உங்களுக்குத் தெரிந்த மனிதர் யாராவது உயிர் வாழ்ந்த போதிலும் பார்க்க ஒரு இறந்தபின்பு அழகாக தோற்றமளித்தாரா? அப்படி ஒரு ஏதாவது சந்தர்ப்பத்தில் இறந்து போன ஒருவரை பார்த்தவுடன் அவ்வாறு நீங்கள் நினைத்திருக்கிறீர்களா?
இது சிக்கலான கேள்வி நான் நினைப்பதை நீங்கள் புரிந்து கொள்ள விரும்பினால் அதுபற்றி விரிவாக கூறவேண்டும்.
எனது வேலைத்தலத்துக்கு அருகே பெரிய மயானம் இருக்கிறது. அது நமது ஊர் மயானம் போல் அல்ல யாழ்ப்பாணத்து கோம்பயன்மணல் மாதிரியாக நாலு ஆலமரங்கள் சில அலரிமரங்கள் இடைக்கிடையே ஆமணக்கு பற்றை என்பன வளர்ந்திருக்கும் இடமாக ஒரு சில ஏக்கர் விஸ்திரணத்தில் இல்லை. அதற்கு மாறாக இது பல கிலோமீட்டர் அகல நீளமான அழகிய பூந்தோட்டம். யுகலிக்கப்ரஸ் மரங்களில் இருந்துவரும் கற்பூரவள்ளி நறுமணம் நிறைத்த காற்று சுவாசத்தை நிறைத்தபடி இருக்கும்.உயரமான மரங்கள் இடையே புகுந்து சங்கீதம் ஒலிக்கும் காற்று, குளிர்காலத்தில் உடல்மீது குளிரை வாரியிறைத்துச் செல்லும்.
இரண்டு பெரும் நெடும்சாலைகளுக்கு இடையில் மயானம் இருந்தாலும் சாலையில் செல்லும் வாகன சத்தங்கள் எதுவும் உள்ளே கேட்காது. இறந்தவர்கள் அமைதியாக உறங்குவதற்கு இதைவிட சிறந்த இடம் கிடைக்காது. யூதர்களின் உடல்களை அடக்கம் செய்யும் இடம் இத்தாலிய பளிங்குகளால் சமாதி கட்டபட்டு அழகாக இருக்கும். ஒவ்வொரு முறையும் மயானத்திற்கு செல்லும்போது எனக்கு வழமையாக வரும் சிந்தனை, அவ்விடம் அமைதியான மயானம் என்பதுதான்.
மனதுக்குப்பிடித்தமான இடத்தில் வீடு வாங்கி குடி புகும் எவருக்கும் மனநிறைவு வருவது இயல்புதானே.
ஒருநாள் எனக்குத்தெரிந்த ஒருவரது மரணச்சடங்கு அங்கே நடந்தபோது நான்செல்ல சற்றுத் தாமதமாகிவிட்டது. அவசரமாக காரை நிறுத்திவிட்டு அங்கு சென்றபோது ஷப்பல் ஹோலில் இந்து சமயக்கிரியைகள் நடந்து கொண்டிருந்தன. இருநூறு பேர்வரையில் ஆசனங்களில் இருந்தார்கள். அவர்களில் ஒருவராக நானும் அமர்ந்தபோது, மரணம் அடைந்தவரை அருகில் சென்று தரிசிக்க முடியும் என நண்பர் ஒருவர் கண்களால் சைகை காட்டினார். காலணிகளை கழற்றிவிட்டு முன்னாலே சென்று மலர்வளயங்களுக்கு மத்தியில் வைக்கப்பட்டிருந்த அந்த பூதவுடலை தரிசித்தபோது,அந்த மனிதர் உயிருடன் இருந்தபோதிலும் பார்க்க வெகுஅழகாக அந்த வெள்ளைப் பளிங்கு போன்ற பிரேதப் பெட்டிக்குள் இருப்பதாக ஒரு உணர்வு வந்தது.
அதுவும் எந்திரன் படத்தில் ரஜனிகாந்தின் ரோபோ வேடத்தில் இருந்த உருவம் என நினைக்கத் தோன்றியது. எந்தக் குறும்போ நகைச்சுவை உணர்வோ எனக்கு இல்லை. எந்திரனையும் அந்த இறந்த மனிதரையும் ஒப்பிடும் நினைவு தேவையில்லாமல் அக்கணம் வந்தது. நீங்கள் நினைப்பதுபோல் உயிருடன் இருக்கும்போது அவரை நான் வெறுக்கவில்லை. பலதடவை சந்தித்து பேசி இருக்கிறேன். இலங்கையில் அரச சேவையில் இருந்த மனிதர் பின்னர் ஓய்வூதியம் எடுத்துவிட்டு அவுஸ்திரேலியாவுக்கு வந்தவர்.
நீங்கள் யாரையாவது வெறுத்திருந்தால், துலைவான் எப்ப சாவான் என நினைத்திருந்தால் குறிப்பிட்ட மனிதர் இறந்த பின்பு அழகாக கண்ணுக்குத் தோன்றலாம். அத்தகைய மனிதரைப்பற்றி நான் இங்கு சொல்லவில்லை.
பெரும்பாலான ஐரோப்பியருக்கு ஹிட்லர் இறந்தபின்பு அந்தச் சடலத்தை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் அழகாகத் தோன்றி இருக்கலாம்.மயிர்க் கொட்டிபோல் மேல் உதட்டில் ஒட்டியிருந்த அந்த அருவருப்பான மீசைகூட இறந்தபின்பு அழகாக தோன்றியிருக்கலாம். அதே போல் ஸ்ராலினது சடலம் ருஷ்ய மக்களுக்கும் குருஷ்ஷேவிற்கும் அழகாக இருந்திருக்கலாம். கூட்டுக் குடும்பத்தில் கூட வாட்டி வதைக்கப்பட்ட மருமகளுக்குக்கூட ஆவி துறந்த மாமியின் முகத்தில் அன்பும் அழகும் சொட்டுவதாக எண்ணத் தோன்றலாம். இப்படியான எதிர்முரணான மன நிலை ரீதியான அழகுணர்வை நான் இங்கு சொல்ல வரவில்லை.
அன்று அந்த மயானத்தில் அந்த மனிதரின் சடலத்தை பார்த்தபொழுது அக்கணத்தில் எனக்கு ஏற்பட்ட அந்த உணர்வு எனக்கே அதிர்ச்சியளித்தது. நெருங்கிய உறவினர் காம உணர்வுடன் கனவில் வந்தால் விடிந்ததும் மனதில் ஏற்படும் வெட்கத்திற்கு சமமாக இருந்தது.
என் உணர்வின் தார்ப்பரியத்தை கொஞ்சம் விரிவாக விளக்கமாக கூற விரும்புகிறேன். உயிரோடு இருக்கும்போது அவரைப் பார்த்தபோது மத்திய வயதைக் கடந்தவராக இருந்தால் அவரது இளமைக்காலம் எனக்கு தெரியாது. நான் அவரைப்பார்த்த காலத்தோடுதான் ஒப்பிடமுடியும். அவரது நரைத்த தலைமயிருக்கு அவர் கருப்பு சாயமடித்தாலும்கூட ஒழுங்காக அடிப்பதில்லை என நினைக்கிறேன். மூன்று மாதத்திற்கு ஒருமுறை அடிப்பதால் தேங்காய் நார்த் தும்பின் நிறத்தில் கரிய வானத்தில் தோன்றும் பிறைச்சந்திரனை போல் காட்சியளிக்கும். நிலக்கரி நிறத்தில் முகத்தில் சுருக்கங்கள் கண்களுக்கு தெரியாவிடினும் அவரது தாடைப்பகுதியில் சுருக்கங்கள் தெரியும். மனிதரின் வாய் திறந்து பேசும் போது சைனீஸ் சாப்பாட்டுக்கடையில் அதிகமாக பொரித்த கலவாய் மீன் போன்று இருக்கும் இதற்கு மேல் ஒருவரது அங்க லாவண்யங்ளை எழுதாமல் விடுவதுதான் நாகரீகம்.
மேலும் தலை கழுத்து முகம் போன்ற பகுதிகள் மட்டும் தான் எனக்கு அந்தச்சவப்பெட்டியில் தெரிந்தவை. நான் பார்த்த போது அவரது உதடுகள் அழகாக குவிந்து சுருக்கங்கள் எதுவும் அற்று காலையில் மழையில் நனைந்து மலரத் தயாரான ரோஜா மொட்டுப்போல் இருந்தது. அசாதாரணமான எந்த அலங்காரமும் இல்லை ஆனாலும் பகல் நேரத்திலும் அங்கு எரியும் மின்சார விளக்கின் ஒளி அவரது முகத்தில் தெறித்தது. அவரது முகத்தில் நிச்சயமாக ஏதாவது கலரற்ற கிறீம் தடவி இருக்க வேண்டும். தலைமயிர் ஒழுங்காக சீவப்பட்டு கருப்பாக சாயமடிக்கப்பட்டு இருந்தது. அணிந்திருந்த சேட் வெள்ளை நிறத்திலும் அதற்கு பொருத்தமான வயலட் நிறத்தில் சில்க் கழுத்து ரை மற்றும் கருப்பு சூட்டுன் அவரது கம்பீரமான தோற்றத்தை பார்த்தபோது, மனிதர் வயது கூடி இறப்பதற்கு பதிலாக பதினைந்து வயது குறைந்து இறந்திருக்கிறரர் என எண்ணத் தோன்றியது.
இப்படியான இராசாயன மாற்றத்தை நடத்துபவர்கள் யார்?;
உடலைப் பொறுப்பெடுத்து நடத்தும் மரணச்சடங்கு சேவையினரா?
அவர்கள் என்பாமிங் என்று உடலில் உள்ள அங்கங்கள் சிலவற்றையும் மூளைப்பகுதியையும் வெளியெடுத்து பின்பு இங்கு காகிதம் போன்ற பொருட்களை வைத்து போமலீன் மற்றும் பல இரசாயன கலவைகளை இரத்த குழாய்கள் உள்ளே செலுத்துவார்கள் என எங்கோ படித்தது தெரிந்திருந்தாலும் இவ்வளவு அழகாக மாற்றுவது என்பது ஒரு கலை.ஒரு விதத்தில் பண்டைக்காலத்தில் எகிப்தியர்களின் மம்மியாக்கத்தின் தொடர்ச்சியானது என நினைத்துக்கொண்டு அந்த மயானத்தில் இருந்து வெளியேறினேன்
ஒரு சனிக்கிழமை மதியம் கடந்தபின் எனது கிளினிக்கில் தனியாக வேலை செய்து கொண்டிருந்தபோது முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க பெண்ணொருத்தி கதவைத் தட்டினாள்.கதவைத் திறந்தபோது ஒலிவ் நிறத்தில்; இருந்த கன்னக்கதுப்பு சாம்பல் பூத்த கருத்தகொழும்பான் போன்று மெதுவான வெளிறலுடன் இருந்தது. செவ்வரியோடிய விழிகள் சிவந்து தடித்த இமைகளுடன் இரண்டு கண்களின் கீழும் கருவளையங்கள். ஏதோ நித்திய சோக சாகரத்தில் மூழ்கி எழுந்தவள் போன்றிருந்தாள்.
கலைந்த கேசங்கள் சிலும்பியபடி நிற்கும் தோற்றத்துடன் எதுவித அலங்காரமும் இல்லாமல் சற்று நேரத்திற்கு முன்னால்தான் படுக்கையை விட்டு எழுந்து வந்தவள் போல் அவசரகோலத்தில் தோன்றினாள். அவளது கால்களில் காலணியில்லை. பாதத்து விரலின் நகங்கள் கூட ஒழுங்காக வெட்டப்படவில்லை. நீலநிற நைடிக்கு மேல் ஒரு கோட்டை போட்டிருந்தாள். வேகமான காற்றுப்போல அவசரமாக உள்ளே வந்தவளது கையில் சிறிய மோல்ரீஸ் இனநாய் வெள்ளையாக சிறியதாகவு இருந்தது. அவளின் பின்னால் ஏழு அல்லது எட்டுவயது மதிக்கத்தக்க சிறுவன் அப்படியே அவளை அச்சில் வார்த்தது போன்ற முகத்தோற்றத்துடன் வந்தான். நான் கேட்காமலே ‘பக்கத்து வீட்டு நாய் வந்து எனது லிசியை கடித்து விட்டது. கழுத்தில் காயம். சுவாசிக்க சிரமப்படுகிறது’ என்றாள்
அச்சமயம் எனக்கு ஒரு உதவியளர் இல்லாத போது நாயை பார்க்க தயக்கமாக இருந்தாலும் பரிசோதனை மேசைக்கு கொண்டு வரும்படி கூறினேன்.
மேசையில் வைத்து சோதித்து பார்த்துவிட்டு “லிசியின் கழுத்தில் கடித்ததால் கழுத்தில் உள்ள சுவாசக்குழாய் நசுங்கியுள்ளது. ஆனாலும் சுவாசத்திற்கு பாதிப்பு இலiல என நினைக்கிறேன். எதற்கும் இன்று இரவு மயக்கத்தில் வைத்து சுவாசக்குழாய்குள் குழாயை வைத்து ஒட்சிசன் கொடுக்க விரும்புகிறேன். நாளைக்கு வந்து உங்கள் லிசியை எடுத்துச் செல்லுங்கள்.” என்றேன்
ஓரளவு பரபரப்புக் குறைந்து தனது விபரங்களை காகிதத்தில் எழுதித் தந்துவிட்டு வந்த வேகத்தில் திரும்பிச் சென்றுவிட்டாள்
லிசி அடுத்தநாள் நல்ல நிலைக்கு வந்துவிட்டது.
லிசியை வந்து எடுத்து போகும்படி கூறுவதற்கு எனது நர்ஸ் தொலைபேசி எடுத்தால் அவள் வீட்டில் ஒருவரும் தொலைபேசியை எடுக்கவில்லை.
அடுத்த நாளும் முயன்றோம். எவரும் தொலைபேசியை எடுக்கவில்லை. முன்றாவது நாள் மாலைக்குள்; இந்தப் பெண் வராவிடில் கவின்சிலில் நாயை ஒப்படைப்பதாக தீர்மானித்து இருந்தபோது திடீசென்று அந்தப் பெண் வந்தாள்.
“இரவில் வேலை செய்துவிட்டு பகலில் நித்திரை கொள்வதால் விழித்தெழுவதற்கு நேரமாகிவிடுகிறது. அதனால்தான் உடனே வரமுடியவில்லை” எனச்சொல்லிவிட்டு பச்சைநிறத்து சில நூறு டொலர் தாள்களை எமக்கு கொடுத்து விட்டு, இரண்டு நாட்கள் தாமதித்து வந்தமைக்குரிய தண்டப்பணம்.”என்றாள்.
நான் ஆச்சரியப்பட்டு, உரிய கட்டணத்தை மாத்திரம் எடுத்துக்கொண்டு மிகுதியை திருப்பிக் கொடுத்தபோது பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டு சென்றுவிட்டாள்.
சில வருடங்களின் பின்னர் ஒரு பெரிய நாயை அழைத்துவந்து சத்திரசிகிச்கைக்கு அனுமதித்துவிட்டு சென்றவளை அதன் பின்னர் இரண்டு நாட்கள் காணவில்லை.இம்முறை அவளது தாமதம் பதற்றத்தை தரவில்லை. ஏற்கனவே அவள் அறிமுகமானவள் என்பதும் காரணம்தான்.
இரண்டு நாட்கள் கடந்தபிறகு மிகுந்த மன்னிப்புக்கோரியவாறு வந்து, நாயை எடுத்துச் சென்றாள்.
“அடுத்தமுறை உமது நாயை நாங்கள் பார்க்கப்போவதில்லை” என்று வேடிக்கையாகச் சொன்னபோது, “ என்னசெய்வது எனது வேலைஅப்படி..” எனக்கூறி நகர்ந்தாள்.
“இவளது வேலை என்ன?” என்று எனது நேர்ஸ் என்னிடம் கேட்டாள்.
‘அடுத்தமுறை தையல் வெட்ட வரும்போது அவளிடம் கேள்’’ எனச் சொல்லிவிட்டேன்
எந்தக் காலத்திலும் ஒரு சிறிது மேக்கப்கூட இவள் முகத்தில் இல்லை. ஆனால் வேலை செய்வதாக கூறிக்கொணடு எப்பொழுதும் பச்சை நோட்டாக தருகிறாள்
ஒரு நாள் எனது நேர்ஸ்,“ ஹனாவின் வேலை என்ன தெரியுமா?”
“அவளது பேரே எனக்கு தெரியாது. பைபிளில் இருந்து வந்த பெயர்” என்றேன்.
“இல்லை எனக்கு சொல்லிவிட்டாள்”
“என்ன வேலை?”
—-
அன்று மதியம். மதிய உணவுக்காக அருகில் இருந்த சுப்பர் மார்க்கட்டின் கபேக்குச் சென்றேன். அங்கு எனது நண்பன் ஒருவன் தனது பாஸ்போர்ட் படமெடுக்க வந்தாக கூறி சில நிமிடநேரம் பேசிவிட்டு சென்றான்.அவன்போனபின்பு நிமிர்ந்து பார்த்தபோது ஹனா எனக்கு இரண்டு மேசைதள்ளி இடது பக்கத்தில் இருந்து சான்விச் சாப்பிட்டபடி இருந்தாள்.எந்த ஒப்பனையும் இல்லாத முகத்துடன் வழக்கம் போல் இருந்தாள்
சில மணித்தியாலங்களுக்கு முன்பு எனது நேர்ஸ் சொன்னது நினைவுக்கு வந்தது.
மற்றவர்கள் நிம்மதியாக உறங்கும் இரவு நேரத்தில் உயிரற்ற பிரேதத்தை குளிப்பாட்டி முகத்தை சவரம் செய்து அவர்களது தலைமுடி நிறத்திற்கேற்ப சாயம் அடித்து கண்களின் இமைகளை ஒரு விதபிசினால் ஒட்டி மூடிவிட்டதும். வாயின் மேல்தாடையையும் கீழ்த்தாடையையும் மூக்கின் உள்பக்கத்தால் செலுத்திய சிறிய வயரால் கட்டி வைப்பதால் வாய் மூடியபடியான தன்மை உருவாகிறது. உதட்டுக்கு ஈரலிப்பான வசலீன் தடவிய பின்பாக முகத்திற்கு மெதுவான கிறிம்தடவி அலங்காரம் செய்தபின் உடையலங்காரம் செய்வதுதான் அவளது வேலை. இந்தவேலையை இரவில் செய்து முடித்தால்தான் பகலில் பிரேதங்களை தேவாலயங்களில் அஞ்சலிக்கு வைக்க முடியும். இந்தவேலையை பத்து வருடங்களாக செய்வதாகச் சொன்னாள்.
நம்மவர்கள் பிரேதத்தை ஏன் இப்படி அலங்கரிக்க வேண்டும் எனக்கேட்கலாம்.
அக்கால எகிப்தியர்கள், இறந்த மன்னர்கள் கிரீடத்தை தவிர மற்றைய சகல பொருட்களுடன் விண்ணுலகம் செல்வார்கள்என்ற நம்பிக்கையில்தான் அவர்களின் ஆடை அணிகலன்களுடன் மட்டுமல்ல அவர்களது இறந்த செல்லப்பிராணிகளையும் மம்மியாக புதைத்தார்கள்
இப்பொழுது எனது மனதில் தோன்றிய கேள்வி இதுதான்.
இவ்வளவு அழகாக பிரேதங்களுக்கு அலங்காரம் செய்பவள், தன்னை ஏன் அலங்கரிக்க மறந்துவிடுகிறாள்?
அது ஏன்?