துக் கொண்டான். வேலையில் இருந்துக் கொண்டே புகைப்படத் துறையில் சாதிக்க முடியும் என்று அவன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டாலும், ஒரு புகைப்படம் கூட எடுக்காமல் வங்கி வேலையில் ஏழுமாத காலம் ஓடிவிட்டது என்பது மனதை உறுத்தியது.

அப்போதுதான் செகுந்திராபாத்தில் வசிக்கும் நண்பன் சக்ரியின் திருமண பத்திரிக்கை இமெயிலில் வந்து சேர்ந்தது. திருமணத்தில் கேண்டிட் புகைப்படங்கள் எடுக்க முடியுமா என்று நண்பன் கேட்டிருந்தான். தன் கேமராவை தூசிதட்ட நேரம் வந்துவிட்டதாக எண்ணியவன் உடனே சரி என்று சொல்லிவிட்டான்.

சக்ரியின் நண்பன் க்ரிஷ் செகுந்திராபாத் ரயில் நிலையத்திற்கு வந்து இவனை மண்டபத்திற்கு அழைத்து சென்றான். சக்ரியுடையது பெரிய குடும்பம். அதனால் நிறைய புகைப்படங்கள் எடுக்க வேண்டியிருந்தது.

“கப்புள்ஸ மட்டும்தான் போட்டோ எடுப்பேன். ஐ ஆம் ஆர்ட் ஃபோட்டோகிராபர். எல்லாரையும் எடுக்க சாதாரண ஃபோட்டோகிராபர் இல்ல” இப்படியெல்லாம் ஒருகாலத்தில் பேசியிருக்கிறான். இப்போது எந்த ஈகோவுமின்றி எல்லோரையும் படம் பிடித்தான். விடிந்து திருமணம் முடிந்ததும், கிரிஷ் இவனை பேருந்து நிலையம் வரை அழைத்து வந்தான். க்ரிஷ் பேசிக்கொண்டே வந்தான். தான் ஒரு தெலுங்கு சினிமா இயக்க முயற்சித்ததாகவும் அது கடைசி நேரத்தில் சாத்தியப் படாமல் போனதாகவும், இப்போது எழுத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் அவன் சொன்னான். ஒரு கட்டத்தில் அவன் சொன்னது எதுவுமே இவன் மனதில் பதியவில்லை. க்ரிஷை பத்தி யோசிக்க தொடங்கிவிட்டான்.

‘க்ரிஷ் என்னைவிட ஐந்து வயது பெரியவன். வேலையை விட்டுவிட்டு, எழுத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறான். பணத்திற்காக அவ்வப்போது ஒரு இன்ஸ்டிட்யூட்டில் ஆங்கில வகுப்பு எடுக்கிறான். ஆனால் பயணம் செய்வதும் எழுதுவதை மட்டுமே மூச்சாக கொண்டிருக்கிறான். ஆனால் நான் பாதியிலேயே பயந்து பின்வாங்கி விட்டேன்.’

அவனுக்கு அசிங்கமாக இருந்தது, தன்னைப்பற்றி நினைக்கவே. எல்லாம் காரணத்திற்காகதான் என்று சொல்லி தன் மனதை ஆசுவாசப் படுத்திக் கொள்ள முயன்றான். ஆனால் முடியவில்லை.

‘ஏன் பணம் மட்டுமே முக்கியமாக படுகிறது! அது வேண்டாமென்று முடிவு செய்துவிட்டு வாழ்ந்துவிட முடியாதா?

‘பணத்தை தேடிப் போகும்போது ஏன் கனவுகளை புதைத்துவிட வேண்டியிருக்கிறது. ஒருவேளை வாழ்தல் என்று ஒன்று கிடையவே கிடையாதா? கனவுகள் லட்சியங்கள் என்பதெல்லாம் யதார்த்தம் எனும் பூதத்திடமிருந்து தப்பிப்பதற்காக நமக்கு நாமே கற்பனை செய்துக் கொள்ளும் விஷயங்களோ? பிறத்தல் இருத்தல் இறத்தல் என்ற விபத்தில், தேடல் என்பது சாத்தியப்படாத அல்லது தேவையற்ற ஒன்றோ?

“சோ ருபையா தேதோ. ஃபோட்டோ லேலோ” ஒரு குரல் இவன் சிந்தனையை கலைத்தது. நிமிர்ந்து பார்த்தான். இரண்டு திருநங்கைகள் இவன் தோல் பையில் மாட்டியிருந்த கேமரா பையை பாத்தவாறே நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் திருநங்கைகள் அல்ல, வேஷதாரி ஆண்கள் என்று புரிந்து கொண்டான். பத்துரூபாயை எடுத்து நீட்டியதும், அவர்கள் வாங்கிக்கொண்டு நகர்ந்தனர். ஒருவன் மட்டும் திரும்பி, “நூறு ரூபாய் குடுத்துட்டு ஃபோட்டோ எடுத்துக்கோ, ஃபாரினர்னா ஆயிரம் ரூபாய் ஆவும்” என்றான்.

ஸ்ட்ரீட் போட்டோக்ராபி. தெருவில் இருக்கும் யாரை வேண்டுமானாலும் எடுக்கலாம். யார் கேட்ப்பார்கள். சில நேரங்களில் இப்படி விளிம்பு நிலை மனிதர்களிடம் காசை கொடுத்து, அவர்கள் சோகமாக இருப்பது போல் புகைப்படம் எடுப்பார்கள். இணையத்தில் பதிவேற்றம் செய்தால் வேகமாக பிரபலமாகிவிடலாம். அவனும் ஒரு ஸ்ட்ரீட் போட்டோக்ராபர் தான். ஆனால் அப்படிபட்ட நேர்மையற்ற சூடோ புகைப்படக்காரர்களை எண்ணினால் அவனுக்கு அருவருப்பாக இருக்கும். இவன் கேமரா பழுதாகிவிட்டதாக அந்த வேஷதாரிகளிடம் சொல்லிவிட்டு திரும்பிக்கொண்டான். அவர்கள் முகம் சுழித்துவிட்டு நகர்ந்தனர். கோல்கொண்டா பேருந்து காலியாக வந்தது. வந்த வேகத்தில் எங்கெங்கிருந்தோ வந்த பலரும் மிகவும் வேகமாக அதில் ஏறிக் கொண்டனர். இவனுக்கு அமர்வதற்கு இடம் கிடைக்கவில்லை. நின்றுகொண்டான். பாதையில் வளைவுகள் நிறைய இருந்ததால் பேருந்து மிக மெதுவாக நகர்ந்தது. சிந்தனை மட்டும் வேகமெடுத்தது.

‘வாழ்வில் தேடல் என்பது சாத்தியப்படாத அல்லது தேவையற்ற ஒன்றோ? மனிதன் தன்னை புத்திசாலியாக கருதிக்கொண்டு அதை நிரூபிக்கும் பொருட்டே கலை, படைப்பு என்று குழப்பிக் கொள்ளுகிறோனோ! மனிதனின் மிகப் பெரிய தேவையே ஒரு கை சோறாக தான் இருந்துவிட முடியும். காமத்தைக் கூட எதையாவது செய்து அடக்கிக் கொண்டுவிட முடியும்? ஆனால் பசியை எப்படி அடக்குவது? அப்படியானால் அந்த சோற்றுக்காக தான் மனிதன் ஓடுகிறானா? அப்படி வேலை வேலை என்று ஒடுபவனால் அந்த சோற்றை சரியான நேரத்தில் உண்ண முடிகிறதா?’

வங்கியில் மதியம் ஒரு மணி முதல் ஒன்றரை மணிவரை உணவு இடைவேளை. ஆனால் ஒருநாளும் அவன் சரியான நேரத்தில் உணவு உண்டதில்லை. வெறும் ஐந்து நிமிடத்தில் வேகவேகமாக உணவை விழுங்கவேண்டும். இதை எண்ணும் போது கோபம் அதிகமாயிற்று, அவனுக்கு அவன்மேலேயே.

‘உண்மையில் மனிதனுக்கு பிரச்சனை வர இரண்டு காரணங்கள் தான் இருக்க முடியும். ஒன்று வேலையில் இருப்பது, இரண்டு, வேலையில்லாமல் இருப்பது. வேலையில்லாமல் இருந்தால் வேலைக்காக ஏங்குகிறோம். வேலையில் சேர்ந்தால் இயல்பை பறிக்கொடுத்து வேலையை வெறுக்கிறோம்.

‘பொதுவாக மனம் ஒருவகையான சொகுசுத்தனத்திற்கு பழகி விடுகிறது. சிலர் அதை இழக்க அஞ்சுகிறார்கள். அதனால் தனக்கு பிடித்ததை செய்யமுடியாமல் ஏங்குகிறார்கள். சிலர் அதை உடைத்துவிட்டு தனக்கு பிடித்ததை செய்ய தொடங்கிவிடுகிறார்கள். ஆனால் அவர்களும் அந்த தேடலில் ஒரு சொகுசுத்தனத்தை தான் எதிர்பார்க்கிறார்கள். அதை அடைய முடியாதபோது மனம் உடைந்துவிடுகிறார்கள். அதில் சிலர் பாதியிலேயே திரும்பி பழைய பாதைக்கு திரும்பி, மீண்டும் அந்த ஏக்கம் நிறைந்த கூட்டத்தோடு சேர்ந்துக் கொள்கிறார்கள். போராடி தன் லட்சியத்தை எட்டிப் பிடித்தாலும், வெற்றிக்கு பின் சூனியம் தானே இருக்க முடியும்?’

அவன் ஒரு முடிவை எட்டுவதற்கு முன் பேருந்து கோல்கொண்டாவை அடைந்தது. நுழைவு சீட்டு கொடுப்பவன் ஐந்துரூபாய் சில்லறையாக தரும்படி சொன்னான்.

“பாத் மே லேலுங்கா…” என்று நூறு ரூபாயை நீட்டினான்.

“பாஞ்ச் ருபையா தேதோ….” என்றவாறே அவன் முகத்தை திருப்பிக் கொண்டான். நுழைவு சீட்டுக் கொடுப்பவனுக்கு இவனைப் பிடிக்கவில்லை போலும். இவன் வரும்போது மீதத் தொகையை வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லியும் அவன் ஒப்புக்கொள்ளவில்லை.

இவன் அருகாமையிலிருந்த ஒரு கடைக்குள் சில்லறை மாற்றும் பொருட்டு நுழைந்தான். வாசலுக்கு நேராக இருந்த கல்லாவில் அமர்ந்திருந்தவனுக்கு பதினைந்து வயது தான் இருக்கும். உள்ளே வியாபாரம் பார்த்தவனுக்கு பத்து வயது இருக்கும்.

“அஞ்சு ரூபாய் பிஸ்கட் இருக்கா?”

அவன் இல்லை என்றான்

“பதினஞ்சு ரூபாய்க்கு ஏதாவது பிஸ்கட் இருக்கா?”

அந்த சிறுவன் வேகமாக, “டிக்கெட் தரமாட்டேனு சொல்ட்டானா?” என்று வினவினான். ‘நுழைவு சீட்டுக் கொடுப்பவனுக்கு பலரையும் பிடிக்காது போல’

சிறுவன் ஒரு பிஸ்கெட் பாக்கெட்டை மேஜை மீது வைத்தான். நூறு ரூபாயை வாங்கிக் கொண்டு என்பதைந்து ரூபாயை திருப்பிக் கொடுத்தான். பிஸ்கெட் பாக்கெட்டில் பத்து ரூபாய் என்று தான் அச்சிடப்பட்டிருந்தது. ஏன் விலை அதிகம் என்று கேட்டவனிடம், சுற்றுலா தளத்தில் அப்படி தான் என்று அந்த சிறுவன் பதில் அளித்தான்.

“அரே. ஐசே கைசே ஹோகா பாய்… டூரிஸ்டு ப்ளேஸ்னா ஒருவா ரென்டுரூவா வச்சு விக்கலாம். அஞ்சு ரூவாயா!”

அது வரை கல்லாவில் அமைதியாக அமர்ந்திருந்தவன், சில்லறையில்லை என்றவாறே கல்லாவை திறந்து காட்டினான். அதில் சில்லறை குறைவாக தான் இருந்தது. வேண்டுமானால் இதை வைத்துக் கொள்ளுங்கள் என்று இரண்டு ரூபாய் குச்சிமிட்டாய் ஒன்றை நீட்டினான். இவன் அதை வாங்காமல் அந்த சிறுவர்களையே உற்றுப் பார்த்தான். இருவரும் தலையில் குல்லா போட்டிருந்தார்கள். முஸ்லிம் சிறுவர்கள். சுத்தமான வெள்ளை உடை அணிந்திருந்தார்கள். ஆனால் முகம் களைத்திருந்தது. வறுமையாக தான் இருக்க முடியும். இல்லையேல் படிக்க வேண்டிய வயதில் ஏன் வேலை செய்கிறார்கள் என்று எண்ணினான். வெளியே, கோல்கொண்டாவிற்கு சுற்றுலா வந்த பள்ளி சிறுவர் கூட்டம் ஒன்று கடந்து சென்றது.

“அந்த அஞ்சு ரூபாய் வேணாம். நீயே வச்சுக்கோ. உங்க ரெண்டு பேரையும் சேர்த்து ஒரு போட்டோ எடுத்துகிறேன்”

போட்டோ என்றதும் சிறுவர்கள் சந்தோஷமாக தலையாட்டினார்கள். இரண்டு சிறுவர்களையும் அருகருகே அமரச்சொல்லி, வாசலை பார்க்க சொன்னான். இவன் வெளியே வந்து தார் சாலையைக் கடந்து கடைக்கு எதிரே, அந்த சிறுவர்களை பார்த்தவாறு நின்றான். அந்த சிறுவர் குழு கடையை கடக்கும்போது இவன் புகைப்படம் எடுத்தான். சிறுவர் குழுவுக்கு பின்னால், கடையினுள் நிற்கும் அந்த இரண்டு சிறுவர்களின் சோகமான முகம் போட்டோவில் தெளிவாக தெரிந்தது. அந்த கடைச் சிறுவர்களிடம் புகைப்படத்தை காட்டினான். அவர்கள் சந்தோஷமாக பார்த்தார்கள். அதற்கு மேல் அவனால் அங்கு நிற்கமுடியவில்லை. குற்ற உணர்ச்சியாய் இருக்கலாம். வேகமாக அங்கிருந்து நகர்ந்தான். தோல்வி உணர்ச்சியை தவிர்க்க குற்ற உணர்ச்சியை கடந்துதான் ஆக வேண்டும் என்று யாரோ மனதிற்குள் சொல்வது போல் இருந்தது.

வேகமாக கோல்கொண்டா வாயிலில் நுழைந்தான். பயணச்சீட்டு வாங்கும் போது, சீட்டு கொடுப்பவன் இவனை பார்த்து கேலியாக சிரித்ததை இவன் கவனிக்கவில்லை. அவனால் எதையுமே கவனிக்க முடியவில்லை. மூச்சு இரைக்கும் வரை மலை மீது ஏறி, அதற்கு மேல் முடியாது என்று தோன்றியதால் பால ஹிசாரின் அடிவாரத்தில் அமர்ந்தான். பையிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீரை வேகமாக குடித்தான். தொண்டை அடைத்தது,

கேமராவை எடுத்து கடைசியாக எடுத்த அந்தப் புகைப்படத்தைப் பார்த்தான்.

‘வெறும் பதினைந்து நிமிட புகழுக்குதான் ஏங்கிக்கிடக்கிறோமா?

சூழ்நிலை கனவுகளை கொஞ்சம் கொஞ்சமாக தின்றுவிடுகிறது. கனவுகளை சாத்தியமாக்கும் முயற்சிகு நிறைய உழைப்பை தர வேண்டியிருக்கிறது. அதற்கு நிறைய நேரத்தையும் செலவழிக்க வேண்டியிருக்கிறது. சூழ்நிலைகள் நேரத்தை பிடிங்கிக் கொள்வதால், போலி புகழ் தேடி அலையத் தொடங்கிறோம். வேலையிலிருந்துகொண்டே புகைப்படத் துறையிலும் கவனம் செலுத்த வேண்டும்’

அந்த சிறுவர்களின் புகைப்படத்தை கேமராவிலிருந்து அழித்தான்.

“அன்னையா” என்று ஒரு குரல் வர, நிமிர்ந்தான். ஒரு சிறுவன் நின்றுகொண்டிருந்தான்.

“அப்பாக்கு கொஞ்சம் தண்ணீ குடுங்களேன்” என்று அவன் தெலுங்கில் கேட்டான். இவனிடமிருந்து தண்ணீர் பாட்டிலை வாங்கிக்கொண்டு அந்த சிறுவன் ஓடினான். அந்த அப்பாவிற்கு அறுபது வயது இருக்கும். தளர்ந்திருந்தார். இவனை பார்த்து புன்னகை செய்தார். இவனும் சம்ப்ரதாயமாக பதில் புன்னகை செய்தான். தண்ணீரை குடித்துவிட்டு, இவனிடம் வந்து பாட்டிலை கொடுத்து விட்டு நன்றி சொன்னார்.

“வெல்கம் சார்”

அவர் ஆங்கிலத்திலேயே தொடர்ந்தார்.

“ப்ரொஃபஷனல் போட்டோகிராபரா?”

“பேஷன் சார். பாங்க்ல வேலை செய்றேன்”

“நீங்க இங்க போட்டோ எடுத்துக்கலாயா? இந்த ஹைட்ல இருந்து எடுத்துகிட்டா நல்லா இருக்கும்”

இவன் என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தான், அவர் தன் மகனிடம் தெலுங்கில் சொன்னார், “டேய் சாரா போட்டோ எடு. அவர் எவ்ளோ பேர எடுத்துருப்பார். நீ அவர எடுக்கப்போற, நல்லா எடுக்கணும்”

இவனிடம் திரும்பி, “உங்க கேமராலயே எடுக்கலாமே” என்றார். இவன் கேமராவை அந்த சிறுவனிடம் கொடுத்து, எந்த பட்டனை அழுத்த வேண்டுமென்று சொன்னான். பின் அந்த அப்பா சொன்ன இடத்தை நோக்கி நகர்ந்தான்.

இடுப்பாளவு இருந்த சுவற்றில் ஏறி அமர்ந்து, அதன் ஓரத்தில் இருந்த தூணில் சாய்ந்துக் கொண்டான். கிளிக். அந்த சிறுவன் எடுத்தப் புகைப்படம் அவனுக்கு திருப்தி அளிக்கவில்லை. அதை புரிந்துக் கொண்ட அப்பா, “என்னடா போட்டோ? ஒரு ஆங்கில் இல்ல… எப்பதான் கத்துக்கப்போறியோ?” என்று அதட்டினார்.

“சார், நீங்க மறுபடியும் போங்க, நான் எடுக்குறேன்” என்றார். இவனுக்கு விருப்பமில்லாவிடினும், பெரியவர் சொல்கிறார் என்ற மரியாதைக்காக அதே இடத்தில் சென்று அமர்ந்தான்.

“வெளிய பாருங்க தம்பி” என்று சொல்லி இரண்டு மூன்று புகைப்படங்கள் எடுத்தார். டிஸ்ப்லே மோடிற்குள் எப்படி செல்வது என்று.தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த அவரிடமிருந்து, கேமராவை வாங்கினான். ஆச்சர்யமாக இருந்தது. புகைப்படம் அருமையாக வந்திருந்தது. அந்த புகைப்படத்தில் அந்த உயரத்தின் பின்னனியில், கீழே இருந்த தர்பார்களும், சிதிலமடைந்த அரண்மனைகளும் நன்றாக தெரிந்தன.

‘நல்ல டெப்த்’ எண்ணினான். அந்த அப்பாவின் கண்கள் சந்தோசத்தில் பிரகாசித்ததை கவனித்தான்.

“நல்லா வந்திருக்கு சார்” என்று இவன் நன்றி சொன்னான். அவர் புன்னகை செய்துவிட்டு பால ஹிசார் நோக்கி படி ஏறத்தொடங்கினார். நான்கு படிகள் ஏறியதுமே அவருக்கு மூச்சு வாங்கிற்று. சற்று நிதானித்தவர் தன் மகனிடம், “மாடர்ன் கேமரா… நான்லாம் ஃபிலிம்ல எடுக்கும்போது ஒருவாரம் வெயிட் பண்ணுவேன் போட்டோவ பாக்க.. அதெல்லாம் ஃபிலிம் இன்ஸ்ட்டிட்யூட்ல படிச்சா காலம்…” என்று சொல்வதை கவனித்தவாறு இவன் கடைசி படியிலேயே நின்றான். உச்சி தெரிந்தது.

மேற்கொண்டு நடக்கத் தொடங்கிய அப்பா, “போட்டோ நல்லா வந்திருக்கு பாத்தியாடா…!” என்று சந்தோஷமாக சொன்னார். அவருடைய பையன் அவர் சொல்வதில் பெரிய ஆர்வம் இல்லாமல் படி ஏறிக்கொண்டிருந்தான். அவரை பார்க்கும் போது அவனுக்கு பயமாக இருந்தது. வேலையில் இருந்துக் கொண்டே புகைப்படத் துறையில் சாதிக்க முடியும் என்று மீண்டும் ஒருமுறை தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.

– ஏப்ரல் 2016

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *