நைட் ஷிப்ட்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 24, 2024
பார்வையிட்டோர்: 142 
 
 

“Every Guilty Person is his Own hangman”

“தூ நைட் ஷிப்ட் மே ஆஜா“ திடீர்னு ஒருநாள் என் பாஸ் சொன்னான். பொதுவா ‘நைட் ஷிப்ட்’ யாரும் வரமாட்டாங்க. எல்லாம் கல்யாணம் ஆனவனுங்க. இத்தனைக்கும் என்னோட சின்ன பசங்க. இங்கெல்லாம் அப்படித்தான். ரொம்ப சீக்கிரம் கல்யாணம் செஞ்சுப்பாங்க. ராத்திரியில மட்டும்தான் பெண்டாளானும் யாரோ சொல்லிவச்சிட்டுச் செத்த எழுதப் படாத அந்தக் கவைக்குதவாத சட்டத்தைக் கண்மூடித்தனமா பின்பற்றுற நாட்டுல அவனுங்க ‘நைட் ஷிப்ட்’ வர மாட்டேனு சொன்னது ஒண்ணும் ஆச்சரியமான விடயமில்லை.

எனக்கு எந்த ஷிப்டா இருந்தாலும் பிரச்சனையில்லை. நைட்ல எந்த வேலையும் இருக்காது. கடமைக்குன்னு ஒரு இஞ்சினியர் இருக்கணும். எங்காவது ஒன்னு ரெண்டு எந்திரம் ஓடும். அதுல ஏதாவது பழுதுவந்தா அதப் பார்க்குறதுக்கு ஒரு இஞ்சினியர் வேணும், அதாவது வேடிக்கை பார்க்குறதுக்கு ஒரு இஞ்சினியர் வேணும். எனக்குப் பழுதெல்லாம் பார்க்கத் தெரியாது. ஆனா இருபத்தினாலு மணி நேரமும் யாரோ ஒரு பலிகடா கம்பெனில இருக்கணும். நான் ராத்திரி நேரத்து பலிகடா. “ராத் காபலிபக்ரா”

கம்ப்ரசர் அறையிலிருந்து வழக்கம்போல நாராசமான அந்தச் சத்தம் வந்துக்கொண்டிருந்தது. காது ஜவ்வுல குண்டூசி குத்துற மாதிரி இருக்கும் அந்தக் கம்ப்ரசர் ஓடுற சத்தம். வரிசையா நிறைய கம்ப்ரசர் ஓடிக்கிட்டு இருக்கும். வளிமண்டலக் காற்றை உறிஞ்சி அழுத்தத்தை அதிகப்படுத்தி ஒட்டு மொத்த தொழிற்சாலைக்கும் அழுத்தம் நிறைந்த காற்று வினியோகிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும்.

அந்தக் கம்ப்ரசர் அறையின் மூலையில அமைக்கப்பெற்ற ஒரு சிறு கண்ணாடி அறையில தான் என் வேலை நேரம் முழுக்கக் கரையும். அங்க கம்ப்யூட்டர் இல்லை. கணினி உபயோகப் படுத்த வேண்டுமென்றால் அங்க இருந்து நடந்து ஆபீஸ் வரணும். பெரும்பாலும் நான் ஆபிசில் இருக்கமாட்டேன்.

தொடக்கத்துல காலை நேர வேலை செய்யும் போது ஆபிஸ்ல நிறைய பேர் இருப்பார்கள்.. சந்தைக் கடை மாதிரி எந்நேரமும் சப்தம் வந்துக் கொண்டே இருக்கும்.அதுவும் அவர்களின் மூன்றாம் தர ஆங்கிலத்தைக் காதுகொடுத்துக் கேட்க இயலாது. தேவையில்லாம என்ன ‘மதராசி’ என்று சொல்லிச் சொல்லி ஏளனம் செய்வாங்க. எனக்கு ஒரே ஒரு பிரச்சனை. எனக்குக் கோபம்வந்தால் நான் சரமாரியா ஆங்கிலம் பேசுவேன். எல்லாமே அதிகம் உபயோகிக்கப்படாத ஆங்கில வார்த்தைகள். சின்ன வயசில பொழுதைக் கழிப்பதற்கு நான் அதிகம் படித்த ‘ஆக்ஸ்பார்ட்’ அகராதியிலிருந்து கற்றுக்கொண்ட வார்த்தைகள். ஆங்கிலேயர்கள் பெரும்பாலும் தங்கள் ஜகாவை தென்னகத்தில் வைத்திருந்ததால் தென்னாட்டுகாரர்களுக்கு ஆங்கிலம் நல்லா வரும், பிற மாநிலத்தாரைக் காட்டிலும். ஆனால் குஜராத்திகளுக்கு ஆங்கிலம் குதிரைகொம்பு. அதனால், படித்தவர்களுக்கே அதிகம் புரியாத என் ஆங்கில அறிவை குறுகிய புத்திக் கொண்டவர்களிடம் காட்ட முடியாது. இப்பிரச்சனைகளைத் தவிர்க்கவே நான் ஆபிசில் இருப்பதை விட சைட்டிலேயே அதிகம் நேரம் செலவழிப்பேன்.

அதுமட்டுமின்றி எனக்கு எப்பவும் கூட்டம் பிடிக்காது. முக்தி அடைவதற்கு ஒரே வழி தனிமையென்று நம்புகிறவன் நான். தாயுமானவர் சொன்ன மாதிரி சும்மா இருக்கவும் ஒரு மனிதன் கற்றுக்கொள்ள வேண்டுமென்று எண்ணுகிறவன் நான். இக்காரணங்களாலே நான் கம்ப்ரசர் அறையே கதியென்றிருக்கத் தொடங்கினேன் .

அன்று கண்ணாடி அறையினுள் நுழைந்ததும் ‘நமஸ்தே சாஹிப்’, வணக்கம் வைத்தவாறே ஆபரேட்டர் அங்கிருந்து நகர்ந்தான். நான் எப்போது உள்ளே நுழைந்தாலும் அவர் அங்கிருந்து நகர்ந்து விடுவார். அது ஒரு விசித்திரமான மரியாதை. அந்த அளவுக்கு நான் என் மரியாதையைக் காப்பாற்றி வைத்திருந்தேன்..

“சாஹிப்.லடிகி நம்பர் சாயியே கியா?” ஒரு நாள் சிரித்துக் கொண்டே வினவினான்.

“ஐசா மத் பூச்சோ!நீ எப்ப ஆபரேட்டர் வேலைய விட்டுட்டு, பொம்பள சப்ளை பண்ண ஆரமிச்ச !” கோபத்தோடு கத்துற மாதிரி நடிச்சேன் என் ‘கெத்’த காப்பற்றிக் கொள்வதற்காக.

அன்றிலிருந்தே அவர் எனக்கு மரியாதை கொடுக்க ஆரமிச்சுட்டார். எந்நேரமும் காலாட்டிக்கிட்டு அந்த அறையிலேயே உக்காந்து மொபைல்ல வீடியோ பாக்குறதுதான் அவர் வேலை. நான் வந்துட்டா மரியாதையா அங்கிருந்து எழுந்து வெளியே போயிடுவார். விசித்திரமான மரியாதை.

‘நமஸ்தே நமஸ்தே’ என்றவாறே கண்ணாடி அறையில் அமர்ந்தேன்.டிராயரத் தொறந்து உள்ளே இருந்த அந்த தடி புத்தகத்தை எடுத்தேன். என் வாழ்க்கையில் நான் பெரும்பாலான நேரம் படிப்பதற்க்காகதான் செலவளிக்கிறேன், சில நேரங்களில் புத்தகங்களை, சில நேரங்களில் மனிதர்களை. புத்தகத்தின் அட்டையில் சிரித்துக் கொண்டிருந்தார், மாபசான். டெல்லிபோயிருந்தபோதுவாங்கியபுத்தகம் அது.

“A complete Collection of Guy De Maupassant Short Stories” முதல் இரண்டு பக்கங்களைத் திருப்பி அட்டவணைக்குசென்றேன். ‘இம்பொலைட் செக்ஸ்’-772 ஆம் பக்கம் ஏனோ தெரியல. மனசு எதையோ நினைத்துக்கொண்டு அந்தக் கதையை நோக்கிச்சென்றது. என் மனசு எதிர்பார்த்த மாதிரி அந்தக் கதை இல்லை. படிக்கப் பிடிக்கல. எதிர்பார்ப்புகள் ஏமாற்றமளிக்குமென்பது உண்மை தான் போல! புத்தகத்தை அது இருக்க வேண்டிய இடத்திலேயே வைத்துவிட்டு, வேற எதாவது புத்தகம் கிடைக்குமான்னு என் பையைத் தேடினேன். ஒரு சிட்னி செல்டன் புத்தகம் கிட்டியது. எப்போவோ என் நண்பன் எனக்குக் கொடுத்த பழைய புத்தகம் அது.

நான் பொதுவா மேற்கத்திய எழுத்தாளர்கள அதிகம் படிக்கிறதில்லை. விசித்திரமா இருக்கிறதுல ஒரு ‘கெத்’ இருக்கு. குப்பை மாதிரி எழுதிக்குவிக்கும் ஆங்கில எழுத்தாளர்கள் மீதெனக்கு ஆர்வம் குறைவு. ஆனாலும் ஒருநாள் சிட்னிசெல்டன் படிச்சா ஒண்ணும் குடி மூழ்கிடாது.

கிழிஞ்ச அந்தப் பழைய புத்தகத்துல, மூணாவது பக்கத்திலேயே நாயகியின் ஆடைகளையப்பட்டது. எனக்கு என்னென்னமோ எண்ணங்கள்தோன்றின. உடம்பெல்லாம் ஏதோ செய்தது. எனக்கு கவர்ச்சி பிடிக்கும், விரசம்பிடிக்காது.

மேலாடை இல்லாமல் உக்ரைன்ல போராட்டம் நடத்திய பெண்ணியவாதி ஒருத்தியக்கண்டு இந்திய அரசு துடிக்கிறது. அவள் கூறும் காரணங்களைக் காதுகொடுத்துக் கேளாமல் அவளைக் கைது செய்யஎத்தனிக்கிறது. ஆனால் முகத்தைச் சுழிக்கவைக்குற அளவிற்குத்தன் செழிப்புகளைக் காட்டுகிற ஒரு நடிகைக்கு தேசியவிருது கொடுக்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவும் கைதட்டுகிறது. பாவம் இந்தியர்களுக்கு கவர்ச்சிக்கும் விரசத்திற்க்கும் வித்தியாசம் தெரியாது. அந்தப் புத்தகத்திலிருந்தது விரசம். அது எனக்குப் பிடிக்கலை. அந்தப் புத்தகத்தை அங்கேயே போட்டுட்டு வெளியவந்தேன்.

வெளியில உக்காந்து ஆபரேட்டர் மொபைல வீடியோ பாத்துக்கிட்டிருந்தான். அவன் முகபாவனைகள் பார்க்கச்சகிக்கல. அப்படியேகாரி உமிழலாம்னு இருந்தது . அந்தாளுக்கு ஐம்பது வயசிருக்கும். கல்யாணமாகி 30 வருடம்மேலாகுது. ஒம்பது வயசில ஒரு பேத்திவேற இருக்கு. ஆனா இன்னும் மொபைல ‘போர்னோ’ படம் பாத்துக்கிட்டிருக்கான்.

‘போர்னோ’ படம் பார்க்கிறதப் பற்றி நான் குறை சொல்லல. ஆனா வாழ்க்கைக்கு வடிகாலா இருக்க வேண்டிய விடயங்கள் வாழ்க்கையாகிப் போவதைத்தான் நான் எதிர்க்கிறேன், நிஜ வாழ்க்கையை நிழல் உருவங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கத் தொடங்குவதை ஆதரிப்பதைதான் நான் வெறுக்கிறேன். மனிதனோட தேவைகளும் ஆசைகளும் இச்சைகளும் கட்டுப்பாட்டில் இருக்கனும். அதை கட்டுப் படுத்த மறந்திட்டு நிழல் உருவங்களுக்கு அடிமையாகிப் போறது மடத்தனம்.

என்னை நிமிர்ந்து பார்த்த ஆபரேட்டர், “சாஹிப், ஆப்கே பாஸ் குச் வீடியோ ஹே” என்று வினவினான் நிழல் உருவங்களால் ஆக்கிரமிக்கப் பட்ட அவன்.

கிழவன் பார்த்த வரைக்கும் பத்தாதுனிட்டு என் கிட்ட வேற வீடியோ கேட்குறான்.

“கியா சாஹிப்?”

“குச் நஹி, மே ஜாரா ஹூன்”

திரும்பிப் பார்க்காம அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். பொதுவாக பொழுது போகாத பல சமயங்களில் நான் தொழிற்சாலைக்குள்ளேயேதான் சுற்றித்திரிவேன். அன்று ஏதோ ஒரு சொல்ல முடியாத ஏக்கம். என் உடம்போ மனசோ, என் கட்டுப்பாட்டில் இல்லை.

அன்று ஹோலி பண்டிகை என்பதால் யாருமே தொழிற் சாலையில் இல்லை. ரெண்டு சொறி நாய்கள் புணர்ந்துகொண்டிருந்தன. அதை ரெண்டு செக்யூரிட்டி கார்டுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். எதன்மேலும் பற்றின்றி வீதியில் இறங்கி நடந்தேன்.

மணி ஒன்னரை இருக்கும். நிசப்தம் வழிந்தோடிய தெருக்கள். தவளை கத்துகிற சப்தம் மட்டும் கேட்டது. சாலையின் இரு புறமும் வெறும் மரங்கள். நான் வேலை செய்யும் தொழிற்சாலையில் இருந்து வலது புறம் போனா ‘சுவாளி’ என்று ஒரு பீச் இருக்கிறதாக் கேள்விபட்டிருக்கேன். இது வரைக்கும் பார்த்ததில்லை. ரொம்ப தூரம் போகணும்னு தெரியும். எனக்கும் ஒரு வேலையுமில்லை. காலைல ஏழு மணிக்கு அவுட் பன்ச் அடிக்கணும். அதுக்கு முன்னாடி கிளம்பினால் லாஸ் ஆப் பே. எவ்வளவு நேரம் அதிகமா வேலை செஞ்சாலும் நிர்வாகம் கண்டுக்காது. ஆனா ஒரு நிமிடம் சீக்கிரம் கிளம்புனா ஒரு நாள் சம்பளம் காலி, இந்தியாவிலேயே பெரிய நிர்வாகம். கேட்க நாதியில்லை. ஏழு மணி வரை நேரத்தை ஓட்டனும் என்பதற்காக நான் சுவாளி நோக்கி நடந்தேன்.

இப்போது தவளை சத்தத்தோட சேர்ந்து வேறொரு சப்தமும் கேட்டது, நான் தொடர்ந்து நடக்க, சத்தம் அதிகமாகக் கேட்டது. அங்கு நிரம்பியிருந்த நிசப்ததைக் கலைத்தது அருகிலிருந்த புதரினுள்ளிலிருந்து வந்த அந்தப் பெண்ணின் பயங்கரமான அலறல். ஒரு நிமிடம் திகைத்து நின்று, அந்த அலறலை ரசித்தேன். அதில் ஏதோ ஒரு சுகம், சொர்க்கம் பொதிந்திருந்தது. பின் சுதாரித்துக் கொண்டு, புதரை நோக்கி ஓடினேன். முன்னாடி நின்னவன் இரண்டு கைகளையும் விரிச்சு என்ன அப்படியே தடுக்க வந்தான். எனக்கு சண்டை போடத் தெரியாது, இருந்தாலும் தில்லாக் கத்திக்கொண்டு அவனை நோக்கி ஓடினேன். உடம்புல அடிக்கிறதோட ஒருத்தன் மனசுல அடிக்கணும். நான் போட்ட சத்ததுலேயே அவன் பயந்துட்டான். அவன் உடம்பு நடுங்க ஆரமித்து விட்டது.

அதைப் பார்த்ததும் நான் இன்னும் அதிகமாக் கத்துனேன்.

“பஹேன் சோX”

“க்ய கர்ரஹா ஹே து..கோனே அந்தர்…லவx ” கெட்டவார்த்தைகள் சரமாரியாக என் வாயிலிருந்து உதிர்ந்துக் கொண்டிருந்தன. பொதுவா நான், மூன்று மொழிகளில் பாரபட்சமின்றி கெட்ட வார்த்தை பேசுவேன்,. எல்லாம் மொழிகளிலும் வகை வகையான கெட்ட வார்த்தைகள் உண்டு. ஆனா உடம்பின் உறுப்புகளக் குறிக்கிற வார்த்தைகள் எப்படி கெட்ட வார்த்தையாச்சுனு இன்னும் புரியல. பல நாள் தூங்காம கெட்ட வார்த்தைகள் ஆராய்ச்சி பண்ணியிருக்கேன். இந்திய மொழிகளில் பெரும்பாலான கெட்டவார்த்தைகள் உடல் சம்பந்தப் பட்டது. பெரும்பாலும் எல்லாக் கெட்டவார்த்தைகளும் அப்படிதான்…

தொடர்ந்து என் வார்த்தைகள் உச்ச மண்டிலத்தை அடைய அவன் அங்கிருந்து ஓடி விட்டான். புதரின் உள்ளிருந்து இருவர் வேகமாக என்னை நோக்கி ஓடி வரவும், நான் பாய்ந்து அருகில் இருந்த கூரியக் கல்லை எடுக்கவும் சரியாக இருந்தது. கல், மனிதனின் முதல் ஆயுதம். உலகிலேயே மிகக் கொடூரமான ஆயுதமும் கூட. கல்லை இறுக்கமாகப் பிடித்திருந்த என் கையைப் பார்த்ததும் இருவரும் ஓடத் தொடங்கினார்.

நான் அவர்களைத் துரத்திக் கொண்டே ஓடினேன். அதில் ஒருவன் கால் தடுக்கி கீழ் விழுந்து, முட்டி சிராய்ந்து, மீண்டும் எழுந்து ரத்தம் சொட்டச் சொட்ட ஓடினான். ஒரு விடயம் தெளிவாகப் புரிந்தது. இவர்கள் இதற்கு முன் எந்தத் தவறும் செய்யாத விடலைகள். அவர்களுக்கு இருபது வயதுக்குள் தான் இருக்கும். எங்கேயோ திருட்டு சாராயம் வாங்கிக் குடித்து விட்டு, சூட்டைத் தணிக்க முடியாமல் தனியாகப் போனவளைச் சீண்டியிருக்கிறார்கள்.

நான் துரத்துவதை நிறுத்தி விட்டு, சிறிது நேரம் ஒரே இடத்தில் நின்று கெட்டவார்த்தையில் திட்டிக் கொண்டிருந்தேன். இடையிடையே சில ஆங்கில கெட்ட வார்த்தைகளையும் உதிர்த்தேன். அவர்களுக்கு புரிந்ததா என்பதை பற்றிய கவலை எனக்கில்லை. கெட்ட வார்த்தை பேசுவதிலும் ஒரு சுகம் இருக்கதான் செய்கிறது….

சொல்ல முடியாத அந்த சுகத்தில் லயித்திருந்த என்னை அந்தப் பெண்ணின் அழுகுரல் தான் மீண்டும் பூமிக்கு கொண்டு வந்தது. புதர் நோக்கி ஓடிய போது, புல்லிலிருந்த அந்தப் பை காலில் சிக்கியது. பை முழுதும் பெண்ணின் துணிகள். ஒருவாறு நிலைமையை யூகித்துக் கொண்டு பையைக் கையில் எடுத்துக் கொண்டு அந்தப் புதர்வரை சென்றேன். வெளியில் புதர் போன்று காட்சியளித்த அந்த இடத்தின் உட் புறத்தில் புல்தரை பரந்து விரிந்திருந்தது.

அந்தப் பெண் அழுது முடிக்கும் வரை அங்கேயே அமைதியாக நின்றிருந்தேன், கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள். பின் பொறுமையாகப் பேசத் தொடங்கினேன்.

“கோனே து? கஹான் சே ஆயா?”

சொல்லுடி. யாரடி நீ…தொடர்ந்து பல முறை வினவியதும் அவள் சற்றே தடுமாறி பதிலளித்தாள். அவள் பேச்சில் பெரும்பாலும் மராத்தி வார்த்தைகள் கலந்திருந்தன. ஹிந்தி பேசத் திணறும்போதே, ஏதோ கிராமத்திலிருந்து வருகிறாள் எனக் கண்டுகொண்டேன்.

“இதற் க்யு ஆயா?”

அவள் அழுதுகொண்டே சொன்னது, “அம்மா செத்துட்டா…வேலை தேடி இங்க வந்தேன்…அவங்க வேலை வாங்கித் தரேன்னு சூரத்துல இருந்து இங்க கூட்டி வந்தாங்க”

இப்போது மீண்டும் உரைத்தது. அந்தப் பசங்க பிளான் பண்ணித் தூக்கி வந்துருக்கானுங்க. பாவம் எத்தனை நாள் காத்திருந்தானுங்களோ!

“ராத்திரி நேரத்துல எவன் வேலை கொடுப்பான்.உனக்கெங்க அறிவு போச்சு….”

“தங்க இடம் தரேன்னு சொன்னான்.தங்கச்சி தங்கச்சின்னு சொன்னன்.ஊர் பாச பேசுனான்”

தங்கச்சியாவது, அக்காவாவது….எனக்குள்ளே முனகிக் கொண்டேன்.

“உன்ன யாரும் தேடமாட்டாங்களா?”

மீண்டும் கொஞ்சம் நேரம் அழுகை. “எனக்குன்னு யாரும் இல்ல. ஊர்லதான் தப்பா நடந்துக்குறாங்கனு இங்க வந்தேன்..இவங்களும்……ரொம்ப நன்றி சார். என்னக் கொன்னிருந்தாக் கூட கேட்க ஆளில்லை…”

நன்றாகவே உரைத்தது, கொன்னிருந்தாக் கூட கேட்க ஆளில்லை.அந்தப் பொண்ணோட கதறல நான் பொருட்படுத்தவேயில்லை. அவள் வாயேயை இறுக்க மூடினேன்.சிறிது நேரத்தில் அவளின் கதறல் காற்றில் கரைந்தது. வாய்ப்புகள் கிடைக்காத வரைக்கும் அனைவரும் நல்லவர்கள்தான். நானும் நல்லவன்தான், சில நிமிடங்களுக்கு முன்பு வரை…

அந்தப் பொண்ணு அழுதுக்கிட்டே இருந்தா. நான் திரும்பிப் பாக்காம மீண்டும் தொழிற்சாலைக்கே வந்துட்டேன். அந்தப் பொண்ணுக்கு இருபது வயது இருக்கும். கலையான முகம். நீல நிற சல்வார்ல ரொம்ப லட்சணமாவே இருந்தாள். ஆனால் இதெல்லாம் அவள் ஆடையைக் கிழிக்கும் போது எனக்குத் தோணலை.

என்னால கம்ப்ரசர் அறையில இருக்க முடியலை. மாபசான் என்னப் பார்த்து சிரிக்குற மாதிரி இருந்துச்சு. ‘ஏண்டா மெத்தப் படிச்ச மேதாவியே ! கடைசியில் நீயும் ஒரு ….’

அவர் என்னப் பார்த்து கேட்கிற மாதிரி இருந்தது. என் உடம்பெல்லாம் வேர்க்க ஆரமிச்சிட்டது.

“சாஹிப் கியா ஹுவா ?“ ஆபரேட்டர், தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தான். நான் எதுவும் பேசாம ஆபிஸ்ல வந்து அமர்ந்தேன். ஏ.சி அறையிலும் வேர்த்துக் கொண்டே இருந்தது,

நல்லா நினைவிருக்கு. அந்தப் பொண்ணு என்னத் தடுக்கல.. நாலு பேரு தூக்கிப் போய் ஒரு பொண்ண பலாத்காரம் பண்ணலாமேயொழிய, ஒருத்தனால ஒரு பெண்ணோட உரிமையில்லாம கற்ப்பெல்லாம் அழிக்க முடியாது. நான் படித்த மனோதத்துவத்தெல்லாம் சொல்லி என் மனசைத் தேற்றிக் கொள்ளப் பார்த்தேன். ஆனா மனக் குரங்கு சாந்தி அடையல. நேற்று வரைக்கும் பெண்ணியவாதினு பெருமையா சொல்லிக்கொண்ட என்னால இனிமே பெருமைப் பட முடியாது, ஒரு பெண்ணோட உரிமை இல்லாம அவளைத் தொடுவது மட்டும் தப்பில்லை. அவள் உரிமை இல்லாம அவள் உணர்ச்சியைத் தூண்டி விடுவதும் தப்புதான்.

நான் செய்தது மிகப் பெரிய தப்பு. துரோகம். அந்தப் பெண்ணைக் காப்பாற்றுவதாய்ச் சொல்லி சீரழுச்சிட்டேன். நான் நினைத்திருந்தால் அந்தப் பெண்ணிற்கு ஒரு வேலை வாங்கிக் கொடுத்திருக்கலாம். அவள் முன்னாடி மரியாதைக்குரிய ஒரு மனிதனாய் நிமிர்ந்து நின்னிருக்கலாம்.ஆனால், நான் என் இச்சைக்கு அடிமை ஆகிட்டேன். என் முகத்திலேயே நான் காரித் துப்பனும் போல இருந்தது.

எல்லாருள்ளையும் ஒரு ஆதிக்கவாதி முதலாளித்துவவாதி ஒளிந்திருக்கிறான். இவளால் என்னை என்ன செய்ய முடியுமென்ற எண்ணம். இ.பி.கோ 375 பிரிவ எப்படி உடைக்கணும்னு எனக்குத் தெரியும். நான் அறியாமையில் தப்பு பண்ணல. மேதாவித் தனத்துல தப்பு பண்ணிட்டேன். அதான் என்ன ரொம்ப உறுத்துது. நான் படிச்ச படிப்பெல்லாம் பொய். கீதாசாரம் பொய். தில்லைப்பதிகம் பொய். நான் படிச்ச எல்லாம் வீண்..

வாழ்க்கை அழகு நிறைந்த பூந்தோட்டம் கிடையாது. அது ஒரு குப்பை. மனித மனம் ஒரு சாக்கடை. அங்கு வெறும் இச்சைகளும் கீழ்த்தரமான எண்ணங்களும்தான் புதைந்துக் கிடக்கு. கடைசில பிராய்ட் தான் ஜெயிக்கிறான். எல்லாமே வெறும் ஹார்மோன்ஸ்தான். நாமெல்லாம் ஹார்மோன்ஸின் அடிமைகள். அதைக் கட்டுப் படுத்த யாரும் சொல்லித்தரல. யாராலயும் கட்டுப் படுத்தவும் முடியாது. நன்னெறி பேசுற உன்னத இலக்கியங்களெல்லாம் சந்தர்ப்பங்களைத் தவிர்க்கவே சொல்லித் தருது. சந்தர்ப்பங்களை எதிர்கொள்ள யாரும் சொல்லித்தரல.

நிர்வாணமாய் ஒரு பெண் உன் முன் வந்தால் கண்ணை மூடிக் கொண்டு சாமியாராகப் போ, என்று சொல்லிதரும் இலக்கியம் எதுவும் கண்ணைத் திறந்து வைத்துக் கொண்டு கட்டுபாட்டோடடு இரு என்று சொன்னதில்லை. யாராலயும் சொல்லவும் முடியாது.

அப்பறம் என்னடா உன்னத இலக்கியம்! உலக இலக்கியம்.

எல்லாம் பொய். நன்னெறிகள் பொய். எல்லாம் செப்படி வித்தை. கீழ்த்தரமான மனித வாழ்க்கையில் எதுவும் உண்மையில்லை..,

இல்லாத கடவுளை இருக்குறதா நினைத்து நானும் வேண்டியிருக்கேன், பாரதி போல

“சிந்தை தெளிவாக்கு அல்லாளிதை செத்த உடலாக்கு”

ஆனா எதுவுமே எனக்குப் பயன்படவில்லை. சிந்தித்துப் பார்த்தா நானும் ஓர் கபட வேசதாரியோனு தோணுது. என்னைக்காட்டிலும் மொபைல ‘போர்னோ’ படம் பார்க்கிற அந்தக் கிழவன் எவ்வளவோ மேல்…

என் குற்ற உணர்ச்சி என்னை அணு அணுவாச் சிதைக்கத் தொடங்கியது.

‘அவ நிச்சயம் நல்ல பொண்ணா இருக்கமாட்டா..இந்த நேரத்துல தனியா வெளிய வரவ நல்லவளா இருக்க முடியாது’ நான் ஏதேதோ சொல்லி என் குற்ற உணர்ச்சியைக் குறைக்கப் பார்த்தேன். என் கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும் வந்துக்கொண்டிருந்தது…

மணி 4. கார எடுத்துக்கிட்டு அந்தப் புதரை நோக்கிப் போனேன். அவள் அங்கு இல்லை. அந்தப் பையும் இல்லை. அந்த இடத்தில் அவளோட கிழிஞ்ச சல்வார் மட்டும் இருந்தது. அதெல்லாம் ரத்தம். அதைப் பார்த்ததும் விளங்கிற்று. நான் நினைத்த மாதிரி இல்லை. அவள் உண்மையாவே ஒரு அப்பாவி பொண்ணு. என் மனச சாந்தப் படுத்த முடியலை, கத்துனேன்.

சாடிஸ்ட்..சாடிஸ்ட்..என்ன நானே திட்டிக் கொண்டேன். வேகமா என் கார எட்டி எட்டி உதச்சேன், கால் வலி எடுக்கிற வரைக்கும். ஒரு பொண்ணோட வாழ்க்கையச் சீரழிச்ச அந்தக் குற்ற உணர்ச்சியத் தாங்கிக் கொள்ள இயலாமல் ,கொஞ்ச நேரம் அங்கேயே உக்காந்து அழுதேன். அதுக்கப்புறம் அந்தப் பொண்ண கிட்டத்தட்ட ஒரு வாரம் தேடுனேன். சத்தியமா அவளைக் கல்யாணம் பண்ணிக்கணும்என்ற எண்ணத்தோடு தான் தேடுனேன். கடைசி வரைக்கும் அவள் கிடைக்கவே இல்லை. நான் செஞ்சது நம்பிக்கை துரோகம். அவள் உயிரோடிருந்தால் நிச்சயம் அந்த வலியோடுதான் வாழ்ந்துக்கிட்டு இருப்பாள், நான் என் குற்ற உணர்ச்சியோடு வாழ்ந்துக் கொண்டிருப்பதைபோல…

“…மோகம்கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கிப்பின்
பேயது பிடித்தவர்போல் பேருலகில் சாவரே…”

– பெப்ரவரி 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *