கதையாசிரியர்:
தின/வார இதழ்: அமுதசுரபி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 7, 2015
பார்வையிட்டோர்: 8,671 
 
 

அன்று வெள்ளிக்கிழமை.

வழக்கம்போல் தன்னுடைய வெறுப்பான வெளிப்பாட்டிற்கு தயாரானார் ராகவன்.

ராகவனுக்கு வயது 60. இவ்வளவு வயதாகியும் பொறமை, வெறுப்பு, வம்பு பேசுதல் என எதிர்மறை எண்ணங்கள்தான் அவரிடம் அதிகம்.

சென்னை நங்க நல்லூரில் ராகவன் வீட்டிற்கு நேர் எதிர்வீட்டில் அபுபக்கர் வசிக்கிறார். அபுபக்கர் வீட்டின் தரை தளத்தில் வெல்லமண்டியும், முதல் தளத்தில் அவரது அலுவலகமும் அதையொட்டி பின் புறம் வீடும் என வசதியாக வாழ்கிறார்.

அவ்வப்போது கர்னாடகாவின் மாண்டியாவிலிருந்து வரும் சரக்கு லாரி வெல்லத்தை இறக்கிவிட்டுச் செல்லும்போது, ராகவன் வீட்டின் முன்புற சாக்கடையின் மீது மூடப் பட்டிருக்கும் செவ்வக கற்கள் மீது லாரி ஏறி கற்கள் உடைந்துவிடும். ராகவன் அதை அபுபக்கரிடம் சொல்லி உடனே சரி செய்து கொண்டாலும், இது ஒரு தொடர்கதையாகிப் போனது. இது போதாதென்று, அபுபக்கர் வீட்டிலிருந்து அடிக்கடி கிளம்பும் பிரியாணி வாசனை ராகவனுக்கு குமட்டிக் கொண்டுவரும்.

அபுபக்கர் மாண்டியாவிலிருந்து குறைந்த விலைக்கு வெல்லம் கொள்முதல் செய்து, நல்ல லாபத்திற்கு சென்னையின் பெரிய டீலர்களுக்கு விற்று வந்தார். சரக்கு லாரியைத் தவிர, சென்னையின் பிற பகுதிகளிலிருந்து மூன்று சக்கர டெம்போக்கள் டெலிவரி எடுப்பதற்கு வரும். வாகனங்களின் இரைச்சலுடன்,லோடு ஏற்றி இறக்கும் தொழிலாளர்களின் சத்தம் வேறு, ராகவனுக்கு அதிக எரிச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்திய்து.

ராகவனும், அவர் மனைவியும், அவர்களது ஒரே மகன் 25 வயது முரளியும் எதிர் வீட்டு அபுபக்கரிடம் நட்பு அல்லாது அமைதியான விரோதம் பாராட்டினர்.

ராகவன் வீட்டின் முதல் தளத்தின் ஜன்னல் வழியாகப் பார்த்தால், தெருவைத் தாண்டி அபுபக்கரின் முதல் தளஅலுவலகம் நன்கு தெரியும். ‘எல்’ வடிவ ஒரு நீளமான டேபிளின் தொடக்கத்தில் அமர்ந்து அபுபக்கர் தன் கணக்கு வழக்குகளை சரி பார்த்துக் கொள்வார். அருகிலேயே தொலை பேசி.

ஒவ்வொரு வெள்ளியன்றும், அபுபக்கர் பகல் தொழுகைக்கு கிளம்பிய அடுத்த சில நொடிகளில், ராகவன் தன் வீட்டு முதல் தளத்தில் இருக்கும் தொலைபேசியிலிருந்து அவரை தொலைபேசியில் அழைப்பார். ‘எல்’ வடிவ டேபிளின் பாதி தூரம் சென்று விடும் அபுபக்கர் தொலைபேசி அழைப்பிற்கு பதில் சொல்ல தன் பெரிய உடம்பை தூக்கிக் கொண்டு ஓடி வந்து தொலைபேசியை எடுத்தவுடன், அதை ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் ராகவன், அழைப்பை துண்டித்து விடுவார். அபுபக்கர் ஏமாற்றத்துடன் சற்று தூரம் சென்றவுடன் மறுபடியும், மறுபடியும் தொலைபேசியில் அழைத்து அவரை ஏமாற்றி அலைக்கழிப்பார். தன் குரூர ஆசை தீரும் வரை அவரை அலைக்கழித்துவிட்டுத்தான் அமைதியாவார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ராகவனின் இந்த வெறுப்பு தொடர்ந்து அரங்கேறியது.

மூன்று மாதங்கள் சென்றன.

அன்று ஆடி வெள்ளிக் கிழமை என்பதால் ராகவன் அம்மன் கோவிலுக்கு தன் ஸ்கூட்டரில் சென்றிருந்தார். கோவிலில் நல்ல கூட்டம். பிரசாதம் வாங்கிக் கொண்டு வெளியே வரும் போது ஒரு மணியாகி விட்டது. அடடா, இந்த வெள்ளி அபுபக்கர் தன்னிடமிருந்து தப்பி விட்டாரே, இந் நேரம் தொழுகைக்கு கிளம்பிச் சென்றிருப்பாரே என நினைத்துக் கொண்டார். ஸ்கூட்டரை கிளப்பும்முன், சுவிட்ச் ஆ•ப் செய்யப் பட்டிருந்த தன் செல்•போனுக்கு உயிரூட்டினார். உடனே அவர் மனைவியிடமிருந்து அழைப்பு வர, எடுத்தார்.

“என்னங்க எங்க இருக்கீங்க? அரை மணி நேரமா உங்க நம்பருக்கு ட்ரை பண்ணிகிட்டு இருக்கேன். உடனே நங்க நல்லூர் இந்து மிஷன் ஹாஸ்பிடலுக்கு வாங்க. முரளிக்கு ஆக்ஸிடெண்டாகி அட்மிட் ஆகியிருக்கான். எனக்கு பயமாயிருக்கு” குரலில் ஏராளமான பதட்டம்.

ராகவன் ஆடிப்போனார். ஒரே பையன். “தாயே அகிலாண்டேஸ்வா¢… நீதான் அவனைக் காப்பாத்தனும்” வேண்டிக் கொண்டார்.

பதட்டத்துடன் ஹாஸ்பிடலை அடைந்தார். ராகவனை எதிர் கொண்ட அவரின் மனைவி பெரிதாக அழ ஆரம்பித்தாள். ராகவன் பரபரப்புடன் முரளி அட்மிட் செய்யப் பட்டிருந்த ஐ.சி.யூ கதவு கண்ணாடி வழியாக எட்டிப் பார்த்தார். முரளியின் தலையில் பொ¢ய கட்டு போட்டிருந்தது. மூக்கினுள் ஏதேதோ குழாய்கள் சொருகப் பட்டிருந்தன. டியூட்டி டாக்டரை படபடப்புடன் சென்று பார்த்தார்.

“நீங்கதான் பையனோட அப்பாவா? மணல் லாரி மோதி, உங்க பையனுக்கு ஏராளமான ரத்தம் சேதமாகி விட்டது. உங்க பையன் பி பாஸிடிவ்…நல்ல வேளை ஓ பாஸிடிவ் குரூப் ரத்தம் உள்ள ஒருத்தர் உங்க பையனை தனக்கு தொ¢யுமென்று, உடனடியாக ரத்தம் கொடுத்து உயிரைக் காப்பாற்றினார். இப்ப கவலைப் பட ஒன்றுமில்லை,
ஆனா நான்கு நாட்கள் ஹாஸ்பிடல் அப்சர்வேஷனில் இருக்க வேண்டும்.”

ராகவனுக்கு சற்று உயிர் வந்தது. “யார் டாக்டர் ரத்தம் கொடுத்தது?” ஆவலுடன் கேட்டார்.

“இன்னும் அரை மணி நேரத்தில் வரேன்னு சொல்லிட்டுப் போயிருக்கார், கண்டிப்பா வருவாரு”

அரை மணி நேரம் கழித்து வந்த அபுபக்கர் டாக்டரை அவா¢ன் டியூட்டி ரூமில் பார்த்து, “பையனுக்கு இப்ப எப்படி இருக்கு?” என்றார்.

“கவலைப்பட ஒன்றுமில்லை, அவனோட அப்பா வந்திருக்கார்.வாங்க பார்க்கலாம்”

டாக்டர், ராகவனிடம் அபுபக்கரை அறிமுகப்படுத்தி, “இவர்தான் உங்க பையனுக்கு ரத்தம் கொடுத்தவர்” என்றார்.

ராகவன் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு கண்கள் கலங்க அபுபக்கரின் கைகளைப் பற்றிக் கொண்டார்.

“நான் தொழுகைக்கு போய்கிட்டிருந்தேன்… ஆக்ஸிடெண்ட் ஸ்பாட்ல ஒரே கூட்டமாக இருந்தது… எட்டிப் பார்த்தா நம்ம வீட்டு தம்பி. உடனே இந்த ஹாஸ்பிடலில் சேர்த்தேன்… உங்க நம்பர் எனக்குத் தொ¢யாது. என் கடையில் வேலை பார்க்கும் சலீமுக்கு •போன் செய்து உங்க வீட்டுக்கு சொல்லச் சொன்னேன். அல்லாவின் அருளால் தம்பிக்கு சீக்கிரம் குணமாகிவிடும், கவலைப் படாதீங்க.”

ராகவன் கூனிக் குறுகிப் போனார்.

ராகவன் அன்று இரவு முழுவதும் தூக்கம் வராது படுக்கையில் புரண்டார். தான் இதுகாறும் அபுபக்கா¢டம் எவ்வளவு கேவலமாக நடந்து கொண்டோம்? அவர் வேறு மதம் என்பதால்தானே ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அவரை தொழுகைகு நேரத்திற்கு செல்ல விடாமல் துன்புறுத்தினோம்?

சில உண்மைகள் அவருக்கு பு¡¢ய ஆரம்பித்தன… பரஸ்பர அன்பும், நேயமும், மா¢யாதையும், பு¡¢ந்து கொள்ளுதலும்தான் மனிதர்களுக்கு முக்கியமே தவிர, மதம் இரண்டாம் பட்சமே என்று நினைத்தார். எல்லா மதத்தின் சிந்தனையும், கோட்பாடுகளும், மனித உயர்வுக்கும் மேம்பாட்டிற்கும்தான் பாடுபடுகின்றன. மதத்தைவிட மனிதம்தான் பொ¢யது என்பதை உணரத் தலைப் பட்டார். தன் ஒரே மகன் முரளியின் மறுபிறவிக்கு அச்சாரமே அபுபக்கர் கொடுத்த ரத்தம்தான் என்பதை நினைத்தபோது மெளனமாக அழுதார்.

அடுத்த வெள்ளிக் கிழமை.

பகல் பன்னிரண்டு மணிக்கு, ராகவன் விறுவிறுவென தன் வீட்டிற்கு வெளியே வந்து தெருவைக் கடந்து, அபுபக்கர் வீட்டின் முதல் மாடிக்குச் சென்றார்.

இவரைப் பார்த்த அபுபக்கர் ஆச்சரியத்துடன் தன் இருக்கையிலிருந்து எழுந்து ராகவனை அன்புடன் கட்டிக் கொண்டார். வெள்ளை நிறத்தில் மஸ்லின் ஜிப்பாவும், தலையில் வெள்ளைக் குல்லாயும் அணிந்திருந்தார். அவரிடமிருந்து மெல்லிய அத்தர் வாசனை அடித்தது. சுவற்றில் புனித தலமான மெக்காவின் புகைப்படம் தொங்கியது.

“அபு சார், நீங்க செய்த பெரிய உதவிக்கு நான் எனன பதில் மா¢யாதை செய்வதென்று எனக்குத் தெரியல… என்ன விட நீங்க எல்லா விதத்திலும் பெரியவர், வசதியானவர். பொருளோ, பணமோ உங்களுக்கு ஒரு பொருட்டல்ல. அதனால நான் உங்களுக்கு ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் ஒரு சின்ன சேவை செய்யலாம்னு வந்திருக்கேன்.”

அபுபக்கர் ஒன்றும் பு¡¢யாது விழித்தார்.

“நீங்க தொழுகைக்கு போவதற்கு முன்பாக, உங்கள் தொலைபேசிக்கு வரும் அனைத்து அழைப்புகளையும், என் வீட்டு தொலைபேசிக்கு கால் •பார்வேர்டு பண்ணிடுங்க… தொழுகையிலிருந்து திரும்பி வந்த பிறகு அத டிஆக்டிவேட் பண்ணிடுங்க.”

சொன்னதோடு நில்லாமல், அதை எப்படிச் செய்வது என்பதை விளக்கிச் சொல்லி, செய்தும் காண்பித்தார்.

“உங்களுக்கு வரும் அனைத்து அழைப்புகளையும் நான் அட்டெண்ட் செய்து, விவரங்களை ஒரு நோட் புக்கில் குறித்து வைத்துக் கொண்டு, நீங்க திரும்பி வந்த பிறகு அதை தங்களுக்கு தருகிறேன்.”

“எல்லாம் அல்லாவின் அருள்.” அபுபக்கர் தன் இரு கைகளையும் மேல் நோக்கி காண்பித்தார்.

தான் ஒவ்வொரு வெள்ளியன்றும் தொலைபேசியின் மூலமாக செய்த தவறுகளுக்கு, அதே வெள்ளிக் கிழமைகளில் அதே தொலைபேசியின் மூலமாக அபுபக்கருக்கு ஒரு சிறிய உதவிசெய்து, பிராயசித்தம் தேடிக் கொண்டார் ராகவன்.

– மே 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *